செல்லுபடியாகும் ஒப்பந்தத்தின் அத்தியாவசிய கூறுகள்:
பிரிவு 10 ன் படி, ஒப்பந்தம் செய்யத் தகுதியுள்ள தரப்பினரின் சுதந்திரமான ஒப்புதலோடு, ஒரு சட்டப்பூர்வ மறுபயனுக்காக, 'செல்லாதவை' என்று வெளிப்படையாக சொல்லப்படாத சட்டப்பூர்வமான நோக்கத்தோடு செய்யப்படும் அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களாகும். ஒரு உடன்படிக்கை ஒப்பந்தமாக மாற, பின்வரும் அத்தியாவசிய கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும்;
அ}
முனைதல் மற்றும் ஏற்றல் :: ஒரு உடன்படிக்கைக்கு இரண்டு தரப்புகள் இருக்க வேண்டும். ஒரு தரப்பு கொடுக்க முன் வரவும், அதை மற்ற தரப்பு ஏற்கவும் வேண்டும். கொடுக்க
முன் வருவதற்கான அம்சங்கள் தெளிவாகவும் நிபந்தனையின்றியும் இருக்க வேண்டும். அதை ஏற்றலும், முன்வரும்போது சொல்லப்பட்ட முறையிலேயும்
அந்த காலத்திற்குள்ளும் இருக்க வேண்டும்.
ஆ) சட்டப்பூர்வமான உறவு
ஏற்படுத்தும் எண்ணம்
: ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்களுக்கு இடையில் ஒரு சட்டப்பூர்வ
உறவு ஏற்படுத்தும் எண்ணம் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தரப்பில் அந்த எண்ணம்
இல்லாத பட்சத்தில், அவர்களுக்கிடையில் எந்த ஒப்பந்தமும் இல்லை. சமூக அல்லது தொழில்முறையல்லாத எந்த உடன்படிக்கையும் ஒரு
சட்டாபூர்வ உறவுமுறையை ஏற்படுத்தும் எண்ணம் கொண்டதாக இருக்காது என்பதால் அவை ஒப்பந்தங்கள் அல்ல.
இ) சட்டப்பூர்வமான
மறுபயன்: மறுபயன் என்பதற்கு பொருள் ' பிரதிபலன்;. சட்டத்தால் அமுல்படுத்தக்கூடிய ஒரு
உடன்படிக்கைக்கு ஆதரவாக மறுபயன் இருக்க வேண்டும்.
மறுபயன் என்றால் ஒரு தரப்பினரிடமிருந்து மற்றொரு தரப்புக்கு ஒரு பலன்
அல்லது நன்மை மாற வேண்டும். பிரதிபலனாக
ஒன்றும் பெறாத நிலையில், ஒன்றை
செய்வதற்கான வாக்குறுதியை பொதுவாக சட்டம் அமுல்படுத்துவதில்லை. மறுபயன் என்பது
பணமாகவோ பொருளாகவோ இருக்க வேண்டிய தேவை
இல்லை. அது ஒரு செயலாகவோ அல்லது செய்யாமல் விடுத்தலாகவோ அல்லது ஏதேனும் ஒன்றை செய்யவோ செய்யாமல்
இருக்கவோ கொடுக்கும் வாக்குறுதியாகவும் இருக்கலாம். அது இறந்த காலமாகவோ, நிகழ்காலமாகவோ
அல்லது எதிர்காலமாகவோ கூட இருக்கலாம். ஆனால் அது உண்மையானதாகவும்
சட்டப்பூர்வமானதாகவும் இருக்க வேண்டும்.
ஈ) ஒப்பந்தம் போடும் தரப்பினரின் தகுதி:
ஒரு சட்டப்பூர்வமான அல்லது செல்லத்தக்க
ஒப்பந்தத்தை போடக்கூடிய தகுதி கொண்டவராக ஒப்பந்தத்தின் தரப்பினர்
இருக்க வேண்டும். முதிர்மை அடைந்த, தெளிவான மனநிலையுள்ள மற்றும் சட்டத்தால்
நிராகரிக்கப்படாத எந்த நபரும் ஒப்பந்தம் போடத் தகுதியானவர் ஆவார். இளையர், பித்துப்பிடித்தவர்,
குடிபோதையில் இருப்பவர போன்றவை ஒப்பந்தம் போடும் தகுதியில் குறைபாட்டை
ஏற்படுத்தும்,
உ) சுதந்திரமான மற்றும் நேர்மையான ஒப்புதல் : ஒரு ஒப்பந்தம் செல்லத்தக்கதாக வேண்டுமானால்,
அதன் தரப்பினருக்கிடையே சுதந்திரமான மற்றும் நேர்மையான ஒப்புதல் இருக்க வேண்டும். இங்கே
ஒப்புதல் என்பது ஒரு ஒப்பந்தத்தில் நுழைவதற்கான விருப்பம். எனவே, ஒப்பந்தத்தின்
இரண்டு தரப்பினரும் எந்தவொரு வெளிப்புற சக்தியின் தாக்கம் இல்லாமல் சுயமாக தங்கள்
ஒப்புதலை கொடுக்க வேண்டும். வற்புறுத்தல்,
தகாத செல்வாக்கு, திரித்துக் கூறுதல் மற்றும் மோசடியாக அல்லது தவறாக ஒப்புதல்
பெறப்படாத போது, அது சுதந்திரமானது எனப்படும்.
ஊ) சட்டப்பூர்வமான நோக்கம்:
உடன்படிக்கையின் நோக்கம் சட்டப்பூர்வமானதாக இருக்க வேண்டும். அந்த நோக்கம்
சட்ட விரோதமானதாகவோ ஒழுக்கக் கேடானதாகவோ பொதுக் கொள்கைக்கு எதிரானதாகவோ இருக்கக்
கூடாது. ஒரு உடன்படிக்கை இது போன்ற
ஏதேனும் ஒரு குறைபாட்டுடன் இருந்தால் அது சட்டத்தால் அமுல்படுத்தப்பட மாட்டாது.
எ) செல்லாதது எனப்படாத உடன்படிக்கை :சில செயல்கள் வெளிப்படையாக செல்லாதவை
எனப்பட்டுள்ளன. ஒரு ஒப்பந்தத்திற்குள் நுழைய வேண்டுமாயின், அந்த நாட்டில் அமுலில்
உள்ள சட்டத்தால் அந்த உடன்படிக்கை, செல்லாதது என்று வெளிப்படையாக
அறிவிக்கப்பட்டிருக்கக் கூடாது. உ.தா. .. இளவருடன் உடன்படிக்கை
ஏ) உறுதித்தன்மை மற்றும் செயல்திறனுக்கான சாத்தியக்கூறு: ஒரு உடன்படிக்கை தெளிவற்றதாக இல்லாமல்,
உறுதித்தன்மையோடு இருக்க வேண்டும்.
சாத்தியக்கூறு தெளிவற்றதாகவும் அதன் பொருளை அறிந்துக் கொள்ள முடியாமலும் இருந்தால்
அதை அமுல்படுத்த முடியாது.
ஐ) சட்ட சம்பிரதாயங்கள்:
ஒரு ஒப்பந்தம், சொல்லப்பட்ட அல்லது எழுதப்பட்ட வார்த்தைகளாலோ இருக்கலாம். சட்ட
விளைவுகளைப் பொறுத்த வரையில், எழுத்தால் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்திற்கும் வாய்
வார்த்தையால் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை.
இருந்தாலும், தரப்பினரின் நலுனுக்காக ஒப்பந்தம் எழுதப்பட்டிருக்க வேண்டும். எனவே ஒரு
உடன்படிக்கையை சட்டத்தால் அமுல்படுத்த வேண்டுமானால், , ஒரு ஒப்பந்தம்
எழுதப்பட்டிருக்க வேண்டும், அல்லது சாட்சிகளின் முன்னிலையில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற சட்டத் தேவை இருக்கும் போது அவை நிறைவேற்றப்பட வேண்டும்.
இனி ஒப்பந்தத்தில் உள்ள
வகைகளைப் பார்ப்போம்.
(தொடரும் )
தொடர்புடைய முந்தைய பதிவுகள்
1இந்திய ஒப்பந்த சட்டம் பகுதி 1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக