மோட்டார் வாகன விபத்தும் இல்லத்தரசியும்
பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறார் புவனேஸ்வரி. அவர் போக வேண்டிய பஸ் வர, கூட்ட நெரிசலில் இவர் ஏறி உள்ளே செல்வதற்குள் , கண்டக்டர் விசில் ஊதிவிட , பஸ் புறப்பட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத புவனேஸ்வரி பஸ் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த இரத்த காயம். மருத்துவ சிகிச்சை எடுத்தும் நிரந்தர ஊனம் ஏற்பட்டுவிட்டது.
நன்றி கூகிள்
தனக்கு ஏற்பட்ட இந்த இழப்பிற்கு நஷ்ட ஈடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார். அவரோ இல்லத்தரசி. வருமானம் ஈட்டுகிறார் என்று சொல்லமுடியாது. அவருக்கு வருமான ரதியான நஷ்டம் என்று எந்த ஆதாரமும் தாக்கல் செய்யாததால், இல்லத்தரசி செய்யும் பணிகள் என்ற வகையில் அதற்கு மாதம் ரூபாய் 45௦௦.- என்று கணக்கிட்டு நஷ்ட ஈடு வழங்குமாறு போக்குவரத்து கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
இந்த நஷ்ட ஈடு மிகவும் குறைவாக உள்ளது என்று அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார். அந்த வழக்கில் தான் நீதிமன்றம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது
"இல்லத்தரசிகள் தான் ஒரு நாட்டின் அடித்தளம். ஒரு இல்லத்தரசி இல்லையெனில் அந்த குடும்பமே சிதறிவிடும். அதுவும் அவருக்கு நிரந்தர ஊனம் என்னும்போது, குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அதன் தாக்கம் இருக்கும். எனவே அவர் வருமானம் ஈட்டாதவராக இருந்தாலும். அந்த குடும்பத்தில் சம்பாதிக்கும் நபரை விட மதிப்பு வாய்ந்தவர். எனவே, அவருக்கு ஏற்பட்ட ஊனத்திற்கு நஷ்ட ஈடு கணக்கிடும்போது, அவர் கணவரின் வருமானம், சமூகத்தில் அவர் குடும்பத்தின் மதிப்பு, குடும்பத்தில் அவரின் முக்கியத்துவம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு நஷ்ட ஈடு கணக்கிடவேண்டும் " என்று கூறி ரூபாய் 14 லட்சம் வட்டியுடன் சேர்த்து நஷ்டஈடு வழங்குமாறு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக