ஒருவர் இறந்தபின், அவருக்கு இன்னின்னார் தான் வாரிசுகள் என்று அரசு கொடுக்கும் சான்றிதழ் தான் சட்டப்படி செல்லுபடியாகும்.
உங்கள் தந்தைக்கான வாரிசு சான்றிதழ் பெற அவரின் வாரிசு என்ற முறையில் பெற, உங்களுக்கு முழு உரிமை உண்டு. அதற்கு வேறு நபரின், அது உங்கள் பெரியப்பா என்றாலும் அவரின் சம்மதம் தேவையில்லை.
ஒருவேளை உங்கள் தாத்தாவின் வாரிசு சான்று பற்றி கேட்கிறீர்கள் என்றால் அதை பெற உங்கள் பெரியப்பா ஒத்துழைக்க வில்லையென்றால் உங்கள் தந்தை வடடாட்சியர் அலுவலகத்தில் மனு செய்யலாம்.அவர்களே சம்பந்தப்பட்டவரை விசாரித்து சான்று வழங்குவர்.
வாரிசு சான்று பெறுவதற்கான வழிமுறைகளை பின்பற்றி, தாசில்தார் அலுவலகத்தில் மனு செய்து அதை பெறலாம்.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் புத்தாண்டு விற்பனையை விட நேற்று தமிழகத்தில் சுமார் 218 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது. என்று செய்திகள் வந்துள்ளன.
இதில் டாஸ்மாக் கடைகளை திறக்கலாமா வேண்டாமா என்ற கேள்வி வேறு….
பொதுவாக, டாஸ்மாக் கடைகள் இருக்கும் பகுதியில் உள்ள மெயின் ரோடுகளில் வாரக் கடைச்யில் நிற்கும் போக்குவரத்து போலீசார், வண்டிகளில் வரும் நபர்களை சோதனையிட்டு , குடித்து விட்டு வண்டியோட்டுவதாக வழக்கு போடுவது வழக்கம்…
"கடையையும் அரசே நடத்துமாம்…அப்புறம் அங்கே வாங்கி கொஞ்சம் டேஸ்ட் பார்த்து விட்டு வீட்டிற்கு கிளம்பினால், அது குற்றமாம்" என்று குடிமகன்கள் புலம்புவதை வழக்கமாக கேட்கலாம்.
யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல், தனியிடங்களில் மது அருந்தினால் குற்றம் அல்ல..ஆனால் அதுவே பொது இடம் என்றால் குற்றம் தான் என்று , குடிமகன்கள் வழக்கமாக தங்கள் உரிமைகளுக்காக குரல் எழுப்பும் கேரளாவின் மாண்புமிகு உயர்நீதிமன்றம் கூட சொல்லிவிட்டது..
இத்தனைக்கும் அங்கு மது விலக்கை பகுதி பகுதியாக கொண்டு வரும் அரசின் திட்டத்தை எதிர்த்து, "குடிப்பது எங்கள் பிறப்புரிமை..என்று இல்லை…அடிப்படை உரிமை என்று கோஷம் எழுப்பியவர்களின் வாயையும் மூடியது அதே உயர் நீதிமன்றம் தான்.
ஆனால் அதுவே மது விற்பனை செய்வது என்றால் ?? அது அடிப்படை உரிமை அல்ல என்பதையும் தெளிவு படுத்தியது..
"தனியுரிமை என்று வரும் போது , தான் எந்த தொழிலையும் செய்ய விரும்புவது தன்னுடைய அடிப்படை உரிமை , அதுவும் அது வாழ்வதற்கான அடிப்படை உரிமையின் ஒரு அம்சம், ..என்று வாதிட்டாலும், பொதுவில் மக்களின் தனியுரிமைக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும என்றும் மது விற்பனை செய்ய உரிமம் பெற்றவர்களின் வணிக ஆர்வத்தை விட விலை மதிப்பற்றது. என்று தீர்ப்பு சொல்லியது.
பாலக்காட்டை சேர்ந்த விலாசினி என்பவர் . தன வீட்டிற்கு அருகில் இருக்கும் சாராய கடையினால் , தன்னுடைய தனியுரிமை பாதிக்கிறது என்பதால், அதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் வந்த தீர்ப்பு தான் இது. அந்த வழக்கில் நீதிமன்றம், மதுகடைகலாள் ஏற்படும் சிரமங்கள் குறித்து அறிக்கை தர அமிக்கஸ் க்யுரியாக ஒருவரை நியமித்து ஒரு அறிக்கை தர கேட்டு, அதன் அடிப்படையில், மேற்படி தீர்ப்பை வழங்கியது…
அந்த அறிக்கையில் சொல்லப்பட்டவை தான் . இவை (என் கருத்தும் கூட)
குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் உள்ள கள்ளிக் கடைகள் மக்களின் உரிமையைப் பாதிக்கிறது.
அவர்களின் அமைதியை கெடுக்கிறது.
அங்கு கூடியிருக்கும் குடிபோதையில் இருக்கும் நபர்கள், அந்த வழியாக செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்களை விமர்சிப்பதும், அவர்களின் மோசமான பேச்சு மற்றும் நடத்தையும் பெரிதும் பாதிக்கின்றன.
இன்னும் சொல்லப் போனால், இது போன்ற சூழ்நிலையில் வளரும் குழந்தைகளின் மனநிலையை இது பெரிதும் பாதிக்கின்றது.
ஆனால் அதன் மேல்முறையீட்டில் வந்த சமீபத்திய அதன் தீர்ப்பு சற்று வித்யாசமாக வந்துள்ளது….
