"காவல் நிலையத்த்தில் காதல் ஜோடி தஞ்சம்..போலீசார் மாலை மாற்றி திருமணம் செய்து வைத்தனர்"
இது போன்ற செய்திகள் முன்னர் அடிக்கடி செய்தித்தாளில் வரும்..இல்லையா?!
அது செல்லுமா?ன்னு பார்க்கிறதுக்கு முன்னாலே, அது எந்த மாதிரி திருமணம்ன்னு பார்ப்போம். முஸ்லிம்களுக்கும் கிரித்தவர்களுக்கும் அவர்கள் . மதகுருமார்கள் செய்து வைப்பது தான் செல்லும் என்பதால், அவர்களுக்கு காவல் நிலையத்தில் திருமணம் செய்து வைத்ததில்லை. இந்துக்களுக்கு மட்டுமே இவ்வகையில் செய்து வைக்கப்பட்டது.
அந்த மதத்தில் மட்டும் எப்படின்னு பார்க்கனும்னா, இந்து திருமணங்கள் சட்டம் 1955 மூன்று விதமான திருமணங்களை அங்கீகரிக்கிறது..
தடுக்கப்பட்ட உறவுமுறை இல்லாத, , ஏற்கெனவே வாழ்க்கை துணை இல்லாத மேஜரான ஒரு இந்து ஆணும் பெண்ணும்
- சம்பிரதாயங்களோடு ஹோம குண்டலத்தின் முன்பு அக்கினி வளர்த்து, கன்யா தானம் செய்து, தாலி கட்டி, ஏழு சுற்று வலம் வந்தால் திருமண்ம் முற்றுப் பெறும்.
அல்லது
2. காலம்காலமாக நடக்கும் முந்தைய சம்பிரதாய அடிப்படையில் நடக்கும் திருமணம்.அந்த வகையில் பண்டைய காலத்தில் இருந்து நடப்பவை எட்டு வகையானது.
இந்த காந்தர்வ மணம், ராட்சஷ மணம் போன்றவையெல்லாம் இதுக்குள் அடக்கம்.!!
இதில் தான் தமிழக அரசு, 27.11.1967 ஆம் ஆண்டில் ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்து, இந்து திருமணச் சட்டத்தில் பிரிவு 7 ஏ அறிமுகப்படுத்தியது. அது ஜனாதிபதியின் ஒப்புதலை ஜனவரி 17, 1968ல் பெற்று, ஜனவரி 20 முதல் நடைமுறைக்கு வந்தது. அதன்படி,
3. மேஜரான இரண்டு இந்துக்களிடையே. மாலை மாற்றிக்கொண்டோ, மோதிரம் மாற்றிக்கொண்டோ, அல்லது பரஸ்பரம் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டு செய்யப்படும் "சுயமரியாதை திருமணத்திற்கு" - சட்ட அங்கீகாரம் கொடுத்தது.
இது தான் அந்த அரசு பதவியேற்றதும் கொண்டு வந்த முதல் சட்டம்!! சாதி மறுப்பு திருமணங்கள் அதிகமாகி, அதன் மூலம் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் நீங்கும் என்பதால் இவை பெரிதும் வரவேற்கப்பட்டன..
இந்த சட்டத்திருத்தம் தமிழ்நாட்டிற்கு மட்டுமே செல்லும்…
இந்த சட்டத் திருத்தத்தின்படி, ஒரு இந்து திருமணத்தை நடத்தி வைக்க, வைதீக காரியம் செய்து வைப்பவர் தேவையில்லை. யாராவது ஒருவர் முன்னிலையில் இந்த திருமணம் நடந்தால் போதும். ஏழு அடிகள் சுற்றி வரவும் தேவையில்ல்லை..
இதைக் கொண்டு தான், காதலித்த ஜோடி, வீட்டில் எதிர்க்கிறார்கள் என்று, போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்த போது, அங்கு இவர்களுக்கு மாலை மாற்றி திருமணம் செய்து வைத்த வேலை எல்லாம் நடந்தது!!
ஆனால் சுமார் 50 வருடம் கழித்து, நவம்பர் 2015ல், இந்த சட்டத்திருத்தத்தையும் சுயமரியாதை திருமணத்தையும் எதிர்த்து , இது சட்டவிரோதம், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதுன்னு அறிவிக்க கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பு ஒரு பொதுநல வழக்கு வந்தது.
வழக்கு போட்ட வழக்கறிஞர் அசுவத்தாமன் வைத்த வாதம் என்னன்னா, "இந்த சட்டத்திருத்தமே, அரசியல் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது, அதோடு சாஸ்திர சம்ப்ரதாயத்துக்கு எதிரானது"ன்னு கொடி பிடிச்சார்..!!
ஏன் திடீர்ன்னு இத்தனை வருஷம் கழித்து, இந்த கேள்வி வந்துச்சுன்னு ஒரு கேள்வி வருமே..அதை இந்த பதிவை முழுசா படிச்ச பின்னாடி புருஞ்சுக்குவீங்க!!
அந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், "இந்து மதமே பன்முகத்தன்மை கொண்டது, அதனால், அந்தந்த பகுதியையும் அதில் நிலவும் வழக்கத்தையும் பொறுத்து,பல வகையான திருமணங்கள் பாரம்பரியமாக உள்ளன. பிரிவு 7-ஏ (1968 இல் தமிழ்நாடு அரசாங்கத்தால் செருகப்பட்டது) ஒரு குறிப்பிட்ட வகையான திருமணத்தை - சுயமரியாதை திருமணங்கள் - இரண்டு இந்துக்களிடையே செய்வதை ஏற்கிறது.. அதுவும், எளிமையான வகையான இது இப்போது அரை நூற்றாண்டு காலமாக காலத்தின் சோதனையை தாண்டியும் உள்ளது ”ன்னு சொல்லிட்டது.
"ஏதோ இந்த வகை திருமனத்த்தில் புனிதத்தன்மை குறைவா இருப்பது போல இந்த பொது நல வழக்கு சொல்ல வந்தது" என்று சொன்ன உயர் நீதிமன்றம், "தனிப்பட்ட சட்டத்தின் இத்தகைய விஷயங்களில், சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தேர்ந்தெடுக்கும் விருப்பம் என்பது, அரசியலமைப்பு சட்டத்தின் எந்தவொரு ஏற்பாட்டினாலும் பாதிக்கப்படும் என்று கூற முடியாது, ”என்றது.
இந்த வழக்கிற்கு முன்னால், இன்னொரு வழக்கிலும் சுயமரியாதை திருமணத்தை பற்றிய பேச்சு வந்தது..அதுவும் எப்படி? பின்னாடி ஒரு சினிமா படமே எடுக்கிற அளவிற்கு.ஒரு முன்னோடி தீர்ப்பா அமைஞ்சது.!!
ஆனால் இந்த வழக்குகளின் விசாரணையின் போது வெளிப்பட்ட விஷயங்கள், அப்போது பரபரப்பான செய்திகள்!!"
பாலகிருஷ்ணன் பாண்டியன் என்பவர் 2013ல் ஒரு ஆட்கொணர்வு வழக்கு போடுறார் ..அதாவது சட்டவிரோதமா அடைத்து வைக்கப்பட்டுள்ள தன் மனைவி 20 வயது அகிலாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தணும்னு சென்னை உயர்நீதிமன்றத்தில் போடுறார்.சரி..வழக்குகளுக்கு உள்ளே போவோம்..
- அதேபோல ராம்பிராசத்தும் தன் மனைவி 21 வயசான ஜெயந்தியை கேட்டு மனு போடுறார்.
- இது போல, 21 வயசிலிருந்து 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தங்கள் மனைவிகள் அவர்கள் பெற்றோரின் காவலில் இருந்து மீட்க கேட்டு போடும் வழக்குகளில், இந்த திருமண பதிவு சான்றிதழ் தான் அதுக்கு ஆதாரமா காட்டப்படும்.நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட பெண்களை ஆஜர் செய்ய வைத்து, விசாரிக்கும்.
- .இது போன்ற சமயத்தில் தான், இந்த மாதிரி வழக்குகளில், பெரும்பான்மையான திருமணங்கள் பதிவு செய்யப்பட்டது சென்னை வடக்கு மற்றும் ராயபுரம் பதிவு அலுவலகம்னு தெரியுது..அதே போல அந்த திருமண பதிவு சர்ட்டிபிக்கேட்டை வச்சி, கோர்ட்டும் சம்மன் அனுப்பி, ஆஜராகும் பெண்களில் நிறைய பேர், அந்த சான்றிதழ் போலின்னும், தனக்கு அது போல ஒரு கல்யாணமே நடக்கவே இல்லைன்னு சொல்றது அதிகம் ஆயிட்டு இருந்தது .
- இந்த வழக்கிலேயும் அடைத்து வைக்கப்பட்டதா சொல்லப்பட்ட அகிலாவிற்கு சம்மன் அனுப்பி அவர் ஆஜரான பொழுது, " தான் அது போன்ற எந்த திருமணத்தையும் செய்யவில்லை என்றும் அந்த பதிவு சான்றிதழ் தன்னுடைய சம்மதம் இல்லாமல் பெறப்பட்டது என்றும் அது போலியானது" என்றும் சொல்லியிருந்தார்
- அந்த வழக்கில் மனுதாரரின் பிரமாண பத்திரத்தை நீதிமன்றம் ஆராய்ந்து பார்த்த பொழுது, தானும் அந்த பெண்ணும் காதலித்து வந்ததாகவும் தாங்கள் இருவரும் 2013ல் பெற்றோர் விருப்பத்தை மீறி வடபழனி கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் அன்றைய தேதியில் அந்த திருமணத்தை சென்னை வடக்கு பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டு இருந்திருக்கிறார் .
- ஆனால் இந்த திருமண பதிவு சான்றிதழை ஒப்பிட்டு பார்க்கும் போது அதில் திருமணம் அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தில் நடந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது!!
- ராம் பிரசாத் தாக்கல் செய்த இன்னொரு வழக்கில், சம்பந்தப்பட்ட ஜெயந்தி என்பவர் ஆஜராகி ,இந்த மனுதாரர் தன் தகப்பனார் தன் வீட்டில் இன்டீரியர் டெக்கரேஷன் செய்ய வந்த தச்சு தொழிலாளி என்றும் அவருடன் தான் ஒன்று இரண்டு தடவை பேசி இருப்பதாகவும் , தான் ஐ.ஏ. எஸ். தேர்வுக்கு தயாராகிக் கொண்டு வருவதை தெரிந்து கொண்ட அவர், தன்னிடம் ஒரு சாமியாரிடம் போய், அவருடைய அருளாசி கிடைத்தால் தன்னால் வெகு சுலபமாக அந்த பரீட்சையை பாஸ் செய்யமுடியும் என்று கூறியதால் அதன் அடிப்படையில் தான் அந்த சாமியாரை சென்று பார்த்தபோது அவர் தனக்கு வசியம் செய்தார் என்றும், சிவகுமார் என்ற வழக்கறிஞர் முன்னிலையில் முன்னிலையில் ஜெயந்தி திருமணம் செய்துக் கொண்டதாக சொன்ன சான்றிதழ் பொய்யானது என்றும் தனக்கு அந்த வழக்கறிஞரை தெரியாது என்றும் அவருடைய அலுவலகம் எங்கே இருக்கிறது என்று தெரியாது என்றும் அதுபோல ஒரு திருமணம் நடந்ததாக சொல்வது பொய் என்றும் சொல்லியிருந்தார்
- இந்த சமயத்தில் அருண் என்பவர் ஒரு இடைக்கால மனு போட்டு இது போல பொய்யான திருமணம் போகஸ் திருமணங்களில் பாதிக்கப்பட்ட நபர் என்று சொல்லி, தான் ஹிந்து என்றாலும் ஒரு கிறிஸ்தவ பாதிரியார், தனக்கும் இன்னொரு பெண்ணிற்கும் திருமணம் நடந்ததாக சொல்லி ஒரு சான்றிதழ் அளித்து இருந்தார் என்றும் இது சம்பந்தமாக ராயபுரம் பதிவு அலுவலகத்திற்கு சென்ற பொழுது அங்கு நிறைய வழக்கறிஞர்கள் இருந்ததை தான் பார்த்ததாகவும் அவர்கள் இதுபோன்ற பொய்யான திருமணங்கள் நடந்ததாக சொல்லி அதனை பதிவு செய்து அதன் மூலம் சட்ட விரோத செயல்கள் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள் என்றும், இதில் ஆண் பெண் இரண்டு தரப்பினரும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
