இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?
உண்மையை ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும்.இந்த சமூகம் ஆதிவாசிகளையும் தலித்துகளையும் ஒடுக்கியது கொஞ்சமா நஞ்சமா?
அவர்களையும் சமமாக ஆக்கும் வரையில், இட ஒதுக்கீடு வேண்டும் என்றார் டாக்டர் அம்பேத்கார்..
" சமத்துவக் கொள்கையைக் கொண்டிருப்பது நல்லது, ஆனால் நிர்வாக அமைப்பிற்கு வெளியேயுள்ள சில சமூகங்கள் உள்ளே வரும் ஏற்பாடும் இருக்க வேண்டும்" என்றார்.
ஆனால் அவருக்கு தெரிந்து இருந்தது.. இந்திய சமூகம், அதன் கீழ் சாதியினரைப் பார்க்கும் விதத்தை, அந்த சட்டம்மாற்றும் என்று அவர் நம்பவில்லை.. அதற்கு தீர்வு , இட ஒதுக்கீடு இல்லை என்று உறுதியாக நம்பினார். அதனால்தான், தலித்துகளுக்கான தனி தொகுதிகளை ஒதுக்குவது அல்லது வேலைகள் ஒதுக்குவது போன்றவை 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிறுத்தப்படும் என்ற நம்பிக்கையில் பாராளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் இட ஒதுக்கீடு செய்ய அவர் தயக்கத்துடன் தான் ஒப்புக்கொண்டார்.
இதோ அவருடைய பயத்தை, ஒரு எச்சரிக்கை குறிப்பாக நவம்பர் 30, 1948 அன்று, எதிர்கால அரசாங்கங்களுக்கு கொடுக்கிறார்
"பெரிய அளவிலான இட ஒதுக்கீடுகள், சமத்துவத்தின் ஆட்சியை அழிக்கக்கூடும். இடஒதுக்கீடு என்பது, அரசியலமைப்பு சட்டத்தின் 10 வது பிரிவு (இப்போது பிரிவு 14) உடன் ஒத்துப்போக வேண்டும்"
அதன் அடிப்படையில் வந்தது தான் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 15(4) மற்றும் பிரிவு 16(4)
15(4) "இந்த பிரிவிலோ அல்லது 29 வது பிரிவின் (2) பிரிவுகளிலோ எந்தவொரு சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய குடிமக்களின் முன்னேற்றத்திற்காக அல்லது பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான எந்தவொரு சிறப்பு ஏற்பாட்டையும் அரசு தடுக்காது
16 (4) வது பிரிவு பின்வருமாறு கூறுகிறது: “எந்தவொரு சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய குடிமக்களின் முன்னேற்றத்திற்காகவோ அல்லது பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காகவோ எந்தவொரு சிறப்பு ஏற்பாடுகளையும் செய்வதிலிருந்து அரசு 16 வது பிரிவு அல்லது பிரிவு 29 (பிரிவு2) இல் எதுவும் தடுக்காது ”.
இந்த இட ஒதுக்கீடு பல தசாப்தங்களாக இன்று வரை தொடர்கிண்றது.
ஏன்?
நம் ஆட்சியாளர்களுக்கு அதை நீக்க, பயம், குறைக்க பயம்…ஆனால் அதை கூட்ட பயமில்லை!
அப்படியானால் இட ஒதுக்கீடு பெற்ற எல்லோரும் முன்னேறிய வகுப்பாக அல்லவா மாறியிருக்க வேண்டும்.,?
ஆனால் நடந்தது என்ன?
இதோ கடைசியாக நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 புள்ளிவிவரங்களின் படி,
- 6-13 வயதுக்கு இடைப்பட்ட 38 மில்லியன் பள்ளிக்கு போகாத குழந்தைகள்!
- இதில் 7.1 மில்லியன் தலித் மற்றும் 4.6 மில்லியன் ஆதிவாசி குழந்தைகள் அடங்குவர்.
