கிரயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிரயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 டிசம்பர், 2021

பாகப்பிரிவினை செய்வதற்கு முன்பே ஒருவர் சொத்தை வாங்கினால் என்னவாகும்?

 



பங்கு சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை ஒருவர் வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நிறுவனம், டிவைடென்ட் வழங்குவதாக அறிவித்து ஒரு குறிப்பிட்ட நாளை ரெக்கார்டு தேதியாக குறிப்பிடும். அந்த தேதியில் தான் அந்த பங்குகளை யார் யார் வைத்திருக்கிறார்கள் என்று சரிபார்த்து அவர்களுக்கு அந்த தொகை வழங்கப்படும். அதனால் அந்த தேதி வரை அந்த நிறுவன பங்குகள் மார்க்கெட்டில் வேகமாக ஏறிக்கொண்டேயிருக்கும். நிறைய பேர் அதை வாங்க முன் வருவார்கள்.. ஆனால் அதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம், அந்த ரெகார்ட் தேதிக்கு முந்திய தினத்தில் யார் பெயரில் அந்த பங்குகள் உள்ளதோ அவருக்கு தான் அந்த தொகை கிடைக்கும். அந்த பங்குகளை அந்த தேதியில் யார் வாங்கியிருந்தாலும் அவருக்கு அது போய் சேராது...ஏனெனில் எந்த பரிவர்தனையும், அந்த நிறுவனத்தின் கணக்கிற்கு வர இரண்டு நாட்கள் ஆகும் என்பதால், ரெகார்ட் தேதியில் வாங்கியவரின் பெயர் இருக்காது இதன் மூலம், அந்த பங்குகளை விற்றவருக்கு இரட்டிப்பு யோகம் அடிக்கும்.

ஒரு விதத்தில், பாகப்பிரிவினை செய்யப்படாத பங்கினை வாங்குபவரின் நிலையு ம், அது போன்ற நிறுவன பங்கினை வாங்குபவர் நிலையை ஒத்து இருக்கும்.

பாகம் பிரியம் போது தான், வார்சுகளில் யாருக்கு எந்த பகுதி நிலம் அல்லது சொத்து கிடைக்கும் என்பது உறுதியாகும்.

அதுவரை பிரிபடாத சொத்தின் கூட்டு உரிமையாளர்களாக தான் பங்காளிகள் இருப்பர். அந்த சமயததில் அந்த சொத்தை வாங்குவதென்றால், அனைவரும் மொத்தமாக கிரயம் செய்யலாம்.

அப்படியில்லாமல், பாகப்பிரிவினை செய்வது காலதாமதம் ஆகிறது என்று, பிரிபடாத கூட்டு சொத்தில், தன் பங்கை விற்கின்றனர். இதில் கிரயம் பெற்றவருக்கு, சில பிரச்சினைகள் உண்டு.

பாகப்பிரிவினை செய்யப்படும் சொத்தின் உரிமையுள்ளார் ஒரு குடும்பததை சேர்ந்தவராக இருப்பர். கிரயம் கொடுத்தவருக்கு உள்ள அதே உரிமை தான், அதை பெற்றவருக்கும் இருக்கும் என்று சொல்லப்பட்டாலும், நடைமுறையில் அது சாத்தியப்படாது. அவர்கள் ஒதுக்கும் பகுதியையே பெற்றுக்கொள்ள நேரிடும். கிரயம் கொடுத்தவர் தான் அவர்கள் குடும்ப உறுப்பினர. அவருக்காக சில விட்டுக்கொடுத்தல்கள் பாகப்பிரிவினையின் போது இருக்கும். ஆனால் அந்த இடத்தில் இருக்கும் மூன்றாம் நபருக்கு அதே சலுகை கிடைக்காது. இவரும் அதை உரிமையாக கோர முடியாது. இவருக்கு தான் முழுமையாக அடையாளப்படுத்தாத சொத்தின் ஒரு பகுதியை தானே பெற்றுள்ளார். அதுவும் பிரிக்கும் சக பங்காளிகள் ஒன்றாய் இருக்க, இவர் மட்டும் தனித்து இருப்பார். வேண்டுமானால் பாகப்பிரிவினை செய்ய விடாமல் தடுக்கும் முயற்சியாக தான் அமையும்.அது அவருக்கும் நல்லதல்ல.

