- கற்பழிப்பு: பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதாக 18 வயது என்று போக்சோ சட்டத்தில் சொல்லப்பட்டாலும், இந்திய தண்டனை சட்டத்தில், 15 வயதிற்குட்பட்ட தன மனைவியுடனோ அல்லது 16 வயதிற்குட்பட்ட ஒரு பெண்ணுடனோ, அவள் சம்மதம் தெரிவித்தாலும் கூட, பாலியல் ரீதியாக தொடர்பு கொள்வது 'கற்பழித்தல்' என்ற குற்றமாகும்.
1860 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, பெண்களுக்கான இந்த சம்மதத்தின் வயது முதலில் 10 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டது. இது 1891 இல் 12 ஆகவும், 1925 இல் 14 ஆகவும், 1940 இல் 16 ஆகவும், 2013 இல் 18 ஆகவும் உயர்த்தப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயதுக்குக் குறைவான ஒரு பெண்ணுடன் அவள் சம்மதத்தைப் பெற்றும் பாலியல் செயல்பாடு கொள்வது , கற்பழிப்புக்கு சமம். இதில் கவனிக்கவேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், சிறுவர்களுக்கு அவ்வாறு வயது எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
21 ஆம் நூற்றாண்டில் தான், மைனர் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நமது சட்டமியற்றுபவர்கள் விழித்துக் கொண்டதாலும், 2012 ல் நாட்டையே உலுக்கிய டெல்லி கூட்டு வன்புணர்வு நிகழ்வால், குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான பாலின-நடுநிலைச் சட்டத்தைப் பெற்றோம். POCSO ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பாலியல் ரீதியான தொடர்பு கொள்வதற்கான சம்மதத்தின் வயதை 18 ஆக அந்த சட்டம் நிர்ணயித்துள்ளது. அதை தொடர்ந்து 2013ல் குற்றவியல் சட்ட திருத்தம் வந்த போது, இந்த வயது 18 ஆக மாற்றப்பட்டது. ஆனாலும் பாலியல் ரீதியான தொடரபுக்கு சம்மதிக்கும் வயது குறித்த சர்ச்சை இன்றும் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது.
பதினெட்டு வயதிற்கு குறையான சிறுமிகளை திருமணம் செய்து கொள்வது குற்றமாக்கப்பட்டுள்ளது.
" சாரதா சட்டம்" என்று பிரபலமாக அறியப்படும குழந்தை திருமண தடைச் சட்டம், 1929, திருமண வயதை பெண்களுக்கு 14 ஆகவும், ஆண்களுக்கு 18 ஆகவும் நிர்ணயித்தது. இது பின்னர் 1978 இல் முறையே 18 மற்றும் 21 என்று பெண்கள் மற்றும் ஆண்களுக்கு உயர்த்தப்பட்டது. இது இப்போது ரத்து செய்யப்பட்டு, குழந்தை திருமணத் தடைச் சட்டம், 2006 வரப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஒழிப்பு மாநாட்டின் (CEDAW) பிரிவு 16 திருமணம் மற்றும் குடும்பம் பற்றி கூறும்போது, குழந்தைத் திருமணங்கள் சட்டப்பூர்வ விளைவை ஏற்படுத்தக் கூடாது என்கிறது. இந்தியா 1980 இல் CEDAW இல் கையெழுத்திட்டது. இன்னும், குழந்தை திருமணங்கள் செல்லத்தக்கதாக மட்டுமே கருதப்படுகின்றன. எனவே, ஒரு சிறுமி தனது திருமணத்தை ரத்து செய்ய விண்ணப்பிக்கும் வரை, அந்தத் திருமணம் சரியானதாகக் கருதப்படும். அதையும் அவள், பருவ முதிர்ச்சி வயது அடைந்த இரண்டாண்டுகளுக்குள் செய்ய வேண்டும்.
இந்திய தண்டனைச் சட்டம், Marital Rape என்னும் திருமண பலாத்காரத்தை அங்கீகரிக்க வில்லை என்பதால் தற்போதைய சட்ட நிலவரப்படி, மைனரான தன மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள சட்டப்படி கணவன் அதிகாரம் பெறுகிறான். 2017 ஆம் ஆண்டில், சுப்ரீம் கோர்ட் சுதந்திர சிந்தனை எதிர இந்திய யூனியன் வழக்கின் தீர்ப்பை வழங்கிய பிறகு, 15-18 வயதுக்குட்பட்ட மணப்பெண்களுடன் அவர்கள் கணவர் பாலுறவு கொள்ள செய்து கொள்ள அனுமதிக்கும் பிரிவு 375 க்கு விதிவிலக்கு சேரக்கப்பட்டது. இன்னும், இந்திய மனைவிகளுக்கு பாலுறவு கொள்வதற்கான ஒப்புதல் விருப்பத்தைப் பயன்படுத்துவதற்கான சுதந்திரம் இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. 18 வயதுக்குக் கீழே, அவள் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டாலும், அவள் உடலுறவு கொள்ள அனுமதிக்கவில்லை, 18 வயதுக்கு மேல் திருமண உறவில் சம்மதத்தின் அனுமானம் உள்ளது என்பதால் அவளால் இல்லை என்று சொல்ல முடியாது.
நேற்று முன்தினம் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த இது குறித்த தீர்ப்பு நமக்கு தெரிந்திருக்கும். மைனரல்லாத மனைவி என்றாலும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டு இருந்தாலும், அவள் விருப்பம் இல்லாமல் உடலுறவு கொண்டாலும் அது கற்பழிப்பு ஆகாது என்ற இந்த பிரிவை எதிர்த்து தோற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதியரசர் ராஜீவ் ஷக்தேவ் , திருமண உறவில் நுழையும் இருவருமே வாழ்க்கை துணைவர்கள் என்பதால் பரஸ்பரம் அன்பு, மரியாதை இருக்கவேண்டும் என்பதால் சமதமில்லாத தாம்பத்ய உறவு என்பது கற்பழிப்புக்கு ஒப்பானது என்றார். இதை இன்னொரு நீதியரசர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்கெனவே கர்நாடகா உயர்நீதிமன்றம், மனைவியை செக்ஸ் அடிமை போல நடத்துவதை கண்டித்து திருமணம் என்பதற்கு அதற்கான லைசென்ஸ் அல்ல என்று கடுமையாக சொல்லியுள்ளது. இந்த வழக்கில் இரண்டு நீதியரசர்களும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால் இனி இது குறித்து உச்ச நீதிமன்றம முடிவு எடுக்க வேண்டும்.
தற்போது பெண்களுக்கான திருமண வயதை உயர்த்துன் யோசனையில் அரசு உள்ளது. இது, பெரும்பான்மையான பெண்களின் உடல், பதினெட்டு வயது ஆனாலும், மருத்துவ ரீதியாக , பேறு காலத்திற்கு தயாராகவில்லை என சொல்லபபட்டாலும், திருமண உறவிற்கு அப்பால் பாலியல் ரீதியான உறவை நம் இந்திய சமூகம் இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், திருமணத்திற்கு முந்தைய பாலியல் செயல்பாடு அதுகுறித்த வெளிப்படையான விவாதம் இல்லாத மௌனம் மற்றும் மறுப்பு ஆகியவற்றால் மறைக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள தரவுகள், இளம் பருவத்தினர் 18 வயதிற்கு முன்பே பாலுறவில் ஈடுபடுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. NFHS-4 (2015–16) பதிவுகளில் 11% பெண்கள் 15 வயதிற்கு முன்பும், 39% பெண்கள் 18 வயதிற்கு முன்பும் முதல் உடலுறவைக் கொண்டிருந்தனர் என்றும் அதே கணக்கெடுப்பில், 6.3% பெண்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் திருமணம் செய்து கொண்டவர் என்றாலும் 15 வயதுக்கு முன் தங்கள் முதல் உடலுறவைக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் உள்ள இளைஞர்கள்: சூழ்நிலை மற்றும் தேவைகள் 2006–07 ஆய்வு ............இது இந்தியாவின் முதல் விரிவான இளைஞர் ஆய்வு, இந்த ஆய்வும், பாலியல் செயல்பாடுகளை அனுபவிப்பதற்கான நிகழ்தகவு, இளம் பருவ வயதினரிடமிருந்து இளம் பெண்கள் முதல் வயது முதிர்ந்த இளம் பருவத்தினர் வரை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
எனினும் இன்றைய சமூக நிலை, பாலியல் கல்வி குறித்த வெளிப்படைத்தன்மை இல்லாத மவுனம் ஆகியவை , பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இளைஞர்களிடையே காணப்படும் பெண் மீதான வெறுப்பு, பாலின பாகுபாடு மற்றும் ஆணாதிக்க மனப்பான்மையை அதிகப்படுத்தி, உடலுறவு, அதில் கிட்டும் இன்பம், உடலைச் சுற்றியுள்ள உரிமைகள், மற்றும் பாதுகாப்பு பற்றிய அறியாமை, சட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய மோசமான அறிவுக்கு தான் வழிவகுக்கும்.
- பதினெட்டு வயதிற்குட்பட்ட பெண்களுக்கு மருத்துவமனையில் செய்யப்படும் கருச்சிதைவு விகிதம் குறைந்துள்ளதாக தரவுகள் காட்டப்பட்டாலும், இதன் பின்னணியில் உள்ளது கவனிக்கத்தக்க ஒரு அம்சம்.
குழந்தை திருமண தடை சட்டம் இருந்தாலும், இருதரப்பு பெற்றோரின் ஒத்துழைப்புடன் இந்த திருமனங்கள் பெருமளவில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இவை பெரும்பாலும் வெளியே தெரிய வருவது அந்த பெண் தாய்மை பேறு பெற்று மருத்துவ சிகிச்சைக்கு வரும்போது தான். அப்படி வரும்போது, அது குறித்த தகவலைகளை மருததுவமனைகள் தெரிவிக்க வேண்டும் என்று சட்டம் இருபபதாலும், பதினெட்டு வயதிற்கு முன்னர் பாலியல் ரீதியாக உறவில் இருக்கும் பெண்கள் மருத்துவ பரிசோதனை, சிகிசசை எடுக்க மருத்துவமனை செல்ல தயங்குகின்றனன்ர். வெளியே யாருக்கும் தெரியாமல் கருக்கலைப்பு , பிரசவம் செய்ய துணியும்போது, உயிர்சேதமே அதிகம் நேருகிறது. இது ஒரு விதத்தில் அவர்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்துகிறது.
இன்னொரு புறம், தங்களுக்கு விருப்பம் இருக்கும் போது பதினெட்டு வயதிற்கு குறைவான தங்கள் பெண்ணிற்கு மணமுடிக்கும் பெற்றோர், அதுவே தங்கள் பிள்ளைகள் காதலித்து வீட்டிற்கு தெரியாமல் ஓடி சென்று திருமணம் செய்யும்போது, போக்சோ சட்டத்தின் கீழ் கற்பழிப்பு புகாரை அந்த பையனின் மீது கொடுக்கின்றனர். ஆனால் பெரும்பாலும் இது போன்ற வழக்குகளில் அந்த பெண் தன் காதலனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க மறுககின்றனர் அல்லது அப்படியே கொடுத்தாலும் தானும் சம்மதம் தெரிவித்தே அவனுடன் பாலியல் தொடர்பு கொண்டதாக கூறுகின்றனர். அல்லது அந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது அவர்களுக்குள் திருமணம் ஆகாமல் இருந்தால், அது நடந்து விடுகிறது. அல்லது அவன் குழந்தைக்கு அவள் தாயாகி விடுகிறாள். எனவே குற்றவாளிக்கு எதிர் சாட்சியம் இல்லாத நிலையில், பெரும்பான்மையான குற்றவாளிகள் வழக்கிலிருந்து விடுதலையடைகின்றனர். இதனால் உண்மையான கற்பழிப்பு வழக்குகளில் கவனம் செலுத்த இயலாமல் நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகின்றது என்று நமது மாண்புமிகு உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் கருத்து தெரிவித்துள்ளது.
"எங்கள் பதிவுகளிலிருந்து, பெரும்பாலான வழக்குகள் POCSO ... -ன் கீழ் பதிவுசெய்யப்பட்ட தப்பியோடிய வழக்குகள் என்பதை பகுப்பாய்வு காட்டுகிறது. இதன் காரணமாக, மைனர் கற்பழிப்பு பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. … ஆணும் பெண்ணும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், முழு கிராம மக்களும் குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கிறார்கள், அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படுவதில்லை, ஆனால் வெவ்வேறு சமூகத்தின் விஷயத்தில் பையன் மீது வழக்குத் தொடரப்படுகிறது, 18 வயதுக்குட்பட்ட பையனும் பெண்ணும் ஓடிப்போனால், அவன் மட்டுமே தண்டிக்கப்படுகிறான், இது பையனுக்கான இயற்கை நீதிக்கு தீங்கு விளைவிக்கும்" என்றது .
இதே போன்ற இன்னொரு வழக்கில் சம்பவத்தின்போது 17 வயதான அந்த இளைஞனை விடுவித்த மாண்புமிகு உயர் நீதிமன்றம், 16 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பாலியல் செயல்பாடுகளுக்கு சம்மதிக்கும் அளவுக்கு முதிர்ச்சியடைந்துள்ளனர் என்று கருத்து தெரிவித்து, POCSO சட்டத்தின் 2(d) இன் கீழ் "குழந்தை" என்ற கருத்தை 18 ஆண்டுகளுக்குப் பதிலாக 16 ஆண்டுகள் என மறுவரையறை செய்ய பரிந்துரைத்தது.
2012 ஆம் ஆண்டு டெல்லி கூட்டுப் பலாத்காரத்திற்குப் பிறகு குற்றவியல் சட்ட சீர்திருத்தங்களை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிட்டியும் இளம் பருவத்தினரின் பாலினத்தை 16 வயதிற்குள் அல்லது POCSO சட்டததின் கீழ் குற்றமாக்குவதைக் கட்டுப்படுத்தவும் IPC பிரிவு 375 இல் ஒப்புதல் வயதை பராமரிக்க வேண்டும் என்னும் அதே பரிந்துரையை வழங்கியது
இருப்பினும், நாடாளுமன்றம் சற்று முன்னேறி, CLA சட்டம், 2013 இன் கீழ் ஒப்புதல் வயதை 18 ஆக உயர்த்தியது.
இந்தியாவில், வெவ்வேறு விஷயங்களுக்காக வெவ்வேறு வயது வரம்பு உள்ளது. ஒருவர் 18 வயதில் வாக்களிப்பது தொடர்பான முடிவுகளை எடுக்கும் அளவுக்கு முதிர்ச்சியடைந்தவர்; 16 (கியர் இல்லாத வாகனங்கள்) அல்லது 18 (மோட்டார் வாகனங்கள்) ஓட்டவும்; 18, 21, 23, 25 வயதில் குடிக்கவும் (வெவ்வேறு மாநிலங்கள் வெவ்வேறு வயதை நிர்ணயிக்கின்றன); 21 இல் தத்தெடுக்கவும்; 14 இல் தொழிற்சாலையில் வேலை; மற்றும் 18 (பெண்களுக்கு) மற்றும் 21 (ஆண்களுக்கு) திருமணம். மெஜாரிட்டி சட்டம், 1875 பெரும்பான்மை வயதை 18 வயதாக நிர்ணயித்தது (1999 இல் திருத்தப்பட்டது).
இப்போது சொல்லுங்கள்.....
ஒருவரின் முதிர்ந்த வயதை இதில் யார் தீர்மானிக்கிறார்கள்?
- சட்டம், சமூகம், அரசு அல்லது உயிரியல் காரணிகளா? 1