"பொது ஒழுங்கு, அமைதி மற்றும் அமைதி சீர்குலைவதை தனியுரிமை உரிமை மீறலுக்கு ஒத்ததாக புரிந்து கொள்ள முடியாது"
"குடியிருப்பு பகுதியில் சாராய கடை அமைப்பது தனியுரிமையை பறிக்கும் செயலாகும்" என்று தனி நீதிபதி அளித்த தீர்ப்பை மாற்றிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பின் சாராம்சம்
"ஒரு நபரின் அமைதியான வசிப்பிடத்தை பாதிக்கும் எதுவும் அதன் தனியுரிமை உரிமைகளை பாதிக்கும்" என்ற தனி நீதிபதியின் கருத்தை "எங்களால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தக்கூடிய தனியுரிமை உரிமைகள் இந்த அளவிற்கு விரிவுபடுத்தப்பட்டால், முற்றிலும் குழப்பம் ஏற்படும் என்று நாங்கள் பயப்படுகிறோம்."
சொல்லப்பட்ட இந்த காரணிகள் பொது இடையூறு அல்லது பொது அமைதியை மீறுவதாக இருக்கலாம் என்றாலும், அவை தனியுரிமையை மீறலாம் என்று கூறுவது மிகைப்படுத்தலாகும்"
இடையூறு, அமைதி மீறல், தார்மீக கவலைகள் போன்றவைக்கும் தனியுரிமையுடன் எந்த தொடர்பும் இல்லை, அவற்றால் பொது ஒழுங்கு, அமைதி மற்றும் அமைதிக்கு இடையூறு ஏற்படலாம். ஆனால், பொது ஒழுங்கு, அமைதி மற்றும் அமைதியை சீர்குலைப்பது தனியுரிமை உரிமைகளை மீறுவதற்கு ஒத்ததாக புரிந்து கொள்ள முடியாது. எங்களைப் பொறுத்தவரை,ரிட் மனுக்களில் அமிகஸ் கியூரி வெளிப்படுத்திய பொதுவான கவலைகள் அனைத்தும் விதிகளில் கவனிக்கப்படுகின்றன, ஏனெனில் விதிகள் அதிகாரிக்கு அதிகாரம் அளித்து, மேற்கூறிய கவலைகளை விதிகள் கவனித்துக் கொள்ளும்போது, தனியுரிமை உரிமை மீறல் பிரச்சினையைத் தீர்ப்பது கற்றறிந்த நீதிபதிக்கு தேவையற்றது.'"
குடியிருக்கும் இடத்தில் மதுபான உரிமம் வழங்க அனுமதிக்கும் சட்டப்பூர்வ விதிகளை ரிட் மனுதாரர்கள் எதிர்த்து வழக்கு போடவில்லை
தனியுரிமை என்பது ஒரு நியாயமான எதிர்பார்ப்புக்கு அப்பால் நீட்டிக்கப்படாது, அதுவும் ஒரு தனிநபரின் தனியுரிமை என்பது அவரைச் சுற்றியுள்ள மற்றவர்களின் தொழிலையும் செயல்பாடுகளையும் சார்ந்தது அல்ல.
ஒரு தனிமனிதன் தனக்கு நெருக்கமான மற்றும் தனிப்பட்ட விஷயங்களில் தெரிவு செய்யவோ அல்லது முடிவுகளை எடுக்கவோ முடியாத போது மட்டுமே, அந்த நபரின் தனியுரிமைக்கான உரிமை மீறப்பட்டுள்ளது என்று கூறலாம்".
இந்த தீர்ப்பை படிக்கும் நம்மில் பெரும்பாலோருக்கு, அப்படியானால் , டாஸ்மாக் கடைகளை குடியிருப்பு பகுதியில் திறப்பது குறித்து அந்த பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவிக்கமுடியாதா என்ற கேள்வி மனதில் எழலாம்.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது, தனியுரிமை என்று சொல்வதில் இரண்டு விதமான முரண்பாடான உள்ளர்த்தம் உண்டு. ஒன்று, ஒரு அரசு, குடிமகனின் வாழ்விலும் தனியுரிமையிலும் குறுக்கீடு செய்யக் கூடாது என்பது. மற்றொன்று, குடிமக்களின் தனியுரிமையை பாதுகாக்கும் வண்ணம் செயல்படுவது ஒரு அரசின் கடமை …
தனி நபர்கள் கூட்டமாக வாழும் இந்த சமூகத்தில், ஒருவரின் தனியுரிமை என்பது, இன்னொருவரின் சட்டப்பூர்வமான வாழ்வுரிமையை பாதிக்கும் வகையில் இருக்க கூடாது என்பது தான். அதனால் ஒருவரின் தனியுரிமை என்பது வரம்பிற்கு உட்பட்டது தான்.
இந்த தீர்ப்பின் சொல்ல வந்த முக்கிய சாராம்சம் என்னவென்றால், ஒரு டாஸ்மாக் கடையை ஒரு இடத்தில் திறக்கலாமா என்று முடிவு செய்து அதற்கான அனுமதியை அரசு வழங்குகிறது. எந்த இடத்தில் திறக்க அனுமதி வழங்கவேண்டும் என்பது குறித்து விதிகள் தெளிவாக இருக்கின்றன. அப்படியிருக்க, அந்த அனுமதியை முறையாக பெற்ற ஒருவரை, தனியுரிமை பாதிக்கிறது என்று கோரி, தொழில் நடத்தவிடாமல் தடுக்கக் கூடாது என்கிறது.
அதை தடுக்க வேண்டுமானால், அந்த அனுமதி வழங்கிய அரசை அல்லது அந்த விதிகளை, அல்லது அந்த விதிகள் முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று தான் எதிர்த்து முறையீடு செய்ய வேண்டுமே தவிர, அதன் பயனாளியை அல்ல என்பது தான்.
எந்த வழக்கு நிலுவையில் இருந்தாலும் கடுவுச்சீட்டு பரிசீலனைக்கு அது தொந்தரவாகத் தான் இருக்கும்.
சமீபத்தில் லீனா மணிமேகலை அவர்கள் தனக்கு எதிராக போடப்பட்ட அவதூறு வழக்கை காரணம் காட்டி தன பாஸ்போர்டை முடக்கியதை எதிர்த்து மாண்புமிகு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வந்த தீர்ப்பு உங்களுக்கு தெரிந்திருக்கும்.
"அவதூறு வழக்கு கொடுங் குற்றம் அல்ல. அதற்காக பாஸ்போர்டை முடக்கியது தவறு" என்று சொல்லவில்லையா?
உங்களடையது சிறு வழக்கு என்கிறீர்கள். கொரானா காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் இருந்தது தவறு என்று நீங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு அதற்கான அபராதத்தை கட்ட முன்வந்தால் எல்லாம் சுபமே..
காவல் நிலையத்திற்கு ஒரே ஒரு முறை மட்டும் போய் அந்த சிறு வழக்கின் குற்றப்பத்திரிகை நகலை கேளுங்கள். அநேகமாக ஏற்கெனவே உங்களுக்கு கொடுத்திருப்பார்கள். இல்லையென்றால் அதை பெற்று கொண்டு சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் காலை சரியாக பத்தரை மணிக்கு நீதிபதி இருக்கையில் அமர்ந்தவுடன், ஏதேனும் மனுக்கள் யாரும் கொடுக்க விருப்பம் இருந்தால் வாங்கி கொள்வார். அப்போது அந்த குற்றப்பத்திரிகையின் நகல் மற்றும், உங்களுடைய குற்ற ஒப்புதல் மனு, கோர்ட்டு வில்லையுடன் ஒட்டி, திறந்த நீதிமன்றத்தில் கொடுங்கள். இதற்கு எந்த வக்கீலின் உதவியும் தேவையில்லை. அப்படி தேவையென்றால், அந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்தின் உதவியை பெற்று கொள்ளலாம்.
உங்கள் மனு ஏற்றுகொள்ளப்பட்டு, அன்றைய தினமே பிற்பகலில் நீதிமன்றப் பணி உணவு இடைவேளைக்கு பிறகு துவங்கும்போது உங்கள் வழக்கு எடுத்துகொள்ளப்பட்டு, ( சில சமயம், அந்தந்த நீதிமன்ற பணிசுமைக்கேற்ப நேரம் மாறலாம். ஆனால் அன்றைய தேதியிலேயே வழக்கை முடித்து விடுவார்கள்) எவ்வளவு அபராதம் என்று உத்தரவிடுவார்கள். அதை நீங்கள் கட்டி ரசீது பெற்று, காவல் நிலையத்தில் காட்டலாம்.
ஆனால் குற்றப்பத்திரிகையை போலீசார் உங்களுக்கு கொடுக்கவில்லை என்றால், அதையே ஒரு தனி ப்புகார் மனுவாக எழுதி, போதிய நீதிமன்ற விலை ஒட்டி, நீதிபதியிடம் சமர்பிக்கலாம். உடனே இரண்டொரு நாளில் அந்த குற்றப்பத்திர்க்கை கோர்டில் தாக்கல் செய்யப்பட்டு உங்களுக்கு நகல் வழக்கப்பட்டு விடும்.
போலீசார் லஞ்சம் எதிர்பார்த்தே உங்கள் சிறு வழக்கை நிறுத்தி வைக்கிறார்கள்., அதனால் நீங்கள் அதை கொடுத்து விடுங்கள் என்று மற்றவர்கள் உங்களுக்கு அறிவுரை சொல்லலாம்.. ஆனால் நான் அவ்வாறு சொல்ல மாட்டேன்.
போலீசார் செய்யும் தவறான காரியங்களுக்கு உடந்தையாக நாம் இருந்து விட்டு, பிறகு அவர்களை குறை சொல்வது நியாயமல்ல.
நீங்கள் உங்கள் செயல்களில் சரியாக இருந்தீர்கள் என்றால், யாரும், போலீசார் உட்பட , உங்களிடம் சரியாகவே நடந்து கொள்வர்.
ஆபாசம் என்பது பார்க்கும் பார்வையில் உள்ளது என்பது என் கருத்து.
அதை மறைத்துக் கொண்டு மற்றவர் அணியும் உடையில் உள்ளது என்று குற்றத்தை மடை மாற்றுவார்கள்!!
இப்போது அடுத்த படியாக தாய்மையும் ஆபாசம் என்ற நிலைக்கு வந்து விட்டனர்!!
பாலூட்டும் பெண்ணை தன் தாயாக, சகோதரியாக பார்க்கும் நிலை போய், தன் காம இச்சையை தூண்டும் தன்மையாக பார்த்ததும் இல்லாமல், அது "அசிங்கம்" என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரும் அளவிற்கு தரம் குறைந்து விட்டது!
" 'தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணின்' படம் உள்ள பத்திரிக்கையின் அட்டை ஆபாசமானதாக அறிவிக்க கோரி மனு போடப்பட்டது இங்கல்ல...
கற்றோர் அதிகம் உள்ள கடவுளின் நாடான கேரளத்தில்.
ஆனால் அதை மறுத்த மாண்புமிகு கேரள உயர் நீதிமன்றம் "ஒருவரின் ஒழுக்கத்தை பற்றிய கருத்து அதிர்ச்சியடையச் செய்கிறது" என்றும் இது ஒரு "மழுப்பலான கருத்து" என்றும் கூறியுள்ளனர்.
"ஒருவருக்கு ஆபாசமாக தெரிவது மற்றொருவருக்கு பாடல் வரிகளாக தெரியும்": என்றும் குறிப்பிட்ட. மாண்புமிகு தலைமை நீதிபதி ஆண்டனி டோமினிக் மற்றும் நீதிபதி தாமா சேஷாத்ரி நாயுடு ஆகியோர், “நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தாலும், ஆபாசத்தை எங்களால் பார்க்க முடியவில்லை." என்றனர்.
அத்தோடு, நம் பண்டைய வரலாற்றை சுட்டிக் காட்டி," இந்தியாவின் நீண்ட வரலாறு முழுவதும், இந்தியாவின் கலைகள்-காட்சி மற்றும் இலக்கியம்-மனித உடலின் அழகை தொடர்ந்து கொண்டாடியிருக்கிறார்கள், இதை பற்றிய குறிப்புகளை, அப்போதைய மிகவும் பாராட்டப்பட்ட பயண எழுத்தாளர் வில்லியம் டால்ரிம்பிள் நூலில் உள்ளது என்று சொல்லியதோடு அல்லாமல், அதை தங்கள் தீர்ப்பில் மேற்கோள் காட்டியுள்ளனர்.
. "யோகாவின் பாரம்பரியம், என்பது, அதை முழுமையாக்குவதையும் மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது என்று தொடரும் அவர் "வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உடலை கடவுளை போல மாற்றும் நோக்கம் கொண்டதே யோகக் கலை. இந்த பாரம்பரியத்தில் தெய்வீகம். , உணர்வு மற்றும் புனிதமானவை எதிர்க்கப்படவில்லை. உண்மையில் உணர்வுபூர்வமானது என்பது, புனிதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகத் தான் பார்க்கப்பட்டது. அதனால் அவர்கள் கடவுள்களும் எப்போதும் மனிதாபிமானமுள்ளவர்களாக, மிகுந்த அழகுடையவர்களாக சித்தரிக்கப்பட்டனர்" என்று அவர் குறிப்பிட்டதை கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்!
அரசு துறைகளில் சாதி பாகுபாடு உண்டு என்றாலும், மக்களுடன் அதிகம் நெருங்கி பழக வேண்டிய கட்டாயத்தில் உள்ள சிவற்றில் நடக்கும் சாதி பாகுபாடு, பளிச்சென்று வெளியே தெரியும்.
அரசின் அன்னதான திட்டத்தில், கூட சேர்ந்து உணவு அருந்த அமைச்சர் வர வேண்டி இருக்கிறது.!! முதல்வர் வீடு தேடி போய், சாதிப் பாகுபாடு காட்டுபவருக்கு கடுமையான செய்தி சொல்கிறார்.!!
மற்ற துறையில் எல்லாம் சாதிப்பாகுபாடு, பாதிக்கப்பட்டவரின் வயிற்றை அடிக்கும் என்றால், போலீஸ் துறையின் லத்தி அவர்களையே அடிக்கும்!!
போலீசாரின் இந்த சாதிய ரீதியான அதிகார வன்முறை, இப்போது வெளிவந்துள்ள ஜெய் பீம்” படத்தில் பட்டவர்த்தனமாக காட்டப்பட்டிருக்கும்..
அதுவும் சாதீய ரீதியான ஒதுக்கீட்டிற்கு வன்முறையை கையாண்டு போரிடும் சாதிகளுக்கு நடுவில், இருப்பதற்கு வீடோ, குழந்தைகளுக்கு உரிய கல்வியோ,ஏன் ரேஷன் கார்டு கூட இல்லாமல், அன்றாட வாழ்க்கைக்கே போராடும் மலை ஜாதியினர், மற்ற ஜாதியினரால் சுரண்டப்படுவதும் இல்லாமல், “ஏன் ?” என்று கேள்வி கேட்கக்கூட ஆளில்லாமல், போலீசாரின் கையில் சிக்கி சின்னாபின்னம் ஆகிக்கொண்டிருப்பதை போட்டு உடைத்திருக்கிறது!!
இந்த உண்மைக் கதையின் சுருக்கம்;
ராஜகண்ணு, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் (அனைவரும் இருளா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்) தான் கொள்ளையடிக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் உள்ளூர் காவல்துறையினரால் கைது செய்யப்படுகின்றனர். , குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி காவலில் சித்திரவதை செய்யப்படுகிறது.
போலீசார், ராஜகண்ணுவைக் கொள்ளை வழக்கில் சிக்க வைக்கும் முயற்சியில் எந்த நியாயமான விசாரணையும் இல்லாதது, ஒருபுறம் இருக்க, ராஜகண்ணு போலீசாரின் மிருகத்தனத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சில நாட்களில், ராஜகண்ணு, கைது செய்யப்பட்ட மற்றவர்களுடன் காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போகிறார்.. இதைத் தொடர்ந்து, மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதியான வழக்கறிஞர் சந்துரு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்கிறார்..அதன் பிறகு நடப்பவை அனைத்தும் சுவாரசியமான திருப்புமுனைகள்..
உண்மை கதை தான் எப்போதும் திரைகதையை விட சுவை அதிகம் கொண்டது..அது கசப்பு சுவை என்றாலும் கூட!
அந்த வழக்கு விசாரணையில் இருக்கும் போதே, பாதிக்கப்பட்டவரிடம் போலீசார் கையாளும் வன்முறை, நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
“Law is a powerful weapon. .யாருக்கு எதிராக பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து இருக்கிறது”. என்கிறார் ஹீரோ..
உண்மை தான் அவர் அளவுக்கு வழக்கறிஞர்கள் அவ்வளவு எளிதில் செங்கேணி போன்ற எல்லோருக்கும் கிடைத்தும் விடுவதில்லை..
அவர் நடத்தும் சட்டப் போராட்டத்துக்கு கூடவே உறுதுணையாய் இருக்கிறார் செங்கேணி..காவல் துறையின் உயர் அதிககாரிகளே வழக்கை நீர்த்துபோக செய்ய எடுக்கும் முயற்சிகளில், பணத்தை இழப்பீடாக வழங்க முன்வருவதும் இருப்பினும், சண்டையில் (வழக்கு) தோற்று வேண்டுமானால் போவேன்., ஆனால் கணவனின் கொலையின் பிச்சையில் வாழமாட்டேன் என்று செங்கேனியின் பதில் ஊன்றி கவனிக்கவேண்டியது!! எத்தனை செங்கேணிகள் இப்படி மனம் தளராமல் போராடுகிறார்கள்?
இப்படி எல்லாம் நடக்கும் சாதியல் ரீதியான இந்த போலீஸ் அதிகார தூஷபிரயோகத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டும் பல தீர்ப்புகளில், கடுமையான நடவடிக்கை எடுத்து போலீசை ஒழுங்கப்படுத்த முனைந்தும், இன்றும் சாத்தாம்குளம். சம்பவங்கள் .தொடர்கின்றன
.சமீபத்தில் அந்த வன்முறையில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளது.
மாண்புமிகு பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம்,,காயம்பட்ட ஒரு சீக்கிய முதியவரை அவர் தர்பனை அவிழ்த்து, போட்டோ எடுத்து வலைத்தளத்தில் போட்டது “மனரீதியான துன்புறுத்தும் செயல்” எணறிருக்கிறது.
டி.கே.பாசு எதிர் மேற்கு வங்க மாநிலம் (1997 (1) SCC 416) வழக்கில் மாண்புமிகு உச்ச நீதிமன்றமும், நீதிமன்ற விசாரணைக்கு முந்தைய நிலையில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களின் உரிமைகள் தொடர்பாக 11 வழிகாட்டுதல்கள். வெளியிட்டது.
அதை, கீழ்ப்படியாத காவல்துறை அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும், அதை பின்பற்றாத நீதித்துறை மாஜிஸ்திரேட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் சுதந்திரம் வழங்கியது. 24 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. எத்தனை பேர் அந்த அவமதிப்புக்கு ஆளாகினர்? ஒருவர் கூட இல்லை என்பது தான் வேதனையான உண்மை!!.
இவ்வளவு பாடம் கற்பித்தும் போலீஸ் அராஜகம் குறையாததற்கு, காரணம் என்ன?
அடிப்படையில் எங்கே தவறு?
காவல்துறையின் இந்த ஒழுக்கமின்மைக்கான காரனத்தை சற்று வரலாற்றை ஆராய்ந்தால் கிட்டும்.
போலிஸ் சட்டம் என்று இன்னமும் 1888 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மெட்ராஸ் சிட்டி போலீஸ் சட்டத்தின் கீழ் தான் நாம் இன்னும் ஆளப்படுகிறோம்…சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் இருந்து, குற்றங்களை கண்டறிவதில் போலீஸ் அறிவியல் ரீதியாக இன்னமும். முன்னேறவில்லை.
சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில், ஆங்கிலேயர்கள் நாட்டை வெவ்வேறு பகுதிகளாகப் பிரித்து. நிர்வாக அமைப்புகளைக் கொண்டிருந்தனர். இல்லையா? அப்போது தான், பழங்குடியின சமூகங்களை உள்ளடக்கிய குற்றவியல் பழங்குடியினர் சட்டத்தையும் அவர்கள் இயற்றினர். குற்ற பரம்பரை சட்டம் பற்றி தெரியும் தானே? இதன் மூலம், குற்றத்தைக் கண்டறிவது அவசியமில்லை, ஒரு பகுதியில் ஏதேனும் குற்றம் நடந்தால், அங்குள்ள அனைத்து பழங்குடியின ஆண்களும் சந்தேகத்திற்குரியவர்களாக ஆவார்கள். 24 மணி நேரத்திற்குள் வட்டக் காவல் நிலையத்திற்கு முன் சரணடையாதவர்கள் எவரோ, அவர் குற்றவாளியாகக் கருதப்படுவார்.
இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சுதந்திரப் போராட்டத்துடன் இணைந்து நீண்ட போராட்டங்கள் நடந்தன, ஆனால் அது, நாடு சுதந்திரம் பெற்ற பிறகு தான் ரத்து செய்யப்பட்டது. ஆனாலும். பழங்குடியினர் பாதிக்கப்படுவதிலிருந்து விடுபடவில்லை. தொடர்ந்து, டிநோட்டிஃபைட் பழங்குடியினர் (டிஎன்டி) தங்கள் பகுதியில் செய்யப்படும் எந்த குற்றங்களுக்கும் காவல்துறையின் பார்வையில் தொடர்ந்து சந்தேக நபர்களாக இருந்தனர். அவர்களல் சிலர் மட்டுமே நிலத்தை உடைமையாக்கி, எல்லா குடிமை உரிமைகளையும் பெற்றனர். மறுபுறம், பெரும்பான்மையான பழங்குடியினர் குற்றவாளிகளாகக் கருதப்படுவதும், நாளுக்கு நாள் அவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதும் இன்றும் தொடர்கிறது.
ஒரு வழக்கிலிருந்து விடுதலையாகி வந்தவுடனேயே வேறொரு வழக்கில் பிடித்து உள்ளே போடுவது தொடர்கிறது. அந்த படத்தின் முதல் காட்சியே அதை தான் முகத்தில் அறைந்தது போல சொல்கிறது.!
இன்னொரு காரணம், போலீசாரின் அத்துமீறல்கள், அட்டூழியங்களை மக்கள் கொண்டாடுவதும் போலீசாரின் இந்த தொடர் வெறியாட்டத்துக்கு காரணம். ஹைதராபாத் என்கவுண்டர் சமீபத்திய உதாரண.ம்..சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்ட போலீசாரை ,பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள்.. அதையே சாக்காக வைத்து பொய்யான என்கவுன்டர் நடத்தப்படுகின்றன.
உண்மையில் இதே சூர்யா நடித்த “சிங்கம்” திரைப்படத்தில் காவல்துறை வன்முறையும் அவர்களின் கட்டுப்படுத்தப்படாத அதிகாரம் பற்றியது..அதுவும் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது..சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு போலீசார் செய்த அராஜகம் விமர்சிக்கப்படவேயில்லை. !!
ஆனால் "ஜெய் பீம் 'காவலர் வன்முறை, காவல்துறை சித்திரவதை மற்றும் காவல்துறை அதிகாரிகளால் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மோசமான பக்கத்தை காட்டுகிறது.. இது காவல்துறையின் மிருகத்தனத்தை இவர்களின் லட்சியம்” என்று அடையாளபடுத்துவதற்கான இமேஜை ஓரளவு உடைக்கிறது.!!
சித்திரவதைக்கு எதிரான தேசிய பிரச்சாரத்தின்படி, ஒவ்வொரு நாளும் சராசரியாக ஐந்து இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டில் மட்டும் காவல்துறை காவலில் 117 இறப்புகளும், நீதிமன்ற காவலில் 1,606 இறப்புகளும் பதிவாகியுள்ளன. காவலர் வன்முறையின் இந்த புள்ளிவிவரங்கள் எல்லா நேரத்திலும் அதிகமானவை.; அதை சரிசெய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் என்ன என்று ஆராய்ந்தால் கிடைக்கும் முடிவு திகைக்க வைக்கின்றன;
இத்தகைய கொடூரமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை இல்லை!!.
2005 முதல் 2018 வரை போலீஸ் காவலில் சித்திரவதைக்கு ஆளான 500 பேர் இறந்ததாகக் கூறப்படும் வழக்கில் ஒரு தண்டனை கூட இல்லை என்று தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 58 போலீஸ்காரர்கள் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், அவர்களில் யாரும் தண்டனையை எதிர்கொள்ளவில்லை.!!
நமக்குத்தான்.நம் வீட்டு கதவில் அறைந்தால் மட்டும் தானே அலறவே செய்வோம்!!
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) மற்றொரு அறிக்கையில் 1,723 நபர்கள் காவலில் இறந்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மரணங்களில் பெரும்பாலானவை காவல்துறையின் சித்திரவதையின் விளைவாகும் என்று NHRC அறிக்கை மேலும் கூறியது.
இந்த குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ள பொதுவான ஒன்று ….,
அவர்கள் அனைவரும் ஓரங்கட்டப்பட்ட பின்னணியில் இருந்து வந்தவர்கள். போலீஸ் காவலில் இறந்த 125 பேரில், இறந்தவர்கள் 75 பேர் (60 சதவீதம்) விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 13 பேர் தலித்துகள் அல்லது பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 15 பேர் சிறு குற்றங்களுக்காகப் பிடிக்கப்பட்ட முஸ்லிம்கள். சமீபத்தில் நடந்த ஒரு வழக்கில், அருண் வால்மீகி என்ற தலித் துப்புரவுத் தொழிலாளி, போலீஸ் காவலில் இறந்ததாகக் கூறப்படுகிறது. அருணின் குடும்பத்தினர், "தனது மனைவி கண்முன்னே அவர் இரக்கமின்றி அடித்துக் கொல்லப்பட்டார்" என்று நினைவு கூர்ந்துள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 1,189 பேர் சித்திரவதைகளை எதிர்கொண்டதாகவும், 348 பேர் போலீஸ் காவலில் இறந்ததாகவும் மக்களவையில் அரசு அறிக்கை அளித்துள்ளது..
இப்போது யதார்த்தத்திற்கும் காவலர் வன்முறையின் சினிமா அம்பலத்திற்கும் இடையிலான தொடர்பைத் நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்!!.
குற்றவியல் நீதி மற்றும் காவல்துறை பொறுப்புக்கூறல் திட்டத்தின் அறிக்கையான "டிரங்க் ஆன் பவர்", எப்படி, துல்லியமாக கலால் சட்டத்தை அடக்குமுறையின் ஆயுதமாகப் பயன்படுத்தி, 'விமுக்தா' சமூகங்கள் பலியாவதைப் பற்றி பேசுகிறது. விமுக்தா சமூகங்கள் தொடர்ந்து 'பரம்பரை குற்றவாளிகளாக' கருதப்படுகின்றன. உள்ளூர் சட்ட அமலாக்கத்தால் அவர்கள் விகிதாசாரமற்ற முறையில் குற்றம் சாட்டப்பட்டு, கண்காணிக்கப்பட்டு கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்படுகிறார்கள். அதேபோல், இருளா பழங்குடியினர் பரம்பரை குற்றவாளிகள் என்று அட்வகேட் ஜெனரலும் காவல்துறை அதிகாரிகளும் சாதரணமாக திருப்தியடைந்த பல நிகழ்வுகளை படத்தில் காணலாம்.
ஒரு விதத்தில். "ஜெய் பீம்", நாதியற்ற பாதிக்கப்பட்டவர்களின் கண்ணோட்டத்தில் இருந்து கதையை சொன்னது, காவல்துறை வன்முறையின் கொடூரமான பக்கத்தை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் குறிப்பிடத்தக்கது. இது போன்ற திரைப்படங்கள் பொது மக்களுக்கு காவல்துறை அமைப்பைப் பற்றி மிகவும் யதார்த்தமான புரிதலை ஏற்படுத்தும்., போலீசாரின் அதிகப்படியான செயல்களை வீரமாகக் கொண்டாடுவதை விட காவல்துறையிடம் அதிக பொறுப்புக்கூறலைத் தேட அவர்களை ஊக்குவிக்கும்.
ஆனால் மக்களின் மனோநிலைக்கும் ஒரு காரணம் உண்டு. என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீசார் கொண்டாடப்படுவதற்கான காரணம், நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதம்தான். குற்றவாளிகளுக்கு உரிய நேரத்தில் தண்டனை கிடைத்தால் மட்டுமே, நீதித்துறை மீது பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.
இதில் வழக்கறிஞர்கள் பங்கும் முக்கியமானது..வழக்கறிஞர் சந்துரு போல, தேவையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபடாமல், தன்னை நம்பியுள்ள கட்சிக்காரருக்கு அதனால் மேலும் தாமதம் ஆகும் என்பதையும் உணர்ந்தவராய், எதிர்க்கட்சி வழக்கறிஞருடன் ரகசிய ஒப்பந்தம் போடாமல், கட்சிக்காரர் கொடுக்கக் கூடிய ஃபீசில் மட்டுமே கவனம் செலுத்தாமல் நீதி பெற்று கொடுப்பதை மட்டுமே கண்ணும் கருத்துமாக செயல்படுவது தொழில் தர்மத்தை மேம்படுத்தும்.
வழக்கில், சாட்சிகளை குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்குமாறு உயர் நீதிமன்றத்தை வற்புறுத்தி, கேரள உயர் நீதிமன்றத்தின் முன்னுதாரணத்தை மேற்கோள் காட்டியதன் மூலம், ஆட்கொணர்வு அதிகார வரம்பில் ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. .மேற்படி மேற்கோள் வழக்கில் ஹேபியஸ் கார்பஸ் பற்றிய கருத்து விரிவுபடுத்தபபட்டு,. தனிப்பட்ட சுதந்திரத்திற்கானது மட்டுமில்லாமல் குடிமக்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாப்பதில் ஹேபியஸ் கார்பஸ் மனுவின் அதிகாரத்தைக் காட்டுகிறது.
இதில் நீதியரசர் கிருஷ்ண ஐயர் பங்கு வரலாற்று சிறப்பானது.
அது போலீசின் அதிகார அத்துமீறல்களை எதிரான, சாமானியர்களின் கைகளில் உள்ள ஆயுதங்களில் ஒன்று என்று சொன்னால் மிகையாகாது.. சுனில் பத்ரா வழக்கைப் பார்த்தால், சிறைச் சீர்திருத்தங்களுக்கும் கூட, ஹேபியஸ் கார்பஸ் ஒரு தீர்வாக கூட இருக்கலாம் என்கிறது.
. ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக, 80களின் முற்பகுதியில் கிருஷ்ணய்யர், சின்னப்பா ரெட்டி போன்ற புகழ்பெற்ற சட்ட வல்லுநர்களால் கொடுக்கப்பட்ட இத்தகைய விரிவான விளக்கங்களுக்குப் பிறகு, 40 ஆண்டுகளுக்குப் பிறகும், நீதிமன்றங்களில் இருந்து உத்தரவுகளைப் பெற மக்கள் போராடுகிறார்கள்.
இன்றைய நாட்களில், அரசு சாரா அமைப்புகள் மற்றும் எதிர்ப்பு இயக்கங்கள் மீது அதிக கட்டுப்பாடுகளுடன், கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவதற்கான இடம் சுருங்கி வருவதை நாம் காண்கிறோம். சமூக ஆர்வலர்கள் மூலம் தான் ராஜகண்ணு வழக்கு வழக்கறிஞரை எட்டியது. ஆனால் இன்று அவர்களின் 'செயல்பாடு' ஒரு ஆபத்தான செயலாக பார்க்கப்படுகிறது, அவர்களுக்கு எதிராக தேசத்துரோக குற்றச்சாட்டு மட்டுமல்லாது UAPA பாய்வதை பார்க்கிறோம்.
கடந்த 3 ஆண்டுகளாக பீமா கொரேகான் வழக்கில் 13 பேர், யுஏபிஏவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்..திரிபுரா பற்றி எரிகிறது” என்று சமூக வலைதளத்தில டுவிட் செய்தவருக்கு அதே கதி!
படித்தவர்களுக்கே இந்நிலை என்றால், பழங்குடியினருக்கு?
அவர்களுக்கு வீட்டு மனைகளுக்கான பட்டாக்கள் இல்லை, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை, பொது விநியோகத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. நாடோடி வாழ்க்கை முறையால், குழந்தைகளை வழக்கமான பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை...அனுப்பமுடிவதில்லை.. அவர்களுக்கு கிடைக்கும் வேலை வாய்ப்புகள் பெரும்பாலும் முறைசாரா துறைகளில் தான் உள்ளன.
இவையெல்லாம் மாற ஒரே வழி.. பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மக்கள் கல்வியறிவு பெற வேண்டும், அப்போது தான் அவர்களின் சுயமரியாதை மற்றும் கண்ணியம் உறுதி செய்யும் என்பதை வலியுறுத்துவதாகவும் இந்த படம் இருக்கிறது. அதனால்தான் படத்தின் முதற்கட்டத்தில் அந்த பழங்குடியினப் பெண் நீதிமன்ற மனுவில் கையெழுத்திடுவதற்குப் பதிலாக அவரது கட்டைவிரல் அடையாளத்தை ஒட்டியதாகக் காட்டப்பட்டது. , படத்தின் முடிவில், அவரது மகள் நம்பிக்கையுடன் வழக்கறிஞர் முன் ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்தித்தாள் வாசிப்பதாக முடியும்..
எழுத்தறிவினால் மட்டுமே அவர்கள் முன்னேற முடியும் என்பதுதான் அந்தச் செய்தி.
ஆனால், நம் நாட்டில் உள்ள பிரச்சனை என்னவென்றால், உயர்கல்வி படித்த கல்வியறிவு பெற்றவர்கள் தான் தங்கள் அலட்சியத்தால் அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகளால் நாட்டையே தவறான திசையில் கொண்டு செல்கிறார்கள்.
ஜெய் பீம் போலீஸ் காவலில் நடக்கும் வன்முறையை மட்டும் காட்டவில்லை. .இது அரசின் நோக்கத்தையும், ஒதுக்கப்பட்ட சமூகங்களின் பலிவாங்கலையும் கேள்விக்குள்ளாக்குகிறது. ஏற்கனவே விளிம்புநிலையில் உள்ள பாதிக்கபப்பட்ட மக்களை அடிபணியச் செய்வதற்காக சீருடை அணிந்த சக்திகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறை என்பது, போலீஸ் துறை, எந்தளவுக்கும் செல்லும் ஒரு வன்முறை இயந்திரம் என்பதையும் அதை எப்படியாவது மூடி மறைக்க பார்க்கும் அரசின் உண்மையான தன்மையையும், தெளிவாகக் காட்டுகிறது.,
அரசு துறைகளில், சாதிய படிநிலை அமைப்பில் ஆழமாகப் பதிந்துள்ளது, அது தான் பாரபட்சமான கொள்கைகளின் மைய துருவமாக உள்ளது.
டாக்டர். அம்பேத்கரின் கருத்துக்கள் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும், நீதியான சமுதாயத்தை வளர்ப்பதற்கும் ஒரு அரணாக இருந்தபோதும் – அரசு இயந்திரங்கள், அவருடைய தொலைநோக்கு கொள்கைகளை முற்றிலும் மறந்துவிட்டன.
அவர் தான் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி!
"எவ்வளவு நல்ல அரசியலமைப்பாக இருந்தாலும், அது கெட்டதாக மாறுவது உறுதி, ஏனென்றால் அதைச் செயல்படுத்த அழைக்கப்படுபவர்கள் கெட்டவர்களாகவே இருப்பார்கள்.." என்ற அம்பேத்கரின் வார்த்தைகள் இங்கு எவ்வளவு பொருத்தம்!!
விளிம்பு நிலை மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க அரசு தவறியதை அரசியல் சாசனத்தின் தோல்வியாகப் பார்க்க முடியாது, ஏனென்றால் மக்கள் தான் தலைமையில் அமர்ந்திருக்கிறார்கள்.
செங்கேனியின் நீதிக்கான தேடலானது அரசியலமைப்பு கோட்பாடுகளின் எடுத்துக்காட்டு. இருந்தும், இது வழக்கறிஞர் சந்துருவின் வீரத்துடன் ஒரு நீண்ட போராட்டத்துடன் வருகிறது. ஒரு வழக்கறிஞரின் அபூர்வ 'ஹீரோயிசம்'
பின்தங்கிய குழுக்களின் நலன்களைப் பாதுகாக்க சட்டங்கள் இருந்தாலும், அவை எவ்வளவு தூரம் உணர்ந்து, அரசுத்துறை பாகுபாடுகளுக்கு எதிராக வலியுறுத்தப்படுகின்றன என்பதுதான் உண்மையான கேள்வி?
விளிம்பு நிலையில் உள்ள மக்களை இந்த அளவுக்கு பாதிப்படைய அனுமதிக்க விட்டிருக்கலாமா?
ஒவ்வொரு செங்கேனியும் போராட்ட குணமுள்ள வழக்கறிஞரை கண்டுபிடித்து விடமுடியுமா?
ஒவ்வொரு பழங்குடி பெண்ணும் செங்கேனி கடந்து வந்ததைச் போல தான் கடந்து வரவேண்டும் என்று இந்த அமைப்பு ஏன் கட்டாயப்படுத்துகிறது?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எந்தவித பாரபட்சமும் இல்லாத சுயபரிசோதனை தேவை.
உண்மையில், இந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க பார்க்க, ஒவ்வொரு புதிய பரிமாணம் தெரிகிறது. இதை அரசு துறையினர், வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் ஒரு பாடத்தை சொல்கிறது.. அது…
“செங்கல் செங்கலாக தான் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.”என்று.
ஆனால், அதற்கான நம்பிக்கை துளிர் விட வைக்கிறது அம்பேத்கரின் முழக்கமான ஜெய் பீம்
“பீம் “ என்பது ஒளிக்கற்றை தானே!
.இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கிய இந்த பயணத்தில் நாம் அனைவரும் பங்கு கொள்வோம்!!