சனி, 27 நவம்பர், 2021

எனது நண்பர் விபத்தில் இறந்துவிட்டார் அவர் வங்கியில் வாங்கிய லோன் இன்னும் கட்டி முடிக்கவில்லை அவரது மனைவி இப்போது என்ன செய்ய வேண்டும்?

 

எனது நண்பர் விபத்தில் இறந்துவிட்டார் அவர் வங்கியில் வாங்கிய லோன் இன்னும் கட்டி முடிக்கவில்லை அவரது மனைவி இப்போது என்ன செய்ய வேண்டும்?

விபத்தில் இறந்த குடும்பத் தலைவரால் நிலைகுலைந்து நிற்கும் குடும்பத்திற்கு, அது மேற்கொண்டு இயங்க கொடுக்கப்படுவது அந்த விபத்து நஷ்டஈடு தொகை.

அதை இப்போது கடனை அடைக்க எடுத்துக்கொடுப்பதை விட வேறு வழியில் அதை அடைக்க முயற்சிக்கவும்

இன்னொன்று, அந்த நஷ்டஈடு தொகை எப்போது கிடைக்கும் என்பதை உத்தரவாதமாக சொல்லமுடியாது. நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி தீர்ப்பு வரும்வரை காத்திருக்க முடியாதா? மக்கள் நீதிமன்றம் என்னும் லோக் அதாலத்தில் வழக்கை முடிக்க முயலலாம்.இதில் நஷ்டஈடு தொகை சிறிது குறையலாம் என்றாலும் கிடைக்கும் காலத்தை கணக்கு போட்டால் லாபம் தான்.இன்னொரு சிறப்பாக,வழக்கு போட கட்டிய நீதிமன்ற கட்டணம் முழுதாக திருப்பி கிடைக்கும்.

அடுத்து, இறந்தவர் வாங்கிய கடனை திரும்ப கட்டும் விஷயத்தை பார்ப்போம்.எந்தவித உத்தரவாதம் இல்லாமல் கடனை வங்கி கொடுத்திருக்காது..அதை பற்றிய விவரங்களை சேகரிக்கவும்..

கடன் வாங்குவதற்கு உத்தரவாதம் கொடுத்த நபருடன் பேசியபிறகு, இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் குடும்ப நிலையை சொல்லி கடன் மற்றும் வட்டியை குறைக்க சொல்லலாம்.இல்லையென்றால் மக்கள் நீதிமன்றத்தில் கூட முறையிடலாம்.இங்கு பாதிக்கப்பட்டவரே வங்கியுடன் நேரிடையாக நீதிபதி முன்பு, பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வதால், மேலமுறையீடு கிடையாது..பிரச்சினை அன்றொடு முடிவுக்கும் வந்துவிடும்.

எனக்கு தெரிந்த ஒருவர் வங்கியில் கடன் வாங்கியிருந்தார்.நடுவில் அவரால் கடனை திருப்பி செலுத்தவோ வட்டியை கட்டவோ முடியவில்லை சிறிது காலத்தில் வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது.

எப்படி பணத்தை கட்டுவது என்று அவர் மண்டையை உடைத்துக்கொண்டிருந்த போது, இன்னொரு நீதிமன்ற செய்தியும் வந்தது."அந்த நிறுவனம் வங்கி தொழிலை செய்தாலும் அதை வங்கியாக .கருதமுடியாது" என்ற தீர்ப்பு தான் அது!! அது பற்றிய மேற்கொண்ட தகவலை இந்த பிளாக்கில்  தேடவும்

அவருடைய ஜாதகத்தில் ஆறாம் பாவத்தின் ஆறாம் பாவமான பதினொன்றாம் பாவம் வலுத்து இருந்திருக்கும். நிலையில், கடனை இப்படித் திருப்பி செலுத்த தேவையில்லாத நிலை தானாகவே அமைந்து விடும். !!

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக எந்தெந்த சட்டங்களின் கீழ் புகார் அளிக்கலாம்?

 பொதுவாக பெண்ணின் மாண்பை குலைக்கும் வண்ணம் செய்யும் செயலுக்கு இந்திய தண்டனை ச ட்டத்திலேயே தண்டனை குறித்து சொல்லப்பட்டு, அது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையகளில் புகார் கொடுக்கலாம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே..

ஆனால் பணியிடங்களில் அவர்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாவதை தடுக்க சட்டம் ஒன்று 2013ல் கொண்டுவரப்பட்டது.. அதை பற்றி மட்டும்  சில விளக்கங்களை இங்கு பார்க்கலாம்.

விஷாகா வழக்கில் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் நாட்டில் உள்ள பல பணியிடங்களில் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை நினைவில் கொள்க. இத்தனைக்கும் விஷாகா என்ற மைல்கல் வழக்கு முடிந்து 16 ஆண்டுகள் ஆனபிறகு தான் இந்த சட்டம் இயற்றப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

இந்தச் சட்டத்தின் சிறப்பே, வயது அல்லது வேலையின் நிலையைப் பொறுத்து எந்த வித்தியாசமில்லாமல், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும், எந்த வகையான துன்புறுத்தல் இல்லாத பாதுகாப்பான பணியிடத்தை வழங்குவதும் பணியிடத்தில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களை பாதுகாப்பது மட்டுமின்றி தடுப்பதும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் புகார்களுக்கு விரைவான தீர்வை உறுதி செய்வதும் தான். இதே 2013 ஆம் ஆண்டில் தான்.  இந்திய தண்டனை சட்டத்திலும் ஒரு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது, அதன்படி ஒரு பெண்ணை பின்தொடர்தல், பாலியல் துன்புறுத்தல் போன்றவையும் இப்போது தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஆனாலும் இதை எப்படி கையாள்வது என்பது குறித்த சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கிறது. அது குறித்த சில விளக்கங்கள் பாப்போம்.

இந்தச் சட்டத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, எந்தவொரு புகாரகளைத் தீர்ப்பதற்கும் குழுக்களை அமைப்பது. இது அமைப்புசாரா துறைகளுக்கும் செய்யப்பட வேண்டும்.

* 10 க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தும் எந்தவொரு நிறுவனமும் அதன் அலுவலகம் அல்லது கிளையில் ICC என அழைக்கப்படும் உள் புகார்கள் குழுவைக் கொண்டிருக்க வேண்டும்.

* 10க்கும் குறைவான பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள்/அமைப்புசாராத் துறையினர் இவர்களுக்காக இந்திய அரசாங்கத்தால் எல்சிசி எனப்படும் உள்ளூர் புகார்க் குழு அமைக்கப்பட வேண்டும்.

ICC மற்றும் LCC ஒரு சிவில் நீதிமன்றத்திற்கு சமமான அதிகாரத்தை கொண்டவை. , பிரமாணத்தின் கீழ் எந்தவொரு குற்றம் சாட்டப்பட்ட நபரையும் அழைத்து விசாரணை செய்ய அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. புகார் தொடர்பான ஆவணங்கள், மற்றும் வழக்கை விரைந்து முடிக்க தேவையான எந்த விஷயமும் அவர்கள் மேற்கொள்ளலாம்.

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள், புகார் அளிக்க முன்வந்தால், என்னென்ன செய்யவேண்டும்>

  • நடந்த சம்பவத்தின்  எழுத்துப்பூர்வ புகார்களை வழங்க வேண்டும்.
  • இந்த புகாரில் பெயர்கள், சாட்சிகள் மற்றும் மிக முக்கியமாக கூறப்பட்ட சம்பவத்தின் சான்றுகள் உள்ளடங்கி இருக்க வேண்டும்.
  • துன்புறுத்தல் நடந்த 3 மாதங்களுக்குள் புகார் அளிக்கலாம். இந்த நேரத்தை இன்னும் 3 மாதங்களுக்கு குழுக்கள் அதிகரிக்கலாம்.
  • பாலியல் துன்புறுத்தல் ஒரு மனரீதியாக துன்புறுத்தும் கிரிமினல் நடவடிக்கையாக இருப்பதால், அது பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது, எனவே அவர்கள் புகார்களை முன்வைக்கும் நிலையில் இருக்க மாட்டார்கள். உறவினர், உளவியலாளர், நண்பர்கள், சக பணியாளர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டவர் சார்பாக புகார் அளிக்க அதிகாரம் உள்ளது என சட்டம் கூறியுள்ளது.
  • ஐசிசி மற்றும் எல்சிசிக்கு இடைக்கால நடவடிக்கையாக பாதிக்கப்பட்டவருக்கு எதிரான பதிலளிப்பவரின் கடமைகளை மற்ற ஊழியர்களுக்கு மாற்றலாம்,
  • பாதிக்கப்பட்டவரை வேறொரு கிளை அல்லது பணியிடத்திற்கு மாற்றலாம் மற்றும் அவர்களுக்கு 3 மாதங்கள் வரை விடுமுறை அளிக்கப்படலாம்.
  • பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் தனி நபருக்கு விதிக்கப்படும் இழப்பீடுகள் மற்றும் தண்டனைகள் பற்றியும் சட்டம் விரிவாகக் கூறுகிறது.
  • நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ள விதிகளின்படி நிறுவன முதலாளி தண்டிக்க முடியும்.
  • ஆனால் அத்தகைய விதிகள் உருவாக்கப்படவில்லை என்றால், தண்டனையானது ஆலோசனை, சமூக சேவை, சேவை நிறுத்தம் அல்லது பதவி உயர்வு வரை இருக்கலாம்.
  • பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் இழப்பீடு, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் நபரின் சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும். பாதிக்கப்பட்டவர் அனுபவிக்கும் மன மற்றும் உடல் ரீதியான துன்பங்கள், வேலை இழப்பு, மருத்துவ செலவுகள், செலுத்த வேண்டிய இழப்பீட்டை தீர்மானிக்கிறது.
  • பாலியல் துன்புறுத்தல் புகார்களை நிவர்த்தி செய்ய எந்தவொரு அமைப்பும் ஐசிசியை அமைக்கவில்லை என்றால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

சரி….. இப்போது சில சந்தேகம் எழலாம்…

        1.   பணியிடத்தில் தொந்தரவு கொடுத்தால் தான் குற்றமா? அல்லது வாட்ஸ்அப் போன்ற மெசேஜிங் சேவையைப் பயன்படுத்தி ஒரு சக ஊழியர் ஆன்லைனில் முன்மொழிகிறார், பாலியல் சலுகைகளைக் கேட்கிறார், காம எண்ணத்தை  வெளிப்படுத்துகிறார் அல்லது தன்னைப் பற்றிய பொருத்தமற்ற படங்களை அனுப்புகிறார். நீங்கள் பதிலளிக்க மறுக்கிறீர்கள் அல்லது அவரை நிறுத்தும்படி கேட்கிறீர்கள், ஆனால் அவர் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கிறார். ஆன்லைனில் இது நடந்தாலும் பணியிடத்தில் இந்த பாலியல் துன்புறுத்தலா? என்ற சந்தேகம் இருக்கலாம். இது நிச்சயமாக பாலியல் துன்புறுத்தலாகத் தான் கொள்ளப்படும். 

  பாதிக்கப்பட்டவரும் துன்புறுத்துபவர்களும் பணியிடத்தில் (ஒரே அணியில் இருப்பதன் காரணமாகவோ அல்லது வேறு விதமாகவோ) தொடர்ந்து தொடர்பு கொள்ள வேண்டியிருந்தால், இது பாதிக்கப்பட்டவருக்கு விரோதமான பணிச்சூழலை உருவாக்குவதாகவும், அதன் அடிப்படையில் . பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல், என்றும் கருதப்படலாம்

எழுத்து மூலமான உரையாடல்  செய்திகளுக்கு மாறாக வாய்மொழித் தொடர்பு மூலம் ஒரு சம்பவம் நடந்தால், மீறலை எவ்வாறு நிரூபிப்பது??
இங்கே என்ன ஆதாரமாக இருக்கும்?
"இவை பெரும்பாலும் மிகவும் தந்திரமான சூழ்நிலைகள்"

 ஆவண ஆதாரங்கள் இல்லாத போது, ​​ யார்யாரெல்லாம்  பார்த்திருக்கலாம் என நினைக்கிறார்களோ அந்த சக ஊழியர்களின் பட்டியலை வழங்குதல், குற்றம் சாட்டப்பட்டவருடன் நடந்த உரைகள் அல்லது மின்னஞ்சல்கள் போன்ற ஏதேனும் எழுத்துப்பூர்வ தகவல் தொடர்புகளை வழங்குவது, சம்பவம் நடந்த உடனேயே அல்லது சம்பவம் தொடர்பாக (மன்னிப்பு கடிதம்  போன்றவை) அத்தகைய சந்தர்ப்பங்களில் ஆதாரமாக உதவியாக இருக்கும்

        ௨.  சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம் நிகழ்ந்து, குற்றவாளி இனி அந்த அமைப்பில் பணிபுரிய வில்லை என்றால் அல்லது நீங்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறியிருந்தால், அந்த நிறுவனத்தில் துன்புறுத்துதல் புகாரை இன்னும் பதிவு செய்து அவர்கள் நடவடிக்கை எடுக்க முடியுமா?


        சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள் (அல்லது தொடர் சம்பவங்கள் நடந்தால் கடைசியாக நடக்கும்) பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகாரை அமைப்பின் ஐசிசியில் பதிவு செய்யலாம் என்று சட்டம் கூறுகிறது. ஐசிசி இந்த காலக் கட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க முடியும், அதன் பிறகு புகார்களுக்கு கால அவகாசம் உள்ளது. "பாதிக்கப்பட்டவர்"  அந்த அமைப்பில் இருந்து விலகியிருந்தாலும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் புகார் அளிக்கப்பட்டாலும், அத்தகைய புகாரை ஐசிசி-யில் பதிவு செய்யலாம்.   இருப்பினும், சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தால், ஐசிசி புகாரை விசாரிக்க நேர தடை உள்ளது,

        பணி  செய்யும் ஒரு பெண்ணுக்குப் பரிகாரம் செய்வதற்கான வழிமுறைகள் இல்லாத நிலையிலிருந்து, நிவர்த்தி செய்வதற்கு மிகவும் சக்திவாய்ந்த மற்றும் வலுவான சட்டம் கொண்டு வரும் அளவிற்கு நாம் நிச்சயமாக வெகுதூரம் வந்து விட்டோம். பணியிடத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தளை தடுக்கும் இந்த புரட்சிகரமான சட்டம் மிகப் பெரிய சமூக தாக்கங்களைக் கொண்டுள்ளது. ஆனால் நிச்சயமாக அதற்குத் தேவையானது பொது விழிப்புணர்வு, உணர்திறன் மற்றும் வலுவான செயல்படுத்தல் ஆகியவை தான்.

நாம் இன்னும் எத்தனை காலத்திற்கு உறக்கத்திலேயே இருக்கப் போகிறோம் ??

செவ்வாய், 23 நவம்பர், 2021

கொரோனா பெருந்தொற்று 2020 காலத்தில் வெளியில் சுற்றியதற்காக என் மீது ஒரு சிறிய பெட்டி வழக்கு போடப்பட்டு தற்போது உள்ளூர் காவல் நிலைய அலுவலர்கள் எனது கடவுச்சீட்டு (Pass port) விண்ணப்பத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இந்த வழக்கை முடிக்க ஏதேனும் வழி இல்லையா?

 எந்த வழக்கு நிலுவையில் இருந்தாலும் கடுவுச்சீட்டு பரிசீலனைக்கு அது தொந்தரவாகத் தான் இருக்கும்.

சமீபத்தில் லீனா மணிமேகலை அவர்கள் தனக்கு எதிராக போடப்பட்ட அவதூறு வழக்கை காரணம் காட்டி தன பாஸ்போர்டை முடக்கியதை எதிர்த்து மாண்புமிகு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வந்த தீர்ப்பு உங்களுக்கு தெரிந்திருக்கும்.

"அவதூறு வழக்கு கொடுங் குற்றம் அல்ல. அதற்காக பாஸ்போர்டை முடக்கியது தவறு" என்று சொல்லவில்லையா?

உங்களடையது சிறு வழக்கு என்கிறீர்கள். கொரானா காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் இருந்தது தவறு என்று நீங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு அதற்கான அபராதத்தை கட்ட முன்வந்தால் எல்லாம் சுபமே..

காவல் நிலையத்திற்கு ஒரே ஒரு முறை மட்டும் போய் அந்த சிறு வழக்கின் குற்றப்பத்திரிகை நகலை கேளுங்கள். அநேகமாக ஏற்கெனவே உங்களுக்கு கொடுத்திருப்பார்கள். இல்லையென்றால் அதை பெற்று கொண்டு சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் காலை சரியாக பத்தரை மணிக்கு நீதிபதி இருக்கையில் அமர்ந்தவுடன், ஏதேனும் மனுக்கள் யாரும் கொடுக்க விருப்பம் இருந்தால் வாங்கி கொள்வார். அப்போது அந்த குற்றப்பத்திரிகையின் நகல் மற்றும், உங்களுடைய குற்ற ஒப்புதல் மனு, கோர்ட்டு வில்லையுடன் ஒட்டி, திறந்த நீதிமன்றத்தில் கொடுங்கள். இதற்கு எந்த வக்கீலின் உதவியும் தேவையில்லை. அப்படி தேவையென்றால், அந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்தின் உதவியை பெற்று கொள்ளலாம்.

உங்கள் மனு ஏற்றுகொள்ளப்பட்டு, அன்றைய தினமே பிற்பகலில் நீதிமன்றப் பணி உணவு இடைவேளைக்கு பிறகு துவங்கும்போது உங்கள் வழக்கு எடுத்துகொள்ளப்பட்டு, ( சில சமயம், அந்தந்த நீதிமன்ற பணிசுமைக்கேற்ப நேரம் மாறலாம். ஆனால் அன்றைய தேதியிலேயே வழக்கை முடித்து விடுவார்கள்) எவ்வளவு அபராதம் என்று உத்தரவிடுவார்கள். அதை நீங்கள் கட்டி ரசீது பெற்று, காவல் நிலையத்தில் காட்டலாம்.

ஆனால் குற்றப்பத்திரிகையை போலீசார் உங்களுக்கு கொடுக்கவில்லை என்றால், அதையே ஒரு தனி ப்புகார் மனுவாக எழுதி, போதிய நீதிமன்ற விலை ஒட்டி, நீதிபதியிடம் சமர்பிக்கலாம். உடனே இரண்டொரு நாளில் அந்த குற்றப்பத்திர்க்கை கோர்டில் தாக்கல் செய்யப்பட்டு உங்களுக்கு நகல் வழக்கப்பட்டு விடும்.

போலீசார் லஞ்சம் எதிர்பார்த்தே உங்கள் சிறு வழக்கை நிறுத்தி வைக்கிறார்கள்., அதனால் நீங்கள் அதை கொடுத்து விடுங்கள் என்று மற்றவர்கள் உங்களுக்கு அறிவுரை சொல்லலாம்.. ஆனால் நான் அவ்வாறு சொல்ல மாட்டேன்.

போலீசார் செய்யும் தவறான காரியங்களுக்கு உடந்தையாக நாம் இருந்து விட்டு, பிறகு அவர்களை குறை சொல்வது நியாயமல்ல.

நீங்கள் உங்கள் செயல்களில் சரியாக இருந்தீர்கள் என்றால், யாரும், போலீசார் உட்பட , உங்களிடம் சரியாகவே நடந்து கொள்வர்.

திங்கள், 22 நவம்பர், 2021

இறந்த மகனின் சொத்துக்கு சட்டப்பூர்வ வாரிசு ? யார் வருவார்கள்? 1) தந்தை உள்ளார், மனநிலை பாதிக்கப்பட்டவர். 2) இறந்தவருக்கு தம்பி உள்ளார், வயது 14. 3) தாய், வேறு திருமணம் செய்து, வேறு ஊரில் வாழ்ந்து வருகின்றார். இவர்களில் யார் வாரிசாக வருவார்கள்?

 திருமணமாகாத மகனின் வாரிசாக அவரின் பெற்றோரும் அவர்கள் இல்லாத பட்சத்திலேயே அவரின் சகோதரர் வாரிசாக முடியும்.

தந்தை மனநிலை பாதிக்கபட்டிருந்தாலும் வாரிசு தான்.

வேறு திருமணம் செய்திருந்தாலும் இறந்தவரின் தாய் என்பதில் மாற்று கருத்து இல்லை.

ஞாயிறு, 7 நவம்பர், 2021

ஆபாசத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

 ஆபாசத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

        ஆபாசம் என்பது பார்க்கும் பார்வையில் உள்ளது என்பது என் கருத்து.

        அதை மறைத்துக் கொண்டு மற்றவர் அணியும் உடையில் உள்ளது என்று குற்றத்தை மடை மாற்றுவார்கள்!!

        இப்போது அடுத்த படியாக தாய்மையும் ஆபாசம் என்ற நிலைக்கு வந்து  விட்டனர்!!

        பாலூட்டும் பெண்ணை தன் தாயாக, சகோதரியாக பார்க்கும் நிலை போய், தன் காம இச்சையை தூண்டும் தன்மையாக பார்த்ததும் இல்லாமல், அது "அசிங்கம்" என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரும் அளவிற்கு தரம் குறைந்து விட்டது!

        " 'தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணின்' படம் உள்ள பத்திரிக்கையின் அட்டை ஆபாசமானதாக அறிவிக்க கோரி மனு போடப்பட்டது இங்கல்ல...

        கற்றோர் அதிகம் உள்ள கடவுளின் நாடான கேரளத்தில்.


        ஆனால் அதை மறுத்த மாண்புமிகு கேரள உயர் நீதிமன்றம் "ஒருவரின் ஒழுக்கத்தை பற்றிய கருத்து அதிர்ச்சியடையச் செய்கிறது" என்றும் இது ஒரு "மழுப்பலான கருத்து" என்றும் கூறியுள்ளனர்.

        "ஒருவருக்கு ஆபாசமாக தெரிவது மற்றொருவருக்கு பாடல் வரிகளாக தெரியும்": என்றும் குறிப்பிட்ட. மாண்புமிகு தலைமை நீதிபதி ஆண்டனி டோமினிக் மற்றும் நீதிபதி தாமா சேஷாத்ரி நாயுடு ஆகியோர், “நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தாலும், ஆபாசத்தை எங்களால் பார்க்க முடியவில்லை." என்றனர்.

        அத்தோடு, நம் பண்டைய வரலாற்றை சுட்டிக்  காட்டி," இந்தியாவின் நீண்ட வரலாறு முழுவதும், இந்தியாவின் கலைகள்-காட்சி மற்றும் இலக்கியம்-மனித உடலின் அழகை தொடர்ந்து கொண்டாடியிருக்கிறார்கள், இதை பற்றிய குறிப்புகளை, அப்போதைய மிகவும் பாராட்டப்பட்ட பயண எழுத்தாளர் வில்லியம் டால்ரிம்பிள் நூலில் உள்ளது என்று சொல்லியதோடு அல்லாமல், அதை தங்கள் தீர்ப்பில் மேற்கோள் காட்டியுள்ளனர்.

.         "யோகாவின் பாரம்பரியம், என்பது, அதை முழுமையாக்குவதையும் மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது என்று தொடரும் அவர் "வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உடலை கடவுளை போல மாற்றும் நோக்கம் கொண்டதே யோகக் கலை. இந்த பாரம்பரியத்தில் தெய்வீகம். , உணர்வு மற்றும் புனிதமானவை எதிர்க்கப்படவில்லை. உண்மையில் உணர்வுபூர்வமானது என்பது, புனிதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகத் தான் பார்க்கப்பட்டது.   அதனால் அவர்கள் கடவுள்களும் எப்போதும் மனிதாபிமானமுள்ளவர்களாக, மிகுந்த அழகுடையவர்களாக சித்தரிக்கப்பட்டனர்" என்று  அவர் குறிப்பிட்டதை கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்!

"காமாலைக்காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்"

'One Man's Vulgarity Is Other Man's Lyric': Kerala HC Refuses To Declare 'Breastfeeding Woman On Magazine's Cover' As Obscene | Live Law 'One Man's Vulgarity Is Other Man's Lyric': Kerala HC Refuses To Declare 'Breastfeeding Woman On Magazine's Cover' As Obscene via @livelawindia William Dalrymple on Twitter

சாதி அடிப்படையில் மிகுந்த பாகுபாடு உள்ள துறைகளைப் பற்றிக் கூறுக?

 


அரசு துறைகளில் சாதி பாகுபாடு உண்டு என்றாலும், மக்களுடன் அதிகம் நெருங்கி பழக வேண்டிய கட்டாயத்தில் உள்ள சிவற்றில் நடக்கும் சாதி பாகுபாடு, பளிச்சென்று வெளியே தெரியும்.

அரசின் அன்னதான திட்டத்தில், கூட சேர்ந்து உணவு அருந்த அமைச்சர் வர வேண்டி இருக்கிறது.!! முதல்வர் வீடு தேடி போய், சாதிப் பாகுபாடு காட்டுபவருக்கு கடுமையான செய்தி சொல்கிறார்.!!

மற்ற துறையில் எல்லாம் சாதிப்பாகுபாடு, பாதிக்கப்பட்டவரின் வயிற்றை அடிக்கும் என்றால், போலீஸ் துறையின் லத்தி அவர்களையே அடிக்கும்!!

போலீசாரின் இந்த சாதிய ரீதியான அதிகார வன்முறை, இப்போது வெளிவந்துள்ள ஜெய் பீம்” படத்தில் பட்டவர்த்தனமாக காட்டப்பட்டிருக்கும்..

அதுவும் சாதீய ரீதியான ஒதுக்கீட்டிற்கு வன்முறையை கையாண்டு போரிடும் சாதிகளுக்கு நடுவில், இருப்பதற்கு வீடோ, குழந்தைகளுக்கு உரிய கல்வியோ,ஏன் ரேஷன் கார்டு கூட இல்லாமல், அன்றாட வாழ்க்கைக்கே போராடும் மலை ஜாதியினர், மற்ற ஜாதியினரால் சுரண்டப்படுவதும் இல்லாமல், “ஏன் ?” என்று கேள்வி கேட்கக்கூட ஆளில்லாமல், போலீசாரின் கையில் சிக்கி சின்னாபின்னம் ஆகிக்கொண்டிருப்பதை போட்டு உடைத்திருக்கிறது!!

இந்த உண்மைக் கதையின் சுருக்கம்;

ராஜகண்ணு, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் (அனைவரும் இருளா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்) தான் கொள்ளையடிக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் உள்ளூர் காவல்துறையினரால் கைது செய்யப்படுகின்றனர். , குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி காவலில் சித்திரவதை செய்யப்படுகிறது.

போலீசார், ராஜகண்ணுவைக் கொள்ளை வழக்கில் சிக்க வைக்கும் முயற்சியில் எந்த நியாயமான விசாரணையும் இல்லாதது, ஒருபுறம் இருக்க, ராஜகண்ணு போலீசாரின் மிருகத்தனத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சில நாட்களில், ராஜகண்ணு, கைது செய்யப்பட்ட மற்றவர்களுடன் காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போகிறார்.. இதைத் தொடர்ந்து, மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதியான வழக்கறிஞர் சந்துரு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்கிறார்..அதன் பிறகு நடப்பவை அனைத்தும் சுவாரசியமான திருப்புமுனைகள்..

உண்மை கதை தான் எப்போதும் திரைகதையை விட சுவை அதிகம் கொண்டது..அது கசப்பு சுவை என்றாலும் கூட!

அந்த வழக்கு விசாரணையில் இருக்கும் போதே, பாதிக்கப்பட்டவரிடம் போலீசார் கையாளும் வன்முறை, நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

“Law is a powerful weapon. .யாருக்கு எதிராக பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து இருக்கிறது”. என்கிறார் ஹீரோ..

உண்மை தான் அவர் அளவுக்கு வழக்கறிஞர்கள் அவ்வளவு எளிதில் செங்கேணி போன்ற எல்லோருக்கும் கிடைத்தும் விடுவதில்லை..

அவர் நடத்தும் சட்டப் போராட்டத்துக்கு கூடவே உறுதுணையாய் இருக்கிறார் செங்கேணி..காவல் துறையின் உயர் அதிககாரிகளே வழக்கை நீர்த்துபோக செய்ய எடுக்கும் முயற்சிகளில், பணத்தை இழப்பீடாக வழங்க முன்வருவதும் இருப்பினும், சண்டையில் (வழக்கு) தோற்று வேண்டுமானால் போவேன்., ஆனால் கணவனின் கொலையின் பிச்சையில் வாழமாட்டேன் என்று செங்கேனியின் பதில் ஊன்றி கவனிக்கவேண்டியது!! எத்தனை செங்கேணிகள் இப்படி மனம் தளராமல் போராடுகிறார்கள்?

இப்படி எல்லாம் நடக்கும் சாதியல் ரீதியான இந்த போலீஸ் அதிகார தூஷபிரயோகத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டும் பல தீர்ப்புகளில், கடுமையான நடவடிக்கை எடுத்து போலீசை ஒழுங்கப்படுத்த முனைந்தும், இன்றும் சாத்தாம்குளம். சம்பவங்கள் .தொடர்கின்றன

.சமீபத்தில் அந்த வன்முறையில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளது.

மாண்புமிகு பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம்,,காயம்பட்ட ஒரு சீக்கிய முதியவரை அவர் தர்பனை அவிழ்த்து, போட்டோ எடுத்து வலைத்தளத்தில் போட்டது “மனரீதியான துன்புறுத்தும் செயல்” எணறிருக்கிறது.

டி.கே.பாசு எதிர் மேற்கு வங்க மாநிலம் (1997 (1) SCC 416) வழக்கில் மாண்புமிகு உச்ச நீதிமன்றமும், நீதிமன்ற விசாரணைக்கு முந்தைய நிலையில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களின் உரிமைகள் தொடர்பாக 11 வழிகாட்டுதல்கள். வெளியிட்டது.

அதை, கீழ்ப்படியாத காவல்துறை அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும், அதை பின்பற்றாத நீதித்துறை மாஜிஸ்திரேட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் சுதந்திரம் வழங்கியது. 24 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. எத்தனை பேர் அந்த அவமதிப்புக்கு ஆளாகினர்? ஒருவர் கூட இல்லை என்பது தான் வேதனையான உண்மை!!.

இவ்வளவு பாடம் கற்பித்தும் போலீஸ் அராஜகம் குறையாததற்கு, காரணம் என்ன?

அடிப்படையில் எங்கே தவறு?

காவல்துறையின் இந்த ஒழுக்கமின்மைக்கான காரனத்தை சற்று வரலாற்றை ஆராய்ந்தால் கிட்டும்.

போலிஸ் சட்டம் என்று இன்னமும் 1888 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மெட்ராஸ் சிட்டி போலீஸ் சட்டத்தின் கீழ் தான் நாம் இன்னும் ஆளப்படுகிறோம்…சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் இருந்து, குற்றங்களை கண்டறிவதில் போலீஸ் அறிவியல் ரீதியாக இன்னமும். முன்னேறவில்லை.

சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில், ஆங்கிலேயர்கள் நாட்டை வெவ்வேறு பகுதிகளாகப் பிரித்து. நிர்வாக அமைப்புகளைக் கொண்டிருந்தனர். இல்லையா? அப்போது தான், பழங்குடியின சமூகங்களை உள்ளடக்கிய குற்றவியல் பழங்குடியினர் சட்டத்தையும் அவர்கள் இயற்றினர். குற்ற பரம்பரை சட்டம் பற்றி தெரியும் தானே? இதன் மூலம், குற்றத்தைக் கண்டறிவது அவசியமில்லை, ஒரு பகுதியில் ஏதேனும் குற்றம் நடந்தால், அங்குள்ள அனைத்து பழங்குடியின ஆண்களும் சந்தேகத்திற்குரியவர்களாக ஆவார்கள். 24 மணி நேரத்திற்குள் வட்டக் காவல் நிலையத்திற்கு முன் சரணடையாதவர்கள் எவரோ, அவர் குற்றவாளியாகக் கருதப்படுவார்.

இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சுதந்திரப் போராட்டத்துடன் இணைந்து நீண்ட போராட்டங்கள் நடந்தன, ஆனால் அது, நாடு சுதந்திரம் பெற்ற பிறகு தான் ரத்து செய்யப்பட்டது. ஆனாலும். பழங்குடியினர் பாதிக்கப்படுவதிலிருந்து விடுபடவில்லை. தொடர்ந்து, டிநோட்டிஃபைட் பழங்குடியினர் (டிஎன்டி) தங்கள் பகுதியில் செய்யப்படும் எந்த குற்றங்களுக்கும் காவல்துறையின் பார்வையில் தொடர்ந்து சந்தேக நபர்களாக இருந்தனர். அவர்களல் சிலர் மட்டுமே நிலத்தை உடைமையாக்கி, எல்லா குடிமை உரிமைகளையும் பெற்றனர். மறுபுறம், பெரும்பான்மையான பழங்குடியினர் குற்றவாளிகளாகக் கருதப்படுவதும், நாளுக்கு நாள் அவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதும் இன்றும் தொடர்கிறது.

ஒரு வழக்கிலிருந்து விடுதலையாகி வந்தவுடனேயே வேறொரு வழக்கில் பிடித்து உள்ளே போடுவது தொடர்கிறது. அந்த படத்தின் முதல் காட்சியே அதை தான் முகத்தில் அறைந்தது போல சொல்கிறது.!

இன்னொரு காரணம், போலீசாரின் அத்துமீறல்கள், அட்டூழியங்களை மக்கள் கொண்டாடுவதும் போலீசாரின் இந்த தொடர் வெறியாட்டத்துக்கு காரணம். ஹைதராபாத் என்கவுண்டர் சமீபத்திய உதாரண.ம்..சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்ட போலீசாரை ,பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள்.. அதையே சாக்காக வைத்து பொய்யான என்கவுன்டர் நடத்தப்படுகின்றன.

உண்மையில் இதே சூர்யா நடித்த “சிங்கம்” திரைப்படத்தில் காவல்துறை வன்முறையும் அவர்களின் கட்டுப்படுத்தப்படாத அதிகாரம் பற்றியது..அதுவும் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது..சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு போலீசார் செய்த அராஜகம் விமர்சிக்கப்படவேயில்லை. !!

ஆனால் "ஜெய் பீம் 'காவலர் வன்முறை, காவல்துறை சித்திரவதை மற்றும் காவல்துறை அதிகாரிகளால் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மோசமான பக்கத்தை காட்டுகிறது.. இது காவல்துறையின் மிருகத்தனத்தை இவர்களின் லட்சியம்” என்று அடையாளபடுத்துவதற்கான இமேஜை ஓரளவு உடைக்கிறது.!!

சித்திரவதைக்கு எதிரான தேசிய பிரச்சாரத்தின்படி, ஒவ்வொரு நாளும் சராசரியாக ஐந்து இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டில் மட்டும் காவல்துறை காவலில் 117 இறப்புகளும், நீதிமன்ற காவலில் 1,606 இறப்புகளும் பதிவாகியுள்ளன. காவலர் வன்முறையின் இந்த புள்ளிவிவரங்கள் எல்லா நேரத்திலும் அதிகமானவை.; அதை சரிசெய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் என்ன என்று ஆராய்ந்தால் கிடைக்கும் முடிவு திகைக்க வைக்கின்றன;

இத்தகைய கொடூரமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை இல்லை!!.

2005 முதல் 2018 வரை போலீஸ் காவலில் சித்திரவதைக்கு ஆளான 500 பேர் இறந்ததாகக் கூறப்படும் வழக்கில் ஒரு தண்டனை கூட இல்லை என்று தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 58 போலீஸ்காரர்கள் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், அவர்களில் யாரும் தண்டனையை எதிர்கொள்ளவில்லை.!!

நமக்குத்தான்.நம் வீட்டு கதவில் அறைந்தால் மட்டும் தானே அலறவே செய்வோம்!!

