ஞாயிறு, 6 ஜூன், 2021

அடிப்படை உரிமைகளை கேட்கும் நாம், அடிப்படை கடமைகளை சரிவர செய்கிறோமா?


நல்ல கேள்வி..

இப்போதைய நம்முடையே அடிப்படை கடமையே நம் அடிப்படை உரிமைகள் மாண்டு போகாமல் பாதுக்காப்பதாகி விட்டது.!!

அடிப்படை உரிமைகளை பற்றிப் பேசும்போது, இதே போன்ற ஒரு ஏப்ரல் 24 அன்று தான் அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட இருந்ததை தவிடுபொடியாகி, ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பு வந்தது.

என்ன செய்ய...நமக்கிருக்கும் ஆயிரம் கவலைகளில் அதை மறந்து போயிருப்போம்.😃

அது தான் புகழ்பெற்ற கேசவானந்த பாரதி வழக்கு.

"அடிப்படை உரிமைகள் கொடுக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை எந்த விதத்திலும் சீர்குலைக்க கூடாது" என்றது.

அதற்கு காரணமாயிருந்த சட்ட மேதை நானி பல்கிவாலாவை இங்கு நினைவு கூர்வோம்.

அப்படியென்ன செய்துவிட்டார்.?.அந்த வழக்கில் என்ன சிறப்பு?

அதை தெரிந்துக் கொள்ள நாம் சற்று பின்னோக்கி போகவேண்டும்.

வரலாறு முக்கியம் அமைச்சரே!!☺️

அரசியலமைப்பு சட்டத்தை எழுதியவர்களின் நோக்கமே ..சமூக-, பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதன் மூலம் ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது தான்.

அந்த காலக்கட்டத்தில், விவசாய சீர்திருத்தங்கள் செய்யும் எண்ணத்தில் அரசு. இருந்தது. அதனால், முதலில் நில சீர்திருத்தங்கள் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இது, சொத்துக்கான அடிப்படை உரிமையுடன் முரண்பட்டது. அதனால் நீதிமன்றங்கள் அதை, அரசியலமைப்பு சட்டத்திற்கெதிரானது என்றன. .

ஆனால் அரசுக்கு தர்மசங்கடம். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டுமே. ..

அப்போது இருந்தது தற்காலிக பாராளுமன்றம் தான்.1952 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் வரை அது தான் இருந்தது.. அங்கு இருந்தவர்களில் சிலர் தான் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள். எனவே வெகு சுலபமாக, 1951 ஆம் ஆண்டில் பாராளுமன்றம் அரசியலமைப்பு சட்டத்தின் முதல் திருத்தத்தை இயற்றியது.

அதன்படி, இழப்பீட்டின் போதாமை காரணமாக தாக்குதலுக்கு உள்ளான தேசியமயமாக்கல் திட்டங்கள், விவசாய சீர்திருத்தங்கள் மற்றும் பிறவற்றைக் காப்பாற்றுவதற்காக ஆர்டிகள் 31 ஏ மற்றும் 31 பி ஆகியவற்றை அரசியலமைப்பு சட்டத்தில் அறிமுகப்படுத்தியது. அதே போல அட்டவணை IX என்று கொண்டு வந்தது, அதில உள்ள சட்டங்கள், எந்தவொரு அடிப்படை உரிமைகளை மீறுகிறது என்ற எந்தவொரு எதிர்ப்பிலிருந்தும் தடுக்கப்பட்டது.

ஆனால், இந்த சட்டத்திருத்தம் வராதிருந்தால், அரசியலமைப்பு சட்டத்தின் சில நோக்கங்களும் நோக்கங்களும் நிறைவேறுவது, தாமதமாக்கப்பட்டிருக்கும் அல்லது தோற்கடிக்கப்பட்டிருக்கும், என்பதே உண்மை.!!

வழக்கு போடாமல் இருப்பார்களா..வந்ததே…☺️.அடிப்படை உரிமைகளை தகர்க்கும் சட்டம் இயற்ற முடியுமா?

