ஞாயிறு, 6 ஜூன், 2021

தாம்பத்திய சுகத்திற்கும் விவாகரத்திற்கும் சம்மந்தம் உண்டா?

 


"கல்யாணம்"ன்னு பேசினால், முன்னாடியெல்லாம் பொண்ணுங்க தான் வெக்கப்படுவாங்க..ஆனால், இப்பலலாம் இந்த பசங்க வெட்கப்படுறதைப் பார்த்தா சிரிப்பு தான் வருது…

கல்யாணம் என்றாலே."தாம்பத்யம்" மட்டும் தான்னு நினைக்க வக்கிறமாதிரி தானே சினிமாவும் காட்டுது!!

கிராமப்புறங்களில் இருக்கிறவங்க, அங்கேயிருந்து வந்தவர்களுக்கு தெரியும் .அங்கே இருக்கும் குடும்பங்களை இத்தனை "தலைக்கட்டு"ன்னு கணக்கு வச்சிரூப்பாங்க. ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு ஆணுக்கு கல்யாணம் ஆச்சுன்னா, அவன் தனியா ஒரு "தலைக்கட்டு"ன்னு பிரிப்பாங்க…

கல்யாணம் ஆகும் போது தான் அவனுக்கு ஒரு மரியாதையும் அந்தஸ்தும் சமூகத்திலே கிடைக்குது. ஏன்?. திருமணம் செய்து, அந்த பெண்ணோடு அவன் இல்லறம் நடத்தி, அதன் மூலம், தான் "அறம்" செய்ய ஆரம்பிக்கிறான் என்பதால் தான் அந்த மரியாதை….

"மகிழ்ச்சியையும் மன நிறைவையும் ஒருவருக்கு தருவது அன்பா அறமா"ன்னு சமீபத்தில் ஒரு பட்டிமன்றம் பார்த்துக்கொண்டிருந்தேன். இலங்கை ஜெயராஜ் அவர்கள் தலைமையிலானது.

என்ன தீர்ப்பு சொல்லியிருப்பார்ன்னு நினைக்குறீங்க?

இது "முட்டையில் இருந்து கோழி வந்ததா ..இல்லே கோழியிலேயிருந்து முட்டை வந்ததான்னு கேட்கும் முடிவில்லா கேள்வி…"என்றுவிட்டு, திருவள்ளுவர் சொன்னதை மேற்கோள் காட்டி, " அறம்" இல்வாழ்க்கையின் பயன் என்றால், அதற்கு இருக்க வேண்டிய "பண்பு" தான் "அன்பு " என்றார்.

அப்ப. இல்லறம் நடத்த தேவையானது ரெண்டு பேருக்கும் நடுவிலே இருக்க வேண்டிய அன்பு..தான் இல்லையா..?

அது காதல் திருமணமோ நிச்சயித்த ஒன்றோ…எதுவானாலும்.

காதலின் அடிப்படை அன்பு தானே என்றால், நிச்சயித்த திருமணத்தில், எப்படி எங்கியோ பிறந்து வளர்ந்த இரண்டு பேருக்கும் நடுவிலே திடீர்னு அன்பு வரும்?

இப்பலாம் நிச்சயம் செய்தா, கல்யாணம் நடக்கிறதுக்கு ஆறு மாசமாவது ஆகுது.அதுல அன்பு செய்தல் கூடும்!!

ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே இயற்கை ஏற்படுத்தி வைத்த ஈர்ப்பு தான், அந்த அன்பை வளர்த்துக் கொண்டே போகக் கூடியது.

அந்த உணர்வு பூர்வமானதை உணர்ச்சிப் பூர்வமானதாக மாற்ற வைப்பது தான் இந்த "சாந்தி முகூர்த்தம்.."

கரு உருவாகி, மூன்று மாதத்தில், தான் ஆணா பெண்ணா என்று நிர்ணயித்து கொண்டு அதற்கேற்றாற்போல பின்னர் வளர்ந்து வெளியே வந்தாலும், தான் விட்ட அந்த மறு பாதியை தேடிக்கொண்டே இருந்து, அதனை மீண்டும் அடைந்து அதன் தேடல் நிறைவு பெறுவதால் தான் அதை "சாந்தி"முகூர்த்தம் என்று சொல்கிறார்கள்..

இயற்கையாகவே அவர்களுக்குள் ஏற்படும் கலவியால் தான், தன்னுடையது என்று பெரிசா நினைச்சு வச்சிருக்கும் .கற்பை அவனுக்காக அவள் துறக்க, அவன் தன்னுடைய வலிமையை, உயிர் சக்தியை இழக்கிறான்.. இதற்கு இயற்கையை காரணமா சொன்னாலும், பெண்ணிற்கு மற்ற ஆணிடம் ஏற்படாத ஈர்ப்பு, இவன் பால் ஏற்படும் போதே இது சாத்தியம்…

ஒவ்வையார் சொல்கிறார்…

"இவ்வளவு கண்ணுடையாள் இவ்வளவு சிற்றிடையாள்

இவ்வளவு போன்ற இளமுலையாள் – இவ்வளவு

நைந்த உடலாள் நலமேவு மன்மதன்ற

ஐந்துகணை யால்வாடி னாள்.

கட்டழகைக் காமம் தொலைத்துவிடும்"

அவள் பேணிக் காக்கும் அழகை, அந்த கலவி கெடுத்தாலும், அதை அவள் ஆவலுடன் ஏற்றுக்கொள்வதும் அவன் மீது கொண்ட காதலால் தான்....

தன் அழகு தொலைத்த அவனுடன் கொண்ட கலவி தான் அழகு என்று மாறிப் போகிறாள்..

சுரதம் தனில்இளைத்த தோகை; சுகிர்த

விரதம் தனில்இளைத்த மேனி – நிரதம்

கொடுத்திளைத்த தாதா; கொடுஞ்சமரிற் பட்ட

வடுத்துளைத்த கல்லபி ராமம்.

தலைவனோடு கூடிய கலவியால் களைத்த பெண்மயிலாள்

தான் "அழகு" என்கிறாள் அவ்வையார்.

அதற்கு.அவள் வெட்கப்பட்டாள், என்றால், அவள் வாழ்வு தான் கெட்டுவிடும் என்றும் எச்சரிக்கை செய்கிறார்:..

வேசிநிலை நில்லாக் குலக்கொடியும் கூசிய வேசியும் கெட்டு விடும்

இப்படியே தன்னையே விட்டுக்கொடுக்கும் நிலைக்கு ஒரு பெண் உந்தப்படுவதற்கு அவன் மீது கொண்ட காதல் தான்..

அதனால் தான், வள்ளுவர் கூட, திருக்குறளில் முதலில் வரும் அறத்துப்பாலில், அன்பை தூக்கி முதலில் வைத்தார் .

கணவனுக்கு மட்டும் தானா தேவை இது?!

பெண்ணுக்குள்ள இயல்பான கூச்சம் காரணமா, அவள் அதை வேண்டும் போது, தன் கணவனிடம் வெளிப்படுத்துவது கூட மறைமுகமாக தான் இருக்கும்..

இந்த தாலாட்டையே கேளுங்களேன்...குழந்தை அழுவதை சமாதானப்படுத்துவது போல, அங்கிருக்கும் கணவனுக்கு குறிப்பால் உணர்த்துவாள்

மாமன் அடிச்சானோ மல்லிகைப்பூ செண்டாலே..

அத்தை அடிச்சாலோ அரளிப்பூ செண்டாலே

...

...

...

ஆரடித்தார் நீயழ அடிச்சாரைச் சொல்லியழு

ஆரடித்தார் நீயழ அடிச்சாரைச் சொல்லியழு.

யாரும் தான் அடிக்கலைனா, 

தம்பிப் பாப்பா வேணும்ன்னு தேம்பி தேம்பி அழுதாயோ!!""

ன்னு முடியும் இந்த பாட்டில், தன் மனதின் ஆசையை குறிப்பால்  உணர்த்துவாள்..!!☺️

இந்த தாம்பத்யம் என்ற அடிப்படையில் ஆரம்பிக்கும் அன்பு தான் நாளும் வளர்ந்து, ஒருவர் மேல் மற்றவருக்கு மதிப்பு, மரியாதையை கொடுக்கும்..

சரி.. இந்த தாம்பத்யம் இல்லாத இல்லறம் என்பது எப்படி இருக்கும்?

ஆசை, வேட்கை, ஏக்கம் நிறைவேறாத நிலையில், . அல்லது முழுதுமாக இல்லாத போது, துணையிடம் அங்கு அன்பு தொலையும்.

அது போன்ற சமயத்தில் வந்தது தான் இந்த' மனைவி ஜோக்ஸ்' ன்னு நினைக்கிறேன்.பெண்கள் அவர்கள் பங்குக்கு, வாயாலேயே வடை சுடுவாங்க!!

அன்பில்லா இடத்தில் ..அறமும் இருக்காது...

முறம் தான் இருக்கும்ன்னு சொல்ற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது!!☺️

அது ஒரு விதமான மன ரீதியான துன்புறுத்தல்..

அது போன்ற சமயத்தில்,

சற்றேனும் ஏறுமா றாக இருப்பாளே யாமாகில் கூறாமல் சந்நியாசம் கொள்.

என்கிறார் . "இல்லறம் நடத்த முடியா நிலைமை வரும்போது அதை துறக்க சொல்கிறார் அவ்வையார்…

அது தான் தாலி கட்டும் முன்பு காசியாத்திரைக்கு போற சான்ஸ் கிடைக்குதே.. அதை விட்டா இப்படி தான்!!🤣

ஆனால் சட்டம் சற்று மாற்றி, அந்த இல்லறத்திற்கு காரணமான,  செல்லாமல் போன அந்த திருமணத்தை ரத்து செய்ய ஒத்துக்கொள்கிறது.

"எந்த வித சரியான காரணமும் இல்லாமல், தாம்பத்தியம் கொள்ள கணவன்/ மனைவி வெகு காலம் மறுக்கும் போது, அது "மனரீதியான கொடுமை" என்ற அடிப்படையில், மனைவி/கணவர் விவாகரத்து கேட்கலாம் என்கிறது இந்து திருமணச் சட்டம்..

இப்படித் தான் லண்டனில் வேலை செய்யும் கேஷவ்க்கும் கல்யாணம் ஆச்சு. மனைவி சவிதா கூட லண்டனலே 8 மாசம் இருந்துட்டுத் திரும்பி வந்து, கொஞ்ச நாள் கழிச்சு கிளம்பலாம்னு பார்த்தா சவிதா வரமாட்டேன்னு சொல்றார்.இத்தனைக்கும் பிளைட் டிக்கெட் எல்லாம் எடுத்தாச்சு..

நல்லாயிருக்கே..டிக்கெட் எடுத்தாச்சுன்னுகிறதுக்காக போக முடியுமானு கேட்கக்கூடாது…😀

இப்படித் தான் ஒரு நண்பர் வீட்டுக்கு போய் பேசிட்டு கிளம்பும் போது அவர் கேட்டார்..சாப்பிட்டுட்டு போறீங்களா..சாப்பாடு நிறைய செஞ்சாச்சு.வீணாகிடும்"ன்னு..அவர் கவலை, நான் சாப்பிடறதா இல்லை சாப்பாடு வீணாகிடக்கூடாதான்னு தெரியல!!😃😄

மூணு வருஷம் பொறுத்து பார்த்துட்டு, விவகாரத்து கேட்டு கேஸ் போட்டார்..ஆனா சவிதா அதை ஒத்துக்கலை..என் கணவர் தான், ரெண்டு வருஷம் கழிச்சி குழந்தை பெத்துக்கலாம்னு சொன்னார்., நான் சேர்ந்து வாழத் தான் விரும்புறேன்னு சொன்னாங்க..

கேசவ் போட்ட கேஸ் டிஸ்மிஸ் ஆச்சு!!

திரும்ப உயர்நீதிமன்றம்..மேல் முறையீடு..

ஸ்காட்லாண்டுக்கு ஹனிமூனுக்கு போனபோது கூட, சவிதா எப்படி விருப்பமே இல்லாதது போல நடந்துகிட்டார்னும், லண்டனில் குடித்தனம் செய்யும் போது அவர் உணர்ச்சியற்ற தன்மையோட நடந்துக்கிட்டார்னு கேசவ் விலாவாரியா சொன்னதை விவரித்த நீதிமன்றம், அவர் பொய் சொன்ன மாதிரி தெரியலை.உண்மையில் கேசவ் குழந்தை வேண்டாம்னு சொல்லியிருந்தாலும், அதுக்கு தடுப்பு முறைகளை கடைபிடிச்சுருக்கலாம்.. ஆனால் அப்படி செய்யாமல், தாம்பத்யத்துக்கு மறுப்பது, மனரீதியான கொடுமை. இது, உடல் ரீதியான கொடுமையை விட அதிக பாதிப்பை கொடுக்கக் கூடியது"ன்னு சொல்லி கேஷ்வ்க்கு விவாகரத்து குடுத்துருச்சு.

