என்னவோ இந்த கேள்விக்கு என்னால் உடன் பதில் எழுத முடியவில்லை..உள்ளுக்குள் ஏதோ துளைத்துக்கொண்டே போவது போல இருந்தது.
தாத்தாவின் மகன் என்ற சொல்ல தெரிந்தவருக்கு, அவர் தன் "அப்பா" என்று ஏன் சொல்ல வரவில்லை?
அவர் உயிரின் ஒரு துளியில் இருந்து தானே தன் உலகமே தொடங்கியது என்று ஏன் மறந்து போனது?
அவர் உறவு கிடைத்த பிறகு தானே, அவரின் அப்பா , "தாத்தா"வானார்?
தாத்தாவின் மகன் உயிரோடு இருந்தால்…
அவர் இருப்பது "வரம்" என்று நினைக்கும் என்னை போன்ற பலர் இருக்க, அது "சாபமாக" மாறியதெப்படி?
என் பதின்ம பருவத்தில், சில சமயம், அப்பாவுடன் கோபம் கொண்டு, பேசாதிருந்திருக்கிறேன்..
அப்போதெல்லாம் என்னை சமாதானப்படுத்த, என்னை கூப்பிட்டுக்கொண்டே, சுற்றி சுற்றியே வருவார். கண்டுகொள்ளாமல் போயிருக்கிறேன்.
இன்று..அந்தக் குரலுக்காக என் காதுகள் தவம் கிடக்கிறது…ஆனால்…
அவருக்கும் நமக்கும் ஆயிரம் மனவருத்தம் இருக்கலாம்.
இருந்தாலும்,..
அவர் இறந்த பிறகு ..அவரை பார்க்க நீங்கள் போகலாம்.. அது அவருக்கு தெரியாது. அப்படி ஏன் நீங்கள் இப்போது போகக்கூடாது?
அவர் இறந்த பிறகு . அவர் தவறே செய்திருந்தாலும் , அதை நீங்கள் மன்னிக்கலாம்.. அது அவருக்கு தெரியாது. அதை ஏன் நீங்கள் இப்போது செய்யக்கூடாது?
அவர் இறந்த பிறகு, அவரின் பெருமைகளை நீங்கள் மணிக்கணக்காக சொல்லலாம்.அதை அவரால் கேட்க முடியாது. அதை ஏன் நீங்கள் இப்போதே அவரிடம் சொல்லக்கூடாது?
அவர் இறந்த பிறகு, அவருடன் அதிக நேரம் கழித்திருக்கலாமோ என்று உங்களுக்கு தோன்றலாம்.ஆனால் எல்லாம் முடிந்திருக்கும். அதை நீங்கள் இப்போது ஏன் செலவழிக்கக்கூடாது?
அவர் உயிருடன் இருக்கும்போது, அவருடன் வாழ்வதில் பெருமிதம் கொள்ளுங்கள். தப்பெண்ணம் இல்லாமல், எதையும் எதிர்பார்க்காமல் அன்புடன் வாழுங்கள்..வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கும்..
அது தான் உண்மையான சொத்து என்று உணர்வீர்கள்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக