திங்கள், 28 ஜூன், 2021

ஐந்து பேருக்கு வர வேண்டிய சொத்தை ஒருவர் மட்டும் பெற்றோரிடம் சாதகமாகப் பேசி எழுதி வாங்கியுள்ளார், இது UDR சர்வே சட்டம் மூலம் போனால் மீதி உள்ள நான்கு பேருக்கும் சொத்து கிடைக்குமா?

         யூ.டிஆர். சர்வே விதிகளுக்கும் நில உரிமை மாற்றத்திற்கும் சம்பந்தம் இல்லை.

        யூடிஆர் என்ற இந்த டேட்டா அபடேட் ரெஜிஸ்ட்ரி, என்பது 1979_ 89 வாக்கில் தமிழ்நாட்டில் உள்ள நிலங்கள் எல்லாம் வகைப்படுத்தப்பட்டு  அளவிடப்பட்டு ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அவற்றின் விஸ்தீரணம் , உரிமையாளர் எல்லாம் கணினியில் ஏற்றப்பட்டது .அப்போது கொடுக்கப்பட்ட து தான் யூடிஆர் பட்டா எனப்படுவது

        அதே சொத்தில் நாங்களும் தானே 30 வருடமாக கூட்டாக அனுபவித்து கொண்டு இருந்தோம், ஒருவருக்கு பெயர் மாற்றி, மற்றவரை விட்டால் எப்படி அது சரி? என்கிறீர்களா?

        அதுவும் சரி தான்.ஆனால் அதை கேட்டிருக்க வேண்டியது யு.டி.ஆர் பட்டா கொடுத்த போதே.. முன்று தசாப்தம் கழித்து வந்து கேட்டால்?

        நல்ல தூக்கத்தில் இருந்தோமா?


        நமக்கு அரசியலமைப்பு சட்டம் அடிப்படை உரிமைகளை கொடுத்திருக்கிறது தெரியும் அல்லவா ?

        நாம் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை ஆர்டிகில் 21 மூலம் பெற்றிருக்கிறோம். இந்த "தூங்குவது" கூட அந்த அடிப்படை உரிமைகளில் உள்ளடக்கியது . தூங்கிக் கொண்டிருக்கும் நம்மை தேவையில்லாமல் யாரும் தொந்தரவு செய்வது என்பதை சட்டம் அனுமதிக்காது . அதை உச்சநீதிமன்றமே சொல்லிடுச்சு
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://m.timesofindia.com/india/right-to-sleep-a-fundamental-right-says-supreme-court/articleshow/12025358.cms&ved=2ahUKEwjC4-TtjbzxAhVGT30KHYiKAXQQFjABegQIAxAC&usg=AOvVaw3g1oX4K0ayqff3n9NDulH3

        அதேபோல தன் உரிமைகளை கேளாமல், தூங்கிக்கொண்டு இருப்பவர்களுக்கும்/, இருந்தவர்களுக்கும் ,சட்டம் உதவாது!!

Vigilantibus non dormientibus jura subveniunt

        இது ஒரு லத்தீன் மாக்ஸிம் . இதன் பொருள் என்னவென்றால் "சட்டம் விழிப்போடு இருப்பவர்களுக்கு அவர்களுடைய உரிமைகளை பெறுவதற்கு உதவி செய்யும் தூங்குபவர்களுக்கு அல்ல" என்பது

        அவரது உரிமையைப் பொருட்படுத்தாதவர்களுக்கு சட்டம் உதவாது.. ஒருவர் தன் உரிமையை கோர, அந்த உரிமையைக் கவனிக்க வேண்டும். . அவரது உரிமைகளைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்கும் நபர்களுக்கு மட்டுமே சட்டத்தின் நன்மைகளை பெற தகுதியுடையவர்கள்.. அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புடன் இருக்கும் நபர்களுக்கு சட்டம் அவர்களுக்குண்டான உரிமைகளை வழங்குகிறது.

        வழக்கமாக, ஒருவர் மற்றொருவருக்கு எதிராக நிவாரணம் பெற, செயல்படுத்துவதற்கு , சட்டரீதியான வரம்புகளை, சட்டம் பரிந்துரைக்கிறது. இல்லையென்றால்,கால வரையற்றதாக போய்க்கொண்டே இருக்குமே..பிரசுனைக்கு தீர்வு என்று ஏதாவது ஒரு இடத்தில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டாம்?

        ய.டி.ஆர் பட்டா கொடுக்கப்பட்டு கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் ஆகிவிட்டது . சட்டப்படி, தொடர்ச்சியாக 30 வருடங்கள் ஒரு பட்டா ஒருவரின் பெயரில் இருக்கும் பொழுது, அந்த சொத்து அவருக்கு ஏகபோக உரிமையாகவும் ஆகிவிடும் .

        நிர்ணயிக்கப்பட்ட சட்டரீதியான காலத்திற்குப் பிறகு ஒருவர் வழக்குத் தொடுகக முடியாது. சட்டரீதியான காலக்கட்டத்தில் "சும்மா" இருந்த ஒருவர், சட்டரீதியான வரம்புக்குப் பிறகு உரிமை கோர முடியாது.   எனவே யு.டி.ஆர்.பட்டாவில், இப்போது உரிமை மாற்றம் என்று கேட்பதை கால வரையறை சட்டம் அனுமதிக்காது .

        என் தாத்தா பாட்டிக்கு அந்த அளவிற்க்கு விவரம் தெரியாது அப்பா அம்மாவுக்கு. தெரியாது .அந்த அளவிற்கு எங்களுக்கு எல்லாம் சட்ட அறிவு அப்போது இருக்கவில்லை என்று சொல்லப் போகிறீர்களா?    அதையும் சட்டம் அனுமதிக்காது .

ஏனென்றால் ...

Ignorantia juris non excusat

இதுவும் ஒரு லத்தீன் மாக்ஸிம் தான்! .இதன் பொருள்
"சட்டத்தின் அறியாமை என்பது தவிர்க்கக் கூடிய காரணம் இல்லை ”.

        நாமெல்லாம் பொதுவாக நினைத்து கொள்கிறோம்..
"இந்த சட்டம் அப்படிங்கிறது எல்லாம் வக்கீல்களுக்கும் ஜட்ஜ்களும் மட்டும்தான் தெரிஞ்சுக்க வேண்டியது நமக்கு ஏதாவது பிரச்சினை வரும்போது வக்கில போய் பார்த்து, கோர்ட்டுக்கு போனா போதும் அப்போ அவர் சொல்ற சட்ட விதிகளின்படி நடந்தா போதுமம்னு" நினைக்கிறோம் ஆனால் உண்மை அப்படி கிடையாது

        ஒரு குடிமகனாக இருப்பவன், அந்த நாட்டின் அடிப்படை சட்ட விதிகளை தெரிந்துக் கொண்டு இருக்கவேண்டும் என்பது அவனுடைய கடமைகளுள் ஒன்று. அந்தக் கடமை தவறி, அதனால் அதனை காரணமாக வைத்து உரிமையும் கோரவும் முடியாது!
சட்டத்தின் கடுமையிலிருந்து தப்பிக்க அறியாமையை ஒரு பாதுகாப்பாக மன்றாட உங்களுக்கு அனுமதி இல்லை. அப்படி அனுமதித்தால், எல்லோரும், சட்டத்தையும் அதன் விளைவுகளையும் தெரிந்துக்  கொண்டு கூட, அறியாமையை ஒரு பாதுகாப்பாக முன்  வைக்க முடியும் இல்லையா?,

        நிறைய இடங்களில், இந்த பட்டாவில், தாத்தா பெயரில் அப்பா பெயரில் பங்காளி பெயரில் பட்டா இருப்பதை பெயர் மாற்றம் செய்யாமலும், அதில் உள்ள அளவுகள், சர்வே எண் தவறாக குறிக்கப்பட்டுள்ளதை திருத்தம் செய்யாமலும் இருக்கிறார்கள்.  அப்படியே திருத்தம் செய்ய கோரிக்கை மனுக்களும் நிலுவையில் இருக்கின்றன .அவற்றை பொருத்துதான் சரி செய்து கொடுப்பார்களே ஒழிய, 30 வருடங்களுக்கு முன்னர் ,பட்டா யார் பெயரில் இருந்ததோ அதனை தற்போது உரிமை மாற்றம் செய்துக் கொள்வதற்கான சட்டத்தில் வழிவகை இல்லை. அதற்கான நடவடிக்கை எடுத்தாலும் பலன் கிடையாது என்பதே நிதர்சனம்..

        அதுக்காக, அஞ்சு பேருக்கு உரிமையிருக்கிற சொத்தை, நான்கு பேரை விட்டுவிட்டு தன் பெயருக்கு மட்டும் மாற்றி இருக்காரே. அதை, நீக்குவதற்கான வழியாவது இருக்கான்னு கேட்டால், அதுவும் கிடையாது

        இங்கே ஒண்ணு சொல்ல வேண்டி இருக்கும். "கெடுவான் கேடு நினைப்பான்" அப்படிங்கறது நம்முடைய மூதுரை
எல்லாருக்கும் கிடைக்க வேண்டியதை தனக்கு மட்டுமே ஒருத்தர் வாங்கிக் கொண்டு போனாலும், அதற்கு உண்டான கர்மங்களை அவர் அனுபவிப்பார்.   அதை நாம தான் போயி அவருக்கு காட்டணும் அப்படிங்கறது கிடையாது. ஒவ்வொரு கர்மாவுக்கும் உண்டான பலன்களை , அது முதிர்ச்சி அடைந்து சரியாக போய் காட்டும் என்பதை தான் "ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்" அப்படின்னு சொல்றாங்க..

