பாலியல் வன்முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலியல் வன்முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 நவம்பர், 2021

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக எந்தெந்த சட்டங்களின் கீழ் புகார் அளிக்கலாம்?

 பொதுவாக பெண்ணின் மாண்பை குலைக்கும் வண்ணம் செய்யும் செயலுக்கு இந்திய தண்டனை ச ட்டத்திலேயே தண்டனை குறித்து சொல்லப்பட்டு, அது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையகளில் புகார் கொடுக்கலாம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே..

ஆனால் பணியிடங்களில் அவர்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாவதை தடுக்க சட்டம் ஒன்று 2013ல் கொண்டுவரப்பட்டது.. அதை பற்றி மட்டும்  சில விளக்கங்களை இங்கு பார்க்கலாம்.

விஷாகா வழக்கில் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் நாட்டில் உள்ள பல பணியிடங்களில் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை நினைவில் கொள்க. இத்தனைக்கும் விஷாகா என்ற மைல்கல் வழக்கு முடிந்து 16 ஆண்டுகள் ஆனபிறகு தான் இந்த சட்டம் இயற்றப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

இந்தச் சட்டத்தின் சிறப்பே, வயது அல்லது வேலையின் நிலையைப் பொறுத்து எந்த வித்தியாசமில்லாமல், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும், எந்த வகையான துன்புறுத்தல் இல்லாத பாதுகாப்பான பணியிடத்தை வழங்குவதும் பணியிடத்தில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களை பாதுகாப்பது மட்டுமின்றி தடுப்பதும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் புகார்களுக்கு விரைவான தீர்வை உறுதி செய்வதும் தான். இதே 2013 ஆம் ஆண்டில் தான்.  இந்திய தண்டனை சட்டத்திலும் ஒரு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது, அதன்படி ஒரு பெண்ணை பின்தொடர்தல், பாலியல் துன்புறுத்தல் போன்றவையும் இப்போது தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஆனாலும் இதை எப்படி கையாள்வது என்பது குறித்த சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கிறது. அது குறித்த சில விளக்கங்கள் பாப்போம்.

இந்தச் சட்டத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, எந்தவொரு புகாரகளைத் தீர்ப்பதற்கும் குழுக்களை அமைப்பது. இது அமைப்புசாரா துறைகளுக்கும் செய்யப்பட வேண்டும்.

* 10 க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தும் எந்தவொரு நிறுவனமும் அதன் அலுவலகம் அல்லது கிளையில் ICC என அழைக்கப்படும் உள் புகார்கள் குழுவைக் கொண்டிருக்க வேண்டும்.

* 10க்கும் குறைவான பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள்/அமைப்புசாராத் துறையினர் இவர்களுக்காக இந்திய அரசாங்கத்தால் எல்சிசி எனப்படும் உள்ளூர் புகார்க் குழு அமைக்கப்பட வேண்டும்.

ICC மற்றும் LCC ஒரு சிவில் நீதிமன்றத்திற்கு சமமான அதிகாரத்தை கொண்டவை. , பிரமாணத்தின் கீழ் எந்தவொரு குற்றம் சாட்டப்பட்ட நபரையும் அழைத்து விசாரணை செய்ய அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. புகார் தொடர்பான ஆவணங்கள், மற்றும் வழக்கை விரைந்து முடிக்க தேவையான எந்த விஷயமும் அவர்கள் மேற்கொள்ளலாம்.

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள், புகார் அளிக்க முன்வந்தால், என்னென்ன செய்யவேண்டும்>

  • நடந்த சம்பவத்தின்  எழுத்துப்பூர்வ புகார்களை வழங்க வேண்டும்.
  • இந்த புகாரில் பெயர்கள், சாட்சிகள் மற்றும் மிக முக்கியமாக கூறப்பட்ட சம்பவத்தின் சான்றுகள் உள்ளடங்கி இருக்க வேண்டும்.
  • துன்புறுத்தல் நடந்த 3 மாதங்களுக்குள் புகார் அளிக்கலாம். இந்த நேரத்தை இன்னும் 3 மாதங்களுக்கு குழுக்கள் அதிகரிக்கலாம்.
  • பாலியல் துன்புறுத்தல் ஒரு மனரீதியாக துன்புறுத்தும் கிரிமினல் நடவடிக்கையாக இருப்பதால், அது பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது, எனவே அவர்கள் புகார்களை முன்வைக்கும் நிலையில் இருக்க மாட்டார்கள். உறவினர், உளவியலாளர், நண்பர்கள், சக பணியாளர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டவர் சார்பாக புகார் அளிக்க அதிகாரம் உள்ளது என சட்டம் கூறியுள்ளது.
  • ஐசிசி மற்றும் எல்சிசிக்கு இடைக்கால நடவடிக்கையாக பாதிக்கப்பட்டவருக்கு எதிரான பதிலளிப்பவரின் கடமைகளை மற்ற ஊழியர்களுக்கு மாற்றலாம்,
  • பாதிக்கப்பட்டவரை வேறொரு கிளை அல்லது பணியிடத்திற்கு மாற்றலாம் மற்றும் அவர்களுக்கு 3 மாதங்கள் வரை விடுமுறை அளிக்கப்படலாம்.
  • பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் தனி நபருக்கு விதிக்கப்படும் இழப்பீடுகள் மற்றும் தண்டனைகள் பற்றியும் சட்டம் விரிவாகக் கூறுகிறது.
  • நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ள விதிகளின்படி நிறுவன முதலாளி தண்டிக்க முடியும்.
  • ஆனால் அத்தகைய விதிகள் உருவாக்கப்படவில்லை என்றால், தண்டனையானது ஆலோசனை, சமூக சேவை, சேவை நிறுத்தம் அல்லது பதவி உயர்வு வரை இருக்கலாம்.
  • பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் இழப்பீடு, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் நபரின் சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும். பாதிக்கப்பட்டவர் அனுபவிக்கும் மன மற்றும் உடல் ரீதியான துன்பங்கள், வேலை இழப்பு, மருத்துவ செலவுகள், செலுத்த வேண்டிய இழப்பீட்டை தீர்மானிக்கிறது.
  • பாலியல் துன்புறுத்தல் புகார்களை நிவர்த்தி செய்ய எந்தவொரு அமைப்பும் ஐசிசியை அமைக்கவில்லை என்றால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

சரி….. இப்போது சில சந்தேகம் எழலாம்…

        1.   பணியிடத்தில் தொந்தரவு கொடுத்தால் தான் குற்றமா? அல்லது வாட்ஸ்அப் போன்ற மெசேஜிங் சேவையைப் பயன்படுத்தி ஒரு சக ஊழியர் ஆன்லைனில் முன்மொழிகிறார், பாலியல் சலுகைகளைக் கேட்கிறார், காம எண்ணத்தை  வெளிப்படுத்துகிறார் அல்லது தன்னைப் பற்றிய பொருத்தமற்ற படங்களை அனுப்புகிறார். நீங்கள் பதிலளிக்க மறுக்கிறீர்கள் அல்லது அவரை நிறுத்தும்படி கேட்கிறீர்கள், ஆனால் அவர் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கிறார். ஆன்லைனில் இது நடந்தாலும் பணியிடத்தில் இந்த பாலியல் துன்புறுத்தலா? என்ற சந்தேகம் இருக்கலாம். இது நிச்சயமாக பாலியல் துன்புறுத்தலாகத் தான் கொள்ளப்படும். 

  பாதிக்கப்பட்டவரும் துன்புறுத்துபவர்களும் பணியிடத்தில் (ஒரே அணியில் இருப்பதன் காரணமாகவோ அல்லது வேறு விதமாகவோ) தொடர்ந்து தொடர்பு கொள்ள வேண்டியிருந்தால், இது பாதிக்கப்பட்டவருக்கு விரோதமான பணிச்சூழலை உருவாக்குவதாகவும், அதன் அடிப்படையில் . பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல், என்றும் கருதப்படலாம்

எழுத்து மூலமான உரையாடல்  செய்திகளுக்கு மாறாக வாய்மொழித் தொடர்பு மூலம் ஒரு சம்பவம் நடந்தால், மீறலை எவ்வாறு நிரூபிப்பது??
இங்கே என்ன ஆதாரமாக இருக்கும்?
"இவை பெரும்பாலும் மிகவும் தந்திரமான சூழ்நிலைகள்"

 ஆவண ஆதாரங்கள் இல்லாத போது, ​​ யார்யாரெல்லாம்  பார்த்திருக்கலாம் என நினைக்கிறார்களோ அந்த சக ஊழியர்களின் பட்டியலை வழங்குதல், குற்றம் சாட்டப்பட்டவருடன் நடந்த உரைகள் அல்லது மின்னஞ்சல்கள் போன்ற ஏதேனும் எழுத்துப்பூர்வ தகவல் தொடர்புகளை வழங்குவது, சம்பவம் நடந்த உடனேயே அல்லது சம்பவம் தொடர்பாக (மன்னிப்பு கடிதம்  போன்றவை) அத்தகைய சந்தர்ப்பங்களில் ஆதாரமாக உதவியாக இருக்கும்

        ௨.  சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம் நிகழ்ந்து, குற்றவாளி இனி அந்த அமைப்பில் பணிபுரிய வில்லை என்றால் அல்லது நீங்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறியிருந்தால், அந்த நிறுவனத்தில் துன்புறுத்துதல் புகாரை இன்னும் பதிவு செய்து அவர்கள் நடவடிக்கை எடுக்க முடியுமா?


        சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள் (அல்லது தொடர் சம்பவங்கள் நடந்தால் கடைசியாக நடக்கும்) பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகாரை அமைப்பின் ஐசிசியில் பதிவு செய்யலாம் என்று சட்டம் கூறுகிறது. ஐசிசி இந்த காலக் கட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க முடியும், அதன் பிறகு புகார்களுக்கு கால அவகாசம் உள்ளது. "பாதிக்கப்பட்டவர்"  அந்த அமைப்பில் இருந்து விலகியிருந்தாலும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் புகார் அளிக்கப்பட்டாலும், அத்தகைய புகாரை ஐசிசி-யில் பதிவு செய்யலாம்.   இருப்பினும், சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தால், ஐசிசி புகாரை விசாரிக்க நேர தடை உள்ளது,

        பணி  செய்யும் ஒரு பெண்ணுக்குப் பரிகாரம் செய்வதற்கான வழிமுறைகள் இல்லாத நிலையிலிருந்து, நிவர்த்தி செய்வதற்கு மிகவும் சக்திவாய்ந்த மற்றும் வலுவான சட்டம் கொண்டு வரும் அளவிற்கு நாம் நிச்சயமாக வெகுதூரம் வந்து விட்டோம். பணியிடத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தளை தடுக்கும் இந்த புரட்சிகரமான சட்டம் மிகப் பெரிய சமூக தாக்கங்களைக் கொண்டுள்ளது. ஆனால் நிச்சயமாக அதற்குத் தேவையானது பொது விழிப்புணர்வு, உணர்திறன் மற்றும் வலுவான செயல்படுத்தல் ஆகியவை தான்.

நாம் இன்னும் எத்தனை காலத்திற்கு உறக்கத்திலேயே இருக்கப் போகிறோம் ??

ஞாயிறு, 13 ஜூன், 2021

கற்பழிப்பை சமூகம் ஊக்குவிக்கிறதா?

இந்த கேள்வி தான் கேட்கப்பட்டது அவரிடத்தில்

 "மாநிலத்தில் கற்பழிப்பு வழக்குகள் அதிகமாக என்ன காரணம்? அதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப் படுகிறது?

அதற்கு கிடைத்த பதில்

"பெண் பிள்ளைகளுக்கு மொபைல் போன் கொடுக்கக்கூடாது. அதில் பையன்களுடன் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.  பின் ஓடிப்போய் விடுகிறார்கள்.."

Girls talk with boys and later run away with them. I appeal to parents not to give mobile phones to their daughters. And if they do, their phones should be checked regularly. All this happens due to negligence by mother: UP women's commission member Meena Kumari (9.6)

இந்த அரிய கண்டுபிடிப்பின் சொந்தக்காரர் உத்தர பிரதேச மகளிர் ஆணையத்தின் தலைவர் மீனா குமாரி..


லிங்க் இதோ

நல்லவேளையாக இவரின் வீடியோ துணுக்குகள் ஆன்லைனில் பரவலாக பகிரப்பட்ட போது, டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால், அதை மறுத்து, அவர் செய்த மறு ட்வீட் இது·

."இல்லை மேடம், ஒரு பெண்ணின் கையில் ஒரு தொலைபேசி இருப்பது, கற்பழிப்புக்கு ஒரு காரணம் அல்ல. கற்பழிப்புக்கான காரணம் குற்றவாளிகளின் மனநிலையை பாதிக்கும் ஒரு மோசமான சமூக அமைப்பு. மகளிர் ஆணைய உறுப்பினர்கள் அனைவரையும் இது குறித்து, புரியவைக் குமாறு பிரதமர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்..."

கடும் விமர்சனம் எழுந்த பிறகு, , தான் அது போன்ற வார்த்தைகளை சொல்லவில்லை என்றும் தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் அவர் பின்வாங்கி விட்டார் ஆனால் அவர் பேசியதற்கான ஆதாரங்கள் வலைத்தளத்தில் உள்ளன

இது முதல் முறை அல்ல. இதற்கு சில மாதங்களுக்கு முன்பே, நாட்டின் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் சந்திரமுகி தேவி, உத்தர பிரதேசத்தில், 50 வயது ஆன ஒரு பெண்மணி, கூட்டுக் கற்பழிப்புக்கு ஆளானதற்கு காரணமே அவர் மாலையில் வீட்டை விட்டு வெளியே சென்றது தான் என்று விமர்சனம் செய்திருந்தார் . இது குறித்து கடும் விமர்சனம் செய்தவர்களில் பிரியங்கா காந்தியும் உண்டு.

கற்பழிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை குறை சொல்வதை, எதிர்த்து அவர் கடும் விமர்சனம் செய்ததை அடுத்து, "சந்திரமுகி "அது போலத்தான் சொல்லவில்லை என்று பின்வாங்கினார்.

பின்னே பேரிலேயே தெரிஞ்சிருக்கும்!!

மகளிர் நலன் காக்க வேண்டிய இவர்களின் கண்ணோட்டமே இவ்வளவு மோசமா என்று நினைக்கும் அதே சமயம், டெல்லி ஆணைய தலைவியின் கருத்தை கொஞ்ச்ம ஊன்றி பாரப்போமே....

"கற்பழிப்புக்கான காரணம் குற்றவாளிகளின் மனநிலையை பாதிக்கும் ஒரு மோசமான சமூக அமைப்பு."

அப்படியானால்..கற்பழிக்க தூண்டுகிறதா சமூகம்?

அது. அவ்வளவு மோசமாகவா இருக்கிறது ?

சமூகத்தின் அங்கம் தானே நாம்..அப்படியானால், தெரிந்தோ தெரியாமலோ, நாமும் இதற்கு உடந்தையா?

ஒத்துக்கொள்ளாது மனது..

நாம் தானே கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை குடுக்கணும்னு சொல்றது? அவர்கள் எல்லாம் மிருகம், அவங்களை போலீஸ் என்கவுண்டரில் போடணும்னு சொன்னது?

பொய் சொல்றாங்கன்னு கூவுவோம்.

அப்ப ..மீனா குமாரியின் பேச்சு உண்மையா? அந்த மொபைல் போன் விவகாரத்துக்கே வருவோம். பயன்பாடு, இளம் பெண்கலின் மோசமான நடத்தைக்கும்‘ கற்பழிப்புகளுக்கும் ’ அது தானா காரணம்?

ஆனா, இந்த புள்ளிவிவரம் ஓத்து வரலையே?

  • கற்பழிப்புக்கு ஆளானவர்களில் 15.43 சதவீதம் பேர் 18 வயதுக்குக் குறைவானவர்கள் என்று 2019 ஆம் ஆண்டின் தேசிய குற்ற பதிவு தரவு காட்டுகிறது,
  • அதுவும் நாட்டின் மிகவும் பின்தங்கிய பிராந்தியங்களில் ஒன்றான உத்தரப்பிரதேசத்தில்… குழந்தைக்கு எதிரான குற்றங்கள் அதிகம் இருக்கும் இடத்தில், எப்படி பெண்குழந்தைகள் கற்பழிப்புக்கு தொலைபேசிகள் துணை போகும்?

