இலவச சட்ட ஆலோசனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலவச சட்ட ஆலோசனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 ஜூன், 2021

இலவச சட்ட ஆலோசனையைப் பெற எங்கு போவது?

 இலவச சட்ட ஆலோசனையா…

வசதியில்லையா வக்கீல் வைக்க…இல்லே அட்வைஸ் கேட்கணும். சரியா சொல்லுவாங்களா..இல்லே உள்குத்து ஏதும் இருக்குமான்னு சந்தேகமா…

கவலையேப்  படாம சென்னை உயர்நீதிமன்றம் பக்கத்திலே இருக்கிற

  1. மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கோ

அல்லது

2. ஒவ்வொரு முதன்மை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில இருக்கிற மாவட்ட சட்டப் பணிகள் குழுவுக்கோ

அல்லது ஒவ்வொரு மாஜிஸ்திரேட் நீதிமன்ற வளாகத்தில் இருக்கிற

3. வட்ட சட்டப் பணிகள் குழுவிலோ

4.உயர்நீதிமன்ற சட்டப் பணிகள் குழுவிடமோ

அங்குள்ள

5. சமரச மையம்

6. மகளிர் மையம்

ஆகிய இடத்திலோ உதவி கிடைக்கும்

இவற்றில் ஏதாவது ஒனறில் ஆஜராகி எழுத்து மூலமோ வாய் மொழி மூலமோ உதவி கோரலாம். இதற்காக தனியாக கட்டணமோ நீதிமன்ற வில்லை ஒட்டிய மனுக்களோ தேவையில்லை.

  • ஒவ்வொரு மாவட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் வட்ட சட்டப் பணிகள் குழுக்களில் ஆலோசனை மையம் உள்ளது. எல்லா வேலை நாட்களிலும் இந்த மையங்களில், சட்ட உதவி கோரியவருக்கு, வழக்கறிஞர்கள் இலவசமாக ஆலோசனை கொடுப்பார்கள்.
  • முடிந்த வரை, சிக்கலற்ற பிரச்சினைகள், நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்படாமல் சமரசமாக முடித்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த மையங்கள் செயல்படுகின்றன.
  • ஆலோசனை வழங்கும் வழக்கறிஞர், தீர்வு கோரும் பிரச்சினையை சமரச முறையில் இரு தரப்பும் பேசித் தீர்க்கும் வாயப்பு உள்ளது என்று தீர்மானித்தால், இது சம்பந்தமாக பேச வரும்படி எதிர்தரப்பினரை கோரி கடிதம் எழுதி அவரை வரவழைத்து இரண்டு தரப்பும் வைத்து பேசி உடன்பாடு எடுக்க எல்லா முயற்சியும் எடுக்கப்படுகிறது.. உடன்பாடு ஏற்பட்டு, அதை ஒரு பத்திரம் மூலம் ஊர்ஜிதப்படுத்தவும் வழக்கறிஞர் உதவுவார்.
  • அல்லது நீதிமன்றம் மூலமாக ஆணை பெறவேண்டும் என்றாலும் அதற்கும் தேவையான உதவி செய்வார்.
  • உடன்பாடு ஏற்படாத வழக்கில் உதவி கேட்பவரின் கோரிக்கை நியாயமானது என்றால் நீதிமன்றம் எடுத்து செல்ல அவர் சிபாரிசு செய்வார்.

சமரச மையங்கள்

நீதிமன்ற நடைமுறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் பிரச்சினைகள் சமரசமாக பேசி தீர்த்துக்  கொள்ள இந்த சமரச மையங்கள் உதவுகின்றன.நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு என்றாலும், சமரசம் செய்துக் கொள்ள விரும்பும் நபர் இங்கு மனு செய்யும்போது, நீதிமன்ற கோப்பில் உள்ள வழக்குகோப்புகள் வரவழைக்கப்பட்டு, எதிர் தரப்பினரும் அழைக்கப்பட்டு இரண்டு தரப்பும் சமரசமாக தீர்வு காண அங்குள்ள வழக்கறிஞர்கள் உதவுவர்.  பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட சமரச உடன்பாடு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு அனுப்பட்டு, நீதிமன்ற தீர்ப்பு அதை ஒட்டி அளிக்கப்படும்.

பெண்களுக்கான மையங்கள்

  • மண வாழ்க்கை பிரச்சினை உட்பட எந்த பிரச்சினையையும் இங்கு கொண்டு வரலாம். பெண் வழக்கறிஞர்கள் மற்றும் சமூக சேவை செய்வோர் கலந்துக் கொண்டு தீர்வு காண முயல்வர். முடிந்த வரை திருமண உறவை முறிக்காமல் அதை பாதுகாக்கும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது..
  • தீர்க்க முடியாத பிரச்சினைகளில், பெண்களுக்கு விவாகரத்து கிடைக்கவோ, உடன் வாழும் உரிமை, ஜீவனாம்சம், குழந்தைகளை உடன் வைத்துக்கொள்ள உரிமை கோரும் வழக்கும் போட உதவி அளிக்கப்படும்.