.சவிதா விடல...சுப்ரீம் கோர்ட்டுக்கு போனார்.

Denial of sex by spouse is cruelty: Supreme Court | India News - Times of India
India News: Savitha married Keshav (both names changed) in April 2005.

அதுவும் அந்த தீர்ப்பு சரி தான்னு சொல்லிடுச்சு[1] [2]

சில தம்பதிகளுக்கு தாம்பத்யம் என்பது தேவையில்லாம பரஸ்பர புரிதலோட வாழ்றாங்க.

ஆனால் சிலரையெல்லாம் பார்க்கும் போது ரெண்டு பேருக்கும் நடுவிலே, வயசு வித்யாசம் அதிகம் இருக்கும்..

மலைக்கும் மடுவுக்கும் போல..

நான் ரேடியோ ஸ்டேசன்லே வேலை செய்தப்ப, இந்த ஆடியன்ஸ் சர்வே பண்ணப் போவோம். அப்டி தான், ஒரு வீட்டிற்கு போய் கதவை தட்டினேன்.ஒரு பெண் திறந்தார். ஒரு 20..21 வயசு தான் இருக்கும். கூட ஒரு சிறுவன் இருந்தான்..எல்லாக் கேள்வியையும் கேட்டுவிட்டு திரும்பினால், ஒரு பெரியவர் வந்தார்..

"என்ன வேணும்?"

நானும் சர்வேவை பற்றி சொல்லிட்டு, "உங்க பொண்ணுக்கிட்டே கேட்டுட்டேன்"னு சொன்னேன்.

அவர என்னை ஒரு பார்வை பார்த்துக்கிட்டே "அது என் மனைவி"னார்.

அதுக்கு பிறகு அவசரப்பட்டு உறவுமுறையை நானா முடிவு செய்றதில்லை!!☺️

எனக்கு அவரை பார்க்கவே விசித்திரமா இருந்தது..இவர் ஒரு பொண்ணோட வாழ்க்கையை வீணடிச்சதோட இல்லாம, இதிலே என்ன பெருமை வேண்டியிருக்கு?!!

அதுக்கப்புறம் அது போன்ற சில தம்பதியை பார்த்திருக்கிறேன். இவங்களாம்…😡

பெண்ணுக்கு அந்த ஆசை, இருக்காதுன்னோ, அது கிடைகலைன்னு கோர்ட்டு படியேற மாட்டாங்கன்னு இருக்கிற தைரியம் தானே காரணம்??

பின்னாளில் இந்தப் பாடலை படிக்கும் போது,, அவ்வையாருக்கும் அதே கோபம் கூட இல்லை.  அதை விட அதிகம்  இருந்திருக்கும்னு நினைக்கிறேன்..!!

அற்றதலை போக அறாததலை நான்கினையும்

பற்றித் திருகிப் பறியேனோ – வற்றும்

பரமனை யானுக்கிந்த மானைவகுத் திட்ட

பிரமனையான் காணப் பெறின்

இதோட விளக்கம்;

"மானைப் போன்ற இவளைப் பரமனைப் போன்ற இந்த முனிவனுக்கு மனைவியாக்கி வைத்திருக்கும் பிரமனை நான் நேரில் கண்டால், குற்றம் இழைத்தமைக்காக அன்று ஐந்தாம் தலை கிள்ளி எறியப்பட்டது போக எஞ்சியுள்ள நான்கு தலையையும் அறுத்தெறிந்துவிடுவேன்"👌👌

அடிக்குறிப்புகள்

https://www.livelaw.in/denial-sex-husband-long-time-without-sufficient-cause-amounts-mental-cruelty-sc-grants-divorce-read-judgment/

https://www.livelaw.in/amp/denying-sex-spouse-ground-divorce-delhi-hc/

2 கருத்துகள்:

Srinivasan Kaushik சொன்னது…

மகவும் ரசித்துப்படித்தேன். என் உள்ளம் கனிந்தது, நெகிழ்நத்து். இன்னும் எழுதுங்கள், படிக்க ஆசை.

Unknown சொன்னது…

👌 அருமை ஆழ்ந்து சிந்தித்து படித்தேன்

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...