புதன், 8 செப்டம்பர், 2021

அம்மா இறந்த பிறகு அம்மாவின் நகைகள் மகனுக்கா? அல்லது மகளுக்கா? சொந்தம் விபரம் சொல்லவும்.

 நம் முன் காலத்தில் இருந்தே தாயின் நகைகள் பெண்பிள்ளைகளுக்கு,  தந்தையின் சொத்துகள் ஆண் பிள்ளைகளுக்கு என்ற ஒரு முறை இருந்து வந்துள்ளது. ஆண் பிள்ளைகள் தான், ஒரு வம்சத்தின் தொடர்பை கொண்டு செல்பவன் என்ற நோக்கில் பின்பற்றப்பட்டது அது. 

 காலப்போக்கில்,  "என் அம்மாவிற்கு நான் தானே எல்லாம் செய்தேன்". "வீட்டின் பாரம்பரிய நகைகள் வீட்டிற்கு வாழ வந்தவளுக்கு தான் "  என்று மகன் சொல்வதும், கடைசிக்  காலத்தில் "நான் தானே அவரைக்  கவனித்தேன்"  என்று மருமகள்  சொல்லிக் கொண்டு மாமியாரின் நகைகளை எடுத்துக் கொள்வதும் தொடர்கதையானது. பெண்களாலும், தன்  சகோதரனை எதிர்த்துக்  கேட்க முடியாது. ...சொந்தம் விட்டுப் போகுமே என்று....காலம் முழுதும் தமையனோ தம்பியோ தான் தன்  பிள்ளைகளுக்கு தாய்மாமன் ஸ்தானத்தில் இருந்து எந்த நல்லது கெட்டதும் பார்க்க வேண்டுமே...சீர் கொண்டு வருவதை ஏற்பதோடு திருப்தி கொண்டாள். 

அதன் பின்னர் தான் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை அளிக்கும் சட்டம் 2005ல் வந்தது. . சகோதரிகளை  பங்காளிகளாய் பார்க்கும் வகையில் சகோதரனின்  மனோபாவமும் மாறியது..  அந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளில்,  தகப்பனார் உயிருடன் இருந்து சொத்து பிரிக்கப்படும் போதிலிருந்தே அவளுக்கு உரிமை என்று சொல்லப்பட்டு சொத்தில் உரிமை கோருவதில் வரையறை நிர்ணயிக்கப்பட்டது.. ஆனால் அது போன்ற தடை எதுவும் மகனுக்கு இல்லை. அவன் பிறக்கும் போதே, பெற்றோரின் வாரிசாக அறியப்படுகிறான். இந்த ஏற்றத் தாழ்வை தான் 2020ல்  மாண்புமிகு உச்ச நீதிமன்றம், விநீதா ஷர்மா எதிர் ராகெஷ் ஷர்மா என்ற வழக்கில் கொடுத்த தீர்ப்பில் நீக்கியது.  

இதன் படி  இன்றைய நிலையில், பெண்களும் ஆண்களுக்கு  நிகராக அவர்களுடைய பெற்றோரின் அசையும் மற்றும்  அசையா சொத்திற்கு சம உரிமை கொண்டவர்கள்..ஆகிறார்கள்.   ஆனால் அவர்களுடன் சேர்த்து தாயின் அசையும் மற்றும் அசையா சொத்தில் பங்கு கோரும், அவர்கள்  மறந்து போன இன்னொரு பங்காளியும் உண்டு!! 

அவர் தான் தாயாரின் கணவர்.. அதாவது தந்தை...

பிள்ளைகளுக்கு சமமாக, மனைவியின் சொத்து என்ற முறையில் அந்த நகைகளில் அவருக்கும் சம உரிமை உண்டு.  

முன்னர் அது, மூன்றில் ஒரு பங்கு அவருக்கும், மீதி பங்கு பிள்ளைகளுக்கும் என்று இருந்தது. இப்போது அது திருத்தப்பட்டு சம உரிமை என்றாகி விட்டது..

 அம்மாவின் சொத்தோ, அப்பாவின் சொத்தோ எப்போதும் பிள்ளைகளின் உரிமை தான் முன்னிலையில் உள்ளதே தவிர தனித்து விடப்பட்ட தாய் தந்தையின் உரிமை பற்றி யாரும் கவலைப்படுவதாக தெரிவதில்லை!!

எங்கெல்லாம் உரிமை உள்ளதோ, அது கடமையுடன் சேர்ந்தே வருவது என்று நான் அடிக்கடி நினைவுபடுத்தி வருகிறேன்.  

பெற்றோரின் சொத்தில் பிள்ளைகளுக்கு உள்ள சம உரிமை குறித்து ௨௦௦5 ல் சட்டம் கொண்டு வரப்பட்டாலும், பிள்ளைகள், அந்த பெற்றோர் தான் தங்களின் முதலும் பெரிதுமான சொத்து என்று உணரத் தவறி விட்டனர். அவர்களை பாதுகாப்பதில் தங்களுக்கு உள்ள கடமையை மறந்து விட்டதன் விளைவாக கொண்டு வரப்பட்டது தானே 2007ல் கொண்டு வரப்பட்ட மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டம்!!.  

ஒரு சமூகம் தன கடமையை செய்ய தவறும்போது, அதை செய்யுமாறு நிர்பந்தித்தும் , மீறுவோருக்கு தண்டனை அளிக்கவும் தானே சட்டமே வந்தது.!!

இதோ இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கத்தைப் பாருங்கள்...

"பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் தங்களை பராமரித்துக் கொள்ள போதுமான பொருளாதார வசதி இல்லாத நிலையிலும் மற்றும் சொத்துக்கள் எதுவும் இல்லாத பொழுதும், உரிய பராமரிப்பு கிடைக்கவில்லையெனில் இச்சட்டத்தின் கீழ் அவர்களின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் ஆகியோர பராமரிக்க கடமைப்பட்டவர்கள். " 

அதாவது "சொத்துகள் ஏதும் இல்லாத நிலையிலும்..." என்ற வார்த்தைகளை கவனியுங்கள்...

பெற்றோருக்கு சொத்து ஏதும் இல்லை என்பதால் பராமரிக்க மறுத்த, தவறிய பிள்ளைகள் இருந்ததாலேயே தானே இந்த சட்டமே வந்தது.?!!.

சம உரிமை கேட்ட மகளுக்கு மட்டுமல்ல பேரன்களுக்கும், பேத்திகளுக்கும் இந்த கடமை உள்ளதை சட்டம் சுட்டிக்காட்டியது!!

அப்படி சொத்து இருந்தும், அதை தானமாவும், செட்டில்மென்ட் மூலமும், தங்கள் பெயருக்கு பெற்றோரிடமிடமிருந்து மாற்றிக்கொண்டு,  அவர்களை தவிக்க விட்ட பிள்ளைகளிடம் இருந்து மீண்டும் அந்த சொத்துகளை பெறவும் வழி வகை செய்தது அந்த சட்டம்!! அதற்கேற்றவாறு தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு விதிகள் 2009 வகுக்கப்பட்டுள்ளன.

மனைவியை இழந்த கணவனின் துயர் ஒரு விதம் என்றால், கணவனை இழந்த பெண்ணின் நிலை இன்னும் மோசம். ..அவள் குடும்பத்தின் துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறாள்.  அவளுக்கு முன்னரே அவள் கணவன் இறந்ததற்கும் அவள் துரதிர்ஷ்டமே காரணம் எனப்படுகிறாள்.  பிள்ளைகளின் மங்கள நிகழ்வான திருமணத்தின்போது கூட ஒதுக்கப்படுகிறாள்...அவளிடம் சொத்துகள் இருந்தாலும் பறிக்கப்படுகின்றன...அத்தோடு நிற்கின்றதா சில நல்ல உள்ளங்கள்??

கடவுள் கண்ணன் பிறந்த இடம் எனப்படும் பிரூந்தாவனத்தில், இன்றைய நிலையில் மட்டும் சுமார் இருபதாயிரம் கைபென்கள் உள்ளனர்!! அதுவும், . நகர் முழுதும் உடல் தளர்ந்து, மனம் பேதலித்த நிலையில், மொழி தெரியாமல் என்று...பல விதத்தில் உள்ளவர்கள்...

எப்படி இத்தனை வயதான கைப்பெண்கள் ஒரே இடத்தில்??

இனி அவர்களால் எந்த பயனும் இல்லை என்பதால் பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டு, ரயிலிலும் வெகு தொலைவிருந்தெல்லாம்  கொண்டு வரப்பட்டு இங்கே விட்டு செல்லப்பட்டவர்கள்...

தங்களின் அன்றாட வாயிற்று பசிக்கு போதிய உணவின்றி கிடைக்கும் எளிய உணவிற்கு கண்ணனின் பஜன்களை பாடிக்கொண்டு தங்களின் இறுதி நாளை எதிர் நோக்குபவர்கள் ...

   

ஒரு சாதாரண நிலை பெண்ணின் வாழ்வு என்றுமே ஆணின் வாழ்வை ஒட்டியே அமைந்துள்ளது. தந்தை, கணவன், மகன் என்று ஒரு ஆணை சுற்றியே அவள் வாழ்வு  வருகிறது. ..

என்ன தான் சட்டங்கள் இயற்றப்பட்டு மகளுக்கு , அவளை பராமரிக்கும் சம கடமை உண்டு என்றாலும், பாரம்பரியம், அவளை மகளின் வீட்டில் தொடர்ந்து வசிக்க தடை செய்கிறது..

ஆனால் இப்போது நிலை மாறி வருவது நல்ல மாற்றம் என்றாலும், தன்  பெண்ணின் குழந்தைகளை வளர்க்கவும், வேலைக்கு போகும் மகள் மற்றும் மருமகனுக்கு வேண்டிய வீட்டு வேலைகளை செய்யவும் தான் அவள் உதவி பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது! ! 

ஏன்..திருமணமாகும் நிலையில் உள்ள பெண்கள், எத்தனை பேர் தங்களின் அம்மாவின்  வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்கிறார்கள்?? இன்னொரு வீட்டில் போய் வேலை செய்யவும் தயார்..ஆனால் பெற்ற அம்மாவிற்கு ஓய்வு தேவை என்று எத்தனை உள்ளம் நினைக்கிறது?

புகுந்த வீட்டிற்கு போனாலும் அம்மாவின் வீட்டிற்கு வந்தால் மட்டும் ஒரு சின்ன வேலை கூட செய்யாமல், அம்மாவை பாசத்திலேயே கட்டிப்போடும்  வித்தை தெரிந்தவர்கள்!

தேவைகள் முடிந்த பின்னே தூக்கி எறியப்படுவதும் நடக்கிறது....

இவையெல்லாம் எதைக் காட்டுகிறது??

 தாயின் பாசம் அப்படியே இருந்தாலும், அது பிள்ளைகளிடம் எதிரொலிக்கவில்லையோ என்றே தோன்றும்..இல்லை, எங்களுக்கும் பாசம் அதிகம் உண்டு, ஆனால் எங்கள் மனசுக்குள்ளேயே கிடக்கிறது என்பவரா நீங்கள்?

சிலரிடம் பேசும் போது பார்த்திருக்கிறீர்களா? அம்மா என்றாலே நெகிழ்து போய் விடுவார்கள்.. அவர்களிடம் தாய் பாசம் இயல்பாகவே அதிகம் இருக்கும்...அவர்கள் எல்லாம் ரிஷப  மற்றும் கடக லக்கினம் அல்லது இராசிக்காரர்களாகத்  தான் இருப்பார்கள்.  

என்ன காரணம்? 

கடகத்தின் அதிபதி சந்திரன் என்றால், ரிஷபத்தில் அது உச்சமாக இருக்கும்!!.

வானத்தில் ஒளி வெள்ளமாகிய சந்திரனை மாதாகாரகன் என்போம். அதனால் தானோ என்னவோ, அவருக்கு எந்த கிரகமும் பகையே கிடையாது!!இராசியே அவர் நின்ற இடத்தில் இருந்து தானே கணிக்கப்படுகிறது!! 

அவருடைய பிள்ளை என்று அறியப்படும் புதனுக்கு அன்னையான சந்திரனை பிடிக்காது. ..ஆனால் மாதாவுக்கு அப்படியா ? புதனின் மீது கொள்ளைப் பிரியம்!! 

எந்த அளவிற்கு என்றால் மிதுன லக்கினத்திற்கு ஏழாம் அதிபதி தான் மாராகாதிபதி என்றாலும், ஏழாம் பாவம் அங்கு கடகம் அல்லவா? அதன் அதிபதி சந்திரன் தன பிள்ளையான புதனுக்கு எப்படி தீங்கு செய்வாள்.."மிதுனத்தை சந்திரன் கொல்லான் " என்ற சொல்வடையே உண்டு...

அப்படியானால் அம்மா பிள்ளைகளின்  பாசத்திற்கும் கிரகங்களே காரணமாக இருக்குமா ?  என்றால் ஆமாம். அம்மா பிள்ளையின் உறவு எப்படியிருக்கும் என்பது ஒவ்வொரு இலக்கினத்திற்கும் சந்திரனும் புதனும் கொண்டுள்ள இணைவை பொறுத்து உள்ளது..  

அமாவாசையை நெருங்கும் சந்திரன், நல்ல நிலையில் உள்ள புதனை கெடுக்கவே செய்வார். அதாவது நல்ல புத்திசாலியாக மகன் இருப்பார்.  ஆனால் நல்ல திசையில் அவர் புத்தி செல்லாது...அதற்கு காரணம்  "கெட்ட அம்மா"  தான்.  அதாவது ஒளியில்லாத, அதாவது   வசதியில்லாத, சொத்தில்லாத அம்மா தான்...அம்மாவால் ஒரு பிரயோஜனமும் இல்லை , அவளால் தனக்கு கஷ்டம் தான் என்றால் அவள் "கெட்ட அம்மா" தானே பிள்ளைக்கு?!!

ஆனால் அதுவே சுக்கிரன், குருவின் பார்வை இருந்தால், நிலைமை தலைகீழ் மாற்றம் நடக்கும்.!!

பின்னே வசதியுள்ள அம்மாவாயிற்றே!! 

 சந்திரனின் வீடான கடகத்தில் இருக்கும் புதன் அவஸ்தையில் இருப்பார்.  மாதா ஆட்சியில் இருக்கும் வீட்டில் அல்லவா இருக்கிறார். .இருந்தாலும் பொறுத்துக்கொண்டு இருப்பார்!! 

 ஆனால் மிதுனத்தில் அவரின் ஆட்சி.அங்கு உள்ள சந்திரன் பதன் இணைவின் போது,  அமாவாசை நிலையில் இருந்தும் நன்றாகப் பார்த்துக் கொள்வார்.!! ஆனால் இதுவே பவுர்ணமி சந்திரன் புதனும் இணைவு என்றால், கன்னியை போலவே  மிதுனத்தில் இருக்கும்போதும், மகன் ஜோதிடத்தில் வானவியல் சாத்திரம் கணிதம் என்று பயங்கர புத்திசாலியாக இருப்பான்.. 

அதுவே புதனுக்கு ஆகாத செவ்வாய் ஆட்சி வீடான மேஷம் விருச்சிகத்தில் இருக்கும்போது அம்மாவின் ஆதரவில் இருப்பார்.விருச்சிகத்தில் சந்திரன் நீச்சமாக இருந்தாலும், பெரிதாக மாற்றம் இருக்காது.  அதுவே சந்திரன் நீச்ச பங்கம் ஆனால் புதன்  நிலை நன்றாக இருக்கும்...

அதுவே மீனத்தில் புதனும் நீச்சம். சந்திரனும் அமாவாசை நிலையில் இருக்கும்.  சுத்த மோசமான நிலையில் இருப்பான்  டாஸ்மாக் கடை வாசலில் வீழ்ந்து கிடக்கும் மகனை போல....சுக்கிரனும் குருவும் தம் பார்வையால் காப்பாற்றினால் உண்டு.  அங்கும் சந்திரன் தன பலத்தை புதனுக்கு கொடுத்து தான வலு சேர்ப்பார்.  

வானவியல் சாஸ்திரத்தில் கூட, மகனான புதனின் இணைவினால் மாதா சிறக்கமாட்டாள்..அவளின் தன்மையாலேயே மகன் அதிபுத்திசாலி ஆவான்!!

அப்படியென்றால் பிள்ளைகள் செய்யும் வினைகளுக்கு எல்லாம் கிரகங்களே காரணமா என்றால்,  அதிர்ஷ்டம், பூர்வ புண்ணியம் என்பதெல்லாம் நம் முன்ஜென்ம கர்மாவால் மட்டுமல்ல  பெற்றோரை நாம் நடத்துவது என்னும் இன்றைய  கர்மாவுடனும் இணைந்து உள்ளது. நம் பிறந்த நேரத்தில் இருந்த கோள்களின் நிலையையும் இன்றைய கோள்களின் நிலையையும் இணைத்து கணித்து சொல்வது தானே ஜோதிடம்...

 "தீதும் நன்றும் பிறர் தர வாரா"  என்று நாம்  இப்போது செய்யும் கர்ம வினையே கோள்சாரத்தின்படி நமக்கு விளைவாக திரும்புகிறது  

பெற்றோரும் அவர்கள் உடன் இருக்கும் தருணம் தான்  சிறந்த சொத்து என்பதை உணர்வோம். !!

"யதோ தர்மஸ் ததோ ஜெயா"

 


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...