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) மற்றொரு அறிக்கையில் 1,723 நபர்கள் காவலில் இறந்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மரணங்களில் பெரும்பாலானவை காவல்துறையின் சித்திரவதையின் விளைவாகும் என்று NHRC அறிக்கை மேலும் கூறியது.

இந்த குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ள பொதுவான ஒன்று ….,

அவர்கள் அனைவரும் ஓரங்கட்டப்பட்ட பின்னணியில் இருந்து வந்தவர்கள். போலீஸ் காவலில் இறந்த 125 பேரில், இறந்தவர்கள் 75 பேர் (60 சதவீதம்) விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 13 பேர் தலித்துகள் அல்லது பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 15 பேர் சிறு குற்றங்களுக்காகப் பிடிக்கப்பட்ட முஸ்லிம்கள். சமீபத்தில் நடந்த ஒரு வழக்கில், அருண் வால்மீகி என்ற தலித் துப்புரவுத் தொழிலாளி, போலீஸ் காவலில் இறந்ததாகக் கூறப்படுகிறது. அருணின் குடும்பத்தினர், "தனது மனைவி கண்முன்னே அவர் இரக்கமின்றி அடித்துக் கொல்லப்பட்டார்" என்று நினைவு கூர்ந்துள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 1,189 பேர் சித்திரவதைகளை எதிர்கொண்டதாகவும், 348 பேர் போலீஸ் காவலில் இறந்ததாகவும் மக்களவையில் அரசு அறிக்கை அளித்துள்ளது..

இப்போது யதார்த்தத்திற்கும் காவலர் வன்முறையின் சினிமா அம்பலத்திற்கும் இடையிலான தொடர்பைத் நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்!!.

குற்றவியல் நீதி மற்றும் காவல்துறை பொறுப்புக்கூறல் திட்டத்தின் அறிக்கையான "டிரங்க் ஆன் பவர்", எப்படி, துல்லியமாக கலால் சட்டத்தை அடக்குமுறையின் ஆயுதமாகப் பயன்படுத்தி, 'விமுக்தா' சமூகங்கள் பலியாவதைப் பற்றி பேசுகிறது. விமுக்தா சமூகங்கள் தொடர்ந்து 'பரம்பரை குற்றவாளிகளாக' கருதப்படுகின்றன. உள்ளூர் சட்ட அமலாக்கத்தால் அவர்கள் விகிதாசாரமற்ற முறையில் குற்றம் சாட்டப்பட்டு, கண்காணிக்கப்பட்டு கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்படுகிறார்கள். அதேபோல், இருளா பழங்குடியினர் பரம்பரை குற்றவாளிகள் என்று அட்வகேட் ஜெனரலும் காவல்துறை அதிகாரிகளும் சாதரணமாக திருப்தியடைந்த பல நிகழ்வுகளை படத்தில் காணலாம்.

ஒரு விதத்தில். "ஜெய் பீம்", நாதியற்ற பாதிக்கப்பட்டவர்களின் கண்ணோட்டத்தில் இருந்து கதையை சொன்னது, காவல்துறை வன்முறையின் கொடூரமான பக்கத்தை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் குறிப்பிடத்தக்கது. இது போன்ற திரைப்படங்கள் பொது மக்களுக்கு காவல்துறை அமைப்பைப் பற்றி மிகவும் யதார்த்தமான புரிதலை ஏற்படுத்தும்., போலீசாரின் அதிகப்படியான செயல்களை வீரமாகக் கொண்டாடுவதை விட காவல்துறையிடம் அதிக பொறுப்புக்கூறலைத் தேட அவர்களை ஊக்குவிக்கும்.

ஆனால் மக்களின் மனோநிலைக்கும் ஒரு காரணம் உண்டு. என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீசார் கொண்டாடப்படுவதற்கான காரணம், நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதம்தான். குற்றவாளிகளுக்கு உரிய நேரத்தில் தண்டனை கிடைத்தால் மட்டுமே, நீதித்துறை மீது பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.

இதில் வழக்கறிஞர்கள் பங்கும் முக்கியமானது..வழக்கறிஞர் சந்துரு போல, தேவையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபடாமல், தன்னை நம்பியுள்ள கட்சிக்காரருக்கு அதனால் மேலும் தாமதம் ஆகும் என்பதையும் உணர்ந்தவராய், எதிர்க்கட்சி வழக்கறிஞருடன் ரகசிய ஒப்பந்தம் போடாமல், கட்சிக்காரர் கொடுக்கக் கூடிய ஃபீசில் மட்டுமே கவனம் செலுத்தாமல் நீதி பெற்று கொடுப்பதை மட்டுமே கண்ணும் கருத்துமாக செயல்படுவது தொழில் தர்மத்தை மேம்படுத்தும்.

வழக்கில், சாட்சிகளை குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்குமாறு உயர் நீதிமன்றத்தை வற்புறுத்தி, கேரள உயர் நீதிமன்றத்தின் முன்னுதாரணத்தை மேற்கோள் காட்டியதன் மூலம், ஆட்கொணர்வு அதிகார வரம்பில் ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. .மேற்படி மேற்கோள் வழக்கில் ஹேபியஸ் கார்பஸ் பற்றிய கருத்து விரிவுபடுத்தபபட்டு,. தனிப்பட்ட சுதந்திரத்திற்கானது மட்டுமில்லாமல் குடிமக்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாப்பதில் ஹேபியஸ் கார்பஸ் மனுவின் அதிகாரத்தைக் காட்டுகிறது.

இதில் நீதியரசர் கிருஷ்ண ஐயர் பங்கு வரலாற்று சிறப்பானது.

அது போலீசின் அதிகார அத்துமீறல்களை எதிரான, சாமானியர்களின் கைகளில் உள்ள ஆயுதங்களில் ஒன்று என்று சொன்னால் மிகையாகாது.. சுனில் பத்ரா வழக்கைப் பார்த்தால், சிறைச் சீர்திருத்தங்களுக்கும் கூட, ஹேபியஸ் கார்பஸ் ஒரு தீர்வாக கூட இருக்கலாம் என்கிறது.

. ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக, 80களின் முற்பகுதியில் கிருஷ்ணய்யர், சின்னப்பா ரெட்டி போன்ற புகழ்பெற்ற சட்ட வல்லுநர்களால் கொடுக்கப்பட்ட இத்தகைய விரிவான விளக்கங்களுக்குப் பிறகு, 40 ஆண்டுகளுக்குப் பிறகும், நீதிமன்றங்களில் இருந்து உத்தரவுகளைப் பெற மக்கள் போராடுகிறார்கள்.

இன்றைய நாட்களில், அரசு சாரா அமைப்புகள் மற்றும் எதிர்ப்பு இயக்கங்கள் மீது அதிக கட்டுப்பாடுகளுடன், கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவதற்கான இடம் சுருங்கி வருவதை நாம் காண்கிறோம். சமூக ஆர்வலர்கள் மூலம் தான் ராஜகண்ணு வழக்கு வழக்கறிஞரை எட்டியது. ஆனால் இன்று அவர்களின் 'செயல்பாடு' ஒரு ஆபத்தான செயலாக பார்க்கப்படுகிறது, அவர்களுக்கு எதிராக தேசத்துரோக குற்றச்சாட்டு மட்டுமல்லாது UAPA பாய்வதை பார்க்கிறோம்.

கடந்த 3 ஆண்டுகளாக பீமா கொரேகான் வழக்கில் 13 பேர், யுஏபிஏவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்..திரிபுரா பற்றி எரிகிறது” என்று சமூக வலைதளத்தில டுவிட் செய்தவருக்கு அதே கதி!

படித்தவர்களுக்கே இந்நிலை என்றால், பழங்குடியினருக்கு?

அவர்களுக்கு வீட்டு மனைகளுக்கான பட்டாக்கள் இல்லை, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை, பொது விநியோகத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. நாடோடி வாழ்க்கை முறையால், குழந்தைகளை வழக்கமான பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை...அனுப்பமுடிவதில்லை.. அவர்களுக்கு கிடைக்கும் வேலை வாய்ப்புகள் பெரும்பாலும் முறைசாரா துறைகளில் தான் உள்ளன.

இவையெல்லாம் மாற ஒரே வழி.. பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மக்கள் கல்வியறிவு பெற வேண்டும், அப்போது தான் அவர்களின் சுயமரியாதை மற்றும் கண்ணியம் உறுதி செய்யும் என்பதை வலியுறுத்துவதாகவும் இந்த படம் இருக்கிறது. அதனால்தான் படத்தின் முதற்கட்டத்தில் அந்த பழங்குடியினப் பெண் நீதிமன்ற மனுவில் கையெழுத்திடுவதற்குப் பதிலாக அவரது கட்டைவிரல் அடையாளத்தை ஒட்டியதாகக் காட்டப்பட்டது. , படத்தின் முடிவில், அவரது மகள் நம்பிக்கையுடன் வழக்கறிஞர் முன் ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்தித்தாள் வாசிப்பதாக முடியும்..

எழுத்தறிவினால் மட்டுமே அவர்கள் முன்னேற முடியும் என்பதுதான் அந்தச் செய்தி.

ஆனால், நம் நாட்டில் உள்ள பிரச்சனை என்னவென்றால், உயர்கல்வி படித்த கல்வியறிவு பெற்றவர்கள் தான் தங்கள் அலட்சியத்தால் அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகளால் நாட்டையே தவறான திசையில் கொண்டு செல்கிறார்கள்.

ஜெய் பீம் போலீஸ் காவலில் நடக்கும் வன்முறையை மட்டும் காட்டவில்லை. .இது அரசின் நோக்கத்தையும், ஒதுக்கப்பட்ட சமூகங்களின் பலிவாங்கலையும் கேள்விக்குள்ளாக்குகிறது. ஏற்கனவே விளிம்புநிலையில் உள்ள பாதிக்கபப்பட்ட மக்களை அடிபணியச் செய்வதற்காக சீருடை அணிந்த சக்திகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறை என்பது, போலீஸ் துறை, எந்தளவுக்கும் செல்லும் ஒரு வன்முறை இயந்திரம் என்பதையும் அதை எப்படியாவது மூடி மறைக்க பார்க்கும் அரசின் உண்மையான தன்மையையும், தெளிவாகக் காட்டுகிறது.,

அரசு துறைகளில், சாதிய படிநிலை அமைப்பில் ஆழமாகப் பதிந்துள்ளது, அது தான் பாரபட்சமான கொள்கைகளின் மைய துருவமாக உள்ளது.

டாக்டர். அம்பேத்கரின் கருத்துக்கள் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும், நீதியான சமுதாயத்தை வளர்ப்பதற்கும் ஒரு அரணாக இருந்தபோதும் – அரசு இயந்திரங்கள், அவருடைய தொலைநோக்கு கொள்கைகளை முற்றிலும் மறந்துவிட்டன.

அவர் தான் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி!

"எவ்வளவு நல்ல அரசியலமைப்பாக இருந்தாலும், அது கெட்டதாக மாறுவது உறுதி, ஏனென்றால் அதைச் செயல்படுத்த அழைக்கப்படுபவர்கள் கெட்டவர்களாகவே இருப்பார்கள்.." என்ற அம்பேத்கரின் வார்த்தைகள் இங்கு எவ்வளவு பொருத்தம்!!

விளிம்பு நிலை மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க அரசு தவறியதை அரசியல் சாசனத்தின் தோல்வியாகப் பார்க்க முடியாது, ஏனென்றால் மக்கள் தான் தலைமையில் அமர்ந்திருக்கிறார்கள்.

செங்கேனியின் நீதிக்கான தேடலானது அரசியலமைப்பு கோட்பாடுகளின் எடுத்துக்காட்டு. இருந்தும், இது வழக்கறிஞர் சந்துருவின் வீரத்துடன் ஒரு நீண்ட போராட்டத்துடன் வருகிறது. ஒரு வழக்கறிஞரின் அபூர்வ 'ஹீரோயிசம்'

பின்தங்கிய குழுக்களின் நலன்களைப் பாதுகாக்க சட்டங்கள் இருந்தாலும், அவை எவ்வளவு தூரம் உணர்ந்து, அரசுத்துறை பாகுபாடுகளுக்கு எதிராக வலியுறுத்தப்படுகின்றன என்பதுதான் உண்மையான கேள்வி?

விளிம்பு நிலையில் உள்ள மக்களை இந்த அளவுக்கு பாதிப்படைய அனுமதிக்க விட்டிருக்கலாமா?

ஒவ்வொரு செங்கேனியும் போராட்ட குணமுள்ள வழக்கறிஞரை கண்டுபிடித்து விடமுடியுமா?

ஒவ்வொரு பழங்குடி பெண்ணும் செங்கேனி கடந்து வந்ததைச் போல தான் கடந்து வரவேண்டும் என்று இந்த அமைப்பு ஏன் கட்டாயப்படுத்துகிறது?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எந்தவித பாரபட்சமும் இல்லாத சுயபரிசோதனை தேவை.

உண்மையில், இந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க பார்க்க, ஒவ்வொரு புதிய பரிமாணம் தெரிகிறது. இதை அரசு துறையினர், வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் ஒரு பாடத்தை சொல்கிறது.. அது…

“செங்கல் செங்கலாக தான் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.”என்று.

ஆனால், அதற்கான நம்பிக்கை துளிர் விட வைக்கிறது அம்பேத்கரின் முழக்கமான ஜெய் பீம்

“பீம் “ என்பது ஒளிக்கற்றை தானே!

.இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கிய இந்த பயணத்தில் நாம் அனைவரும் பங்கு கொள்வோம்!!

மேற்கோள்கள்:

http://www.uncat.org/wp-content/uploads/2020/06/INDIATORTURE2019.pdf

Suggestions To Curb The Menace Of Custodial Violence And Brutality: Targeting The Ill-Conceived Notion Of 'My Area, My Custody, And My Law'

https://nhrc.nic.in/sites/default/files/NHRC_AR_EN_2017-2018.pdf

Agra Custodial Death: Man Died Of Heart Attack, Say Police Citing Autopsy

348 died, 1,189 tortured under police custody in last 3 years, Centre tells Lok Sabha | India News - Times of India

https://cpaproject.in/wp-content/uploads/2021/08/Drunk-on-Power-A-study-of-Excise-Policing-in-Madhya-Pradesh-CPA-Project-14-Aug-2021-1.pdf

தீர்ப்புகள் கவித்துவமாகவும் இருக்குமா?

 சட்டம்,  நீதிமன்றம் என்றாலே ஒரு வறட்சியானதாக பார்க்கும் மனப்பான்மை தான் இங்கு பெரும்பாலும் உண்டு..ஆனால் இங்கே இலக்கியத்தில் வித்தகர்கள் எல்லாம் இருந்துள்ளனர்...இருக்கின்றனர்..

எனக்கு தெரிந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசராக அழகு சேர்த்த நீதியரசர் மு.மு.இஸ்மாயில் கம்பன் கழகத்தின் தீவிர பங்களிப்பாளர். அத்தோடு நீதியரசர் வள்ளிநாயகம் அவர்கள், தற்போதைய உச்ச நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு ராம சுப்ரமணியம் அவர்களின் இலக்கிய சொற்பொழிவுகள் நிறையக் கேட்டிருக்கிறேன்..

இலக்கியமும் சட்டமும் வெவ்வேறு பாதையாக எண்ணாமல் இரண்டையும் ஒன்றிணைத்து தங்கள் தீர்ப்புகளிலேயே தங்கள் இலக்கிய ஆளுமையை காட்டியுள்ளவர் பல நீதிபதிகள் .

அவர்கள் தங்கள் தீர்ப்புகளை எழுதும்போது, ​​​​கவிதை வசனங்கள் /பிரபலமானவர்களின் மேற்கோள்கள் மூலம் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துகிறார்கள்..

நீதிமன்றத் தீர்ப்புகளில் இத்தகைய இலக்கியக் குறிப்புகளைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டுமா என்பதில் ஒவ்வொருக்கும் கருத்து வேற்றுமை இருக்கலாம்.

ஆனால் அவை பெரும்பாலும் தீர்ப்பினை படிப்பவர்களுக்கு நீதிபதியின் உணர்வோடு சார்ந்து இருக்க வைக்ககின்றன,

அதை கொடுத்த நீதிபதிகள் பிரபல வழக்கை விசாரணை செய்யாததால் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கலாம். ஆனால் இந்த இலக்கிய நயம் மிகுந்த தீர்ப்புகள், படிப்பவரை "யார் இந்த நீதிபதி?" என்று திரும்பிப்  பார்க்க வைத்துள்ளன.

அதில் சிலவற்றை மட்டும் இங்கு கோடிட்டு காட்டுகிறேன். முடிந்தவரை அந்த கவிதைகளை மொழிபெயர்க்க முயற்சித்துள்ளேன்.

சமீபத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் ஷர்ஜீல் இமாமின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உத்தரவில், கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அனுஜ் அகர்வால், சுவாமி விவேகானந்தரின் மேற்கோளுடன் தனது தீர்ப்பைத் தொடங்கினார்.

நீதிபதி விவேகானந்தரை மேற்கோள் காட்டி,

நம் எண்ணங்கள் தான் நம்மை உருவாக்குகிறது. நாம்தான்; எனவே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். சொற்கள் இரண்டாம் நிலை தான்.. எண்ணங்கள் தான் வாழ்கின்றன; அவை வெகுதூரம் பயணிக்கின்றன."

"பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம்" என்ற அடிப்படை உரிமை பற்றிய தன் கருத்தை சொல்ல முனைந்த நீதிபதியை, பிரிட்டிஷ் கவிஞர் ஜான் மில்டனை மேற்கோள் காட்டத் தூண்டியது.

"எல்லா சுதந்திரங்களுக்கும் மேலாக, தெரிந்துக் கொள்ளவும், சுதந்திரமாக வாதிடவும், மனசாட்சிப்படி பேசவும் எனக்கு சுதந்திரம் கொடுங்கள்."

தீர்ப்பின் இறுதியில், இமாமின் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது, அவரது பேச்சு ஒரு கும்பலை கலவரத்தில் ஈடுபடத் தூண்டவில்லை என்று முதல் பார்வையில் தெரிந்தாலும், வகுப்புவாதம் மற்றும் பிளவுபடுத்தும் வகையில்" இருந்தது என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.

மற்றொரு தில்லி நீதிபதி அஜய் கோயல், இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) தலைவர் ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் சொன்னதை, நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட ஒரு வழக்கில் , ஜூன் 6, 2021 அன்று, தீர்ப்பளித்தார்.

ஜெயலால் பேச்சு, இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றச்சாட்டு.. இந்த உத்தரவில், கவிஞர் முஹம்மது இக்பாலின் புகழ்பெற்ற வரிகளான "சாரே ஜஹான் சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா" எடுத்தாளப்பட்டது.

"மதங்கள் நமக்கிடையே பகைமை கொள்ள கற்றுதரவில்லை. நாம் எல்லோரும் ஹிந்துஸ்தானிகள். ஹிந்துஸ்தான் நம் தாய்நாடு.

உலகம் முழுவதையும் விட சிறந்தது, நமது ஹிந்துஸ்தான்"

நம் நாட்டில் காலங்காலமாக நிலைத்திருக்கும் "நம்முடைய நம்பிக்கை மற்றும் மதச்சார்பின்மைக்கு வலிமை" கொடுத்தது எப்படி என்பதை நீதிபதி கோயல் இந்த கவிதை மூலம் விளக்குகிறார்..

"ஒரு முஸ்லீம் கவிஞரால் எழுதப்பட்ட இந்த கவிதையில் "இந்தி" என்ற வார்த்தை இந்துக்களைக் குறிக்கவில்லை, ஆனால் மதச்சார்பின்மைக்கு அழகான சாதி, நிறம் மற்றும் மதம் வேற்றுமை இல்லாத அனைத்து ஹிந்துஸ்தானிகளையும் குறிக்கிறது" என்று அவர் உத்தரவு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இறுதியில் ஜெயலால் அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து நீதிமன்றம் அவரை எச்சரிக்கவும் செய்தது..

'

நீங்கள் இருக்கும் கூண்டிலிருந்து உங்கள் சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்'

இவையெல்லாவற்றையும் விட என்னைக்  கவர்ந்தது தன் தீர்ப்பையே கவிதை நடையில் எழுதிய, நவம்பர் 7, 2020 டெல்லி கலவரம் தொடர்பான ஜாமீன் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத். .

அந்த கவிதை இப்படி போகிறது:

பாபு தனக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

கடுமையாக எதிர்க்கும் மாநில அரசு.

கோடை காலம் கடந்துவிட்டது, குளிர்காலம் வந்துவிட்டது;

ஆனால் நீங்கள் செய்த குற்றம், ராகுல் அழுதார்.

நான் ஒருவனல்ல, நான் ஒருவனல்ல;

மிகக் கடுமையான குற்றச்சாட்டு, நடிக்க வேண்டாம்.

நான் யாரைத் தாக்கினேன், அவன் எங்கே;

ஓ! நமக்குத் தெரியும், விசாரணையில் பார்ப்போம்.

நீங்கள் நான் முதலிலிருந்து மறுக்கிறேன் என்று சொல்கிறீர்கள்;

ராகுல் இன்னும் போயிருக்கலாம் என்றார் சதீஷ்.

நாங்கள் சொன்னோம் அல்லவா; அவசரப்பட வேண்டாம்;

என்னை விடுங்கள், நான் போகவேண்டும். இம்ரான் கூட ஜாமீனில் இருக்கிறார்.

அப்போதும், அப்போதும்;

இது ஒரு மென்மையான பயணம் அல்ல.

நிறுத்து! நிறுத்து! நிறுத்து! நிறுத்து;

நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன், கேட்டிருக்கிறேன்.

மனம் தெளிவானது, உயரமான கூற்றுகளுடன்;

நான் அழைப்பை எடுக்க வேண்டிய நேரம் இது.

பாபுவுக்கு ஒரு மோசமான கடந்த காலம் உண்டு; ஆதாரம் மிகக் குறைவு, அது நீடிக்காது.

அவரது சர்வ வல்லமை கருத முடியாது;

மறைந்த ராகுலுக்கு ஏற்பட்ட ஆபத்தில், சட்டரீதியாக கோபம்.

நீங்கள் இருக்கும் கூண்டிலிருந்து உங்கள் சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்;

விசாரணை முடியும் வரை அரசே ஆட்சியில் இருக்கும்.

அரசுக்கு அறிவிக்கப்படுகிறது; கேக்கை வைத்துக்கொள்ளலாம் உண்ணவும் செய்யலாம் ;

நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது ; கேக் சாப்பிடுவதற்கு முன், அதையும் சுடவும் வேண்டும்."

ஒரு வழக்கின் சம்பவங்களும் வாதாடுதலும் வசன நடையில் வைக்கப்பட்டது இதுவே முதல் முறையாக இருக்கலாம், அதுவும் ஒரு சீரியஸான வழக்கில்.!!

இறுதியில் பெயில் கொடுத்தும் விட்டார்! காரணம்…புகார்தாரர் காணவில்லை!!

அடுத்து வரிசையில் உள்ள மூன்று கவிஞர்கள் ஓப்ரா வின்ஃப்ரே, மெரில் ஸ்டீப் மற்றும் கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ்

இந்த மூன்று பிரபலங்களின் மேற்கோள்கள், 2019 இல் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி முகமத ஃபரூக்கின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவை, மகப்பேறு விடுப்பை நீட்டித்ததற்காக வேலையில் இருந்து நீக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் வழக்கில் தான் நீதிபதியின் தீர்ப்பில் வந்தது.

பழம்பெரும் நடிகர் மெரில் ஸ்ட்ரீப் கூறியது:

"

தாய்மை மிகவும் மனிதாபிமான விளைவைக் கொண்டுள்ளது. அனைத்தும் அத்தியாவசியமானவையாகக் குறைக்கப்படுகின்றன."

இந்த உத்தரவு, டாக் ஷோ தொகுப்பாளரும் பரோபகாரியுமான ஓப்ரா வின்ஃப்ரேயின் மேற்கோளையும் சுட்டிக் காட்டியது,

"ஒரு தாயாக மாறுவதற்கான தேர்வு, என்பது மிகப்பெரிய ஆன்மீக ஆசிரியர்களில் ஒருவராக மாறுவதற்கான தேர்வாகும்."

நீதிபதி, ஹாலிவுட் நட்சத்திரம் கேத்தரின் ஜீட்டா-ஜோன்ஸ் கூறியதையம் மேற்கோள் காட்டினார்.

"உங்கள் கர்ப்பம் உன்னிப்பாகத் திட்டமிடப்பட்டதா, மருத்துவ ரீதியாக திட்டமிடப்பட்டதா அல்லது ஆச்சரியமாக நடந்தாலும் ஒன்று நிச்சயம், உங்கள் வாழ்க்கை ஒருபோதும் இனி ஒரே மாதிரியாக இருக்காது."

மகப்பேறு நலனுக்கான உரிமை ஒன்றும் பொதுநல சேவை போல "போனால் போகிறது "என்று கொடுக்கும் விஷயம் அல்ல" என்பதைக் குறிப்பிட நீதிபதி ஒருவேளை இவ்வாறு முயற்சித்திருக்கலாம்.

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி, நீதிபதி எஸ் முரளிதர் அவர்களின் தீர்ப்புகள் புகழ்பெற்றது.

நீதியரசர் எஸ் முரளிதர்

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கின் 207 பக்க தீர்ப்பு, அவருடையது. அதில், 1947 பிரிவினையின் போது நடந்த சோகமான காட்சிகளை உள்ளடக்கியது. அது, புகழ்பெற்ற கவிஞர் அமிர்தா ப்ரீதமின் பயணத்தின் குறிப்புடன் தொடங்கும்..

புகழபெற்ற கவிஞர் அம்ரிதா ப்ரீதமின் 'ஓட் டு வாரிஸ் ஷா'வில் இருந்து பின்வரும் மொழிபெயர்க்கப்பட்ட பகுதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் எழுதியிருந்தார்

"

முளைத்த நச்சுக் களைகள் தூரத்திலும் அருகாமையிலும், வெறுப்பின் விதைகள் அதிகமாக வளர்ந்த இடங்களிலும்,

எங்கும் இரத்தம் சிந்துகிறது/காட்டில் நச்சுத் தென்றல் மூங்கில் புல்லாங்குழல்களை பாம்புகளாக மாற்றியது/அவற்றின் விஷம் பிரகாசமான மற்றும் ரோஜா போன்ற பஞ்சாபை நீலமாக மாற்றிவிட்டது."

பிரித்தம் லாகூரிலிருந்து தனது குழந்தைகளுடன் தப்பி ஓடியபோது, அவரது பயணத்தின் போது கண்டதில் உள்ள சோகத்தை நீதிபதி கண்டார் போல..

1984-ல் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, ​​37 ஆண்டுகளுக்குப் பிறகும், ப்ரீதம் சந்தித்ததற்கும், அதற்குப் பிறகு நடந்ததை போலவே இருந்தது.என்று இந்தத் தீர்ப்பில் சொல்கிறார்.,

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.

இதே வரிசையில் வருகிறார், நீதிபதி முரளிதரின் பாராட்டலுக்கு உள்ளாகிய முன்னாள் நீதிபதியும், வழக்கறிஞருமான பாரத் சுக்

இரயில்வே மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய பிறகு டெல்லி ஜூடிசியல் அகாடமியில் ஒரு கவிதையை எழுதியதற்காக நீதிபதி சுக்கை நீதிபதி முரளிதர், 2018 இல் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையில் குறிப்பிட்டு பாராட்டினார்.

தீர்ப்புகளில் கவிதையை புகுத்தலாமா?" என்பதற்கு,

"தீர்ப்புகளை எழுத சட்டம் ஒரு கட்டமைப்பை மட்டுமே வழங்கியுள்ளது, நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளில் இலக்கியக் குறிப்புகளைச் செய்வதைத் தடுக்கவில்லை "என்கிறார்..

"நீங்கள் அதை எப்படி எழுதுகிறீர்கள் என்பது உங்கள் விருப்பம். நீங்கள் ஒரு கவிதையை நுழைப்பதோ அல்லது ஒரு வரலாற்று சூழலை அல்லது தத்துவத்தை அல்லது இலக்கியத்தை கையாள்வதையோ சட்டம் தடுக்கவில்லை. உங்கள் எண்ணங்களை முன்வைக்கும் வரை அனைத்தையும் செய்ய முடியும், அது சிவில் வழக்குகளில் கூட தான்,”.

அவர் எழுதிய "தேநீர் விற்பவர் மற்றும் நீதிபதி என்ற தலைப்பில் ஒரு கவிதை, , லைசென்ஸ் இல்லாமல் ரயில்களில் டீ விற்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட பதின்ம வயது சிறுவனால் ஈர்க்கப்பட்டது

இரவும் பகலும்; முடியாமல் யோசித்த பிறகு,

ஒரு சிறுவன் என் முன் ஆஜர் படுத்தப்பட்டான்.

அவனுடைய கொடிய வறுமை எல்லோருக்கும் தெரியும்படி இருந்தது.

ஏழைகள் நிறைந்த இந்தியாவில்,

ஏழையாக இருப்பது அவன் குற்றம்.

அவன் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று ‘வெல்ஃபேர் ஸ்டேட்’ முடிவு செய்தது.

ரயிலில் உரிமம் இல்லாமல், 'டீ' விற்றதாக அவன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவன் வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமத்திலிருந்து புலம்பெயர்ந்தவன்.

அவனுடைய வலியைக் காண முடிந்தது;

அவரது தந்தை தூக்கில் தொங்கினார்.

விதைகள் மீது பெருகிவரும் கடன்களிலிருந்து, அவர் விடுபட விரும்பினார்.

அந்த கிழிந்த சட்டையுடன் அடக்கம் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே என்பது போல,

சட்டமா அல்லது நீதியா?, முதலில், எதை என்னால் தேர்ந்தெடுக்க முடியவில்லை;

நீங்கள் ஏன் நீதி கேட்கிறீர்கள்?

இது சட்டத்தை பார்க்கும் நீதிமன்றம் -

அவனிடம் சொல்லிவிட்டு இன்னும் நான் நானாக இருக்க முடியவில்லை;

ஒரு ‘முடிவு’ சட்டம் ஆனது, ஏன்?

நீதியின் அளவை மீண்டும் அளவீடு செய்ய முடியவில்லையா, நாம் முயற்சி செய்ய வேண்டுமா?

சட்டம் அவனை தண்டிக்க வேண்டும் என்றது.

இது வறட்சியான, கண்மூடித்தனமான கட்டளை மற்றும் தன்னிச்சையான விருப்பம்;

நான் அவரை விடுவிக்கத் முடிவு செய்தேன்., ஆனால் எதுவும் சொல்லவில்லை;

அவனுடைய ரொட்டியை சம்பாதிக்காதே என்று நான் எப்படி அவனிடம் கேட்க முடியும்?.

அரசால் கொண்டுவர முடியாத போது;

இதைவிட கௌரவமான வழியை நான் நினைக்க முடியுமா,

இந்த பையன் ஒரு வாழ்க்கையை சம்பாதித்திருக்கலாம் -

நேர்மையான தேநீர் விற்பனை - நியாயமான கட்டணத்துடன்.

நான் சட்டத்தின் கடுமையான எழுத்தின் படி நன்றாக செய்தால்,

ஏற்கனவே கொதித்த மனசாட்சியுடன் உள்ள என்னால் தூங்க முடியாது.

சட்ட அதிகாரம் இருந்தது; ஆனால் தார்மீக அதிகாரம் என்னிடம் இல்லை,

என் தேசத்தின் சட்டம் ஓரளவு தோல்வியடைந்தது, வறுமை வென்றது.

அப்போது, ​​ரயிலில் தேநீர் விற்று வாழ்க்கையைச் சந்திக்க முயன்ற பல இளைஞர்களை குற்றமற்றவர். என்று நீதிபதி சுக விடுதலை அளித்தார்.

அவர் வழக்கமாக வசனங்களில் தனது தீர்ப்புகளை எழுதவில்லை என்றாலும், அந்த கவிதை அவருடைய கோபத்தின் வெளிப்பாடாகவும், சூழ்நிலையை உணர்த்தும் வழியாகவும் மாறியது.

அவர் சொல்கிறார்,

"அன்றைய தினம் நான் எழுதிய கவிதையில், ஒரு கடினமான வழக்கில் என் உணர்வுகளுடன் நான் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதைப் பற்றி அதிகமாக இருந்தது, சட்டம் 'x' என்று கூறும் போது நீதி 'y' என்று கூறுகிறது. என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தது. ' நீங்கள் எப்படி அந்த இடைவெளியைக் குறைப்பீர்கள் ? ஒரு வழியைக் கண்டறிந்து சட்டத்தைப் பற்றிய உங்கள் புரிதலை எவ்வாறு பயன்படுத்துவீர்கள்?"

ஆனால் தீர்ப்புகளில் கவிதையைப் பயன்படுத்துவதில் அவர் தனிப்பட்ட முறையில் முரண்படுகிறார்.

"இது ஒரு கற்பனைப் படைப்பாக இருக்கக் முடியாது. ஒரு நீதிபதியாக நீங்கள் உண்மைகளை சுதந்திரமாக எடுக்க முடியாதே!!

கவிதையின் முழுப் புள்ளியும் சில சமயங்களில் சுருக்கமாகவும், விஷயங்களை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக மறைக்கவும் வேண்டும் ஆனால் "நீங்கள் தெளிவாக இருக்க வேண்டிய ஒரு தீர்ப்பில் அது நன்றாக வேலை செய்யாது."

"எப்படி இருந்தாலும்,, ஒரு வழக்கைப் புரிந்துக் கொள்வதற்காக ஒரு கருத்தை வெளிப்படுத்தவும், தீர்ப்பை "உயிருடன் வெளியே கொண்டு வரவும்" ஒரு குறியீட்டைப் பயன்படுத்துவதை நான் பொருட்படுத்தவில்லை"

"அது ஏற்கத்தக்கது என்றாலும், மக்கள் கடக்கக்கூடிய மெல்லிய கோடு. உதாரணத்திற்கு முழு தீர்ப்பையும் வசனத்தில் எழுதினால்…, உலகின் பிற இடங்களில் உள்ள நீதிபதிகள் அதை சிறந்த பாணியுடன் முயற்சித்திருந்தாலும் கூட,…அது நான் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று அல்ல." என்கிறார்.

2011 ஆம் ஆண்டு கருணைக் கொலை தொடர்பான முக்கிய தீர்ப்பை எழுதிய நீதிபதி மார்கண்டேய கட்ஜு, புகழ்பெற்ற கவிஞர் மிர்சா காலிப்பின் இரட்டை வசனத்துடன் தான் அதைத் தொடங்கினார்.

"மர்தே ஹைன் ஆர்ஸூ மே மர்னே கி, மௌத் ஆத்தி ஹை பர் நஹின் ஆத்தி" (ஒருவர் மரணத்திற்காக ஏங்கி இறக்கிறார், ஆனால் மரணம், தணிந்தாலும், மழுப்பலாக இருக்கிறது).

இதை பற்றி கருத்து கேட்கையில்,

"அது அழகாகவும் பொருத்தமானதாகவும் இருந்தது, மேலும் இதனால் தீர்ப்புகளை படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. மேலும இது வெகுஜனங்களுக்காக எழுதப்பட்டது தானே - அவர்கள் தானே நீதியின் நுகர்வோர்." என்கிறார்.

உண்மை தான்.அத்தகைய ஆர்வத்தை மிகைப்படுத்தாமல், தீர்ப்புகளில் வகுக்கப்பட்ட சட்டத்தின் தெளிவை சமரசம் செய்யாமல் இருக்கும் வரை, அத்தகைய கவிதைகள் தீர்ப்பில் இடம்பெறுவது படிக்கும் நமக்கு சுவாரஸ்யத்தை தரும் தான்..அது எவ்வளவு சீரியஸான வழக்கு என்றாலும்!!

Poetic Justice: When judges referred to literary works and famous quotes in their verdicts

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...