புதன், 8 செப்டம்பர், 2021

அம்மா இறந்த பிறகு அம்மாவின் நகைகள் மகனுக்கா? அல்லது மகளுக்கா? சொந்தம் விபரம் சொல்லவும்.

 நம் முன் காலத்தில் இருந்தே தாயின் நகைகள் பெண்பிள்ளைகளுக்கு,  தந்தையின் சொத்துகள் ஆண் பிள்ளைகளுக்கு என்ற ஒரு முறை இருந்து வந்துள்ளது. ஆண் பிள்ளைகள் தான், ஒரு வம்சத்தின் தொடர்பை கொண்டு செல்பவன் என்ற நோக்கில் பின்பற்றப்பட்டது அது. 

 காலப்போக்கில்,  "என் அம்மாவிற்கு நான் தானே எல்லாம் செய்தேன்". "வீட்டின் பாரம்பரிய நகைகள் வீட்டிற்கு வாழ வந்தவளுக்கு தான் "  என்று மகன் சொல்வதும், கடைசிக்  காலத்தில் "நான் தானே அவரைக்  கவனித்தேன்"  என்று மருமகள்  சொல்லிக் கொண்டு மாமியாரின் நகைகளை எடுத்துக் கொள்வதும் தொடர்கதையானது. பெண்களாலும், தன்  சகோதரனை எதிர்த்துக்  கேட்க முடியாது. ...சொந்தம் விட்டுப் போகுமே என்று....காலம் முழுதும் தமையனோ தம்பியோ தான் தன்  பிள்ளைகளுக்கு தாய்மாமன் ஸ்தானத்தில் இருந்து எந்த நல்லது கெட்டதும் பார்க்க வேண்டுமே...சீர் கொண்டு வருவதை ஏற்பதோடு திருப்தி கொண்டாள். 

அதன் பின்னர் தான் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை அளிக்கும் சட்டம் 2005ல் வந்தது. . சகோதரிகளை  பங்காளிகளாய் பார்க்கும் வகையில் சகோதரனின்  மனோபாவமும் மாறியது..  அந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளில்,  தகப்பனார் உயிருடன் இருந்து சொத்து பிரிக்கப்படும் போதிலிருந்தே அவளுக்கு உரிமை என்று சொல்லப்பட்டு சொத்தில் உரிமை கோருவதில் வரையறை நிர்ணயிக்கப்பட்டது.. ஆனால் அது போன்ற தடை எதுவும் மகனுக்கு இல்லை. அவன் பிறக்கும் போதே, பெற்றோரின் வாரிசாக அறியப்படுகிறான். இந்த ஏற்றத் தாழ்வை தான் 2020ல்  மாண்புமிகு உச்ச நீதிமன்றம், விநீதா ஷர்மா எதிர் ராகெஷ் ஷர்மா என்ற வழக்கில் கொடுத்த தீர்ப்பில் நீக்கியது.  

இதன் படி  இன்றைய நிலையில், பெண்களும் ஆண்களுக்கு  நிகராக அவர்களுடைய பெற்றோரின் அசையும் மற்றும்  அசையா சொத்திற்கு சம உரிமை கொண்டவர்கள்..ஆகிறார்கள்.   ஆனால் அவர்களுடன் சேர்த்து தாயின் அசையும் மற்றும் அசையா சொத்தில் பங்கு கோரும், அவர்கள்  மறந்து போன இன்னொரு பங்காளியும் உண்டு!! 

அவர் தான் தாயாரின் கணவர்.. அதாவது தந்தை...

பிள்ளைகளுக்கு சமமாக, மனைவியின் சொத்து என்ற முறையில் அந்த நகைகளில் அவருக்கும் சம உரிமை உண்டு.  

முன்னர் அது, மூன்றில் ஒரு பங்கு அவருக்கும், மீதி பங்கு பிள்ளைகளுக்கும் என்று இருந்தது. இப்போது அது திருத்தப்பட்டு சம உரிமை என்றாகி விட்டது..

 அம்மாவின் சொத்தோ, அப்பாவின் சொத்தோ எப்போதும் பிள்ளைகளின் உரிமை தான் முன்னிலையில் உள்ளதே தவிர தனித்து விடப்பட்ட தாய் தந்தையின் உரிமை பற்றி யாரும் கவலைப்படுவதாக தெரிவதில்லை!!

எங்கெல்லாம் உரிமை உள்ளதோ, அது கடமையுடன் சேர்ந்தே வருவது என்று நான் அடிக்கடி நினைவுபடுத்தி வருகிறேன்.  

பெற்றோரின் சொத்தில் பிள்ளைகளுக்கு உள்ள சம உரிமை குறித்து ௨௦௦5 ல் சட்டம் கொண்டு வரப்பட்டாலும், பிள்ளைகள், அந்த பெற்றோர் தான் தங்களின் முதலும் பெரிதுமான சொத்து என்று உணரத் தவறி விட்டனர். அவர்களை பாதுகாப்பதில் தங்களுக்கு உள்ள கடமையை மறந்து விட்டதன் விளைவாக கொண்டு வரப்பட்டது தானே 2007ல் கொண்டு வரப்பட்ட மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டம்!!.  

ஒரு சமூகம் தன கடமையை செய்ய தவறும்போது, அதை செய்யுமாறு நிர்பந்தித்தும் , மீறுவோருக்கு தண்டனை அளிக்கவும் தானே சட்டமே வந்தது.!!

இதோ இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கத்தைப் பாருங்கள்...

"பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் தங்களை பராமரித்துக் கொள்ள போதுமான பொருளாதார வசதி இல்லாத நிலையிலும் மற்றும் சொத்துக்கள் எதுவும் இல்லாத பொழுதும், உரிய பராமரிப்பு கிடைக்கவில்லையெனில் இச்சட்டத்தின் கீழ் அவர்களின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் ஆகியோர பராமரிக்க கடமைப்பட்டவர்கள். " 

அதாவது "சொத்துகள் ஏதும் இல்லாத நிலையிலும்..." என்ற வார்த்தைகளை கவனியுங்கள்...

பெற்றோருக்கு சொத்து ஏதும் இல்லை என்பதால் பராமரிக்க மறுத்த, தவறிய பிள்ளைகள் இருந்ததாலேயே தானே இந்த சட்டமே வந்தது.?!!.

சம உரிமை கேட்ட மகளுக்கு மட்டுமல்ல பேரன்களுக்கும், பேத்திகளுக்கும் இந்த கடமை உள்ளதை சட்டம் சுட்டிக்காட்டியது!!

அப்படி சொத்து இருந்தும், அதை தானமாவும், செட்டில்மென்ட் மூலமும், தங்கள் பெயருக்கு பெற்றோரிடமிடமிருந்து மாற்றிக்கொண்டு,  அவர்களை தவிக்க விட்ட பிள்ளைகளிடம் இருந்து மீண்டும் அந்த சொத்துகளை பெறவும் வழி வகை செய்தது அந்த சட்டம்!! அதற்கேற்றவாறு தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு விதிகள் 2009 வகுக்கப்பட்டுள்ளன.

மனைவியை இழந்த கணவனின் துயர் ஒரு விதம் என்றால், கணவனை இழந்த பெண்ணின் நிலை இன்னும் மோசம். ..அவள் குடும்பத்தின் துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறாள்.  அவளுக்கு முன்னரே அவள் கணவன் இறந்ததற்கும் அவள் துரதிர்ஷ்டமே காரணம் எனப்படுகிறாள்.  பிள்ளைகளின் மங்கள நிகழ்வான திருமணத்தின்போது கூட ஒதுக்கப்படுகிறாள்...அவளிடம் சொத்துகள் இருந்தாலும் பறிக்கப்படுகின்றன...அத்தோடு நிற்கின்றதா சில நல்ல உள்ளங்கள்??

கடவுள் கண்ணன் பிறந்த இடம் எனப்படும் பிரூந்தாவனத்தில், இன்றைய நிலையில் மட்டும் சுமார் இருபதாயிரம் கைபென்கள் உள்ளனர்!! அதுவும், . நகர் முழுதும் உடல் தளர்ந்து, மனம் பேதலித்த நிலையில், மொழி தெரியாமல் என்று...பல விதத்தில் உள்ளவர்கள்...

எப்படி இத்தனை வயதான கைப்பெண்கள் ஒரே இடத்தில்??

இனி அவர்களால் எந்த பயனும் இல்லை என்பதால் பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டு, ரயிலிலும் வெகு தொலைவிருந்தெல்லாம்  கொண்டு வரப்பட்டு இங்கே விட்டு செல்லப்பட்டவர்கள்...

தங்களின் அன்றாட வாயிற்று பசிக்கு போதிய உணவின்றி கிடைக்கும் எளிய உணவிற்கு கண்ணனின் பஜன்களை பாடிக்கொண்டு தங்களின் இறுதி நாளை எதிர் நோக்குபவர்கள் ...

   

ஒரு சாதாரண நிலை பெண்ணின் வாழ்வு என்றுமே ஆணின் வாழ்வை ஒட்டியே அமைந்துள்ளது. தந்தை, கணவன், மகன் என்று ஒரு ஆணை சுற்றியே அவள் வாழ்வு  வருகிறது. ..

என்ன தான் சட்டங்கள் இயற்றப்பட்டு மகளுக்கு , அவளை பராமரிக்கும் சம கடமை உண்டு என்றாலும், பாரம்பரியம், அவளை மகளின் வீட்டில் தொடர்ந்து வசிக்க தடை செய்கிறது..

ஆனால் இப்போது நிலை மாறி வருவது நல்ல மாற்றம் என்றாலும், தன்  பெண்ணின் குழந்தைகளை வளர்க்கவும், வேலைக்கு போகும் மகள் மற்றும் மருமகனுக்கு வேண்டிய வீட்டு வேலைகளை செய்யவும் தான் அவள் உதவி பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது! ! 

ஏன்..திருமணமாகும் நிலையில் உள்ள பெண்கள், எத்தனை பேர் தங்களின் அம்மாவின்  வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்கிறார்கள்?? இன்னொரு வீட்டில் போய் வேலை செய்யவும் தயார்..ஆனால் பெற்ற அம்மாவிற்கு ஓய்வு தேவை என்று எத்தனை உள்ளம் நினைக்கிறது?

புகுந்த வீட்டிற்கு போனாலும் அம்மாவின் வீட்டிற்கு வந்தால் மட்டும் ஒரு சின்ன வேலை கூட செய்யாமல், அம்மாவை பாசத்திலேயே கட்டிப்போடும்  வித்தை தெரிந்தவர்கள்!

தேவைகள் முடிந்த பின்னே தூக்கி எறியப்படுவதும் நடக்கிறது....

இவையெல்லாம் எதைக் காட்டுகிறது??

 தாயின் பாசம் அப்படியே இருந்தாலும், அது பிள்ளைகளிடம் எதிரொலிக்கவில்லையோ என்றே தோன்றும்..இல்லை, எங்களுக்கும் பாசம் அதிகம் உண்டு, ஆனால் எங்கள் மனசுக்குள்ளேயே கிடக்கிறது என்பவரா நீங்கள்?

சிலரிடம் பேசும் போது பார்த்திருக்கிறீர்களா? அம்மா என்றாலே நெகிழ்து போய் விடுவார்கள்.. அவர்களிடம் தாய் பாசம் இயல்பாகவே அதிகம் இருக்கும்...அவர்கள் எல்லாம் ரிஷப  மற்றும் கடக லக்கினம் அல்லது இராசிக்காரர்களாகத்  தான் இருப்பார்கள்.  

என்ன காரணம்? 

கடகத்தின் அதிபதி சந்திரன் என்றால், ரிஷபத்தில் அது உச்சமாக இருக்கும்!!.

வானத்தில் ஒளி வெள்ளமாகிய சந்திரனை மாதாகாரகன் என்போம். அதனால் தானோ என்னவோ, அவருக்கு எந்த கிரகமும் பகையே கிடையாது!!இராசியே அவர் நின்ற இடத்தில் இருந்து தானே கணிக்கப்படுகிறது!! 

அவருடைய பிள்ளை என்று அறியப்படும் புதனுக்கு அன்னையான சந்திரனை பிடிக்காது. ..ஆனால் மாதாவுக்கு அப்படியா ? புதனின் மீது கொள்ளைப் பிரியம்!! 

எந்த அளவிற்கு என்றால் மிதுன லக்கினத்திற்கு ஏழாம் அதிபதி தான் மாராகாதிபதி என்றாலும், ஏழாம் பாவம் அங்கு கடகம் அல்லவா? அதன் அதிபதி சந்திரன் தன பிள்ளையான புதனுக்கு எப்படி தீங்கு செய்வாள்.."மிதுனத்தை சந்திரன் கொல்லான் " என்ற சொல்வடையே உண்டு...

அப்படியானால் அம்மா பிள்ளைகளின்  பாசத்திற்கும் கிரகங்களே காரணமாக இருக்குமா ?  என்றால் ஆமாம். அம்மா பிள்ளையின் உறவு எப்படியிருக்கும் என்பது ஒவ்வொரு இலக்கினத்திற்கும் சந்திரனும் புதனும் கொண்டுள்ள இணைவை பொறுத்து உள்ளது..  

அமாவாசையை நெருங்கும் சந்திரன், நல்ல நிலையில் உள்ள புதனை கெடுக்கவே செய்வார். அதாவது நல்ல புத்திசாலியாக மகன் இருப்பார்.  ஆனால் நல்ல திசையில் அவர் புத்தி செல்லாது...அதற்கு காரணம்  "கெட்ட அம்மா"  தான்.  அதாவது ஒளியில்லாத, அதாவது   வசதியில்லாத, சொத்தில்லாத அம்மா தான்...அம்மாவால் ஒரு பிரயோஜனமும் இல்லை , அவளால் தனக்கு கஷ்டம் தான் என்றால் அவள் "கெட்ட அம்மா" தானே பிள்ளைக்கு?!!

ஆனால் அதுவே சுக்கிரன், குருவின் பார்வை இருந்தால், நிலைமை தலைகீழ் மாற்றம் நடக்கும்.!!

பின்னே வசதியுள்ள அம்மாவாயிற்றே!! 

 சந்திரனின் வீடான கடகத்தில் இருக்கும் புதன் அவஸ்தையில் இருப்பார்.  மாதா ஆட்சியில் இருக்கும் வீட்டில் அல்லவா இருக்கிறார். .இருந்தாலும் பொறுத்துக்கொண்டு இருப்பார்!! 

 ஆனால் மிதுனத்தில் அவரின் ஆட்சி.அங்கு உள்ள சந்திரன் பதன் இணைவின் போது,  அமாவாசை நிலையில் இருந்தும் நன்றாகப் பார்த்துக் கொள்வார்.!! ஆனால் இதுவே பவுர்ணமி சந்திரன் புதனும் இணைவு என்றால், கன்னியை போலவே  மிதுனத்தில் இருக்கும்போதும், மகன் ஜோதிடத்தில் வானவியல் சாத்திரம் கணிதம் என்று பயங்கர புத்திசாலியாக இருப்பான்.. 

அதுவே புதனுக்கு ஆகாத செவ்வாய் ஆட்சி வீடான மேஷம் விருச்சிகத்தில் இருக்கும்போது அம்மாவின் ஆதரவில் இருப்பார்.விருச்சிகத்தில் சந்திரன் நீச்சமாக இருந்தாலும், பெரிதாக மாற்றம் இருக்காது.  அதுவே சந்திரன் நீச்ச பங்கம் ஆனால் புதன்  நிலை நன்றாக இருக்கும்...

அதுவே மீனத்தில் புதனும் நீச்சம். சந்திரனும் அமாவாசை நிலையில் இருக்கும்.  சுத்த மோசமான நிலையில் இருப்பான்  டாஸ்மாக் கடை வாசலில் வீழ்ந்து கிடக்கும் மகனை போல....சுக்கிரனும் குருவும் தம் பார்வையால் காப்பாற்றினால் உண்டு.  அங்கும் சந்திரன் தன பலத்தை புதனுக்கு கொடுத்து தான வலு சேர்ப்பார்.  

வானவியல் சாஸ்திரத்தில் கூட, மகனான புதனின் இணைவினால் மாதா சிறக்கமாட்டாள்..அவளின் தன்மையாலேயே மகன் அதிபுத்திசாலி ஆவான்!!

அப்படியென்றால் பிள்ளைகள் செய்யும் வினைகளுக்கு எல்லாம் கிரகங்களே காரணமா என்றால்,  அதிர்ஷ்டம், பூர்வ புண்ணியம் என்பதெல்லாம் நம் முன்ஜென்ம கர்மாவால் மட்டுமல்ல  பெற்றோரை நாம் நடத்துவது என்னும் இன்றைய  கர்மாவுடனும் இணைந்து உள்ளது. நம் பிறந்த நேரத்தில் இருந்த கோள்களின் நிலையையும் இன்றைய கோள்களின் நிலையையும் இணைத்து கணித்து சொல்வது தானே ஜோதிடம்...

 "தீதும் நன்றும் பிறர் தர வாரா"  என்று நாம்  இப்போது செய்யும் கர்ம வினையே கோள்சாரத்தின்படி நமக்கு விளைவாக திரும்புகிறது  

பெற்றோரும் அவர்கள் உடன் இருக்கும் தருணம் தான்  சிறந்த சொத்து என்பதை உணர்வோம். !!

"யதோ தர்மஸ் ததோ ஜெயா"

 


செவ்வாய், 7 செப்டம்பர், 2021

பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றுவதை தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஏன் கண்டிக்கிறார்?

ஒரு காலத்தில் சட்டம் இயற்ற்றப்படுவதில் ஒரு புனிதத்தன்மை இருந்தது. பல்வேறு துறையில் தேர்ந்த அறிவார்ந்த சான்றோர் நிறைந்த அவையாக இருந்தது அது.  காலம் மாறி விட்டது.

இன்று  எண்ணற்ற சட்டங்கள் எந்த வித விவாதத்திற்கும் இந்திய அரசின் இரு அவைகளில் வைக்கப்  படாமலேயே சட்டமாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  



வேளாண் சட்டங்களையே எடுத்துகொள்ளுங்கள். அந்த இரண்டு மசோக்களையும் பாராளுமனறத்தின் தேர்ந்தேடுக்கட்ட கமிட்டியின் முன் வைக்கவேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை கூட அரசு ஏற்கவில்லை. ராஜ்ய சபாவின் கமிட்டிக்கு அனுப்பக்கூட தயாரில்லை. அரசு. 

இத்தனை மாதங்களாக அந்த சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளை கூப்பிட்டு பேசும் நேரமெல்லாம் டில்லியில் யாருக்கும் இல்லை. வேறு வேலை ஏகப்பட்டது இருக்கிறது!!

 இப்படி எந்த வித விவாதமும் இல்லாமல் ஒரு மசோதா, பெரும்பான்மையின் அடிப்படையில் மட்டுமே, நிறைவேற்றப்படும் என்றால். அதன் விளைவுகள் எவ்வளவு ஆபத்தானது தெரியுமா?  இது குறித்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீத்பதியே பொதுவெளியில் தன வருத்தத்தை கொட்டித் தீர்க்கும் அளவற்கு நிலைமை கைமீறிப்போயுள்ளது....





இந்தியா சுதந்திரம் அடைந்து எழுபத்தைந்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் தினத்தில் நடந்த   உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் நடத்திய விழாவில் தான்  " உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய பாராளுமன்றம் மற்றும் மாநிலங்கள் அவைகளில்  விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் இயற்ற்றப்படுவது குறித்து  மாண்புமிகு  இந்திய தலைமை நீதிபதி என் வி ரமணா அதிருப்தி தெரிவித்துள்ளார். 

அதுவும் முன்னர் எல்லாம் சட்டசபையிலோ பாராளுமன்றத்திலோ விவாதங்கள் நடக்கிறது என்றால் அது அறிவுப்பூர்வமானதாக இருக்கும். ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் என்றார். 

ஆனால் இப்போதோ தனி நபர் துதிபாடுவதர்க்கும் வசை பாடவுமே நேரம் சரியாக உள்ளது...  


இதனால் நீதிமன்றத்திற்கு என்ன பிரச்சினை? என்பவர்களுக்கு, நீதியரசர் அவர் பேச்சினூடே சொன்னதையும் கவனிக்க வேண்டும். 

ஒரு வழக்கில்,  தொழில்துறை தகராறு சட்டத் திருத்தம் தொடர்பாக நடந்த விவாதங்களைப் படித்த பிறகு தான் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களின் விளைவுகளைப் புரிந்துக்கொண்டதாக சொல்லியுள்ளாரே!

  மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 அன்று தொடங்கியதிலிருந்து பெகாசஸ் ஸ்பைவேர் சர்ச்சை உட்பட பல பிரச்சனைகளால் சபை நடவடிக்கைகள் தொடர்ந்து தடைபட்டன என்றாலும் பெரும்பான்மையான மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட்ட நேரம் ஒரு ரெக்கார்ட் பிரேக் தான்.
 
இதுவரையில் அரசியலமைப்பு சட்டத்தின் (127 வது திருத்தம்) மசோதா தான் இரு அவைகளிலும் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக விவாதம் நடந்தது, மற்றவை எல்லாம், சராசரியாக மேல் மற்றும் கீழ் சபையில் நிறைவேற்றுவதற்கு சிறிது நேரம் மட்டும் தான் எடுத்தது, இதில் பொது காப்பீட்டு வணிகம் (தேசியமயமாக்கல்) திருத்த சட்டத்திற்கான மசோதா, 2021 அடங்கும் எட்டு நிமிடங்களில் அங்கீகரிக்கப்பட்டது என்றால் , வரி விதிப்பு சட்டங்கள் (திருத்த) மசோதா, 2021 க்கு வெறும் ஆறு நிமிடங்களில் அங்கீகரிக்கப்பட்டது. 

 சென்ற பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில் மட்டும் இருபது மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் மட்டுமே நிறைவற்றப்பட்டுள்ளன..!!

இதில் என்ன நடைமுறை விதி மீறல்கள் என்று தெரியாதவர்களுக்கு மட்டும் ஒரு சின்ன குறிப்பு...

பொதுவாக சட்டசபையிலோ பாராளுமன்றத்திலோ ஒரு மசோதா முன் வைப்ப்படும்போது, அதை சட்டமாக நிறைவற்றவேண்டுமா இல்லையா என்று தீர்மானிப்பது மக்கள் பிரதிநிதிகளாகிய ஒவ்வொரு எம்.பி. யின் பொறுப்பு..

ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை தீர்ப் பதற்காக கொண்டு வரப்படும் அந்த சட்டம், இல்லாத வேறொரு பிரச்சினையை கொண்டுவந்துவிடுமா என்பதும் ஆலோசிக்கப்படும். இந்த ஆய்வு முடிந்து இரண்டு அவைகளிலும் விவாதததிற்கு வைக்கப்படும் பொது இது குறித்து நடத்தப்படும் விவாதம் தான் இந்த சட்டத்தின் கொள்கை என்ன என்பதையும் தன்மையையும் வெளிக் கொண்டுவரும்.

பெரும்பான்மையான சட்டங்கள் நீதிமன்றத்தில் ஆய்வுக்கு உள்ளாக்கப்ப்படும்போது, பாராளுமன்றத்தில் நடந்த இந்த விவாதங்கள் எல்லாம் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு வரும்.  

"முன்னர் எல்லாம், சட்டத்தை விளக்குவதில் நீதிமன்றங்களின் சுமை குறைவாக இருந்தது, ஏனெனில் சட்டமன்றம் அல்லது பாராளுமன்றம் என்ன நினைத்து அத்தகைய சட்டத்தை உருவாக்கினர் என்பது பற்றிய தெளிவான படம் இருந்தது, ஆனால் இப்போது, சட்டங்களில் தெளிவு இல்லை, சட்டத்தின் நோக்கம் என்னவென்று எங்களுக்குத் தெரியாது ” என்கிறார் நீதியரசர்.

இது நீதிமன்றத்திற்கு மட்டும் உள்ள பிரச்சினை அல்ல. "இது நிறைய வழக்குகள் எதிர்கொள்ளவேண்டிய சிரமங்களை அரசாங்கத்திற்கு உர்ய்வாக்கும். அத்தோடு கூட இழப்புகளையும். அது மட்டுமா ...பொதுமக்களுக்கும் சிரமத்தையும் உருவாக்குகிறது," என்று தலைமை நீதிபதி கூறியதையும் உற்று நோக்கவேண்டும். . 

பெரும்பாலும், அந்த குறிப்பிட்ட சட்டத்தின் பின்னாலுள்ள அரசின் கொள்கை, அரசியல் அமைப்பு சட்டத்தின் விதிகளுக்கு எதிராக இல்லாத வரையில் , நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடுவது இல்லை.  

சரி ..அவையிலும் விவாதம் நடத்துவதில்லை .. சட்டமான பின்பு பாராளுமன்ற கமிட்டிக்கு இந்த சட்டங்களை ஆய்வுக்கு அனுப்ப சொல்லும் எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏன் அரசு ஏற்பதில்லை? என்றால் அதற்கும் காரணமிருக்கிறது..

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதை நெறிமுறைப்படுத்துவது  சம்பந்தமான சட்ட வடிவு,  ராஜ்ய சபா கமிட்டிக்கு அனுப்பப்பட்டது.  அவர்கள்,  பெரும்பாலும் செய்யும் வடை டீயை குடித்துவிட்டு, "எல்லாம் ஓ கே." என்று கையெழுத்து போட்டார்களா என்றால் இல்லை.  

அவர்களே நாட்டின் பெரிய நான்கு நகரங்களுக்கு சென்று, அங்கு இது சம்பந்தப்பட்ட நபர்களை விசாரித்து, தேசிய மனித உரிமை ஆணையம், குழந்தை நல தேசிய கமிஷன் மற்றும் வெவ்\வேறு நகரங்களில் உள்ள என்.ஜி.ஓக்களை\ தனியாக சந்தித்து இது பற்றி விவாதித்தார்கள். பிறகு ஓரு அறிக்கையை சமர்ப்பித்தார்கள். இதை அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை போலும் !!  இப்போது அதை இரு சபையிலும் வைத்து விவாதம் நடத்த வேண்டும்...

அதனால் இதெல்லாம் தேவையா என்று நினைத்த்ததும் இல்லாமல், இதனை விசாரிக்க நீதிமன்றங்களும் தேவையா என்று நினைக்க ஆரம்பித்து உள்ளது தான் உச்சக்கட்டம். 

இந்த வாரம், உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது ஒரு வழக்கு.  அதை தாக்கல் செய்திருந்தது மத்தியப் பிரதேசத்தின் பார் கவுன்சில். ஜபல்பூரில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில் நீதிபதி இல்லையாம். அப்படியெனில் சாதரணமாக என்ன செய்வார்கள்? நியமனத்தை உடனே செய்வார்கள். ஆனால் அரசு செய்தது என்ன தெரியுமா? அதன் ஆள்வரையை லக்னோவிற்கு மாற்றி மத்திய அரசு உத்தரவை போட, அதை எதிர்த்து போடப்பட்ட வழக்கு தான் விசாரணைக்கு வந்தது. அதில் தான் மீண்டும் தலைமை நீதியரசர் மத்திய அரசின் போக்கு குறித்து தன் அதிருப்தியை தெரிவித்து உள்ளார்.

"15 கடன் மீட்பு தீர்ப்பாயங்களில் தலைவர் அல்லது தலைவர் உறுப்பினர்கள் இல்லை, இந்த காலியிடங்கள் டிசம்பர் 2019 முதல் உள்ளன, ”என்ற நீதியரசர் ரமணா "தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்: என்சிஎல்டி தலைவர் இல்லை, ஒன்பது நீதித்துறை மற்றும் 14 தொழில்நுட்ப உறுப்பினர்கள் காலியிடங்கள் உள்ளன" என்று பட்டியலிட்டுவிட்டு ,நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டதை சுட்டிக்காட்டி " உங்கள் நிலை தான் என்ன என்று சொல்லுங்கள். தீர்ப்பாயங்களை மூடிவிடும் எண்ணத்தில் உள்ளீர்களா?? இந்த விவகாரத்தில் அரசு அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால், உயர் அதிகாரிகளை வரவழைக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதற்கு என்ன தான் தீர்வு?

இதோ தலைமை நீதியரசர் விடுத்த வேண்டுகோளையும் பார்ப்போமே...

"சட்டத்துறையின் சமூகம் , சமூக மற்றும் பொது வாழ்க்கையில், முன்னணியிலும் தீவிரமாகவும் பங்கேற்க வேண்டிய நேரம் இது. உங்கள் தொழில், பணம் சம்பாதிப்பது வசதியாக வாழ்வது போன்றவற்றில் மட்டும் உங்களை கட்டுப்படுத்திக் கொள்ளாதீர்கள், " என்ற அவர் சட்ட சமூக உறுப்பினர்கள் தங்கள் அறிவு, ஞானம் மற்றும் அனுபவத்தை சட்டமியற்றுவதில் பங்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

பார்க்கலாம் ...வலைத்தளத்தில் மட்டும் சொற்போர் புரிந்து கொண்டிராமல், எந்த சுயநலனும் இன்றி, பொதுநலன் ஒன்றே குறியாக, சமூகத்திற்கு கடமையை ஆற்ற எத்தனை பேர் முன்வரப் போகிரார்கள் என்று...??!!.

திங்கள், 6 செப்டம்பர், 2021

அரசு ஊழியர்கள் ஏதேனும் துறை சார்ந்த குற்றங்களில் ஈடுபட்டு பிடிபட்டால், பணி இட மாறுதல் வழங்கப்படுகிறது. இது எப்படி தண்டனையாகும்? இதன்படி பார்த்தால் ஒரு ஊரில் குற்றங்களை செய்யும் ரவுடிகளை வேறு ஒரு ஊருக்கு இடமாற்றம் செய்து விட்டால் போதுமல்லவா?

இது பெரும்பாலோருக்கு உள்ள சந்தேகம் தான்.  ஒரு அரசு ஊழியர் குற்றங்களில் ஈடுபட்டு பிடிபட்டும் பனி மாறுதல் மட்டுமே செய்யப்படுகிறாரே  அது ஏன்?

அரசின் ஊழியராக ஒருவர் நியமிக்கப்ப்படும்போதே, அவருக்கு அரசியல் அமைப்பு சட்டத்தின்311 பிரிவின்  கீழ் அவரின் பணிக்கு பாதுகாப்பு கிடைத்து  விடுகிறது.. ஏனெனில் ராஜாங்க காரியங்களில் அவர் ஈடுபடும்போது தேவையில்லாத இடர்ப்பாடுகள் வருவதை தவிர்க்கவும், அந்த பணியை மேற்கொள்வதால் அவரின் வேலைக்கு யாரும் தீங்கு இழைப்பதை தவிர்க்கவும், அப்போது தான் அவர் தனக்கு கொடுபட்ட பணியை உறுதியுடன் செய்யமுடியும் என்பது தான் அந்த விதியின் பின்னுள்ள காரணம்.

நிறைய அரசு ஊழியர்கள், பிரச்சினை வரக்கூடிய வேலை ஏதும் வந்தால், செய்யாமல் ஒத்திப் போடுவதன் பின்னுள்ள விஷயமும் இது தான்.  ஆனால் அது தவறான அணுகுமுறை.  

அதே போல,  அரசின் தலைமை மாறும்போது, காழ்ப்புணர்ச்சி காரணமாக,  முந்தைய அரசின் தலைமையின் கொள்கையின்படி, சில அரசு அதிகாரிகள், எந்த தவறும் தன மீது இல்லாமல்  , ஒரு நல்ல எண்ணத்தில் ,செய்த பணியில் களங்கம் கற்பிக்கப்படும் அவலமும் நடப்பதுண்டு.  அதுவும் தவறான அணுகுமுறை தான். 

 அதுவே  அவர் சட்டத்திற்கு புறம்பான ஒரு குற்றம் செய்து விட்டார் என்றால், கையும்  களவுமாக பிடித்து விட்டாலும், சிலர் நினைப்பது போல, அவரை பணியில் இருந்து நீக்கி விட முடியாது. அதற்கு என உரிய விசாரனை நடத்தப்பட வேண்டும். 

செய்த காரியம்  குற்றச் செயல் என்றால், காவல் நிலையத்தில் புகார் பதியப்பட்டு, அவர் மீது குற்ற வழக்கு தொடரப்படுகிறது. அதே வேளையில் துறை ரீதியான விசாரணையும் தொடங்கப்படும். இவற்றிற்கெல்லாம் ஆதாரம் சேகரிக்க வேண்டும்.  அந்த அரசு ஊழியர் தொடர்ந்து அதே இடத்தில பணி செய்ய அனுமதிக்கப்பட்டால், இதெல்லாம் சேகரிக்க இயலாது.  அவர் சாட்சி, சாட்சியங்களை கலைக்க இயலும். அதனால் மிக முக்கியமான தருனங்களில், அவர் பனி இடைநீக்கம் செய்யப்படுகிறார்.  அப்படி குற்றம் மேலெழுந்தவாரியாக தெரியவில்லை, விசாரணை நடத்தித்தான் ஆதாரம் எடுக்க வேண்டும் என்றால், அந்த இடத்திலிருந்து அவர் பணி மாற்றம் செய்யப்படுகிறார். 

இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம், குற்ற வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டாலும், அதை காரணம் காட்டி , துறை ரீதியான விசாரணையில் இருந்து விடுவிக்க சொல்லி அவர்  கோர முடியாது. 

அதே போல குற்ற வழக்கில் சந்தேகத்திற்கு இடமின்றி அவர் தான் குற்றம் செய்தார் என்று அரசு  நிரூபிக்க வேண்டும்.  ஆனால் துறை ரீதியான விசாரணையில் அவர் மீது சந்தேகம் எழுப்பக்கூடிய செயல்கள் புரிந்து  இருந்ததாக நிரூபிக்கப்பட்டாலேயே அவருக்கு தண்டனை கிடைக்கும் வாய்ப்பு அதிகம். இவை எல்லாம் அதிகம் வெளியே தெரியாமல் நடக்கும்  போது, குற்றம் செய்த அரசு ஊழியருக்கு கிடைக்கும் மாறுதல் உத்தரவு மட்டும் தான் வெளியே தெரிகிறது. 

இன்னொன்று, மாறுதல் உத்தரவு என்பது ஒரு அரசு ஊழியருக்கு தண்டனை கிடையாது.  அது ஒரு நிர்வாக ரீதியான நடைமுறை. ஒரு அரசு ஊழியரை எத்தனை முறை வேண்டுமானாலும், அரசு அதன் அதிகாரத்திற்கு உட்பட்ட எந்த பணி இடத்திற்கும் மாற்றும் அதிகாரம் உண்டு. 

ஆனால் குற்றங்களை செய்யும் ரவுடிகளின் கதை வேறு. 

அவர்கள் இருக்கும் ஊரிலிருந்து வேறு ஒரு ஊருக்கு இட மாற்றம் செய்வது ? 

யார் அதை செய்வது? 

அத்தோடு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த இடத்திலும் போக வர உள்ள உரிமை என்பது அவனுக்கு உள்ள  அடிப்படை உரிமையல்லவா ...அதை தடுக்கவேண்டும் என்றால் அதை சட்டப்படியானதாக இருக்க வேண்டும்.  

அதற்கு முதலில் அவர் குற்றவாளியா இல்லையா ? அந்த குற்றத்தை அவர் தான் செய்தாரா என்பதை நிரூபிக்க வேண்டுமே? 

அதற்கு தான் அரசு, தன் காவல் துறை சார்பாக அந்த ரவுடிக்கு எதிராக ஒரு குற்ற வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும்.  நீதிமன்றத்தின் அதிகாரத்தின் உள் அது வந்தவுடன், அரசின்  செயல்பாடுகள் எதுவுமில்லை. ஆனால்  அந்த குற்றம் செய்த ரவுடியை ஒரு சிறையிலிருந்து வேறு ஊரில் உள்ள சிறைக்கு மாற்றலாம்.   தண்டனை கொடுக்கப்பட்ட பின்பு கூட, அந்த சிறை தண்டனையை அவர் எந்த சிறையில் இருந்து அனுபவிக்கவேண்டும் என்ற முடிவு செய்யும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உண்டு.  அதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அவர் நீதிமன்றத்தில் தான் முறையிட வேண்டும்.

குற்ற வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம், அவர் குற்றவாளி என்று தீர்மானித்து,  அவர் அந்த ஊரில் இருந்தால், தொடர்ந்து அங்கு சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று முடிவு செய்தால், அவர், அந்த ஊருக்குள் நுழையக் கூடாது என்று ஒரு தடை உத்தரவை போடலாம்.  அது போன்ற மாஜிஸ்திரேட்டு உத்தரவை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களே?

இந்த தடை உத்தரவை , அரசும் கூட.  குற்றம் நடக்காமல் தடுக்கும் முயற்சியில் இருக்கும் போது செய்யலாம். ஒரு குறிப்பிட்ட நபர், அவர் இருக்கும் இடத்திலிருந்து வேறு இடத்திற்கு வந்தால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றால், அந்த எல்லைக்குள் நுழைய முடியாமால் அவரை தடுக்க முடியும். மீறி வருபவரை கைது செய்து அடைத்து வைக்கலாம். ஏன்,  அவர்களை வீட்டுக் காவலில் கூட வைக்கலாம். 

அது வரைக்கும் ஏன் போறீங்க. .. ஒரு நேர்மையான துடிப்பான காவல் அதிகாரி, அந்த காவல் நிலையத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டு இருக்கிறார் என்று கேள்விப்பட்டாலேயே, நிறைய ரவுடிகள் அந்த காவல் நிலைய எல்லையை விட்டு இடம் மாறி விடுகிறார்கள் என்பது தான்  நிதர்சன உண்மை!!

