இந்திய அரசியலமைப்பு சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திய அரசியலமைப்பு சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 ஜூன், 2021

உச்சநீதிமன்ற தீர்ப்பை நாடாளுமன்றம் நிறுத்த முடியுமா?

 உச்ச நீதிமன்றம் இன்னமும் வேளாண் சட்ட விவகாரத்தில் தீர்ப்பு வழங்கவில்லை. இடைக்கால தடை மட்டுமே வழங்கியுள்ளது.

சரி பொதுவாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாளுமன்றம் நிறுத்தும் அதிகாரம் கொண்டதா?

இதை தெரிந்து கொள்ளும் முன், நம் ஜனநாயக அமைப்பு முறை பற்றி தெரிவதும் அவசியம் .

ஜனநாயகத்தின் மூன்று தூண்களாகிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகார வர்க்கம், சட்டங்களை இயற்றும் சட்டமன்றம், மற்றும் சர்ச்சைகளைத் தீர்க்கும் நீதித்துறை - தனித்தனியாக செயல்படுகின்றன. ஒவ்வொன்றும் அதனதன் அதிகார வரம்பில் செயல்படுமாறு உள்ள இந்த கோட்பாடு இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாகும்.

உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றங்களுக்கு உள்ள சிறப்பு அந்தஸ்து என்ன?

அரசியலமைப்பில் கோட்பாட்டிலிருந்து விலகி எந்தவொரு சட்டமும் நிறைவேற்றப்படக்கூடாது, திருத்தமும் செய்யப்படக்கூடாது என்ற அடிப்படையில், சட்டமன்றம் மற்றும் நிர்வாகத்தின் செயல்பாட்டை, நீதித்துறை, மதிப்பாய்வு செய்கிறது.

படிமப்புரவு கூகிள்

உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றங்களுக்கு உள்ள வரையறை என்ன?

"நீதிமன்றங்கள் அரசாங்கத்தை நடத்த முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீதித்துறை ஒரு எச்சரிக்கை மணியாக மட்டுமே செயல்பட வேண்டும்; "[1]

அரசியலமைப்பு சட்டம், தன் குடிமக்களுக்கு உறுதி செய்த உரிமைகள் குறித்து "செக் " வைத்தது என்றால் தி அரசியலமைப்பு (இருபத்தி நான்காவது திருத்தம்) சட்டம், 1971 தான்.

அரசியலமைப்பு சட்டத்தின் எந்தவொரு ஏற்பாட்டையும் திருத்துவதற்கு பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்பதை வெளிப்படையாக சொல்வதற்காக அதன் பிரிவு 368 ஐ திருத்தியது. அதற்கு, ஜனாதிபதி தனது ஒப்புதலை வழங்குவதும் கட்டாயமாக்கியது .

இந்த திருத்தங்கள் நம் நன்மைக்கானதா?

இவை அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள குடிமக்களின் பாதுகாப்புகளை வலுப்படுத்துவதற்காக இயற்றப்பட்டவையா என்றால் எதிர்மறையாகத் தான் சொல்லவேண்டும்.

வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின் முதல் திருத்தமே எதிர்காலத்திற்கான தொனியை கூறுவதாக அமைத்தது.

"நோக்கங்கள் நன்றாக இருந்தால்", அரசாங்கத்தின் மீதான தடைகளை நீக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று தெளிவாக இருந்தது.

தனிநபர் உரிமைகளை பாதுகாக்க அரசியலமைப்பு சட்டம் கொடுத்துள்ள உத்தரவாதங்களை நிலைநிறுத்துவதன் மூலம் நீதிமன்றங்கள் அரசாங்கத்தின் செயல்பாடுகளை செல்லாததாக ஆக்கும் போதெல்லாம் , ​​ அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் அந்த தடையை நீக்கி பாராளுமன்றம் அதற்கு பதிலளித்தது. பதிலளித்தும் வருகிறது.

ஒன்று கவனித்தீர்களா?

ஒரு அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில், எதிர்ப்பாளர்கள் அரசியலமைப்பின் நகல்களைத் தான் எடுத்து வருகின்றனர்.

ஏன்?

அது மட்டும் தான் அவர்கள் உரிமைகளை மீட்டுத் தர முடியும் என்று நம்புவதே..

கடந்த எழுபது ஆண்டுகளில் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் நடத்திய பயணத்தை கூர்ந்து கவனித்தோமானால், நமது அரசியலமைப்பு சட்டம் நமக்கு கொடுத்த பெரும்பான்மையான உரிமைகள் இழப்பு, மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகளைப் பாதுகாப்பதற்காக நடந்த போராட்டம். ஆகியவை புரியும்.

அரசியலமைப்பு சட்டம் நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடனேயே, அரசாங்கத்தின் பல்வேறு கொள்கைகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று கண்டறியப்பட்டு எதிர்க்கப்பட்டன. கம்யூனிஸ்டான ரோமேஷ் தாப்பர் வெளியிட்ட ஆங்கில வார இதழ் கிராஸ் ரோட்ஸ் அரசாங்கத்தை விமர்சித்ததற்காக சென்னையில் தடை செய்யப்பட்டது. முஸ்லீம்-விரோத உணர்வுகளைத் தூண்டுவதாக வெளியீட்டாளர் பிரிஜ் பூஷனின் அமைப்பாளர் டெல்லியில் தடை செய்யப்பட்டார். இதை எதிர்த்து வழக்கு போடப்பட்டபோது, ​​மாண்புமிகு உச்சநீதிமன்றம் தாப்பர் மற்றும் பூஷனின் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை உறுதிசெய்ததுடன், “பொது ஒழுங்கை” பாதுகாப்பது பிரிவு 19 (2) இன் கீழ் சுதந்திரமான பேச்சுக்கான விதிவிலக்குகளில் ஒன்றல்ல என்று கருதினர்.

நில சீர்திருத்தங்களை நிறைவேற்றுவது மற்றொரு சிக்கல். ஜமீன்தாரி ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, சில மாநிலங்கள் பணக்கார ஜமீன்தார்களுக்கு தங்கள் நிலத்தை கையகப்படுத்துவதற்காக குறைந்த இழப்பீடு வழங்கின. இது சில உயர்நீதிமன்றங்களால் அரசியலமைப்பு சட்டத்தின்14 வது பிரிவுக்கு முரணானது என்று கூறி, பணக்கார ஜமீன்தார்களை மீண்டும் பாகுபாடு காட்ட அனுமதிக்காமல், சட்டத்தின் கீழ் சமமான பாதுகாப்பை உறுதி செய்தன,

அரசும், பஸ் போக்குவரத்து வழிகள் போன்ற சேவைகளில் மாநில ஏகபோகங்களை தேசியமயமாக்க முயற்சித்த போது தனியாரின் வாழ்வாதாரத்திற்கான உரிமையை அவை பறித்ததால், வழக்கை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

அடிப்படை உரிமைகளை கடுமையாக அமல்படுத்திய நீதிமன்றங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அப்போதைய தற்காலிக பாராளுமன்றம் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தியது. கருத்துத் சுதந்திரத்திற்கான உரிமைக்கான “பொது ஒழுங்கு” மற்றும் வாழ்வாதாரத்திற்கான உரிமைக்கான விதிவிலக்குகள் போன்ற விதிவிலக்குகளில், முதல் திருத்தம் நடந்தது..

அப்போது ஜமீன்தாரிகள் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தனர், மேலும் அரசியலமைப்பு சட்டத்தின் 14 வது பிரிவு உத்தரவாதம் அளித்த சமமான பாதுகாப்பை பலவீனப்படுத்துவது தவறான ஆலோசனையாகக் கருதப்பட்டது. எனவே, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான 31வது பிரிவுக்கு விதிவிலக்குகளைச் சேர்த்ததோடு மட்டுமல்லாமல் , ஒன்பதாவது அட்டவணை எனப்படும் 31 பி பிரிவு ஒன்றை அரசியலமைப்பு சட்டத்தில் புதிதாக உருவாக்கியது.

இந்த ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள எந்த வொரு சட்டமும் அரசியலமைப்பு சட்டத்திற்கு அப்பாற்பட்டது மற்றும் அடிப்படை உரிமைகளை மீறியிருந்தாலும் கூட, அவை, நீதித்துறையின் மறு ஆய்விலிருந்தும் பாதுகாக்கப்படுகிறது.

நிலச் சீர்திருத்தத்தை செயல்படுத்தும் 13 சட்டங்களின் பட்டியலாகத் தொடங்கப்பட்டவை, தேசியமயமாக்கல், நாணயக் கட்டுப்பாடுகள், விலை மற்றும் அளவு கட்டுப்பாடுகள் மற்றும் அவசரகாலத்தின் அதிகப்படியான செயல்களைச் செயல்படுத்தும் 282 அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான , சட்டங்களாக விரிவடைந்துள்ளன.

எப்போதெல்லாம் அரசாங்கத்தின் சோசலிச கொள்கை மற்றும் நலத்திட்டங்களை கட்டுப்படுத்துவது போல, இந்த அடிப்படை உரிமைகள் காணப்பட்டபோது, ​​திட்டங்கள் அல்ல …அடிப்படை உரிமைகள் அடிக்கடி திருத்தப்பட்டன. மேலும், சோசலிச திட்டமிடலுடன் தனிநபர் உரிமைகள் மோதும்போதும், ​​பாராளுமன்றம் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி, அதை கொள்கைக்கு ஏற்றவாறு மாற்றியது

இந்த அரசியலமைப்பு சட்டம், தற்போது 117,000 க்கும் மேற்பட்ட சொற்களைக் கொண்டுள்ளது (450 ஆர்டிகில்கள் மற்றும் 104 திருத்தங்கள்).

இப்போது சொல்லுங்கள்…

உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாராளுமன்றம் நிறுத்த வேண்டுமா?


அடிக்குறிப்புகள்


அரசியல் அமைப்பு சட்ட வடிவின் உண்மை நகலில் , ராமரின் படம் இருந்தது என்பது உண்மையா?

 அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரதியில் உள்ள மிகச்சிறந்த ஓவியங்கள், ஓவியர் நந்தலால் போஸ் அவர்களால் கொடுக்கப்பட்ட கலைப்படைப்பு.. ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு ஃபிரேம் போட்டது போல அமைத்தும், ஒவ்வொரு பகுதியின் தொடக்கத்திலும், நந்தலால் போஸ் நமது தேசிய கலாசார அனுபவத்திலிருந்து சில காட்சிகளை சித்தரித்திருந்தார்.

வேத காலத்தை குறிப்பிடும் வகையில், குருகுலத்தின் ஒரு காட்சி , ராமர், சீதா மற்றும் லட்சுமணன் நாட்டிற்குத் திரும்புவதும்,

கிருஷ்ணர் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசிப்தும் போன்ற காட்சிகள் உள்ளன.

அவை மட்டுமல்ல புத்தர் மற்றும் மகாவீரரின் வாழ்க்கை சித்தரிப்புகள் உள்ளன.

அதைத் தொடர்ந்து அசோகா மற்றும் விக்ரமாதித்யா நீதிமன்றங்களின் காட்சிகள் உள்ளன.

நமது வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த அக்பர், சிவாஜி, குரு கோபிந்த் சிங்,

திப்பு சுல்தான், மற்றும் லட்சுமிபாய் ஆகியோர் படங்களும், சுதந்திர இயக்கத்தின் போது மகாத்மா காந்தியின் தண்டி அணிவகுப்பு

மற்றும் அமைதி வேண்டி அவர் நடத்திய நோகாலி சுற்றுப்பயணம் மற்றும் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் வெளிநாட்டிலிருந்து மகாத்மாவுக்கு வணக்கம் செலுத்துவதும்,

இந்தியாவின் விடுதலைப் போரில் அவரது ஆசீர்வாதங்களைக் கோருவதும் சித்தரிக்கப்பட்டுள்ளன.

அவை மட்டுமா …நமது நிலப்பரப்பின் அழகிய விளக்கங்களும் நமது கலையின் சில தலைசிறந்த படைப்புகளும் உள்ளன. ஒவ்வொரு பக்கத்தின் பார்டர்களுக்கும் பயன்படுத்தப்பட்ட அலங்காரங்கள் கூட சாந்திநிகேதன் பாணியை எடுத்துக்காட்டுகின்றன.

ஆனால் இவை அனைத்தும் அரசியல் அமைப்பு சட்டத்தின் பகுதியாக இல்லாமல். இந்திய கலாச்சாரத்தின் உதாரணங்களாகத் தான் பயன்படுத்தப்பட்டன..

அதே சமயத்தில், இந்த அசல் அரசியலமைப்பு சட்டத்தின் உண்மை நகலை பிரேம் பெஹாரி நாரியன் ரைசாடா என்பவரால் தன் கைப்பட காலியோஃக்ராபி முறையில் எழுதப்பட்டது என்பதையும் நினைவு கூர்வோம்.. அவர் பாரசீக மற்றும் ஆங்கிலம் ஒரு பிரபலமான அறிஞர் (தாத்தா) குடும்பத்தில் டபிறந்தவர். இந்த பணியைப் பெற ஒரு பென்னி கூட சம்பளமாக அவர் பெறவில்ல. அதற்கு பதில் தன் பெயரை ஒவ்வொரு பக்கத்திலும் இட்டுக்கொள்ள அனுமதி பெற்றுக் கொண்டார்.

அரசியல் சட்ட உண்மை நகலை பார்க்க ஆவலா? இங்கே பாருங்கள்..

https://dl.wdl.org/2672/service/2672.pdf

தனது அம்மாவின் சொத்தை பாகபிரிவினை மூலம் பெற்ற ஒருவர் அதை விற்கும்போது, வயது வந்த அவரது மகன் மற்றும் மகள் கையெழுத்து இல்லாமல் விற்கபட்டால் எதிர்காலத்தில் இதில் ஏதேனும் பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கிறதா? சட்டம் சொத்தை வாங்கியவரை பாதுகாக்குமா?

 அம்மாவின் சொத்தை பாகப்பிரிவினை மூலம் பெற்றாலும், அதற்கு . அவரே முழு உரிமையாளர்.

தாத்தாவின் சொத்தில் தான் பேரப்பிள்ளைகளுக்கு உரிமை உண்டே தவிர, பாட்டியின் சொத்தில் அல்ல.அதை அவர் விருப்பம் போல பிரித்து கொடுக்கும் போது, அந்த பங்கினை பெற்ற நபரும் முழு உடிமையாளரே.

இதற்கென்று மகன், மகள் கையெழுத்து பெற வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அவர் பெற்றது பரம்பரை சொத்தில் பங்கு அல்ல..

தாத்தாவின் சொத்து மற்றும் பாட்டியின் சொத்து இரண்டின் மீது பேரப்பிள்ளைகளுக்கு ஏற்படும் உரிமை வேறானது. முன்னது அவர்கள் கருவில் இருக்கும்போதே உரிமை கிடைக்கிறது. பின்னது, அவர் இறந்தபின், அவர் பிள்ளைகள், கணவரில்லாத போது, உரிமை கிடைகிறது.

ஒரு இந்து விதவையின் பெற்றோர் தரப்பில் உள்ள குடும்ப உறுப்பினர்களை ‘அந்நியர்கள்’ என்று கருத முடியாது என்றும், அவரது சொத்துக்கள் இந்து வாரிசு சட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழங்கப்படலாம் என்றும் , சமீபத்தில் மான்புமிகு உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் கூறியுள்ளது..

நீதிபதிகள இந்து வாரிசுரிமை சட்டத்தின் பிரிவு 15 (1) (ஈ) ஐக் குறிப்பிடுகையில், , இந்த பிரிவை ஆய்வு, செய்கையில், தந்தையின் வாரிசுகளும், சொத்தின் வாரிசுளாக குறிக்கிறது, என்றும், அவர்கள் வெற்றிபெற முடியும். ஒரு பெண்ணின் தந்தையின் வாரிசுகள் என்று வாரிசுரிமை உள்ள நபராக சேர்க்கப்படும் போது, ​​அவர்கள் அந்நியர்கள் என்றும், குடும்பத்தின் உறுப்பினர்கள் அல்ல, என்றும் கருத முடியாது, ”என்று பெஞ்ச் கூறியது.

அப்படி என்ன தான் அந்த சட்டப் பிரிவு 15 சொல்கிறது?

பிரிவு 15 - உயில் எழுதாமல் ஒரு பெண் இறக்கும்போது, அவள் சொத்து பின்வரும் வரிசையில் அவள் வாரிசுகளை போய் சேரும்:

அ.) மகன் மற்றும் மகள்(முன்னரே இறந்த மகன்/மகளின் வாரிசுகள் உட்பட) மற்றும் கணவர்; (ஆ) கணவரின் வாரிசுகள் மீது; (இ) தாய் மற்றும் தந்தை மீது; (ஈ) தந்தையின் வாரிசுகள் மீது; (இ) கடைசியாக, தாயின் வாரிசுகள் மீது. ”

குழந்தை இல்லாத விதவை ஒருவர் தனது சகோதரரின் மகனுக்கு ஆதரவாக எழுதிய செட்டில்மெண்ட் பத்திரம் செல்லும் என்று அனுமதித்த ஐகோர்ட் மற்றும் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இந்த வழக்கில், ஜக்னோ என்ற பெண் தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு அவரின் சொத்திற்கு முழுமையான உரிமையாளரானார்.

குழந்தை இல்லாத அவர் ஒரு குடும்ப செட்டில்மெண்ட் மூலம், தனது சகோதரின் மகன்களுக்கு ஆதரவாக சொத்தை எழுதினார். அதை எதிர்த்து அவரது கணவரின் சகோதரரின் குழந்தைகள் போட்ட வழக்கில் தான மேற்கொண்ட தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆணும் பெண்ணும் சமம் என்று கூறும் சமுதாயம் ஏன் சில விடயங்களில் ஆண்களுக்கு அதிகாரத்தை கொடுத்து பெண்களை அதிகாரத்தைக் குறைத்து நடத்துகின்றது? இதுவா பெண் சுதந்திரம்?

 மகளிர் தினக் கொண்டாடம் எல்லாம் ஒய்ந்து இருக்கும் இப்போது தான் .இந்த கேள்வி என் கண்ணில் பட்டது!!

உண்மையில் ஆணுக்கு சமமாகத் தான் பெண் வைக்கப்பட்டு உள்ளாளா?

உலக வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, தொழிலாளர் எண்ணிக்கையில் பெண்கள் 20 சதவீதத்திற்கு மேல் உள்ளனர். நாம் 21 ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம், ஊதியம் அல்லது வாய்ப்புகளின் அடிப்படையில் சட்டம் தயாரிக்கப்பட்டதிலிருந்து இருந்த சூழலும் நிறையவே மாறிவிட்டன.

சரி… சமூக ரீதியாக ? சிறுமி பாலியல் கொடுமை என்பது வரை வந்து இங்கும் சம உரிமை இல்லை என்பது நிதர்சனம்.

மண்ணுக்கும் பெண்ணுக்கும் அடித்துக்கொண்டு இருக்கும் சூழ்நிலையில், வாரிசு சட்ட ரீதியாகவாவது. சம நிலை உள்ளதா?

வேறு எங்கும் போக வேண்டாம். ..அந்த பெண்ணின் கையில் உள்ள மண்ணை பொறுத்தாவது?

இந்து வாரிசு சட்டம் 1956 ..இது இந்துக்கள், புத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள் மட்டுமல்ல முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் யூதர்கள் அல்லாத அனைத்து நபர்களுக்கும் பொருந்தும்.

இந்த சட்டத்தின் கடைசி பெரிய திருத்தம் 2005 ஆம் ஆண்டில் நடந்தது. அதன்படி ஒரு கூட்டு இந்து குடும்பத்தில் மகள்களுக்கு மூதாதையர் சொத்துக்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டது. ஆயினும் கூட, பாலின சமத்துவத்திற்கு அது போதுமா?

இந்த சட்டபிரிவு 15 , திருமணமான ஒரு பெண்ணின் அத்தகைய சொத்து, கணவன் அல்லது குழந்தைகள் இல்லாத நிலையில், கணவரின் வாரிசுகளுக்கு தானாகவே செல்கிறது என்று கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு பெண்ணின் பிறந்த வீட்டிற்கும் மேல், அவள் புகுந்த வீட்டிற்குதான் சட்டம் நன்மையை வழங்குகிறது.

விரிவாக, சொல்லவேண்டுமாயின், இந்த சட்டத்தின் பிரிவு 15 (1) படி, ஒரு பெண் உயில் எழுதாமல் இறந்தால், கணவன் மற்றும் குழந்தைகள் இல்லாத நிலையில்,அவளது சுய வருமானம், பரிசு அல்லது அவளால் பெறப்பட்ட எந்தவொரு சொத்தும், கணவரின் வாரிசுகளுக்கு பகிர்ந்தளிக்கிறது

.அதே சமயம், உயில் எழுதாமல் இறக்கும் திருமணமான ஒருவனின் சொத்து பரிமாற்றம் செய்யப்படும் முறை நேர்மாறாக இருக்கிறது: முதலாவதாக, ‘வகுப்பு 1 வாரிசுகளுக்கு’, அதாவது, மனைவி, தாய், குழந்தைகள் மற்றும் இறந்த குழந்தைகளின் குழந்தைகள்; அவர்கள் இல்லாத நிலையில், ‘வகுப்பு 2 வாரிசுகளுக்கு’, அதாவது தந்தை, உடன்பிறப்புகள், உடன்பிறப்புகளின் குழந்தைகள் மற்றும் தாத்தா பாட்டி; அவர்கள் இல்லாதிருந்தால், மேலும் (ஆண் மூதாதையரின் சந்ததியினர்) அல்லது அறிவாற்றல் (இரத்த உறவினர்கள்). ஆகியோரை போய் சேருகிறது.

இது நீதிமன்றத்தின் பார்வையில் படவில்லையா?

2009 ஆம் ஆண்டில் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தால் இந்த சட்டத்தின் விதிமுறை ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பில் ஆராயப்பட்டது.

அந்த வழக்கு, திருமணமான மூன்று மாதங்களுக்குள் விதவையாகி, குழந்தை இல்லாத நிலையில் இருந்த நாராயணி தேவி பற்றியது. தனது புகுந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர், தனது பெற்றோரிடம் திரும்பினார், பின்னர் அவர் தனது பெற்றோரின் பண ஆதரவுடன் கல்வி பயின்று, பணி செய்து, அவரது வாழ்நாளின் இறுதியில் , தன் பெயரில் கணிசமான -செல்வம் சேர்க்க முடிந்தது. நாராயணி தேவியின் மரணத்தின் பின்னர், அவரது தாயார் வாரிசு சான்றிதழ் வழங்க விண்ணப்பித்த போது, ​​இது அவரது கணவரின் வாரிசுகளால் எதிர்க்கப்பட்டது😁

மாண்புமிகு உச்சநீதிமன்றம் இந்து வாரிசு சட்டம், 1956 இன் விதிகளை சுட்டிக்காட்டி, கணவரின் வாரிசுகள் தான் பெண்ணின் பெற்றோருக்கு முன் உரிமை உள்ளவர்கள் என்று தீர்ப்பு ப்அளித்தனர்.

இதன்படி பார்க்கும்போது, தற்போதைய சட்ட கட்டமைப்பானது அதன் அமுலாக்கத்தில் சமத்துவமற்றது மற்றும் நியாயமற்றது, பாலினத்தின் படி பரிமாற்றத்தில் வேறுபாடு உள்ளது.

இந்த சட்டம் எவ்வாறு உருவானது என்பதற்கு ஆழமான காரணம் உள்ளது. சட்டம் உருவாக்கப்பட்ட நேரத்தில், கூட்டுக் குடும்பத்திற்குள் சொத்து வைத்திருப்பது தான் பழக்கவழக்கமாக இருந்துள்ளது. மேலும், அப்போது பெண்கள் பெருமளவில் ,உழைக்கும் மக்களின் ஒரு பகுதியாக இல்லை. எனவே, பெண்கள் தங்கள் சொந்த திறமையின் மூலம் சொத்து வாங்க மாட்டார்கள் என்ற ஒரு உள்ளார்ந்த கருத்தும் இருந்துள்ளது.

திருமணமான பெண்களுக்கு - விதவை மற்றும் குழந்தை இல்லாதவர்கள் - அவர்கள் இறந்த பிறகு சுயமாக வாங்கிய சொத்தை பெற்றோருக்கு வழங்க விரும்புகிறார்கள் என்றால், அதற்கு உயில் எழுதுவது மட்டுமே வழி.

2012 ஆம் ஆண்டில், மாண்புமிகு மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ரோஷன் டால்வி, இந்த சட்டப்பிரிவு பிரிவு 15 (1), அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் செல்லுபடியாகுமா என்று இதன் தன்மையைப் பற்றி ஆறாய்ந்தார். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான இந்த வகைப்பாடு பாரபட்சமானது என்றும், நாராயணி தேவி விஷயத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் அம்சமான சமத்துவத்தின் கொள்கையை நிலைநிறுத்தப்படவில்லை என்றும் எனவே அவை சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்ட அவர்,. எவ்வாறாயினும், இதை அதே நீதிமன்றத்தின் அரசியலமைப்பு பிரிவு பெஞ்சால் மட்டுமே இறுதியாக தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

மகளிர் தினம் கோலாகலமாக கொண்டாடும் இன்று வரை, அதற்கான காலம் தான் வரவில்லை!!

படித்தமைக்கு நன்றி.

ஞாயிறு, 6 ஜூன், 2021

அடிப்படை உரிமைகளை கேட்கும் நாம், அடிப்படை கடமைகளை சரிவர செய்கிறோமா?


நல்ல கேள்வி..

இப்போதைய நம்முடையே அடிப்படை கடமையே நம் அடிப்படை உரிமைகள் மாண்டு போகாமல் பாதுக்காப்பதாகி விட்டது.!!

அடிப்படை உரிமைகளை பற்றிப் பேசும்போது, இதே போன்ற ஒரு ஏப்ரல் 24 அன்று தான் அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட இருந்ததை தவிடுபொடியாகி, ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பு வந்தது.

என்ன செய்ய...நமக்கிருக்கும் ஆயிரம் கவலைகளில் அதை மறந்து போயிருப்போம்.😃

அது தான் புகழ்பெற்ற கேசவானந்த பாரதி வழக்கு.

"அடிப்படை உரிமைகள் கொடுக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை எந்த விதத்திலும் சீர்குலைக்க கூடாது" என்றது.

அதற்கு காரணமாயிருந்த சட்ட மேதை நானி பல்கிவாலாவை இங்கு நினைவு கூர்வோம்.

அப்படியென்ன செய்துவிட்டார்.?.அந்த வழக்கில் என்ன சிறப்பு?

அதை தெரிந்துக் கொள்ள நாம் சற்று பின்னோக்கி போகவேண்டும்.

வரலாறு முக்கியம் அமைச்சரே!!☺️

அரசியலமைப்பு சட்டத்தை எழுதியவர்களின் நோக்கமே ..சமூக-, பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதன் மூலம் ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது தான்.

அந்த காலக்கட்டத்தில், விவசாய சீர்திருத்தங்கள் செய்யும் எண்ணத்தில் அரசு. இருந்தது. அதனால், முதலில் நில சீர்திருத்தங்கள் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இது, சொத்துக்கான அடிப்படை உரிமையுடன் முரண்பட்டது. அதனால் நீதிமன்றங்கள் அதை, அரசியலமைப்பு சட்டத்திற்கெதிரானது என்றன. .

ஆனால் அரசுக்கு தர்மசங்கடம். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டுமே. ..

அப்போது இருந்தது தற்காலிக பாராளுமன்றம் தான்.1952 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் வரை அது தான் இருந்தது.. அங்கு இருந்தவர்களில் சிலர் தான் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள். எனவே வெகு சுலபமாக, 1951 ஆம் ஆண்டில் பாராளுமன்றம் அரசியலமைப்பு சட்டத்தின் முதல் திருத்தத்தை இயற்றியது.

அதன்படி, இழப்பீட்டின் போதாமை காரணமாக தாக்குதலுக்கு உள்ளான தேசியமயமாக்கல் திட்டங்கள், விவசாய சீர்திருத்தங்கள் மற்றும் பிறவற்றைக் காப்பாற்றுவதற்காக ஆர்டிகள் 31 ஏ மற்றும் 31 பி ஆகியவற்றை அரசியலமைப்பு சட்டத்தில் அறிமுகப்படுத்தியது. அதே போல அட்டவணை IX என்று கொண்டு வந்தது, அதில உள்ள சட்டங்கள், எந்தவொரு அடிப்படை உரிமைகளை மீறுகிறது என்ற எந்தவொரு எதிர்ப்பிலிருந்தும் தடுக்கப்பட்டது.

ஆனால், இந்த சட்டத்திருத்தம் வராதிருந்தால், அரசியலமைப்பு சட்டத்தின் சில நோக்கங்களும் நோக்கங்களும் நிறைவேறுவது, தாமதமாக்கப்பட்டிருக்கும் அல்லது தோற்கடிக்கப்பட்டிருக்கும், என்பதே உண்மை.!!

வழக்கு போடாமல் இருப்பார்களா..வந்ததே…☺️.அடிப்படை உரிமைகளை தகர்க்கும் சட்டம் இயற்ற முடியுமா?

சங்கரி பிரசாத் எதிர் யூனியன் ஆஃப் இந்தியா[1] ல், பாராளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தை கொண்டு, அடிப்படை உரிமைகளைத் திருத்தலாம் என்றும்,, ஆர்டிகள் 13 ல் 'சட்டம்' என்று சொல்லியுள்ளது, சாதாரண சட்டத்தை மட்டுமே குறிக்கிறது …, அரசியலமைப்பு சட்டத்தின் திருத்தங்கள் அல்ல என்றும் நீதிமன்றம் கூறியது.

"அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணான ஒரு சட்டத்தை, அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் மூலமாக செய்வது, செல்லுபடியாகும். அது பாராளுமன்றத்தின் பிரத்தியேக அதிகாரத்திற்குள் வருகிறது."

என்றது தீர்ப்பு.

இதற்கிடையில் இதே போன்ற ஒரு நிலை புதிதாக பிரிந்த பாகிஸ்தானிலும் ஏற்பட்டது.

ஃபஸ்லுல் குவாதர் சவுத்ரி Vs முஹ்.அப்துல் ஹக் [2] என்ற வழக்கில், பாக்கிஸ்தானின் தலைமை நீதிபதி, " 1956 ல் இயற்றப்பட்ட பாகிஸ்தானின் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள சிரமங்களை அகற்ற பாகிஸ்தான் அதிபருக்கு அதிகாரம் உள்ளது…, ஆனால் அரசியலமைப்பின் அடிப்படை அம்சத்தை அகற்ற அவருக்கு அதிகாரம் இல்லை" என்று தீர்ப்பு வழங்கினார்.

என்ன ஒரு கெத்து!!

ஆனா நாம..

அடுத்து வந்த [3] வழக்கில், ஏற்கெனவே சொன்ன தீர்ப்பு தான் பின்பற்றப்பட்டது.

  1. சஞ்சரி பிரசாத் சஜ்ஜன் சிங் எதிர் ஸ்டேட் ஆஃப் ராஜஸ்தானில் 

ஆனால் அந்த சட்ட நிலை குறித்த சந்தேகங்களை எழுப்பினர் நீதியரசர்கள்

.நீதியரசர் ஹிதாயத்துல்லா

அதனால் அவர் என்ன பாடு பட்டார் என்பது வரலாறு!!

"அடிப்படை உரிமைகள் பெரும்பான்மையினரின் விளையாட்டு அல்ல என்று விளாசினார்.

நீதியரசர் முடோல்கர் மட்டும் சும்மா விடுவாரா?!

"அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கு நிரந்தரத்தன்மை வழங்கப்பட வேண்டுமா இல்லையா?

ஒரு அடிப்படை அம்சத்தில் மாற்றம் செய்வது என்பது ஒரு திருத்தமாக மட்டுமே கருதப்படுமா அல்லது அது அரசியலமைப்பு சட்டத்தின் ஒரு பகுதியை மீண்டும் எழுதுவதா ? " என்று தீர்ப்பில் கேள்விகள் எழுப்பினார்.

அடுத்து கோலக்நாத் வழக்கு[4] வருகிறது. அந்த சமயம் பார்த்து, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் , மேற்கு ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தின் தெற்காசியா நிறுவனத்தின் சட்டத் துறையின் தலைவர் பேராசிரியர் டைட்டர் கான்ராட், பிப்ரவரி 1965ல், " அதிகாரத்தை திருத்துவதில் உள்ளார்ந்த வரம்புகள்" குறித்த சொற்பொழிவை நிகழ்த்தினார்.[5] அப்போது தலைசிறந்த அரசியலமைப்பு சட்டவழக்கறிஞரான எம்.கே.நம்பியார் அதை பேராசிரியரிடமிருந்து கடன் வாங்கி கோலக்நாத் வழக்கில் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

கோலக் நாத் வழக்கில் மொத்தம் 11நீதிபதிகள் விசாரித்தனர். 6: 5 என்ற விகிதத்தில், தீர்ப்பு வந்தது. ஆனாலும், நீதிமன்றம் வழக்கை ஒரு குறுகிய அடிப்படையில், முடிவு செய்தது-

இருந்தாலும், இங்கே தான், இந்தியாவின் வரலாற்றில் மிகப் பெரிய மற்றும் மிக முக்கியமான அரசியலமைப்பு வழக்குக்கு மேடை அமைக்கப்பட்டது எனலாம்.-

இதற்கிடையில், அரசியலமைப்பு சட்டத்தின் 29 வது திருத்தத்தின் மூலம், கேரள நில சீர்திருத்த சட்டங்கள் , அட்டவணை IX இல் சேர்க்கப்பட்டு இருந்தது. இதை எதிர்த்தும், அரசியலமைப்பு சட்டத்தின் ஆர்டிகிள்கள் 24, 25 மற்றும் 29 வது திருத்தங்கள் எதிர்த்தும் போடப்பட்ட அடுத்து வந்த கேசவானந்த பாரதி வழக்கில்[6] நீதிமன்றம் மறுக்க முடியாத பணியை எதிர்கொண்டது.

ஏற்கெனவே சொல்லப்பட்ட கோலக் நாத் தீர்ப்பு, மிகவும் பரந்த, ஒரு வித காட்டுத்தனமான முன்மொழிவை முன்வைத்ததாக நீதிமன்றத்திற்கு தோன்றியது,

அதனால், தெளிவாக அதை ஆதரிக்க முடியாது, கடக்க வேண்டியிருந்தது. அதேசமயம், நீதிமன்றத்தின் பெரும்பான்மையும் நம்பிய, அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதல்கள் என்று, குற்றம் சாட்டப்பட்ட, அரசியலமைப்பு சட்டத்தை நீதிமன்றம் காப்பாற்ற விரும்பியது, அதே சமயத்தில், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், பல சட்டங்கள் கண்மூடித்தனமாக, அட்டவணை IX இல் சேர்க்கப்பட்டன என்பதையும் கவனித்தது.

.இந்த பின்னணியில் தான், அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு குறித்த பிரச்சினை எழுந்தது.

டாக்டர். கான்ராட், விதைத்த விதையை அப்படியே செடியாக்கி பராமரித்தவர் வழக்கறிஞர் நம்பியார் என்றால் கேசவானந்த பாரதி வழக்கில் தன்னுடடைய வாதத்திறமையால், அந்தச்செடியில், பூ பூக்கவைத்தது வழக்கறிஞர் நானா பல்கிவாலா என்றால் மிகையாகாது.

அதிகபட்ச நாட்களுக்கான மிகப்பெரிய பெஞ்ச் விசாரணை நடந்தது மற்றும் நீண்ட தீர்ப்பை எழுதியதும்- கேசவநந்த பாரதி வழக்கில் தான்.

அரசியலைப்பு சட்டத்தின் மூன்றாம் பகுதி உட்பட சட்டத்தின் எந்தப் பகுதியிலும் திருத்தத்தை அனுமதிக்கும் அதே சமயம், அத்தகைய திருத்தம் , அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை அம்சங்கள், கட்டமைப்பை அழிக்கக்கூடாது என்றும், அந்த அடிப்படை கட்டமைப்பு என்ன, என்பதை சூழ்நிலைகள் எழும் போது, வழக்குகளை முன்வைக்கும்போது நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.!!💐💐.

கேசவானந்தா பாரதி வழக்கை விசாரித்த பெஞ்சில் இருந்த 13 நீதிபதிகளில், பெரும்பான்மையினரான 9 பேர் கருத்து இது : " ஆர்டிக்கிள் 368 அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை அல்லது அடிப்படையை மாற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரம் கொடுக்கவில்லை ."

அதன்படி, அடிப்படை கட்டமைப்பிறகு எதிரானது என்று ஆர்டிக்கிள் 31 சி ன் இரண்டாம் பகுதி நியாயமற்றது என்பதால், செல்லாது என்றது.

பேராசிரியர் கான்ராட் மேற்கோள் காட்டியதை ஏற்றுக்கொண்ட நீதியரசர் கன்னா, தன் தீர்ப்பில்.: "சட்டரீதியான அமைப்பிற்குள் ஒழுங்காக அமைக்கப்பட்ட எந்தவொரு திருத்த அமைப்பும், அதன் அதிகாரம் வாய்மொழியாக வரம்பற்றதாக இருந்தாலும், அதன் கட்டமைப்பால் மட்டுமே, அரசியலமைப்பு அதிகாரத்தை கொடுக்கும் அடிப்படை தூண்களை மாற்ற முடியாது." என்றார்.

கேசவானந்தாவில் முதன்முறையாக 7: 6 என்ற மெல்லிய பெரும்பான்மையுடன், நீதிமன்றம் "அரசியலமைப்பின் ஒவ்வொரு பகுதியையும் , மூன்றாம் பாகத்தில் சொல்லப்பட்ட அடிப்படை உரிமைகள் உட்பட திருத்துவதற்கு பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது , மேலும் அவ்வாறு திருத்தம் செய்யும் அதிகாரத்தில் எந்தவிதமான வரம்புகளும் இல்லை என்றாலும், 'அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை' திருத்துவதற்கு , அந்த அதிகாரம் நீட்டிக்கப்படவில்லை," என்றது.

இது அரசியலமைப்பு சட்டத்தில் காணப்படவில்லை. அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை அதுவரை எந்த நீதிமன்றமும் வலியுறுத்தவில்லை - அதுவும் நீதிமன்றத்திலிருந்தே தோன்றிய ஒரு முடிவின் அடிப்படையில்..

  1. தைரியமான ஒன்று!  

இந்த வழக்கில் , ஆறு நீதிபதிகள் திருத்தம் செய்யும் அதிகாரம் பல்வேறு உள்ளார்ந்த மற்றும் மறைமுகமான வரம்புகளால் வரையறுக்கப்பட்டுள்ளது என்றும், மற்ற ஆறு நீதிபதிகள் திருத்தம் செய்யும் அதிகாரத்தில் வரம்புகள் இல்லை என்றும் கருதினர்.

ஆனால் நீதியரசர் கன்னா, இவற்றை நிராகரித்தார். திருத்தும் அதிகாரம் என்பது முழுமையானது என்று கருதினார்.ஆனால் திருத்தம்' என்ற சொல்லின் வரையறுக்கப்பட்ட அர்த்தத்தால் , 'அரசியலமைப்பு சட்டத்தை ரத்து செய்ய அனுமதிக்கவில்லையாதலால், அடிப்படை கட்டமைப்பு அல்லது கட்டமைப்பை தக்க வைத்துக்கொண்டு, அரசியலமைப்பு சட்டத்தின்,எந்த பகுதியையும் திருத்த முடியும்" என்றார்.

இது குறித்து கிரான்வில் ஆஸ்டின் தனது ஜனநாயக அரசியலமைப்பின் செயல்பாடு"ல் இவ்வாறு குறிப்பிட்டார்: "ஒன்பது நீதிபதிகள் (கேசவானந்தா தீர்ப்பில் கையெழுத்திட்டவர்கள்) ஒரு ஸ்டேட்ஸ்மான் போல பணி செய்ததாகத் தெரிகிறது. நீதிமன்றம், கோலக் நாத் வழக்கை ரத்து செய்தும் அரசங்கத்தின் மூன்று சட்ட திருத்தங்களை ஆதரித்ததன் மூலம், கிட்டத்தட்ட சங்கரி பிரசாத் வழக்கு நிலைக்குத் திரும்புகிறது. அதே நேரத்தில் நீதித்துறை அதன் மறுஆய்வின் சக்தியைப் பாதுகாத்து, உண்மையில் பலப்படுத்தியது. கோலக் நாத்தின் வரலாறு எதிர்பாராத விளைவுகளின் எச்சரிக்கைக் கதை.

அரசியலைப்பு திருத்தத்தின் மீதான கடுமையான கட்டுப்பாடுகளும், அதனால் அந்த திருத்தங்கள் சிவில் சுதந்திரத்திற்கு எதிரானது என்ற அச்சமும், திருமதி காந்தியின் அவசரகாலத்தின் போது அவை பயன்படுத்தப்படுவதும் விரைவில் நிரூபிக்கும்.

இது அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்திய கேசவானந்தாவை உருவாக்கியது அது அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்றங்களை பலப்படுத்திய அதேசமயம், அரசியலமைப்புச் சட்டமன்றம் கூட செய்யாததை செய்தது"

"கேசவானந்த பாரதி" தீர்ப்பு விலைமதிப்பற்ற ஒன்றைக் காப்பாற்றியது என்று சொல்லலாம்..

இந்த கோட்பாடு இந்திரா காந்தி Vs ராஜ் நாராயணன் (AIR 1975 SC 2299) ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இதில் தீர்ப்பு வழங்கிய நீதியரசர் சந்திரசூட்,

  1. "கேசவானந்த பாரதியில் பெரும்பான்மையினரின் கருத்து என்னவென்றால், அரசியலமைப்பின் அத்தியாவசிய அம்சங்கள் அல்லது அடிப்படை கட்டமைப்பை சேதப்படுத்தும் அல்லது அழிக்கும் வகையில் திருத்தத்தின் அதிகாரத்தை பயன்படுத்த முடியாது,  

மினெர்வா மில்ஸ் Vs யூனியன் ஆஃப் இந்தியா (AIR 1980 SC 1789) வழக்கும் கேசவானந்தாவின் தீம் பாடலை தான் கூறியது: "ஸ்தாபித்தவர்கள் உறுதியளித்த புனிதமான ஆவணத்தை கூட நீங்கள் திருத்துங்கள், ஏனென்றால் உங்கள் தேவைகளை நீங்கள் நன்கு அறிவீர்கள் ஆனால் அரசியலமைப்பு ஒரு விலைமதிப்பற்ற பாரம்பரியம், எனவே நீங்கள் அதன் அடையாளத்தை அழிக்க முடியாது. " என்றது.

அரசியலமைப்பு சட்டத்தின் திருத்தம், அதன் அடிப்படையையோ கட்டமைப்பையோ அழிக்கும் வகையில் இருந்தால், தடை செய்கிறது. இன்றளவும் கேசவானந்த பாரதி வழக்கு தான் முன்மாதிரியாக உள்ளது.

.அதே சமயம்..

சில மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் - வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை, கவுரவம் போன்றவை எந்தவொரு சட்டத்தின் அல்லது அரசியலமைப்பு சட்டத்தின் பரிசு அல்ல; அவை அரசியலமைப்பு சட்டதால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, அத்தகைய அங்கீகாரம் இல்லாமல், அரசியலமைப்பு சட்டமும் முழுமையடையாது.

எனவே அரசியலமைப்பு சட்டம் நமக்கு கொடுத்த, வெளிப்படையான மற்றும் உள்ளார்ந்த உரிமைகளையும் பேணிக் காப்பதே நம் அடிப்படை கடமையாகும்..அதற்கு ஊறு வரின் காக்க தயங்கக்கூடாது!!

  1. தற்போது தொடர்ந்து நடந்து வரும் விவசாய போராட்டங்களை மனதில் கொள்வோம்!! 

எது எப்படியிருந்தாலும், பால்கிவாலாவையும் நமது அரசியலமைப்பு சட்டத்திற்கும் நீதித்துறைக்கும் அவர் அளித்த பங்களிப்பையும் தொடர்ந்து நாம். நினைவில் கொள்வோம்.

அத்தகைய மற்றொருவர் எப்போ வருவாரோ?

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா..

அடிக்குறிப்புகள்

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...