அப்படியானால் என்ன தான் தீர்வு?

சம்பந்தப்பட்டவருக்கு உரிமையான பங்கு பாகபிரிவினையின் போது பெறும் வரையில் காத்திருந்து அவரிடமிருந்து வாங்கலாம்

சனி, 25 டிசம்பர், 2021

எங்கள் நிலத்துக்கு பக்கத்தில் இருக்கும் நிலம் விற்பனைக்கு வருகிறது. நான் வெளிநாட்டில், விற்பவரும் வெளிநாடு போகவேண்டும்.என் தந்தையின் பெயரில் பதிவு செய்யப் போகிறோம். பதிவு செய்யும் போது இது என் சம்பாத்தியத்தில் வாங்கியது என பதிவு செய்ய முடியுமா?

 நிலத்தை உங்கள் தந்தை பெயரில் வாங்கவுள்ளது நல்லது தான்.ஆனால் அவருக்கு கிரயம் செய்ய பணம் எப்படி வந்தது என்று பதிவு செய்வது…அது தேவையில்லாதது என்றாலும் கூட , அதன் உள்ளே ஒரு அவநம்பிக்கையும் தொக்கியுள்ளதே? 
அவர் பெயரில் சொத்து வாங்கினால், பின்னாளில், அதை அவர் விருப்பப்படி மாற்றி விடுவார் என்றா? 
பின்னாளில் சொத்தை அப்பா வேறு யாருக்காவது மாற்றி எழுதிவிட்டால், கேஸ் போட ஒரு ஆதாரம் என்று நினைப்பா?  
மற்றபடி, அப்படி எழுதுவதால் மட்டுமே பணம் கொடுத்தவருக்கு உரிமை வந்துவிடாது.

நமக்கு முன் பின் அறியாத ஒருவர், திருமணம் ஆகி நம் துணை ஆனவுடன், அவர் மீது எவ்வளவு நம்பிக்கை வைக்கிறோம்? அவருக்கு நகை வாங்கி கொடுக்கவோ செலவழிக்கவோ யோசிப்பதுண்டா? 
ஏனெனில் அவர் நம்மில் பாதி.. 
ஆனால் அப்பா அம்மாவுக்கு என்றால், ஏன் இந்த தயக்கம்?
 நாம், நம் பெற்றோரின் "பிரதி"யல்லவா? 
அதை எப்படி மறந்தோம்?
 நம் அண்ணன் தம்பிக்கு எழுதி கொடுத்துவிடுவார் என்றா??

இதே அவநம்பிக்கையை நம் மீது அவர் வைத்து இருந்தால், இன்று வெளிநாட்டில் வேலை செய்யும் அளவிற்கு நம் கல்வி தகுதி கூடியிருக்குமா?

போன மாதம் ஒரு தம்பியிடம் பேச நேர்ந்தது..தன் அம்மா சொத்தில் பங்கு கொடுக்காமல், ஒத்தி போடுவதால், தான் வீட்டுக் கடனை தொடர்ந்து கட்டி அல்லல் படுவதாக "அலட்டி"க்கொண்டார்.

"உன் அம்மாவிற்கு இப்போது மாதம் மாதம் பணம் கொடுக்கிறாயா? "

"ஒரு தடவை என் க்ரெடிட் கார்டை போய் கொடுத்தேன்.செலவழித்துக்கொள்ள.. வேண்டாம் என்று விட்டார்கள்.".

"நீ அவர்களுக்கு பணமாகக் கொடுத்திருக்கலாம்.. மற்றவரை படிக்கக் கூட வைக்காமல், .உன்னை மட்டும் தான் தனியார் கல்லூரியில் படிக்க வைத்தார். கூடவே கம்புயூட்டர் டிப்ளோமா..பி.ஜி.படிக்க வைத்தார். அது தானே உன்னுடைய இந்த வேலைக்கு அடிப்படை?"

"என்ன பெரிதாக செல்வழித்து விட்டார்? சில ஆயிரங்கள் இருக்குமா? அதை வேண்டுமானால் இப்போது தந்து விடுகிறேன்"

சற்றென்று "காலத்தினால் செய்த சிறு உதவி" நினைவுக்கு வந்தது. பேச்சை நிறுத்தி விட்டேன்.

இதை தான் இந்த வினாவை படிக்கும் போதும் தோன்றியது..

தனக்கு பின்னால் தேவைப்படும் இந்த பணம் என்று சேமித்து வைக்காமல், அப்பா நம் படிப்புக்கு உதவி செய்தது ஏன் நினைவுக்கு வரவில்லை?

"அவர் ஒன்றும் பெரிதாக செலவழிக்கவில்லை.உபகார சம்பளம் பெற்று தான் படித்தேன்"…
இல்லை "பகுதிநேர வேலை பார்த்துக்கொண்டே படித்தேன்" என்போமா?

ஆனாலும், அதற்கு தகுதியான உடல் நலததை கொடுத்தது அவர் போட்ட உணவு அல்லவா?

"பிள்ளையை காப்பது அவருடைய கடமை" என்போமா? அப்படியானால் வளர்ந்த பிள்ளை, அப்பாவுக்கு திரும்ப செய்வதும் கடமை தானே?

"அவருக்கு உண்டான செலவுக்கு தான் பணம் கொடுக்கிறேனே?" என்போமா?

தன்மானம், சுய மரியாதை தராத பணம் உவப்பாக இருக்குமா அவருக்கு?

"தான் இனி இந்த குடும்ப
த்திற்கு வேண்டாத நபராகி விட்டோம்" என்ற உணர்வு தான் வீட்டின் குடும்ப தலைவராக இருந்த ஒருவருக்கு கிடைக்கும் மரண அடி!!
முன்னர் திருமணமான பெண்ணிற்கு கொடுக்கும் சொத்தை, அவள் வாழும் காலம் வரைக்கும் தான் அனுபவிக்கலாம்,. அதை தவிர்த்து அதை கிரயம் செய்யவோ, அதில் வில்லங்கம் ஏற்படுத்தவோ முடியாத அளவிற்கு தான் அவள் உரிமை ஒரு வரையரையுடன் இருந்தது..
இன்று அப்படி நிர்ணயம் செய்ய முடியாது.. 
பெண்ணுக்கே சொத்தில் முழு உரிமை என்னும்போது பெற்றவருக்கு?

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது, "தனியொரு மனிதன்" படம் டிவியில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அரவிந்த சாமி தன் அப்பாவை தன்னுடைய கைப்பாவையாகவே வைத்திருப்பார்.. அவரை முழுதும் நம்பும் அவர் அப்பா..கடைசியில் பிள்ளை தான் தன்னை "முடிக்க" ஏற்பாடு செய்தான் என்னும் போதும், அவரின் பேச்சு பெருந்தன்மையாக இருக்கும். அது தான் ஒரு அப்பா, பிள்ளையின் மீது வைக்கும் பாசத்தின் வெளிப்பாடு..எந்த பணமும் சுகமும் அதை ஈடு செய்யாது.!!.

அப்பாவின் சட்டைப்பையில் பணம் எடுக்க பிள்ளைக்கு இருக்கும் சுதந்திரம், பெற்றவனுக்கு இருப்பதில்லையே?
அதை அவரும் கோருவதில்லை என்பது தான் உண்மை.
 பிள்ளை கொடுத்து பெறவேண்டும் என்றே நினைப்பார்..அதில் தான் அவரின் பெருமையும் அடங்கியுள்ளது..அதுவும் கணக்கு கேட்காமல், மகன் பணம் கொடுக்கிறான் என்றால், அவரின் பூரிப்புக்கு அளவேயிருக்காது. இதில் சொத்து வாங்கி அவர் பெயரில் எழுதுகிறீர்கள் என்றால், உற்சாகத்தின் உச்சிக்கே போய் விடுவார்..இதில், "பணம் வந்த வழியை" "இடைசெருகலாக" நுழைத்ததன் காரணம் தெரிந்தால்???

எந்த அப்பா தன் பிள்ளையின் முன்னால் அழுதிருக்கிறார்??!!

இன்று நாம் உலகத்தையே சுற்றலாம்..ஆனால், அவர் உயிரின் ஒரு துளியில் இருந்து தானே, நம் உலகமே தொடங்கியது..

இன்று நாம் போய் கொண்டிருக்கும் பாதையின் ஆரம்பத்தில், கைபிடித்து நம்மை நடக்க பழக்கியவரே அவர் தானே?
 சற்றென்று ஒரு தருணத்தில் நம் பிடியை அவர் விட்டார் தான்...
அவர் பிடித்துக் கொண்டு இருப்பதாக எண்ணிக் கொண்டு தானே நம் பயணமும் தொடர்ந்தது?? 
இன்று வரை அந்த எண்ணத்தில் மாற்றம் இருக்குமா?
 பிடியை விட்டாலும், நின்ற இடத்திலிருந்தே நம் பயணத்தை அவர் கண்காணித்து வரவில்லை?? 
அவர் நம் கையை பிடித்துக்கொண்டு இருப்பதாகத்தானே இன்னமும் நினைத்துக்கொண்டு பயணத்தை தொடர்கிறோம்?

அவருடைய தன்னம்பிக்கை தானே நம் நம்பிக்கையும் கூட??!!

"என்ன… ஒரு சந்தேகத்தை கேட்டதற்கு இவ்வளவு சொல்ல வேண்டுமா?" என்னும் உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.
இது எல்லாமே தன் அப்பாவை தன்னருகில் வைத்துக்கொண்டு, அவருக்கு வேண்டியதை செய்ய முடியாமல் போன, அவர் வாழும் காலத்தில் அவரிடம் தனக்கு உள்ள பிரியத்தை பலமுறை நினைத்தும் சொல்ல முடியாமல் போன ஒரூ மகளின் எண்ணக்குமுறல்..அதைத்தான் இங்கே பதிவு செய்கிறேன்.

என் பிரிய சகோதரர் நா.முத்துக்குமார் சொன்னது போல,
"கடைசி இலை கீழே விழுவதற்கும் காற்று வர வேண்டும் இல்லையா?"

வியாழன், 16 டிசம்பர், 2021

தாய் பத்திரம் இல்லாத நத்தம் பட்டாவை பெயர் மாற்றம் செய்வது எப்படி? பத்திரம் இல்லாத இந்த சூழ்நிலையில் எப்படி பத்திர பதிவு செய்வது?

 கிராமங்களில் உள்ள அரசு நிலங்கள் தான் நத்தம் என்று சொல்லப்படும்.

அதை ஆக்கிரமித்து குடியிருப்புபவர்களுக்கு தோராய மற்றும் தூய பட்டா அரசால் கொடுக்கப்படுகிறது. உங்களுக்கு கொடுக்கப்பட்டது தோராய பட்டா என்று சொல்லியுள்ளீர்கள்.

"தோராய பட்டா" என்பது நத்தம் நிலத்தில் உள்ள ஏரி, குளம், வீடு, தெரு என பிரித்து வரைபடம் உருவாக்கி, புதிய சர்வே எண்களை கொடுத்து நத்தம் நிலவரித்திட்ட பட்டாவாக கொடுக்கப்படுவது.

இதை அரசு கொடுப்பதன் நோக்கவே, அந்த நிலங்களை சரியான முறையில் ஆவணப்படுத்தி, நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் ,அந்த நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கி, அந்த நிலத்தை வரி விதிப்புக்குள் கொண்டு வரூவதற்கே..

"தோராயம்" என்றால் "ஏறக்குறைய" என்று தானே பொருள்..இந்த பட்டாவிற்கு "தோராய பட்டா" என்ற பெயர் வந்த காரணமே, பட்டாவில் உள்ள பெயர்கள், அளவுகள் ஆகியவற்றில் தவறுகள் கண்டறியப்பட்டு அவை தெரிவிக்கப்பட்டால், திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்பதாலேயே..

நிலவரியை கட்டுவதன் மூலம், அரசு நிலத்தில் தான் நாம் குடியிருக்கிறோம் என்பதை அங்கு வசிப்பவர் ஒத்துக்கொள்கிறார்..ஆட்கள் வேண்டுமானாலும் மாறலாம்.அவர்கள் பெயர்கள், பட்டாவில் மாற்றம் செய்து தரப்பட்டாலும், அது எந்த வித உரிமையையும் வசிப்பவருக்கு, ஏற்படுத்தி தராது.

உரிமை உள்ள சொத்தையே ஒருவர் இன்னொருவருக்கு, உரிமை மாற்றம் செய்துக் கொடுப்பது தான் கிரயம்..இங்கு எந்த உரிமையும் இல்லாத தோராய பட்டாவை மட்டும் கொண்டு கிராயம் செய்ய முடியாது. அப்படியே செய்தாலும் அது சட்டப்படி செல்லுபடியாகாது. வங்கியில், அந்த நிலத்திற்கு எந்த கடனும் தர மாட்டார்கள்.அரசு எந்த நேரத்திலும் வெளியேற சொல்லி அறிவிப்பு கொடுத்தால், கிளம்பத்தான் வேண்டும். இத்தனை வருடங்கள் குடியிருந்தோம் என்று உரிமை கொண்டாட முடியாது.

மேலும் மூலப் பத்திரம் என்பது, நமக்கு அந்த சொத்தின் உரிமை எப்படி வந்து சேர்ந்தது என்பதை விவரிப்பது. அது இல்லாமல் அந்த நிலத்தை பொறுத்து, எந்த பாத்திரமும் பதிவு செய்ய முடியாது. இன்னொரு முக்கிய விஷயம்.அரசு நிலம் தானே நத்தம்..அதனால் பதிவுத் துறையிலும், அந்த நிலம் குறித்த எந்த பத்திரத்தையும் பதிய மாட்டார்கள்.

இதில் இன்னொரு சமூக நீதியும் உள்ளது. குடியிருக்க வழியில்லாதோருக்கு, வசிக்க அனுமதி மட்டுமே கொடுத்துள்ள போது, அதில் ஆதாயம் பார்க்க நினைப்பது கூடாதில்லையா?

சனி, 12 ஜூன், 2021

ஒரு இடத்தின் பத்திரம் வேறு நபரிடம் இருந்தால், இடத்தின் உரிமையாளர் இடத்தை விற்பனை செய்ய முடியுமா?

 பொதுவாக, பத்திரத்தை வாங்கி கொண்டு கடன் கொடுப்பது உணடு. அதனால் கிரயப் பத்திரம் வேறு ஒரு நபரிடம் இருக்கிறது என்றாலே அதனோடு வில்லங்கமும் இருக்கிறது என்று தான் பொருள் கொள்வர். தொலைந்து விட்டதாக சொன்னாலும் அதற்கு என்று நடைமுறைகள் பின்பற்றவேண்டும். அப்போது தான் கிரையப் பத்திரம் இல்லாமலேயே சான்றிட்ட நகலை கொண்டு இடத்தை விற்கலாம். ஆனால் பத்திரம் இன்னொருவரிடம் இருக்கிறது என்று தெரிந்தே, தொலைந்து விட்டதாக சொல்லி இடத்தை விட்டபின், பத்திரம் வைத்திருப்பவர் ஏதேனும் உரிமை கொண்டாடினால், கிரயம் பெற்ற நபருக்கும் சேர்த்து நீங்கள் செலவு செய்ய வேண்டியிருக்கும்

திங்கள், 7 ஜூன், 2021

இருநபர்கள் சேர்ந்து எழுதிக் கொடுத்த பவரை, அதில் ஒருவர் ரத்து செய்ய விரும்பினால் எப்படி செய்வது?

 இருநபர்கள் சேர்ந்து எழுதிக் கொடுத்த பவரை, அதில் ஒருவர் ரத்து செய்ய விரும்பினால் எப்படி செய்வது?

இரண்டு நபர்கள் சேர்ந்து பவர் பத்திரத்தை எழுதி கொடுக்கின்றனர் என்றால் அந்த சொத்துக் குறித்த உரிமை இரண்டு பேருக்கும் பொதுவாக இருக்கும்.

அதில் உள்ள பிரிக்கப்படாத உரிமையைப்  பொறுத்து ஒருவர் மட்டும் கொடுத்த அதிகாரத்தை ரத்து செய்து தனியாக பத்திரம் பதியலாம்.

அது போன்ற சமயத்தில்,  பவர் கொடுக்கப்பட்ட நாளில் இருந்து, ரத்து செய்யும் நாளுக்குள்ளாக பவர் பெற்றவர் அந்த சொத்து குறித்து எடுத்த செயல்களை அது பாதிக்காது. உதாரணமாக கிரயம் செய்ய அதிகாரம் கொடுத்து, அதன் பேரில் அவர் ஒப்பந்தம் போட்டிருந்தால், அது நம்மை கட்டுப்படுத்தும்.

ஆனால் கூட்டு சொத்தில் பவர் கொடுத்து, பின்னர் ஒருவர் மட்டும் ரத்து செய்யும்போது, சில வேண்டத்தகாத விளைவை ஏற்படுத்தும்.

உதாரணத்திற்கு, பவர் கொடுத்த ஒருவரின் அதிகாரத்தை கொண்டு பவர் ஏஜென்ட் செயல்பட்டு ஒரு ஆவணம் ஏற்படுத்தி, அந்த பிரிக்கப்படாத சொத்தின் பாதி உரிமையை இன்னொருவருக்கு மாற்றும் போது, வில்லங்கமும் சேர்ந்து வரும்.

இப்படித்தான் ஒருவர்

அவரை Mr. x என்று வைத்துக் கொள்வோம்.

அவர் சகோதரர் மகனும் சேர்ந்து பவர் பத்திரம் இன்னொருவருக்கு எழுதிக் கொடுத்தனர். பவர் வாங்கியவர ஓர் கிரய ஒப்பந்தம் போட்டு கிரயத் தொகை வாங்கிவிட்டார். அது இரண்டு தரப்பிற்கும் கொடுக்கப்பட்டும் விட்டது.Mr. X இறந்துவிட்ட பிறகு, தற்போது அவர் வாரிசுகள், பவர் அதிகாரம் பெற்றவர் தங்கள் தந்தை இறந்தபின்பு பதிவு செய்யப்பட்டிருக்கும் கிரயம் செல்லாது என்று வழக்கு போட்டுள்ளனர்.

பவர் பத்திரம் பவர் கொடுத்தவர் இறப்பிற்கு பின்னர் செல்லாது

எனவே முடிந்த வரை, சமாதானமாக தீர்வு காண முயற்சிக்கவும்..

கிரய பத்திரத்தில் வாங்கியவர் கை ரேகை மட்டுமே உள்ளது. விற்றவர் கை ரேகை இல்லை கையெழுத்தும் இல்லை என்றால் பத்திர பதிவு செல்லுமா?

 முதலில் கிரய பத்திரம் என்றால் என்ன..

இன்னார் அவருக்கு உரிமைப்பட்ட சொத்தை இன்னாருக்கு இன்னின்னதை பெற்றுக்கொண்டு தன் உரிமையை மாற்றிக் கொடுக்கிறார் என்பது தானே…

அதை எழுத்து மூலமாக்கும்போது, தன் உரிமையை மாற்றி கொடுப்பவர் கையெழுத்து அல்லது கைரேகை இருக்க வேண்டும் தானே?

அந்த ஆவணங்கள் சரியான முறையில் தான் தயார் செய்யப்பட்டுள்ளன அதாவது எந்த ஏமாற்றுதல் இல்லாமல் தான் அந்த சொத்தின் உரிமை மாற்றத்தை ஒப்புக்கொண்டு உரிமைக்காரர் அந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டார் என்பதை உறுதிபடுத்துவதுதான் அதனை பதிவு செய்வது. கையெழுத்தே இல்லை என்றால் பதிவு எதற்கு? அப்புறம் அந்த பதிவு செல்லுமா என்ற கேள்வி தான் எதற்கு?

இதற்குத்தான் அன்றாட வாழ்வில் நமக்கு தேவையான அடிப்படை சட்ட அறிவை பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

DTCP ஒப்புதல் வாங்கிய துண்டு நிலம் (plot) வாங்கிய பின்னர் அளந்து பார்க்கும்போது குறைவாக இருப்பின் நாம் வழக்கு தொடர இயலுமா? விற்றவர்களிடம் மீண்டும் ஒப்புதல் வாங்க வேண்டுமா? பி.கு: பத்திரத்தில் இருக்கும் அளவு அதிகம் பட்டாவில் உள்ள அளவு சரியான அளவு.

         பொதுவாக பூமியில் உள்ள நில அளவு,  பட்டாவுடையதை விடக் குறைவாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.    ஆனால் உங்கள் விஷயத்தில் அது சரியாக உள்ளது.அந்த விதத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியே!!?!!  

         பத்திரத்தில் உள்ள அளவு மாறுபட்டிருப்பதற்கு   எவ்வளவு என்று நீங்கள் சொல்லவில்லை

         தவறு உங்கள் புறமும் உள்ளது."buyers bewsre"என்று கேட்டதில்லையா??  . வாங்கும் முன் நில அளவு உறுதி படுத்த நீங்களும் முனையவில்லையே..
உறங்குபவருக்கு சட்டம் உதவாது.
       

         ஒரு பழமொழி கூட உண்டே. "விடியாமூஞ்சி எங்கேயோ போனால் எதுவோ கிடைக்காது" என்று.
       

         இதற்கு தான் அடிப்படை சட்ட விவரங்கள் ……வக்கீலுக்கும் கோர்ட்டுக்கு மட்டுமல்ல … எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பது.
        

        ஏமாற்றுதல் என்ற குற்ற செயலை விற்றவர் செய்துள்ளார் என்பது உண்டு தான் அதற்காக குற்றவியல் நீதிமன்றத்தில் தனிப் புகார் கொடுத்து வழக்கு போடலாம்..அல்லது காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கலாம். இதற்கு ஏற்படும் கால, பண விரயம் என்பது எவ்வளவு நில அளவு இழப்பு என்பதை பொறுத்து உள்ளது .வரப்பு சண்டைக்கு கேஸ் நடத்தி நிலத்தையே தொலைக்க கூடாதில்லையா?

ஒரு சொத்தின் அசல் ஆவணம் காணாமல் போனால் அந்த சொத்தை விற்பனை செய்ய காவல் துறையிடம் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழ் பெற எவ்வளவு நாட்கள் ஆகும்?

 அசல் ஆவணம் காணவில்லை எனில், கண்டிப்பாக ஆவணம் தொலைந்தது குறித்து போலீசில் புகார் செய்யவேண்டும். இது,


அடுத்து, நாளிதழில் விளம்பரம் கொடுத்து அதன் நகலை காவல் நிலையத்த்தில் கொடுத்தால், அவர்கள் சிறிது காலத்தில், கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழ கொடுப்பர். இது அசல் ஆவனத்தை மற்றவர் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும். முக்கியமாக செய்ய வேண்டும்.

அதன் பின்னர் சான்றிட்ட சொத்துபத்திரம். பெறலாம்.அதுவே அசல் ஆவணத்திற்கு ஈடாக கருதப்படும்.

ஞாயிறு, 6 ஜூன், 2021

2011ஆம் ஆண்டு ஒரு வீட்டுடன் கூடிய இடத்தை வாங்கினோம். இன்று இடத்தை விற்க போனால் அது நீர்ப்பிடிப்பு பகுதியில் வருகிறது, விற்க முடியாது வேண்டுமானால் சந்ததிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பத்திர பதிவின் போது திருப்பி அனுப்பிவிட்டார்கள். எப்படி விற்பது?

 2011ஆம் ஆண்டு ஒரு வீட்டுடன் கூடிய இடத்தை வாங்கினோம். இன்று இடத்தை விற்க போனால் அது நீர்ப்பிடிப்பு பகுதியில் வருகிறது, விற்க முடியாது வேண்டுமானால் சந்ததிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பத்திர பதிவின் போது திருப்பி அனுப்பிவிட்டார்கள். எப்படி விற்பது?

"Buyers beware" என்பது தான் அடிப்படை..ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருப்பானல்லவா?

வாங்கும் முன்பே வில்லங்கம் போட்டு பார்த்திருக்க வேண்டும் விசாரித்து இருக்க வேண்டும்..

இருந்தாலும், இப்போதைய நிலையில், உங்களையே விற்க அனுமதிக்காத நிலையில், உங்களிடம் விற்க எப்படி அனுமதித்தனர்?

அதே போல, இந்த கிரயத்தில் ஏற்படும் வில்லங்கத்திற்கு தான் பொறுப்பேற்பதாக கிரய பத்திரத்தில் விற்பனை செய்தவர் சொல்லியிருப்பார் ..

அதனால் இருவர் மீதும் வழக்கு தொடரலாம். அது ஒன்றே வழி!!


எனது குடும்ப உறுப்பினர்களுடன் சொத்து விற்பனை செய்வது அல்லது வாங்குவது நல்லதா? கெட்டதா?