 




வியாழன், 2 செப்டம்பர், 2021

குத்தகைதாரர் தனது வாடகையை செலுத்தவில்லை. அக்கம் பக்கத்தினருக்கும் அவர் தொல்லை. வன்முறையைப் பயன்படுத்தாமல் அல்லது நீதிமன்றத்திற்குச் செல்லாமல் அவரைக் காலி செய்ய என்ன முறைகள் பயன்படுத்தப்படலாம்?

 நீதிமண்றத்திற்கு செல்லாமல்?

ஒரு பிரச்சினையை தீர்க்க, சாம தான பேத, தண்ட முறைகளை பயன்படுத்த சொல்லினர் சான்றோர்.இன்றளவும் நிறைய பிரச்சினைகள், நீதிமன்றம் போகமலேயே தீர்க்கப்பட்டுள்ளன.

இதில் முதல் வகையான சாமம்…அதாவது சமாதானம் பேசுவது என்பதை ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றம் வளாகத்தில் உள்ள இலவச சட்ட சேவைகள் மையம் செய்கிறது.அவர்கள் செய்யும் சேவைகள் குறித்து தகவல் பெற,

http://www.tnlegalservices.tn.gov.in/pdfs/TNSLSA_Information_Booklet.pdf

நீங்கள் உரிய தகவலுடன் மனு செய்தால், அதை பரிசீலித்து, குத்தகை தாரருக்கு நோட்டீஸ் அனுப்புவார்கள். மேலும் ஒரு வழக்கறிஞரை மத்தியஸ்தம் செய்து வைக்க நியமிப்பார்கள். இதற்கு நீங்கள் பணம் எதுவும் செலுத்த வேண்டாம்.இது ஒரு இலவச சேவை.இரண்டு தரப்பு பக்கமும் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து, ஒரு நல்ல முடிவு சமாதானமாக எடுக்க வைப்பார்கள்..அதற்கு சட்ட அங்கீகாரம் உண்டு. இரண்டு தரப்பிலலும் சமாதானமாக எடுக்கப்பட்டதால், மேல்முறையீடு எதுவும் செய்ய முடியாது.இரண்டு தரப்பிலும் வின் வின் நிலை என்பதால் உறவும் சீர்கேடாது.

இதன் தலைமையகமான தமிழ்நாடு ஸ்டேட் லீகள் சர்வீஸ் அத்தாரிட்டி வலைத்தளதளத்திற்கு சென்று, நாம் பெறக்கூடிய இலவச சேவைகள் குறித்து அறியுங்கள்.

Tamil Nadu State Legal Services Authority

சனி, 28 ஆகஸ்ட், 2021

அர்ச்சகர் நியமனத்தில் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது தொடர்ந்து புதிய அர்ச்சகர்கள் பணியமர்த்துவது நீதிமன்ற அவமதிப்பாகாதா?

 எத்தனையோ கால கனவு அது தி.மு.க அரசுக்கு...

அதுவும் தந்தையின் திட்டத்தை நிஐஐவேற்ற கிடைத்த அரிய வாய்ப்பாக தான், இதை பார்க்கிறது.

விருப்பமுள்ள அனைத்து சாதியினரையும் கோவில் பூசாரிகளாக நியமிக்கும் தேர்தல் வாக்குறுதியை அமல்படுத்தி,  அரசு சமீபத்தில்  பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 24 பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை கோவில்களில்  நியமித்தது.


 இந்த நியமனம் செய்ய  நாளிதழகளில் விளம்பரம் வெளியான உடனேயே அதை எதிர்த்து  கோயில்களில் பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். வழக்கில் தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டு, ஒத்திவைக்கப்பட்டது. இது நடந்தது ஆகஸ்ட் 9.. ஆனால் அதில் இருந்து ஒரு வாரம் கழித்து  சுமார்   58 பேருக்கு அர்ச்சகர், ஓதுவார் பணி நியமன உத்தரவுகளை முதல்வர் வழங்கியுள்ளார்..இது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா என்ற கேள்வி தான் எல்லோரையும் சுற்றி வருகின்றது.

உண்மையில், இது போன்ற நியமனம் செய்த விவரத்தை அரசும் அந்த வழக்கின் அடுத்த விசாரணையின் போது தெரிவித்து உள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை அரசே மீறியதும் இல்லாமல், அதை நீதிமன்றத்திலேயே தேர்வித்துள்ளதே  நீதிமன்ற உத்தரவை அவமரியாதை செய்த தண்டனைக்குள்ளாகாதா..ஏன் நீதிமன்றமும் உடன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது என்று கேள்வி எழலாம்.

இங்கே தான் சட்ட நுண்ணிய கூராய்வு தேவைப்படுகிறது. அரசு தாக்கல் செய்த அறிக்கையில், அர்ச்சகர் ஆக முறையாக பயிற்சி பெற்று முடித்தவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று சொல்லியுள்ளது

.அந்த பயிற்சியும், வேத பாடசாலையிலோ அல்லது அரசு நடத்தும் மையங்களிலோ முடித்திருக்கவேண்டும் என்ற தகுதி கொண்டவர்கள் தான் விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரத்தில் குறிப்பிட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசை பொறுத்த வரை, பிராமணர்களின் கைகளுக்குள் இருந்து விடுப்பதன் ஒரு அங்கமாக, அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவது என்ற தந்தை பெரியாரின் கனவை நிறைவேற்றுவது தங்கள்  கொள்கை என்ற நிலைப்பாடு உள்ளவர்கள். அதுவும் இது முதல்வருக்கு அவர் தந்தையால் கூட நிறைவேற்ற முடியாமல் தவற விட்ட ஒரு அம்சம் என்பதால்,  மாநிலம் முழுவதும் உள்ள இந்து கோவில்களில், இந்த பணி நியமனம் செய்தது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கின்றனர்..

1970 களில் கலைஞர் தன் பதவிக் காலத்தில், கொண்டு வந்த திட்டம் இது..இப்போது தான் அது நிறைவேறும் நிலையை எட்டியுள்ளது.அவர் பிள்ளை முதல்வர் ஸ்டாலின் சொல்வது போல, "பெரியாரின் இதயத்தில் குத்தியிருந்த முள்" இது.

, அப்போதைய மு தல்வர் களைஞரால் கொண்டு வரப்பட்டு அந்த சட்டம், இரண்டு வருடம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. மாண்புமிகு உச்ச நீதிமன்றம், அது செல்லாது என்று விட்டது..

ஏன்?

அதை  பற்றி தெரிந்துக் கொள்ள, சற்று பின்னோக்கி போவோம்.

தமிழ்நாடு இந்து மத மற்றும் அறநிலையச் சட்டம் 1959 இல் இயற்றப்பட்டது.. அதன் மூலம் இந்து கோவில்கள் அரசின் நிர்வாகத்தின் கீழ கொண்டுவரப்பட்டது.. எந்த மதத்திற்கும் பொதுவாக இருக்கவேண்டிய ஒரு அரசு, அதுவும் மதசார்பின்மையை தன் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்பிலேயே கொண்ட ஒரு நாட்டின் மாநில அரசு, ஒரு குறிப்பிட்ட மதம், அதுவும் பெருன்பான்மை மக்கள் பின்பற்றும் மதத்திற்கு உரிய கோயில்களை நிர்வகிக்க ஏன் முடிவு செய்தது? அதை நீதிமண்றங்களும் எப்படி அனுமதிக்கின்றன? அது தனி வரலாறு.அதை இநன்னொரு பதிவில் பார்ப்போம்.

இந்த தமிழ்நாடு இந்து மத மற்றும் அறநிலையச் சட்டம் 1959,  வந்த போது, இந்து கோவில்களில் பூசாரிகள் பரம்பரையாக பூஜை செய்து வந்தனர். அவர்களை அப்படியே நியமனம் செய்ய சட்டம். அனுமதித்தது.  

இதை தான், 1971 ஆம் ஆண்டில், தமிழ்நாடு அ ரத்து செய்து, இந்து கோவில்களில் சாதி வேறுபாடின்றி யாரையும் அர்ச்சகராக அனுமதித்து சட்டத்தை திருத்தியது.  

இதை எதிர்த்து சேஷம்மாள் என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் (1972), சட்டத்தில் செய்யப்பட்ட  மாற்றங்களை  ரத்து செய்தது.  அத்தொடு பூசாரிகளின் பரம்பரை நியமனங்களையும்  ரத்து செய்தது.  இருப்பினும், கோவிலை நிர்வகிக்கும் ஆகம விதிகளின் அடிப்படையில் அந்த நியமனங்களை நீதிமன்றம் அனுமதித்தது.  பின்னர், ஆதித்தாயன் வழக்கில் (2002), உச்சநீதிமன்றம், மத ரீதியான பதவிகளுக்கான நியமனங்களில் சாதி ஒரு காரணியாக இருக்க முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்தியது.

2006 ல் ஜெயலலிதாவை தோற்கடித்து  ஆட்சிக்கு வந்த கலைஞர் கருணாநிதி, இந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தார். இந்த முறை,  வெகு கச்சிதமாக, " சாதி, மதம், பழக்கம் அல்லது பயன்பாடு பாகுபாடு இல்லாமல் "தகுந்த பயிற்சி பெற்ற மற்றும் தகுதி வாய்ந்த இந்துக்கள்" தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் கோவில்களுக்கு அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம்." என்றது அவசர சட்டம்.  .கூடவே போடப்பட்ட நிர்வாக உத்தரவு ஒன்று " தேவையான தகுதி மற்றும் பயிற்சி பெற்ற எந்த இந்து நபரும் இந்து கோவில்களில் அர்ச்சகராக நியமிக்கப்படலாம்." என்றதுஇதற்காக பயிற்சி வகுப்புகள் அரசின் மையங்களில் தொடங்கப்பட்டன.

