இந்த கேள்வி சற்று நையாண்டித்தனமாக கேட்கபட்டிருந்தாலும் அதில் உள்ளே பொதிந்திருக்கும் ஆழமான ஆதங்கம் நமக்கு தெரிந்ததே.
இது போன்ற விமர்சனகள் பெரும்பாலும் அரசு அலுகலகங்களிலுள்ள செயல்பாடுகள் குறித்து தான் எழுப்பப்படுகின்றன.
சமீபத்தில் நமது மாண்புமிகு உயர்நீதிமன்றமும் இதே போன்ற ஒரு விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
அரசு ஊழியர் ஒருவரின் தற்காலிக பணி நீக்கத்தை எதிர்த்து போடப்பட்ட வழக்கு அது. அவர் மீதான குற்றச்சாட்டு வேலை நேரத்தில் தன்னிடமிருந்த மொபைல் போனை வைத்து மற்ற ஊழியரையும் அதிகாரிகளையும் படம் பிடித்தார் என்பதும் அதை தடுத்த மேலதிகாரியை தாக்க முனைந்தார் என்பதும்.
அலுவலக நேரங்களில் தேவையில்லாமல் செல்போன் மற்றும் கேமராக்களை பயன்படுத்தும் அரசு ஊழியர்களை விமர்சித்த சென்னை உயர்நீதிமன்றம், "..இத்தகைய ஒழுக்கமின்மையும் தவறான நடத்தையும் தொடர அனுமதித்தால், வரி செலுத்துவர்களின் மூலம் நல்ல ஊதியத்தை பெறும் அரசு ஊழியர்கள் பொதுமக்களுக்கு மிகப்பெரிய பாவத்தைச் செய்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.' என்றது.
- முதன் முதலில் அரசுப் பணியில் சேர்ந்தவுடன் அரசு ஊழியர்கள் தங்களின் அசையும்; அசையாச் சொத்துகள், நகைகள், செலுத்திய காப்பீட்டு கட்டணங்கள், வங்கி வைப்புகள், சேமநல நிதி (Provident Fund), கடன்களும் பொறுப்புகளும் (Loans and Liabilities) குறித்தான முழு விவரங்கள், குறிப்பிட்ட படிவங்களில் தங்களது சொத்து-பொறுப்பு பட்டியல்களை (Assets and Liabilities Statements) அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் அதற்க்கு பின்னும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும், பின் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு ஒராண்டு முன்னரும், தங்கள் துறை தலைமைக்கு சமர்பிக்க வேண்டும்.
- அரசுப் பணியாளர் எவரும்: வரதட்சணை கொடுக்கவோ, வாங்கவோ, அதற்க்கு உடந்தையாகவோ இருத்தல் கூடாது அல்லது மணமகள் அல்லது மணமகனது பெற்றோர் அல்லது காப்பாளரிடமிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ பரிசம்/ வரதட்சணை கோரக்கூடாது.
- அரசு பணியாளர் எவரும் அரசின் முன் அனுமதியின்றி பாராட்டுரை, பணி நிறைவு வாழ்த்துரை அல்லது பாராட்டு பட்டயச் சான்றிதழ் எதனையும் ஏற்றுக் கொள்வதோ அல்லது தன்னையோ மற்ற அரசு பணியாளரையோ சிறப்பிக்கும் முறையில் நடைபெறும் கூட்டத்தில் அல்லது கேளிக்கையில் கலந்து கொள்வதோ கூடாது.
- அரசுப் பணியாளர் எவரும், அரசு முன் ஒப்பளிப்பு இல்லாமல் நன்கொடைகள் கேட்பதோ அல்லது ஏற்றுக் கொள்வதோ அல்லது நோக்கம் எத்தகையதாயிருப்பினும் அதன் பொருட்டுப் பணமாக அல்லது பொருளாகத் திரட்டவோ அல்லது பிறவகையில் அது தொடர்பாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவோ கூடாது.
- எந்த அரசுப் பணியாளரும் ஏதேனும் கடன் மூலப்பத்திரம், பங்கு முதல் அல்லது பிற முதலீட்டில் ஊக வணிக நோக்குடன் ஈடுபடுதல் கூடாது.
- தனது தல அதிகார எல்லைக்குள் அமைந்த எவரேனும் ஒருவருக்கு அல்லது ஒருவரிடமிருந்து அல்லது அலுவல்முறை செயல்பாடுகளைக் கொண்டுள்ள ஒருவரிடம் முதன்மையாளர் அல்லது முகவர் என்ற முறையில் பணம் கொடுக்கல் அல்லது வாங்கல் கூடாது.
- யாரேனும் ஒருவருக்கு வட்டிக்குப் பணமாக அல்லது பொருளாகக் கொடுத்தல் அல்லது அவ்வாறு திரும்பப் பெறுதல்
- அரசுப் பணியாளர் எவரும் தாமோ, தன்னுடைய குடும்ப உறுப்பினர் அல்லது தன் பொருட்டுச் செயற்படுபவர் மூலமாகவோ, அரசின் முன் ஒப்பளிப்பு இல்லாமல்; அவரது மொத்த மாத தொகைக்கு மேற்பட்ட எந்தத் தொகையையும் தனிப்பட்ட எவருக்கும் கொடுக்கவோ அவரிடமிருந்து பெறவோ கூடாது.
- ஆசிரியர் பணியிலுள்ள அரசு பணியாளர் ஒருவர், மாணவரிடத்தில் அல்லது முன்னாள் மாணவரின் பெற்றோரிடத்தில் அல்லது காப்பாளரிடத்தில் அல்லது தான் பணிபுரியும் பள்ளி அல்லது கல்லூரியின் பணியாளரிடத்தில் அல்லது பணியாளர் அமைப்புடன் பணப்பயன் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து தடை செய்யப்படுகின்றார்.
இது போல ஏகப்பட்ட விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.. இவற்றை மீறும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும்.
இது ஒரு தனி அரசு ஊழியரின் நடத்தை குறித்த விதிகள் என்றால், ஒரு அரசு அலுவலகத்தில் என்ன இருக்கவேண்டும், என்ன இருக்ககூடாது என்பதற்கும் உத்தரவுகள், அரசு ஆணைகள் உள்ளன.
இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என்பதால் சமீபத்தில் நம் தமிழக அரசு, எந்த மத ரீதியான படங்களையும் அரசு அலுவலங்களில் வைக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. இது போல, ஏற்கெனவே ஜூலை 18, 1968 அன்று, அரசு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. "மதச்சார்பற்ற தன்மையை" கருத்தில் கொண்டு அரசு அலுவலங்களில் உள்ள கடவுள்களின் படங்கள் / சிலைகள் "படிப்படியாக மற்றும் ஆடம்பரமின்றி" அகற்றப்படுவதை உறுதிசெய்யுமாறு துறைத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. .
இதையடுத்து, அரசு ஊழியர்கள் அலுவலகங்களில் வழிபாடு நடத்துவதைத் தடை செய்து, ‘தமிழ்நாடு அலுவலக கையேட்டில்’ திருத்தம் செய்து, 1993ல் அரசு ஜி.ஓ., பிறப்பித்தது. சுற்றறிக்கை மற்றும் G.O-வை அமல்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இருப்பினும், இன்றும் தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் உருவப்படங்கள் பல அலுவலகங்களைத் தொடர்ந்து அலங்கரிக்கின்றன இந்த உருவப்படங்களை வைத்திருக்கும் ஊழியர்கள் தினசரி தங்கள் அறைகளில் வழிபாடு செய்கிறார்கள்.