        இப்படித்தான்..சீடர்கள் குருவிடம் கல்வி கற்று முடித்து, கிளம்பும்  போது, "தர்மத்தைக் காத்து நீதியின் வழியாக நடங்கள்" என்று ஆசீர்வாதம் சொல்றாரு. இதைக் கேட்ட சீடர்களுக்கு ஒரு சந்தேகம் வந்தது "என்ன குருவே நீதி வேறு தர்மம் வேறா?" அப்படின்னு கேட்கும் பொழுது அவர் சொல்றாரு
"நீதி, சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி மாறக் கூடியது. ஒருத்தர கொலை செய்தது சட்டப்படி குற்றம் என்றாலும் கூட ,அது அவருடைய தற்காப்புக்காக அந்த கொலையை செய்தா, அது குற்றமாகாது அது போல நீதி அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறக்கூடியது ஆனால் தர்மம் அப்படி அல்ல அது நிலைத்து நிற்கக் கூடியது அதனால்தான் தர்மத்தை காத்து நீதியின் வழியில் நடந்து"ன்னு ஆசீர்வாதம் சொன்னேன் என்றார்

        நம்ம உச்ச நீதிமன்றத்தின் லோகோ கூட என்ன தெரியுமா?
"Yato Dharma Tato Jaya
  

பொருள்: "தர்மம் இருக்கும் இடத்தில் வெற்றி இருக்கிறது"



நன்மையே விளையட்டும்!

தமிழ் வழி பயின்றவர்களுக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற அரசு அறிவிப்பு சரியானதா? இதன் சாதக, பாதக விளைவுகள் என்னவாக இருக்கும்?

 தமிழ் வழி பயின்றவருக்கு, அரசு பள்ளியில் படிப்பவருக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை!


இந்த உத்தரவு போடும் எண்ணம் அரசுக்கு வரக் காரணம்?

ஆங்கில மொழி வழி கல்வி மேல் அதிகரித்து வரும் மோகம்.அது இப்போது தீவிரமாகி, மார்க் அதிகம் எடுக்க வேண்டும் என்று தமிழ மொழியை தவிர்த்து, வேறொரு மொழியை பாடமாக எடுத்து படிக்கும் போக்கு அதிகமாகியுள்ளது. மூன்றாவது மொழியை அடிப்படை நிலை மட்டும் கற்றால் போதும் என்பதால், நகரத்து பள்ளி பிள்ளைகள் அதிகம் பேர், அதில் மட்டுமே தாய் மொழியை படிக்கிறார்கள். இது ரொம்ப ஆபத்தான போக்கு.

என் பிள்ளைகளை பள்ளியில் எல்.கே.ஜி.சேர்க்க போகும்போது, பள்ளியில் தெளிவாக சொல்லிவிட்டார்கள்..வீட்டு பாடம் எதுவும் கிடையாது.நீங்கள் வீட்டில் எதுவும் சொல்லிக்கொடுக்க வேண்டாம் என்று!! நானும் பெரிய கவலை விட்டது என்று இருந்துவிட்டேன்.

நம் காலத்து வீட்டு பாடம் ஞாபகத்துக்கு வந்து விட்டதால்!

ஆனால் பாருங்கள்..பிள்ளைகளின் மனதை இயக்கி, ஆங்கிலத்திலேயே எண்ணங்களை வர செய்து, பிள்ளைகளின் படிக்கும் முறையையே அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.

அதனால், பிள்ளைகள் ஆறாம் வகுப்பு வந்த போது, இரண்டாவது மற்றும் மூன்றாம் மொழியை தேர்வு செய்ய சொன்னர். பெருன்பான்மையான பிள்ளைகள் வீட்டில் இரண்டாம் மொழியாக ஹிந்தியையும் பிரென்ச்சையும் எடுக்க, நாங்கள் தமிழை தேர்வு செய்தோம்.!!

தாய் மொழி வழி கல்வி கற்பதன் சாதகங்களை மாண்புமிகு உச்ச நீதிமன்றமே பட்டியலிட்டுள்ளதே..அதை முதலில் பார்ப்போம்.

2019ல், ஆந்திர அரசு, ஒரு அரசு உத்தரவு போட்டதே." 2020-21 முதல் அனைத்து நிர்வாகங்களின் கீழ் வரும் முதன்மை, மேல்நிலை , உயர்நிலைப் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை ஆங்கில நடுத்தரக் கல்வியை கட்டாயமாக்கியது.இதன் விளைவாக பின்வரும் கல்வி ஆண்டுகளில் இருந்து படிப்படியாக ஒவ்வொரு வகுப்பிற்கும் இது விரிவாக்கப்பட வேண்டும். "

இந்த உத்தரவை ரத்து செய்த மாநில உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மான்புமிகு உச்சநீதிமன்றத்த்தை அணுகியது இல்லையா? அப்போது தான் தாய் மொழி கல்வி வழியின் பாதகங்கள் என்று ஆந்திர அரசு சிலவற்றை பட்டியலிட்டது.

ஜகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசாங்கத்தின் " ஆங்கிலம் கற்காததால் தான், குழந்தைகள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்’.

அத்தோடு நின்றதா அரசின் வாதம்?

"ஒடுக்கப்பட்டவர்களான தலித்துகள், அரசின் இந்த முடிவை முற்போக்கான நடவடிக்கையாகக் கருதுகின்றனர். அவர்கள் தீவுகளில் வைக்கப்பட்டுள்ளது போல தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.. தனியார் ஆங்கில நடுத்தர பள்ளிகளில்] கட்டணமும் அதிகம்" என்றது.

அந்த வழக்கின் விசாரணையின் போது தான், தலைமை நீதியரசர் பாப்டே,, அரசின் தர்க்கத்தை மறுத்து, " ஒரு அடித்தளத்தைப் பெற வேண்டுமானால் ஒரு குழந்தை தனது தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்..அத்தோடு இந்த விஷயத்தில் "மிகப்பெரிய மாறுபட்ட பிரச்சினைகள்" இருப்பதாகக் கூறி, இது விரிவாக கவனிக்கப்பட வேண்டும்," என்றும் கூறி, வழக்கை விசாரணக்கு ஏற்றுக்கொண்டுள்ளார்...

இந்த வழக்கில், தாய் மொழியில் பயிலும் பள்ளி குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை திணிப்பதால், அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21 ஏ (கல்விக்கான அடிப்படை உரிமை) இன் கீழ் குடிமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட பயனுள்ள கல்வியை அவர்கள் இழக்க நேரிடுமா?" என்பதை ஆராய உள்ளது உச்சநீதிமன்றம்.

ஒரு விஷயம் கவனித்தோமா?

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கை 2020" பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஊடகமாக “தாய்மொழி” பயன்படுத்துவது, அறிவாளிகளுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் என்றதே !!

தேசிய கல்வி கொள்கை 2020 , தாய்மொழியில் உயர்தர பாடப்புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள் இருமொழி அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

NEP 2020 “பன்மொழி” மீது கவனம் செலுத்துகிறது. சிறு குழந்தைகளுக்கு “அற்பமான கருத்துக்களை விரைவாகக் கற்றுக் கொள்ளவும் புரிந்துகொள்ளவும்” உதவும் தாய் மொழிகளின் சக்தியை இது அங்கீகரிக்கிறது.

அது கூட ஏன்?

2005 ஆம் ஆண்டின் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பும், 2009 ஆம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டத்தின் 29 வது பிரிவும் கூட, முடிந்தவரை நடைமுறையில், கல்வி கற்பிப்பது, குழந்தையின் தாய்மொழியில் இருக்க, அறிவுறுத்தவில்லையா?

சில குடும்பங்களில் சில நேரங்களில், குடும்ப உறுப்பினர்களால் பேசப்படும் வீட்டு மொழி ஒன்று இருக்கலாம், அவை சில சமயங்களில் தாய்மொழியாகவோ அல்லது உள்ளூர் மொழியாகவோ கூட இருக்கலாம். குறைந்த பட்சம் 5 ஆம் வகுப்பு வரை, முடிந்த வரை 8 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு அப்பால், தாய்மொழி / உள்ளூர் மொழி / பிராந்திய மொழியாக இருக்கும் ”என்று NEP 2020 சொல்கிறதே?!

."தாய் மொழி வழி கற்பித்தல் " தான் "ஆற்றல்மிக்க வளர்ச்சிக்கான உந்துதல்," என்பதை இப்போது தானா அரசுகள் கண்டுகொண்டார்கள்? அதன் முலம் NEP 1968 லிருந்து வருகிறது!!

ஆனாலும், இன்றளவும், ஆங்கில வழி கல்வி கற்கும் பிள்ளைகளுடன், தமிழ் வழி கல்வி கற்கும் பிள்ளைகள், அதுவும் அரசு பள்ளியில் பயிலும் பிள்ளைகள், போட்டி போட முடியாமல் தடுமாறி நிற்பதெனவோ உண்மை..

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தனியார் பள்ளிகள் தவிர, பெரும்பாலான அரசு உதவி பெறும் பள்ளிகளும் ,அனைத்து அரசு பள்ளிகளில் தமிழ்,ஆங்கிலம் இரு வழிக் கல்வியுமே போதிக்கப் படுகிறது.இளங்கலை,முதுகலை கலை அறிவியல் உயர் படிப்புகள் பல கல்லூரிகளில் தமிழ்வழியில் வழங்கப் படுகிறது.

நான் ஊருக்கு போகும் போதெல்லாம், வீட்டிற்கு பக்கத்திலுள்ள அரசு பள்ளிக்கு போவதுண்டு..அவர்களுடன் பேசும்போது, அடிப்படை ஆங்கில அறிவு அவர்களுக்கு போதுமான அளவில் வழங்கப் படுவதில்லை என்று தெரிய வரும்.அவர்களுக்கு பரிட்சை நோக்கோடு மட்டுமே ஆங்கிலம் கற்பிக்கப் படுகிறது.புரிந்து படிப்பது இல்லாமல், மனப்பாடம் செய்வதே பெரும்பாலும் நடக்கிறது..

அது ஓராசிரியர் பள்ளி.பல வகுப்பு பிள்ளைகள்.. அவர் எதை தான் சொல்லி கொடுப்பார்?!.சரி பக்கத்திலுள்ள பெரிய ஊரில் உள்ள பள்ளியின் கதையம் அது தான்.ஆசிரியர் நிறைய இருந்து என்ன?

இதை சொல்வதற்காக யாரும் கோபித்துக்கொள்ள வேண்டாம்.!!
"சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்" என்பது போல கற்றுக் குடுப்பவர்களும் போதிய ஆங்கில அறிவு இருப்பதில்லை.!! அப்படியே இருந்தாலும் தேர்ச்சி விழுக்காடு மட்டும் தானே நோக்கம்? அதனால் தேவைக்கு மேல் போதிப்பதில்லை.!! அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது மட்டுமா வேலை? அரசு கொடுப்பது பத்தாது என்று, அவர்களாக ஈடுபடும் வேலைகள்!

அட..ஆங்கில மொழியை விடுங்கள்..பிள்ளைகள் தமிழ் மொழியையவது இலக்கண சுத்தமாக படிக்கிறார்களா என்றால் வருத்தம் தான்..எட்டாம் வகுப்பு வரை "ஆல் பாஸ்". ஒன்பதாம் வகுப்பில் தான் சீரியசாக, தமிழ் எழுத கற்றுக் கொள்பவர் அநேகம்!!

இது போல, நடைமுறை சிக்கல் இருக்கும் போது, உயர் கல்வியை தமிழ் வழியில் படிக்க அரசு தன் தரப்பில் செய்துள்ளதா?

+2 கணிணி அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு அந்த பாடப் புத்தகம், தமிழில் உள்ளதா?.மற்ற பாடங்களை தமிழ் வழி கற்றாலும் கணிணிப் பாடத்தை ஆங்கிலம் மூலம் தான் கற்க,எழுத வேண்டும்…

பொறியியல்,மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு தமிழ் வழி கல்வி முழுமையாக சாத்தியப் படுமா? தெரியவில்லை…

+2 வரை தமிழ் மொழி வழியில் படித்து அதிக மதிப்பெண் பெற்று, தனியார் பொறியியல் கல்லூரியில் சேரும் பிள்ளைகள், மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.சில பொறியியல் கல்லூரிகளில் முதல் வருடம் அடிப்படை ஆங்கிலம் கற்றுக்கொடுக்க முயற்சி செய்கிறார்கள். உண்மை தான்.அவர்களால் முயற்சி செய்ய தான் முடிகிறதாம்..வெற்றி?..பிள்ளைகள் கையில் அல்லவா உள்ளது?

தமிழ் இன்னும் பள்ளிக் கூடத்தைத் தாண்டி வரவில்லை என்பது தான் நிஜம். .
தமிழில் படித்து புதிதாக ஆங்கிலவழி படிக்க வரும் மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்கும் சூழல் நம் நாட்டில் இல்லை .

இதில் , வேலை வாய்ப்பு என்று வரும்போது அது எந்த அளவு கை கொடுக்கும் சாத்தியப் படும்? தெரியவில்லை..

இந்த நிலையில் தான் அரசின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இதை பார்த்ததும் எனக்கு ஒரு கதை தான் நினைவுக்கு வந்தது..

பரிகாரங்களே குறைகளின் நிவாரணம் என்ற எண்ணத்தில் பரிகாரங்களை மட்டும் செய்து விட்டு மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்து கொள்ளலாம் என நினைத்திருந்த சீடர்களுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினார் ஒரு குரு. பாவங்களைக் கழுவ புனித நதிகளில் நீராடிவர யாத்திரை கிளம்பிய சீடர்களிடம் ஒரு பாகற்காயைக் கொடுத்து அதையும் அந்த புனித நதிகளில் நீராட்டிக் கொண்டுவரச் சொன்னார். அதேபோல், அவர்களும் செய்தனர். புனித நீராடிய பாகற்காயைச் சமைத்து மதிய உணவுடன் பரிமாறச் செய்தார் குரு. அதை உண்ட சீடர்களின் முகத்தில் அந்த கசப்பு ருசி தெளிவாகத் தெரிந்தது.

குரு சீடர்களைப் பார்த்து 'புனித நதிகளில் நீராடியதும் உங்கள் பாவங்கள் தொலைந்து விட்டதாகச் சொல்கிறீர்கள். அதேபோல் புனித நீராடிய பாகற்காயின் கசப்பும் மாறியிருக்க வேண்டுமே, அது மாறி விட்டதா?' என அமைதியாகக் கேட்டார். சீடர்கள் பதில் சொல்லாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

குரு கூறினார், 'புனிதத் தலங்களில் நீராடுவதால் நம் உடலின் அழுக்குப் போகலாம். ஆனால், பாவங்கள் மாறுவதில்லை. அன்பும் கருணையுயே நம் பாவத்தை மாற்ற வல்லவை. பாகற்காயின் கசப்பு எதனாலும் மாறுவதில்லை. அதைப் போலவே நம் இயற்கைக் குணங்களும் புனித நீராடுவதால் மாறாது. மெல்ல மெல்ல முயற்சி செய்துதான் அவற்றை மாற்ற வேண்டும்."பரிகாரங்கள் நிவாரணம் ஆகாது' என்றார்…

அரசு பணியில்,, தமிழ் தான் ஆட்சி மொழி என்பதால், தமிழ் வழியில் கற்றவனுக்கு முன்னுரிமை கொடுப்பது சரி தான்..

ஆனால் .அடிப்படையை சரி செய்யாமல் மேல் மட்டட்த்தை மட்டும் மாற்றியமைக்க வேண்டும் என்பது எப்படி சரியாகும்.?

எந்த மொழிவழி அடிப்படைக் கல்வியைப் பெற்றாலும் பள்ளி இறுதியில் அவன் ஆங்கிலம் தமிழ் இரண்டுலும் தேர்ச்சி பெற்றவனாக்குவது தானே அவனுக்கு அளிக்கப் படும் சிறந்த கல்வி?.

அவன் மேற்படிப்பை (தொழிற் படிப்பு) ஆங்கில மொழிவழியில் கற்க, அவனை தயார் படுத்த வேண்டியது அடிப்படைக் கல்வி தான். அதனால், முதலில் சீர்திருத்தப் படவேண்டியதும் அது தான்.

பரிகாரங்களே நிவாரணமாகுமா?

ஞாயிறு, 27 ஜூன், 2021

"கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்" என்னும் பொது தீர விசாரிப்பது மட்டும் எவ்வாறு மெய்யாகும்?

 "நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி?" என்ற புத்தகத்தில் டேல் கார்னகி, ஒரு சம்பவத்தை இப்படி விவரிக்கிறார்..

1931ம் ஆண்டு மே மாதம் ஏழாம் நாளன்று, நியூயார்க் நகரில் மிகப் பரபரப்பான மனித வேட்டை ஒன்று உச்சகட்டத்தை அடைந்தது. பல வாரத் தேடல்களுக்குப் பிறகு, புகைபிடிக்காத, குடிப்பழக்கமில்லாத கொலைகாரன் 'இரட்டைத் துப்பாக்கி' குரோலி, வெஸ்ட் என்ட் அவென்யூவில் அவனது காதலியின் வீட்டில் வசமாகச் சிக்கிக் கொண்டான்,

ஒரு கட்டிடத்தின் மேற்தளத்திலிருந்த அவனது மறைவிடத்தை நூற்று ஐம்பது காவல் துறையினரும் துப்பறிவாளர்களும் முற்றுகையிட்டனர். கூரையில் அவர்கள் துளைகளிட்டனர். குரோலியைக் தண்ணீர்ப் புகை மூலமாக வெளியே வரச் செய்ய அவர்கள் முயற்சித்தனர். பிறகு சுற்றுவட்டாரத்திலிருந்த கட்டிடங்களில் இயந்திரத் துப்பாக்கிகளைத் தயார் நிலையில் | வைத்தனர். ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அப்பகுதிரியார்க் நகரின் அருமையான குடியிருப்பு இடமான ஒலியும் இடைவிடாது எதிரொலித்துக் கொண்டிருந்தன. ஒரு பெரிய நாற்காலிக்குப் பின்னால் குரோலி ஒளிந்து கொண்டு, காவல் துறையினர்மீது தொடர்ந்து சுட்டான். உற்சாகமான பத்தாயிரம் மக்கள் அந்தச் சண்டையைக் கண்டனர். நியூயார்க் நகரின் நடைபாதையில் அப்படிப்பட்ட எதையும் அவர்கள் அதுவரை பார்த்ததில்லை.

குரோலி பிடிபட்டபோது, நியூயார்க் நகரில் எதிர்கொள்ளப்பட்ட மிகவும் அபாயகரமான குற்றவாளிகளில் 'இரட்டைத்துப்பாக்கி' குரோலியும் ஒருவன் என்று காவல்துறை ஆணையர் ஈ.பி. மல்ரூனி அறிவித்தார். “வேறு எந்தத் தூண்டுதலும் இன்றி, அலட்டிக் கொள்ளாமல் அவன் கொலை செய்வான்," என்று அந்த ஆணையர் கூறினார்.

'ஆனால் இரட்டைத் துப்பாக்கி' குரோலி தன்னைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொண்டிருந்தான்? அது நமக்குத் தெரியும். ஏனெனில், காவல் துறையினர் வீட்டை நோக்கிச் சுட்டுக் கொண்டிருந்தபோது, அவன் *உரியவரின் பார்வைக்கு' என்று முகவரியிட்டு ஒரு கடிதத்தை எழுதினான். அவன் எழுதும் போது அவனது காயங்களிலிருந்து வழிந்து கொண்டிருந்த இரத்தம் அக்காகிதத்தில் பரவலாகத் தெறித்திருந்தது. அவனது கடிதத்தில் அவன் இவ்வாறு எழுதியிருந்தான்: “என் சட்டைக்குக் கீழே, சோர்ந்து போன, அவனது ஆனால் அன்பான ஓர் இதயம் இருக்கிறது. எவருக்கும் அது தீங்கு விளைவிக்காது.”

கண்ணால் பார்த்த இந்த சம்பவத்தையும், காதால் கேட்ட அவனை பற்றிய குறிப்பையும் வைத்து, நீங்கள் என்ன முடிவுக்கு வருவீர்கள்? இரண்டும் பொய்யா? அல்லது இரண்டும் உண்மை தானா? இல்லை இரண்டில் ஏதாவது ஒன்று மட்டும் தான் உண்மையா? அப்படியென்றால் அது எது? எப்படி தெரிந்து கொள்வது?

நாம் ரயிலில் பயணம் செய்யும்போது பார்த்திருக்கலாம் ரயில் நகரத் தொடங்கும் பொழுது எதிரில் தெரியும் மரம் செடி கொடிகள், கட்டிடங்கள் எல்லாம் பின்னோக்கி நகர்வதைப் போல நம் கண்ணுக்கு தெரியும் ஆனால் உண்மையிலேயே அங்கு நகர்ந்து கொண்டிருப்பது ரயில் தான் அந்த பொருட்கள் எல்லாம் அதே இடத்தில் தான் இருக்கின்றன ஆனால் நம்முடைய கண் பார்வைக்கு அந்த பொருட்கள்தான் நகர்வதாக தெரியும் .

அதே போல நாமே பார்த்திருக்கலாம், அதிகாலையில் சூரியன் கிழக்கில் உதிக்கும் போது, சூரியன் ஆனது நம்முடைய வலது திசையில் சில காலமும் இடது திசையில் சில காலமும் தோன்றும். அதை பார்க்கும்போது, சூரியன் தெற்காகவும் வடக்காகவும் நகருவதாக நமக்குத் தோன்றும்..

இவையெல்லாம் கண்ணால் காண்பதும் பொய், என்பதை உணமையாக்கவில்லையா?

ஏன். நாமே, இந்த சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலம் தான் "உத்தராயணம்." என்றும் " தை, மாசி,பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலம் என்றும், தஷ்ணாயன காலம் என்பது, சூரியன் வட திசையிலிருந்து தென் திசை நோக்கி பயணம் செய்யும் காலம் என்றும் ஆடி மாதத்தில் இருந்து மார்கழி வரையான ஆறு மாதங்கள்.என்பர். நம் முன்னோர் வகுத்தது என்றும் பார்க்கவில்லையா?

ஜோதிடத்தை பொறுத்த வரையில், பூமி நடுவில் இருக்க, அதனை தான் சூரியனும் மற்ற கிரகங்களும் சுற்றி வருகின்றன என்பர்..சூரியன், ஒவ்வொரு ராசியையும் கடக்க ஒரு மாதம் ஆகும் என்பர்..

அறிவியல் தெரிந்தவர் ஒப்புக் கொள்ள மறுக்கும் விஷயம் இது. என்றாலும் ஜோதிடமே அறிவியல் தானே, அது எப்படி மாற்றி சொல்லியிருப்பர் என்ற கேள்வி வரும்.

அப்படியென்றால் காதால் கேட்பதும் பொய்யா?

சொல்பவர் வாய்மொழி சோதித் தறிதலன்றி

சொல்லின் தரமறிவ தேது..திருக்குறள்

நாம் படித்த அறிவியல், பூமியானது தனது அச்சில் 23 1/2 பாகை சாய்ந்து சூரியனைச் சுற்றி வரும்போதே தன்னை தானே சுற்றி வருவதால் கடக ரேகையிலிருந்து மகர ரேகை வரை சூரியனின் ஒளி நேரடியாக படும் வகையில் சுற்றுகிறது ...அதனால்தான் காலநிலை மாற்றம் நமக்கு ஏற்படுகிறது.என்பது நினைவுக்கு வரும்.

இயற்கை விதிப்படி தை முதல் ஆனி மாதம்
வரை வடதிசை நோக்கி கதிர்வீசும் சூரியன்,
தென் திசை மீது தன் பார்வையை திருப்பும். அந்த காலத்தின் தொடக்கம் தான் ஆடி மாதம். இதனால் வெப்பம் நிறைந்த கோடைக்காலம் ஈரப்பதம்
நிறைந்த குளிர்காலமாக மாறுகிறது.

இதைத் தான், சூரியனின் பயணம் எனப்படுகிறது. ஜோதிடத்தில், சூரியன் தான் பூமியை சுற்றி வருவதாக காட்டப்பட்டாலும் சூரியன் இருக்கும் இடத்தில் பூமி இருப்பதாகவும் பூமி இருக்கும் இடத்தில் சூரியன் இருப்பதாகவும் தான் கொள்ள வேண்டும் அந்த கணக்கில் தான் இதைப் பார்க்க வேண்டும் .

அதே போல ஆடி மாதம் தான், பிரணாய வாயு அதிகமாக கிடைப்பதும் ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும்
கருதப்படுகிறது. .முக்கியமாக ஆடி மாதத்தை சக்தி மாதம் என்று பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன.

அறிவியல் பூர்வமாக , இது உண்மை தான்.
ஆடி தான் மழைக்காலத்தின் தொடக்கம். புது உயிர்கள் பிறக்கும் காலம். உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, , தஷ்ணாயண காலத்தில் சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்..

அதே போல , தட்சணாயண காலம் முடியும் மார்கழி மாதத்தில், அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்குவதால், நாடி நரம்புகள் வலுவடைகிறது. நீண்ட ஆயுள் கிடைக்கிறது. இம்மாதத்தில் அதிகாலைப்பொழுதில் தியானம், யோகா, தெய்வீகம், ஆன்மிகம் என்று இருந்தால் சாதகமான அதிர்வுகளை கொடுக்கும். எனவே தான் மாதங்களிலே மிகவும் மகத்துவம் மிக்கது மார்கழி மாதம் என்பார்கள்..கிருஷ்ணனே "மாதங்களில் நான் மார்கழி "என்று சொலவில்லையா?

இதை தானே “உள்பொருள் இதுவென உணர்தல் ஞானமாம்” ..என்றது சீவக சிந்தாமணி.

அப்படியென்றால் உத்தராயனத்தைப் புண்ணிய காலம் என்றும்
தட்சணாயணம் காலத்தை தெய்வங்சுளுக்கு நன்றி சொல்லும் காலமாக முன்னோர் வகுத்தது சரி தானே..?!

எதையும் கண்ணால் பார்த்தால், காதால் கேட்டால் நம்பி விடாமல் பொது தீர விசாரிப்பது மட்டும் தானே மெய்யாகும்.

அந்த உத்தராயனத்தின் தொடக்கத்தையே சங்க்ராந்தி என்று நாட்டின் பிற இடங்களில்
கொண்டாடும் பொங்கல் விழாவை சங்க காலத்தில் தமிழர்கள் இந்திர விழாவாக, தை மாதம் முழுவதும் கொண்டாடினராம். இந்த
விழாவிற்குப் பல மாதங்களுக்கு முன்னர்
அதாவது ஆடி மாதம் மழை வேண்டி
இந்திரனைக் குறித்து விரதம் இருப்பார்களாம் விவசாயிகள். ஆறு மாதம் கடந்த பின் தை மாதம் விரதம் முடித்து, பழையன கழிதலும், புதியன
புகுதலுமாய் மார்கழி இறுதி நாள் போகிப்
பண்டிகை கொண்டாடுவர்.
சர்க்கரைப் பொங்கல் செய்து சூரியனுக்கு
நிவேதனம் செய்யும் பொங்கல் திருநாள் தை முதல் நாள் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடுவதும் . எவ்வளவு சரியானது!!!

"நீயும் கண்டு நுமரொடும் எண்ணி அறிவறிந்தளவல் வேண்டும்”….நற்றிணை

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்


மெய்ப்பொருள் காண்ப தறிவு.

(குறள் 423:

திருவள்ளுவர் வலியுறுத்தும் இதை தானே சட்டமும் சொல்கிறது!

அந்த உண்மையை அறிய நடத்தப்படுவதே "விசாரணை". ..நீதிமன்றத்தின் விசாரணை .

இதை தான் சமீபத்தில் மாண்புமிகு உச்ச நீதிமன்றமும் தெளிப்படுத்தியுள்ளது.Aim Of Every Court Is To Discover The Truth: Supreme Court Explains Scope Of Section 311 CrPC


அந்த நீதிமன்ற விசாரணையும்  எப்படி இருக்க வேண்டும்?

அதில், குற்றம் சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்டவர், சம்பந்தப்பட்ட குழு, சமுதாயம் இப்படி எல்லோரின் நலனும் சீரதூக்கி பார்க்க வேண்டும். என்றும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

Concept Of Fair Trial Entails Balancing The Interest Of The Accused, The Victim, Society And The Community: Allahabad HC [Read Judgment]

ஆனால் விசாரணை என்றவுடன், போலீஸ் விசாரணை தான் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வரும்.

அதற்கும் மேலே சொன்ன அளவுகோலகள் தான்.. ஆனாலும் நமக்கு உடன் நடுக்கம் வருகிறதே …ஏன்?

அவர்கள் "தீர" விசாரிப்பது நம் "மெய்"யை தானே! என்பதாலா?

வெள்ளி, 25 ஜூன், 2021

படிக்காத ஒரு ஆணை படித்த பெண் மணப்பது நல்லதா? இல்லை கவலைகள் நிறையுமா?

 படித்த பெண்ணும் படிக்காத ஆணும்.

படிக்காத பெண்ணும் படித்த ஆணும்

படித்த பெண்ணும் படித்த ஆணும்

படிக்காத பெண்ணும் படிக்காத ஆணும்

இந்த நான்கு வகையில் ஏதேனும் ஒன்றில் தான் திருமணம் செய்பவர்கள் வருவார்கள்…

முதலில் கீழேயிருந்து வருவோம்..படிக்காத பெண்ணும் ஆணும்…இந்த ஜோடிக்கு பெரிதாக துன்பம் இருக்காது.உடல் உழைப்பு சார்ந்த வேலையை இருவரும் செய்வர்..குடும்பத்தில் இருவரின் பங்கும் இருப்பதால், பெரிதாக ஈகோ இருக்காது..டாஸ்மாக் எட்டி பார்த்தாலும் கூட.. குடித்துவிட்டு வந்த அடிக்கும் கணவனை எதிர்த்து, போலீஸ் ஸ்டேசனுக்கு போக மாட்டாள்.. விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போக மாட்டாள். வரதட்சனை பிரச்சினை கிடையாது.. .அடித்தட்டு மக்களின் பிரதிநிதிகள் தான்.. ஆணால் கையில் கொண்ட காசை கொண்டு, அன்றைய தினத்தை உண்மையில் ப்ரெசென்ட ஆக வாழக்கூடியவர்கள்.