- சந்தேகம் அதிகம் வலுக்க இந்த திருமண பதிவு அலுவலகத்தில் வழங்கப்படும் இந்த திருமணப்பதிவு சான்றிதழைக் கொண்டு, அது போன்ற ஒரு திருமணமே நடக்கவில்லை என்று சொல்லும் ஒரு பெண்ணிற்கு அந்த கணவன் என்று சொல்லப்படுபவர் மூலம் இது போன்ற வழக்கு போட்டு மிகுந்த பிரச்சனை ஏற்படும் என்பதும், பெண்ணின் குடும்பத்திற்கு களங்கம் ஏற்படக் கூடும் என்பதால் எந்த மாதிரி நடைமுறைகள் அந்த திருமண பதிவு அலுவலகத்தில் இதுபோன்ற திருமணங்களை பதிவு செய்வதில் செய்யப்படுகிறது என்பது குறித்தும் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினரையும் வரவழைத்து அவர்களுடைய அடையாளத்தை உறுதி செய்து திருமணத்தில் அவருடைய சம்மதத்தையும் திருமணத்தையும் உறுதி செய்து, ஏதேனும் பதிவேட்டில் அது பதிவு செய்யப்பட்டு வருகின்றனவா என்பது குறித்து தெரிந்துகொள்ள சிபிசிஐடி தலைமை இடத்திற்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இது சம்பந்தமான அறிக்கை ஒன்று, ஒரு மாத காலத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது
- அதே போல ஒரு காவல்துறை எஸ்.பியும் விசாரணை செய்து, ஒரு அறிக்கை தாக்கல் செய்தார்.அதில் அவர் கண்டு பிடித்தவை பயங்கரம்!!
- சென்னை வடக்கு பதிவு அலுவலகத்தில், 2013ல் மட்டுமே சுமார் 120 வழக்கறிஞர்கள் 1600 திருமணத்தை நடத்தியதாக பதிவு செய்துள்ளார்!!
- இராயபுரம் பதிவு அலுவலகத்தில் மட்டும் 2013ல் சுமார் 50 வழக்கறிஞர்கள் மட்டுமே, சுமார் 2000 திருமணங்களை நடத்தி இருந்ததாக பதிவு செய்துள்ளனர்.
- அதுவும் சில வழக்கறிஞர்கள் ஒரே நாளில் பத்து பதினைந்து திருமணங்கள் நடத்தியுள்ளதாக சொல்லியுள்ளனர்.
- இதில் ஒரு வழக்கறிஞர் வழக்கறிஞர் சங்க கட்டிடத்திலேயே கிட்டத்தட்ட 200 திருமணங்களை செய்ததாக குறிப்பிட்டு இருந்திருக்கிறார்
- அதுவும் ஏப்ரல் மே ஜூன் மாதங்களில் திருமணப்பதிவு அதிகம் நடந்துள்ளது.
அப்போது தானே அந்த கல்லூரி காலம் முடிவடையும் நேரம்!!
பிரிவு நேர இருப்பதால் அவர்களுடைய திருமணத்தை பதிவு செய்ய வேண்டியது அவசியமாக இருக்கிறது
- அதுவும் ஒரு வழக்கறிஞர் எல்லாம் சனி, ஞாயிறு தவிர எல்லா நாளிலும் பதிவு செய்துள்ளார்.!!
- அதுபோல இந்த திருமணங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினரை குறித்து ரகசியமாக விசாரிக்கும் பொழுது
- பெரும்பான்மையானவை காதல் திருமணம்!!
- சம்பந்தப்பட்டவர்கள் நிரந்தர முகவரி வைத்திருந்ததும், சென்னையில் அல்லது சுற்று வட்டாரத்தில், வேலைக்கோ, கல்லூரிக்கோ போய் கொண்டிருந்தது தெரியவந்தது அது தான் சென்னையில் திருமணம் நடந்ததாக பதிவு செய்யப்பட்டதற்கான காரணம்.
- இரண்டாவது இந்த பெருமையான பெரும்பான்மையான திருமணங்கள் காதல் திருமணங்கள் என்றதனால் அந்த திருமணம் பதிவு செய்யப்பட்ட நாள்வரையும் அவர்களுடைய பெற்றோருக்கு அது குறித்த விவரம் தெரியாது .
எல்லோருக்கும் அலைபாயுதே ஷாலினின்னு நினைப்பு!!
கல்யாணத்துக்கு பெற்றோர் ஏற்பாடு செய்யும்போது தான், இந்த பூகம்பம் வெடிக்கும்!!இது பெற்றோருக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சி கொடுக்கும்!!
- வழக்கில் உள்ள சீரியஸ் தன்மை உணர்ந்து உடனடியாக தமிழ்நாடு பார் கவுன்சில், வழக்கறிஞர் சங்கத்திற்கும் இந்த இரண்டு பதிவு அலுவலகத்தில் பதிவு அலுவலர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது அவர்கள் இதுகுறித்து பதில் சொல்லுமாறு கேட்கப்பட்டது.
- பார்கவுன்சில் தரப்பில் , "வழக்கறிஞர் சட்டத்தின்படி வழக்கறிஞர் என்பவர் தான் பதிவு செய்யும் பொழுது, தனியார் இடத்திலும் அரசாங்கத்திலோ எந்த பணியும் செய்யக்கூடாது என்றும் நீதித்துறை சம்பந்தப்பட்ட பணிகள் மட்டுமே செய்ய வேண்டும் என்பதாலேயே அது போன்ற ஒரு தடை விதிக்கப்பட்டது . ஆனால் திருமணங்கள் நடத்தி வைப்பது என்பது, எந்த விதத்திலும் வழக்கறிஞர் தொழில் சம்பந்தப்பட்டதாக ஆகாது . இது சங்க விதிமுறைகளுக்கு மாறாக இருக்கிறது ஆனால், அது குறித்த புகார் எதுவும் தங்களுக்கு இதுவரை வரவில்லை அது போன்ற புகார் இனி வரும் பொழுது அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் "என்றனர்.
- வழக்கறிஞர் சங்க தலைவர் , "தங்களுடைய வழக்கறிஞர் சங்க கட்டிடத்தில் இதுபோன்ற திருமணம் எந்த வழக்கறிஞர் நடத்தியதாக தெரிய வந்தால், தாங்கள் உடனடியாக அவர்களை சங்கத்தில் இருந்து விலக்கி வைக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.
- திருமண பதிவு அலுவலர்கள் இருவரையும் விசாரித்தபோது அவர்கள் "சில குறிப்பிட்ட வழக்கறிஞர்கள், திருமணத்தை நடத்தி பதிவு செய்வது மட்டுமே, தங்களுடைய தொழிலாக வைத்திருக்கிறார்கள் , அந்த திருமண பதிவு விதிமுறைகள் 2009ன் படி அதில் சொல்லப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து பதிவு செய்யுமாறு கூறும் பொழுது, அதனை பதிவு செய்வதைத் தவிர நிராகரிப்பதற்கான எந்தவித அதிகாரமும் தங்களுக்கு இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர் .அது போல ஏதேனும் விவரம் கேட்டாலும், வழக்கறிஞர்கள் தங்களிடம் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டனர், தரக்குறைவான வார்த்தைகளில் பேசியும் தங்களை தாக்கவும் முனைந்தனர் என்பதற்கான ஆதாரமாக சிசிடிவி புடேஜ் காண்பித்தனர் இதையெல்லாம் பார்த்து அதிர்ந்துபோனது நீதிமன்றம்
- வழக்கறிஞர் சங்க தலைவர் குறுக்கிட்டு, பல பதிவாளர்கள், தவறான நடவடிக்கை மேற்கொள்கிறனர்.இதையும் கணக்கில் கொள்ளவேண்டும் என்று சொன்னபோது நீதிபதிகள், " ஒரு தவறு என்பது இன்னொரு தவறை சரி செய்வது ஆகாது "என்று அதனை மறுத்தனர்
- அதே சமயத்தில் குடும்ப நல நீதிமன்றத்தில் , ,விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குறித்த பட்டியல் வாங்கிப் பார்த்தபோது "திருமண பதிவு சான்றிதழ் செல்லாது" என்று கூறியே ஏகப்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரியவந்தது
- இது போன்ற வழக்குகள் விசாரணைக்கு வரும் பொழுது இந்த திருமணத்தை நடத்தி வைத்ததாக சொல்லப்படும் வழக்கறிஞர் "வைதீகர்களை", இன்னொரு வழக்கறிஞரால் குறுக்கு விசாரணை செய்யப்படும் பொழுது, எந்த அளவிற்கு ஒரு வழக்கறிஞர் இன்னொரு வழக்கறிஞரை எதிர்த்து வழக்கை நடத்துவார் என்பது குறித்த சந்தேகம், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஏற்படும் என்றும் இது வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்லாமல் நீதிமன்றத்தின் அலுவலர்கள் என்ற முறையில் நீதிமன்றத்தின் மீதும் ஒரு தவறான நம்பிக்கையை மக்கள் மத்தியில் சமுதாயத்தில் ஏற்படுத்திவிடும் என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்
- போதிய உலக அனுபவம் இன்றி, தங்கள் காதலை திருமணத்தில் முடிக்கும் அவசரத்தில் வரும் நபரை, ஒரு கட்சிக்காரராக பார்க்காமல், உண்மையான சாதி வேறுபாடற்ற சமூக அக்கறையுடன், அந்த திருமணம் நடத்த எண்ணினால், அவர்களுக்கும் அவர்கள் பெற்றோருக்கும் புரியவைத்து, எல்லோர் முன்னிலையில் நடத்த வேண்டுமே ஒழிய, ரகசியமாக, தன் அலுவலகத்தில் நடத்துவது என்பது ஒரு வழக்கறிஞருக்கு சரியல்ல.அதுவும் "சம்மதம்" என்பது திருமணத்தில் முக்கியம் என்னும்போது, 18 வயதான ஒரு பெண், அப்போது தான் பெற்றோர் கெடுபிடியில் இருந்து நீங்கியதாக எண்னும் பெண்,காதலனின் ஆளுகைக்கு உட்பட்டு இருக்கும்போது "சம்மதம்" என்பது?
- இந்த சுயமரியாதை திருமணங்கள் சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டது குறித்து பின்னோக்கி அதனுடைய வரலாற்றை ஆராய்ந்த நீதிமன்றம் "இந்த மாலை மாற்றுதல் மட்டுமே உள்ள இந்த சுயமரியாதைத் திருமணங்களை தந்தை பெரியார் ஆதரித்து, அதைக் கொண்டுவந்ததன் நோக்கமே, சாதி அற்ற ஒரு சமுதாயத்தை முன்னோக்கி எடுத்து வைக்கவே. தவிர அவரே அதை ஒரு பொது வெளியில் தான், பொது நிகழ்ச்சியாக தான் நடத்தினார் என்றும் இந்தத் "திருமணம்" என்பது ஒரு கொண்டாட்டம் என்ற வகையில் தான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமே தவிர , ரகசியமாக அறிமுகம் இல்லாத நபர்களின் முன்னிலையில் நடப்பது திருமண கொண்டாட்டம் என்ற கணக்கிலேயே வராது என்றும் மேலும் கண்டிப்பாக ஒரு வழக்கறிஞரின் அலுவலகம் என்பது திருமணம் செய்விக்கும் இடமே ஆகாது என்றது.
- மேலும் 8 வகையான திருமணங்கள் மட்டுமே நம்முடைய இந்து மதம் காலங்காலமாக பாரம்பரிய ம் என்று அனுமதித்து வரும்பொழுது, இந்த வகையான புது மாதிரியான திருமணத்தை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள இயலாது என்றது.
- இந்த திருமண பதிவு செய்யப்படுவது கட்டாயம் என ஆக்கப்பட்டது 2009இல் அதற்கான விதிகள் கொண்டுவரப்பட்டதன் நோக்கமே, இந்த திருமணங்கள் நடத்தப்பட்டதற்கான ஆதாரம் இன்மையால் அது சம்பந்தப்பட்ட பெண்களும் அவர்களுக்கு இந்த உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு உண்டான சொத்துரிமை, ஜீவனாம்சம் , வாரிசு உரிமை, போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது என்பதனால் , உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்க மாநில அரசுகள் இந்த திருமணங்களைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் எண்ணத்தில், கொண்டுவந்தது அதே சமயத்தில் இந்த பதிவு செய்வது என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினர் நேரடியாக தான் கொண்டு வந்த தகவலை பதிவு செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தாமல் அவர்கள் நேரில் ஆஜராகலாம் அல்லது திருமணம் நடத்தப்பட்ட 90 நாட்களுக்குள் தபால் மூலமாகவும் அனுப்பி பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது அதுபோன்ற ஒரு நிலையில், இந்த வழக்கறிஞர்கள் அதனை பதிவு செய்வதற்காக பதிவு அலுவலகத்தை அணுக வேண்டிய அவசியமே இல்லை என்றது.
- ஆனால் மற்ற ஆவணங்களை பதிவு செய்வதற்கு வழக்கறிஞர்கள் பதிவு செய்வது போலத்தான், இந்த ஆவணங்களை பதிவு செய்வதற்கு அவர்கள் செல்வதற்கான உரிமை உள்ளது என்று வழக்கறிஞர் சங்கத் தலைவர் கருத்து தெரிவித்தார். ஆனால் அதை நிராகரித்த நீதிமன்றம் மற்றவை பொறுத்தவரைக்கு, ம் அது சட்ட சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏதும் இருந்தால், அதை தெளிவு படுத்திக் கொள்வதற்காக, பதிவாளர் இதனை தயார் செய்த வழக்கறிஞரை கேள்வி கேட்பதற்காக ஆஜராகலாம். அதில் ஒன்றும் தவறில்லை ஆனால் இது போன்ற திருமணங்கள் பதிவு செய்வதில் சந்தேகம் ஏதும் இருப்பின் ,தரப்பினருக்கு சம்மன் அனுப்பி அவர்கள் ஆஜராகி அவர்களுடைய அடையாளங்களை உறுதி செய்து கொண்டு அவர்களுடைய சம்மதம் இந்த திருமணத்திற்கு உள்ளதா, என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் இதுபோன்ற பார்ட்டிகள் ஆஜராகும் சமயத்தில் வேண்டுமாயின், அவர்களுடன் இருக்கலாம் என்றும் இதில் திருப்தி அடையவில்லை என்றால் பதிவு அலுவலர்கள் அதை தங்கள் ஏற்றுக் கொள்லாததற்கான காரணங்களை பதிவு செய்து, அந்த திருமணத்தை பதிவு செய்ய மறுக்கலாம் என்றும் அது போன்ற சந்தர்ப்பங்களில் தங்களுடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருந்தால், தங்களுடைய அரசு கடமையை செய்வதற்கு தடுக்கிறார்கள் என்றால் உடன் போலீசாரின் பாதுகாப்பு வேண்ட, இந்திய தண்டனை சட்டத்தில் இடம் உள்ளது என்றும் தெரிவித்தனர் .மேலும் இந்த விதி இந்த விதிகளை எல்லாம் அனைத்து பதிவு அலுவலர்களும் ஒருமித்த வகையில் செயல்படுத்தினால் யாருக்கும் எந்த அச்சுறுத்தலும் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை என்றும் அறிவுறுத்தியது நீதிமன்றம்
- தங்களுடைய தொழிலுக்கு அப்பாற்பட்ட இதுபோன்ற திருமணங்களை நடத்தியதாக சொல்லப்படும் வழக்கறிஞர்கள் மீது சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் எழுப்பினால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் தீர்ப்பில் சொல்லப்பட்ட காரணங்களை வைத்து பாதிக்கப்பட்ட பெண்ணும் ஆணும் அந்த திருமணத்தை ரத்து செய்யக்கோரி இந்த தீர்ப்பையே பயன்படுத்தி கொள்ளலாம் என்றது..
தீர்ப்பு நாள் 17..10.2014
வழக்கறிஞர்கள் தங்கள் அலுவலகத்தில் வைத்து திருமணம் செய்து வைப்பதே சரியல்ல என்னும்போது, காவல் நிலையத்தில்?
நீங்களே சொல்லுங்கள்!!☺️
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக