திங்கள், 28 ஜூன், 2021

தமிழ் வழி பயின்றவர்களுக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற அரசு அறிவிப்பு சரியானதா? இதன் சாதக, பாதக விளைவுகள் என்னவாக இருக்கும்?

 தமிழ் வழி பயின்றவருக்கு, அரசு பள்ளியில் படிப்பவருக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை!


இந்த உத்தரவு போடும் எண்ணம் அரசுக்கு வரக் காரணம்?

ஆங்கில மொழி வழி கல்வி மேல் அதிகரித்து வரும் மோகம்.அது இப்போது தீவிரமாகி, மார்க் அதிகம் எடுக்க வேண்டும் என்று தமிழ மொழியை தவிர்த்து, வேறொரு மொழியை பாடமாக எடுத்து படிக்கும் போக்கு அதிகமாகியுள்ளது. மூன்றாவது மொழியை அடிப்படை நிலை மட்டும் கற்றால் போதும் என்பதால், நகரத்து பள்ளி பிள்ளைகள் அதிகம் பேர், அதில் மட்டுமே தாய் மொழியை படிக்கிறார்கள். இது ரொம்ப ஆபத்தான போக்கு.

என் பிள்ளைகளை பள்ளியில் எல்.கே.ஜி.சேர்க்க போகும்போது, பள்ளியில் தெளிவாக சொல்லிவிட்டார்கள்..வீட்டு பாடம் எதுவும் கிடையாது.நீங்கள் வீட்டில் எதுவும் சொல்லிக்கொடுக்க வேண்டாம் என்று!! நானும் பெரிய கவலை விட்டது என்று இருந்துவிட்டேன்.

நம் காலத்து வீட்டு பாடம் ஞாபகத்துக்கு வந்து விட்டதால்!

ஆனால் பாருங்கள்..பிள்ளைகளின் மனதை இயக்கி, ஆங்கிலத்திலேயே எண்ணங்களை வர செய்து, பிள்ளைகளின் படிக்கும் முறையையே அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.

அதனால், பிள்ளைகள் ஆறாம் வகுப்பு வந்த போது, இரண்டாவது மற்றும் மூன்றாம் மொழியை தேர்வு செய்ய சொன்னர். பெருன்பான்மையான பிள்ளைகள் வீட்டில் இரண்டாம் மொழியாக ஹிந்தியையும் பிரென்ச்சையும் எடுக்க, நாங்கள் தமிழை தேர்வு செய்தோம்.!!

தாய் மொழி வழி கல்வி கற்பதன் சாதகங்களை மாண்புமிகு உச்ச நீதிமன்றமே பட்டியலிட்டுள்ளதே..அதை முதலில் பார்ப்போம்.

2019ல், ஆந்திர அரசு, ஒரு அரசு உத்தரவு போட்டதே." 2020-21 முதல் அனைத்து நிர்வாகங்களின் கீழ் வரும் முதன்மை, மேல்நிலை , உயர்நிலைப் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை ஆங்கில நடுத்தரக் கல்வியை கட்டாயமாக்கியது.இதன் விளைவாக பின்வரும் கல்வி ஆண்டுகளில் இருந்து படிப்படியாக ஒவ்வொரு வகுப்பிற்கும் இது விரிவாக்கப்பட வேண்டும். "

இந்த உத்தரவை ரத்து செய்த மாநில உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மான்புமிகு உச்சநீதிமன்றத்த்தை அணுகியது இல்லையா? அப்போது தான் தாய் மொழி கல்வி வழியின் பாதகங்கள் என்று ஆந்திர அரசு சிலவற்றை பட்டியலிட்டது.

ஜகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசாங்கத்தின் " ஆங்கிலம் கற்காததால் தான், குழந்தைகள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்’.

அத்தோடு நின்றதா அரசின் வாதம்?

"ஒடுக்கப்பட்டவர்களான தலித்துகள், அரசின் இந்த முடிவை முற்போக்கான நடவடிக்கையாகக் கருதுகின்றனர். அவர்கள் தீவுகளில் வைக்கப்பட்டுள்ளது போல தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.. தனியார் ஆங்கில நடுத்தர பள்ளிகளில்] கட்டணமும் அதிகம்" என்றது.

அந்த வழக்கின் விசாரணையின் போது தான், தலைமை நீதியரசர் பாப்டே,, அரசின் தர்க்கத்தை மறுத்து, " ஒரு அடித்தளத்தைப் பெற வேண்டுமானால் ஒரு குழந்தை தனது தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்..அத்தோடு இந்த விஷயத்தில் "மிகப்பெரிய மாறுபட்ட பிரச்சினைகள்" இருப்பதாகக் கூறி, இது விரிவாக கவனிக்கப்பட வேண்டும்," என்றும் கூறி, வழக்கை விசாரணக்கு ஏற்றுக்கொண்டுள்ளார்...

இந்த வழக்கில், தாய் மொழியில் பயிலும் பள்ளி குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை திணிப்பதால், அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21 ஏ (கல்விக்கான அடிப்படை உரிமை) இன் கீழ் குடிமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட பயனுள்ள கல்வியை அவர்கள் இழக்க நேரிடுமா?" என்பதை ஆராய உள்ளது உச்சநீதிமன்றம்.

ஒரு விஷயம் கவனித்தோமா?

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கை 2020" பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஊடகமாக “தாய்மொழி” பயன்படுத்துவது, அறிவாளிகளுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் என்றதே !!

தேசிய கல்வி கொள்கை 2020 , தாய்மொழியில் உயர்தர பாடப்புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள் இருமொழி அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

NEP 2020 “பன்மொழி” மீது கவனம் செலுத்துகிறது. சிறு குழந்தைகளுக்கு “அற்பமான கருத்துக்களை விரைவாகக் கற்றுக் கொள்ளவும் புரிந்துகொள்ளவும்” உதவும் தாய் மொழிகளின் சக்தியை இது அங்கீகரிக்கிறது.

அது கூட ஏன்?

2005 ஆம் ஆண்டின் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பும், 2009 ஆம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டத்தின் 29 வது பிரிவும் கூட, முடிந்தவரை நடைமுறையில், கல்வி கற்பிப்பது, குழந்தையின் தாய்மொழியில் இருக்க, அறிவுறுத்தவில்லையா?

சில குடும்பங்களில் சில நேரங்களில், குடும்ப உறுப்பினர்களால் பேசப்படும் வீட்டு மொழி ஒன்று இருக்கலாம், அவை சில சமயங்களில் தாய்மொழியாகவோ அல்லது உள்ளூர் மொழியாகவோ கூட இருக்கலாம். குறைந்த பட்சம் 5 ஆம் வகுப்பு வரை, முடிந்த வரை 8 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு அப்பால், தாய்மொழி / உள்ளூர் மொழி / பிராந்திய மொழியாக இருக்கும் ”என்று NEP 2020 சொல்கிறதே?!

."தாய் மொழி வழி கற்பித்தல் " தான் "ஆற்றல்மிக்க வளர்ச்சிக்கான உந்துதல்," என்பதை இப்போது தானா அரசுகள் கண்டுகொண்டார்கள்? அதன் முலம் NEP 1968 லிருந்து வருகிறது!!

ஆனாலும், இன்றளவும், ஆங்கில வழி கல்வி கற்கும் பிள்ளைகளுடன், தமிழ் வழி கல்வி கற்கும் பிள்ளைகள், அதுவும் அரசு பள்ளியில் பயிலும் பிள்ளைகள், போட்டி போட முடியாமல் தடுமாறி நிற்பதெனவோ உண்மை..

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தனியார் பள்ளிகள் தவிர, பெரும்பாலான அரசு உதவி பெறும் பள்ளிகளும் ,அனைத்து அரசு பள்ளிகளில் தமிழ்,ஆங்கிலம் இரு வழிக் கல்வியுமே போதிக்கப் படுகிறது.இளங்கலை,முதுகலை கலை அறிவியல் உயர் படிப்புகள் பல கல்லூரிகளில் தமிழ்வழியில் வழங்கப் படுகிறது.

நான் ஊருக்கு போகும் போதெல்லாம், வீட்டிற்கு பக்கத்திலுள்ள அரசு பள்ளிக்கு போவதுண்டு..அவர்களுடன் பேசும்போது, அடிப்படை ஆங்கில அறிவு அவர்களுக்கு போதுமான அளவில் வழங்கப் படுவதில்லை என்று தெரிய வரும்.அவர்களுக்கு பரிட்சை நோக்கோடு மட்டுமே ஆங்கிலம் கற்பிக்கப் படுகிறது.புரிந்து படிப்பது இல்லாமல், மனப்பாடம் செய்வதே பெரும்பாலும் நடக்கிறது..

அது ஓராசிரியர் பள்ளி.பல வகுப்பு பிள்ளைகள்.. அவர் எதை தான் சொல்லி கொடுப்பார்?!.சரி பக்கத்திலுள்ள பெரிய ஊரில் உள்ள பள்ளியின் கதையம் அது தான்.ஆசிரியர் நிறைய இருந்து என்ன?

இதை சொல்வதற்காக யாரும் கோபித்துக்கொள்ள வேண்டாம்.!!
"சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்" என்பது போல கற்றுக் குடுப்பவர்களும் போதிய ஆங்கில அறிவு இருப்பதில்லை.!! அப்படியே இருந்தாலும் தேர்ச்சி விழுக்காடு மட்டும் தானே நோக்கம்? அதனால் தேவைக்கு மேல் போதிப்பதில்லை.!! அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது மட்டுமா வேலை? அரசு கொடுப்பது பத்தாது என்று, அவர்களாக ஈடுபடும் வேலைகள்!

அட..ஆங்கில மொழியை விடுங்கள்..பிள்ளைகள் தமிழ் மொழியையவது இலக்கண சுத்தமாக படிக்கிறார்களா என்றால் வருத்தம் தான்..எட்டாம் வகுப்பு வரை "ஆல் பாஸ்". ஒன்பதாம் வகுப்பில் தான் சீரியசாக, தமிழ் எழுத கற்றுக் கொள்பவர் அநேகம்!!

இது போல, நடைமுறை சிக்கல் இருக்கும் போது, உயர் கல்வியை தமிழ் வழியில் படிக்க அரசு தன் தரப்பில் செய்துள்ளதா?

+2 கணிணி அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு அந்த பாடப் புத்தகம், தமிழில் உள்ளதா?.மற்ற பாடங்களை தமிழ் வழி கற்றாலும் கணிணிப் பாடத்தை ஆங்கிலம் மூலம் தான் கற்க,எழுத வேண்டும்…

பொறியியல்,மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு தமிழ் வழி கல்வி முழுமையாக சாத்தியப் படுமா? தெரியவில்லை…

+2 வரை தமிழ் மொழி வழியில் படித்து அதிக மதிப்பெண் பெற்று, தனியார் பொறியியல் கல்லூரியில் சேரும் பிள்ளைகள், மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.சில பொறியியல் கல்லூரிகளில் முதல் வருடம் அடிப்படை ஆங்கிலம் கற்றுக்கொடுக்க முயற்சி செய்கிறார்கள். உண்மை தான்.அவர்களால் முயற்சி செய்ய தான் முடிகிறதாம்..வெற்றி?..பிள்ளைகள் கையில் அல்லவா உள்ளது?

தமிழ் இன்னும் பள்ளிக் கூடத்தைத் தாண்டி வரவில்லை என்பது தான் நிஜம். .
தமிழில் படித்து புதிதாக ஆங்கிலவழி படிக்க வரும் மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்கும் சூழல் நம் நாட்டில் இல்லை .

இதில் , வேலை வாய்ப்பு என்று வரும்போது அது எந்த அளவு கை கொடுக்கும் சாத்தியப் படும்? தெரியவில்லை..

இந்த நிலையில் தான் அரசின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இதை பார்த்ததும் எனக்கு ஒரு கதை தான் நினைவுக்கு வந்தது..

பரிகாரங்களே குறைகளின் நிவாரணம் என்ற எண்ணத்தில் பரிகாரங்களை மட்டும் செய்து விட்டு மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்து கொள்ளலாம் என நினைத்திருந்த சீடர்களுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினார் ஒரு குரு. பாவங்களைக் கழுவ புனித நதிகளில் நீராடிவர யாத்திரை கிளம்பிய சீடர்களிடம் ஒரு பாகற்காயைக் கொடுத்து அதையும் அந்த புனித நதிகளில் நீராட்டிக் கொண்டுவரச் சொன்னார். அதேபோல், அவர்களும் செய்தனர். புனித நீராடிய பாகற்காயைச் சமைத்து மதிய உணவுடன் பரிமாறச் செய்தார் குரு. அதை உண்ட சீடர்களின் முகத்தில் அந்த கசப்பு ருசி தெளிவாகத் தெரிந்தது.

குரு சீடர்களைப் பார்த்து 'புனித நதிகளில் நீராடியதும் உங்கள் பாவங்கள் தொலைந்து விட்டதாகச் சொல்கிறீர்கள். அதேபோல் புனித நீராடிய பாகற்காயின் கசப்பும் மாறியிருக்க வேண்டுமே, அது மாறி விட்டதா?' என அமைதியாகக் கேட்டார். சீடர்கள் பதில் சொல்லாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

குரு கூறினார், 'புனிதத் தலங்களில் நீராடுவதால் நம் உடலின் அழுக்குப் போகலாம். ஆனால், பாவங்கள் மாறுவதில்லை. அன்பும் கருணையுயே நம் பாவத்தை மாற்ற வல்லவை. பாகற்காயின் கசப்பு எதனாலும் மாறுவதில்லை. அதைப் போலவே நம் இயற்கைக் குணங்களும் புனித நீராடுவதால் மாறாது. மெல்ல மெல்ல முயற்சி செய்துதான் அவற்றை மாற்ற வேண்டும்."பரிகாரங்கள் நிவாரணம் ஆகாது' என்றார்…

அரசு பணியில்,, தமிழ் தான் ஆட்சி மொழி என்பதால், தமிழ் வழியில் கற்றவனுக்கு முன்னுரிமை கொடுப்பது சரி தான்..

ஆனால் .அடிப்படையை சரி செய்யாமல் மேல் மட்டட்த்தை மட்டும் மாற்றியமைக்க வேண்டும் என்பது எப்படி சரியாகும்.?

எந்த மொழிவழி அடிப்படைக் கல்வியைப் பெற்றாலும் பள்ளி இறுதியில் அவன் ஆங்கிலம் தமிழ் இரண்டுலும் தேர்ச்சி பெற்றவனாக்குவது தானே அவனுக்கு அளிக்கப் படும் சிறந்த கல்வி?.

அவன் மேற்படிப்பை (தொழிற் படிப்பு) ஆங்கில மொழிவழியில் கற்க, அவனை தயார் படுத்த வேண்டியது அடிப்படைக் கல்வி தான். அதனால், முதலில் சீர்திருத்தப் படவேண்டியதும் அது தான்.

பரிகாரங்களே நிவாரணமாகுமா?

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...