 கூட்டு குடும்ப சொத்தாக ஒரு வீடு இருக்கும்போது, அதனை விற்று அவரவர் பங்குபணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

அவ்வாறு செய்யும்போது, பங்குதாரர் யாரேனும் அதை தானே கிரயம் பெற கேட்கும்போது, அவருக்கு முன்னுரிமை உண்டு. இது அவரின் சட்டப்பூர்வமான உரிமையும் கூட.

அதுக்காக பணம் குறைத்து கொடுக்கனும்ன்னு இல்லே..!

அவர் மற்றவருக்காண பங்குப் பணத்தை கொடுத்துவிட்டு தன் பெயருக்கு பதிவு செய்யலாம்.

ஆனால் அசையும் சொத்தை பொறுத்து, அது ரொம்ப சிக்கலான விஷயம்…

அதாவது விற்பதிலோ வாங்குவதிலோ அல்ல..அதுக்கு பின்னர் நடக்குமே.. அதுல 😀

இப்படித்தான் என் அண்ணனுக்கு பணமுடை ஏற்பட்டது.வீடு வாங்க பணம் கொஞ்சம் புரட்ட முடியலை. அண்ணன் மனைவியிடம் பேசி அவர் நகைகளை விற்க கொடுத்தார்.என் அண்ணன் என்னிடம் "எல்லாம் புது நகையாக உள்ளது.வெளியில் விற்றால் விலையை குறைப்பார்கள்.தெரிந்தவர் யாருக்கும் வேண்டுமென்றால் அவருக்கே விற்கலாம்" என்றார்.நானும் சரியென்று ஒரு உறவினருக்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டது.

எல்லாம் சரி தான்….அப்புறம் தான் கிளைமாக்ஸ்!!

அதுக்கப்புறம்..ஏதாவது ஒரு குடும்ப நிகழ்ச்சியில் இருவரும் கலந்துக் கொண்டால்,

மாப்பிள்ளை அவருதான்; ஆனா சட்டை என்னுடையது :😂🤣

 என்னுடையது :😂🤣

இவங்களுக்கு நடுவிலே மாட்டிக்கிட்ட ஆளு..😫😫


அரை ஏக்கர் ஒருவருக்கு ஆவணம் பதிவு செய்யப்பட்டது. 1994. அந்த சர்வே எண் ஒரு ஏரி என்று தெரியவந்தது. சரி, அந்த சர்வே எண் நிலத்தை ஒரு சார் பதிவாளர் எப்படி ஒரு பயனர் பெயரில் பதிவு செய்து கொடுப்பார்? . யாரிடம் இழப்பை கோருவது?

 அரை ஏக்கர் ஒருவருக்கு ஆவணம் பதிவு செய்யப்பட்டது. 1994. அந்த சர்வே எண் ஒரு ஏரி என்று தெரியவந்தது. சரி, அந்த சர்வே எண் நிலத்தை ஒரு சார் பதிவாளர் எப்படி ஒரு பயனர் பெயரில் பதிவு செய்து கொடுப்பார்? . யாரிடம் இழப்பை கோருவது?

ஆங்கிலத்தில் சொல்வார்கள் " buyers beware' என்று .

வாங்குபவர் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

வில்லங்கம் உள்ளதா என்று பார்க்காமல் வாங்கியது யார்?

சார் பதிவாளர் பணி, தன்னிடம் கொடுக்கும் ஆவணத்தில் முத்திரை கட்டணம், சொத்து மதிப்பு சரியாக உள்ளதா, பதிவு நடைமுறைகள் சரியாக பின்பற்றபட்டதா என்று பார்ப்பது மட்டுமே..

நீங்கள் எல்.ஐ.சி.யை விற்க வேண்டுமாயினும் பதிவு செய்து கொடுப்பார்!!

அப்படியானால், யாரிடம் இழப்பை கோருவது?

வேறு யார்…?

விற்பனை செய்பவர் தான், அந்த சொத்தில் எந்த வில்லங்கமும் இல்லை என்று உறுதி கொடுத்து, அப்படி வருமாயின் தானே முன்னின்று அதை தீர்த்து வைப்பதாக கிரய பத்திரத்திலேயே சொல்லி கையெழுத்திட்டு இருப்பாரே. அவரை தான் பிடிக்கணும்..!!

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...