ஞாயிறு, 20 ஜூன், 2021

பெண்களுக்கு திருமணம் செய்யும் போது பெற்றோர் கொடுக்கும் நகை பணம் போன்றவற்றை ஏன் சட்டப்படி பதிவு செய்யக்கூடாது?

 ஒரு பெண்ணை திருமனம் செய்து கொடுக்கும் போது, நகை, பணம் கொடுக்கும் வழக்கம் எப்படி வந்தது?

இத்தனைக்கும் சிலபதிகாரத்தில் கண்ணகிக்கு கோவலன் தாலி கட்டியதாக பதிவு இல்லை..

பொய்யும் தவறுகளும் ஏற்பட்ட பிறகுதான் திருமணத்தில் பல சடங்குகளை ஏற்படுத்தினர் என் றும் தொல்காப்பியம் கூறும். அங்கும் தாலி பற்றிய குறிப்பு இல்லை.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

அய்யர் யாத்தனர் கரணம் என்ப’

- கற்பியல்-4

தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக் குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் இடம்பெறாத தாலி, பெரியபுராணம், கம்பராமாயணம் முதலிய பிந்தைய கால இலக்கியங்களில் தான் இடம்பெற்றது.

இதன் மூலம், இந்தத் தாலி கட்டுவதானது. ‘இந்தப் பெண், இந்த மாப்பிள்ளையினுடைய சொத்து’ என்கிற அறிகுறிக்காகத்தான். வந்தது என்பதும் தெரிகிறது.

பின்னர் ஒரு பெண்ணை மணக்க தகுதியான மணமகனை தேர்ந்தெடுக்க வீர விளையாட்டுகள் நடத்தப்பட்டன..அதே போல இந்த பெண் தனக்கே மணமுடிக்க வேண்டும் என்று பெண்ணின் பெற்றோருக்கு பரிசு (பரிசம் போடுவது) கொடுத்து, மணமுடிப்பதும் இருந்திருக்கிறது.

ஆனால் இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மாறி, பெண் வீட்டார் மணமகள் வீட்டினருக்கு பணம், பொருள் கொடுப்பது என்று மாறி, அது நாளடைவில் கட்டாயமாக மாறி, கொடுக்காத போது, அந்த பெண்ணை கொடுமை செய்யும் நிலைக்கு போனதாலேயே, வரசுதட்சனை தடுப்பு சட்டம், 1961 கொண்டு வரப்பட்டது.

"வரதட்சணை" என்ற வார்த்தை எந்த ஒரு பொருளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ திருமண பந்தத்தில் ஈடுபடும் ஒரு தரப்பினரிடமிருந்து மற்றொரு தரப்பினருக்கு கொடுக்கப்படுவது, ஒரு தரப்பினரின் பெற்றோரோ, வேறு நபரோ மறுதரப்பினருக்கு திருமணத்தின் போதோ, திருமணம் முடிந்த பின்னரோ கொடுப்பது என்று இச்சட்டத்தின் படி கூறப்படுகிறது.

இரண்டு தடவை இந்த சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும், வரதட்சணை ஒழியவில்லை, இலை மறைவு காயாக இருக்கிறது என்பதை தான் இந்த கேள்வியும் உணர்த்துகிறது.. அதை விட , இந்த நகை, பணத்தை மணமகன் வீட்டினருக்கு கொடுப்பது தான் "வரதட்சணை" என்பதோ, அவ்வாறு கொடுப்பது பெறுவது, குறைந்தது 5 வருஷம் "களி" தின்ன வைக்கும்ன்னும் தெரியாம தான் நம்ம மக்கள் இருக்கிறங்குறாங்கன்னும் தெரியுது.

ஆனா பெண்களுக்கு திருமணத்தின்போது, பிறகு நடக்கும் விசேஷங்கள் போதும் அவளுக்கு பெற்றோரால் போடப்படும் நகையும், பணமும் , அவளுக்கு கொடுக்கப்படும் பரிசு என்பதால், இந்த சட்ட வரையறைக்குள் வராது.

இஸ்லாமிய திருமணத்தின் போது பெண்களுக்கு கொடுக்கப்படும் மெஹர் வரதட்சணை ஆகாது. ஏனென்றால் அதுவும் மணமகனால் பெண்ணுக்கு கொடுக்கப்படும் பரிசு அது..

தங்கள் மகளை இன்னொரு வீட்டின் "மரு"மகளாக அனுப்பும் போது, பெற்றோர் அவளுக்கு பரிசு கொடுத்து அனுப்புவதோடு நில்லாமல், தொடர்ந்து ' சீர்' செய்வதையும், அவர்களுக்கு பின்னும், பிறந்த வீட்டோடு பெண்ணின் தொடர்பு தொடர்ந்து இருக்க, அவள் பிள்ளை பிறக்கும்போது, அவள் சகோதரனுக்கு, "தாய் மாமன்" என்ற உயரிய அந்தஸ்து கொடுக்கப்பட்டது..

இவை இரண்டு குடும்பமும், தண்டவாள பாதை போல தொடர்ந்து பக்கம் பக்கசமாக பற்றியும் பற்றாமலும் இருக்கத் தான்..

ஆனால் இப்போது மட்டும், இந்த நகை, பணத்தை பதிவு செய்ய வேண்டிய எண்ணம் ஏன் ஏற்பட்டது?

பெண்களுக்கும் அவர்கள் பிறந்த வீட்டு சொத்தில் சம உரிமை உள்ளது என்று சட்டத்திருத்தம் வந்ததில் இருந்து தான்..

தன் சகோதரியையும் "பங்காளி"யாக நினைக்கும் நிலை வந்ததால்!!

அதே சமயம், தன் மனைவிக்கு அவள் வீட்டில் பணமோ நகையோ போட்டு தான் திருமணம் செய்து வைத்தார்கள்.என்பதை வாகாக மறந்ததேன்!!

அவள் பிறந்த வீட்டில் அவளுக்கு சொத்உரிமை உள்ளதே!!

"நான் அதை கேட்கமாட்டேன் என்பதால், என் சகோதரியும் என்னிடம் கேட்கக்கூடாது" என்பது…

"நான் சைவம் சாப்பிடுவேன் என்பதற்காக, மற்றவரும் சைவம் சாப்பிடவேண்டும்" என்று கட்டாயப் படுத்துவது போல!!

அதே போல, மனைவியோ சகோதரியோ, சொத்து உரிமை என்பது அவள் தனிப்பட்ட உரிமை. அதை நாம் நீக்கவோ குறைக்கவோ, அதிகாரம் இல்லை.

இதில் இன்னொன்றும் உள்ளது..சொத்தில் பங்கு வாங்கும் பெண்களுடன், சகோதரர்கள் தொடர்பை முறித்துக் கொள்வதையும் பார்க்கிறேன்.

"அது தான் பங்கு வாங்கிக்கொண்டாளே.. இனி சீர் வேற செய்யணுமாக்கும்" என்பவர்கள் தான் அதிகம்..

"வாங்கலைனா நாங்களா பார்த்து ஏதாவது கொடுப்போம்".உறவும் நீடிக்கும்.இப்போ அப்படியில்லை..அவளும் ஒரு பங்காளி..பங்கு பிரிச்சு குடுத்தாச்சு..உறவும் முடிச்சாச்சி""ன்னு பேசும் பேச்சுக்களை கேட்க நேருகிறது..

இது "நானாக கொடுப்பேன்..ஆனால் உரிமையோடு கேட்டால் தடுப்பேன்".என்னும் ஆண் ஆதிக்க மனோபாவத்தின் எதிரொலி தான். கூட பிறந்த அண்ணனுக்கும் தம்பிக்கும் உள்ள உரிமை, அக்காவிற்கும் தங்கைக்கும் கிடையாதா?

எங்கிருந்தோ வருபவளை நம் சகதர்மிணி ஆக்கி, நம் சொத்துக்கு அவளும் உரிமையாளராக ஆகும்போது, நம் இரத்த உறவை?

இது தானாக நாமாக செய்துருக்க வேண்டியது..இப்போது உரிமையாக மாறியுள்ளது" என்ற மாற்று சிந்தனை கொண்டால், மனவேற்றுமை மறையும்.

அப்படி உறவை ஒதுக்கி சேர்க்கும் சொத்து தான் சுகத்தை கொடுக்குமா?

ஒவ்வையாரின் நல்வழியை கேளுங்கள்

"பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைக்கும்

கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்

காவிதான் போயினபின் பாரே யநுபவிப்பார்

பாவிகாள் அந்தப் பணம்."

பாடுபட்டு தேடிய சொத்திற்கே இந்த நிலை என்றால், பெற்றோர் மூலம் வரும்போது??

இந்த சட்டம் கொண்டு வந்த உரிமை கண்டு பதறும் முன்,இது ஏன் கொண்டு வரப்பட்டது என்று யோசித்தோமா?

இந்த முதல் படத்தில் உள்ள நிலையில் தான் பெண் கீழே இருந்தாள்!!
அவளுக்கு சம உரிமை என்றது இரண்டாம் படம்..ஆனாலும் சமூக மாற்றமில்லை!!
அதனால். அவளுக்கு "பங்கு" கொடுக்கும் நிலை வந்ததை மூன்றாம் படம் சொல்கிறது.

இது சரியில்லையே, பெண்ணுக்கு மட்டும் இத்தனை சலுகையா என்கிறோமா? 
அப்படியெனில் நான்காம் படத்தில் உள்ளது போல ஆண், பெண் வேற்றுமை நீங்க, முன்னால் இருக்கும் எல்லா தடைகளையும் நீக்குவோம். அது நம் கையில் தான் உள்ளது!!

பாருங்களேன்..கூகிள் கூட தன் பங்குற்கு, இந்த பாலின வேற்றுமையை நீக்க முயற்சி எடுத்துள்ளது.

இனி எந்த "சொல்'லும் குறிப்பிட்ட பாலினரை குறிக்காமல், பொது பெயராகத் தான் மாற்றியுள்ளது!!

நம் பங்குக்கு, நம் வீட்டில் இருந்து ஆரம்பிப்போம்...
அவரவர்க்கு உண்டான உரிமையை கொடுப்போம் மட்டுமல்ல..தடுக்காமலும் இருப்போம்!!

எனவே சிந்தியுங்கள் தோழர்களே!!

.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...