சமீபத்தில் டி.ஜி.பி.அலுவலகம் போக நேரிட்டது..அந்தக் காலத்து கட்டிடம்…பிரிட்டிஷ் காலத்திலிருந்தே போலீஸ் தலைமையகமாக இருப்பது..
அங்குள்ள நீண்ட வராந்தாவில் நடக்கும்போது வரிசையாக மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களை பார்த்துக்கொண்டே வந்தேன். பிரிட்டிஷ் இந்தியாவில் ஐ.சி.எஸ்.பட்டம் பெற்ற காவல் தலைமை அதிகாரிகள்..சிலரின் பெயர்களுடன் சி.ஐ.ஈ.என்ற பட்டமும் இருந்தது.."சி.ஐ.டி".தெரியும்..அது என்ன சி.ஐ.ஈ? அந்த வழியாக போய்க் கொண்டிருந்த போலீஸ் அதிகாரியை (டி.எஸ்.பி) தடுத்து நிறுத்தி கேட்டேன்.
எவ்வளவு காலம் தான் நாம் விடையை மட்டுமே கொடுப்பது?.😀
அவர் திடீரென எதிர்பட்ட இந்த "க்விஸ்"சை எதிப்பார்க்கவில்லை போலும்..
பாவம்..வினா மட்டுமே கேட்டுப்பழகியவருக்கு..😀
ஒரு நிமிடம் அமைதியாகி, "பிரிட்டிஸ்காரர்கள் கொடுத்த பட்டமாக இருக்கும்" என்றார்..
அதற்கு மேல்?? கூகிள் தான் கடைசியில் விடை சொன்னது.
Companion of Indian Empire…
இதே போன்ற ஒரு பட்டம் கிடைக்கும் என்ற ஆசையில் தானே திவான் பகதூர் ஜட்ஜ் அஷ்டோத்ரம் அய்யங்கார், அவர் வர்ணிப்புப்படியே "ஒரு பால் வடியும் முகம் கொண்ட " வாலிபன் திருமலைக்கு தூக்கு தண்டனை கொடுத்தார் என்று கல்கி "தூக்கு தண்டனை" என்ற புதினத்தில் எழுதுகிறார்?!!
அது மட்டுமா?
உபந்யாஸம். செய்யும் ஒழுக்கசீலரான சடகோபாலாச்சாரியார் சொன்ன சாட்சியம் உண்மையாகப் பட்டாலும், எதற்கு "பெரிய" இடத்தை பகைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்து, போலீஸ் தரப்பு சாட்சியத்தை ஏற்றுக்கொண்டு தூக்கு தண்டனை கொடுத்திருந்தார்.
இதனால் அவன் குடும்பம் சீர்குலைந்தது என்று கேள்விப்பட்டு, தான் தவறு செய்துவிட்டதாக மன நிம்மதியில்லாமல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் நாளின் முந்தைய அமாவாசை இரவில் தூக்கம் வராமலிருக்கும் நள்ளிரவில், திருமலையை தன் அறையில் பார்ப்பார்..அவன் சிறையில் இருந்து தப்பித்து வந்தது நல்லதாகிப் போயிற்று என்று நிம்மதி அடையும் அவர் தன் தீர்ப்பில் பிசகு உள்ளது என்று ஒத்துக்கொள்வதை கேட்ட அவன் அதை தெரிந்துக் கொள்ளவே வந்ததாக சொல்லி செல்வான்.
அவன் அவருடன் பேசிக்கொண்டிருந்த சில மணித்துளிக்கு முன்னர் தான் சிறையில் இறந்தான் என்ற செய்தியை படித்தவுடன் அவருக்கு இதயம் துடிப்பதை நிறுத்திக் கொள்ளும்!!" என்று கதை முடியும்..
நீதி வழுபவர் நிலையை கல்கி படம் பிடித்துக் காட்டிய இந்த புதினம் , வெகு நாள் என் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதன் தொடர்ச்சியாகத் தான் இந்த சி.ஐ.ஈ பற்றி படிக்கும் போதும் அது நினைவுக்கு வருகிறது.
பிரிட்டிஷார் காலத்தில் நீதித்துறையில் இருந்தவர்கள் இந்த பட்டத்தை மட்டும் பெறவில்லை..ஒரு வித்தியாச நடைமுறையையும் கையாண்டனர். நீதி மன்றங்களில் மரண தண்டனை விதித்து குற்றவாளிக்கு தீர்ப்புக் கூறி அதனை படித்தபின் ,அந்த தீர்ப்பில் தன் கையொப்பம் இட்ட பின்பு, நீதிபதி அந்த பேனாவின் நிப்பை மேசையில் ஓங்கி குத்தி,அதன் முனையை உடைத்து ,பேனாவை தூக்கி வீசுவர். இன்றும் அவ்வாறு உடைக்கிறார்கள் .
நிர்பயா பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உத்தரவில் கையெழுத்திட்ட உடனேயே, நீதிபதி அந்த பாரம்பரியத்தை வைத்து பேனாவின் முனையை உடைத்தார் அல்லவா?
தீர்ப்பு அளிக்க உதவிய பேனாவின் முனையை உடைப்பது, ஒரு சட்டமும் அல்ல, குற்றவியல் நடைமுறை என்றும் சொல்லப்படவில்ல.
ஆனால்…அது ஒரு குறியீடு என்று சொல்லலாம்.அப்படி செய்வதற்கு பின்னால் பல் கோட்பாடுகள் உள்ளன:
- ஒரு முறை எழுதி உத்தரவை படித்து கையெழுத்திட்டால், அந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய அல்லது ரத்து செய்யம் அதிகாரம். அந்த நீதிபதிக்கே இல்லை..
ஒரு தடவ முடிவு பண்ணிட்டேனா… என் பேச்ச நானே கேட்கமாட்டேன்
அதை அதற்கு மேல் உள்ள நீதிமன்றம் தான் பரிசீலிக்க முடியும். அதனால் அந்த தீர்ப்பு குறித்து நீதிபதியால் மேற்கொண்டு சிந்திக்க முடியாதபடி முனை உடைக்கப்படுகிறது
- அந்த பேனா ஒருவரின் உயிரைப் குடித்ததல்லவா? அதனால் மீண்டும் அதை பயன்படுத்த வேண்டாம். என்பதற்காகவும்..
- ஒருவரின் உயிரைப் பறிக்கும் சக்தி கடவுளுக்கு மட்டுமே உள்ளது ஆனால் ஒரு நீதிபதி தனது அதிகாரப்பூர்வ கடமையை மட்டுமே செய்கிறார். அதனால் மரண தண்டனை தீர்ப்பிலிருந்து தன்னை தூரத்தில் நிறுத்திக் கொள்ளவும்..
- பேனாவின் முனையை உடைப்பதன் மூலம், அவர் தனது கடமையை மட்டுமே நிறைவேற்றுவதாக சொல்லாமல் சொல்கிறார்!! ஒரு பழைய பழமொழி சொல்வது போல்: "மரண தண்டனை ஒரு சோகமான, ஆனால் சில நேரங்களில் அவசியமான விஷயம் கூட அதை செயல்படுத்த பயன்படுத்தப்படும் பேனாவை உடைப்பது, அந்த வருத்தத்தை வெளிப்படுத்தும் ஒரு அடையாளம்".
இப்போதெல்லாம் பால் பாயிண்ட் பேனா தானே உபயோகிக்கிறோம். அப்போதும் ரீபில் முனையை ஒடித்து விடுவர்!!
மரண தண்டனையை கொடுக்கும் சில நாடுகளில் இந்தியா இன்னமும் உள்ளது..அது குறித்த கருத்து வித்தியாசங்கள் அவ்வப்போது எழுவதுண்டு!!
ஒரு தனி மனிதன், சமூகத்தின் கட்டுப்பாடுகளை தகர்க்கும் போது, அவனுக்கு தண்டனை அளித்து, அதன் மூலம் மீண்டும் அது போல அவன் செய்யா வண்ணம் தடுத்து அதேவேளையில் மற்றவருக்கும் அது குறித்த அச்சத்தை ஏற்படுத்தி, அவனை மீண்டும் சமூகத்துடன் ஒன்றிணைப்பது தானே சட்டம், நீதியின் கடமை, ஆனால் மரண தண்டனை அந்த நோக்கத்தையே சிதைப்பது அல்லவா.என்பதே, .மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பும் வினா..
அவன் உயிர் வாழ்வது சமூகத்துக்கே தீங்கு என்று தானே மரண தண்டனை வழங்கப்படுகிறது? அதனால் தான் அது "அரிதிலும் அரிதான" வழக்கில் மட்டுமே வழங்கப்படுகிறது..
ஆனாலும், உயிர்களின் மீதான அன்பு தானே மனித குலத்தின் அடிப்படை. அதுவே தொலைகிறதே இந்த மரண தண்டனையினால் என்கிறார்கள் அவர்கள்.
நீதிமண்றத்தின் தண்டனையே, அறத்தின் அடிப்படையில் என்னும்போது "அன்பு பெரிதா அறம் பெரிதா ?" என்ற வினா எழும்..
சமீபத்தில் இங்கு கூட ஒரு வினாவை பார்த்தேன்.
அன்புக்குரியவரை காப்பாற்ற நீங்கள் சட்டத்தை மீறுவீர்களா?
சட்டம் பொது ஒழுங்கை கட்டுப்படுத்தி, அறத்தை வளர்க்கும்.. ஆனால் அன்பு வேண்டியவருக்காக தவறு செய்யத் தூண்டும் சட்டத்தை மீற வைக்கும்..
அப்படியானால் எது முக்கியம்?
நமக்கு எப்பவும் ரெடி ரெக்கனர் திருவள்ளுவர் அல்லவா?
"அன்பும் அறமும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" என்கிறார் அவர்..
இல்வாழ்க்கையின் அடிப்படையே அன்பினால் கட்டப்படுவது என்பவர் அவ்வாறு வாழ்வது அறம் செய்யவே என்கிறார். அப்படியானால் ..அறமே பெரிது..
நம் அன்பிற்குரியவரை காப்பாற்ற சட்டத்தை நாம் மீறினால், ..அவரோடு சேர்ந்து நாமும் மாட்டிக் கொள்ளவேண்டியது தான்..
ஆனாலும் விதி என்று இருந்தால் விதிவிலக்கு இருக்கும் தானே..
அதனால், அது சூழ்நிலைக்கேற்ப மாறலாம்!!
மஹாபாரதத்தில் கூட கிருஷ்ணனுக்கு பாண்டவர் மீது பிரியம் அதிகம். திரௌபதியோ அவனுடைய "பிரிய சகி"..அவர்களுக்கு போரினால் ஏற்படும் தீமைகள் பற்றி நன்கு அறிவார்..
அந்தப் போரின் காரணம் வரும் பெரும் அழிவைத் தடுக்கவே பீஷ்மரும் விதுரரும் முயல்கிறார்கள். மாறாக "நான் அவ்வழிவை நிகழ்த்த எண்ணுகிறேன்” என்கிறார் கிருஷ்ணர்.!
உண்மை ....அவர் திட்டமும் அது தான்... சகுனியின் பகடை காய்கள் வழியாக அந்த பேரழிவிற்கான சூதாட்டக்களத்தை வெற்றிகரமாக நிகழ்த்தி விடுகிறார்!!
பல லட்சம் வீரர்கள் யுத்தம் புரிந்து உயிர்விடும் குருஷேத்ர போருக்கான சுழி பன்னிரு படைக்களம்’ வழியாக !!
முடிவில், பலரது துர் மரணங்களுக்கு காரணமாகும் மகா பாரத போரை நிகழ்த்தபோகும் பகடைக்காய்களை அனலில் இட்டு பொசுங்க செய்கிறார் சகுனி.
ஏன்?
அந்த பகடை காய்கள் செதுக்கியதன் நோக்கம் நிறைவேறி விட்டதே!!
லட்சம் வீரர்களின் மரணத்திற்கு காரணமான பகடைக்காய்கள் ஆயுளும் முடித்து வைக்கப்பட்டது போலத்தான்,
நீதிமன்றத்தில் மரண தண்டனை கொடுத்தவுடன் தீர்ப்பு உத்தரவில் கையெழுத்திட பயன்படுத்திய பேனாவின் முனையை உடைத்து, ஒரு மனிதனின் மரணத்திற்கு காரணமான அந்த பேனாவின் ஆயுள் அந்த தீர்ப்புடன் முடித்து வைக்கப்படுகிறது..
ஆமாம்…ஜட்ஜ் அஷ்டோத்ரம் அய்யங்கார் தீர்ப்பு வழங்கிய பின், பேனாவின் ஆயுளை முடித்ததாக படிக்கவில்லையே..
அதனால் தான்.. தீர்ப்பு வழங்கிய அவர் ஆயுளே முடிந்து போனதா?!!🤔
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக