ஜாமீன் என்றால் என்ன? என்று கேட்டதை பார்க்கும் போது வடிவேலுவின் காமெடி ஒன்று தான் நினைவுக்கு வருகிறது....
எல்லா மார்கெட்டுக்கும் போய் பார்த்துட்டே]ங்கண்னே .... எறாமீன் இருக்குன்கிறான். சுறா மீன் இருக்குன்கிறான் ஆனால் ஜாமீன் மட்டும் எங்கியும் இல்லண்ணே " என்ற டயலாக் ரொம்ப பிரபலம்.....
அந்த அளவிற்கு ஜாமீனை பற்றி தெரியாதவர் இங்கு யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சட்டப்பூர்வமான விளக்கத்துடன் அதை சரியாக புரிந்துக் கொள்ளும் எண்ணத்தில் இந்த கேள்வி கேட்கப்பட்டதாகவே நினைக்கிறன்.
"ஜாமீன்" என்பது சட்டத்தின் அதிகாரத்துடன் கைது செய்யப்பட்ட நபரை சட்ட ரீதியான காவலில் இருந்து ...........அதாவது போலிஸ் காவலோ அல்லது நீதிமன்ற காவலோ அதிலிருந்து விடுவிப்பது.
அதற்குள் இன்னும் உள்ளே ஆழமாக போகும் முன், கைது குறித்துப் பார்த்து விடலாம். நம் அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ், குடிமகன்களுக்கு சில அடிப்படை உரிமைகள் கொடுக்கபட்டுள்ளன. அதில் மிக முக்கியமானது , இந்தியாவில் எங்கேயும் சுதந்திரமாக செல்லக் கூடிய உரிமை ...
இது ஒரு குடிமகனுக்கு மட்டுமே உண்டு. வெளிநாட்டினர் இந்த உரிமையை கோர முடியாது. அந்த உரிமையை தகர்க்கும் விதமாக, சட்டம் கொடுத்த அதிகாரத்தின் கீழ் ஒரு காவல் அதிகாரி ஒருவரின் சுதந்திரமான நடமாட்டத்தை தடுக்கும் வண்ணம் கைது செய்யலாம். அவரைத் தொட்டும் கைது செய்யலாம். அல்லது "you are under arrest " என்று சொல்லியும் அவர் கைது செய்யப்பட்டதை தெரிவிக்கலாம். ஆனால் அது போல, செய்யும் சமயம், குற்ற விசாரணை சட்டம் சொல்லியுள்ள நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைப் பிடிக்க வேண்டும். அதை அவர் சரியாகத் தான் செய்கிறாரா என்று உறுதி செய்ய நமக்கு, அது குறித்த விழிப்புணர்வு அவசியம்.
கைது செய்யப்படும் நபருக்கு சில அடிப்படை உரிமைகள் உண்டு. அவர் உடனடியாக தன் குடும்ப உறவினர் அல்லது நண்பர் அல்லது வழக்கறிஞருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசலாம். தான் இருக்கும் இடம், ஆஜர்படுத்தப்படும் நீதிமன்றம், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை தெரிவித்து அவர்கள் பிணைக்கு ஏற்பாடு செய்யலாம். இதன் மூலம் தேவையில்லாமல் காவலில் அலைக்கழிக்கபடுவது குறையும்.
அடுத்து ஜாமீன் பெறுவது என்பது ஒருவரின் உரிமை அல்ல. ஏனெனில் குற்றத்தின் தன்மைக்கேற்ப, பிணையில் விடக்கூடிய குற்றங்கள் மற்றும் பிணையில் விடக் கூடாக் குற்றங்கள் என்று உள்ளன.
பிணையில் விடக்கூடிய குற்றங்கள் எனப்படுவதில், காவல் அதிகாரியே, வழக்கு விசாரணையின் போது, போதிய ஒத்துழைப்பு கொடுப்பதாக குற்றம் சுமத்தபட்டவரின் உத்தரவாதத்தை பெற்றுக் கொண்டு, விடுவிக்கலாம். அல்லது இன்னும் இரு நபர்களின் உத்தரவாதத்தையும் பெற்று கொண்டு பிணையில் விடுவிக்கலாம்.
மற்ற பிணையில் விடக் கூடா குற்றங்களுக்கு நீதிமன்றம் மட்டுமே ஜாமீன் கொடுக்க முடியும். அதிலும், மரண தண்டனை, ஆயுள் தண்டனை போன்ற தண்டனை கிடைக்கக் கூடிய குற்றங்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் உயர் நீதிமன்றதிற்கு மட்டுமே உண்டு. ஏனைய நீதிமன்றங்கள் அதனதன் தண்டனை வழங்கும் அதிகாரத்திற்கேற்ப தன நீதிமன்றத்தின் அதிகார வரையறைக்குள் வரும் வழக்கில் ஜாமீன் வழங்கும்.
விதி என்று ஒன்று இருந்தால் விதிவிலக்கும் உண்டு தானே!!. பலவீனப் பிரிவு எனப்படும் பெண்கள், பதினாறு வயதிற்குட்பட்ட இலஞ் சிறார்கள், நோயாளிகள் போன்றோர் அந்த குற்றத்தை செய்ததாக குற்றம் சாட்டப் ப ட் டிருப்பின், சம்பவங்களின் அடிப்படையில் ஜாமீனில் அவர்கள் விடுவிக்கப்படலாம்.
அதே போல குற்றம் சாட்டப்பட்ட வருக்கு எதிராக முதல் நிலை ஆதாரம் ஏதும் வழக்கில் இல்லை என்றாலோ, மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது என நீதிபதி கருதினால் குற்றம் சுமத்தப்பட்டவரை ஜாமீனில் விடுவிக்கலாம்.
இந்த ஜாமீன் வழங் கப் படுவதாலேயே அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப் படுகிறார் என்று அர்த்தம் அல்ல.
நம்முடைய குற்ற முறை அமைப்பே, குற்றம் சுமத்தப்பட்டவரின் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரையில் அவர் நிரபராதி என்றே கருதப்படுவார் என்பதால், வழக்கு போலிஸ் விசாரணையின் போதோ அது முடிந்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரனை முடிந்து தீர்ப்பு வரும் வரையிலான இடைப்பட்ட காலத்தில் அவர் ஜாமீனில் வெளிவர தகுதியுடையவராகிறார். \
அதற்காக பிணை விண்ணப்பம் செய்ய வழக்கறிஞரின் மூலம் பிணை மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செயயலாம். அப்போது, தான் காவலில் உள்ளதால் தன் தொழில், குடும்பம் எப்படிபாதிக் கப் படுகின்றது என்பதையும் தன் உடல் நிலை எந்த மோசமான நிலையில் உள்ளது என்பதையும் தெரிவிப்பதோடு, தான் நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனைக்கு கட்டுப்பட்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
ஜாமீன்கோரும் விண்ணப்பத்தின் பேரில், அந்த குற்றத்தின் தன்மை, தடயங்களின் நிலை, குற்றத்திற்கு அளிக்கப்படும் தண்டனையின் கடுமை, குற்றம் சாட் டப்பட்டாரின் நடத்தை, அவரின் தற்போதைய நிலை போன்றவை, முடிவு எடுக்கும் சமயம் நீதிமன்றத்தால் கவனிக்கப்படும்.
பொதுவாக ஜாமீன் மனுவில் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படும் ஆட்சேபனைகள் என்பது
- அவர் சாட்சிகளை கலைப்பார்
- தடயங்களை அ ழிப்பார்
- வெளிநாட்டிற்கு தப்பி செல்லு ம் வாய்ப்பு உள்ளது.
- வேறொரு பிணையில் விடா குற்றத்தில் ஈடுபடலாம்
- வெளியே வந்தால் சட்டம் ஒழுங்கு கெடும் அபாயம் உள்ளது.
- அவரின் உயிருக்கே அச்சுறுத்தல் உள்ளது.
- சில குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர்
- திருட்டு பொருட்கள் கைப்பற்றப் படவில்லை
- குற்றம் செய்ய பயன்படுத்திய பொருட்கள் இன்னமும் கைப்பற்றப்பட வில்லை
- அவரை போலிஸ் காவலில் எடுத்து விசாரணைக்கு உட்படுத்த இருப்பது
- குற்றவாளியால் காயமடைந்த நபர் இன்னமும் மருத்துவமையில் இருந்து விடுவிக்கப்படவில்லை
இந்த இரண்டு தரப்பு வாதத்தையும் சீர் தூக்கி பார்த்து, நீதிபதி ஜாமீன் மனுவில் உத்தரவு பிறப்பிப்பார். ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டாலும்/ , எத்தனை முறை வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம். ஆனால் ஒரு மனு நிராகரிக்கபட்ட பின், அந்த வழக்கின் ஏதேனும் சூழ்நிலை மாற்றம் ஏற்பட்டிருப்பின் மட்டுமே அந்த மனு பரிசீலனை செய்யப்படும்/ .
மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் ஜாமீன் மறுத்தால், செஷன்ஸ் கோ ர்ட்டும் அ தற்கு மேலாக உயர்நீதிமன்றத்திலும் முறையீடு செய்யலாம். ஆனால் உயர்நீதிமன்றம் பினை யில் விட மறுத்த விட்ட நிலையில், மீண்டும் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்திலோ அல்லது செஷன்ஸ் நீதிமன்றத்திலோ மனு செய்ய முடியாது.
நீதிமன்றம் ஜாமீன் கொடுக்க முடிவு செய்தால், அதை நிபந்தனை யுடன் அல்லது இல்லாமலோ கொடுக்கலாம். பொதுவாக போலிஸ் விசாரணை நடக்கும் நிலையத்தில் ஆஜராக சொல்லி நிபந்தனை இருக்கும் அதுவும் குற்றப் பததிரிக்கை செய்யப்டும் வரையில் தான் . சில காலத்திற்கு நிபந்தனையை கடைப்பிடித்து விட்டு அதில் தளர்வு கோரி விண்ணப் பிக்கலாம். அல்லது அந்த நிபந்தனையை நீக்க கோரலாம்.
அவர் வெளிநாட்டிற்கு தப்பி செல்லும் வாய்ப்பு உள்ளது என்றால் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்ஹில் ஒப்படைக்க சொல்லலாம். அல்லது சில சிறப்பு நிபந்தனைகளும் விதிக்கலாம்.
ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பின், அவருடைய நடத்தை, விசாரணைக்கு இடைஞ்சலாக இருந்தாலோ அல்லது ஜாமீனின் போது கொடுத்த நிபந்தனைகளை மீறினாலோ அந்த ஜாமீன் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு அவர் மீண்டும் நீதிமன்ற காவலுக்கு அதாவது சிறைக்கு அனுப்பப் படுவர். அதே போல ஒவ்வொரு வழக்கிற்கும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் போலிஸ் விசாரனை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் அந்த காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்யா விட்டால் குற்றம் சுமத்தப்பட்டவர் பிணையில் விட கோரும் உரிமை உண்டு. அதன்படியே நீதிமன்றமும் அவரை கண்டிப்பாக விடுவிக்க வேண்டும்.
அந்த ஜாமீன் உத்தரவில் குற்றம் சுமத்தப்பட்டவரின் சொந்த உறுதிமொழி பத்திரத்தின் பேரில் பினையுடனோ அல்லது இல்லாமலோ விடுவிக்கலாம்.
நீதி மன்றம் வேண்டும் போது குற்றம் சுமத்தப்பட்டவர் நேரில் ஆஜராவார் என்று உறுதி கொடுப்பவர்கள் பினையாளர்கள் எனப்படுவார்கள். அவர்கள் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு இரத்த உறவு முறையிலோ அல்லது அவர் குடும்ப பின்னணி தெரிந்த நெருக்கமானவராகவோ இருக்க வேண்டும். பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட, உத்தரவாதம் கொடுக்கும் தொகைக்கு உரிய சொத்தை கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
ஆஜராகும் நபர் தொழில் முறை பினையாளர் என்றோ அல்லது வேறு ஏதும் காரணம் கொண்டோ நீதிமன்றம் அந்த பினையாளரை நிராகரிக்கலாம். இதற்கான காரணம் சொல்ல வேண்டியதில்லை.
இந்த பினையாளர்கள், குற்றம் சுமத்தப்பட்டவர் நீதிமன்றம் கொடுத்த நிபந்தனைகளின்படி, வழக்கு விசாரணையின் போது ஆஜராக தவறினால், அவரின் பிணை நிராகரிக்கப்படுவதொடு அல்லாமல், பினையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஷேக்ஸ்பியரின் Merchant of Venice நாடகத்தில், தன் நண்பன் போசாநிகாவின் கடனுக்காக ஜாமீன்தாரராக நின்ற அன்டோனியோவின் நிலை நினைவில் இருக்கும்.. அந்த அளவிற்கு இல்லை என்றாலும், தான் கொடுத்த உத்தரவாத தொகையை அவர் நீதிமன்றத்தில் கட்டவேண்டியிருக்கும்.
இது போன்ற நடைமுறையை பின்பற்றி பிணையில் வந்த பின் வழக்கின் விசாரணையில் ஆஜராகி வழக்கு முடிவுற்று தீர்ப்பு சொல்லும் போது, அவர் 'கு ற்றவாளி " என்று நீதிமன்றம் முடிவு செய்தால், உடன் நீதிமன்றக் காவலுக்கு அனுப்படுவார். ஆனாலும் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை மூன்று வருடத்திற்கு குறைவாக இருந்தால், மாஜிஸ்திரேட் டிடம் உரிய ஜாமீன்தாரருடன் ஆஜராகி பிணை கோரலாம். அவரும் மேல்முறையீடு செய்யும் காலக்கெடு வரையில் இடைக் கால பிணை உத்தரவு வழங்குவார். மேல்முறையீட்டு நீதிமன்றமும், விசாரணை நடத்தப்பட்ட காலம் முழுதும் குற்றவாளி பிணையில் இருந்தார் என்றால், அது போலவே மேல்முறையீடு வழக்கு முடியும் வரையிலும் பிணை வழங்கும்.
தத்துவ ஞானி சாக்ரடீஸ் ஒரு முறை தெருவில் போகும் போது. ஒரு விலை மாதுவின் வீட்டில் இருந்து தன் சீடன் வெளியே வருவதைக் கண்டார். அதனால் அந்த வீட்டு வாசலிலேயே நின்றார். அவர் அங்கேயே நிற்பதைக் கண்ட சீடனும் வீட்டின் உள்ளே சென்று மறைந்துக் கொண்டார். வெகு நேரம் ஆன பின்னும், சாக்ரடீஸ் நின்ற இடத்திலிருந்து நகராததால், சீடன் வேறு வழி இல்லாமல் வெளியே வந்தார்.
" நீ ஏன் என்னை பார்த்ததும் வீட்டின் உள்ளே போனாய் ? " என்று கேட்டார் சாக்ரடீஸ்.
அதற்கு அவர் " உங்களைப பார்த்ததும் வெட்கமாக இருந்தது.. அதனால் ..." என்றார்.
அதற்கு சாக்ரடீஸ் "விலைமாதுவின் வீட்டிற்கு உள்ளே நுழையத்தான் வெட்கப்படவேண்டும். வெளியே வர அல்ல " என்றார்.
அது போல, சமுதாயம் வெறுத்து ஒதுக்கும் குற்றங்களை செய்து சிறைக்கு செல்வதற்குத் தான் வெட்கப்படவேண்டும். அங்கிருந்து வெளியே வர உதவும் பிணையைப் பற்றி தெரிந்துக் கொள்வதில் அல்ல!!