ஞாயிறு, 6 ஜூன், 2021

குற்ற வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு உண்டா?

 குற்ற வழக்கில் இருந்து விடுதலையானால், பொய்யாக போடப்பட்டது என்று வழக்கு போட்டு நஷ்டஈடு வாங்கியதை படித்துள்ளோம்.

ஆனால் அந்த குற்றவழக்கு நிரூபிக்கப்பட்டது என்று குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டால், அந்த குற்றத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் ஏதும் கிடைக்குமா ? என்றால் உண்டு..

இது பற்றிய விழிப்புணர்வு நம்மில் பெரும்பாலோருக்கு இல்லை.

குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு விட்டால், கண்டிப்பாக அதில் பாதிப்படைந்தவருக்கு நீதிமன்றம் நஷ்டஈடு வழங்குமாறு உத்தரவிடவேண்டும்..அப்படி கொடுப்பதோ மறுப்பதோ, நீதிமன்றத்தின் சுய நீதி விருப்பின் பேரில் என்றாலும், இரண்டிற்கும் காரணத்தை, தன் தீர்ப்பில் குறிப்பிட வேண்டும்..

இதை கட்டாயமாக செய்யவேண்டும் என்கிறது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 357 A ..

இது குறித்து ஒரு வழக்கில்[1] உச்ச நீதிமன்றம் குறிப்பிடும்போது, "ஒவ்வொரு நீதிமன்றத்தின் சுயவிருப்பின் அடிப்படையில், நஷ்டஈடு வழங்கவோ மறுக்கவோ செய்யலாம் என்றாலும், ஒவ்வொரு குற்ற வழக்கிலும் இந்த கேள்வி குறித்து அது, தன் மனதை செலுத்த வேண்டியது அவசியமாகிறது.. கொடுபதற்கோ அல்லது மறுப்பதற்கோ காரணத்தை பதிவு செய்வது தான், நீதிமன்றம் இது குறித்து தன் மனத்தை செலுத்தியதை காட்டும்..மேலும், அவ்வாறு நியாயமான முடிவுக்கு வருவதற்கு தேவையான ஆவணங்கள் நீதிமன்றத்தின் முன், இருக்கவேண்டியதும் அவசியம்"

அந்த சட்ட விதி மேலும், இதுபோன்ற குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவருக்கு, மறுவாழ்வு அளிக்கும் பொருட்டு, அனைத்து மாநில மற்றும் மத்திய அரசுகளும் அதற்குண்டான பாதிப்படைந்தவர்கள் நஷ்ட ஈட்டு திட்டம் ஒன்றை, கட்டாயமாக்கியது.

இந்த சட்டப்பிரிவு பொதுவானது என்பதால், குற்றவழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் நஷ்டஈடு இதன் படி உண்டு..அக்குழந்தையின் வயது 14க்கு கீழ் இருப்பின், நஷ்டஈட்டின் தொகை 50% கூடுதலாக கிடைக்கும்.

இந்த சட்ட விதி தான் , மத்திய பாதிக்கப்பட்டோர் நஷ்டஈட்டு திட்டம் 2015 வரக் காரணமானது!!.

மேலும் ஒவ்வொரு மாநில அரசும் தத்தம் மாநிலத்திலும் இது போன்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளன.

தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட நபருக்கான நஷ்டஈட்டு பணத்தை, அந்தந்த மாவட்ட காவல் ஆணையாளர் வழங்குகிறார்..

இந்த தகுதியை பெற, குற்றம் பதிவு செய்த காவல் நிலைய அதிகாரியோ அல்லது நீதித்துறை நடுவரோ, குற்றத்தினால் பாதிக்கப்பட்ட நபர் நஷ்டஈடு பெற பரிந்துரை செய்ய வேண்டும்.

அந்த பரிந்துரையை ஏற்று, மாவட்ட சட்டபணிகள் குழுவோ, மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவோ பரிந்துரை கிடைத்த இரண்டு மாதத்திற்குள் விசாரணை நடத்தி, அரசுக்கு அனுப்ப, அதன்படி நஷ்டஈடு வழங்கப்படும்.

இந்த நஷ்டஈட்டு தொகையின் அதிகபட்ச தொகையை மாநில அரசுகள் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற மத்திய நஷ்டஈட்டு திட்டம், குற்றத்தின் தன்மைக்கேற்ப குறைந்த நஷ்ட ஈட்டுத்தொகையை நிர்ணயித்து, அதற்கு கீழ், நஷ்டஈட்டு தொகை வழங்கக்கூடாது என்றுள்ளது.

அதன்படி கீழேயுள்ள விவரப்பட்டியல் தான். மத்திய பாதிக்கப்பட்டோருக்கான நஷ்டஈட்டு திட்டத்தில் உள்ளது:

  1. ஆசிட் தாக்குதல் ரூ.3 லட்சம்
  2. கற்பழிப்பு. ரூ.3 லட்சம்
  3. ஒரு மைனரை உடல் ரீதியாக முறைகேடு செய்தல் …ரூ.2 லட்சம்
  4. ஆள் கடத்தலில் பாதிக்கப்பட்டவரின் மறுவாழ்வு ..ரூ.1 லட்சம்
  5. பாலியல் ரீதியான தாக்குதல் (கற்பழிப்பு தவிர )… ரூ.50 ஆயிரம்.
  6. நிரந்தர ஊனம் (80% மேல்)…ரூ.2 லட்சம்
  7. இறப்பு ...ரூ.2 லட்சம்
  8. பகுதி ஊனம் (40%_ 80% )..ரூ.1 லட்சம்
  9. தீக்காயத்தால் உடலின் 25% க்கு மேற்பட்ட பாதிக்கப்பட்டால் (ஆசிட் வீச்சு தவிர)…ரூ.2 லட்சம
  10. கருவுறுதல் பாதிப்பு. …ரூ.50 ஆயிரம்
  11. கரு இழப்பு …ரூ.1 .5 லட்சம்
  12. எல்லை தகராறு துபாக்கிசூட்டில் பாதிக்கப்பட்ட பெண்கள்
    1. இறப்பு அல்லது நிரந்தர ஊனம் (80%மும் அதற்கு மேல்)…ரூ.2 லட்சம்.
    2. பகுதி ஊனம் …ரூ.1 லட்சம்

மேற்படி பட்டியலில் பாதிக்கப்பட்டவர் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை எனில், 50% கூடுதல் நஷ்டஈடு பெறலாம்.

இந்த நஷ்டஈட்டு தொகை ஒவ்வொரு குற்றத்திற்கும் நிர்ணயம் செய்வது , அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக இல்லை. அதுவும் கற்பழிப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நஷ்டஈடு ரூ.20,000 லிருந்து ரூ.10,00,000 வரை நாடு முழுதும் உள்ள மாநிலங்களில் வேறுபாடு உள்ளது.

இதை தன் முன் விசாரணைக்கு வந்த ஒரு வழக்கின் [2] போது கவனித்த உச்ச நீதிமன்றம், "கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு கோவா அரசு ரூ.10, லட்சம் நஷ்டஈடு வழங்குவது போல, ஒரே மாதிரியான நஷ்டஈட்டுத் திட்டத்தை அனைத்து மாநில அரசும் கொண்டு வர முயலவேண்டும்" என்றது. விசாரணையில் இருந்த வழக்கில், , திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை காட்டி கற்பழிக்கப்பட்டவர மாற்றுத்திறனாளி என்பதால், பணம் மொத்தமாக கொடுப்பது கிராமத்தில் உள்ள அவருக்கு உகந்ததல்ல என்பதால், மாதம் ரூ.8000 அவர் வாழ்நாள் முழுதும் கொடுக்க ஆணையிட்டது..

அடிக்குறிப்புகள்


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...