புதன், 12 ஆகஸ்ட், 2026

போலிசாரின் 'விசாரணை' அராஜகத்திற்கு 'கிடுக்கி பிடி " போட்ட நீதியரசர் இளந்திரையன்

     இன்றைய தேதியில் ‘விசாரணை’ என்ற பெயரில் போலிசாரின் அட்டகாசம் அதிகரித்து கொண்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். விசாரணைக்கு போனவர்கள் பிணமாக திரும்பிய சம்பவங்கள் ஏராளம்.

அவர்கள் மீது நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுத்து தண்டனை கொடுத்தாலும், இவையெல்லாம் அந்த உயிர் போன பின்பு தானே..

இதை தடுக்க வழியே கிடையாதா..

போலீசார் விசாரணைக்கு என்று கூப்பிட்டால் , போய் தான் ஆக வேண்டுமா?

இவர்களின் விசாரணையின் முறைக்கு ஒரு அளவுகோலே கிடையாதா?

சவுக்கு சங்கர் அலுவலகத்தில், வீட்டில் போலீசார் விசாரணை என்ற பெயரில் செய்த அராஜகம் நமக்கு ஞாபகத்தில் இருக்கும்.

இப்படி வானளாவிய அதிகாரம் படைத்தவரா போலீசார்  என்ற கேள்விகள் நமக்குள்ளே குடைந்து கொண்டே இருக்கும்.

ஆனாலும் எத்தனை பேருக்கு இதை எதிர்த்து கேள்வி கேட்க்கும் துணிவு இருக்கும்?

அப்படியே இருந்தாலும்,..நீதி கேட்டு நீதிமன்றம் நாட போதிய நேரம், கையில் பணம் இருப்பதில்லை பலருக்கு..

ஒரு சிலர் தான் இந்த ‘விசாரணை என்ற பெயரில் நடக்கும் அட்டூழியத்தை எதிர்த்து நீதிமன்றதிற்கு போகிறார்கள்.

பொதுவாக உயர்நீதிமன்றங்கள் போலிஸ் விசாரணையில் பெரிதாக தலையிடுவதில்லை என்பது தான் நிதர்சன உண்மை. அதனால் இது போன்ற மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் வந்தாலும், பெயருக்கு ஒரு உத்தரவை போட்டு விட்டு நகர்ந்து விடுவார்கள்.

உதாரணமாக , காவல் நிலையத்தில் உள்ள இன்ஸ்பெக்டருக்கு எதிராக இந்த பாதிக்கப்பட்ட நபர் கமிஷனர் ஆபீசிலோ அல்லது அவர் உயர் அதிகாரியிடமோ புகார் கொடுத்திருப்பார்.  அது ‘கிணற்றில் போட்ட கல் போல கிடக்கும். அதில் எந்த உத்தரவும் போட மாட்டார்கள். “போலிஸ் உயர் அதிகாரிகளை  அதில் ஒரு உத்தரவு போட சொல்லுங்கள்“ என்று கேட்டு உயர் நீதிமன்றத்தை அணுகினால், “சீக்கிரம் அந்த மனுவை பரிசீலனை செய்யுங்கள்“ என்று உத்தரவு போடுவதோடு சரி... உயர் நீதிமன்றம் அதற்கு மேல் அதில் தலையிடாது.

 

ஆனால் சமீபத்தில் இது போன்ற ஒரு ரிட் மனு நீதியரசர் இளந்திரையன் முன்பு வந்த போது, அதை அவர் சாதரணமாக கடந்து போகவில்லை.

Hon'ble Mr.Justice G.K. Ilanthiraiyan | Namakkal District Court | India

அவரே சொல்கிறார்  தனது தீர்ப்பில் “... இது போன்ற பல மனுக்கள் ‘விசாரணை என்ற பெயரில் போலீசார் செய்யும் அத்துமீறல்களை தடுக்க கோரி வருகின்றன.

போலிஸ் விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் அதன் பாதுகாவலராக இருந்து தலையிடும் அதிகாரம் மாஜிஸ்திரேட்டுக்கு சட்டப்படி இருந்தாலும், போலிசுக்கு ஒரு வழக்கை விசாரிக்கும் தடையற்ற அதிகாரம் உள்ளது தான், அது BNSS சட்டத்தின் கீழ் செயல்படும்போது” என்கிறார்.

மேலும் தொடர்ந்து “அதே சமயம் ‘விசாரணை என்ற பெயரில் போலீசார் செய்யும் அத்துமீறல்களை நீதிமன்றம் கண்ணை மூடிக் கொண்டு பார்த்துக் கொண்டு இருக்க முடியாது” என்று கூறி சில வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறார்..

சமீபத்தில் என்னை அரசுப் பணியில் இருக்கும் ஒரு சகோதரி. சென்னையில் இருக்கும் தன்னை அச்சரப்பாகத்தில் இருக்கும் போலிஸ் அதிகாரி போனில் தொடர்பு கொண்டு, அவர் மீது அவருடன் பணி செய்யும் இன்னொரு பெண் கொடுத்த புகாரை விசாரிக்க வேண்டும் என்பதால் வர சொல்லி அழைத்துள்ளார்.

இவர் பயந்து  போய் என்னை தொடர்பு கொண்டார். நானும் அந்த காவல் அதிகாரியிடம், எப்படி நீங்கள் இன்னொரு மாவட்டத்தில் உள்ள ஒரு பெண்ணை போன் மூலமாக விசாரனைக்கு வர சொல்லி கூப்பிடலாம்? அப்படி அழைக்க வேண்டும் என்றால் நோட்டிஸ் அனுப்புங்கள் “ என்றேன். ‘நாங்கள் FIR எதுவும் போடவில்லை. CSR மட்டும் தான் போட்டுள்ளோம். இவரை விசாரித்து மனுவை முடித்துவிடுவோம்.” என்றார்.

இந்த CSR என்பது போலீசார் ஒரு குற்ரம் நடந்ததா என்று பூர்வாங்க விசாரணை செய்ய பயன்படுத்துவது. அதில் சட்டப்பூர்வமான குற்றம் நடந்ததாக தெரிய வந்தால் பிறகு FIR போடுவார்கள்.  உயர்நீதிமன்றம் திரும்ப திரும்ப வலியிருத்தியுள்ளது என்னவென்றால் “CSRக்கு எழுத்துமூலம் நோட்டிஸ் இல்லையா .போக தேவையில்லை “ என்பதே..

அதையே தான் அந்த சகோதரிக்கும் வலியுறுத்தினேன்.. அதையே தான் அவரும் போலிசுக்கு சொல்லியுள்ளார். அதற்கு அவர் “மனுவை close பண்ணலாம்னு பார்த்தால் FIR போட வச்சிடுவீங்க போலவே “ என்று மிரட்டியுள்ளார்.

இப்படிதான் நமக்கு கொஞ்சம் விழிப்புணர்வு வருவதையும் இவர்கள் விரும்புவதில்லை !!

 

சரி விஷயத்துக்கு வருவோம். நீதியரசர் இளந்திரையன் சொன்ன வழிகாட்டுதல்கள்  என்னென்ன?

1.    புகாரில் குறிபிட்டுள்ள நபரையோ சாட்சியையோ விசாரிக்க வேண்டுமென்றால் BNSS சட்டபிரிவு 179ல் உள்ளபடி தேதி நேரம், இடம் குறிப்பிட்டு அங்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு எழுத்து மூலமான ஒரு சம்மன் அனுப்ப வேண்டும்.

2.    விசாரணையின் ‘மினிட்ஸ்’ எனப்படும் நடைமுறை விவரங்களை போலிஸ் டைரியில் குறிப்பிட வேண்டும்.

3.    விசாரணை அதிகாரி விசாரிக்கும் நபரை துன்புறுத்தாமல் இருக்க வேண்டும்.

4.    முதல நிலை விசாரணை மற்றும் FIR பதிவு செய்வதற்கும் உச்ச நீதிமன்றம் லலிதா குமாரி  எதிர் உத்தர் பிரதேச அரசு என்ற வழக்கில் சொல்லிய வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றவேண்டும்.

 

ஒரு போலிஸ் அதிகாரியிடம் இது பற்றி பேசிக் கொண்டிருந்த போது சொன்னார்.. ‘ஏதோ ஒன்னு ரெண்டு இடத்திலே தப்பு நடந்திருக்கலாம்.. ஆனா இவர்கள் சொல்றது போல அப்படி போலிஸ் ஏதும் தப்பா விசாரிக்கிறதில்லை...”

உண்மை தான்.  ‘நீதியரசர் சொன்னது போல “துன்புறுத்தல்“ என்பது ஆழமான அர்த்தம் கொண்டது. எது துன்புறுத்தலாக மனுதாரர்களுக்கு தெரிகிறதோ அது போல போலீசாருக்கும் தெரிய வாய்ப்பில்லை “

அந்த வழக்கின் விவரம் இங்கே :

ராஜா எதிர் போலிஸ் கமிஷனர் , சென்னை மற்றும் ஒருவர்.                                                                                    

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

போலிசாரின் 'விசாரணை' அராஜகத்திற்கு 'கிடுக்கி பிடி " போட்ட நீதியரசர் இளந்திரையன்

      இன்றைய தேதியில் ‘விசாரணை’ என்ற பெயரில் போலிசாரின் அட்டகாசம் அதிகரித்து கொண்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். விசாரணைக்கு போனவர்கள...