- ஆபத்தான விஷயம் என்னவென்றால், இந்த 38 மில்லியன் குழந்தைகளில், 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் எந்தவொரு அடிப்படை கல்வி பெறவில்லை.
அப்படியானால் இத்தனை வருடங்களாக இருந்த இட ஒதுக்கீடு அவர்களுக்கு ஒரு பயனும் அளிக்கவில்லையா?
அப்படித் தான் தெரிகிறது..
அதற்கு ஏற்றார் போல, இட ஒதுக்கீட்டின் அளவு கூடுகிறது. அந்த பட்டியலில் உள்ள வகுப்புகள் தான் கூடுகின்றன..
சமீபத்தில் மராத்திய இட ஒதுக்கீடு குறித்த வழக்கில் தீர்ப்பை எழுதிய நீதியரசர்களில் ஒருவரான நீதியரசர் அசோக் பூஷன் , தன் தீர்ப்பில் "50 சதவீதத்திற்கு மேற்பட்ட இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது ஒரு சமுதாயம், சமத்துவத்தின் அடிப்படையில் , இயங்காமல் சாதியின் அடிப்படையில் மட்டுமே இயங்குகிறது என்பதைக் காட்டும்" என்றார்
அது என்ன 50% இட ஒதுக்கீடு?
1992 ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்ட இந்திரா சாவ்னி வழக்கின்
இது மண்டல் தீர்ப்பு என்றும் அழைக்கப்படுகிறது -
முக்கிய தீர்ப்பு -
- 50% என்ற அளவிற்கு மேல் கல்வி, பணியில் இட ஓதுக்கீடு கூடாது.
- அப்படி கொடுக்கவேண்டும் என்றால் அது அசாதாரண சூழ்நிலையில் மட்டுமே இருக்க வேண்டும்.
…என்றது..
ஆனாலும் இதற்கு முதலில் பிள்ளைகள் சுழி போட்டது நாம் தான்!
69% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு, அதை எந்த சட்டமும் தடுக்க முடியாமல் அரசியல் சாசன 9ம் அட்டவணையில் கொண்டு போய் வைக்கவில்லையா?
69% இட ஒதுக்கீட்டை, 90கலீல் இருந்து அனுபவித்து வரும் நம்மை பார்த்து, மற்ற மாநிலங்களும் இட ஒதுக்கீடு கொடுக்க ஆரம்பித்தன.
அப்படி ஒரு முயற்சியாக, மஹாராஷ்டிரா அரசு, மராத்தி வகுப்பினருக்கு 16% இடம், கல்வி மற்றும் வேலைகளில் மராட்டியர்களுக்கு ஒதுக்கீடு வழங்கும் உத்தரவை 2018 ல போட்டது. .
ஏற்கனவே பிற்பட்ட வகுப்பினருக்கு 19 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு அவர்கள் அதனை அனுபவித்துக் கொண்டு வரும் சூழ்நிலையில் அதை உடைத்தால் அவர்கள் இதனால் பாதிக்கப்படுவர் என்பதனாலேயே இவர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், மான்புமிகு உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், சமீபத்தில் மராட்டியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது செல்லாது என்று அறிவித்துள்ளது பற்றி நமக்கு நன்றாக தெரியும் .
அப்படியானால் சூழ்நிலைக்கு ஏற்ப நீதி மாறுமா?
என்றால் ஆமாம்..
நீதி சூழ்நிலைக்கேற்ப மாறும் தன்மை கொண்டது தான்..
கொலை செய்வது குற்றம் என்றால், தற்காத்துக்கொள்ள செய்தல் குற்றமாகாது
..ஆனால் தர்மம் மட்டுமே நிலையானது..
அப்படியெனில், மரத்தியர் இட ஒதுக்கீடு வழக்கில இட ஒதுக்கீடு அதர்மமா?
இத்தனைக்கும் அந்த அரசு கொண்டுவந்த இட ஒதுக்கீடு சரியானது என்று தான் பம்பாய் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது ஆனால் அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் இந்த தீர்ப்பு!!
உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்கள் கொண்ட பெஞ்சு, இரு வேறு தீர்ப்புகளை அளித்தாலும்,
- மராத்தா வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது செல்லாது என்று ஒருமனதாக தீர்ப்பு வழங்கியது
- அது முரண்பட்ட ஒரே விஷயம் என்னவென்றால் மாநில அரசுகளுக்கு சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினரை அடையாளம் கண்டு, தக்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு 103 வது சட்ட திருத்தத்தின் கீழ் இன்னமும் உள்ளதா என்பது குறித்த முரண்பட்ட கருத்து இருந்ததால் மட்டுமே !!
அது ஒரு தனி கதை..அதை பின்னாடி பார்ப்போம்.
அந்த வழக்கின் தீர்ப்பின் சாராம்சத்தை பார்த்தாலே, அந்த இட ஒதுக்கீட்டிற்கும் நம்முடைய தமிழ்நாட்டின் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்குமுள்ள வேற்றுமை புரியும்.
இன்னொரு விஷயம்..இந்த 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகள் விரைவில் உச்சநீதிமன்ற விசாரணைக்கு வரையுள்ளது. இது நாள் வரை மண்டல் தீர்ப்பு எனப்பட்ட இந்திரா சகானி தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு செய்த தீர்ப்பு வந்த பின்பு தான், இதை விசாரனைக்கு எடுத்து கொள்வோம் என்றனர்..
ஆனால் இந்த வழக்கில், சகானி வழக்கு தீர்ப்புக்கு எந்த சீராய்வு தேவையில்லை என்றனர் நீதியரசர்கள்!
அதனால் நம் 69% ஓதுக்கீடும் சீக்கிரம் சோதனைக்கு உள்ளாக இருக்கிறது!!
ஒரு சின்ன பிளாஷ் பேக்
இந்திரா சகானி வழக்கில் (மண்டல் தீர்ப்பு) உச்சநீதிமன்றம் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்று சொல்லி இருந்ததற்கு எதிராக கெய்க்கவாட் கமிஷன் கொடுத்த தரவுகளின் அடிப்படையில் தான்,மராத்தா வகுப்பினருக்கு கல்வி நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பிலும் 16 சதவீத இட ஒதுக்கீடு அளித்து ஆணை பிறப்பித்தது
என்ன தவறு கண்டது நீதிமன்றம்?
- இந்த மராத்திய வகுப்பினர் தான், அரசு வேலைகளில் பெரும்பான்மையான இடங்களில் உட்கார்ந்து உள்ளனர்.
- அரசாங்க பணியில் முதல் வகுப்பு பணியான ஏ கிரேடு அலுவலர்கள் என்ற பிரிவில் மட்டுமே இந்த மராத்திய வகுப்பினர் 33 சதவீத இடத்தை பணிகளில் அமர்ந்துள்ளனர் அதுமட்டுமல்ல பிரீ பி கிரேடு பணியில் 29 சதவீதமும் சி கிரெடில்37 சதவீதமும் டி கிரேடில் 37 சதவீதமும் இந்த மராத்தா வகுப்பினர் தான் கைப்பற்றியுள்ளனர் எனவே அவர்களை பிற்பட்ட வகுப்பினர் என்று கருத முடியாது
- அவர்கள் வகுப்பை பொருத்து, போதுமான அளவு பிரதிநிதித்துவம் அரசு பணிகளில் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் முடிவெடுத்தது
- இந்த அரசாணையை இவர்கள் கெய்க்வாட் கமிஷனின் தரவுகளின் அடிப்படையில் தானே பிறப்பித்தார்கள் எங்கே தவறு நடந்தது என்றால் அந்த கமிஷன் ஓபன் கேட்டகிரியில் இருக்கும் பணி களுக்கு எதிராக மராத்தா வகுப்பினருக்கு உள்ள பணி விகிதாச்சாரத்தை ஒப்பீடு செய்வதற்கு பதிலாக இரண்டையும் ஒன்றிணைத்து கணக்கீடு செய்தது தவறு .
- அதனால் தான் கமிஷன் மராத்தா வகுப்பினருக்கு சரியான பிரதிநிதித்துவம் இல்லை என்ற முடிவை எடுக்க நேர்ந்தது ஆனால் உண்மையில் மராத்தா வகுப்பினர் அரசு பணிகளில் 30 சதவீதத்திற்கு அதிகமாக பிரநிதித்துவம். பெற்றிருந்தனர் என்பதை உச்ச நீதிமன்றம் கண்டறிந்தது
- கமிஷன் செய்த இன்னொரு தவறு என்னவென்றால் அரசியல் சாசன பிரிவு 16 (4 )இன் கீழ், சதவீத பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதை தவறாக போதுமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று சொன்னதாக தப்பாக அர்த்தம் கொண்டு விட்டது
- அதே போல இன்னொரு தவறையும் கமிஷன் செய்தது . இதற்கு முன்னர் முன் தங்கிய வகுப்பாக கணக்கில் கொள்ளப்பட்ட மராத்தா வகுப்பு, இடைப்பட்ட காலத்தில் எப்படி பின்தங்கிய வகுப்பாக கணக்கில் எடுக்கப்பட்டது என்பதற்கான சமூக பொருளாதார மாற்றங்களை தரவுகள் அடிப்படையில் நியாயப்படுத்த தவறிவிட்டது
- தேசிய நீரோட்டத்தில் வெளியிலுள்ள சமுதாய வாழ்வு" என்ற இந்த சமுதாய சோதனைக்கும் அந்த குறிப்பிட்ட வகுப்பு உட்படுத்தப்பட வேண்டும்
- அதேபோல ஒரு வகுப்பின் சமுதாய மற்றும் கல்வியில் பின் தங்கியதாக உள்ளதா என கணக்கிடும் பொழுது அந்த சமுதாய மக்கள் திறந்தவெளி போட்டி தேர்வில் மற்ற சமுதாய மக்களுடன் போட்டியிடும் அளவிற்கு இருந்து அந்தப் பதவிகளில் 30 சதவீதத்திற்கு மேல் அமர்ந்து இருக்கின்றது என்பதை கவனிக்கவும் தவறிவிட்டது
- எனவே பிற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என்ற அரசியல் சாசன விதியின் கீழான விதியை மராத்தா வகுப்பினருக்கு கொடுக்க இயலாது
- அதேபோல இந்திரா சகானி வழக்கில் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனில் அசாதாரணமான சூழலில் மட்டுமே வழங்க வேண்டும் என்று சொல்லி இருக்கும்பட்சத்தில் அதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலை மராத்தி வகுப்பினருக்கு நிலவவில்லை என்ற முடிவுக்கு வந்தது.
- கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் இந்த தீர்ப்பில், 50 சதவீதத்துக்கு மிகாமல் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்ற இந்த தீர்ப்பின் அடிப்படையே சமத்துவம் என்ற கொள்கைக்கும், மேற்பட்ட மக்களை முன்னேற்றுவதற்காக அளிக்கப்படும் இட ஒதுக்கீடு இரண்டையும் சமன் செய்யும் போது, எந்தவித எதேச்சதிகாரம் கொண்டதாகவும் இருக்க கூடாது .
- மேலும் உச்ச நீதிமன்றம் கெய்க்கவாட் கமிஷன் தரவுகளின் அதிகப்படியான எண்ணிக்கை இருக்கும் பொழுது, நாகராஜ் வழக்கின்அடிப்படையில் அந்த 50 சதவீதத்தை தாண்டும் என தவறாக கருதி விட்டது உண்மையிலேயே நாகராஜ் வழக்கில் அது போன்ற தீர்ப்பு ஏதும் வழங்கப்படவில்லை எனவே 85 சதவிகித பின்தங்கிய மக்கள் தொகையில் 30 % மராத்திய வகுப்பினருக்கு 50% க்குள் ஒதுக்கீடு ஏதும் வழங்காமல் தனியாக ஒதுக்கீடு வழங்கப்பட்டது தவறு என்ற முடிவுக்கு வந்தது
- அதனால் அவர்களின் சமூக மற்றும் கல்வி அறிவில் பின் தங்கியவர்கள் என்ற முடிவை எடுத்த அரசின் முடிவு சரியல்ல என்றும் தீர்ப்பளித்தது
- 85% பிற்பட்ட வகுப்பினரில் 35 சதவீதம் பேர் மராத்தியர் உள்ளதால் அவர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ரத்து செய்தது
இந்திரா சகானி வழக்கில் ஆறு தீர்ப்புகள் தனித்தனியாக வழங்கப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் ஒரே அம்சத்தை தான் வலியுறுத்தின. அது என்னவென்றால்
" அசாதாரண சூழ்நிலையில் மட்டுமே 50 சதவீதத்திற்கு மேற்பட்ட இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். அந்த அசாதாரண சூழ்நிலை என்பதை கணக்கிடும் போது மிகுந்த கவனம் கையாளப்பட வேண்டும்" என்றது
- அசாதாரண சூழ்நிலை என்பதை கணக்கில் எடுக்கும் பொழுது ,👇அவர்கள் அரசியல் வாழ்விலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பது மறுப்பதற்கில்லை
- மேலும் தேசிய நீரோட்டத்தில் அவர்கள் இருக்கும் பட்சத்தில் அந்த வகுப்பு அசாதாரண சூழ் நிலைக்கு உட்படுத்தப்பட்டது என்றும் கருதுவது இல்லை
- ஓபிசி எஸ்சி எஸ்டி ஆகியோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்பு வழங்கும்போது ஒரு விதிவிலக்காக அது போன்ற ஏரியாக்களில் இருக்கும் சாதியினரின் நலனை பொறுத்து விதிவிலக்கு அளிக்கலாம் என்றும் குறிப்பிட்டது.
இந்த இட ஒதுக்கீடுகள் எந்த அடிப்படையில் கொடுக்கப்படுகிண்றன?
அரசியல் சாசன பிரிவு 14 இன் கீழ் கொடுக்கப்பட்ட சமத்துவம என்ற உரிமைக்கு விிதிவிலக்காக, 14(1) கீழாக , பிரிவு 16 (4),15(4) படி வழங்கப்படும்..
எல்லா பணியையும் அப்படி இட ஒதுக்கீட்டில் கொடுக்க முடியுமா?
என்றால். முடியாது....
இந்திரா சயானி தீர்ப்பில், தேசிய நலன் மற்றும் பொது நலன் அடிப்படையில் சில மிக உயரிய பதவிகள் அனு ஆராய்ச்சி போன்றவை, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்ப முடியாது என்று சொல்லப்பட்டுள்ளது.
அது சரி, 10 சதவீத பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு ஒன்று கொண்டு வந்ததே அரசு. அது மட்டும் சரியானதா?
அரசியல் சாசன பிரிவில் கொண்டு வரப்பட்ட 103 ஆவது திருத்தததை குறித்து ஏற்கனவே ஒரு வழக்குJanhit Abhiyan v Union of India நிலுவையில் இருக்கிறது.
..அரசியல் சாசன பிரிவில் செய்த 102 ஆவது திருத்தத்தின் படி மாநில அரசுகளுக்கு, பின்தங்கிய வகுப்பு எது என்று அடையாளம் காணும் அதிகாரம் எடுக்கப்பட்டு விட்டதா?
இது குறித்த முரண்பட்ட கருத்து தீர்ப்பில் உள்ளதால் குழப்பம் நிலவுகிறது.
நீதியரசர்கள் அசோக் பூஷன் மற்றும் நசீர் ஆகியோர், இந்த திருத்தம் மாநில அரசின் அதிகாரத்தை எடுக்கவில்லை என்ற பொழுது, மற்ற மூன்று நீதியரசர்கள், மாநில அரசுக்கு இருந்த அதிகாரம் அந்த சட்டத் திருத்தத்தின் மூலமாக எடுக்கப்பட்டு விட்டது எனறுள்ளனர்!!
நீதியரசர் நாகேஸ்வரராவ் மற்றும் ஏனைய இரண்டு நீதியரசர்கள் கருத்துப்படி
" பின்தங்கிய வகுப்பினர் குறித்த பட்டியலில் சேர்ப்பது, நீக்குவது மாற்றுவதில் மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் அது குறித்த இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் முதலில் ஜனாதிபதிக்கும் அதற்குப் பின்னர் பாராளுமன்றத்துக்கு உள்ளது" என்கின்றனர்
- தேசிய பிற்பட்டோர் நல கமிஷன், தயாரித்து வெளியிடும் பின்தங்கிய சமுதாயத்திற்கான பட்டியல் தான் இறுதியானது.
- 342 A அரசியல் சாசன பிரிவின்படி ஜனாதிபதி தயாரித்து வெளியிடும் அறிக்கையில் உள்ள சாதியினர் மட்டுமே சமுதாய மற்றும் கல்வியில் பின் தங்கிய வகுப்பினர் அதில் பட்டியல் எனப்பட்டது " மத்திய பட்டியல்" மட்டுமே. எனவே மாநிலங்களுக்கு இதர்்குண்டான அதிகாரம் எடுக்கப்பட்டுவிட்டது என்றனர்
ஆனால் ஆர்டிகள் 15 (4) மற்றும் 16 (4 ) படி , மாநில அரசுகளுக்கு அந்த மாநிலத்தில் உள்ள பின்தங்கிய வகுப்பினரை அடையாளம் கண்டு அவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டம் தீட்டுவது அவர்களுடைய அதிகாரத்தில் உள்ளது தானே என்ற கேள்வி எழும்.
அது போன்ற வாதத்தை எடுத்துக்கொண்டால் அது அரசின் இறையாண்மைக்கு எதிரானதாக இருக்கும் என்கின்றனர் நீதியரசர்கள்
ஆனாலும் இந்த மாநில அரசுகள் தொடர்ந்து தரவுகளை சேகரித்து அதற்குண்டான யோசனைகளை தங்கள் மாநில பிற்பட்டோர் நல கமிஷன் மூலமாகவும் பார்லிமென்டில் உள்ள தங்களுடைய பிரதிநிதிகள் மூலமாகவும் சொல்லி மந்திரிசபை மூலமாக ஜனாதிபதிக்கு யோசனை தெரிவிக்கலாம் இதுவே கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த அரசியல் அமைப்பு என்கின்றனர்.
இது உண்மையில் மிக பாதகமான பின்விளைவுகளை அரசியல் கட்சிகள் ஏற்படுத்தக் கூடும்.
- அரசியல் சாசன பிரிவு 342 A படி ஜனாதிபதி தான் பிற்பட்டோர் பட்டியல் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் ஆனால் இந்த அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆன போதிலும் இது குறித்து ஜனாதிபதி அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.!!
- அதனால் தற்போது மாநில அரசுகள் தயாரித்துள்ள பின்தங்கிய வகுப்பினர் பட்டியல், ஜனாதிபதி வெளியிடும் வரை செல்லும் என்று அரசியல் சாசன பிரிவு 142 ன் கீழ் உத்தரவுடப்பட்டுள்ளது.
ஏனெனில் அவை எல்லாம் செல்லாது என்று அறிவிக்கும் பட்சத்தில் அது மிகப்பெரிய மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால்!