குற்ற வழக்கில் உதவி

குற்ற வழக்கில் ஒரு நபருக்கு அவர் கைது செய்ய்யப்பட்ட சமயத்திலிருந்து வழக்கு விசாரணை, மேல்முறையீடு வரையில் வழக்கறிஞர் வைத்துக் கொள்ள வசதி இல்லாத போது இலவச சட்ட உதவி அளிக்கப்பட வேண்டும் என்பது அரசியலமைப்பு சட்டம் நமக்கு கொடுத்த உரிமை. அதன்படி

  • ஒருவர் கைது செய்யப்பட்டாலோ அல்லது விசாரணைக்கு காவல் நிலையம் அழைக்கப்பட்டாலோ, அவர் உறவினர்கள் பக்கத்திலே உள்ள சட்டப் பணிகள் குழுவிடம் உதவி கோரினால், உடன் ஒரு வழக்கறிஞர் குழுவின் அதிகாரம் வழங்கிய கடிதத்துடன் காவல் நிலையம் சென்று, குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு வேண்டிய உதவி செய்வார்.  வழக்கில் தன்னை தற்காத்துக் கொள்ள சட்டப்படி அவருக்குள்ள உரிமைப்படி வேண்டியது செய்வார்.
  • கைது செய்ய்யப்பட்ட நபரை ஜாமினில் எடுக்கவும் நீதிமன்றத்தில் எதிர்வழக்காடவும் உதவி செய்யப்படுகிறது.

சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு

பலர் குற்ற வழக்கில் சிக்கிக் கொண்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு, சட்ட உதவி கோர வசதி இல்லாமலோ உறவினர்கள் நண்பருடன் தொடர்பு கொள்ள முடியாமலோ சிறைச்சாலைகளில் இருக்க நேரிடும்.

  • அவர்களுக்கு உதவி செய்ய, மத்திய சிறைச்சாலை, கிளை மற்றும் துணை சிறைச்சாலைகளில் சட்ட பணிகள் குழுவில் உள்ள வழக்கறிஞர் சென்று சட்டஉதவி கோரும் கைதிகளை விசாரித்து அறிக்கை கொடுப்பார்கள். இல்லையென்றாலும் அவர்களே நேரடியாக அந்த மாவட்ட சட்டப் பணிகள் குழு தலைவருக்கு மனு செய்யலாம்.
  • அந்த நபரை ஜாமினில் எடுக்கவும் நீதிமன்றத்தில் எதிர்வழக்காடவும் மேல்முறையீடு செய்ய வழக்கறிஞர் நியமிக்கப்படுகிறார்கள்.
  • அது மட்டுமல்ல சிறைவாசிகளுடைய உரிமை பிரச்சினைகள், குடும்ப சட்டப் பிரச்சினைகளும் கேட்டு உதவி கொடுக்கப்படுகிறது.

வாகன விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு

வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர், இறந்தவர் குடும்பம் இடைத்தரகர்களால் பெரிதும் பாதிக்கப்படுவதை தடுக்க, இழப்பீடு பெற உதவி கோரி வருபவருக்கு , கோரிக்கை மனுவுக்கான நீதிமன்றக் கட்டணம் உட்பட சட்டப் பணிகள் குழுவால் செலுத்தப்படுகிறது. நீதிமன்றம் நஷ்டஈடு வழங்கியவுடன், சட்டப் பணிகள் குழுவால் செய்யப்பட்ட செலவுகள், திரும்பப்  பெறப்படும்.

சிறு தொகை மட்டுமே நஷ்டஈடு என்றால் வழக்கறிஞர் கட்டணம் திரும்ப பெறப்படுவதில்லை

  • வழக்கு தொடர தேவையான ஆவணங்கள் பெறவும் உதவி செய்யும்.
  • பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு சென்று அடையவும் பிறரால் சுரண்டப்படாமல் தடுக்க உரிய வங்கிகளில் வைப்பீடு செய்ய உதவும்.

அரசு மற்றும் பொதுத்துறை அதிகாரிகளிடம் இருந்து உதவி

அரசு நலவாழ்வு திட்டங்களான

  • முதியோர்களுக்கான ஓயவூதியம்
  • ஆழ்கடல் மீன்பிடிப்பு, கட்டிட வேலை, விவசாய வேலை செய்யும் தொழிலாளிகள், அந்த தொழிலில் உள்ள அபாயம் மூலம் இறந்தால், அவர்கள் குடும்பத்திற்கு உதவித்தொகை
  • சாலைகளில் ஊர் பெயர் தெரியாத வாகனங்கள் இடித்து பெருங்காயம், இறப்பு ஏற்பட்டால் ஊனமுற்றோருக்கும் இறந்தவர் குடும்பத்தினருக்கும் உதவி தொகை அளித்தல்
  • மின்கம்பங்களில் மின்சாரம் பாய்ந்தது இறந்தால் மின்சார வாரியம் அளிக்கும் உதவி தொகை
  • ஆதரவற்ற கைம்பெண்களுக்கும் கணவனால் கைவிடப்பட்ட கைம்பெண்களுக்கும் உதவி

ஆகியவை பெறாத தேவையான ஆவணங்கள் பெற்று, உரிய அலுவலகத்தில் மனு செய்ய உதவி செய்தல், தேவையானால் வழக்கறிஞர் நியமித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரியிடம் சென்று கோரிக்கை முன்வைத்து பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்படுகிறது.

  • அரசு உதவி பெற அசாதாரண தாமதம் ஏற்பட்டாலோ தகுதி இருந்தும் நிராகரிக்கரிக்கப் பட்டாலோ நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெற உதவி செய்யப்படுகிறது.

 

குடிமக்களுக்கு சட்ட உதவி அளிக்கும் இந்த முறைக்காக இந்திய அரசு வருடம் தோறும் போதிய நிதி ஒதுக்குகிறது.

எனவே நம் கடமையை செய்வோம்.உரிமையை பெறுவோம்!!

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...