இது சுகிசிவம் ஐயா அவர்களின் சொற்பொழிவில் கேட்டது..
வில்லியம்ஸ் ராய்ட் என்ற ஜெர்மானியர் தன்னை நாடி வயிற்று வலி, தலைவலி என்று வந்தவர்களுக்கு அவர் கையாண்ட வைத்தியம். என்னவென்றால், யாராவது இருவர் யாராவது இருவர் காதலிக்கிறேன் என்று வந்தால் ஒரு பெட்டியைத் திறந்து அவர்களை அதற்குள் உட்கார வைத்து மூடி விடுவார்.ஒரே நிபந்தனை... அவர்கள் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளக்கூடாது என்று .. அரை மணி நேரம் கழித்து அவர்களை அனுப்பிவிட்டு அப்போது, வயிற்று வலி, தலை வலி , உடல் வலி என்று வருபவர்களை அதே பெட்டியில் உட்கார வைத்து மூடி, அரை மணி நேரம் கழித்து அவர்களை வெளியே விடும் பொழுது அவர்களுக்கு இருந்த அல்லது அவர்கள் இருந்ததாக நம்பிய வலி போய் விடுமாம்..
இதில் ஒரு மந்திரமும் இல்லை. உளவியல் ரீதியாக, அறிவியல் பூர்வமாக என்ன கண்டுபிடிக்கப்பட்டது என்றால், இந்த நேசம் கொண்ட இருவரும் எதிரும் புதிருமாக உட்கார்ந்திருக்கும் பொழுது, இவர்களின் உடலில் இருந்து வெளியே வரும் மின் ஆற்றலானது, எப்படி ஒரு பவர் சக்தி குறைந்த பேட்டரிக்கு, சக்தியைக் கொடுக்குமோ, அது போல அந்த காதலர்களின் உடலிலிருந்து வெளிப்படும் மின் ஆற்றல்,...அந்த காந்த அலை, அடுத்து வந்த வயிற்று வலிக்காரரைப பற்றி அவருக்கு தீர்வாகிறது என்று கண்டுபிடித்தார்கள்.
காதலின் சக்தி அவ்வளவு பெரிது இல்லையா?!!
இது தொடர்ச்சியாக நடக்க நடக்க, அவர் பற்றிய பெயர் வெளியுலகத்திற்கு தெரிய ஆரம்பிக்கிறது. இதில் ஒருவர் அந்த மத குரு சபைக்கு ஒரு புகார் அளிக்கிறார் . அதாவது, இந்த வில்லியம் என்பவர் மருத்துவப் படிப்பு படிக்காமலேயே அது குறித்த தொழில் நடத்துகிறார் என்று ...இவரிடம் விசாரணை நடத்தப்பட்டது
இவர் சொல்கிறார்
"நான் எந்தத் தவறும் செய்யவில்லையே? நேசமாக இருக்கிற இரண்டு பேரை ஒரு பெட்டியில் உட்கார வைக்கிறேன் ஒழுக்கக் கேடான காரியம் எதையும் நான் அனுமதிப்பதில்லை அவர்கள் வெளியே வந்த பிறகு, அந்த உடல் நலக் குறைவு ஏற்பட்ட வர்களை நான் அதில் அரை மணி நேரம் இருக்க வைக்கிறேன் அவர்களுக்கு தீர்வாகிறது இதற்கு நான் ஒரு பைசா வாங்குவது கிடையாது. இதோ பாருங்கள் அந்த பட்டியலை.. இதில் நான் எந்த தவறும் செய்யவில்லையே"
என்று புலம்புகிறார் . இவர் சொன்ன வாக்குமூலத்தை வைத்து இவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் (?) கூறப்படுகின்றன ஒன்று மருத்துவப் பயிற்சி எதுவும் இல்லாமல் மருத்துவச் சிகிச்சை மேற்கொண்டது. இரண்டாவது ஒழுக்கக்கேடான செயல்கள் செய்வதற்கு அவர் அனுமதித்தார் என்பது
சிகிச்சைக்கு வந்தவர்களை பட்டியலிட்டுக் காட்டுகிறார்
"பாருங்கள் நான் எத்தனை நோயாளிகளுக்கு இதேபோல சிகிச்சை கொடுத்து இருக்கிறேன் அவர்கள் எல்லாருக்கும் தீர்வு கண்டிருக்கிறது. இதிலிருந்து ஒரு பைசாவும் வாங்கவில்லை.யாரையும் தவறாக நடக்க அனுமதிக்க வில்லை' என்று.
இவர் சொன்ன எந்த விளக்கத்தையும் அந்த சபை ஏற்றுக் கொள்ளவில்லை இவருக்கு 7 வருடகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டது தவறு செய்யாமலேயே தண்டனை பெற்றார்
இங்கே கேரளா விஞ்ஞானி நம்பி நாராயணன்.. .அவரைப் பற்றி நமக்கு தெரிந்திருக்கும். விருதும் பரிசுகளும் நஷ்ட ஈட்டு தொகையும் வழங்கப்பட்டாலும், அவர் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்தார் தானே.
https://sankatamthavirkumsattam.blogspot.com/2021/06/blog-post_3.htmlசில சமயம் சந்தர்ப்பமும் சாட்சிகளும் எதிராக போனால், குற்றம் செய்யாதவரும் தண்டனை அடையும் சூழ்நிலை உண்டாகும்.
இதை சொல்லும்போதே கோவலன் நினைவுக்கு வருகிறான் !!
"நேரான மரங்கள் தான் முதலில் வெட்டப்படும்" என்று தெரியும் தானே..
நாமே பார்த்திருப்போம்…எங்குமே ஒரு இடத்தில் தவறு செய்பவர்கள் எப்பொழுதுமே ஒன்றாக சேர்ந்து இருப்பர். செய்யாது இருப்பவன் மட்டுமே அந்த இடத்தில் அந்நியனாக பார்க்கப்படுவான். அதனால் அவனுக்கு எதிராக தான் புகார்கள் அதிகமாக செல்லும். அதிகமான குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப் படுவான். சாட்சிகள் அவனுக்கு எதிராக வணையப்படும் அவனை அந்த இடத்தில் இருந்து நீக்குவதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படும்.
குற்ற வழக்கு என்றால் கேட்கவே வேண்டாம்.. போலிஸாரின் கொடூரததுக்கு அஞ்சியே, நிறையப் பேர் குற்றம் செய்யாமலேயே ஒப்புக் கொள்கின்றனர் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.அதைக் கொண்டு தீர்ப்பு வழங்கும் போது, மேல்முறையீடு செய்யும் அளவுக்கு வசதி இல்லாமல் தொடர்ந்து சிறையில் இருப்பதும் நிதர்சனம்.
ஒரு தீர்ப்பு பகரப்பட்டு 30 வருடம் கழித்து, 'நான் தவறாக தான் தீர்ப்பு சொன்னேன்.எச்.ஆர்.கண்ணா சொன்னது தான் சரி ' என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் பகவதி சொல்லவில்லையா? சிறைக்கு போவது மட்டும் தான் தண்டனையா..? தப்பே செய்யவில்லையானாலும், வர வேண்டிய பிரமோஷன்.மறுக்கப்பட்டு, தனக்கு பின்னால் உள்ள இளையவர்கள் எல்லாம் தன்னை தாண்டி பதவி உயர்வு பெறுவது?
தவறு செய்தும்.அனுகூலம் அடைந்தவரை விடுங்கள்..தவறே இன்றி தண்டிக்கப்பட்ட நீதியரசர் கண்ணா.
என்றுமே, தைரியமான நீதிபதிகள் தியாகம் செய்ய வேண்டியிருக்கும்.ஆனால் அவர்கள் மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களை வெல்வார்கள் அவர்களின் தைரியமான முடிவுகளுக்காக என்றுமே நினைவு கூரப்படுகிறார்கள்.
ஏன் தவறு செய்தவர்கள் தப்பிக்கும் போது, தவறு செய்யாதவன் மாட்டிக் கொள்கிறான்?
நிறைய கேள்விகளுக்கு விடை கிடையாது..
அதை தான் "விதி" "ஊழ்' என்கிறோம்..
ஒன்றை நினைத்துச் செய்தால், அதுவன்றி வேறொன்று விளைவதும், அவ்வொன்றே விளையாது போவதும், முற்றிலும் நினையாததொன்று வந்து நேர்ப்படுவதும் இவை எல்லாம் அவ்வப்போது நாம் உணர்வது தான்..
காரணம் புலப்படாது / நிகழ்ந்த நிகழ்ச்சிகளால் இன்பமும் துன்பமும் விளைகின்றன.ஒருவர் எந்த தவறும் செய்யாமல், அறநெறிப்படி நடந்து வந்தும், தண்டனை அனுபவிக்கிறார் என்றால் அதற்கு காரணம் ஊழ் என்று திருவள்ளுவரூம் சொல்கிறார்.
அதனாலேயே, அறத்துப்பாலில், இல்லறம், துறவறத்துக்கு அடுத்து, 'ஊழ்' என்னும் அதிகாரத்தை தனியாக வைத்தார்..
அந்த விதியைக் கணிக்க முடியுமா?
அதற்குத் தான் அவனுடைய பிறக்கும் நேரம் கொண்டு ஜாதகம் கணித்தனர். பிரபஞ்சமே அவனுள் அடக்கம், அந்த பிரபஞ்சததில் அவ்ன் அடக்கம் என்பதால் ஜோதிடத்தைக் கொண்டு, வர இருக்கும் ஆபத்துகளை கூட துல்லியமாக சொல்லினர்..
இந்த விதியைப் பற்றி அவ்வை பேசாமல் இருப்பாளா? பாடுகிறாள் பாருங்கள்…
ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம் புவியதன் மேல்"
விளக்கம்:
வாழ வேண்டும் என்று விதி உடையவரை, என்ன முயற்சி செய்தாலும் எவரும் கொல்ல முடியாது. அது போல் இறக்க வேண்டும் என்ற விதி உடையவரை யார் தடுத்தாலும் வாழ வைக்க முடியாது, எத்தனை முயற்சி செய்தாலும் முன்னேற்றம் அடையாமல் பிச்சை எடுக்க வேண்டும் என்ற விதி உடையவரை யார் காப்பாற்ற முடியும். இது தான் இந்த பூமியில் கண் கண்ட உண்மை. ஒருவரை காப்பாற்றவோ அழிக்கவோ விதியைத் தவிர வேறு ஒருவராலும் முடியாது, அவர் அவரின் வினைக்கேற்ப உள்ள பலன்களை அனுபவித்துத் தான் ஆக வேண்டும்.
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்."
(குறள். 380)
என்ன பொருள் என்று சொல்லவும் வேண்டுமா?
"அதை தடுக்க முயன்றாலும், முந்தி வந்து நிற்கும்"
ஊழுக்குப் 'உலகத்தியற்கை' என்றும் பெயர் உண்டு; அன்றெழுதினவன் அழித்தெழுதான்"என்னும் பழமொழி உண்டு தானே..
இதற்கு என்ன தான் செய்யலாம்?
விதியை எப்படி வெல்வது? முதலில் அதை வெல்லத் தான் முடியுமா?
அதற்கும் ஓரு உபாயம் சொல்கிறார் அவ்வை..
"பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் – மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்"
விளக்கம்:
அடுத்தவருக்கு கொடுத்து அதனால் வரும் இன்பத்தை அறியாத உலோபிகள் தன்னிடம் உள்ள செல்வத்தை தனைப் பெற்றோர், உடன் பிறந்தோர், தன் இனத்தைச் சார்ந்தவர், உற்றார், உறவினர், தன்னை சரணம் அடைந்து சலாம் போட்டு சேவகம் செய்பவர் என்று தனக்கு உதவி செய்யும் ஒருவருக்கும் ஈய மாட்டார், ஆனால் அவரிடம் உள்ள செல்வத்தை பறிக்க வரும் கொள்ளையர்கள் அவரை உதைத்து கேட்டால் தன்னிடம் உள்ள செல்வத்தை கொடுப்பர். அது போல் ஒரு மனிதன் தன் இம்மை மறுமைக்கு நன்மை புரியும் நல்ல காரியம், தர்மம் செய்தல், இறை சிந்தனை, கோவிலுக்குச் செல்தல், அன்ன தானம், அடுத்தவனுக்கு உபகாரம் செய்தல், ஆகிய தன்னால் இயன்ற ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார், ஆனால் அவரை விதி என்னும் கொள்ளைக்காரன் வந்து துன்பம் செய்யும் போது தன் துன்பம் விலக பரிகாரம், அடுத்தவருக்கு உதவி, கோவிலுக்குச் செல்தல் என்ற நல்ல காரியங்களில் ஈடுபடுவர். இதை உணர்ந்து விதி நம்மை துன்பம் செய்யும் முன்னர் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும்.
அப்படியெனில் தானம், தர்மம் செய்வதும் அறநெறிப்படி நடப்பது மட்டுமே, விதியின் பிடியிலிருந்து மீளும் வழி என்கிறார்..
நம்ம தலைவர் கூட பாடலை?
"என்றும் தர்மம் தலை காக்கும்.தக்க சமயத்தில் உயிர் காக்கும்"
இதோ 'மிர்தாத்தின் புத்தகத்திநன்' வழியாக மிகெயில் நைமி( இவரை தான் நமக்கு தெரியமே..கலீல் ஜிப்ரானின் ஆருயிர் தோழர்...பந்தயத்தில் முந்தி சென்றவர்!!} என்கிற வழிகாட்டி காத்திருக்கிறார் நம்மை ஊழின் பிடியில் இருந்து மீட்க.. .அவர் கையை கெட்டியாக பிடித்து கொள்வோம்..பின் தொடருவோமா?!
"பாத்திரத்திற்குள் இருப்பதை மூடி அறியாதா என்ன? மூடிகள் திறக்கப்பட்டால், உள்ளிருக்கும் பாம்பு, புழுக்களுக்குத் துன்பம்தான். உங்கள் இதயத்தின் அடியாழத்தில் உள்ள காற்றோடு கலக்காத மூச்சு, உங்களிடம் இல்லை என்று உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
தனது காமம், அச்சம், சிரிப்பு, கண்ணீர் போன்றவற்றையெல்லாம் வெளிப்படுத்தாத பார்வை ஒன்று கூட இல்லை, மற்ற கதவுகளைத் தட்டிப் பார்க்காமல், எந்தக் கனவும் உங்கள் கதவு தட்டி நுழைந்து விடுவதில்லை.
ஆகவே, எப்படிப் பார்ப்பது என்பதில் கவனமாக இருங்கள்.
எந்தக் கனவுகளை உங்களில் அனுமதிக்கிறீர்கள், எதை அனுப்பி விடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். நீங்கள், கவலை, துன்பங்களிலிருந்து விடுபட்டால் இந்த மிர்தாத், உங்களை மகிழ்ச்சியுடன் கடைத்தேற்றுவான்."
வள்ளுவரும் இதை ஒத்து ஊதுகிறாரே..
சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர் செயலுக்கு இடையூறாக வரும் ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும். என்கிறார் அல்லவா?
இதில் நிறைய பேர், " தெய்வத்தால ஆகாதெனினும்" என்பதை அப்படியே பொருள் எடுத்துக் கொண்டு, கடவுளால் முடியாதது கூட முயற்சியால் முடியும்" என்று வள்ளுவர் சொன்னார் என்கின்றனர்.அது சரியல்ல..
"விதி" என்பதற்கு "தெய்வம்" என்ற பெயரும் உண்டு..
அதைத் தான் குறிப்பிட்டு, விதியால் முடியாதது கூட முயற்சியால் முடியும் என்கிறார்.
ஆனாலும், " சிவாய நம" என்று சிந்தித்து இருப்போருக்கு அபாயம் ஒரு நாளுமில்லை" என்று உணர்ந்தவருக்கு, யார் தான் துணை வேண்டும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக