அந்த கம்பெனியின் நிர்வாகிக்கு அடுத்த பொறுப்பில் இருக்கும் நாகராஜன் தன்னுடன் இயல்பாக பழகிய ஸ்டெனோ தெரசா, தன்னை சாகசமாக மயக்க பார்க்கிறார் என்று தவறாக நினைத்து கொண்டு, அவள் பின்னால் சென்று…பிறகு தவறை உண்ரந்து அவர் அவளிடம் மன்னிப்பு கேட்பதும் அவள் அதை தந்தை ஸ்தானத்தில் இருந்து செய்ததாக எண்ணி மன்னித்துவிட்டதாக சொல்வதும், பின்னர் நாகராஜன் தன் வீட்டில் இருந்து ஐந்நூறு ரூபாய் நோட்டை எடுத்து கொண்டு போய்விட்ட தன் மச்சினன் கண்ணையாவை மன்னித்து ஏற்றுக்கொள்வதாய் முடியும்.கதை .
எழுத்தாளர் ஜெயகாந்தனின் இந்த "தவறுகள் குற்றங்கள் அல்ல" சிறுகதை சொல்வது மன்னிக்கப்பட்டவர்களே மன்னிப்பார்கள் .
உண்மையில் இந்த சிறுகதை பெரிய புயலை என் மனதுக்குள் ஏற்படுத்தியது.கதை எழுதிய வருடம் 1969 என்று பார்த்தேன். 50 வருடங்கள் கடந்த பின்னும் இன்று நாகராஜன்கள் பெருகியிருக்கிறார்களே தவிர குறையவில்லை.
நம் பொது கண்ணோட்டத்தில் "தவறு என்பது தவறி செய்வது:தப்பு என்பது தெரிஞ்சு செய்வது" என்பர். நாகராஜனும் இந்த செயலை தவறி செய்ததாக சொல்லவில்லை. தியேட்டரில், பஸ்சில், கூட நெரிசலில் இது போன்ற சில்மிஷம் செய்து அந்த பெண்களின் தவிர்க்க முடியாத, எதிர்த்துக் கேட்க முடியாத பயத்தை பார்த்து தான் ரசித்ததாகத்தான் சொல்கிறார்.
சரி எழுத்தாளர் சொல்வது போல அது தவறு இல்லை தெரிந்தே செய்யும் தப்பு என்றே வைத்துக் கொள்வோம். அதற்கு பரிகாரம்?
தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்,
தப்பு செய்தவன் வருந்தியாகணும்!"
தவறு செய்தவர்களுக்கும் சரி, தப்பு செய்தவர்களுக்கும் சரி, சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்றுவதோ, திருத்திக் கொள்வதோ, தமது பிழையை முழுதும் உணர்ந்து, அதற்குப் பொறுப்பேற்று மன்னிப்பு வேண்டுவதோ அவ்வளவு எளிதானதல்ல.
ஆனால் நாகராஜன் அந்த சலனத்தினால் தான் செய்த காரியத்திற்கு வெட்கி தலை குனிந்து தானே முன்வந்து மனப்பூர்வமாக தெரசாவிடம் மன்னிப்பு கேட்கிறார்.அந்த விதத்தில் பார்த்தால் அவர் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியதே.
ஒரு வேளை தெரசா அவரை மன்னிக்காமல் போயிருந்தால் என்னவாயிருக்கும்?
அதற்கான தீர்விற்கும் அவர் தான் தயாராயிருந்தாரே!! தெரசா பழியை சுமந்து வேலையை விட்டு நீக்கப்பட்டிருப்பாள்.. இன்றைக்கு உள்ள நிலை போல பாதிப்பு அவளுக்கு மட்டும் தான் இருந்திருக்கும்..
ஆனால் அந்த சம்பவம் நடந்த பின்பும், எதுவுமே நடக்காதது போல, முகத்தை திருத்திக் கொண்டு, தன் தந்தை நிலையில் உள்ள நபரின் செயலாக அதை கற்பித்துக் கொண்டு, உடன் பணியை தொடர்ந்த தெரசாவின் செயல், அவள் மீது மதிப்பை தான் ஏற்றுகிறது.
அவளுடைய இந்த செயல் தான்…அந்த அமைதி ...காதை கிழிக்கும் அமைதி என்பார்களே அது போல…அது தான் நாகராஜனை மன்னிப்பு கோர வைத்தது என்று நினைக்கிறேன். அவர் தான் சொல்கிறாரே "என்னை அவள் சீ என்று காறி துப்பிவிட்டு போயிருந்தால் கூட நன்றாய் இருந்திருக்கும்" என்று.
அந்த விகார செயலை அவர் ஒரு விதமான நோய் என்று ஒத்துக்கொள்ள, அந்த இமாலய சரிவை, ஒரு "சின்ன சறுக்கல் தான்" என்கிறாள் தெரசா. அவர் மன்னிப்பு கேட்கும் விதமாக ஒரு தபாலை அவளைக் கொண்டே தட்டச்சு செய்து வர சொன்னதை அவரோட குழந்தைத்தனமான பெரிய மனது என்று சொல்லும்போது, தெரசாவின் பெரிய மனது தான் எனக்கு தெரிகிறது..
பழையபடி தன் நண்பராய் அவரை அவள் ஏற்றுக்கொண்ட திருப்தியுடன் அவர் வீடு திரும்ப, அங்கே குற்ற உணர்வுடன் திரும்பியிருந்த்த கன்னையாவை பார்க்கிறார்.
யாரும் இல்லாத சமயம் வீட்டில் இருந்த ஐநூறு ரூபாய் நோட்டை பார்த்ததும் அவனுக்கு ஏற்பட்ட சபலத்தை அவர் நோய் என்று சொன்னபோது, அவரைப் போலவே நம் மனசும் கன்னையாவின் இடத்தில் நாகராஜனை நிறுத்தி, அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் என்ற ஆவலை தூண்டுகிறது. எதிர்பார்த்தது போலவே அவரும் அவனை மன்னித்து விடுகிறார்.
ஆனால் ஒன்று கவனித்தீர்களா..தெரசா அவரை மன்னித்தது அந்த நாலு சுவருக்குள் முடிய, பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிய கன்னையாவை அவர் மன்னித்தது அவர் இமேஜை அவர் குடும்பத்தில் உயர்த்தியதே!!
அரை நூற்றாண்டு கடந்த இன்றைய நிலையிலும் இது எப்படி ஒத்துப்போகிறது? அதிகாரம் உள்ளவர்கள் செய்யும் தப்புகளை மறைத்து விட்டு உத்தம புருஷராய் வலம் வருகிறார்களே?
ஆனால் இந்த மன்னிப்பு, கன்னையாவையும் சரி ..நாகராஜ்னையும் இந்த நோயிலிருந்து மீட்டுவிட்டது என்பதால் இதில் முழு வெற்றி தெரசாவிற்கு தான்.
இந்த கதையை படித்தபிறகு எழுத்தாளர் ஜெய்காந்தனின் எழுத்து ஆளுமை மீது எனக்கு ஏற்பட்ட பிரமிப்பு நீங்காதது.
'தவறுகள் குற்றங்கள் அல்ல’ சிறுகதையில் தன்னிடம் தவறாக நடக்க முற்பட்ட மேலதிகாரிக்குப் பெருந்தன்மையோடு மன்னிப்பு வழங்கும் ஸ்டெனோ தெரஸா மட்டுமா..சமூகத்தின் எந்தப் படிநிலையில் இருந்தாலும் எந்தத் தொழில் புரிந்தாலும் எந்தப்பெண்ணையும் சிறிதும் சிறுமை செய்ய moமுயலாதவை ஜே கேயின் எழுத்துக்கள். அதே போலப் பரிவுக்கும் இரக்கத்துக்கும் பாதுகாப்புக்கும் உரிய ஒரு ஜீவனாக மட்டுமே எண்ணியபடி ஆணை விட ஒரு படி அவளைத் தரம் தாழ்த்தி விடாமலிருப்பதிலும் கவனமாக இருப்பவை; அவளுக்கென்ற தனித்த கம்பீரமான ஆளுமையை வழங்கத் தவறாதவை.
ஏன் அவர் காலத்தை தாண்டிய எழுத்தாளராய் இருக்கிறார் என்று புரிந்தது.
பெண்ணை விரசமாக ஆபாசமாக அருவருப்பான வருணனைகளுக்காக மட்டுமே பயன்கொள்ளும் படைப்பாளிகள் ஜே கேயிடம் பயில வேண்டிய பண்பு இது….
கொடிய குற்றம் செய்தவர்களையே முதல் குற்றம் என்றும் இளையவர் என்றும் பெண்கள், வயதானவர் என்று மன்னிக்க நீதிமன்றமே தலைப்பட்ட இந்த காலத்தில், அவர் சொன்ன ஒரு வாக்கியம் தான் என் மனதில் நிழலாடுகிறது..
"குற்றமும் அதற்கான தண்டனையும் மட்டும் பார்க்கும் சாதாரண நீதிபதி அல்ல நான்..சபிக்கப்பட்டவர்கள், தண்டிக்கப்பட்டவர்களின் ஆத்மாவை நோக்கி செல்லும் எழுத்தாளன்" என்ற அவர் வார்த்தைகள, மனதில் அவர் உருவத்தை விஸ்வரூபம் எடுக்க வைத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக