ஒரு காலத்தில் சட்டம் இயற்ற்றப்படுவதில் ஒரு புனிதத்தன்மை இருந்தது. பல்வேறு துறையில் தேர்ந்த அறிவார்ந்த சான்றோர் நிறைந்த அவையாக இருந்தது அது. காலம் மாறி விட்டது.
இன்று எண்ணற்ற சட்டங்கள் எந்த வித விவாதத்திற்கும் இந்திய அரசின் இரு அவைகளில் வைக்கப் படாமலேயே சட்டமாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
வேளாண் சட்டங்களையே எடுத்துகொள்ளுங்கள். அந்த இரண்டு மசோக்களையும் பாராளுமனறத்தின் தேர்ந்தேடுக்கட்ட கமிட்டியின் முன் வைக்கவேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை கூட அரசு ஏற்கவில்லை. ராஜ்ய சபாவின் கமிட்டிக்கு அனுப்பக்கூட தயாரில்லை. அரசு.
இத்தனை மாதங்களாக அந்த சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளை கூப்பிட்டு பேசும் நேரமெல்லாம் டில்லியில் யாருக்கும் இல்லை. வேறு வேலை ஏகப்பட்டது இருக்கிறது!!
இப்படி எந்த வித விவாதமும் இல்லாமல் ஒரு மசோதா, பெரும்பான்மையின் அடிப்படையில் மட்டுமே, நிறைவேற்றப்படும் என்றால். அதன் விளைவுகள் எவ்வளவு ஆபத்தானது தெரியுமா? இது குறித்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீத்பதியே பொதுவெளியில் தன வருத்தத்தை கொட்டித் தீர்க்கும் அளவற்கு நிலைமை கைமீறிப்போயுள்ளது....
இந்தியா சுதந்திரம் அடைந்து எழுபத்தைந்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் தினத்தில் நடந்த உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் நடத்திய விழாவில் தான் " உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய பாராளுமன்றம் மற்றும் மாநிலங்கள் அவைகளில் விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் இயற்ற்றப்படுவது குறித்து மாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி என் வி ரமணா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அதுவும் முன்னர் எல்லாம் சட்டசபையிலோ பாராளுமன்றத்திலோ விவாதங்கள் நடக்கிறது என்றால் அது அறிவுப்பூர்வமானதாக இருக்கும். ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் என்றார்.
ஆனால் இப்போதோ தனி நபர் துதிபாடுவதர்க்கும் வசை பாடவுமே நேரம் சரியாக உள்ளது...
இதனால் நீதிமன்றத்திற்கு என்ன பிரச்சினை? என்பவர்களுக்கு, நீதியரசர் அவர் பேச்சினூடே சொன்னதையும் கவனிக்க வேண்டும்.
ஒரு வழக்கில், தொழில்துறை தகராறு சட்டத் திருத்தம் தொடர்பாக நடந்த விவாதங்களைப் படித்த பிறகு தான் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களின் விளைவுகளைப் புரிந்துக்கொண்டதாக சொல்லியுள்ளாரே!
மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 அன்று தொடங்கியதிலிருந்து பெகாசஸ் ஸ்பைவேர் சர்ச்சை உட்பட பல பிரச்சனைகளால் சபை நடவடிக்கைகள் தொடர்ந்து தடைபட்டன என்றாலும் பெரும்பான்மையான மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட்ட நேரம் ஒரு ரெக்கார்ட் பிரேக் தான்.
இதுவரையில் அரசியலமைப்பு சட்டத்தின் (127 வது திருத்தம்) மசோதா தான் இரு அவைகளிலும் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக விவாதம் நடந்தது, மற்றவை எல்லாம், சராசரியாக மேல் மற்றும் கீழ் சபையில் நிறைவேற்றுவதற்கு சிறிது நேரம் மட்டும் தான் எடுத்தது, இதில் பொது காப்பீட்டு வணிகம் (தேசியமயமாக்கல்) திருத்த சட்டத்திற்கான மசோதா, 2021 அடங்கும் எட்டு நிமிடங்களில் அங்கீகரிக்கப்பட்டது என்றால் , வரி விதிப்பு சட்டங்கள் (திருத்த) மசோதா, 2021 க்கு வெறும் ஆறு நிமிடங்களில் அங்கீகரிக்கப்பட்டது.
சென்ற பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில் மட்டும் இருபது மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் மட்டுமே நிறைவற்றப்பட்டுள்ளன..!!
இதில் என்ன நடைமுறை விதி மீறல்கள் என்று தெரியாதவர்களுக்கு மட்டும் ஒரு சின்ன குறிப்பு...
பொதுவாக சட்டசபையிலோ பாராளுமன்றத்திலோ ஒரு மசோதா முன் வைப்ப்படும்போது, அதை சட்டமாக நிறைவற்றவேண்டுமா இல்லையா என்று தீர்மானிப்பது மக்கள் பிரதிநிதிகளாகிய ஒவ்வொரு எம்.பி. யின் பொறுப்பு..
ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை தீர்ப் பதற்காக கொண்டு வரப்படும் அந்த சட்டம், இல்லாத வேறொரு பிரச்சினையை கொண்டுவந்துவிடுமா என்பதும் ஆலோசிக்கப்படும். இந்த ஆய்வு முடிந்து இரண்டு அவைகளிலும் விவாதததிற்கு வைக்கப்படும் பொது இது குறித்து நடத்தப்படும் விவாதம் தான் இந்த சட்டத்தின் கொள்கை என்ன என்பதையும் தன்மையையும் வெளிக் கொண்டுவரும்.
பெரும்பான்மையான சட்டங்கள் நீதிமன்றத்தில் ஆய்வுக்கு உள்ளாக்கப்ப்படும்போது, பாராளுமன்றத்தில் நடந்த இந்த விவாதங்கள் எல்லாம் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு வரும்.
"முன்னர் எல்லாம், சட்டத்தை விளக்குவதில் நீதிமன்றங்களின் சுமை குறைவாக இருந்தது, ஏனெனில் சட்டமன்றம் அல்லது பாராளுமன்றம் என்ன நினைத்து அத்தகைய சட்டத்தை உருவாக்கினர் என்பது பற்றிய தெளிவான படம் இருந்தது, ஆனால் இப்போது, சட்டங்களில் தெளிவு இல்லை, சட்டத்தின் நோக்கம் என்னவென்று எங்களுக்குத் தெரியாது ” என்கிறார் நீதியரசர்.
இது நீதிமன்றத்திற்கு மட்டும் உள்ள பிரச்சினை அல்ல. "இது நிறைய வழக்குகள் எதிர்கொள்ளவேண்டிய சிரமங்களை அரசாங்கத்திற்கு உர்ய்வாக்கும். அத்தோடு கூட இழப்புகளையும். அது மட்டுமா ...பொதுமக்களுக்கும் சிரமத்தையும் உருவாக்குகிறது," என்று தலைமை நீதிபதி கூறியதையும் உற்று நோக்கவேண்டும். .
பெரும்பாலும், அந்த குறிப்பிட்ட சட்டத்தின் பின்னாலுள்ள அரசின் கொள்கை, அரசியல் அமைப்பு சட்டத்தின் விதிகளுக்கு எதிராக இல்லாத வரையில் , நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடுவது இல்லை.
சரி ..அவையிலும் விவாதம் நடத்துவதில்லை .. சட்டமான பின்பு பாராளுமன்ற கமிட்டிக்கு இந்த சட்டங்களை ஆய்வுக்கு அனுப்ப சொல்லும் எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏன் அரசு ஏற்பதில்லை? என்றால் அதற்கும் காரணமிருக்கிறது..
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதை நெறிமுறைப்படுத்துவது சம்பந்தமான சட்ட வடிவு, ராஜ்ய சபா கமிட்டிக்கு அனுப்பப்பட்டது. அவர்கள், பெரும்பாலும் செய்யும் வடை டீயை குடித்துவிட்டு, "எல்லாம் ஓ கே." என்று கையெழுத்து போட்டார்களா என்றால் இல்லை.
அவர்களே நாட்டின் பெரிய நான்கு நகரங்களுக்கு சென்று, அங்கு இது சம்பந்தப்பட்ட நபர்களை விசாரித்து, தேசிய மனித உரிமை ஆணையம், குழந்தை நல தேசிய கமிஷன் மற்றும் வெவ்\வேறு நகரங்களில் உள்ள என்.ஜி.ஓக்களை\ தனியாக சந்தித்து இது பற்றி விவாதித்தார்கள். பிறகு ஓரு அறிக்கையை சமர்ப்பித்தார்கள். இதை அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை போலும் !! இப்போது அதை இரு சபையிலும் வைத்து விவாதம் நடத்த வேண்டும்...
அதனால் இதெல்லாம் தேவையா என்று நினைத்த்ததும் இல்லாமல், இதனை விசாரிக்க நீதிமன்றங்களும் தேவையா என்று நினைக்க ஆரம்பித்து உள்ளது தான் உச்சக்கட்டம்.
இந்த வாரம், உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது ஒரு வழக்கு. அதை தாக்கல் செய்திருந்தது மத்தியப் பிரதேசத்தின் பார் கவுன்சில். ஜபல்பூரில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில் நீதிபதி இல்லையாம். அப்படியெனில் சாதரணமாக என்ன செய்வார்கள்? நியமனத்தை உடனே செய்வார்கள். ஆனால் அரசு செய்தது என்ன தெரியுமா? அதன் ஆள்வரையை லக்னோவிற்கு மாற்றி மத்திய அரசு உத்தரவை போட, அதை எதிர்த்து போடப்பட்ட வழக்கு தான் விசாரணைக்கு வந்தது. அதில் தான் மீண்டும் தலைமை நீதியரசர் மத்திய அரசின் போக்கு குறித்து தன் அதிருப்தியை தெரிவித்து உள்ளார்.
"15 கடன் மீட்பு தீர்ப்பாயங்களில் தலைவர் அல்லது தலைவர் உறுப்பினர்கள் இல்லை, இந்த காலியிடங்கள் டிசம்பர் 2019 முதல் உள்ளன, ”என்ற நீதியரசர் ரமணா "தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்: என்சிஎல்டி தலைவர் இல்லை, ஒன்பது நீதித்துறை மற்றும் 14 தொழில்நுட்ப உறுப்பினர்கள் காலியிடங்கள் உள்ளன" என்று பட்டியலிட்டுவிட்டு ,நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டதை சுட்டிக்காட்டி " உங்கள் நிலை தான் என்ன என்று சொல்லுங்கள். தீர்ப்பாயங்களை மூடிவிடும் எண்ணத்தில் உள்ளீர்களா?? இந்த விவகாரத்தில் அரசு அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால், உயர் அதிகாரிகளை வரவழைக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
இதற்கு என்ன தான் தீர்வு?
இதோ தலைமை நீதியரசர் விடுத்த வேண்டுகோளையும் பார்ப்போமே...
"சட்டத்துறையின் சமூகம் , சமூக மற்றும் பொது வாழ்க்கையில், முன்னணியிலும் தீவிரமாகவும் பங்கேற்க வேண்டிய நேரம் இது. உங்கள் தொழில், பணம் சம்பாதிப்பது வசதியாக வாழ்வது போன்றவற்றில் மட்டும் உங்களை கட்டுப்படுத்திக் கொள்ளாதீர்கள், " என்ற அவர் சட்ட சமூக உறுப்பினர்கள் தங்கள் அறிவு, ஞானம் மற்றும் அனுபவத்தை சட்டமியற்றுவதில் பங்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
பார்க்கலாம் ...வலைத்தளத்தில் மட்டும் சொற்போர் புரிந்து கொண்டிராமல், எந்த சுயநலனும் இன்றி, பொதுநலன் ஒன்றே குறியாக, சமூகத்திற்கு கடமையை ஆற்ற எத்தனை பேர் முன்வரப் போகிரார்கள் என்று...??!!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக