பெண்ணின் உரிமைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்ணின் உரிமைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 ஜூன், 2021

ஜீவனாம்சம் கொடுக்க சொல்லும் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முறையிடுவதாலேயே அதை கட்டாமல் தவிர்க்க முடியுமா?

 தன்னை தானே பராமரித்துக் கொள்ளமுடியாத மனைவி, குழந்தை, பெற்றோரை காக்கத் தவறும் நபரின் மீது ஜீவனாம்சம் கோரி கு.வி.மு.ச. 125 (1) ன் கீழ் மாஜிஸ்திரேட்டு முன் மனு போடலாம் என்பது நமக்கு தெரியும்.

அந்த ஜீவனாம்ச உத்தரவை திரும்ப பெறுமாறு மற்றொரு மனு போடுகிறார். ஆனால் மாஜிஸ்திரேட்டு அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு போடுகிறார். இதை எதிர்த்து வழக்கு போடுகிறார் உயர் நீதிமன்றத்தில்..

உயர் நீதிமன்றமோ, மனுதாரருக்கு உள்ள மேற்படி பராமரிக்கும் கடமையானது, தொடர்ந்து வரக்கூடியது, அதனால் மாஜிஸ்திரேட்டு போட்ட உத்தரவு சரியே என்று சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது.இது நடந்தது அலகாபாத்தில் என்றாலும், இங்கும் அதே நிலை தான்.

அவர் அந்த ஜீவனாமச பணத்தை கட்டிவிட்டேன் என்று சொன்னபோது, அதையும் அந்த நீதிமன்றத்திலேயே முறையிட சொல்லியுள்ளது..

சட்டத்தை தள்ளி வையுங்கள்… .

கன்னிகாதானம் பெற்று, ஏழு அடி எடுத்து வலம் வந்து, உன் சுக துக்கங்களில் பங்கு பெறுவேன் என்று அக்கினி முன்பு உறுதி சொல்லி மணம் புரிந்தவர், அந்த கடமையை தவறலாமோ?

மகனின் விந்தணு மீது பெற்றோருக்கு உரிமை உள்ளதா

 கணவனின் விந்தணு மீது மனைவிக்கு மட்டுமே உரிமை. அவரின் பெற்றோருக்குக்கூட உரிமை இல்லை" என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

டெல்லி மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வரும் இறந்துபோன தன் மகனின் விந்தணுவை தன்னிடம் வழங்கக்கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தந்தை மனுத்தாக்கல் செய்திருந்திருந்தார். அவருடைய மனுவை நிராகரித்த நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

மனுதாரரின் மகன் தலசீமியா என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திருமணம் நடைபெற்று மூன்று வருடங்கள் கடந்தும் குழந்தை இல்லாத நிலையில் நோயின் தாக்கத்தால் மகன் இறந்துவிட்டார்

இறந்தவரின் விந்தணு டெல்லியில் ஒரு மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் மனைவி விந்தணுவைப் பெற முன்வராத நிலையில் மருத்துவமனையை அணுகி அதைப் பெறுவதற்கு இறந்தவரின் பெற்றோர் முயன்றுள்ளனர். மருத்துவமனை நிர்வாகமோ இறந்தவரின் மனைவியிடம் மட்டுமே அதைத் தர முடியும் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

விந்தணுக்களைச் சேமித்து வைக்கும் மருத்துவமனை விந்தணு வங்கியுடனான ஒப்பந்தம் அழிக்கப்பட்டாலோ, நாள்கள் செல்லச் செல்ல விந்தணுவின் வீரியம் குறைந்தாலோ, தங்கள் குல வாரிசைப் பார்க்க முடியாமல் போய்விடும் என்று அஞ்சி உயர் நீதிமன்றத்தை நாடினார் தந்தை.

"உயிரிழந்த நபர் திருமணமானவர் என்பதால் அவரின் மனைவியைத் தவிர வேறு எந்த நபருக்கும் அதைப் பெற உரிமை இல்லை. மகனின் சந்ததியினர் மீது தந்தைக்கு உரிமை கிடையாது "என்றும் தீர்ப்பளித்துள்ளது..

உணமையிலேயே சட்டத்தில் பெற்றோருக்கு இது குறித்த எந்த உரிமை கிடையாதா ?

பேரப்பிள்ளைகளுக்கு தாத்தாவின் சொத்தில் உரிமை உண்டு என்பதைச் சட்டம் ஏற்றுக் கொள்ளும் போது, . தன் மகனுடைய வருங்கால சந்ததி மீது ஒருவருக்கு உரிமை இல்லை என்பது எப்படிச் சரியாக இருக்கும் என்கிறீர்களா?

  1. இவ்வழக்கில் பெற்றோருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தால், மருமகளைக் கொடுமை செய்யவும், அவரை ஒதுக்கி வைத்துவிட்டு தங்களுக்கு விருப்பமான பெண்ணைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாரிசை உருவாக்கும் வாய்ப்புகளும், சொத்து விவகாரத்தில் பிரச்னை செய்யவும் வாய்ப்புள்ளது.
  2. இந்த வழக்கைப் பொறுத்தவரை உணர்வுரீதியாக அந்தத் தந்தை கேட்பது சரி என்றாலும், சட்டத்தின்படி தந்தைக்கு எதிராகவே செயல்பட முடியும்.
  3. தந்தை ஒருவேளை இறந்த தன் மகனின் மற்ற உடல் உறுப்புகளுக்காக உரிமை கோரினால் அதில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவதற்கு வாய்ப்புள்ளது.
  4. விந்தணு என்பதால் அது அவர் மனைவிக்கு மட்டுமே உரிமையானது.

மேலை நாடுகளில் உயிலில் யாருக்கு உரிமை என்று எழுதப்பட்டுள்ளதோ அவரே கருமுட்டை, விந்தணு ஆகியவற்றின் மீது உரிமை கோர முடியும் என்ற சட்டமுள்ளது.

அது சரி… ஆண்டுகளாகச் சேமித்து வைக்கப்பட்ட விந்தணுக்களைப் பெற்றால் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதா ?

பொதுவாக, செயற்கை முறையில் கருத்தரிக்கும் தம்பதிகள் விந்தணுக்களை வங்கியில் சேமித்து வைப்பார்கள். அப்போது பின்பற்றப்படுவது என்ன?

  • சாதாரணமாக (டெஸ்ட் டியூப் பேபி) செயற்கை முறையில் கருத்தரித்தல் முறையில் வெற்றி வாய்ப்பு 30% - 40% மட்டுமே.
  • புற்றுநோயாளிகள், கதிரியக்க சிகிச்சை மற்றும் செல்களைப் பாதிக்கக்கூடிய மருந்துகளை எடுப்பதற்கு முன்பாக சேமிக்கலாம்.
  • விந்தணு தானம் செய்பவர்கள் சேமிக்கலாம்.
  • அணுக்களை உறைய வைக்கத் தேவையான ரசாயனத்தோடு (cryo mixture) 1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்டு லிக்விட் ஹைட்ரஜன் பயன்படுத்தி உறைய வைக்கப்படுகின்றன.
  • விந்தணுக்களை எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் சேமிக்க முடியும்.
  • உறைநிலையிலிருந்து அவற்றை அறை வெப்பநிலைக்கு மீண்டும் கொண்டுவரும்போது 30 - 50% அதன் நகரும் சக்தி குறையும். ஏற்கெனவே பிரச்னை உள்ள விந்தணுக்களாக இருக்கும்பட்சத்தில் நகரும் சக்தி 50 சதவிகிதத்துக்கும் மேல் குறையும்.
  • உலக அளவில் அதிகபட்சமாக 23 ஆண்டுகளுக்கு முன்பு உறைய வைக்கப்பட்ட விந்தணுவிலிருந்து செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட குழந்தை பிறந்துள்ளது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு உறைய வைக்கப்பட்ட விந்தணுக்களில் இருந்து உருவாக்கப்பட்ட குழந்தை பிறந்துள்ளது.

தம்பதியில் ஒருவர் இல்லாமல், பெற்றோர் தன்னுடைய மகனின் சந்ததியைப் பெற வேண்டுமென்றால் பல்வேறு படிகளை தாண்ட வேண்டியிருக்கும்.

1. உறைநிலையில் இருந்து மாற்றும்போது அந்த விந்தணுக்கள் ஒரு குழந்தையை உண்டாக்கக்கூடிய அளவுக்குத் தரமானதாக இருக்க வேண்டும்.

2. கருமுட்டையைத் தானம் பெற வேண்டும்.

3. உண்டாகும் கருவானது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.

4. அவ்வாறு உருவாகும் கருவுக்கு மகனுடைய தலசீமியா பிரச்னை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

5. பொருத்தமான வாடகைத் தாயைத் தேர்வு செய்ய வேண்டும்.

6. கருவை வாடகைத் தாய்க்குச் செலுத்தி அது குழந்தையாக வளர வேண்டும்.

இந்த ஒவ்வொரு படியிலும் வெற்றி வாய்ப்பு 30% - 40% மட்டுமே. அனைத்து விஷயங்களையும் வைத்துப் பார்க்கும்போது ஒட்டுமொத்தத்தில் 5% -10% மட்டுமே குழந்தை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதற்கான மொத்த செலவு ரூ.20 லட்சம் வரை ஆகலாம்.

இந்த வழக்கில் இறந்துபோன மகனுடைய சந்ததியைக் காண்பதற்கு பெற்றோர் ஆவலாக உள்ள நிலையில் மனைவி அதற்கு விருப்பப்படாத சூழ்நிலை உள்ளது.

இது போன்ற சூழ்நிலையில், தங்கள் மகன் இறந்தாலும், அவன் விந்தணு மூலம் பேரக்குழந்தைகளை காணும் வாய்ப்பு இருந்தும், அது மறுக்கப்படுவது சட்டத்தின் கண்களில் தற்போது ஏற்றுக்கொள்ளப்படாத போதும், மாறி வரும் சமூக நிலையே, இனி வரும் காலகட்டத்தில் இதற்காக தீர்வு சொல்லும்.

கருக்கலைப்பு சட்டரீதியானதா ?

 சிந்து பைரவி" படத்தில் வரும் இந்த பாட்டு ..

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயதான சிறுமி ஜே இன் தந்தை 2012 ஆம் ஆண்டில் இறந்துவிட்டார். அவரது தாயார் மனரீதியாக நிலையற்றவர். எனவே அவரை அவரது அத்தை மற்றும் மாமா கவனித்து வருகின்றனர். இடையில் சுந்தர் என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி, கூட்டி சென்றுவிட்டதால், அவள் கர்ப்பம் ஆனாள்.

மருத்துவ கர்ப்ப கலைப்பு சட்டம், 1971 பிரிவு 3 இன் படி, மைனர் சிறுமியின் கர்ப்பத்தை அவரது பாதுகாவலரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி கலைக்க முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளலாம்.

கர்ப்பத்தை கலைக்க அனுமதி கேட்டு சிறுமியின் அத்தை தாக்கல் செய்த மனுவை, சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில், மாண்புமிகு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் பெஞ்ச் விசாரித்தது.

இந்த விவகாரத்தின் அவசரத்தை கருத்தில் கொண்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி உதவி அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது, மேலும் சிறுமியை பரிசோதித்த பின்னர், அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

அவரது கர்ப்பகால வயது சுமார் 10-11 வாரங்கள் என்றும், கர்ப்பம் தொடர்வது அவளுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் திட்டவட்டமாக கருத்து தெரிவித்தனர். தொடர்ச்சியான கர்ப்பத்தில் ஏற்படும் அபாயங்களை இந்த அறிக்கை மேற்கோளிட்டு, மருத்துவ அடிப்படையில் கர்ப்பத்தை நிறுத்த அனுமதிக்குமாறு இந்த நீதிமன்றத்தை கோரியது.

அப்போது தான் நீதியரசர் இந்த கருத்து தெரிவித்தார்

"வயிற்றில் இப்போதுள்ள கருவிற்கு தேர்வு செய்யும் விருப்பம் வழங்கப்படுகிறது என்றால், அது நிச்சயமாக பிறக்க விரும்பாது"

சுவாரஸ்யமாக, தீர்ப்பின் ஆரம்பத்தில், நீதிமன்றம்,

"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்"

என்ற தமிழ் முனிவர் திருவள்ளுவரின் குறளை மேற்கோள் காட்டி,

"பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலை" என்று விளக்கம் கூறியது

அத்தோடு நில்லாமல், ஆதி சங்கரரின் "பஜ கோவிந்தம்"த்தில் வெளிப்படுத்திய கருத்துக்களையும் நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொண்டது

"மீண்டும், மீண்டும், ஒரு தாயின் வயிற்றில் பிறந்து, , மீண்டும் மீண்டும் இறப்பது, என்னும் கடக்க முடியா இந்த வாழ்வின் வரம்பற்ற கடலை கடக்க எனக்கு இறைவன் உதவவேண்டும்"

இந்த பின்னணியில்,

"நாங்கள் வாழ்க்கையை கொண்டாடும்போது, ​​பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலை இருக்க வேண்டும் என்பதே முதன்மையான ஆன்மீக ஜெபம்."

என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது,

மேலும், அது, பிறக்காத குழந்தையின் நிலையில் தன்னை வைத்து, இந்த உலகத்திற்கு வருவது அதன் சிறந்த நலனுக்காக இருக்குமா என்பதை புறநிலையாக தீர்மானிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

மைனருக்கு 15 வயது என்றும் அவர் தன்னை பராமரிக்கும் நிலையில் இல்லை என்றும் குறிப்பிட்ட நீதிமன்றம்,

"நிச்சயமாக, பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பும் ஆரோக்கியமும் மிக முக்கியமானது மற்றும் மருத்துவர்கள் மனதில் வைத்திருப்பார்கள். கிரிமினல் வழக்கின் நோக்கத்திற்காக மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு கருவின் மாதிரிகள் பாதுகாக்கப்படும்"

"பிறக்காத குழந்தையும் ஒரு நபர். கையில் உள்ள வழக்கில், குழந்தையின் தந்தை பல கிரிமினல் வழக்குகளில் ஈடுபட்டிருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது, அவற்றில் சில இயற்கையில் மிகவும் கடுமையானவை…

"கருவுக்கு ஒரு தேர்வு வழங்கப்பட்டால் இப்போது சிறுமியின் வயிற்றில், உள்ள அது பிறக்க விரும்பவில்லை என்று நிச்சயமாக அறிவிக்கும். "

ஆகவே மருத்துவக் கருத்தையும் சம்மதத்தையும் கவனத்தில் கொண்டு, நீதிமன்றம் மைனர் ஜே கர்ப்பத்தை உடனடியாக கலைக்குமாறு அறிவுறுத்தியது.

மேலும் நீதிமன்றம் அந்த குற்ற வழக்கை பற்றி கருத்து தெரிவிக்கையில்,

"இறுதி அறிக்கை வேண்டுமென்றே சரியான நேரத்தில் தாக்கல் செய்யப்படாததால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டரீதியான ஜாமீனில் வெளிவரும் பல வழக்குகளை நான் கண்டிருக்கிறேன். இறுதி அறிக்கை சட்டப்பூர்வ காலத்திற்குள் தாக்கல் செய்யப்படுவதை விசாரணை அதிகாரி உறுதி செய்வார்."

இறுதி அறிக்கையை தாக்கல் செய்த பின்னர்,மூன்று நாட்களுக்குள், கோப்பிற்கு சட்டப்பூர்வ விதிகளில் கட்டளையிடப்பட்டபடி எடுப்பது தொடர்பான முடிவு சிறப்பு நீதிமன்றத்தால் எடுக்கப்படும் என்றும்,, விசாரணையை மூன்று மாத காலத்திற்குள முடிக்குமாறு உத்தரவிட்டது.

கடைசியாக, நீதிமன்றம்,

"ஒரு பொதுவான கண்ணோட்டத்தில், ஜே சுந்தருடன் ஓடிவிட்டார் என்று ஒருவர் கருத்து தெரிவிக்கலாம், சட்டத்தின் பார்வையில் அவர் ஒரு குழந்தை. அவர் சூழ்நிலைகளுக்கு பலியானவர். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டம், 2012 இழப்பீடு செலுத்துவதற்கான நன்மை பயக்கும் ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது "

என்று கூறி, சிறப்பு நீதிமன்றம் முன்பு இடைக்கால இழப்பீடு வழங்குவதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்யுமாறு விசாரணை அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் சிறப்பு நீதிமன்றம் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கும்படி உத்தரவிடப்பட்டது,

இதனால் ஜெ. வை பராமரிக்கும் நோக்கத்திற்காக திரு வேலுச்சாமியின் (பாதிக்கப்பட்டவரின் தந்தை மாமா) வங்கிக் கணக்கில். ஒவ்வொரு மாதமும் ரூ .5,000 / - (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) வரவு வைக்கப்படும். இதுபோன்ற பணம் 36 மாதங்களுக்கு அனுப்பப்படும்

இதை வழங்குவதற்கு தேவையான நிதிக்கான ஏற்பாடுகளை சிறப்பு நீதிமன்றத்தால் செய்யப்படும்" என்ற நீதிமன்றம் , ரிட் மனுவை அனுமதித்தது.

வழக்கு தலைப்பு - மகாலட்சுமி எதிர் மாவட்ட ஆட்சியர் [WP (MD) எண் 659 of 2021]

ஆணும் பெண்ணும் சமம் என்று கூறும் சமுதாயம் ஏன் சில விடயங்களில் ஆண்களுக்கு அதிகாரத்தை கொடுத்து பெண்களை அதிகாரத்தைக் குறைத்து நடத்துகின்றது? இதுவா பெண் சுதந்திரம்?

 மகளிர் தினக் கொண்டாடம் எல்லாம் ஒய்ந்து இருக்கும் இப்போது தான் .இந்த கேள்வி என் கண்ணில் பட்டது!!

உண்மையில் ஆணுக்கு சமமாகத் தான் பெண் வைக்கப்பட்டு உள்ளாளா?

உலக வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, தொழிலாளர் எண்ணிக்கையில் பெண்கள் 20 சதவீதத்திற்கு மேல் உள்ளனர். நாம் 21 ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம், ஊதியம் அல்லது வாய்ப்புகளின் அடிப்படையில் சட்டம் தயாரிக்கப்பட்டதிலிருந்து இருந்த சூழலும் நிறையவே மாறிவிட்டன.

சரி… சமூக ரீதியாக ? சிறுமி பாலியல் கொடுமை என்பது வரை வந்து இங்கும் சம உரிமை இல்லை என்பது நிதர்சனம்.

மண்ணுக்கும் பெண்ணுக்கும் அடித்துக்கொண்டு இருக்கும் சூழ்நிலையில், வாரிசு சட்ட ரீதியாகவாவது. சம நிலை உள்ளதா?

வேறு எங்கும் போக வேண்டாம். ..அந்த பெண்ணின் கையில் உள்ள மண்ணை பொறுத்தாவது?

இந்து வாரிசு சட்டம் 1956 ..இது இந்துக்கள், புத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள் மட்டுமல்ல முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் யூதர்கள் அல்லாத அனைத்து நபர்களுக்கும் பொருந்தும்.

இந்த சட்டத்தின் கடைசி பெரிய திருத்தம் 2005 ஆம் ஆண்டில் நடந்தது. அதன்படி ஒரு கூட்டு இந்து குடும்பத்தில் மகள்களுக்கு மூதாதையர் சொத்துக்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டது. ஆயினும் கூட, பாலின சமத்துவத்திற்கு அது போதுமா?

இந்த சட்டபிரிவு 15 , திருமணமான ஒரு பெண்ணின் அத்தகைய சொத்து, கணவன் அல்லது குழந்தைகள் இல்லாத நிலையில், கணவரின் வாரிசுகளுக்கு தானாகவே செல்கிறது என்று கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு பெண்ணின் பிறந்த வீட்டிற்கும் மேல், அவள் புகுந்த வீட்டிற்குதான் சட்டம் நன்மையை வழங்குகிறது.

விரிவாக, சொல்லவேண்டுமாயின், இந்த சட்டத்தின் பிரிவு 15 (1) படி, ஒரு பெண் உயில் எழுதாமல் இறந்தால், கணவன் மற்றும் குழந்தைகள் இல்லாத நிலையில்,அவளது சுய வருமானம், பரிசு அல்லது அவளால் பெறப்பட்ட எந்தவொரு சொத்தும், கணவரின் வாரிசுகளுக்கு பகிர்ந்தளிக்கிறது

.அதே சமயம், உயில் எழுதாமல் இறக்கும் திருமணமான ஒருவனின் சொத்து பரிமாற்றம் செய்யப்படும் முறை நேர்மாறாக இருக்கிறது: முதலாவதாக, ‘வகுப்பு 1 வாரிசுகளுக்கு’, அதாவது, மனைவி, தாய், குழந்தைகள் மற்றும் இறந்த குழந்தைகளின் குழந்தைகள்; அவர்கள் இல்லாத நிலையில், ‘வகுப்பு 2 வாரிசுகளுக்கு’, அதாவது தந்தை, உடன்பிறப்புகள், உடன்பிறப்புகளின் குழந்தைகள் மற்றும் தாத்தா பாட்டி; அவர்கள் இல்லாதிருந்தால், மேலும் (ஆண் மூதாதையரின் சந்ததியினர்) அல்லது அறிவாற்றல் (இரத்த உறவினர்கள்). ஆகியோரை போய் சேருகிறது.

இது நீதிமன்றத்தின் பார்வையில் படவில்லையா?

2009 ஆம் ஆண்டில் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தால் இந்த சட்டத்தின் விதிமுறை ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பில் ஆராயப்பட்டது.

அந்த வழக்கு, திருமணமான மூன்று மாதங்களுக்குள் விதவையாகி, குழந்தை இல்லாத நிலையில் இருந்த நாராயணி தேவி பற்றியது. தனது புகுந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர், தனது பெற்றோரிடம் திரும்பினார், பின்னர் அவர் தனது பெற்றோரின் பண ஆதரவுடன் கல்வி பயின்று, பணி செய்து, அவரது வாழ்நாளின் இறுதியில் , தன் பெயரில் கணிசமான -செல்வம் சேர்க்க முடிந்தது. நாராயணி தேவியின் மரணத்தின் பின்னர், அவரது தாயார் வாரிசு சான்றிதழ் வழங்க விண்ணப்பித்த போது, ​​இது அவரது கணவரின் வாரிசுகளால் எதிர்க்கப்பட்டது😁

மாண்புமிகு உச்சநீதிமன்றம் இந்து வாரிசு சட்டம், 1956 இன் விதிகளை சுட்டிக்காட்டி, கணவரின் வாரிசுகள் தான் பெண்ணின் பெற்றோருக்கு முன் உரிமை உள்ளவர்கள் என்று தீர்ப்பு ப்அளித்தனர்.

இதன்படி பார்க்கும்போது, தற்போதைய சட்ட கட்டமைப்பானது அதன் அமுலாக்கத்தில் சமத்துவமற்றது மற்றும் நியாயமற்றது, பாலினத்தின் படி பரிமாற்றத்தில் வேறுபாடு உள்ளது.

இந்த சட்டம் எவ்வாறு உருவானது என்பதற்கு ஆழமான காரணம் உள்ளது. சட்டம் உருவாக்கப்பட்ட நேரத்தில், கூட்டுக் குடும்பத்திற்குள் சொத்து வைத்திருப்பது தான் பழக்கவழக்கமாக இருந்துள்ளது. மேலும், அப்போது பெண்கள் பெருமளவில் ,உழைக்கும் மக்களின் ஒரு பகுதியாக இல்லை. எனவே, பெண்கள் தங்கள் சொந்த திறமையின் மூலம் சொத்து வாங்க மாட்டார்கள் என்ற ஒரு உள்ளார்ந்த கருத்தும் இருந்துள்ளது.

திருமணமான பெண்களுக்கு - விதவை மற்றும் குழந்தை இல்லாதவர்கள் - அவர்கள் இறந்த பிறகு சுயமாக வாங்கிய சொத்தை பெற்றோருக்கு வழங்க விரும்புகிறார்கள் என்றால், அதற்கு உயில் எழுதுவது மட்டுமே வழி.

2012 ஆம் ஆண்டில், மாண்புமிகு மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ரோஷன் டால்வி, இந்த சட்டப்பிரிவு பிரிவு 15 (1), அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் செல்லுபடியாகுமா என்று இதன் தன்மையைப் பற்றி ஆறாய்ந்தார். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான இந்த வகைப்பாடு பாரபட்சமானது என்றும், நாராயணி தேவி விஷயத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் அம்சமான சமத்துவத்தின் கொள்கையை நிலைநிறுத்தப்படவில்லை என்றும் எனவே அவை சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்ட அவர்,. எவ்வாறாயினும், இதை அதே நீதிமன்றத்தின் அரசியலமைப்பு பிரிவு பெஞ்சால் மட்டுமே இறுதியாக தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

மகளிர் தினம் கோலாகலமாக கொண்டாடும் இன்று வரை, அதற்கான காலம் தான் வரவில்லை!!

படித்தமைக்கு நன்றி.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இந்திய நீதிமன்றங்களில் தகுந்த தண்டனை கிடைக்கிறதா?

 


 இந்த கேள்வியை பார்த்ததும் சமீபத்தில் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தான் நினைவுக்கு வந்தது.

பாலியல் குற்றச்ச்சாட்டுக்கு உள்ளான ஒருவனுக்கு பிணை கேட்டு வந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அதற்கு விதித்த நிபந்தனை என்ன தெரியுமா?

"அந்த பெண்னின் கையில் ராக்கி கட்டவேண்டும்"

அத்தோடு நிற்கவில்லை. அந்த 26 வயது குற்றவாளிக்கு பிணை வழங்கிய அந்த உத்தரவில் மேலும் சில நிபந்தனைகளை கேட்டால்…

"ரக்க்ஷா பந்தன் அன்று அந்த பாதிப்பிற்கு உள்ளாகிய பெண்ணிற்கு. ராக்கி கட்டுவதோடு மட்டுமல்லாமல், அவளுக்கு, சகோதரர்கள் கொடுப்பது போல பணமாக ரூபாய் 11,000 கொடுக்கவேண்டும்.

மேலும் அவள் பிள்ளை துணிமணிகள், இனிப்பு வாங்க அவர்களுக்கு ரூபாய் 5000 கொடுக்க வேண்டும்"

இனிப்பு கொடு..கொண்டாடு என்கிறதோ?!😣

நல்ல வேளை. உடன் இடை மறித்தது மாண்புமிகு உச்ச நீதிமன்றம்…🙏

"உயர்நீதிமன்றங்களின் இத்தகைய தீர்ப்புகள், இத்தகைய கொடூரமான குற்றத்தை அற்பமாக்குவதில் தான். முடிவடையும்,.

மேலும் இது போன்ற உத்தரவுகள், அடிப்படையில் அந்த குற்றத்தை இயல்பாக்குவதற்கு வழிவகுக்கும், அது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது ”என்ற கருத்தக்கூடிய வலுவான வாய்ப்பு உள்ளது”. என்று வருத்தம் தெரிவித்ததோடு

அந்த உத்தரவுக்கு தடை விதித்தது,.

அது மட்டுமல்லாமல், கீழமை நீதிமன்றங்கள், இதுபோண்ற வழக்குகளில் பிணை உத்தரவு போடும்போது கருத்தில் கொள்ளவேண்டிய சில வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளது…

அந்த ஏழு கட்டளைகள் என்னென்ன?

  1. குற்றவாளி எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொடர்பு கொள்வதை அனுமதிக்கவோ, கட்டாயப்படுத்துவது போலவோ பிணை உத்தரவு இருக்கக்கூடாது.அந்த நிபந்தனைகள், புகார்தாரரை குற்றவாலி மேலும் எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாதவாறு இருக்கவேண்டும்.
  2. குற்றம் சாட்டப்பட்டவர்; பாதிக்கப்பட்டவரை துன்புறுத்துவதற்கான சாத்தியமான அச்சுறுத்தல் இருக்கலாம் என்று நீதிமன்றம் நம்புவதற்கான சூழ்நிலைகள் இருந்தாலோ அல்லது அப்படியொரு அச்சம் வெளிப்படுத்தப்பட்டாலோ, காவல்துறையினரிடமிருந்து அது சம்பந்தமான அறிக்கைகளை பெற்றபின், அந்த பெண்ணின் பாதுகாப்பின் தன்மை தனித்தனியாக பரிசீலிக்கப்பட்டு பொருத்தமான உத்தரவு பிறப்பிக்கவேண்டும். பாதிக்கப்பட்டவருடன் எந்த தொடர்பும் செய்யக்கூடாது என்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு கூடுதலாக; ஒரு உத்தரவும் போடவேண்டும்.
  3. இது போன்ற வழக்குகளில், ஜாமீன் வழங்கப்பட்டவுடன், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக புகார்தாரருக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட வேண்டும் மற்றும் இரண்டு நாட்களுக்குள் அவருக்கு / அவளுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவின் நகல்; கொடுக்கவேண்டும்.
  4. ஜாமீன் நிபந்தனைகள் மற்றும் உத்தரவுகளில், பெண்களை பற்றியும் சமூகத்தில் அவர்களின் இடம் பற்றிய ஒரே மாதிரியான அல்லது ஆணாதிக்க கருத்துக்கள் பிரதிபலிப்பதைத் தவிர்க்க வேண்டும், மேலும் கண்டிப்பாக குற்றவியல் நடைமுறை சட்டத்தின் தேவைகளுக்கு ஏற்பஉத்தரவு இருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், புகார்தார்ரின் உடை, நடத்தை அல்லது கடந்தகால “நடத்தை” அல்லது “ஒழுக்கநெறிகள்” பற்றிய விவாதம், ஜாமீன் வழங்கும் தீர்ப்பில் நுழையக்கூடாது;
  5. நீதிமன்றம் பாலினம் தொடர்பான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பளிக்கும் போது, ​​பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையில் திருமணம் செய்து கொள்ள, பரிந்துரைக்கவோ கூடாது (குற்றம் சாட்டப்பட்டவருக்கும் உயிர் பாதிக்கப்பட்டவருக்கும் இடையில் எந்தவொரு வடிவத்திலும் மத்தியஸ்தம் பரிந்துரைக்க அல்லது கட்டாயப்படுத்தக் கூடாது. அது அவர்களின் அதிகாரங்களுக்கும் அதிகார வரம்புக்கும் அப்பாற்பட்டது என்பதால் சமரசம் செய்யக்கூடாது.
  6. ;நீதிபதிகள் வழக்கு விசாரணையின் போதும் அல்லது வாதங்களின் போதும் தங்கள் உணர்வுத்திரன் வெளிப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்,
  7. நீதிபதிகள் ஒரு பக்கச்சார்புடனோ பாதிக்கப்பட்ட பெண்ணின் நம்பிக்கையை குறைக்கக்கூடிய அல்லது அசைக்க்கக்கூடிய எந்தவொரு வார்த்தையையும் குறிப்பாக பேசவோ அல்லது எழுதவோ பயன்படுத்தக்கூடாது,

இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் அட்டர்னி ஜெனரலின் உதவியை கோரியுள்ளது.

மேற்படி. ஜாமீன் உத்தரவை “நாடகம்” என்று கூறி, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பேசும்போது,. ~இதுபோன்ற உத்தரவுகளை கண்டிக்க வேண்டியது அவசியம் என்றும், நீதிபதிகள் பாலின உணர்திறன் குறித்த பயிற்சியையும் பெற வேண்டும்" என்றும் பெஞ்சிற்கு தெரிவித்திருந்தார்.

" நீதி வழங்கினால் மட்டும் போதாது. நீதி வழங்கப்படுகிறது என்ற தோற்றமும் இருக்க வேணடும்" என்ற விதிக்கேற்ப, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இந்திய நீதிமன்றங்களில் தகுந்த தண்டனை கிடைக்கிறதா என்பதை தெரிந்துக்கொள்ள, மேற்கண்ட கட்டளைகளை அனைத்து நீதிமன்றங்களும் பின்பற்றுகின்றனவா என்று நாமும் உன்னிப்பாக கவனிப்போம்..

நமக்கும் சமூக கடமையுள்ளதே

ஆண்கள் என்றால் வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும், பெண் என்றால் கண்டிப்பாக என்ன தெரிந்திருக்க வேண்டும்?

 தாங்கள் செய்யும் வீட்டு வேலையின் மதிப்பை தெரிந்திருக்க வேண்டும்…

ஆண்கள் என்றால் அவர்கள் செய்யும் வேலைக்கு பணமதிப்பு உள்ளது..

ஆனால் பெண்ணிற்கோ…என்ன வீட்டு வேலை செய்தாலும், "வீட்டில் சும்மா இருக்கிறாள்"☺️ என்ற பெயரே…

முதல் முறையாக அரசியல் அரங்கில் பெண்கள் செய்யும் வீட்டு வேலைக்கு மதிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு தெரியுமா?

இந்தியாவின் 160 மில்லியன் இல்லத்தரசிகள், உலகின் பிற பகுதிகளில் உள்ள பல பெண்களை போலவே, வீட்டினை சுத்தமாகவும், நேர்த்தியாக வைத்திருக்கவும் , சமைக்கவும், பாத்திரங்களை கழுவவும், குடும்ப நிதிகளை நிர்வகிக்கவும் செய்கிறார்கள். அவர்கள் உணவு, தண்ணீர் மற்றும் விறகுகளை எடுத்து, குழந்தைகள் மற்றும் அவர்களின் மாமியார் ஆகியோரை கவனித்துக்கொள்கிறார்கள்.

ஆண்களால், வீட்டு வேலை செய்ய சராசரியாக எடுத்துக்கொள்ளும் 31 நிமிடங்களுடன் ஒப்பிடும்போது, ​​பெண்கள் ஒரு நாளைக்கு 297 நிமிடங்கள் வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள். 😃

நான்கில் ஒரு பங்கு பெண்களுடன் ஒப்பிடும்போது, ​​கால் பங்கு ஆண்கள் தான் ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.!!

இத்தனை காலமாக கவனிக்கப்படாமலேயே இருந்த இல்லப்பணிக்கான மதிப்பு கொடுக்கப்படவேண்டிய கட்டாயத்திற்கு நாடு வந்துள்ளது.அதை முன்மொழிந்த விதத்தில் நடிகர் கமலஹாசன் பாராட்டிற்குரியவர்!!💐

ஏற்கெனவே நீதிமன்றங்கள் வாகன விபத்தில் இறக்கும் இல்லத்தரசிகளுக்கு, அவர்கள் செய்த இல்லப்பணிக்கேற்ப பண மதிப்பு கொடுக்கப்பட்டு நஷ்ட ஈடு கொடுத்து வருகின்றன…

  1. ஆனால் என்ன ..அது அவள் இறந்த பிறகு தானே!! 

முதன் முறையாக அவள் காலத்திலேயே அவள் செய்யும் இல்லப் பணிகளுக்குண்டான மதிப்பை அவள் அறிந்து கொள்ளும் காலம் வந்துள்ளது.

அரசியல் கட்சிகள் அது குறித்து தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னாலும், எந்த விதத்தில் அந்த பணம் அவளுக்கு கொடுக்கப்படும் என்ற தெளிவான விவரம் இல்லை..

பெண்கள் அது குறித்த விவரங்களை இனியாவது கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞாயிறு, 6 ஜூன், 2021

பெரியாரின் வழி வந்தவர்கள் பெண்களுக்கு கொடுத்த சீட் 12, பிரபாகரனின் வழி வந்தவர்கள் பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட கொடுத்தது சம உரிமையான 117 சீட். யார் பெண்ணுரிமை பேச தகுதியுடையவர்கள்?

 பெண்களுக்கு தனி தொகுதிகள் கொண்டு வரப்பட்டதன் நோக்கமென்ன?

கண்டிப்பாக அங்கேயாவது பெண்களை வேட்பாளர்களாக நிறுத்துவார்கள் , அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற கட்டாயம் ஏற்படுத்தியது எதற்காக?

இப்படி கட்டாயப்படுத்தி கொண்டு வரப்படுவதாலேயே பெண்களுக்கு சட்டமன்றத்திலோ பாராளுமன்றத்திலோ சம உரிமை கொடுத்து விட்டதாகுமோ?

அதே போல தானே.. பெண்களை அதிக அளவில் போட்டியிட வைத்தது மட்டுமே பெண்ணுரிமை பேசும் தகுதியை கொடுத்து விடுமா?

எப்போது அந்த முடிவெடுக்கும் தலைமை பதவியை பெண்கள் அதிக அளவில் வகிக்கிறார்களோ அப்போது தானே அப்படி சொல்ல முடியும்?

இந்த விதத்தில் பெண் தலைவர்களை எண்ணிப்பாரத்தால் எண்ணிக்கை குறைவே…

வீட்டை ஒழுங்காக நிர்வகிப்பவளால் நாட்டை செய்ய முடியாதா?

கொடுத்த வேலையை பொறுப்பாக செய்து முடிப்பவர் ஆணை விட பெண்ணே என்கிறோமே..அப்போது நாம் தேர்ந்தெடுக்கப்போகும் , நமக்காக நம் தொகுதிக்காக வேலை செய்ய தகுதியானவர் ஆணா அல்லது பெண்ணா?

உடனே சொல்லாதீர்கள். பெண்களுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்று.

ஒரு விஷயம் கவனித்தோமா….. விடுதலை போராட்ட வீரர்கள் என்றால் நம்மில் பலர் சட்டென்று சொல்வது ஆண் தலைவர்கள பெயரை தானே!!

குழந்தைகளுக்கு பள்ளியில் சொல்லிக் கொடுக்கும் போதும் இப்படி தான்..

ஒரு பெண் கூட அந்த படங்களில் இல்லையேன்னு தேடினா எத்தனை பெண் சுதந்திர போராட்ட வீரர்கள் வர்றாங்க..

விடுதலை வீரர்கள்னாலே இவர்களையும் சேர்த்து தானே சொல்லணும். ஏன் தனியா பிரிச்சு பார்க்கிறாங்க?

இது இப்போ நேத்திக்கு மட்டுமில்லீங்க..ஆதியிலேயிருந்தே..நடந்து வர்ற கதை..


நன்றி டாக்டர் ஷாலினி

அரச குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லைனா தான் பெண்ணை ஆண் போல வளர்த்து அரியணைக்கு வர்றது நடந்துருக்கு…வீர மங்கை வேலு நாச்சியார் போல..

முகலாய சாம்ராஜ்ஜியத்திலும் இந்த கதை தானே..தன் சகோதரர்களை விட திறமையானவராக இருந்தும் , அரசனே தன் மகள் ரசியா சுல்தானா தான் அடுத்து அரசாள வேண்டும் என்று உத்தரவிட்டாலும், மந்திரிகள் ஏற்றுக் கொண்டார்களா? ரசியாவை ஆட்சி செய்ய விட்டிருந்தால், வரலாறே மாறியிருக்குமே!!

இந்திரா காந்தி கூட ஆண் வாரிசு இல்லை என்பதால் தானே கொண்டு வரப்பட்டார்..

இப்படி காலம் காலமாக தகுதியிருந்தும் பெண்கள் அரசியலில் முன் நிறுத்தப்படுவது அந்தந்த குடும்பத்தாலேயே தடுக்கப்படுகிறது..

இன்றைய தேதியில் பெண்களின் நிலை மிகவும் பரிதாபம்.

அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் இவர்கள், பெண்களை பற்றி கொண்டிருக்கும் கணோட்டத்தை பாருங்களேன்..

இவர்கள் போய், பெண்களை சட்டமன்றத்திலோ பாராளுமன்றத்திலோ தனக்கு சமதையாக இருக்க செய்வர் என்று எதிர்பார்க்களாகுமா?

சமீபத்தில் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணைக்குழுவை வழங்க தன்னிச்சையாக வைக்கப்பட்ட இராணுவத்தின் மதிப்பீட்டு அளவுகோல்களை எதேச்சதிகாரமானது என்று சொன்னபோது இவ்வாறு குறிப்பிட்டது

' இது, ஆண்களுக்கான ஆண்களால் உருவாக்கப்பட்ட நமது சமூகத்தின் கட்டமைப்புகள்'[1]

எனவே ஆண்கள், பெண்களை மேலே கொண்டு நிறுத்துவர் என்று நினைப்பது ..எதிர்பார்ப்பது. என்பது 😂.

பெண்களுக்கு சம உரிமை பற்றி பேச ..நிறைய பெண்களே முன்வரவேண்டும்..

அவர்களும் வருகிறார்கள் தான்…🤔

இன்னமும் வருவார்கள்..

அதே சமயம் பெண்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர் என்பதாலேயே அவர்கள் தேந்தெடுக்கப்படும் தகுதி வந்து விடாது..

இந்த சமயத்தில், நாம் தான், நமக்கு தேவையானவர் வேலைக்காரர்களா அல்லது எஜமானர்களா என்பதை முடிவு செய்ய வேண்டும்…

அதை கொடுக்கிறேன் இதை கொடுக்கிறேன் என்பவர்கள் நமக்கு எஜமானர்கள் என்ற எண்ணத்தில் தானே உள்ளனர்…😣

இந்த தருணத்தில் நேர்மையாக இருக்கப் போகிறோமா, அல்லது கையேந்தி அடிமையாக இருக்கப் போகிறோமா என்பதை பொறுத்தே நம்மிடத்தில் நல்ல மாற்றம் வரும்..


சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...