மத்திய அரசு சுற்றறிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மத்திய அரசு சுற்றறிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 ஜூன், 2021

காணாமல் போன ஒருவரை இறந்தவர் என்று கருதலாமா? அதற்கு சட்டபூர்வமான நடவடிக்கை என்று என்ன செய்ய வேண்டும்?

 

பொலிமேட்ல சரோஜினி மேரியின் கணவர் மத்திய அரசு எஸ்சைஸ் அலுவலகத்தில் ஒரு மெஷின் ஆப்பரேட்டர்.1992ல் 3 நாள் லீவு போட்டுவிட்டு போனவர் தான்.   காணாவே போய்ட்டார். இரண்டு வருஷம் பொறுத்து பார்த்த மேரி போலீஸிலே புகார் குடுக்கிறாங்க. FIR போட்டாச்சு. 3 வருஷம் கழிச்சு, அந்த சப் இன்ஸ்பெக்டர், மேரியோட கணவரை கணடுபிடிக்க முடியலைன்னு ஒரு இறுதி அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்றார்.

இந்திய சாட்சிய சட்டப்  பிரிவு 108 படி ஒருவரைப் பற்றி 7 வருடம் எந்த விவரமும் தெரியலைனா அவரை இறந்தவரா கருதலாம்னு இருக்கு.  அதை கொண்டு, மேரி, தன் கணவர் காணாப் போன 7 வருஷம் கழிச்சு, தனக்கு குடும்ப பென்ஷன் குடுக்ககக்  கோரி கணவரோட ஆபிசில் மனு குடுக்கிறார்.அங்கே தான் வருது ட்விஸ்டு….

வேலைக்கு வராத காரணத்தினால், அவரை 2 வருஷங்கள் முன்னாடியே வேலையை விட்டே நீக்கிட்டோம், அதுனால் பென்ஷன் சலுகைகள் அனைத்தும் பறிமுதல் செய்துட்டதா சொல்லி அந்த மனுவை திருப்பிடுறங்க.

அதை எதிர்த்து தீர்ப்பாயத்தில் மேரி கேஸ் போடுறாங்க…

அங்கே மேரியின் கணவர் காணாமல் போன நாளிலிருந்து அவர் இருந்ததா கருதப்படுவதால், இறந்தவருக்கு எதிரா போடப்பட்ட நீக்கல் உத்தரவு செல்லாதுன்னு தீர்ப்பு வருது. இப்போ உயர்நீதிமன்றத்திற்கு போய முறையிடுவது நிர்வாகம். அதாவது மத்திய அரசு.

அந்த வழக்கில் பிரிவுகள் 107 மற்றும் 108 இந்திய சாட்சிய சட்டம் பத்தி விரிவாக விளக்கம் சொல்லுது ஆந்திர நீதிமன்றம்,

பிரிவு 107..   யார் ஒருவர் 30 வருடங்களாக உயிரோட இருந்த ஒருவர் இறந்து விட்டார் என்கிறாரோ அதை  நிரூபிக்கும் பொறுப்பு அவருடையது.

இந்த 107 பிரிவிற்கு விதிவிலக்கு 108 பிரிவு.

பிரிவு 108.....ஒருவரைப்  பற்றி எந்த தகவலும் 7 வருடங்கள் , யாருக்கு தெரிய வேண்டுமோ அவருக்கு கூட தெரியாமல் இருந்தால், அவர் உயிருடன் இருக்கிறார் என்று யார் சொல்கிறாரோ, அவருக்கே அதை நிரூபிக்கும் பொறுப்பு..

அல்லது இப்படியும் சொல்லலாம்…

ஒருவர் உயிருடன் இருப்பதாக அனுமானிப்பது முந்தையது என்றால் இறந்து விட்டார் என்று அனுமானிபது பிந்தையது.

இன்னொன்றும் சொல்லலாம்..

முந்தையதில் ஒருவர் இறந்துவிட்டார் என்று நிரூபிக்கவேண்டும்  .பிந்தையதில் அது தேவையில்லை.

சரி............. 7 வருடங்கள் ஒருவரை பற்றிய தகவல் யாருக்கு தெரிந்திருக்க  வேண்டுமோ (அவர்களுக்குள் எந்த பிரிவும் இருக்கக்  கூடாது)   அவருக்குக் கூட தெரியவில்லை என்றால் அவர் இறந்ததாகத் தான் கருதப்பட வேண்டும்.

இப்போது எழும் அடுத்த கேள்வி..எப்போது இறந்தாரென்று கருதுவது?

இது குறித்து சட்டப்பிரிவு எதுவும் சொல்லவில்லை.  7 வருடம் தகவல் எதுவும் இல்லாததால் ஓருவர் இறந்து விட்டார் என்று கருத அனுமதியளிக்கும் அதே சமயம் இன்னொரு ஊகம் அதாவது இறந்த தேதி, இடம், நேரம் குறித்து பொதுவான ஊகம் செய்ய சட்டத்தில் அனுமதியில்லை.

அது ஒவ்வொரு வழக்கிற்கு ஏற்றவாறு முடிவு செய்துக் கொள்ள விடப்படுகிறது.

அதாவது இப்படி வைத்துக்கொள்வோம்…

ஒருவர கப்பலில் பயணம் செய்யக் கிளம்புகிறார் ..அந்த கப்பல் கடலில் மூழ்கியது .  அதற்கு பிறகு அவர் குறித்த தகவல் இல்லை என்றால், அவர் மரணம் அந்த விபத்திலோ அதற்கு பிறகு தான் நடந்திருக்கும் என்று சம்பவங்களின் சாட்சியத்தை கொண்டு நிரூபிக்கலாம்.

சரி இறந்ததாக கருதியாயிற்று. இறந்த தேதி என்றிலிருந்து இருக்கலாம் என்றும் நிரூபித்தாயிற்று என்றால்,  இதன் விளைவு என்றிலிருந்து தொடங்கும்?

காணாமல் போனார் என்று புகார் கொடுத்த நாளா?    அல்லது 7 வருடம் முடிந்த நாளா?

இந்த வழக்கிலேயே, மேரியின் கணவர் இறந்துவிட்டார் என்று காணாமல் போன நாளை கணக்கிட்டால், இறந்தவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதால் அவரை வேலையை விட்டு எடுத்தது செல்லாது. 7 வருடம் முடிந்த பின்பு என்றால், ஏற்கெனவே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து விட்டதால், மேரிக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது.

இதில் இன்னொரு பிரச்சினையும் உள்ளது. காணாமல் போன தேதியில் இருந்து என்று எடுத்துக் கொண்டால், 7 வருடம் முடிந்த பின்புதான் அவர்களுக்கே அவர் இறப்பு குறித்து அனுமானிக்கும்போது, எந்த சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதும் காலாவதியாகியிருக்கும். இன்னொன்று..... அவர காணாமல் போன தேதி அன்று, அவர் இறந்து விட்டார் என்று அனுமானிக்கவும் முடியாது.

அத்தோடு,   இந்த அனுமானம் பிற்பாடு தான் ஏற்படுகிறது. அதை முன்தேதியிட்டு அமுல்படுத்த முடியாது.

எனவே அவர் காணாமல் போன தேதியில் இருந்து 7 வருடம் கழித்து, ஒரு நீதிமன்றம் தன் அனுமானத்தின் மூலம்.அன்னார் இறந்து விட்டாரென்று உத்தரவு வழங்கும் தேதியே அவர் இறந்த தேதியாக கொள்ள முடியும்.

அதன் படி அதற்கு முன்னர் நிர்வாகம் அவர் பணிக்கு வரவில்லை என்று எடுத்த ஒழுங்கு நடவடிக்கை எதுவும் இந்த உததரவிற்கு பிறகு செல்லாது.

ஏழு வருடம் என்ற கணக்கீடு எதற்கு?

முதன் முதலில் இந்த விதி கொண்டு வருவதற்கான தேவை இங்கிலாந்தில் ஏற்பட்டது. அதிக தூர கடல் பயணம் மேற்கொண்டு பல வருடம் எந்த தகவலும் இல்லாமல் திரும்பியவர்கள், தங்கள் மனைவி இன்னொரு திருமணம் செய்திருப்பதை கண்டு குடும்ப பிரச்சினைகளும் சொத்து பிரச்சினைகளும் ஏற்பட்டன.அதற்கு தீர்வு காண, இங்கிலாந்து பல தார தடை சட்டம் 1603 கொண்டு வரப்பட்டது. அதன்படி அந்த குற்றத்தில் இருந்து தப்பிக்க, 7 வருடத்திற்கு மேல் எந்த தகவலும் இல்லாததால் திருமணம் செய்தவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

இந்த சட்டம் தான் அடுத்த வந்த மற்ற சட்டங்களின் மூலம்.  நம் நாட்டில் சட்டங்கள் அவற்றை தழுவி இயற்றப்பட்டதும் நமக்கு தெரியும்.

சட்டம் இப்படி சொல்வது இருக்கட்டும்.

பணிக்  காலத்தில் ஒரு அரசு ஊழியர் காணாமல் போனால் நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கை ஒரு பக்கம்

ஒரு குடும்பத் தலைவராக இருக்கும் அவரின் திடீர் மறைததலால், அந்த குடும்பம் சொல்லொண்ணா மனதளவு துன்பம் மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் துன்பப்படும்.

படிமப்புரவு கூகிள்

அரசு முதலாளி மட்டுமல்ல, அதன் குடிமக்களின் நலன் காப்பதில் முன்னோடியாகவும் இருக்கவேண்டும் அல்லவா?

இது சம்பந்தமாக நம் மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

Circular Letter No.4-52/86-Pen., dated 3-3-1989.  இதன்படி

(i) குடும்பத்தை அப்படியே விட்டுவிட்டு ஒரு ஊழியர் காணாமல் போனால், முதலில், அவருக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கி, விடுப்பு சம்பளம், மற்றும் GPF ஆகியவற்றை ஊழியர் குடும்ப உறுப்பினர் யாரை நியமித்துள்ளாரோ அவருக்கு வழங்கவேண்டும்.

(ii)ஒரு வருடம் முடிந்த பிறகு, சில நிபந்தனைக்கு உட்பட்டு அந்த குடும்பத்திற்கு கிராஜுவடி, வழங்கவேணடும்.

இன்னொரு சிறப்பும் இதில் உண்டு. இந்த குடும்ப பென்சன் கேட்டு ஓர் வருடம் கழித்து விண்ணப்பம் கொடுத்து, அது மூன்று மாதம் வரை நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், வட்டியுடன் சேர்த்து கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது…

இதன் படி மனுதாருக்கு உரிய அனைத்து பலன்களும் பெற உரிமையுள்ளவர் என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டது.

சரி. ரொம்ப சீரியசாவே பேசிட்டோம்.    இப்ப ரிலாக்ஸ் டைம்.😂😁😀🤣

நான் படித்த சுவாரசியமான வழக்கு இது

மேலே சொன்னது போல ஒரு வழக்கு அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் வந்தது. குடும்ப தலைவர் காணாமல் போனதால் அங்குள்ள சோசியல் செக்யூரிட்டி ஸ்கீம் படி, குழந்தைகள் படிக்கவும், குடும்ப பராமரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கிறது.

சினிமாவில் வருவது போல…

19 வருடம் கழித்து காணாமல் போனவர் வருகிறார்…

அதுவும் எப்படி… தனக்கு ஓட்டுநர் உரிமம் வேண்டும் என்று மனு செய்கிறார்..அது இந்த நீதிமன்ற உத்தரவை காட்டி நிராகரிக்க படுகிறது.😁

அடுத்து அவர் அந்த நீதிமன்றத்தில், உத்தரவை நீக்க கோரி மனு செய்கிறார்.

அடுத்து நடந்தது தான் ட்விஸ்ட்..

அவர் மனைவி அதை எதிர்க்கிறார்..

என்ன காரணம் சொல்கிறார் தெரியுமா?

ஒரு தீர்ப்பை எதிர்க்க மூன்று வருடத்திற்குள் மேல்முறையீடு செய்யவேண்டும். ஆனால் இது 19 வருடம் கழித்து…அதனால் என்கிறார்😂

நீதிமன்றமும் இந்த சட்டப் பாயிண்டை ஏற்றுக் கோண்டு, தான் இறந்துவிட்டதாக நீதிமன்றம் போட்ட உத்தரவை நீக்க கோரிய அவர் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.😁😂🤣

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...