படித்த பெண்ணும் படிக்காத ஆணும்…

ஆயுர்வேத டாக்டருக்கு படித்து கொண்டிருந்த விஸ்மயாவும் அவள் கணவன் மோட்டார் வாகன ஆய்வாளர் கிரணும்

நர்சிங்குக்கு படித்த அர்ச்சனாவும் அவள் படித்த கணவன் சுரேசும்

இவையெல்லாம் நாட்டிலேயே அதிக படிப்பறிவு கொண்ட பெண்கள் உள்ள கேரளாவில் சமீபத்தில் நடந்தது.

கேரள காவல்துறையிடம் கிடைத்த தரவுகளின்படி, கணவர் அல்லது அவர்களது குடும்பத்தினரால் 1,080 வீட்டு வன்முறை வழக்குகள் இந்த ஆண்டு மே 31 வரை மாநிலத்தில் பதிவாகியுள்ளன,. கடந்த ஆண்டு முழுவதும் இதேபோன்ற 2,715 சம்பவங்கள் நிகழ்ந்தன.என்றும் தெரிகிறது?இதன் பொருள், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சராசரியாக 200 க்கும் மேற்பட்ட வழக்குகள் ஒரு மாதத்தில் பதிவாகியுள்ளன.

எத்தனை சட்டம் போட்டு  என்ன?

 இரண்டு பேரும் படித்திருந்தால் மட்டுமே துன்பம் குறையமா என்றால் கவலைகள் தான் அதிகம் நிறையும். என்று தெரிகிறது.மேல்தட்டு மக்களுக்கே உரிய ஆசைகள், கனவுகள், அதனால் செய்யும் செயல்கள், அதில் ஏற்படும் ஏமாற்றங்கள் என்று படித்த படிப்பினால் வரக்கூடிய அறிவு பின்னுக்கு போவது அதிகம் தெரிகிறது..ஆனால் அதனை கட்டுக்குள் வைத்தவர்கள் வெற்றிபெறுகிறார்கள்.

படிக்காத பெண்ணும் படித்த ஆணும்…

கண்ணகி படித்ததாக இல்லை. அவளுக்கும் கோவலனுக்கும் பூசல் வந்ததாக குறிப்பு இல்லை..ஆனால் படித்த மாதவியும் கோவலனும் பிரிந்து விட்டார்கள்!.

இது தான் முந்திய நடுத்தர வர்க்கமாக இருந்தது..அப்போதைய சினிமாவை பார்த்தாலேயே தெரியும். ஹீரோ தன் தங்கையை கல்யாணம் செய்து கொடுப்பதும், தம்பியை படிக்க வைப்பதும் தான் தன் லட்சியம் என்பான்!

தன்னுடைய முறைப்பெண் என்று கிராமத்திலிருந்து கல்யாணம் செய்துகொண்டு பட்டனத்துக்கு வந்து ஒண்டிக்குடித்தனத்தில் கணவனின் வருவாயில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த காலம் நன்றாக தானே இருந்திருக்கும்…?

ஆனால் அடிமைகளிடம் விசுவசத்தை எதிர்பார்க்கலாம் …நேசத்தை?

காலம் மாறிவிட்டது.இப்போது கிராமத்து பெண்பிள்ளைகள் நன்றாகவே படிக்கிறார்கள்.

கடைசியில் வந்து நிற்பது..

படித்த பெண்ணும் படிக்காத ஆணும்.

இப்போதெல்லாம் வரும் சினிமாக்களில், இப்படி தானே ஜோடியை காட்டுகிறார்கள்.ஆனால் கல்யாணம் செய்வதோடு படம் முடிந்து விடுகிறது..நிஜ வாழ்க்கையில் அங்கே இருந்து தான் ஆரம்பிக்கும்!

ஆணாதிக்க மனோபாவம் கொண்ட சமுதாயம் இது. சம நிலையில் உள்ள போதே, போட்டி இருக்கும்போது, தன்னை விட உயரத்தில் உள்ளவள் தன் மனைவி என்னும்போது..?

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்.

அந்த இரண்டில் ஒன்று பெரியதென்றால் எந்த வண்டி ஓடும்? என்ற பாட்டு ஞாபகம் வருதா?

அதனால் ஏற்றத்தாழ்வு இருக்கும் இடத்தில் எப்போதும் இன்பம் துன்பம் என்ற இரண்டு வித நிலையும் மாறி மாறி இருக்கும்…

அதற்காக ஒத்த படிப்பு, வசதி, வேலை என்று இருக்கும் தம்பதிக்குள் மட்டும் அந்நியோனியம் வந்து விடுமா என்ன?

கனிந்த வாழைப்பழம் பக்கத்தில் பச்சை தக்காளி காயை வைத்து பாருங்கள்.

வாழைப்பழத்திலிருந்து வெளிவரும் ஏத்திளீன் வாயுவால், தக்காளியும் கனிந்து விடும்..

அது போன்றது தான் அன்பு…அதுவே அந்நியோனியத்தை ஏற்படுத்தும்..எப்போது அந்நியோனியம் ஏற்படுகிறதோ அப்போது தான் அந்த இருவரும் அறிமுகமற்றவர்கள் என்பதிலிருந்து மாறுகிறார்கள்..

இங்கிலாந்து இராணியின் கணவர் ராஜா வல்ல.வெறும் இளவரசர் தான்..தன் மனைவிக்காக அவர் விட்டுக்கொடுத்தவை பல.அதற்கும் அந்நியோனியம் தானே காரணம்..

அது பொதுவாக இன்னாருக்கு இன்னாரிடம் வரும் என்று சொல்வதற்கில்லை..தடையின்றி, மனது தனக்கு ஒத்த இன்னொன்றுடன் உறவாட முடியும்போது வருவது.

வாழ்க்கை துணையிடம் அந்நியோனியம் கொள்ள தேவையானது நன்கு பயிற்றுவிக்க பழகிய மனது..

மனதின் அற்புதம் தான் தெரியமே..எனக்கு ஒன்றுமே சரியில்லை என்பவருக்கு அது தான் கிடைக்கும்!

ஒரு பயிலரங்கத்தில் மனவள பயிற்சி: நடந்துக் கொண்டிருக்கிறது..

பயிற்றுவிப்பாளர் எல்லோரிடமும் தனக்கு வாழ்விலும் நடைபெற்ற நல்ல விஷயங்களை ஒரு தாளில் எழுத சொன்னார் பிறகு அவற்றை வாங்கி ஒவ்வொன்றாக பார்வையிடும் பொழுது ஒன்று மட்டும் வெற்று தாளாக இருந்தது

அதில் உள்ள அவரின் பெயரை படித்து கூப்பிட்டபோது ஒருவர் எழுந்தார்.

" என்ன உங்களுடைய தாளில், நீங்க ஒன்றுமே எழுதவில்லை ?"

"என் வாழ்க்கையில் எந்தவித நல்லதும் நடக்கவில்லை அப்புறம் என்ன எழுதுவது?" என்று திருப்பிக் கேட்டார் .

அதைக் கேட்ட பயிற்றுவிப்பாளர் அவரிடம்

"உங்கள் மனைவி இப்போது யாரோட குடித்தனம் செய்து கொண்டிருக்கிறார்?" என்று கேட்டார்

அரங்கமே திடுக்கிட்டுப் போனது . அந்த நபர் அதிர்ச்சியடை ந்து போய் ,"அப்படியெல்லாம் இல்லையே என் மனைவி என்னுடன் தான் இருக்கிறார்" என்ற உடனே

" அதை ஏன் எழுதவில்லை? அது எவ்வளவு பெரிய விஷயம். இத்தனை வருடங்களாக உங்கள் மனைவி உங்களுடைய குறைகளை சகித்துக்கொண்டு உங்களுடன் குடும்பம் நடத்துவது பெரிய விஷயம் அல்லவா? அது எழுதுங்கள் "என்றார் பயிற்றுவிப்பவர்.

அடுத்து "உங்கள் மகன் போன வாரம் ஜெயிலில் இருந்து வந்து விட்டானா?" என்று கேட்டார் .

இவருக்கு தர்மசங்கடமாகி விட்டது எல்லாரும் முன்நிலையிலும் தன்னுடைய குடும்பத்தை பற்றி யாராவது தவறாக சொல்லி இருக்கிறார்கள் என்று நினைத்து "என் மகன் இப்ப காலேஜ்ல தான் படிச்சுகிட்டு இருக்கான். என் கூட தான் இருக்கான்" என்றார்

"எத்தனையோ பிள்ளைகள் போதை மருந்துக்கு அடிமையாகி , பல கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி வாழ்க்கை சீரழிகிறது/ சீரழிந்து போயிருக்கிறது அப்படியில்லாமல் உங்கள் பிள்ளை நல்ல குணங்களுடன் உங்களுடன் இருக்கிறார் என்பது பெரிய வரப்பிரசாதம் அல்லவா ?அதையும் எழுதுங்கள்" என்றாராம்

இப்படி நம் வாழ்க்கையில் இருக்கும் நல்ல விஷயங்களை நம் மனக் கண்ணால் பார்க்கும் சக்தி இல்லாமல் இருக்கிறோம்

இது ஓஷோவுக்கு தெரியாமலா?

"கணவன் தான் உரிமையுடன் பெறுவதற்கு உரியது தனக்கு கிடைக்கவில்லை என்று எண்ணுகிறான்; மனைவியும் தான் உரிமையுடன் பெறுவதற்கு உரியது தனக்கு கிடைக்கவில்லை என்று எண்ணுகிறாள். மனைவி தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக நினைக்கிறாள், கணவனும் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக நினைக்கிறான். நேசம் எங்கே இருக்கிறது? யாரும் கொடுப்பது பற்றி அக்கறை கொள்வதில்லை, எல்லோரும் பெற்றுக்கொள்ளவே விரும்புகிறார்கள். ஆனால், எல்லோரும் பெறுவதிலேயே குறியாக இருக்கும் பொழுது, ஒருவருக்கும் அது கிடைப்பதில்லை. எல்லோரும் வெறுமையாக, இறுக்கத்துடன், செய்வதறியாது இருப்பதாக உணர்கிறார்கள்,

அடிப்படை அஸ்திவாரம் இங்கு இல்லை, நீங்கள் அஸ்திவாரம் இன்றி கோவில் கட்ட ஆரம்பித்துவிட்டீர்கள். அது எந்தக் கணம் வேண்டுமானாலும் நொறுங்கி விழுந்துவிடப் போகின்றது. உங்களுடைய காதல் எத்துனை முறை நொறுங்கி விழுந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும், இருப்பினும், நீங்கள் அதே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்துக் கொண்டிருக்கிறீர்கள்."

படித்த ஆணோ, படிக்காத ஆணோ, ஒரு படித்த பெண்னை திருமணம் செய்துக் கொள்ளலாம்…ஆனால் ஒரே நிபந்தனை..

அவளை தேவதையாக வைத்துக்கொள்ள வேண்டும்!!

இதை நான் மட்டும் சொல்லவில்லை..

தன் நெஞ்சில் இடம் கொடுத்து, தன்னில் பாதி கொடுத்து…இப்படி காட்டியவர்களே நம் கடவுளர் தானே!

அப்படியும் இல்லையென்றால் .

இனி, வரதட்சணை சாவுகள் நடக்காது..

சிங்கத்தின் துணை கொண்டவளுக்கு நந்தி தான் என்ன செய்வார்!

வியாழன், 24 ஜூன், 2021

தனியார் பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணம் முழுவதும் கட்ட வேண்டுமா?

 பள்ளி இல்லை..கட்டணமும் இல்லை..

வலைதளத்தில் எங்கே பார்த்தாலும் பெற்றோரின் இந்த போர்குரல் !!

போன கல்வி ஆண்டில் முழு கல்வி கட்டணத்தையும் கேட்டு தனியார் பள்ளிகள் அடம் பிடிக்க, பெற்றோர் கோர்ட்டுக்கு போக, கடைசியில், 75% கல்வி கட்டணம் வசூலிதது கொள்ளலாம் என்றது சென்னை உயர் நீதிமன்றம்.

https://sankatamthavirkumsattam.blogspot.com/2021/06/blog-post_521.html

இத்தனைக்கும் மற்ற மாநிலங்களில் உள்ள தனியார் பள்ளிகள் உச்ச நீதிமன்றம் வரை போன வழக்குகளில் 100% கல்வி கட்டணம் பெற்றோர் செலுத்த தான் வேண்டும் என்றும்

ஆறு தவணை முறைகளில் மார்ச் 2021லிருந்து கட்டணத்தை செலுத்தலாம் என்றது…அதுவும் முடியாதவர்கள் பள்ளியோடு பேசிக்கொள்ளுங்கள் என்றது என்றும் செய்திகள் வந்ததே....

https://trak.in/tags/business/2021/02/10/shocking-supreme-court-orders-all-parents-to-pay-100-school-fees-for-lockdown-period/

வாங்கிய கட்டனத்திற்கு, ஒரு பிரேக் அப் விவரங்கள் இல்லை..இத்தனைக்கும் மாண்புமிகு உச்ச நீதிமன்றம், "லாக் டவுன் போது செயல்பாட்டு செலவுகளை பள்ளிகள் சேமித்துள்ளன; பயன்படுத்தப்படாத வசதிகளுக்காக மாணவர்களை வசூலிக்க முடியாது: " என்று சொல்லியுள்ளது.

https://www.livelaw.in/top-stories/schools-have-saved-operational-costs-during-lockdown-cant-charge-students-for-unused-facilities-supreme-court-173546

லாக் டவுன் போது மாணவர்கள் பெறாத வசதிகள், செயல்பாடுகளுக்கான கட்டணங்களைக் கோரும் பள்ளிகள் 'லாபம் ஈட்டுதல்' மற்றும் 'வணிகமயமாக்கல்' செய்வதாக உச்சநீதிமன்றம கண்டனம் கூட தெரிவித்திருந்தது..

ராஜஸ்தான் மாநிலத்தில், போன கல்வி ஆண்டில் 30% கல்விக்கட்டணம குறைவாக தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்று அரசு உத்தரவு போட, உச்சநீதிமன்றத்திற்கு வந்த தனியார் பள்ளிகளிடம் "2020-21 கல்வியாண்டில் முழுமையான பூட்டுதல் காரணமாக, பள்ளிகள் கணிசமாக நீண்ட காலத்திற்கு திறக்க அனுமதிக்கப்படவில்லை" என்பதை சுட்டிக்காட்டி, " இதன் விளைவாக, பெட்ரோல் / டீசல், மின்சாரம், பராமரிப்பு செலவு, நீர் கட்டணம், எழுதுபொருள் கட்டணம் போன்ற பல்வேறு பொருட்களின் மேல்நிலை மற்றும் தொடர்ச்சியான செலவுகளை பள்ளி நிர்வாகம் சேமித்திருக்க வேண்டும், ”என்று பெஞ்ச் கூறிவிட்டு, "கல்வியை வழங்குவதற்கான தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறப்படும் பள்ளி நிர்வாகம், மாணவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களைத் தணிக்க தேவையான தீர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஒரு மாணவர் கூட விடாமல் அவரது / அவள் கல்வியைத் தொடர வாய்ப்பை மறுக்காத வகையில் பள்ளி கட்டணம் செலுத்துவதை மறுபரிசீலனை செய்வது பள்ளி நிர்வாகத்திற்கானது, " என்றது பெஞ்ச் .

மேல்முறையீட்டாளர்கள் (தனியார் உதவி பெறாத பள்ளிகளின் பள்ளி மேலாண்மை) 2016 ஆம் ஆண்டின் சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டபடி கல்விக்கட்டனம் வசோழிக்கலாம்.ஆனால் சம்பந்தப்பட்ட காலக்கட்டத்தில் மாணவர்களால் பயன்படுத்தப்படாத வசதிகளுக்கு பதிலாக அந்த தொகையில் 15 சதவீதத்தை குறைப்பதன் மூலம் 2020-21 கல்வியாண்டுதங்கள் மாணவர்களிடமிருந்து வருடாந்திர பள்ளி கட்டணத்தை வசூலிப்பார்கள்"என்று பெஞ்ச் கூறியது.

அதே சமயம், கட்டணம் செலுத்தாது அல்லது நிலுவையில் உள்ள கட்டணங்கள் காரணமாக எந்தவொரு மாணவரும் ஆன்லைன் அல்லது உடல் வகுப்புகளில் கலந்து கொள்வதைத் தடுக்க வேண்டாம் என்றும் நீதிமன்றம் பள்ளிகளைக் கேட்டுக் கொண்டது.

அதனால் உஷாராக, இந்த வருடம் கல்வி ஆண்டு துவங்கும் போதே, 100% கல்வி கட்டணத்தை நிறைய பள்ளிகள் மாணவர்களிடம் வசூலித்து விட்டன…

தமிழ நாட்டில் போன கல்வி ஆண்டில், அதிகமாக வசூலித்த பள்ளிகள், கோர்ட்டு உத்தரவிட பிறகும் 25% கல்வி கட்டணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட்டபிறகு தான், அவை வழிக்கு வந்தன..

அதே போல, க்ஸ்ள்விகட்டனம் கட்ட முடியாதவர்கள் தவணை முறையில் கட்டவும் அனுமதிக்கப்பட்டனர்.!!

https://thewire.in/law/madras-high-court-contempt-schools-fee-collection

அதே போல தான் இந்த வருடமும், மாண்புமிகு உயர் நீதிமன்றம் சாட்டையை சுழற்றுமா என்று பெற்றோர் காத்திருக்கின்றனர்..

கல்வி கட்டணம் கட்ட முடியாமல், டி.சி.யாவது கொடுத்து விடுங்கள் என்ற பெற்றோரிடம் கூட, பீஸ் கட்டினால் தான் அதுவும் கிடைக்கும் என்று அடம் பிடிக்கின்றன..

கோரானா தாண்டவத்தில், ஒரு பக்கம் மருத்துவமனைகள் என்றால் மறு பக்கம் இந்த தனியார் பள்ளிகள், பணம் பிடுங்கும் தருணமாக களத்தில் மும்முரமாக உள்ளன..

வெளிநாட்டில் எல்லாம், கல்வியும் சுகாதாரமும் இலவசமாக குடிமக்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் போது, இங்கு தடுப்பூசி போடவே பணம் வேண்டும்…

பீஸ் கொடுக்க முடியலைனா, அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டிய து தானே என்கிறார்கள்..

அரசு பள்ளியில் தானே படிக்க வைக்கலாம் தான்..அங்கு படித்தால், 7.5% இட ஒதுக்கீடு நீட்டில் உண்டு…அரசு பணி கிடைக்க கூட வாய்ப்பு உண்டு தான்..

ஆனால் படிப்பின் தரம்?! அது கேள்விக்குறியாக உள்ளபோது, பிள்ளைகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்ற யார் தான் விரும்புவார்??

புதன், 23 ஜூன், 2021

கிரிமினல் வழக்குகளை சீக்கிரத்தில் முடித்து வைத்து விடுகிறார்கள். ஆனால் சிவில் வழக்குகளை முடிப்பதற்கு ஏன் நிறைய வருடங்கள் ஆகின்றது?

 வழக்காடுதல் என்பது மிகப் பெரிய விளையாட்டு. குற்ற வழக்காடுதல் என்பது குறைவாகவும் வேகமாகவும் ஒரு நாடகத்தனமையின் தீவிரத்தோடு இருக்கும். அது ஒரு குதிரைப் பந்தயத்தைப் போல அல்லது கால் பந்தாட்டத்தைப் போல பந்தயம் சில நிமிடத்திலும் போட்டி ஒரு மணி நேரத்திற்குள்ளும் முடிந்துவிடும்.

ஆனால் சிவில் வழக்காடுதல் என்பது விஸ்தாரமானது. ஐந்து நாள் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியைப் போல சாவகாசமாக விளையாடுவது போன்றது".

நன்றி கூகுள்

இதைச சொன்னவர்கள் நமது முன்னாள் தலைமை நீதியரசர் மார்கண்டேய கட்ஜு தன புத்தகம் "Experiments in Advocacy, The Life and Times of Dr.Kailas Nath Katju"

பணிபுரியும் இடத்தில் நேர்மையாக இருந்தால் இடையூறுகள ஏற்படுகிறது ஏன்? இலஞ்சத்தை ஒழிக்க முடியாததற்கு காரணமாக இருப்பது கொடுப்பவர்களா? வாங்குபவர்களா? லஞ்சம் ஏதும் கொடுக்காமல் இங்கே எதுவும் நடக்காது என்று நீங்கள் நினைத்த தருணம் எது? அந்த அனுபவத்தை பகிருங்களேன்.

 "மிகவும் நேர்மையாக

இருக்காதீர்கள்

ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்

நேர்மையானவர்களே

முதலில் பழிதூற்றப்படுவார்கள். …….சாணக்கியா

அந்த காலத்திலேயே சாணக்கியர் , நேர்மையானவர்கள் துன்பப் பட நேரிடும்ன்னு எச்சரிததிருக்கிறார்.

இது சம்பந்தமாக நான் படித்த ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.

ஒரு ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் புதிதாகப் போடப்பட்ட ரயில்வே தண்டவாளத்தில் 4,5 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க்கின்றன.

யாருமே அங்கில்லை. ரயில்கள் ஏதும் அப்போது வரும் நேரமில்லை என்பதால் அவர்கள் அங்கு விளையாடுவதை யாரும் பெரிதாகக் கண்டுக் கொள்ளவில்லை. அதே சமயத்தில் அதனை ஒட்டி யுள்ள புழக்கத்தில் இல்லாத பழைய தண்டவாளத்தில் ஒரு குழந்தை மட்டும் தனியே விளையாடிக் கொண்டிருக்கிறது.

இப்போது திடீரென அந்த வழியே ஒரு ரயில் வருகிறது. தூரத்திலேயே ரயில் என்ஜின் டிரைவர் இந்த குழந்தைகளை பார்த்து விடுகிறார். வண்டி வரும் வேகத்திற்கு அதனை நிறுத்தவும் முடியாது. குழந்தைகளும் விளையாட்டு மும்முரத்தில் உள்ளன. என்ன செய்வதென்றே தெரியவில்லை அவருக்கு. ….பெரிய ரயில் விபத்து நடக்காமல் தடுக்க அவர் என்ன செய்திருப்பார் சொல்லுங்கள்……………….

ஆமாம். புழக்கத்தில் இல்லாத அந்த பழைய ரயில் தண்டவாளத்திற்கு தன ரயில் பாதையை திருப்பி விடுகிறார். அதனால் அங்கு விளையாடும் குழந்தையின் கதி அவருக்குத் தெரியு,ம். ஆனால் அந்த 4,5 குழந்தைகளைக் காப்பாற்ற, அந்த ஒரு குழந்தையைத் தியாகம் செய்ய வேண்டியுள்ளது.

இப்போது சொல்லுங்கள்? அந்த ஒரு குழந்தை செய்த தவறு என்ன? ஆட்கள் புழக்கம் இல்லாத பழைய ரயில்வே தண்டவாளத்தில் விளையாடியது தவறா? அல்லது புழக்கம் உள்ள தண்டவாளத்தில் இந்த குழந்தைகள் விளையாடியது தவறா?

ஆனால் தவறே செய்யாத குழந்தை தண்டிக்கப்பட்டது ஏன்?

ஏன் என்றால், இங்கு செய்யும் செயல் பார்க்கப்படவில்லை.. செய்த நபர்களின் எண்ணிக்கை பார்க்கப்படுகிறது. அதனால் தான் தவறுகள் செய்பவர்கள் அதிகமாகப் பாதுகாக்கப்படுகின்றனர். தவறு செய்யாத சிலர் இடையூருக்கு உள்ளாகின்றனர். துன்பப்படுகின்றனர். காரணமின்றித தண்டிக்கப்படுகின்றனர்.

இதைக் கேள்விப் பட்டிருப்பீர்கள் தானே? "புகழ் பெற்றது எல்லாமே சரியானதல்ல. சரியானதெல்லாம் புகழ் பெற்றதில்லை."

சரி நேர்மையானவர்கள் லஞ்சம் வாங்காதவர்கள் கஷ்டப்படுகின்றனர். நேர்மையற்றவர்கள் யார்? லஞ்சம் வாங்குபவர்களா?.

உண்மையை சொல்ல்லுங்கள். அவர்கள் மட்டும் தான் குற்றவாளியா ? கொடுப்பவர்கள் இல்லையா? இலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சட்ட விரோதமானது என்று தெரிந்தும் தன்னுடைய காரியம் முடிந்தால், சரி, என்று எண்ணி அதற்கு ஒத்துழைப்பவர்களும் தானே அதற்கு காரணகர்த்தா?

லஞ்சம் ஏதும் கொடுக்காமல் இங்கே எதுவும் நடக்காது என்று நீங்கள் நினைத்த தருணம் எது? அந்த அனுபவத்தை பகிருங்களேன். என்று தான் நினைப்பதும் இல்லாமல் மற்றவர்களின் அனுபவங்களையும் கேட்கும் அளவிற்கு இது தவிர்க்கமுடியாதது என்று எண்ணும் அளவிற்கு ஒரு குற்றச் செயலுக்கு உடந்தையாக இருப்பதற்கு நாம் சொல்லும் காரணங்கள் என்னென்ன?

  1. இலஞ்சம் எங்கும் உள்ளது.
  2. இலஞ்சம் எப்போதும் உள்ளது.
  3. இலஞ்சத்தை ஒழிக்க முதலில் நம் மனமாற்றம் தேவை.
  4. இலஞ்சம் மோசமானதல்ல. நாம் கொடுக்கும் பணத்திற்கு நம் வேலை நடந்து விடுகிறது.
  5. இலஞ்சம் மேலிடத்திலிருந்து இருக்கிறது. சிஸ்டமே சரியில்லை.

இப்படி சாக்குப் போக்கு சொல்லிக்கொண்டு இலஞ்சம் எதற்கு கொடுக்கிறார்கள். கூர்ந்து பார்தீர்களேயானால், சில காரணங்கள் புரியும்:

  1. நம்முடைய வேலை சீக்கிரம் முடியனும்.
  2. வசதி……நமக்கு அந்த வேலை சம்பந்த நடைமுறைகள் தெரியாது. தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. நேரமும் இல்லை. பணத்தைக் கொடுத்தால் அவனே எல்லா வேலையும் செய்துக் கொடுத்து விடுவான்.
  3. பயம் மற்றும் ஒரு விடுதலை உணர்வு.

நிறையப் பேருக்கு அரசாங்க அலுவலகத்திற்கு ஒரு வேலை விஷயமாக போகவேண்டும் என்றாலே பயம். இலஞ்சம் கொடுக்கவில்லை என்றால் நம்மை அல்லது நம் சம்பந்தப்பட்ட வேலையில் ஏதேனும் கோளாறுஆகிவிடுமோ என்று.

இது தேவையில்லாதது. தாசில்தார் அலுவலகத்திலும் RTO அலுவலகத்திலும் ஏன் இலஞ்சம் தலை விரித்தாடுகிறது ? ஏனென்றால் அதை ஊக்குவிப்பது நாம் தானே…புது வண்டி, வீடு வாங்குறோம். டிப்ஸ் போல நாம சந்தோஷத்திலே கொடுக்கிறது தானே .என்ற நினைத்து கொடுத்து கொடுத்து, இப்போ அது வாங்கவில்லை என்றால் அங்கே வேலையே ஓட என்ன நடக்கவே மாட்டேங்குது.

4. அறியாமை மற்றும் கற்றுக் கொள்வதில் ஆர்வமின்மை

நமக்கு எந்த விஷயத்தையும் புதிதாகக் கற்றுக் கொள்ளும் ஆர்வமில்லை. ஒரு அரசாங்க ஆபீசில் நாம் மனு போட்டால், அதை இத்தனை நாட்களுக்குள் தீர்வு காணவேண்டும் என்று அவர்களுக்கு ஒரு நடைமுறை உத்தரவு உள்ளது. அதற்கு கருவியாகத் தான் தகவல் அறியும் சட்டம் இருக்கிறது. நம் மனு எந்த நிலையில் இருக்கிறது என்று தெரிந்துக் கொள்வதற்கு. நம் கையில் இருக்கும் போர்க் கருவிகளைப் பற்றி நமக்கு தெரியவில்ல, தெரிந்துக் கொள்ளும் ஆர்வமில்லை. சும்மா அந்த ஆயுதத்தை தூக்கித தூரப் போட்டு விட்டு , அவர்களின் உதவியை நாடுகிறோம்.

5. . தரகர்கள் மற்றும் புரோக்கர்கள் சொல்லும் தவறான தகவலை நம்புவது

நம்முடைய வேலை சம்பந்தப்பட்ட அலுவலக நடைமுறைப் பற்றித் தெரிந்துக் கொள்ளாமல், அதற்கான முயற்சி ஏதும் எடுக்காமல், தரகர்கள் மற்றும் புரோக்கர்கள், அது சிக்கலான நடைமுறை என்பதையோ, மேலதிகாரி பணம் கேட்கிறார் என்று சொல்வதையோ நம்பி இலஞ்சம் கொடுப்பது. இங்கே ஒருவர் முதல் தகவல் அறிக்கை நகல் பெற ரூபாய் ஐந்தாயிரம் இலஞ்சம் கொடுத்ததை எழுதி இருந்தார். இறப்பு சம்பந்தமாக முதல் தகவல் அறிக்கை உடன் பதிவு செய்து, பிரேத பரிசோதநாய்க்கு அனுப்ப ஏற்பாடுகள் உடன் செய்ய வேண்டும். , இதில் தாமதம் ஏற்படுவதாக புகார் அவர் உயர் அதிகாரிக்கோ, அல்லது லஞ்ச ஒழிப்புத துறைக்கோ தெரிவித்தால் அவர் வேலைக்குத் தான் ஆபத்து. எனவே அலுவலக நடைமுறை தெரிந்து நாம் செயல் பட்டால், இலஞ்சம் கொடுக்கத் தேவை இருந்திருக்காது.

இலஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது என்ற காலம் காலமாக இருக்கும் எண்ணம் தான் இதற்கு காரணம்.

6.. தவறு செய்து விட்டு அதற்கு இலஞ்சம் கொடுப்பது. உதாரணமாக சாலை விதிமுறையை மீறி விட்டு அதற்க்கு இலஞ்சம் கொடுத்தால் போலீஸ் விட்டு விடுவார்கள், அல்லது கோர்ட்தில் போடும் அபராதத்தை விட குறைவாகத் தானே இலஞ்சம் கொடுத்தேன், அதனால் என் பணமும் நேரமும் அலைச்சலும் மிச்சம் என்று சொல்பவரா நீங்கள்? நீதிமன்றத்தில் நிலையை சொன்னால்,இதை விட குறைவாக கட்ட வாய்ப்பு உள்ளது. ஏன் இந்த சிறு குற்றங்களுக்கு, அதை ஒத்துக் கொண்டால், நீதிமன்றத்திற்கு நேரில் போகாமல், தபாலிலேயே கட்டலாம் என்று எத்தனைப் பேருக்குத் தெரியும்?

. 7.. சரி உண்மையாகவே சம்பந்தப்பட்ட அதிகாரி இலஞ்சம் பெறுவதற்காக நமக்கு உடனடியாக கிடைக்க வேண்டிய அத்யாவசிய தேவைகளைக் கூட உடன் செய்யாமல் ஒத்தி போடுகிறார் என்றால் என்ன செய்வது ……….இலஞ்ச ஒழிப்புத் துறையை அணுகி அவர்களுடன் சென்று இலஞ்சம் கொடுப்பது போல் செய்வது தான்.

உங்களுக்கு தெரியும் தானே. அவ்வாறு செய்யும் போது தான் இலஞ்சம் கொடுப்பது குற்றம் கிடையாது. ஏனென்றால் இப்போது இலஞ்ச ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, இலஞ்சம் வாங்குபவர் மட்டுமல்லாமல், இலஞ்சம் கொடுப்பவர் மேலும் குற்ற வழக்கு பதியப் படும் என்று?

நீதி தேவதையின் கண் ஏன் கட்டப்பட்டுள்ளது?

செல்வம், அதிகாரம், பின்புலம் போன்ற எந்த வித பாரபட்சமும் ,

பார்க்காமல் நீதி வழங்க வேண்டியே நீதி தேவதை தன கண் மூடி இருக்கிறாள். இந்த நீதி தேவதையின் உருவம் 1 நீதிக்கு தேவையான முக்கியமான அம்சம் இது 16 ம் நூற்றாண்டிலிருந்து பயன் பாட்டில் உள்ளது.

நமது நாட்டில் ஆட்சி செய்த மனுநீதி சோழன், குற்றம் செய்தது தன மகனே என்று தெரிந்தும் கூட, விதித்த தண்டனையை மாற்றாமல் தேர்காலில் ஏற்றி அவனை கொன்றான். எனவே தான் அவன் சிலை நமது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


நீதிமன்றத்திலிருக்கும் நீதிதேவதை பெண்ணாக இராமல், நீதிதேவனாக இருக்கக்கூடாதா? அந்த பெண் உருவம் எப்படி வந்தது? ஏன் கண்கள் கட்டப்பட்டுள்ளது? கையில் தராசு ஏன்? மற்ற நாடுகளிலும் இந்த நீதிதேவதை இடம் பெற்றுள்ளாரா? எல்லா கேள்விக்கும் விடையளிக்க முடியுமா?

 முதலில் நீதி தேவதை ஏன் பெண்ணாக இருக்கிறாள்? ஆணாக இருக்கக்கூடாதா ? என்பதைப் பார்ப்போம்.

இது தான் பெண் தெய்வம் ஜஸ்ட்டியா ரோமானியர்களின் பெண் தெய்வம். கிரேக்க கடவுளுக்கு இணையானவள். ஒழுங்கு, சட்டம், இயற்கை நீதி, மற்றும் பண்பாடு ஆகியவற்றின் புனித வடிவம்.

ஏன் கண்ணைக் கட்டிக்கொண்டு இருக்கிறாள்?

சட்டம் ஒரு குருடு என்பதை உணர்த்தவே . அதாவது சட்டம் எந்த வித்தியாசமும் பார்க்காது. ஏழை பணக்காரன், வலிமையானவன், பலவீனமானவன், சரியானவன், எமாற்றுக்காரன் என்று. அதாவது அவள் கண்ணை மூடிக்கொண்டிருப்பது எதிரில் இருப்பவரைப் பார்த்து நீதி வழங்குவது இல்லை என்பதையும் தன்னுடைய ஐம்புலன்களைக் கொண்டும் அல்ல என்றும் உணர்த்தவே. கண்ணும் ஐம்புலன்களும் ஏமாற்றலாம் என்பதால், மனம் சுதந்திரமானது என்பதால் நம்பிக்கை வைக்கக்கூடிய காரண காரியத்தைக்கொண்டும் ஆராய்ந்தும் முடிவு எடுக்கிறாள் என்று உணர்த்தவே.

இதில் சுவாரசியம் என்னவென்றால், 15ஆம் நூற்றாண்டில் தான் நீதி தேவதையின் கண்ணைக் கட்டி இருக்கும் உருவங்கள் புகுத்தப்பட்டன என்று ஆய்வுகள் சொல்கிறது.

அடுத்து தராசு ஏன் வைத்திருக்கிறாள்?

அதை நீதியின் தராசு என்பர். அது, இரண்டு தரப்பையும் சரி சமமாக விசாரித்து, இரண்டு தரப்பிலும் உள்ள சாட்சியங்கள் ஆதாரங்களை சீர் தூக்கிப் பார்த்து முடிவு செய்வதைக் காட்டுகிறது. இந்த தராசும் எகித்திய பெண் தெய்வம் மாட் என்பதுடன் இருந்த தராசு எடுத்துக்கொள்ளப்பட்டது என்று விக்கீபீடியா சொல்கிறது

அடுத்து அவளின் கையில் உள்ள வாள். வாள் அதிகாரத்தின் உருவகம் என்று நமக்குத் தெரியும். ஆனால் நீதி தேவதையின் கையில் உள்ள வாளிற்கு சில சிறப்புகள் உண்டு. அது உடல் வலிமையை விட ஒரு முடிவிற்கான காரனத்திற்கான சக்தியை சுட்டுகிறது. இந்த சக்தியை தான் நாம் சட்டம் என்றும் அதை செயல்படுத்த முனைகிறோம். நீதியை வழங்குவதற்கும் சட்டத்தை அமல்படுத்துவதற்கும் அதிகாரம் தேவை என்பதை அது உணர்த்துகிறது. மக்களாகிய நாம்தான் அந்த சட்டங்களை செயல்படுத்த தேவையான அதிகாரத்தை வழங்கியுள்ளோம். ஏனென்றால், நாம்தான் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும் என்று.நம் விருப்பத்தினால் தான் அது சட்டத்தை அமுல்படுத்துவர்களின் கையில் உண்மையான அதிகாரமாகக் கொடுக்கப்பட்டது. இன்னொன்று கவனித்தீர்களா? அந்த வாளிற்கு இரண்டு முனைகள் உண்டு. அதாவது அந்த காரணமானது சுய விருப்பு வெறுப்பு இன்றி எதிரும் புதிருமாகவும் பயன்படுத்தக்கூடியது என்பதால்.

ஒரே மாதிரி வாதம், கண்ணோட்டம் மற்றும் நோக்கம், தண்டனை கொடுக்க கூடிய வகையில் ஒருவருக்கு எதிராகவும், வேறொரு சூழ்நிலையில் உள்ள மற்ரோருவருவரை காக்கவும் பயன் படும் என்றும் சொல்கிறது. ஒட்டுமொத்தமாக அந்த வாள் உணர்த்துவது ஒன்று தான் அதிகாரம் நடுநிலையுடன் பயன்படுத்தப்படவேண்டும். அந்த அதிகாரத்தை துஷ்ப்ராவ்யோகம் செய்வது அநீதியாகும்; வாளை சுழற்றும்போது குற்றவாளிக்கு தண்டனை கொடுப்பது போல், நமக்கு பிரியமானவர்களுக்கும் காயம் ஏற்படலாம்; அதேபோல அந்த வாளைஅதாவது அதிகாரம் நீதியாகக் கருத முடியாது. அது ஒரு கருவி மட்டுமே. அது நீதிக்கு பணிந்தாக வேண்டும்.

எனவே ஒட்டுமொத்தமாக, நீதி தேவதை நீதி தர்மத்தை காட்டுகிறது. அதே போல அவளின் நெடிந்துயர்ந்த உருவம், பெண் என்பதால் கருணையைக் காட்டுவதாக அமையாமல், அவரவர் செயலுக்குத் தக்கபடி, கடுமையாகவும் கனிவாகவும் சூழ்நிலைக்கு தக்கவாறு காட்டும். நீதி என்பதை சம உரிமை என்று சிலர் குழப்பிக் கொள்கின்றனர். ( மாண்புமிகு உச்ச நீதிமன்றம் வழங்கிய கள்ளக் காதல் குற்றமல்ல என்ற தீர்ப்பு) சில சமயம் எல்லோருக்கும் சமமாக தீர்ப்பு வழங்குவது என்பது சிலரிடமிருந்து எடுத்து மற்றவருக்கு கொடுப்பதாகவும் அமையும். எனவே நீதி தேவதை என்ற சின்னம் பாரபட்சமின்றி நீதி வழங்குவதன் பிம்பம். எந்த ஒரு குறிப்பிட்ட மனிதருக்காக மட்டும் நியாயம் வழங்குவதாக இல்லாமல், அனைவருக்கும் பொதுவாக, சட்டத்தின் சக்தியுடன், காரண காரியத்தின் பலமுடன் செயல்படுவதை உணர்த்துகிறது. அதை பண்டைய காலத்திலிருந்து அனைவரும் உணர்ந்து வருகின்றனர்.



சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...