இந்தியாவில், குற்றவாளியை தவிர ஒவ்வொரு அற்பமான விஷயமும் கற்பழிப்புக்கு பொறுப்பாளிகள் என்பார்கள்.அதன் எதிரொலி தான் உத்தராகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத், "பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு காரணம், அவர்கள் ஜீன்ஸ் அணிவது" என்றது.சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் “ஆண்பிள்ளைகள் ஆண்பிள்ளைகளாக தான் இருப்பார்கள், அவர்கள் தவறு செய்வார்கள் தான் .”என்று நியாயப்படுத்தியது இல்லையா?.

என்ன ..மேலே சொன்ன மகளிர் ஆணைய தலைவி, உறுப்பினர், ஒரு படி மேலே போய் சொல்லியிருக்கிறார்கள்..வருத்தம் என்னன்னா, இவர்கள் தான் பெண்கள் நலன் காக்கும் இடத்தில் இருக்கும் "பெண்கள்'"!!

நாளிதழகளில் வரும் செய்திகளை பாருங்கள்!!

.தினமும் தான் நாட்டின் ஏதேனும் ஒரு இடத்தில் கற்பழிப்பு நடந்துக்கொண்டு இருக்கிறது.. எல்லா செய்தியையும் மீடியா போடுவதில்லை..

அப்படியே வந்தாலும், கற்பழிப்பு செய்திகள் நம்முள் எந்த வித தாக்கமும் ஏற்படாமல் கடந்துப் போகப் பழகிக் கொண்டிருக்கிறோம்..

சிலவற்றிற்கு மட்டும் தான் "கவன ஈர்ப்பு'. கிடைக்கும்.

அந்த வித்யாசம் அந்த செய்திலேயே தெரிந்து விடும்..

பாதிக்கப்பட்டவர் சிறு குழந்தையாகவோ, மூதாட்டியாகவோ, எரிக்கப்பட்டோ, பயங்கரமாக தாக்கப்பட்டு இருக்க வேண்டும்.!! அல்லது அது கூட்டு கற்பழிப்பு என்று இருக்க வேண்டும்!!

அதன் பிறகு ஊடகத்தின் டி ஆர்.பிக்கு அது துணை நிற்கும்.!!

கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த குற்றம் சாட்டுகைகளையும், கற்பழிப்பு கலாச்சாரத்திற்கு எதிரான போராட்டத்தில், அரசியல்வாதிகள், ஊடகங்கள், சில நேரங்களில் பெண்கள் குழுக்கள் இவற்றி ன் தொடரும் கற்பழிப்பு கட்டுக்கதைகளை எதிர்கொள்வது அவசியமாகிறது ..

இந்த காலம்காலமாக உள்ள மனநிலையை தீவிரமாக மறுத்து, சமூக ஊடகங்கள் மற்றும் பிற பொது தளங்களை பொறுப்பு என்னும்போது, நாம் எவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

  • சில கற்பழிப்பு வழக்குகள் மட்டும் தான், நெருப்பு போல புறப்படும்..நிர்பயா, ஹைதராபாத் டாக்டர், ஹத்ராஸ் பெண் குழந்தை இப்படி…ஏனென்றால் பாதிக்கப்பட்ட பெண்கள், கொடூரமாக "முடிக்கப்பட்டவசர்கள்"

ஒவ்வொரு கற்பழிப்பு செய்தி மக்களை உசுப்பி விடும்போதெல்லாம், , தப்பு செய்தவரை முச்சந்தியில் நிறுத்தி சுடுமையான தண்டனை கொடுக்கனும்னு கூக்குரல் இட்டதே

ஏன் ஹைதராபாத் வழக்கில் குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டதை மக்கள் கொண்டாடினார்களே?

அப்படியானால் சமூகம், குற்றவாளியை தண்டிக்க தானே சொல்கிறது..அதுவும் கடுமையாய்ன்னு கேட்கலாம்..

உண்மை தான்..

இந்த சமூகம், மற்ற வகையான வன்முறைகளை விட கற்பழிப்பை தான் மிகவும் கொடூரமானதாக கருதுகிறது..பெண்கள் தங்கள் பாலுறுப்பை மறைத்து வைப்பது, அவள் அதை புனிதமாக கருத வைப்பது, அதில் எந்த இடைஞ்சல் ஏற்படின், அதை அவளுடைய மானத்திற்கு ஏற்பட்ட பங்கமாக உணரவைப்பது, கலாச்சாரம், பண்பாடு, என்று பேரில், அதை பாதுக்காப்பதே அவள் அடையாளமாக கொள்வது என்று…இது பெண்களின் பாலுணர்வை கடுமையாக காக்கவேண்டும் என்பதும், "இயற்கைக்கு மாறான" பாலுணர்வை குற்றமாக ஆக்குவதற்கும், பிறப்புறுப்பு மற்றும் பாலுணர்வை நம் வாழ்வின் "தனிபட்ட அம்சங்களாக பாதுகாப்பதற்கும் சமூகம் முன்னின்று பிரச்சாரம் செய்கிறது..

இது நல்லது தானே என்போம்?

பெண்ணின் உடல் பாதுகாக்கப்படாவிட்டால், அவள் குடும்பத்தின் மீது ‘அவமதிப்பை’ ஏற்படுத்தக்கூடியவை என்று சமூகம் நம்புகிறது.அவள் செயல்கள், நிதி , சுதந்திரம் தவிர. பெண்களின் உடல்கள் தங்கள் வாழ்க்கையில் ஆண்களால் கட்டுப்படுத்தப்பட வேண்டிய மிகவும் மதிப்புமிக்க உடைமையாகக் கருதப்படுகின்றன.

இதற்கு சற்று உளவியல் ரீதியாக பார்த்தோமானால், இந்தியா ஆணாதிக்கத்தின் பிடியில் தான் இன்னும் இருக்கிறது..என்ன தான் சமத்துவம் பேசினாலும், கற்பழிப்பு இன்னமும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்கிறது.

எனவே தான் பெண்கள் குறைவான ஆத்திரமூட்டும் விதமாக ஆடை அணியக் கூடாது, மது அருந்தக்கூடாது, பாலியல் பலாத்காரத்திற்கு வழிவகுக்கும் சூழ்நிலையில் தங்களைத் தாங்களே தவிர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். என்று தங்கள் நடத்தையை மாற்றிக் கொள்ளும்படி கூறுகிறார்கள். அது தான் கற்பழிப்பில் பாதிக்கப்பட்டவர்களைக் குற்றம் சாட்ட வைக்கிறது. இந்த குற்றம் சாட்டுவதற்கான கலாச்சாரம் ஆணாதிக்கத்தின் விரிவாக்கம் என்பதை நியாய உணர்வாளர்கள் ஒத்துக்கொள்வர்கள்.

இதில், என்ன வசதி என்றால், பெண்களிடம் மாற்றத்தை விட அவற்றைக் கட்டுப்படுத்துவது ஆணுக்கு எளிது.அந்த ஆணாதிக்கம் தான், பெண்ணின் உடல் மற்றும் பாலுணர்வைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது -

பெண்ணின் உடல் மீது ஆண் கொண்ட ஆதிக்கம்,நீண்ட வரலாறு உடையது. அதனால் தான் படையெடுப்பு நடத்தும் எதிரிகள், வெற்றி பெற்றவுடன், அந்த நாட்டு பெண்களை கற்பழிப்பது என்பது காலங்காலமாக நடந்து வந்திருக்கிறது. அந்த சமூக மனப்பான்மை தான்,கற்பழிப்பில் ஈடுபடும் ஆணைக் குற்றம் சுமத்தாமல் இருப்பது…

அதனால் தான், இன்னொருவன் மனைவியுடன் தொடர்பு கொள்வது குற்றம் என்று இருந்தும்,, .இன்னொருத்தியின் கணவன் செய்வது குற்றமாக பார்க்கப்படவில்லை. இப்போது, பெண், தன் கணவன் தவிர்த்து இன்னொரு ஆணுடன் உறவு வைப்பது குற்றமல்ல என்ற போது கூக்குரல் எழுந்தது அதனாலேயே!!

நாம் கேட்கலாம் ..கற்பழிப்பு குற்றவாளிகளை உடனே தண்டித்தார்கள் என்று என்கவுண்டர் செய்த போலீசை கொண்டாடவில்லையா என்போம்..

ஆனால் இதே போலீஸ் காவலில் குற்றவாளி இறந்ததற்கு எதிராக சுடும் கண்டனங்கள் எழவில்லையா?

என்கவுண்டருக்கும், லாக்கப் இறப்பிற்கும் என்ன வித்தியாசம்? ஒன்றை ஏற்றுக்கொண்டு, இன்னொன்றிற்கு எப்படி எதிர்ப்பு குரல் கொடுப்பது?

அடுத்து கற்பழிப்பு நிகழ்ந்ததும், அவள் போலீசை உடன் நெருங்க முடியுமா? பெண்களுக்கு காவல் நிலையங்களில் மீது இருக்கும் பயம் என்றுமே தீராதது

அந்த அளவிற்கு சம்பவங்கள் நடக்கவில்லை? உடனே "பதமினி" தான் நினைவுக்கு வருகிறாள்.

அப்படியே போனாலும், ஏரியா தகராறு!!

சரி கற்பழித்தவனுக்கு உடனடி தண்டனை என்று என்கவுண்டரை நியாயப்படுத்துவது?

காவல்துறையினர் காவலில் இருக்கும் போது கொல்லப்படும்போது நாம் யாரும் பாதுகாப்பாக இல்லை என்பது ஏன் புரிய வில்லை?

இது ஜனநாயக பொறுப்புணர்வைத் தகர்த்தெறியும் ஒரு சிக்கலான முன்னுதாரணம். சட்ட அமலாக்கம் என்பது சட்டத்தைப் பாதுகாப்பதற்காகவே தவிற, அதுவே சட்டம் கிடையாது. அவர்கள் தங்கள் கைகளில் சட்டத்தை எடுத்துக் கொள்ளும்போது அது ஜனநாயகத்தின் தோல்வி என்பதை உணரவேண்டும்.

மற்ற வன்முறைகளை விட பாலியல் பலாத்காரத்திற்கு அதிக நீதி வேண்டும் என்று நாம் நிர்பந்திப்பதே, மற்ற வன்முறைகளும் இவையும் சமமில்லை என்பதால் தானே. இதனால்தான் கற்பழிப்பவர்களை கொல்லவேண்டும், முச்சந்தியில் தூக்கிலிட வேண்டும் என்று நாம் கேட்பது.. பாலியல் இல்லாத உடல்ரீதியான தாக்குதல் குற்றத்தில் இப்படி கேட்பதில்லையே?

39 ஏ திட்டம்லிங்க்

இந்த ஆய்வில் ஒரு கைதி சொல்வதாக, "என்னைப் போல யாராவது சித்திரவதை செய்யப்படுகையில், நீங்கள் அதைச் செய்தீர்களா இல்லையா என்பது முக்கியமல்ல, சித்திரவதையை நிறுத்த நீங்கள் எதையும் ஒப்புக்கொள்வீர்கள்" என்று சொன்னதாக கூறுகிறது.

மேலும், இந்த திட்டம், தங்கள் ஆய்வில், 80% கைதிகள் "உடல் மற்றும் மன ரீதியாக காவலில் சித்திரவதை செய்யப்பட்டதாகக் காட்டுகிறது. கற்பழிப்பாளர்களை சித்திரவதை செய்வது, அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கோருவது, சட்டவிரோதமாக அவர்களைக் கொல்வது ஆகியவை தெளிவான மனித உரிமை மீறல்கள். ஆனால் கற்பழிப்பாளர்களுக்கு இத்தகைய மனிதாபிமானமற்ற முறையில் நடத்த கோருகிறோம். ஏனெனில் கற்பழிப்பாளர்கள் மனிதாபிமானமற்ற அரக்கர்கள் மற்றும் குற்றவாளிகள் என்று கருதப்படுகிறார்கள். "கற்பழிப்பாளர்களுக்கு கருணை இல்லை" என்பது உரத்த எதிர்ப்பு முழக்கமாக இருந்து வருகிறது.

கடுமையான தண்டணை கொடுத்தால், குற்றம் குறையுமா?

கற்பழிப்பு தொடர்பான இத்தகைய ஆணாதிக்க மனப்பான்மைகளை கடுமையான தண்டனைகளுக்கான கோரிக்கைகள் மூலம் சட்டபூர்வமாக்குவதன் மூலம் நாம் ஜெயிக்க முடியாது. இவை எலலாம் குற்றத்தின் தீவிரத்தன்மையிலிருந்து விலகிச் செல்வது போன்றது.

ஒரு பிரச்சினைக்கான நமது அணுகுமுறை தான் , அதற்கான தீர்வுகளை தீர்மானிக்கிறது கற்பழிப்புக்கான நம் அணுகுமுறை ஆணாதிக்க நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அதனால், தான் மரணதண்டனைக்காண நம் கோரிக்கை, ஆணாதிக்க மனப்பான்மையால் பாதிக்கப்படுகின்றன

பெண்கள் பொதுவாக வீட்டில் இருப்பது தான் பாதுகாப்பு என்று  நினைக்கிறோம்..இரவு ஷிப்டுக்கு பெண்கள் வேண்டாம் எனப்படுவதற்கு காரணம் அது தான் ஆனால் கற்பழிக்கப்பட்ட பெண்களில் 98% காரணம் தெரிந்த நபர்கள் என்கிறது தேசிய குற்ற பதிவேட்டு பீரோGood laws, bad implementation

திருமண கற்பழிப்பு என்பது இந்தியாவில் ஒரு கிரிமினல் குற்றமாக இல்லாததால், வீடு மற்றும் குடும்பம் தான் பெரும்பாலும் பெண்களுக்கு மிகவும் வன்முறை இடங்களாக இருக்கின்றன. மரண தண்டனை வழங்குவது, பெண்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக புகாரளிப்பதை கடினமாக்கும். கற்பழிப்பை பற்றி முதலில் புகாரளிப்பது, தடை மற்றும் களங்கம். என்னும்போது, இது, கற்பழிப்பாளர்களைத் தடுப்பதற்குப் பதிலாக, அவர் புகார் செய்யலாம் என்ற அச்சம் காரணமாக. பெண்களை கொலை செய்ய தூண்டக்கூடும்,

மரணதண்டனை, அதன் செயல்பாட்டில் பாரபட்சமானதயிருக்கக்கூடும் விகிதாச்சாரத்தில், தரமான சட்ட ஆலோசனையை வாங்க முடியாத ஏழை, ஆண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்கிறது . திட்டம் 39 ஏ லிங்க் இன் அறிக்கை.

 "இந்த நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் எப்போதுமே ஏழைகள் மற்றும் சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்" தான் என்று கண்டறிந்துள்ளது. அவர்கள ஆய்வுப்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் 74.1% பேர் "பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடியவர்கள்" (அவர்களின் தொழில் மற்றும் நில உரிமையின் அடிப்படையில்), 76% பின்தங்கிய வர்க்கங்கள் மற்றும் மத சிறுபான்மை மதத்த்தை சேர்ந்தவர்கள் என்று மரண தண்டனையின் அனுபவம் ஒரு நியாயமான வழக்குக்கு இணக்கமாக இல்லை" என்கிறது ப்ராஜெக்ட்

கற்பழிப்பாளர்கள் அரக்கர்களாக சித்தரிப்பதற்கு, போலீசின் மிருகத்தனத்திற்கும் மரணதண்டனைக்கான கோரிக்கைக்கும் முக்கியமானது. 

ஏனெனில் கற்பழிப்பாளர்கள் மனிதர்களாக கருதப்பட்டால், அவர்களைக் கொல்வதை நியாயப்படுத்துவது கடினம். இருப்பினும், கற்பழிப்பாளர்கள் மனிதர்கள். யாரும் கற்பழிப்பாளராக பிறக்கவில்லை. கற்பழிப்பாளர்கள் நாம் வாழும் அதே ஆணாதிக்க சமுதாயத்திலிருந்தே வடிவமைக்கப்படுகிறார்கள். கற்பழிப்பு பிரச்சினையை தீர்க்க விரும்பினால், நாம் இங்கிருந்து தொடங்க வேண்டும். பிரச்சினையை அதன் வேரில் இருந்து தான்  நாம் தீர்க்க வேண்டும்.

சட்ட அமலாக்கத்துறை, கற்பழிப்பாளர்களைக் கொன்று, அவர்களை முதலில் உருவாக்கும் ஆணாதிக்க சமூக நிலைமையை தடையின்றி விட்டுவிட முயற்சிக்கின்றன. ஆனால், கற்பழிப்பு கலாச்சாரம் அன்றாட செயல்களின் மூலம் நிலைத்திருக்கிறது.

 திரைப்படங்கள் மூலம் (பெண்களுக்கு எதிரான வன்முறையை முறையான காதலின் வடிவமாக ஊக்குவித்தல்). சமூகத்தை பிரதிபலிக்கும் ஊடகங்களில் கூட - பெண்களுக்கு அச்சுறுத்தல் தான் விடுகிறது

இதற்கு உதாரணமாக எத்தனையோ படங்களை சொல்லலாம்..

அடுத்து, செய்துதாளுக்கு வருவோம்.

.தலைப்புச் செய்திகளைப் பாருங்கள்லிங்க்.


"இளம் பெண் கற்பழிப்பு!!"

"தனியாக இருந்த மூதாட்டி கற்பழிக்கப்பட்டார்!!"

இங்கு குற்றம் செய்தவர் தலைப்பு செய்தியில் வர மாட்டார்..

பாதிக்கப்பட்ட பெண் தான் செய்தியாகிறாள்..

ஏன்?

இந்திரா காந்தி சுடப்பட்டார் என்பது தான். தலைப்பு செய்தி என்று வைத்துக்கொள்ளுங்கள்.இங்கு சுட்டவர் அவரின் பாதுகாப்பு வீரர் என்றாலும், செய்தியின் தலைப்பு அது ஆகாது..எதற்கு முக்கியத்துவம் என்பது முக்கியம்.

அதே தான் இந்த கற்பழிப்பு செய்திகளிலும்.. செய்தவன் ஒரு ஆண். அது சாதாரணமானது.ஆனால் கற்பு .இழப்பது என்பது தான் முக்கிய செய்தி..அது கூட, கொஞ்சம் வன்முறை இருந்தால் ஓகே .இல்லையென்றால் பத்தோடு பதினொன்று..

இவை அனைத்தும் எதை காட்டுகிறது?

ஒரு பெண்ணின் அந்தரங்க உறுப்பிற்கு ஏற்படும் எந்தவொரு அவமதிப்பும், அது அவளது உடலின் மற்ற பகுதிகளை அவமதிப்பதை விட வெட்கக்கேடு, அப்படி தான் இருக்க வேண்டும் என்று உணர்த்தவில்லையா?

சட்ட புத்தகங்களும், இதையே பிரதிபலிக்கவில்லையா?

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அவளின் அடையாளம்,, கவுரவம் ஆகியவற்றிற்கு ஏற்பட்ட அவமானமாக தானே காட்டுகிறது?. அதனால் தானே அவளின் பெயர், முகம் மறைக்கப்படுகிறது?

அப்படியாயின் மற்ற குற்றங்களின் பாதிப்பாளர்களுக்கு என் இப்படி இல்லா? அவை அத்தனை அவமானதாக இல்லை என்றா?

2017 ஆம் ஆண்டில், நிர்பயாவின் கற்பழிப்பாளர்களுக்கு மரண தண்டனையை உறுதிசெய்த இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூட இது தானே சொல்லப்பட்டது?

"அவரது அடையாளம் மற்றும் கண்ணியத்துடன் அவர்கள் போட்ட பேயாட்டம், மனித ரீதியாக நினைத்துக் கூட பார்க்க முடியாதது" .

நிர்பயா போய் விட்டாள்…

அப்படியானால், கற்பழிப்பு சம்பவத்துக்கு பிறகு வாழும் பெண்களின் நிலை? அவர்களின் அடையாளம் தொலைந்து விட்டதா? அவர்களுக்கு இனி சமூகத்தில் மதிப்பில்லையா? அவர்கள் சம்பவங்கள் குறித்து சொல்வது ஏன் கேள்வி கேட்கப்படுகிறது? அவளின் மெல்லிய தடுக்கும் குரல் சம்மதம் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று இன்னொரு வழக்கில் சொல்லவில்லை?

ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படும்போது - அவளுடைய மதிப்பு , மரியாதை, அடையாளம் -எல்லாம் போய் விட்டது எனப்படுகிறது.

இதில் இன்னொரு ஆச்ச்ரியம் என்னவென்றால், மக்கள் கோபத்தை தூண்டிய பெரும்பான்மையான வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர்..

எப்படி?

கற்பழிப்பு குறித்த சமூகத்தின், சட்டத்தின் பார்வை!!

கொஞ்சம் பின்நோக்கி பாருங்க…போலீஸ் காவலில் இருந்த ஆதிவாசி பெண்ணை இரண்டு போலீஸ்காரர்கள் கற்பழித்த 1972 மதுரா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் விடுதலை!!

இப்போது கடைசி கடைசியாய்..மாண்புமிகு பம்பாய் உயர் நீதிமன்றம் லிங்க்

பாதிப்பிற்குள்ளான பெண்ணின் வாக்குமூலம் இன்னமும் சந்தேகத்தோடு தான் பார்க்கப்படுகிறது.

இந்த ஆணாதிக்க அணுகுமுறைகள் பெண்கள் மீதான ஆண்களின் உரிமையை ஊக்குவிக்கின்றன. கற்பழிப்பு தவிர, இந்த ஆண்பெண் பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் மூலம் வெளிப்படுகிறது.

 பெண்களின் மீதான அடக்குமுறை (அது எந்த வடிவத்திலும் இருந்தாலும்) அவ்வளவு பரவலாக இல்லாத ஒரு சமூகத்தை நோக்கி நாம் செல்லக்கூடிய ஒரே வழி, பெண்கள் மீதான சமூக அணுகுமுறைகளை மாற்றுவதே.

  • தினமும் நடக்கும் கற்பழிப்புகளைப் வெளியிடுவதில் ஊடகங்களின் மவுனம் மணமகனை மணமகனுக்கு "கொடுக்கும்" பாரம்பரியம், "பலவீனமான" இல்லை " என்பது சம்மதத்தைப் பற்றிய கதைகளை ஆதரிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் மூலம்" ஆம் "என்று பொருள்படும மவுனம்" இவற்றில் மாற்றம் வேண்டும்.
  • அனைத்து பள்ளிகளிலும் அவுட்ரீச் திட்டங்கள் மற்றும் அர்த்தமுள்ள பாலியல் கல்வி மூலம் பெண் குழந்தை மற்றும் சிறுவர்களுக்கு ஒப்புதல் பற்றி கற்பித்தல்
  • சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு சட்டத்தின் நோக்கத்தை உணர்த்துதல்
  • பெண்களின் சாட்சியங்களை நம்புதல்
  • ஒரு பெண்ணின் கவுரவம் அவரது அந்தரங்க உறுப்பில் உள்ளது என்ற கருத்தை நிராகரித்தல்

இவையெல்லாம் கற்பழிப்பு கலாச்சாரத்திற்கு நாம் ஒவ்வொருவரும் சில (அறியப்பட்ட அல்லது அறியப்படாத) வழியில் பங்களிப்பு செய்கிறோம்.என்பதை உணரவேண்டும்.

அதேசமயம், கற்பழிப்பு குற்றங்களை விரைவாக முடிக்க கட்டமைப்பு மாற்றங்கள் தேவை -

  • தண்டனையின் தீவிரம், மற்றும் உறுதி, . குற்றத்தைத் தடுக்கும் .
  • திருமண கற்பழிப்பு குற்றமாக வேண்டும்.
  • கற்பழிப்பின் விளைவுகள் மீளக்கூடியவை என்பதை உணர கற்பழிப்பிலிருந்து தப்பியவர்களுக்கு மறுவாழ்வு தேவைப்படுகிறது. அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கை போதுமானதாக இல்லை. .2013 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட, நிர்பயா நிதியத்தின் பயன்பாடு இருபது சதவீதத்திற்கும் குறைவாக மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது
  • காவல்துறை என்கவுண்டருக்கு ஆதாரளிக்கும் போது, ​​பாலியல் பலாத்காரத்தை எதிர்ப்பதற்கான அனைத்து தார்மீக அடிப்படையையும் இழக்கிறோம்.

இவற்றில் நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட அக்கறை எடுத்து செயல்படும் போது, நிச்சயம் சமூக மாற்றம் நடந்தே தீரும்.

Kill Rape Culture, Not Rapists

Headlines on rapes need to change. Before we point at people blaming phones, chow, jeans

சனி, 12 ஜூன், 2021

பாலியல் கொடுமைகள் நீங்க வழி என்ன?

 


நவராத்திரியோட கடைசி நாள் விஜயதசமி .கல்வி கடவுள் சரஸ்வதியை கொண்டாடி வித்தைகளில் சிறந்து விளங்க வேண்டிகிட்டு கொண்டு வச்ச புஸ்தகங்களையெல்லாம் எடுத்து அடுக்க ஆம்பிச்சேன்.

அப்ப தான் இது என் கண்ணில் பட்டது.

யாருன்னு தெரியுதா…

இந்த வீடாவது அடையாளம் தெரியுதா?

சரி போகட்டும் இந்த இடம்

ஹாத்ராஸ்.

இந்த குக்கிராமம் உத்தரப்ரதேசத்திலே, அதுவும் நம்ம நாட்டுக்குள்ளே தான் இருக்குன்னு தெரிஞ்சிக்க அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வேண்டாம்.

முதுகெலும்பு உடஞ்சு, கண்ணு, முகம், உடம்பு எல்லாத்தளையும் ரத்தம் பெருக்கெடுத்து ஓட, தன் கிட்டேயிருந்த துணியை போட்டு வாரி சுருட்டி, போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போய், ரத்தம் கொட்டினாலும் பதட்டமே படாம, மெதுவா போலீஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க, என்ன நடக்குதுன்னு புரியாம தவிச்சு போயிருக்கிற அந்த குடும்பத்தை தொல்லை பண்ண வேண்டாம்னு போலீசே சிதைய எரிக்கும் வேலைய செய்யுது. போலீஸ் நம்ம நண்பன்ன்னு வேற எப்படி நிரூபிக்கிறது ?

அந்த சம்பவத்தை பேசும் போது அவங்க அண்ணி சொன்ன வார்த்தைகள் தான் "அவள் படிக்க போயிருந்தால் இப்படி ஒண்ணு நடந்திருக்காது"

உணமை. அதை தான் நம்ம அரசும் பெண்ணைக் காப்பாற்றுங்கள்.. பெண்ணை படிக்க வையுங்கள்" என்கிறது. எவ்வளவு தீர்க்கதரிசனம்?!

வீடு பெண்ணுக்கென்றும் வெளி உலகு ஆணுக்கென்றும் தீர்மானிக்கப்பட்ட ஆதி வேலைப் பிரிவினையிலேயே பெண் கல்விக்கான தடை ஆரம்பித்துவிட்டது. அது இன்றும் பெண்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது.

இது போன்ற காரணத்தினால குறைஞ்சுகிட்டே வர்ற பெண் குழந்தைகளோட விகிதத்தை சரி செய்யவும், பெண் கல்வியை அதிகப்படுத்தவும் அவங்களுக்கு எதிரா இருக்கிற இந்த ஏற்றத்தாழ்வை மாற்றவும் மத்திய அரசு எடுத்திருக்கிற முயற்சியின் அடையாளமா கொண்டு வந்த திட்டங்கள் .பல.

பெண்கல்வின்னு பார்க்கும்போது, அந்தக் காலத்திலே பெண்கள் கற்றவர்களாகத்தான் இருந்திருக்காங்க.

காளிதாசரே குமார சம்பவத்தில் (1-30) உமா கற்ற கல்வி பற்றி இப்படி சொல்றார்

“பூர்வ ஜன்மத்தில் கற்றதெல்லாம் அவளுக்கு நினைவில் இருந்தன. கல்வி போதிக்கப்பட்டவுடன் இவை எல்லாம் நினைவுக்கு வந்தன. இது இலையுதிர்க் காலத்தில் அன்னப் பறவைகள் கங்கை நதிக்குத் திரும்புவது போலவும், இரவு நேரத்தில் மூலிகைச் செடிகளுக்கு அவற்றின் ஒளி திரும்பிவருவது போலவும் இருந்தது”.

கிராமப்புறங்களில், பெண் கல்வியின் நிலை, சொல்லிக்கிற மாதிரி இல்லை. கடைக்கோடிச் சிறுமிக்கும் கல்வி கொண்டு சேர்க்கப்படுவதில் தான் அரசு அக்கறை காட்டணும்ன்னு சொன்னாலும் இதப்பத்தி பெத்தவங்க உணர்ந்தால்தான் அது தன் கடமையும்கூடன்னு புரிஞ்சுக்கிட்டு பிள்ளைகளை படிக்க வைப்பாங்க..அந்த விதத்தில் ஹத்ராஸ் சம்பவத்தினால, அந்தப் பெண்ணின் குடும்பம் மட்டுமில்லே மத்தவங்களும் அதை புரிஞ்சுக்கிட்ட மாதிரி தான் தெரியுது.

ஆனால், எனக்கு சில கேள்விகள் உண்டு. 1.பெண் கல்வியின் நோக்கம், படித்த பெண்களிடையேயாவது நிறைவேறியிருக்கிறதா?

2. பெண் குறித்த சமூகத்தின் கோணல் பார்வை மாறியிருக்கிறதா?

3. பாலியில் பாகுபாடுகள் ஒழிக்கப்பட்டுவிட்டனவா?

4. பெண்களுக்கு எதிராகப் பெருகி வரும் வன்முறைகளிலிருந்து படித்த பெண்களுக்காவது பாதுகாப்பு கிடைத்திருக்கிறதா?

5. குடும்பத்தில், சமூக, அரசியல், பொருளாதார தளங்களில் படித்த பெண்கள் தங்களுக்கு உரிய பங்கையும் முக்கியத்துவத்தையும் அங்கீகாரத்தையும் சமத்துவத்தையும் பெற முடிகிறதா?

கசப்பான உண்மை என்னன்னா இந்தக் கேள்விகளுக்கு பதில் ‘இல்லை’ ன்னு தான் இருக்கும்

இதெல்லாம் மாறணும்னா, ஆண் பெண் சமத்துவம், அனைவருக்கும் பொதுவான மனிதநேயம், மனித உரிமைகள், இதைத் பத்தி பேசிப் ப்ரயோஜனமில்லை. சின்ன வயசிலேயே குழந்தைகளின் மனசிலே பதிய வைக்க, இதெல்லாம் பள்ளிப் பாடங்களாக ஆக்கப்படும்போது தான் உண்மையான மாற்றம் வரும்.

தசரா விற்கு இன்னொரு அர்த்தமும் இருக்கு. தஸ் என்றால் பத்து..ஹரா என்றால் ஓழித்தல் தீமையை ஒழிக்கும் நாள் என்ற அர்த்தத்திலும் எடுத்துக் கொள்ளலாம். அடுத்து வரும் தசராவாவது பெண் குழந்தைக்கு எதிரான தீமையை ஒழித்த நாளாக உண்மையாகக் கொண்டாட.

பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ


திங்கள், 7 ஜூன், 2021

நேற்று பத்திரிக்கையாளர் பிரியாரமணி வழக்கின் தீர்ப்பு மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது? அதன் தாக்கம் பணியிடங்களில் இருக்குமா? தமிழ் ஊடகங்கள் இதை எப்படி கையாளுகின்றன?

 

சனி, 29 மே, 2021

நேற்று பத்திரிக்கையாளர் பிரியாரமணி வழக்கின் தீர்ப்பு மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது? அதன் தாக்கம் பணியிடங்களில் இருக்குமா? தமிழ் ஊடகங்கள் இதை எப்படி கையாளுகின்றன?

 #MeToo இயக்கத்தை அடுத்து முன்னாள் மத்திய மந்திரி அக்பருக்கு எதிராக பிரியா ரமணி பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

அக்பர் ஒரு பத்திரிகையாளராக இருந்தபோது பல தசாப்தங்களுக்கு முன்னர் பாலியல் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டி அவரை அவதூறு செய்ததாக ரமணி மீது 2018 அக்டோபர் 15 அன்று அக்பர் புகார் அளித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டின் காரணமாக வர் அக்டோபர் 17, 2018 அன்று மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

தனக்கு எதிரான #MeToo பிரச்சாரத்தின்போது முன்வந்த பெண்கள் முன்வைத்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர் மறுத்தார்.

தற்போது வெளிவந்த, எம்.ஜே. அக்பர் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் இருந்து நீதிமன்றம் பத்திரிகையாளர் பிரியா ரமணியை விடுவித்தது ஒரு முக்கியமான தீர்ப்பு.

மீ டூ இயக்கம்"வலு பெற்ற போது,துணிந்து சமூக வெளியில், தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பெண்கள் பேச முன் வந்த போது, பலவிதமான கேள்விகணைகள், எதிர்பார்த்தது போலவே, அவர்கள் மீது பாய்ந்தன.

அவர்கள் ஒழுக்கம் விமர்சனம் செய்யப்பட்டது.

இத்தனை காலதாமதமாக வெளிக் கொணர்ந்தற்கு அவர்கள் மீதே தப்பிதமாக காரணம் கற்பிக்கப்பட்டது.

அவற்றை நிரூபிக்க அவர்களால் முடியாது என்றும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கொண்டவர்களை, வயதில் மூத்தவர்களை கேவலப்படுத்தும் செயல் என்று வக்காலத்து வாங்கப்பட்டது.

குற்றம் சாட்டும் பெண்ணின் கண்ணியம் பாழ்போவது. பற்றிக் கூடக் கவலைப்படாமல், குற்றம் சாட்டப்பட்டதாலேயே சம்பந்தப்பட்டவரின் மரியாதை குறைந்து விட்டதாக, அவருக்காக மற்றவர்கள் வாளை சுழற்றினர்!!

இவை எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும் விதமாக வந்துள்ளது இந்த தீர்ப்பு.!!

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான தருணம் இது என்று பரவலாக இந்த தீர்ப்பு பாராட்டப்படுகிறது.

இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பால் அக்பர் தனக்கு எதிராக குற்றச்சாட்டியவர்களில் ஒருவரை ஊமையாக்குவதற்கான (மற்றும் மற்ற அனைவரையும் மிரட்டுவதற்கான) இந்த குறிப்பிட்ட முயற்சியின் தோல்வி, தவறான செயல்கள்.செய்ய நினைக்கும், அதிகாரத்தையும் செல்வாக்கையும் கொண்ட, மற்ற ஆண்களை ஒன்றுக்கு இரண்டு முறையாக சிந்திக்க வைக்கும். .

"சமூக அந்தஸ்துள்ள ஒரு மனிதர்,நற்பெயர் பெற்றவர் கூட பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுஇருக்க முடியும்" என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

பிரபல எழுத்தாளர் அணுராதா ரமணனுக்கு நடந்தது மறக்க் முடியாதே…

அதே போல ‘எந்தவொரு தளத்திற்கு முன்னும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குறைகளைத் தெரிவிக்கும் உரிமை’ உண்டு என்றதும் தீர்ப்பின் சிறப்பு அம்சம்.

விசாகா வழக்கில், பாலியல் துன்புறுத்தல் வழக்குகளுக்கான நடைமுறை வழிகாட்டுதல்கள் இருந்தும், அதன் பற்றாக்குறையை உணர்ந்த நேரத்தில், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நிறைய பெண்களைத் தைரியமாக பேச முன் வர வைக்கும்.

காலதாமதமாக புகார் சொல்வது குறித்து, “பெரும்பாலான நேரங்களில், மூடிய கதவுகளுக்குப் பின்னால் பாலியல் துன்புறுத்தல் கருதப்படுவதை புறக்கணிக்க முடியாது. சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு எதிரான தாக்குதலை அறிந்திருக்க மாட்டார்கள். ரமணி மற்றும் (கசலா வஹாப்) குறிப்பிடும் நேரத்தில் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்களை முறையுடுவதற்கான வழிமுறைகள் இல்லாததை நீதிமன்றம் அறிந்து கொள்கிறது. ”

பாதிக்கப்பட்டவருக்கு பாலியல் துன்புறுத்தலின் தாக்கத்தை சமூகம் புரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது என்று நீதிமன்றம் மேலும் கூறியது.

"கண்ணியத்திற்கான உரிமையின் விலையில் நற்பெயர் உரிமையை பாதுகாக்க முடியாது," என்று அது கூறியது.தான் தீர்ப்பின் உச்சம்

"பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுபவர்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒரு சாதாரண நபராக இருக்கலாம், அவர் புகழ் பெற்ற நபராகவும் இருக்க முடியும் என்பதை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் பெண்களில் பெரும்பாலோர் களங்கம் மற்றும் அவரது தன்மை மீதான தாக்குதல் காரணமாக அடிக்கடி பேச முடியாது. ”

"பெண்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டால் அவர்கள் சமூகத்தில் முன்னேறுவதைத் தடுக்காது" என்று நீதிமன்றம் மேலும் கூறியது.

Priya Ramani: ‘I spoke because women before me spoke up. I spoke so people after me can speak up’

இந்த தீர்ப்பு பெறுவதற்கு போராடிய பிரியா ராமனை வாழ்த்தி சமூகவெளியில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

"இந்த தீர்ப்பு பாலியல் துன்புறுத்தல் பிரச்சினையில், தகுதியான கவனத்தை ஈர்த்துள்ளது" என்றார் ரமணி.

"இது அதிகமான பெண்களைப் பேச வைக்கும் என்று நான் நம்புகிறேன், மேலும் இது சக்திவாய்ந்த ஆண்கள், தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொள்ளும் பெண்கள் மீது பொய் வழக்குகளைத் தாக்கல் செய்வதை ஊக்கப்படுத்தாது என்றும் நம்புகிறேன்" என்றார்.

ஊடகங்களும் ரமணிக்கு ஆதரவாக மகிழ்ச்சியை தெரிவித்தன. பத்திரிகையாளர் ரோஹினி சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், "என்ன ஒரு சண்டை # பிரியரமணி. ஒவ்வொரு பாலியல் வேட்டையாடும் வீழ்ச்சியும் ஒரே வழி." என்றார்.

ராணா அய்யூப் ரமணியுடன் ஒரு படத்தை வெளியிட்டு, "இதை இடுகையிட வேண்டியிருந்தது. பிரியா ராமனின் அன்புக்காக" என்றார்.

தி வயர் அர்ஃபா கானும் ஷெர்வானி, “ஒவ்வொரு முறையும் ஒரு பெண் தனக்காக நிற்கும்போது, ​​அவள் எல்லா பெண்களுக்கும் துணை நிற்கிறாள்” என்று ட்வீட் செய்துள்ளார். "எங்கள் அனைவருக்கும் துணை நின்றதற்கு # பிரியரமணி நன்றி. நீங்கள் எங்கள் ஹீரோ!" என்றது அவர் ட்வீட்.

ஆனால் உண்மையில் வருத்தம் என்னவென்றால் நமது தமிழ் ஊடகங்கள் இந்த தீர்ப்பு குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை..

யார் கண்டது…எந்த புற்றில் என்ன பாம்பு இருக்கிறதோ?!


ஒரு இந்தியனாக இன்று உங்களை அதிர்ச்சி அடையச்செய்த விஷயம் என்ன?

இந்த சம்பவம் குறித்து சிலநாட்கள் முன் நாம் படித்தது ஞாபகம் இருக்கலாம்.

2018 ல் பாலியல் துன்புரூத்தலுக்கு ஆளான பெண்ணின் தந்தையை பட்டப்பகலில் குற்றவாளி கொலை செய்தது பற்றி..

இதோ இவன் தான் அது ..கவரவ் ஷர்மா.சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவன்.

ஏன் செய்தான் தெரியுமா?

பெண்ணின் தந்தை அம்ரிஷ், 2018 ல் அவன் மீது தாக்கல் செய்த வழக்கை திரும்பப் பெற மறுத்ததால்,, அவன் சிறைக்குச் சென்றானாம்.

சட்டம் மற்றும் ஒழுங்கை மீறுவது இந்தியாவின் சில பகுதிகளில் வெளிப்படையாக நடக்கிறது, ..இதோ இந்த வழக்கில் நடந்ததைப் போல …

பொது மக்கள் தான் அதற்கு அதிக விலை கொடுக்கிறார்கள்.

நிலைமை இப்படியிருக்க இன்றைய நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை களைய, அதிக அளவில் பெண் மக்கள் பிரதிநிதிகள் சட்டமன்றத்திலு.ம் பாராளுமன்றத்திலும் தேவை…

ஆனால் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிரதான அரசியல் கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்களில் சொல்லிக்கொள்ளும் அளவில் பெண்கள் இல்லை…சீமான் கட்சியை தவிர்த்து…

அந்த அளவிற்கு தகுதியான பெண்கள் இல்லையா? வெறும் சாதியும் பணமும், ஆண் என்பன மட்டுமே தகுதியாக ஆகிவிடுமா?

பெண்களை கவரும் வண்ணம் தேர்தல் அறிக்கை விட்டவர்களுக்கு, பெண்களையே அதிக அளவில் வேட்பாளர்களாக நிறுத்தும் துணிவு ஏன் இல்லை?

இதை நம் மக்கள் ஒத்துக்கொண்டு பணமும் சாதியும். மட்டுமே தகுதி என்று தேர்வு செய்தால்…

கண்ணை விற்று, சித்திரம் வாங்கலாகுமோ?

இது உண்மையிலேயே இந்திய பிரஜை என்ற முறையில் என்னை அதிர்ச்சியடைய வைத்தது!!,


பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இந்திய நீதிமன்றங்களில் தகுந்த தண்டனை கிடைக்கிறதா?

 


 இந்த கேள்வியை பார்த்ததும் சமீபத்தில் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தான் நினைவுக்கு வந்தது.

பாலியல் குற்றச்ச்சாட்டுக்கு உள்ளான ஒருவனுக்கு பிணை கேட்டு வந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அதற்கு விதித்த நிபந்தனை என்ன தெரியுமா?

"அந்த பெண்னின் கையில் ராக்கி கட்டவேண்டும்"

அத்தோடு நிற்கவில்லை. அந்த 26 வயது குற்றவாளிக்கு பிணை வழங்கிய அந்த உத்தரவில் மேலும் சில நிபந்தனைகளை கேட்டால்…

"ரக்க்ஷா பந்தன் அன்று அந்த பாதிப்பிற்கு உள்ளாகிய பெண்ணிற்கு. ராக்கி கட்டுவதோடு மட்டுமல்லாமல், அவளுக்கு, சகோதரர்கள் கொடுப்பது போல பணமாக ரூபாய் 11,000 கொடுக்கவேண்டும்.

மேலும் அவள் பிள்ளை துணிமணிகள், இனிப்பு வாங்க அவர்களுக்கு ரூபாய் 5000 கொடுக்க வேண்டும்"

இனிப்பு கொடு..கொண்டாடு என்கிறதோ?!😣

நல்ல வேளை. உடன் இடை மறித்தது மாண்புமிகு உச்ச நீதிமன்றம்…🙏

"உயர்நீதிமன்றங்களின் இத்தகைய தீர்ப்புகள், இத்தகைய கொடூரமான குற்றத்தை அற்பமாக்குவதில் தான். முடிவடையும்,.

மேலும் இது போன்ற உத்தரவுகள், அடிப்படையில் அந்த குற்றத்தை இயல்பாக்குவதற்கு வழிவகுக்கும், அது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது ”என்ற கருத்தக்கூடிய வலுவான வாய்ப்பு உள்ளது”. என்று வருத்தம் தெரிவித்ததோடு

அந்த உத்தரவுக்கு தடை விதித்தது,.

அது மட்டுமல்லாமல், கீழமை நீதிமன்றங்கள், இதுபோண்ற வழக்குகளில் பிணை உத்தரவு போடும்போது கருத்தில் கொள்ளவேண்டிய சில வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளது…

அந்த ஏழு கட்டளைகள் என்னென்ன?

  1. குற்றவாளி எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொடர்பு கொள்வதை அனுமதிக்கவோ, கட்டாயப்படுத்துவது போலவோ பிணை உத்தரவு இருக்கக்கூடாது.அந்த நிபந்தனைகள், புகார்தாரரை குற்றவாலி மேலும் எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாதவாறு இருக்கவேண்டும்.
  2. குற்றம் சாட்டப்பட்டவர்; பாதிக்கப்பட்டவரை துன்புறுத்துவதற்கான சாத்தியமான அச்சுறுத்தல் இருக்கலாம் என்று நீதிமன்றம் நம்புவதற்கான சூழ்நிலைகள் இருந்தாலோ அல்லது அப்படியொரு அச்சம் வெளிப்படுத்தப்பட்டாலோ, காவல்துறையினரிடமிருந்து அது சம்பந்தமான அறிக்கைகளை பெற்றபின், அந்த பெண்ணின் பாதுகாப்பின் தன்மை தனித்தனியாக பரிசீலிக்கப்பட்டு பொருத்தமான உத்தரவு பிறப்பிக்கவேண்டும். பாதிக்கப்பட்டவருடன் எந்த தொடர்பும் செய்யக்கூடாது என்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு கூடுதலாக; ஒரு உத்தரவும் போடவேண்டும்.
  3. இது போன்ற வழக்குகளில், ஜாமீன் வழங்கப்பட்டவுடன், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக புகார்தாரருக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட வேண்டும் மற்றும் இரண்டு நாட்களுக்குள் அவருக்கு / அவளுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவின் நகல்; கொடுக்கவேண்டும்.
  4. ஜாமீன் நிபந்தனைகள் மற்றும் உத்தரவுகளில், பெண்களை பற்றியும் சமூகத்தில் அவர்களின் இடம் பற்றிய ஒரே மாதிரியான அல்லது ஆணாதிக்க கருத்துக்கள் பிரதிபலிப்பதைத் தவிர்க்க வேண்டும், மேலும் கண்டிப்பாக குற்றவியல் நடைமுறை சட்டத்தின் தேவைகளுக்கு ஏற்பஉத்தரவு இருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், புகார்தார்ரின் உடை, நடத்தை அல்லது கடந்தகால “நடத்தை” அல்லது “ஒழுக்கநெறிகள்” பற்றிய விவாதம், ஜாமீன் வழங்கும் தீர்ப்பில் நுழையக்கூடாது;
  5. நீதிமன்றம் பாலினம் தொடர்பான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பளிக்கும் போது, ​​பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையில் திருமணம் செய்து கொள்ள, பரிந்துரைக்கவோ கூடாது (குற்றம் சாட்டப்பட்டவருக்கும் உயிர் பாதிக்கப்பட்டவருக்கும் இடையில் எந்தவொரு வடிவத்திலும் மத்தியஸ்தம் பரிந்துரைக்க அல்லது கட்டாயப்படுத்தக் கூடாது. அது அவர்களின் அதிகாரங்களுக்கும் அதிகார வரம்புக்கும் அப்பாற்பட்டது என்பதால் சமரசம் செய்யக்கூடாது.
  6. ;நீதிபதிகள் வழக்கு விசாரணையின் போதும் அல்லது வாதங்களின் போதும் தங்கள் உணர்வுத்திரன் வெளிப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்,
  7. நீதிபதிகள் ஒரு பக்கச்சார்புடனோ பாதிக்கப்பட்ட பெண்ணின் நம்பிக்கையை குறைக்கக்கூடிய அல்லது அசைக்க்கக்கூடிய எந்தவொரு வார்த்தையையும் குறிப்பாக பேசவோ அல்லது எழுதவோ பயன்படுத்தக்கூடாது,

இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் அட்டர்னி ஜெனரலின் உதவியை கோரியுள்ளது.

மேற்படி. ஜாமீன் உத்தரவை “நாடகம்” என்று கூறி, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பேசும்போது,. ~இதுபோன்ற உத்தரவுகளை கண்டிக்க வேண்டியது அவசியம் என்றும், நீதிபதிகள் பாலின உணர்திறன் குறித்த பயிற்சியையும் பெற வேண்டும்" என்றும் பெஞ்சிற்கு தெரிவித்திருந்தார்.

" நீதி வழங்கினால் மட்டும் போதாது. நீதி வழங்கப்படுகிறது என்ற தோற்றமும் இருக்க வேணடும்" என்ற விதிக்கேற்ப, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இந்திய நீதிமன்றங்களில் தகுந்த தண்டனை கிடைக்கிறதா என்பதை தெரிந்துக்கொள்ள, மேற்கண்ட கட்டளைகளை அனைத்து நீதிமன்றங்களும் பின்பற்றுகின்றனவா என்று நாமும் உன்னிப்பாக கவனிப்போம்..

நமக்கும் சமூக கடமையுள்ளதே

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...