ஆனால் அந்த அவசர சட்டம்,  சட்டசபையில் வைத்து சட்டமாக்கப்படாமல் விடுபட்டது. அந்த நிர்வாக உத்தரவை மட்டும் எதிர்த்து போடப்பட்ட வழக்கில்,  ஏறக்குறைய ஒரு பத்து வருட கால சட்டப் போருக்குப் பிறகு, மாண்புமிகு உச்சநீதிமன்றம் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு அனுமதி அளித்தது ஒரே நிபந்தனை..

அவர்கள், பயிற்சியின் மூலம்  உறுதி செய்யப்பட்டால்.

ஆனாலும் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. அந்த உத்தரவு தமிழ்நாட்டில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. இப்போது இந்த பணி நியமனங்கள் ஏற்பட்டபிறகு தான் பெரிய விவாதங்கள் ஆரம்பித்துள்ளன.

இத்தனைக்கும் முந்தைய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையலான அரசே , அர்ச்சகர் பயிற்சி முடித்த பத்து வருடங்களாக பணிநியமனம் இல்லாமல் இருந்த இந்த 207 நபர்களில் சிலருக்கு பணி உத்தரவு போட்டுள்ளது. 2018ல் நியமிக்கப்பட்ட மதுரை மாரிச்சாமி தான் அரசால் கொடுக்கப்பட்ட  பயிற்சி பெற்று நியமனமான முதல், பிராமணரல்லாத அர்ச்சகர்.

இன்றைய தேதியில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கும்போது, அரசு மேற்கொண்டு பணிநியமனங்களை செய்துக்கொண்டு போவதற்கு, அவர்கள் காட்டும் அந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன?

இப்போது மனு போட்ட   ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் தான் அப்போதைய வழக்கிலும் மனுதாரர்கள். தமிழக அரசையும் அறநிலையத்துறையையும்  எதிர் பார்டியாக உள்ள வழக்கு அது.

 அவர்கள், சேஷம்மாள் வழக்கில் தீர்ப்பு இட்டது ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் என்பதால், அந்த பெஞ்சின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் கட்டுப்பட வேண்டும் என்று               வாதிட்டனர்.  

அவர்களின் கூற்றுப்படி, அர்ச்சகர்களை  நியமிப்பது என்பது புனிதமான ஒன்று, ஆகமங்களில் அது சம்பந்தமான தொகுதிகளில் இருந்து விலகுவது என்பது அந்த மதத்தை பின்பற்றும் அவர்களுக்கு உள்ள அரசியலமைப்பு  சட்டப்பிரிவு 25 மற்றும் 26 ன் கீழ் அவர்களின் உரிமைகளை என்று வாதிட்டனர்.

சேஷம்மாள் வழக்கில் உச்சநீதிமன்றம்,  ஒரு சைவ அல்லது வைஷ்ணவர் கோவிலில் அர்ச்சகரின் நியமனம் அந்த கோவில்களை நிர்வகிக்கும் ஆகமங்களின் வழிகாட்டுதல்களின்படி ஒரு குறிப்பிட்ட பிரிவினர், பிரிவு அல்லது குழுவிலிருந்து செய்யப்பட வேண்டும்." 

"அவ்வாறு செய்யத் தவறினால் அது, பிரிவு 28 (1) Hr&ce சட்டத்திற்கு  முரணானது மட்டுமல்லாமல், ஒரு மத நடைமுறையில் தலையிடுவதாகவும், இதன் தவிர்க்க முடியாத மோசமான விளைவு ஏர்படுத்தும்"என்றது

தன் தரப்பு நியாயமாக, மேலே சொன்ன ஆதித்தாயன் வழககை அரசு  மேற்கோள் காட்டியது அந்த வழக்கில் கேரள அரசு அப்போது அங்கிருந்த ஒரு சிவன் கோவிலில் பிராமணர் அல்லாத ஒருவரை அர்ச்சகராக நியமித்ததை எதிர்த்து போடப்பட்ட வழக்காகும்  அதன்படியும் சமூக நீதி மற்றும் நாட்டு நலன் என்னும் அரசியல் சாசன கடமையின்படி தான் அந்த உத்தரவு இடப்பட்டது.அதில் தவறு ஏதும் இல்லை என்று வாதிட்டனர்..

அந்த வழக்கின் தீர்ப்பு தான், அரசுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய டிரம்ப் கார்டு. 

வழக்கின் தீர்ப்பில், அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் கோகாய் தலைமையிலான பெஞ்சு, 

  • ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த/ அல்லது வழிபாட்டுமுறை கொண்டவர்கள் தான் பூஜை  செய்யும் அர்ச்சகராக நிடமிக்கப்படவேண்டுமா, அவர்களுக்கு தான் அது தனிப்பட்டஉரிமையா என்பது குறித்து  ஆகமங்கள் ஏதும் சொல்கின்றனவா  என்பது குறித்து சேஷம்மாள் வழக்கில் ஏதும் குறிப்பாக இல்லை.
  • ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவரை விடுத்து, மற்ற ஒரு பிரிவை அர்ச்சகராக நியமிப்பதற்கு, அவர் பிறப்பு மற்றும் இனம் மட்டும் காரணமில்லை  எனில், அரசியல் அமைப்பு சட்டத்தின் சமஉரிமை கொடுக்கப்படவில்லை என்று கோர முடியாது.
  • இருந்தாலும் ஆகம்விதிகளுக்கு உட்பட்டு பயிற்சி பெற்றவர் தான் நியமிக்கப்படவேண்டும்.
அதனால் தான் அரசு, திரும்ப திரும்ப இந்த நியமனங்கள் அனைத்தும் ஆகமப்படியே நடக்கின்றது என்கின்றது. 

அப்படியானால் ஆகமம் தான் என்ன? என்ற கேள்வி நமக்குள் எழுகிறது இல்லையா?

ஆகமம் என்பது, இந்து கோவிலின் மதசடங்குகள்   விவகாரங்களை நடத்தும் புனித நூல்களின் தொகுப்பு என்கின்றனர்..



இந்த பணி நியமங்களை எதிர்ப்பவர்கள் சொல்லும் காரணம் என?
அர்ச்சகர்கள் தீட்சை பெற்ற  பிறகே தங்கள் குருவிடம் இருந்து பயிற்சி பெறுவர்.இந்த தீட்சை அளிப்பது என்பது "ஆகமங்கள்"  படியென்பர். 
இந்த நியமனங்கள் ஆகமப்படியானது அல்ல என்கின்றனர்.

நீதிபதி மஹாராஜன்  கமிட்டி 1982ல் கொடுத்த அறிக்கையில், "கோயிலில் பூசை செய்பவர்கள் ஊதியம் பெறக்கூடாது, அது ஆகம  விதிக்கு எதிரானது" என்று சொல்லியுள்ளதாக கூறுகிண்றனர்.

எவை எல்லாம் ஆகமம் என்பது குறித்து தெளிவான விதிமுறைகள் இல்லை..

எனவே  ஆகமவிதிகளின் படி தான் நியமனங்கள் நடந்துள்ளனவா என்று நீதிமன்றம் தான் சொல்லவேண்டும்.

..




செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

மோட்டார் சைக்கிளை இயக்கும் போது கிடைக்கும் பேரானந்தம் பி.எம்.டபிள்யூ கார் இயக்கினாலும் கிடைப்பதில்லை, அது ஏன்?

 வண்டியோட்டுவதில் அவனை பெரிய ஜித்தன் என்று தான் அவன் நண்பர்கள் சொல்வார்கள்..

எத்தனை நண்பர்களிடம் கடன் வாங்கி வண்டியோட்டி அதில் வித விதமாக சாகசம் செய்வதில் அவனுக்கு நிகர் இல்லை தான்.. ஆனால் என்ன. ...அப்பாவிடம் கேட்டு கேட்டு பார்த்தும் அவனுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கித் தர அவர் ஒத்து கொள்ளவே இல்லை.

அவனுக்கு பொறுப்பே இல்லையாம். வேகமாக ஓட்டுகிறானாம்..இப்படி ஏதோதோ சொல்லி தட்டி கழித்து கொண்டே வந்தார்.

கடைசியாய் ஒரு வழியாய் அவரை சமாளித்து, கெஞ்சி, கொஞ்சி, வண்டி வாங்கியாகிற்று.

அதுவும் அவன் ஆசைப்பட்ட மாதிரியே....

இந்த வண்டி தான் வேனும்னு  வாங்கித் தரச் சொன்னால் அப்பா அதற்கு கூட ஒரு  விமர்சனம் செய்தார்..."இதென்னடா ஏதோ மாடிக்கு ஏறுற மாதிரி இருக்கே"ன்னு

எப்படியோ வாங்கியாயிற்று.//

இன்று தான்  முதல் முதலாக வண்டியை எடுத்து கொண்டு கல்லூரிக்கு போகப் போகிறான்.

ஆனந்த கனவுகளில் நுழைந்தபடி, வண்டியை இயக்கினான். வழக்கமான பாதையில் வந்து கல்லூரியை நெருங்கும் சமயம் தான் அவளைப்  பார்த்தான்..

அவளும் அதே கல்லூரி தான். எத்தனையோ நாள் அவள் முன்னால,  வண்டியை ஒட்டிக் கொண்டு வேகமாக போனாலும், அவள் அவனை கவணித்ததாகவே தெரியவில்லை. மற்ற பென்கள் எல்லாம் இவன் வண்டியில் அமர்ந்து முன் சக்கரத்தை தூக்கியபடி வண்டியோட்டுவதை பார்த்து ஆச்சரியப்பட்டு வாய் பிளந்து நிற்கும்போது அவள் மட்டும் அதை பார்த்தது போலவே இருக்காது.

இன்று எப்படியும் அவளை திரும்பிப்  பார்க்க வைத்து விடுவது என்ற முடிவுடன் கியரை முறுக்கினான். வண்டி வேகமெடுத்தது...சரியாக அவள் அருகில் நெருங்கும்போது. வண்டியின் முன்சக்கரத்தை தூக்க எத்தனித்த போது...ஐயோ ... ஏதோ தவறாகி விட்டதே என்று இவன் நினைக்கும்போதே...பெரும் சத்தத்துடன் வண்டியுடன் சேர்ந்து இவன் தூக்கி வீசப்பட்டான்...

அவள் அனிச்சையாய் திரும்பி பார்த்தாள்...

மோட்டார் சைக்கிளை ஓட்டும்போது கிடைக்கும் த்ரில் இருக்கே ...யாரும் செய்யத் தயங்குவதை நாம் செய்கிறோம் என்பதும் அது எல்லோரின் கவனத்தை கவர்வதும்......அது தான் இளையவர்களை கவர்வது.

அதுவும் இந்த சென்னையில் ஏற்கெனவே நெரிசல் மிகுந்த சாலையில்,சர்... புர்ர்ரென்று இவர்கள் அதிவேகமாக புகுந்து ஓட்டிப் போவதை பார்க்கும் போது உண்மையிலேயே பயமாக இருக்கும். பார்க்கும் நமக்கு இவ்வளவு பயம் இருக்கிறதே. அதெப்படி ஓட்டும் இவர்களுக்கு இருப்பதில்லை என்று யோசித்து பார்த்திருக்கிறேன். 

"இளங்கன்று பயமறியாது" என்பதில் எல்லாம் நம்பிக்கையில்லை.

நானும் முன்னர் வண்டியை வேகமாக ஓட்டியிருக்கிறேன் தான். இப்போது குறைத்திருக்கிறேன்.. வேறு எதற்கு...அடிபட்டால் ஏற்படும் விளைவை எண்ணி...😇

அதுவெல்லாம் இவர்களுக்கு தெரியாமலா இருக்கும்...இருந்தும் ஓட்டுகிறார்கள் என்றால்...அதி வேகமாக  காற்றை கிழித்து கொண்டு ஓட்டும்போது, முகத்தில் அறையும் அந்த காற்று....அது தான் அவர்களுக்கு பேரானந்தத்தை கொடுக்கிறது போல...

அது ஒரு வித மாதிரியான போதை மட்டுமல்ல. அவர்களின் இயல்பே அதுவாகத் தான் இருக்கும். 

உண்மை தான்...

அந்த விளையாட்டு(??) வீரர்கள் எல்லாரின் ஜாதகத்தை பார்த்தால் அவர்கள் மிதுனம், துலாம், கும்பம்  காற்று ராசிகள் லக்கினமாகவோ ராசியாகவோ கொண்டவர்களாக இருப்பார்கள்.

நமக்கே தெரியும்.....

பஞ்ச பூதங்களை கிரகங்கள் தான் ஆட்சி செய்கின்றன என்பது விஞ்ஞான அடிப்படையில் நிரூபிக்கபட்டுள்ளனது. மேஷம், சிம்மம்,தனுசு நெருப்பு ராசிகள். ரிஷபம், கன்னி,மகரம் நில ராசிகள். மிதுனம், துலாம், கும்பம் காற்று ராசிகள். கடகம் , விருச்சிகம் , மீனம் நீர் ராசிகள்,

இந்த பஞ்சப் பூதங்களை உள்ளடக்கிய நம் உடலில் நம் பிறந்த லக்கினத்திற்கேற்ற பூதமே ஆட்சி அதிகம் புரியும் என்பதும் உண்மை தானே..

அதனால் தான் காற்று இராசியான மிதுனம், துலாம், கும்பம் ராசிகளை இலக்கினமாக கொண்டவர்களுக்கு காற்றில் வேகமாக போக அல்ல... பறக்கப் பிடிக்கும்.

நான் சிம்ம லக்கினம் . நெருப்பு இராசி.  மற்றவர்கள் எல்லாம் "ஐயோ கொதிக்குதே|ன்னு சொல்லிப் பிடிக்க முடியாமல் காபி டம்ளரை கீழே வைத்து விட்டு நிமிர்வதற்குள் நான் குடித்தே முடித்து விட்டு கீழே வைப்பேன்..நெருப்பு கோழி போல...😅

அந்தந்த  இலக்கினங்களின் குணாதிசயம் இயல்பாகவே நமக்கு அமைய பெற்றிருக்கும்.

கார் எந்த விலை உயர்ந்ததாக இருந்தால் என்ன...அதை  ஓட்டுவதை விட மோட்டார் சைக்கிளில் அப்படி ஓட்டுவது தான் இந்த வகை ஆட்களுக்கு பிடிக்கும் என்றேனே..

அது மற்றவரின் கருத்தை கவரவேண்டும் என்பதற்காக சைலென்சரை எடுத்து விட்டு விடுவது, வினோதமான ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்களை பொருத்திக்கொள்வது, ஜிக் -ஜாக்கென்று ஓட்டுவது என்று யாரை கவர்கிறார்கிலோ இல்லையோ, போக்குவரத்து போலிசாரின் கண்ணில் படத் தவறுவதில்லை!!

ஆனால் ..இது போன்ற சிறு சிறு தவறுகள் தானே என்று விளையாட்டிற்காக செய்வது, ஏதேனும் ஒரு சாலை விபத்தில், அது ஒரு உயிரின் பலி கொள்வதில் கொண்டு போய் நிறுத்தும்.  எப்போது ? 

ஜாதகத்தில் ஆறுக்குடைய  அதிபதி சுபத்துவமோ சூட்சம வலுவோ இல்லாது இருக்கும்போது , அதன்   அல்லது அதனுடன் தொடர்பு கொண்ட கிரகத்தின் தசா புத்தி நடந்துக் கொண்டிருக்கும்போது ..

பழைய காலம் போலில்லை...நான் ஒட்டி மாட்டிக்கொண்டால், வேறு ஒருத்தரை கொண்டு போய் நிறுத்திவிடலாம் என்பதற்கு.  எல்லோர் கையிலும் காமிராவுடன் கூடிய போன் இருக்கிறதே!! அத்தோடு ஆறாம் அதிபதி தன் காரகத்துவமான வம்பு, வழக்கு என்று சிவப்பு கட்டிடத்திற்கு நம்மை இனிதே அழைத்து செல்வார்!!

அப்போதும் பேரானந்தம் இருக்குமா??

புதன், 18 ஆகஸ்ட், 2021

ஜோதிடம் என்பது ஒரு அறிவியலா?

 இதே சந்தேகம் உங்களுக்கு மட்டுமல்ல பி.எம்.பார்கவாவிற்கும் வந்தது..அதுவும் அவர் எப்பேர்ப்பட்டவர் ..தெரியுமா?

டாக்டர் பார்கவா, செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையததின் தோற்றுவித்தவர்/இயக்குனர்..எண்ணற்ற விருதுகள் வாங்கியவர்.இதை எல்லாம் விட முக்கியம் , ஆராய்ச்சிகள் மூலம் அறிவியலில் அவர் ஆற்றிய பங்கிற்காக, 1986ல் பத்ம பூஷன் அவார்டு வாங்கியவர்..

2000 வருட வாக்கில் யு.ஜி.சி ஜோதிட அறிவியல் " என்ற பி.எஸ்.சி., எம்.எஸ்.சி.எண்ற புது கோர்ஸை 2001 கல்வியாண்டில் வர இருப்பதாக அறிமுகப்படுத்தி, நிதி ஒதுக்கீடு செய்ததை பார்த்து பொறுக்காமல், உடனே ஆந்திரா உயர்நீதிமண்றத்தில், "ஜோதிடம் ஒரு அறிவியல் கிடையாது..அதனால் அந்த கோர்ஸை துவக்க தடை விதிக்க வேண்டும்" என்று ஒரு ரிட் போட்டார்.அவருடன் அதில் இணைந்தவர்களில் ஒருவர் உஸ்மானியா பல்கலைக்கழக அரசியல் அறிவியல்(?!) துறையின் பேராசிரியர் சுபாஷ் சந்திர ரெட்டி..

அவர் வைத்த வாதங்களையே பாருங்கள்..

  • வேத ஜோதிடத்தின் பாடத்திட்டத்தை அறிவியல் படிப்பு என்று அழைக்க முடியாது, ஏனெனில் ஜோதிடம் ஒருபோதும் அறிவியலாக கருதப்படவில்லை. அறிவியல் என்பது அறிவியல் முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பெறப்பட்ட அறிவு என வரையறுக்கப்படுகிறது அத்தகைய அறிவின் பண்புகளில் தவறுகள் சரிபார்ப்பு மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய தன்மை அடங்கும். விஞ்ஞான உண்மைகள் தனிநபர்களின் விருப்பங்களையும் விருப்பங்களையும் சார்ந்தது அல்ல.
  • அது தவிர அறிவியல் என்பது சர்வதேசமானது. கருத்து வேறுபாடுகள் எழும் போது, ​​உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் அவற்றைத் தீர்க்க நேர்மையாகவும் விடாமுயற்சியுடனும் வேலை செய்கிறார்கள்.
  • மேலே குறிப்பிட்டுள்ள அம்சங்கள் இல்லாததால், ஜோதிடத்தை ஒரு விஞ்ஞானமாக கருத முடியாது. கடுமையான அறிவியல் நடைமுறையின்படி நடத்தப்பட்ட எந்த அறிவியல் ஆராய்ச்சியோ அல்லது ஆய்வோ அதை ஆதரித்ததில்லை..
  • "ஜோதிர் விக்யான்" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துவது, கல்வியை காவி மயமாக்குவதற்கும், உயர் கல்வியில் இந்துத்வா மதிப்புகளை திணிப்பதற்கும் அவர்களின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலைத் தூண்டுவதற்கான ஒரு தெளிவான முயற்சியே.
  • தூய அறிவியல் துறைகளில் நிதி தேவைக்காக ஆராய்ச்சி பாதிக்கப்படுவதாகவும், எனவே வேத ஜோதிடம் என்ற போலி அறிவியலுக்கு பெரும் தொகையை செலவழிப்பதில் எந்த நியாயமும் இல்லை, இது ஒரு பெரிய பாய்ச்சலாகும்."

இது தான் அவர்கள் முன்வைத்த வாதங்கள்..ஆனால் ஆந்திர உயர்நீதிமண்றம், "மேற்கொண்டு இந்த பாடம் சம்பந்தப்பட்ட அறிதல் மாணவருக்கு தேவை என நிபுணர் குழு கருத்துக்கு பின்னே அரசு எடுத்திருக்கும் இந்த கொள்கை முடிவில், அதுவும் இன்னமும் முடிவாகாத நிலையில் தலையிட முடியாது" என்று தள்ளுபடி செய்துவிட்டது..

நம் விடாக்கண்டன் டெல்லிக்கு போனார்.மத்திய அரசிடம் அல்ல. உச்ச நீதிமன்றத்துக்கு..அங்கு அமெரிக்கா போன்ற பல நாடுகளின் நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி இறையாண்மை தத்துவத்துக்கு எதிராக இந்த "போலி "அறிவியலை புகுத்தி, தங்கள் இந்துத்துவா கொள்கையை மாணவர் மனதில் பதிக்க விடக்கூடாது என்றனர்.

அப்போது நடந்த வாதப்போரின் சமயம்,ஜோதிடம் என்றால் அகராதிகள் தரும் விளக்கம் ஆராயப்பட்டது.

  • "விண்மீன்களின் அறிவியல் அல்லது கோட்பாடு, முன்பு வானியலுக்கு சமமாகப் பயன்படுத்தப்பட்டது, ஆனால் இப்போது போலி அறிவியலுக்கு அர்த்தத்தில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள இது மனித விவகாரங்களில் சந்திரன், சூரியன் மற்றும் நட்சத்திரங்களின் ஒப்பீட்டு நிலைகளின் செல்வாக்கைப் படிப்பதன் மூலம் எதிர்காலத்தை முன்னறிவிப்பதாகக் கூறுகிறது. " [வெப்ஸ்டரின் புதிய சர்வதேச அகராதி]
  • "பூமி மற்றும் நிலையான நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் மற்றும் கிரகங்கள் ஆகியவற்றை கவனிப்பதன் மூலம், சில நேரங்களில் விரிவான மற்றும் சில சமயங்களில் செயல்பட்டுள்ள. மனித நிகழ்வுகளை முன்னறிவிக்கும் ஜோதிடம் ஒரு விஞ்ஞானம் அல்லது போலி அறிவியல்",
  • ஒரு விஞ்ஞானமாக, ஜோதிடம் என்பது "பூகோள விவகாரங்களில் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் செல்வாக்கைப் பற்றிய சரியான புரிதல் என்று நம்பப்படுவதன் மூலம் தனிநபர்கள், குழுக்கள் அல்லது நாடுகளின் தலைவிதியை கணிக்க அல்லது பாதிக்க பயன்படுத்தப்படுகிறது.
  • ஒரு போலி விஞ்ஞானமாக, ஜோதிடம் நவீன மேற்கத்திய அறிவியலின் கண்டுபிடிப்புகள் மற்றும் கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானது என்று கருதப்படுகிறது.

அறிவியல். [என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா (2 வது பதிப்பு)] "

பின்.உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சாராம்சம் இதோ.

  • மேற்கூறிய நிலையான புத்தகங்களின்படி, ஜோதிடம் என்பது ஒரு விஞ்ஞானமாகும், இது எதிர்காலத்தை முன்னறிவிப்பதாக அல்லது மனித விவகாரங்களில் சந்திரன், சூரியன், கிரகங்கள் மற்றும் பிற நட்சத்திரங்களின் தொடர்புடைய நிலைகளின் செல்வாக்கைப் படிப்பதன் மூலம் கணிப்புகளைக் கூறுகிறது. ஆகையால், அவற்றின் நிலைகள், அளவுகள், இயக்கங்கள் மற்றும் தூரங்கள் போன்றவற்றைப் படிக்க வேண்டும். வானியல் ஒரு தூய அறிவியல். இது பண்டைய இந்தியாவில் ஒரு பாடமாகப் படிக்கப்பட்டது மற்றும் மேற்கத்திய உலகில் எவரும் ஒரு பாடமாகப் படிப்பதற்கு முன்பே இந்தியா சிறந்த வானியலாளர்களை உருவாக்கியுள்ளது. ஜோதிடம் என்பது சூரியன், பூமி, கிரகங்கள் மற்றும் பிற வான கிரகங்களின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இது ஓரளவாவது அறிவியலின் படிப்பாகும்."
  • நிபுணர்களின் கருத்து படியே இந்த கல்வி தொடங்கப்பட்டுள்ளது.. நீதிமன்றம் நிபுணர் அல்ல.
  • 'ஜோதிர் விக்யான்' கற்பித்தலை எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தின் போதனையுடன் எந்த சூழ்நிலையிலும் சமப்படுத்த முடியாது. எனவே, அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை கருத்தை மீறும் அல்லது பாதிக்கும் என்ற அடிப்படையில் ஜோதிர் விக்யானை ஒரு பாடநெறியாகச் சேர்ப்பதை எதிர்பதற்கான எந்த தகுதியும் இல்லை, நிராகரிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். .
  • இதே போன்ற ஒரு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் எதிர்கொண்டுள்ளது.டாக்டர் நடராஜன் தொடர்ந்த இதே போன்ற வழக்கில், "சம்பந்தப்பட்ட மாணவர் தனது எதிர்கால வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக ஏதேனும் ஒரு குறிப்பிட்ட துறையையோ அல்லது பாடத்தையோ தேர்ந்தெடுக்கக் கூடிய சுதந்திரம் வேண்டும், ஒரு பாடத்தின் அடிப்படையோ அல்லது சில வழிபாட்டு முறையினர அதை கண்டுபிடித்ததாலோ, அது குறிப்பிட்ட மதத்தின் பிரச்சாரத்தை மட்டுமே விளைவிக்கும் என்று கருத முடியாது. என்று ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மெட்ராஸ் உயர் நீதிமன்றம் எடுத்த கருத்துடன் நாங்கள் உடன்படுகிறோம்."
https://indiankanoon.org/search/?formInput=astrology%20is%20science

இந்த தீர்ப்பு வந்தது 2004ல்..

2011ல் ஒரு பொதுநல வழக்கு ஒன்று ஒரு என்.ஜி.ஓவால், பம்பாய் உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டது..

என்னவென்று?

போலியான நியுமரால்ஜிஷ்ட, வாஸ்து நிபுணர், தாந்தரீகர்கள், கைரேகை நிபுணர், ஜோசியர் என்று. அவர்கள் சொல்வது போல, பெயரை, இடத்தை மாற்றினால், உடனே அவர்கள் வாழ்வில் மேஜிக் நடக்கும் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள்.. அவர்கள் மீது மருந்துகள் மற்றும் மருத்துவ தீர்வுகள் சட்டம் (ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள்) கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று!!

ஆனால் மத்திய அரசு அதை மறுத்து, "இந்த சட்டம் மருந்துகள் மற்றும் மாய பரிகாரங்கள் தொடர்பான தவறான விளம்பரங்களை தடை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜோதிடம் மற்றும் கைரேகை, வாஸ்து சாஸ்திரம் போன்ற தொடர்புடைய அறிவியல்களுடன் தொடர்புடையது அல்ல, அதைக் கருத்தில் கொண்டு, மனுதாரரால் கோரப்பட்ட ஜோதிடம் மற்றும் தொடர்புடைய அறிவியலை ஊக்குவிக்கும் நடைமுறைகளுக்கு தடை விதிக்க முடியாது" என்று சொல்லியதோடு நில்லாமல், "ஜோதிடம் என்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல் அது 4000 ஆண்டுகள் பழமையானது " என்றது..

மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ஜோதிடம் தொடர்பான பிரார்த்தனையைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே இந்த பிரச்சினையை பரிசீலித்து "ஜோதிடம் ஒரு அறிவியல்" என்று தீர்ப்பளித்துள்ளது.அத்தோடு ஜோதிட அறிவியலை பாடத்திட்டத்தில் சேர்க்கலாமா என்று பரிசீலிக்குமாறு 2004 இல் நீதிமன்றம் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இந்த நீதிமன்றம் கட்டுப்பட்டது" என்று,

Astrology is a science: Bombay HC | India News - Times of India

இவ்வளவு கற்றறிந்தவர்களே "ஜோதிடம்" ஒரு அறிவியல் தான் என்று சொன்னபிறகு நான் வேறு என்னத்தை சொல்ல?

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...