சங்கரி பிரசாத் எதிர் யூனியன் ஆஃப் இந்தியா[1] ல், பாராளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தை கொண்டு, அடிப்படை உரிமைகளைத் திருத்தலாம் என்றும்,, ஆர்டிகள் 13 ல் 'சட்டம்' என்று சொல்லியுள்ளது, சாதாரண சட்டத்தை மட்டுமே குறிக்கிறது …, அரசியலமைப்பு சட்டத்தின் திருத்தங்கள் அல்ல என்றும் நீதிமன்றம் கூறியது.

"அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணான ஒரு சட்டத்தை, அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் மூலமாக செய்வது, செல்லுபடியாகும். அது பாராளுமன்றத்தின் பிரத்தியேக அதிகாரத்திற்குள் வருகிறது."

என்றது தீர்ப்பு.

இதற்கிடையில் இதே போன்ற ஒரு நிலை புதிதாக பிரிந்த பாகிஸ்தானிலும் ஏற்பட்டது.

ஃபஸ்லுல் குவாதர் சவுத்ரி Vs முஹ்.அப்துல் ஹக் [2] என்ற வழக்கில், பாக்கிஸ்தானின் தலைமை நீதிபதி, " 1956 ல் இயற்றப்பட்ட பாகிஸ்தானின் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள சிரமங்களை அகற்ற பாகிஸ்தான் அதிபருக்கு அதிகாரம் உள்ளது…, ஆனால் அரசியலமைப்பின் அடிப்படை அம்சத்தை அகற்ற அவருக்கு அதிகாரம் இல்லை" என்று தீர்ப்பு வழங்கினார்.

என்ன ஒரு கெத்து!!

ஆனா நாம..

அடுத்து வந்த [3] வழக்கில், ஏற்கெனவே சொன்ன தீர்ப்பு தான் பின்பற்றப்பட்டது.

  1. சஞ்சரி பிரசாத் சஜ்ஜன் சிங் எதிர் ஸ்டேட் ஆஃப் ராஜஸ்தானில் 

ஆனால் அந்த சட்ட நிலை குறித்த சந்தேகங்களை எழுப்பினர் நீதியரசர்கள்

.நீதியரசர் ஹிதாயத்துல்லா

அதனால் அவர் என்ன பாடு பட்டார் என்பது வரலாறு!!

"அடிப்படை உரிமைகள் பெரும்பான்மையினரின் விளையாட்டு அல்ல என்று விளாசினார்.

நீதியரசர் முடோல்கர் மட்டும் சும்மா விடுவாரா?!

"அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கு நிரந்தரத்தன்மை வழங்கப்பட வேண்டுமா இல்லையா?

ஒரு அடிப்படை அம்சத்தில் மாற்றம் செய்வது என்பது ஒரு திருத்தமாக மட்டுமே கருதப்படுமா அல்லது அது அரசியலமைப்பு சட்டத்தின் ஒரு பகுதியை மீண்டும் எழுதுவதா ? " என்று தீர்ப்பில் கேள்விகள் எழுப்பினார்.

அடுத்து கோலக்நாத் வழக்கு[4] வருகிறது. அந்த சமயம் பார்த்து, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் , மேற்கு ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தின் தெற்காசியா நிறுவனத்தின் சட்டத் துறையின் தலைவர் பேராசிரியர் டைட்டர் கான்ராட், பிப்ரவரி 1965ல், " அதிகாரத்தை திருத்துவதில் உள்ளார்ந்த வரம்புகள்" குறித்த சொற்பொழிவை நிகழ்த்தினார்.[5] அப்போது தலைசிறந்த அரசியலமைப்பு சட்டவழக்கறிஞரான எம்.கே.நம்பியார் அதை பேராசிரியரிடமிருந்து கடன் வாங்கி கோலக்நாத் வழக்கில் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

கோலக் நாத் வழக்கில் மொத்தம் 11நீதிபதிகள் விசாரித்தனர். 6: 5 என்ற விகிதத்தில், தீர்ப்பு வந்தது. ஆனாலும், நீதிமன்றம் வழக்கை ஒரு குறுகிய அடிப்படையில், முடிவு செய்தது-

இருந்தாலும், இங்கே தான், இந்தியாவின் வரலாற்றில் மிகப் பெரிய மற்றும் மிக முக்கியமான அரசியலமைப்பு வழக்குக்கு மேடை அமைக்கப்பட்டது எனலாம்.-

இதற்கிடையில், அரசியலமைப்பு சட்டத்தின் 29 வது திருத்தத்தின் மூலம், கேரள நில சீர்திருத்த சட்டங்கள் , அட்டவணை IX இல் சேர்க்கப்பட்டு இருந்தது. இதை எதிர்த்தும், அரசியலமைப்பு சட்டத்தின் ஆர்டிகிள்கள் 24, 25 மற்றும் 29 வது திருத்தங்கள் எதிர்த்தும் போடப்பட்ட அடுத்து வந்த கேசவானந்த பாரதி வழக்கில்[6] நீதிமன்றம் மறுக்க முடியாத பணியை எதிர்கொண்டது.

ஏற்கெனவே சொல்லப்பட்ட கோலக் நாத் தீர்ப்பு, மிகவும் பரந்த, ஒரு வித காட்டுத்தனமான முன்மொழிவை முன்வைத்ததாக நீதிமன்றத்திற்கு தோன்றியது,

அதனால், தெளிவாக அதை ஆதரிக்க முடியாது, கடக்க வேண்டியிருந்தது. அதேசமயம், நீதிமன்றத்தின் பெரும்பான்மையும் நம்பிய, அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதல்கள் என்று, குற்றம் சாட்டப்பட்ட, அரசியலமைப்பு சட்டத்தை நீதிமன்றம் காப்பாற்ற விரும்பியது, அதே சமயத்தில், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், பல சட்டங்கள் கண்மூடித்தனமாக, அட்டவணை IX இல் சேர்க்கப்பட்டன என்பதையும் கவனித்தது.

.இந்த பின்னணியில் தான், அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு குறித்த பிரச்சினை எழுந்தது.

டாக்டர். கான்ராட், விதைத்த விதையை அப்படியே செடியாக்கி பராமரித்தவர் வழக்கறிஞர் நம்பியார் என்றால் கேசவானந்த பாரதி வழக்கில் தன்னுடடைய வாதத்திறமையால், அந்தச்செடியில், பூ பூக்கவைத்தது வழக்கறிஞர் நானா பல்கிவாலா என்றால் மிகையாகாது.

அதிகபட்ச நாட்களுக்கான மிகப்பெரிய பெஞ்ச் விசாரணை நடந்தது மற்றும் நீண்ட தீர்ப்பை எழுதியதும்- கேசவநந்த பாரதி வழக்கில் தான்.

அரசியலைப்பு சட்டத்தின் மூன்றாம் பகுதி உட்பட சட்டத்தின் எந்தப் பகுதியிலும் திருத்தத்தை அனுமதிக்கும் அதே சமயம், அத்தகைய திருத்தம் , அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை அம்சங்கள், கட்டமைப்பை அழிக்கக்கூடாது என்றும், அந்த அடிப்படை கட்டமைப்பு என்ன, என்பதை சூழ்நிலைகள் எழும் போது, வழக்குகளை முன்வைக்கும்போது நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.!!💐💐.

கேசவானந்தா பாரதி வழக்கை விசாரித்த பெஞ்சில் இருந்த 13 நீதிபதிகளில், பெரும்பான்மையினரான 9 பேர் கருத்து இது : " ஆர்டிக்கிள் 368 அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை அல்லது அடிப்படையை மாற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரம் கொடுக்கவில்லை ."

அதன்படி, அடிப்படை கட்டமைப்பிறகு எதிரானது என்று ஆர்டிக்கிள் 31 சி ன் இரண்டாம் பகுதி நியாயமற்றது என்பதால், செல்லாது என்றது.

பேராசிரியர் கான்ராட் மேற்கோள் காட்டியதை ஏற்றுக்கொண்ட நீதியரசர் கன்னா, தன் தீர்ப்பில்.: "சட்டரீதியான அமைப்பிற்குள் ஒழுங்காக அமைக்கப்பட்ட எந்தவொரு திருத்த அமைப்பும், அதன் அதிகாரம் வாய்மொழியாக வரம்பற்றதாக இருந்தாலும், அதன் கட்டமைப்பால் மட்டுமே, அரசியலமைப்பு அதிகாரத்தை கொடுக்கும் அடிப்படை தூண்களை மாற்ற முடியாது." என்றார்.

கேசவானந்தாவில் முதன்முறையாக 7: 6 என்ற மெல்லிய பெரும்பான்மையுடன், நீதிமன்றம் "அரசியலமைப்பின் ஒவ்வொரு பகுதியையும் , மூன்றாம் பாகத்தில் சொல்லப்பட்ட அடிப்படை உரிமைகள் உட்பட திருத்துவதற்கு பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது , மேலும் அவ்வாறு திருத்தம் செய்யும் அதிகாரத்தில் எந்தவிதமான வரம்புகளும் இல்லை என்றாலும், 'அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை' திருத்துவதற்கு , அந்த அதிகாரம் நீட்டிக்கப்படவில்லை," என்றது.

இது அரசியலமைப்பு சட்டத்தில் காணப்படவில்லை. அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை அதுவரை எந்த நீதிமன்றமும் வலியுறுத்தவில்லை - அதுவும் நீதிமன்றத்திலிருந்தே தோன்றிய ஒரு முடிவின் அடிப்படையில்..

  1. தைரியமான ஒன்று!  

இந்த வழக்கில் , ஆறு நீதிபதிகள் திருத்தம் செய்யும் அதிகாரம் பல்வேறு உள்ளார்ந்த மற்றும் மறைமுகமான வரம்புகளால் வரையறுக்கப்பட்டுள்ளது என்றும், மற்ற ஆறு நீதிபதிகள் திருத்தம் செய்யும் அதிகாரத்தில் வரம்புகள் இல்லை என்றும் கருதினர்.

ஆனால் நீதியரசர் கன்னா, இவற்றை நிராகரித்தார். திருத்தும் அதிகாரம் என்பது முழுமையானது என்று கருதினார்.ஆனால் திருத்தம்' என்ற சொல்லின் வரையறுக்கப்பட்ட அர்த்தத்தால் , 'அரசியலமைப்பு சட்டத்தை ரத்து செய்ய அனுமதிக்கவில்லையாதலால், அடிப்படை கட்டமைப்பு அல்லது கட்டமைப்பை தக்க வைத்துக்கொண்டு, அரசியலமைப்பு சட்டத்தின்,எந்த பகுதியையும் திருத்த முடியும்" என்றார்.

இது குறித்து கிரான்வில் ஆஸ்டின் தனது ஜனநாயக அரசியலமைப்பின் செயல்பாடு"ல் இவ்வாறு குறிப்பிட்டார்: "ஒன்பது நீதிபதிகள் (கேசவானந்தா தீர்ப்பில் கையெழுத்திட்டவர்கள்) ஒரு ஸ்டேட்ஸ்மான் போல பணி செய்ததாகத் தெரிகிறது. நீதிமன்றம், கோலக் நாத் வழக்கை ரத்து செய்தும் அரசங்கத்தின் மூன்று சட்ட திருத்தங்களை ஆதரித்ததன் மூலம், கிட்டத்தட்ட சங்கரி பிரசாத் வழக்கு நிலைக்குத் திரும்புகிறது. அதே நேரத்தில் நீதித்துறை அதன் மறுஆய்வின் சக்தியைப் பாதுகாத்து, உண்மையில் பலப்படுத்தியது. கோலக் நாத்தின் வரலாறு எதிர்பாராத விளைவுகளின் எச்சரிக்கைக் கதை.

அரசியலைப்பு திருத்தத்தின் மீதான கடுமையான கட்டுப்பாடுகளும், அதனால் அந்த திருத்தங்கள் சிவில் சுதந்திரத்திற்கு எதிரானது என்ற அச்சமும், திருமதி காந்தியின் அவசரகாலத்தின் போது அவை பயன்படுத்தப்படுவதும் விரைவில் நிரூபிக்கும்.

இது அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்திய கேசவானந்தாவை உருவாக்கியது அது அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்றங்களை பலப்படுத்திய அதேசமயம், அரசியலமைப்புச் சட்டமன்றம் கூட செய்யாததை செய்தது"

"கேசவானந்த பாரதி" தீர்ப்பு விலைமதிப்பற்ற ஒன்றைக் காப்பாற்றியது என்று சொல்லலாம்..

இந்த கோட்பாடு இந்திரா காந்தி Vs ராஜ் நாராயணன் (AIR 1975 SC 2299) ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இதில் தீர்ப்பு வழங்கிய நீதியரசர் சந்திரசூட்,

  1. "கேசவானந்த பாரதியில் பெரும்பான்மையினரின் கருத்து என்னவென்றால், அரசியலமைப்பின் அத்தியாவசிய அம்சங்கள் அல்லது அடிப்படை கட்டமைப்பை சேதப்படுத்தும் அல்லது அழிக்கும் வகையில் திருத்தத்தின் அதிகாரத்தை பயன்படுத்த முடியாது,  

மினெர்வா மில்ஸ் Vs யூனியன் ஆஃப் இந்தியா (AIR 1980 SC 1789) வழக்கும் கேசவானந்தாவின் தீம் பாடலை தான் கூறியது: "ஸ்தாபித்தவர்கள் உறுதியளித்த புனிதமான ஆவணத்தை கூட நீங்கள் திருத்துங்கள், ஏனென்றால் உங்கள் தேவைகளை நீங்கள் நன்கு அறிவீர்கள் ஆனால் அரசியலமைப்பு ஒரு விலைமதிப்பற்ற பாரம்பரியம், எனவே நீங்கள் அதன் அடையாளத்தை அழிக்க முடியாது. " என்றது.

அரசியலமைப்பு சட்டத்தின் திருத்தம், அதன் அடிப்படையையோ கட்டமைப்பையோ அழிக்கும் வகையில் இருந்தால், தடை செய்கிறது. இன்றளவும் கேசவானந்த பாரதி வழக்கு தான் முன்மாதிரியாக உள்ளது.

.அதே சமயம்..

சில மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் - வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை, கவுரவம் போன்றவை எந்தவொரு சட்டத்தின் அல்லது அரசியலமைப்பு சட்டத்தின் பரிசு அல்ல; அவை அரசியலமைப்பு சட்டதால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, அத்தகைய அங்கீகாரம் இல்லாமல், அரசியலமைப்பு சட்டமும் முழுமையடையாது.

எனவே அரசியலமைப்பு சட்டம் நமக்கு கொடுத்த, வெளிப்படையான மற்றும் உள்ளார்ந்த உரிமைகளையும் பேணிக் காப்பதே நம் அடிப்படை கடமையாகும்..அதற்கு ஊறு வரின் காக்க தயங்கக்கூடாது!!

  1. தற்போது தொடர்ந்து நடந்து வரும் விவசாய போராட்டங்களை மனதில் கொள்வோம்!! 

எது எப்படியிருந்தாலும், பால்கிவாலாவையும் நமது அரசியலமைப்பு சட்டத்திற்கும் நீதித்துறைக்கும் அவர் அளித்த பங்களிப்பையும் தொடர்ந்து நாம். நினைவில் கொள்வோம்.

அத்தகைய மற்றொருவர் எப்போ வருவாரோ?

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா..

அடிக்குறிப்புகள்

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...