Indian Contract Act லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Indian Contract Act லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 டிசம்பர், 2022

ஒரே சமயத்தில் இரண்டு இடத்தில் வேலை செய்வது குற்றமாகுமா ?

      


  இன்று நேற்றல்லா.. பல காலமாக இரண்டு இடத்தில் வேலை செய்வது நடைமுறையில் இருந்துக்  கொண்டு தான் வருகிறது.  

        அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் முக்கியமானவைஎன்றால்,  இன்னொரு இடத்தில் கூடுதலாக வேலை செய்வதால் கூடுதல் பணம்  கிடைக்கிறது... இல்லையென்றால்  தன்  திறமையை வெளிக்காட்டுவதற்கு எனலாம்.  

      இவ்வாறு, தான் வேலை செய்யும் இடத்திற்கு அல்லது நிறுவனத்திற்கு தெரியாமல் இன்னொரு இடத்தில் வேலை செய்வதை " Moon Lighting " என்கின்றனர். இது இப்போது அமெரிக்காவில் அதிக அளவில் நடக்க ஆரம்பித்த போது தான் இந்த பெயர் சூட்டுவது நடந்துள்ளது. 

        அதென்ன ...சந்திரனுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்களுக்கு .. 

        பொதுவாக தான் வேலை செய்யும் நிறுவனத்தில் காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை என்றால், இவர்கள் செய்யும்  இரண்டாவது பணி,  மாலையிலிருந்து தானே ஆரம்பிக்கும்.?  அதாவது நாளின் இறுதியில் அல்லது வாரத்தின் இறுதியில்.  எனவே தான் இந்த 'MOON LIGHTING' என்ற பெயர்!!

        அதுவும் இந்த கொரானா நோய் தொற்றுக்காலம்   வந்த பிறகு, அனைத்து நிறுவனங்கள் குறிப்பாக ஐ. டி .நிறுவனங்கள்  'WORK FROM HOME' என்று வீட்டிலிருந்தே அலுவலகப் பணியை செய்யலாம் என்று அனுமதிக்க  ஆரம்பித்து,  அதற்கான வசதிகளையெல்லாம் ஊழியர்களுக்கு செய்துக் கொடுத்து விட்டு, இப்போது அவர்களை மீண்டும் பணிக்கு அலுவலகம் வர செய்வதில் ஏகப்பட்ட சிக்கல்களை சந்திக்கின்றனர். பெருவாரியான ஊழியர்கள் ஏன் அலுவலகம் வராமல்  ஏன் இல்லத்திலிருந்தே பணியை தொடர விரும்புகிறார்கள் என்று காரணம் அறிய   இதற்காக நடத்தப்பட்ட ஒரு சர்வேயில் பெருவாரியான ஐ டி ஊழியர்கள் தங்களை வேலைக்கு அலுவலகம் வர சொல்லி கட்டாயப்படுத்தினால் அந்த நிறுவன வேலையிலிருந்தே விலகிவிடத் தான் விரும்புவதாக சொல்லியுள்ளனர்.  இதற்கு காரணம், வீட்டிலிருந்தே வேலை செய்யும் போது கிடைக்கும் உபரி நேரத்தில் வேறொரு நிருவனத்துடன் தொடர்பு கொண்டு அல்லது ஒரு 'ப்ராஜெக்ட்' பெற்று அதை முடித்துக் கொடுப்பதால் கணிசமான பணம் பெறுவதே முக்கியக்  காரணம்.  தங்கள் திறமைகளை மேம்படுத்திக்கொள்ள  பயிற்சிக்கு அவர்களை அனுப்ப, அவர்கள் பணி செய்யும் நிறுவனம் தயங்கும் போது, தங்களால் அதற்குரிய பயிற்சி மேற்கொள்ள அல்லது அது குறித்த மேற்படிப்பு படிக்க இந்த உபரி நேரம் பயன்படுகிறது என்கின்றனர் ஊழியர்கள்.  

        அதே சமயம்,  அலுவலகம் வராமல் வீட்டிலிருந்தே பணியை தொடர விரும்பும் தங்கள் ஊழ்யர்களிடம் நம்பகத்தன்மை கொள்ள ஐ டி நிறுவங்கள் தயங்குகின்றன. வேலை சம்பந்தமாக தங்கள் நிறுவன கிளையண்டுகளுடன் ஊழியர்கள் தொடர்பு கொள்ள வேண்டியிருக்கும் நிலை உள்ளதால், தங்கள் நிருவனத்திற்கே தெரியாமல், தனியாக அந்த கிளையன்ட்டுகளுடன் அவர்கள் 'டீல்' செய்வ, நிறுவன ரகசியங்களை அடுத்த நிறுவனத்திடம் வெளியிடும் அபாயம் உள்ளதாக அஞ்சுகின்றன. 

        சமீபத்தில் கூட விப்ரோ நிறுவனம் இது போன்ற குற்றச்சாட்டுடன் சுமார் 3௦௦ ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.  இது போன்று 'மூன் லைட்டிங்' செய்வது , செய்யும தொழிலுக்கு எதிரான ஒழுக்ககேடானது , நிறுவனத்தின் மீது விசுவாசம் அற்ற தன்மை கொண்டது என்று கருத்துக்கள் உலா வருகின்றன.  ஆனால் இரண்டு இடத்தில் வேலை செய்வதை தடுப்பது என்பது ஒரு தொழிலாளியின் திறமைக்கும் அதிக ஊழியம் பெறுவதற்கும் எதிராக போடப்படும் 'முட்டுக்கட்டை' என்று நமது மத்திய தொழில்நுட்ப அமைச்சர் தெரிவித்துள்ளார்.

        இது போன்ற மாறி வரும் சூழலில்,  'ஸ்விக்கி' கூட தனது ஊழியர்கள் சில நிபந்தனைகளின் அடிப்படையில் இன்னொரு நிறுவனத்தின் கீழ் வேலை செய்யலாம் என்று அனுமதித்துள்ளது.  இவ்வாறு வேலை  செய்யும் நிறுவனத்திற்கு தெரிந்து அவர்கள் அனுமதியுடன் இனொரு இடத்தில் வேலை செய்யும்போது பிரச்சினை ஏதுமில்லை. ஆனால் ... 

        சமீபத்தில் கூட, பெங்களூரில்  ஒரே நபரின் பெயரில் இரண்டு நிறுவனங்களில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு வரவு பெறப்பட்ட பி .எப். பணத்தின் மூலமாகத் தான் சம்பந்தப்பட்ட ஊழியர் 'மூன் லைட்டிங்' செய்துள்ளார் என்பதே வெட்டவெளிச்சமாகியது.  இப்படி தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு தெரியாமல் இன்னொரு இடத்தில வேலை செய்வது சட்டப்படி  குற்றமாகுமா?அது வெளியே தெரியும்போது , சம்பந்தப்பட்ட நிறுவனம் தன மீது வழக்கு தொடர முடியுமா  என்ற கேள்வியும் எழுந்துள்ளது.   

        உண்மையில் நம்முடைய சட்டங்கள் இன்னமும் மேலை நாட்டு வளர்ந்து  விட்ட பொருளாதார சூழலுக்கேற்ப மாற வில்லை.  என்று தான் சொல்ல வேண்டும்.  இன்றைய தேதியில் அவ்வாறு 'மூன் லைட்டிங்' செய்வது குற்றமாக குறிப்பிட்டு சொல்லப்படவில்லை என்று தான் சொல்லவேண்டும். 

        "கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1947 எனப்படும் SHOPS AND ESTABLISHMENTS ACT 1947  இது குறித்து தெளிவாக ஏதும் சொல்லவில்லை.  இந்த சட்டத்தை ,  மாநிலங்கள் தங்களுக்கேற்றபடி இயற்றிக் கொள்ளலாம் என்ற  அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் இத சட்டம் ஒவ்வொரு விதமாக இயங்குகிறது. சில மாநிலங்கள் இந்த 'இரட்டை வேலை' தன்மையை தடை செய்கின்றன. இந்த வரிசையில்  டெல்லி சட்டமும் மும்பை சட்டமும் வருகின்றன என்றால், தமிழ் நாட்டு சட்டம் இதைப் பற்றி ஏதும் சொல்லவில்லை.  ஆனால் ஐ டி நிறுவனங்கள் இந்த சட்டத்தின் கீழ் வராது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.  

        மற்ற சட்ட வரிசையில், 'தொழிசாலைகள் சட்டத்தின்  பிரிவு 6௦ இதற்கு தடை விதிக்கிறது அதே போல தொழில் தகராறு சட்டம் என்று சொல்லக் கூடிய INDUSTRIES DISPUTES'ACT பிரிவு 2 மற்றும் தொழில் உறவுகள் சட்டம், 2௦2௦ எனப்படும் INDUSTRIAL RELATIONS CODE அதைத்தான் சொல்கிறது. 

       ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் காலத்தில், அதே போன்று செயல்படும் இன்னொரு நிறுவனத்தில்  வேலை செய்வது சரியானதல்ல என்றால் அந்த நிறுவனத்தில் இருந்து விலகிய பிறகு, இன்னொரு போட்டி நிறுவனத்தில் வேலைக்கு சேரலாமா? என்ற அடுத்த கேள்வியும் எழும். 

        இதற்கு துணையாக வருவது  இந்திய ஒப்பந்த சட்டத்தின் பிரிவு 27.  "ஒரே மாதிரி தொழிலை ஒருவர் மேற்கொள்ளக் கூடாது" என்று தடுக்கும் விதத்தில் போடப்படும் எந்தவொரு ஒப்பந்தமும் செல்லாதது " என்று அந்த சட்டப்பிரிவு சொல்கிறது.  

        அப்படியானால் ,  ஒரு நிறுவனத்தில் பல காலம் வேளை செய்து விட்டு, பின்னர் விலகி, அந்த நிறுவனத்தின் போட்டி நிறுவனத்தில் சேரும் நபர், இந்த நிறுவனத்தின் கிளையன்ட்டுகள். தொழில் ரகசியங்கள் போன்றவற்றை கொடுக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம் ? அவர்களை எப்படி தடுப்பது ? என்ற கேள்விக்கு பதில் தந்துள்ளது.  சமீபத்தில் கல்கத்தா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.  இது தான் இப்போது  எல்லோரின் கவனத்தையும் திருப்பியுள்ளது. 

         டாக்டர் சுதிப்தா பானர்ஜி எதிர் எல். எஸ். தாவர் கம்பனி என்ற இந்த வழக்கின் சுருக்கம் என்னவென்றால்:

         மனுதாரர்கள் ஒரு சட்ட நிறுவனத்தின் உயரிய பொறுப்பில் இருக்கின்றனர். பின்னர் வேலையிலிருந்து  விலகி சென்று அதன் போட்டி நிறுவனத்தில் சேருகின்றனர். அதை எதிர்த்து, தங்கள் நிறுவனத்தின் பணிக்காலத்தில் அவர்கள் கையெழுத்திட்ட ரகசிய காப்பு ஒப்பந்தத்திற்கு அது முரணாக உள்ளது என்றும்   க்ளையன்டுகள்  மற்றும் தொழில் ரகசியங்கள்  பலவற்றை அவர்கள் அங்கு கசிய விடும் நிலை உள்ளதால்  அவர்கள் பணி செய்த  நிறுவனம் நீதிமன்றத்தை அணுகி இடைக்கால உத்தரவை பெறுகிறது.  

        அதை எதிர்த்து டாக்டர் சுதிப்தா மற்றும் அவர் சகாக்கள் தாக்கல் செய்யும் மேல்முறையீட்டில் ,  தாங்கள் சுதந்திரமாக தொழில் செய்யும் உரிமையை தடுக்கும் எந்த ஒரு ஒப்பந்தமும் செல்லாது  என்று இந்த ஒப்பந்த சட்டப்பிரிவு 27ஐ சுட்டிக்காட்டுகின்றனர்.  இந்த வழக்கின் தீர்ப்பின்போது தான், இந்த சட்டபிரிவை ஆராயும் மாண்புமிகு உயர்நீதிமன்றம், ஒரு குறிப்பிட்ட காலவரையறை உள்ளவரை இந்த சட்டப்பிரிவு  பொருந்தாது என்று ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்டுகின்றனனர். 

        அதாவது பணியில் சேரும் ஒரு ஊழியர் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் அந்த நிறுவனத்தில் வேலை செய்யவேண்டும் என்று ஒப்பந்தத்தில் இருந்தும், அவர் இடையிலேயே பணியிலிருந்து விலகி விட்டாலும், அந்த காலக் கட்டம்  முடியும் வரையில், அவர் எந்த போட்டி நிறுவனத்திலும் வேலை செய்யக் கூடாது' என்ற நிபந்தனை கண்டிப்பாக பொருந்தக்கூடியதே என்று தீர்ப்பளித்துள்ளனர்.  


       அதே போல , இது போன்று நிறுவனத்தின் உயரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு அந்த நிறுவனத்தின் சகல விஷயங்களும் ..தொழில் முறை உட்பட..தெரிந்திருக்கும் என்பதால்,  அது குறித்து ரகசியத்தன்மை காக்கும் விதத்தில்  அதை வெளிபடுத்தா வண்ணம் செயல்படுமாறு தடை யுத்தரவு இட முடியும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர். 

        எனவே சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி, மூன் லைட்டிங் செய்பவர்  மீது பொதுவான  சட்ட நடவடிக்கை எடுக்க முடியாவிட்டாலும்,  அதற்கு வகை செய்யுமாறு  தற்போது நிறுவனங்களும், அது சம்பந்தப்பட்ட நிபந்தனைகளை ஊழியர்களின் பனி நியமனத்தின் போதே விதிக்கின்றன.   

    திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது !!


சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...