- மாநில அரசின் அதிகாரத்தில் இருந்து, தற்போது 342 (A ) மூலமாக, ஜனாதிபதிக்கும், சிறு மாறுதல்களுடன் பார்லிமென்ட்க்கும் அதிகாரம் மாற்றப்பட்டு இருந்தாலும் அது அரசியல் சாசனத்தின் அடிப்படை தன்மையை எந்த விதத்திலும் பாதிக்காது
- அதே போல 102 வது சட்டத்திருத்தம் என்பது, ஆர்டிகள் 368 பிரிவு 2 க்கும் எதிரானது அல்ல ஏனெனில் மாநில நலன் பாதிக்கும் என்றால், அதுபோன்ற திருத்தங்கள் வருவதாயின் பெருமையான பெரும்பான்மையான மாநிலங்களில் ஒப்புதல் பெற வேண்டும் என்று உள்ளதால்
இவை ஒரு பக்கம் இருக்கட்டும்..
கூட்டாட்சி தத்துவத்துக்கு குந்தகம் விளைவிக்கும் இந்த இட ஒதுக்கீடுகள் அதிகரித்து வருவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
"அனைத்து தரப்பு சமுதாய மக்களும் எதிரான தரவுகள் இருந்தாலன்றி , அனைத்து ரீதியாகவும் முன்னேறி வருகின்றனர் என்று தான் கருதவேண்டும்
ஆனால் ஒவ்வொரு சமுதாய மக்களும் தாங்கள் முன்னோக்கி செல்லவில்லை பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறோம் என்று சொல்ல வருவார்களேயானால் இந்த அரசியல் கொள்கைக்கு எதிரான ஒரு நிலையில் நாடு சிக்கி தத்தளிக்க வேண்டிவரும்" என்றது.
உண்மைதான்..மிக சிக்கலான ஒரு கட்டத்தில் இருக்கிறோம்.
அம்பேத்கர், ஜனநாயகத்தின் தரம் குறித்து அக்கறை கொண்டிருநதார். ஆனால், நேரு நிர்வாகத்தின் தரம் குறித்து அக்கறை கொண்டிருந்தார்
உண்மையை சொல்வதானால், இந்த இரண்டு விஷயங்களிலும் நாம் தான் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இத்தனை வருடங்கள் ஆகியும், இட ஒதுக்கீடு, இந்தியாவை எந்த விதத்திலும் மாற்றவில்லை என்றால், அது தெளிவாக செயல்படாத ஒரு தோல்வியுற்ற கொள்கையலவா,?
இவை மட்டுமே ஒரு சமுதாயத்தை உயர்த்தி விடுமா?..
"ஒரு பிற்பட்ட சமுதாயத்திற்கு கல்வி நிறுவனங்களிலும் அரசு பணிகளிலும் ஒதுக்கீடு கொடுப்பதால் மட்டுமே அவர்களை முன்னேற்ற முடியாது அந்த சமுதாய மக்கள் படிப்பதற்கு தேவையான கல்வி வசதிகளை செய்து கொடுப்பதற்கும், அந்தகல்வி கட்டணத்தில் சலுகை காட்டுவதன் மூலமும் அவர்களின் தொழில் கல்வி கற்று சுயமாக யாரையும் சார்ந்து இல்லாமல் சமுதாயத்தில் நிற்க ஏதுவாக செய்வது மட்டுமே அவர்களை எல்லாவிதத்திலும் சமுதாயத்தில் முனைக்குச் செல்ல உயர்த்தும் என்று உச்ச நீதிமன்றம், கருத்து தெரிவித்ததை கவனிக்க வேண்டும்.
அரிஸ்டாட்டில் சொன்னதை நினைவில் கொள்வோம்
: "சமமில்லாதவரை சமமாக கருதுவது மட்டும் அநீதி அல்ல., சமமானவர்களை சமமில்லாதவராக கருதுவதும் அநீதியாகும்".
இந்த இட ஒதுக்கீட்டு கொள்கை பற்றி நாம் தீவிரமாக யோசிக்க வேண்டிய நேரம் இது.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக