தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் புத்தாண்டு விற்பனையை விட நேற்று தமிழகத்தில் சுமார் 218 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது. என்று செய்திகள் வந்துள்ளன.
இதில் டாஸ்மாக் கடைகளை திறக்கலாமா வேண்டாமா என்ற கேள்வி வேறு….
பொதுவாக, டாஸ்மாக் கடைகள் இருக்கும் பகுதியில் உள்ள மெயின் ரோடுகளில் வாரக் கடைச்யில் நிற்கும் போக்குவரத்து போலீசார், வண்டிகளில் வரும் நபர்களை சோதனையிட்டு , குடித்து விட்டு வண்டியோட்டுவதாக வழக்கு போடுவது வழக்கம்…
"கடையையும் அரசே நடத்துமாம்…அப்புறம் அங்கே வாங்கி கொஞ்சம் டேஸ்ட் பார்த்து விட்டு வீட்டிற்கு கிளம்பினால், அது குற்றமாம்" என்று குடிமகன்கள் புலம்புவதை வழக்கமாக கேட்கலாம்.
யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல், தனியிடங்களில் மது அருந்தினால் குற்றம் அல்ல..ஆனால் அதுவே பொது இடம் என்றால் குற்றம் தான் என்று , குடிமகன்கள் வழக்கமாக தங்கள் உரிமைகளுக்காக குரல் எழுப்பும் கேரளாவின் மாண்புமிகு உயர்நீதிமன்றம் கூட சொல்லிவிட்டது..
இத்தனைக்கும் அங்கு மது விலக்கை பகுதி பகுதியாக கொண்டு வரும் அரசின் திட்டத்தை எதிர்த்து, "குடிப்பது எங்கள் பிறப்புரிமை..என்று இல்லை…அடிப்படை உரிமை என்று கோஷம் எழுப்பியவர்களின் வாயையும் மூடியது அதே உயர் நீதிமன்றம் தான்.
ஆனால் அதுவே மது விற்பனை செய்வது என்றால் ?? அது அடிப்படை உரிமை அல்ல என்பதையும் தெளிவு படுத்தியது..
"தனியுரிமை என்று வரும் போது , தான் எந்த தொழிலையும் செய்ய விரும்புவது தன்னுடைய அடிப்படை உரிமை , அதுவும் அது வாழ்வதற்கான அடிப்படை உரிமையின் ஒரு அம்சம், ..என்று வாதிட்டாலும், பொதுவில் மக்களின் தனியுரிமைக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும என்றும் மது விற்பனை செய்ய உரிமம் பெற்றவர்களின் வணிக ஆர்வத்தை விட விலை மதிப்பற்றது. என்று தீர்ப்பு சொல்லியது.
பாலக்காட்டை சேர்ந்த விலாசினி என்பவர் . தன வீட்டிற்கு அருகில் இருக்கும் சாராய கடையினால் , தன்னுடைய தனியுரிமை பாதிக்கிறது என்பதால், அதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் வந்த தீர்ப்பு தான் இது. அந்த வழக்கில் நீதிமன்றம், மதுகடைகலாள் ஏற்படும் சிரமங்கள் குறித்து அறிக்கை தர அமிக்கஸ் க்யுரியாக ஒருவரை நியமித்து ஒரு அறிக்கை தர கேட்டு, அதன் அடிப்படையில், மேற்படி தீர்ப்பை வழங்கியது…
அந்த அறிக்கையில் சொல்லப்பட்டவை தான் . இவை (என் கருத்தும் கூட)
- குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் உள்ள கள்ளிக் கடைகள் மக்களின் உரிமையைப் பாதிக்கிறது.
- அவர்களின் அமைதியை கெடுக்கிறது.
- அங்கு கூடியிருக்கும் குடிபோதையில் இருக்கும் நபர்கள், அந்த வழியாக செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்களை விமர்சிப்பதும், அவர்களின் மோசமான பேச்சு மற்றும் நடத்தையும் பெரிதும் பாதிக்கின்றன.
- இன்னும் சொல்லப் போனால், இது போன்ற சூழ்நிலையில் வளரும் குழந்தைகளின் மனநிலையை இது பெரிதும் பாதிக்கின்றது.
ஆனால் அதன் மேல்முறையீட்டில் வந்த சமீபத்திய அதன் தீர்ப்பு சற்று வித்யாசமாக வந்துள்ளது….
- "பொது ஒழுங்கு, அமைதி மற்றும் அமைதி சீர்குலைவதை தனியுரிமை உரிமை மீறலுக்கு ஒத்ததாக புரிந்து கொள்ள முடியாது"
"குடியிருப்பு பகுதியில் சாராய கடை அமைப்பது தனியுரிமையை பறிக்கும் செயலாகும்" என்று தனி நீதிபதி அளித்த தீர்ப்பை மாற்றிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பின் சாராம்சம்
- "ஒரு நபரின் அமைதியான வசிப்பிடத்தை பாதிக்கும் எதுவும் அதன் தனியுரிமை உரிமைகளை பாதிக்கும்" என்ற தனி நீதிபதியின் கருத்தை "எங்களால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தக்கூடிய தனியுரிமை உரிமைகள் இந்த அளவிற்கு விரிவுபடுத்தப்பட்டால், முற்றிலும் குழப்பம் ஏற்படும் என்று நாங்கள் பயப்படுகிறோம்."
- சொல்லப்பட்ட இந்த காரணிகள் பொது இடையூறு அல்லது பொது அமைதியை மீறுவதாக இருக்கலாம் என்றாலும், அவை தனியுரிமையை மீறலாம் என்று கூறுவது மிகைப்படுத்தலாகும்"
- இடையூறு, அமைதி மீறல், தார்மீக கவலைகள் போன்றவைக்கும் தனியுரிமையுடன் எந்த தொடர்பும் இல்லை, அவற்றால் பொது ஒழுங்கு, அமைதி மற்றும் அமைதிக்கு இடையூறு ஏற்படலாம். ஆனால், பொது ஒழுங்கு, அமைதி மற்றும் அமைதியை சீர்குலைப்பது தனியுரிமை உரிமைகளை மீறுவதற்கு ஒத்ததாக புரிந்து கொள்ள முடியாது. எங்களைப் பொறுத்தவரை,ரிட் மனுக்களில் அமிகஸ் கியூரி வெளிப்படுத்திய பொதுவான கவலைகள் அனைத்தும் விதிகளில் கவனிக்கப்படுகின்றன, ஏனெனில் விதிகள் அதிகாரிக்கு அதிகாரம் அளித்து, மேற்கூறிய கவலைகளை விதிகள் கவனித்துக் கொள்ளும்போது, தனியுரிமை உரிமை மீறல் பிரச்சினையைத் தீர்ப்பது கற்றறிந்த நீதிபதிக்கு தேவையற்றது.'"
- குடியிருக்கும் இடத்தில் மதுபான உரிமம் வழங்க அனுமதிக்கும் சட்டப்பூர்வ விதிகளை ரிட் மனுதாரர்கள் எதிர்த்து வழக்கு போடவில்லை
- தனியுரிமை என்பது ஒரு நியாயமான எதிர்பார்ப்புக்கு அப்பால் நீட்டிக்கப்படாது, அதுவும் ஒரு தனிநபரின் தனியுரிமை என்பது அவரைச் சுற்றியுள்ள மற்றவர்களின் தொழிலையும் செயல்பாடுகளையும் சார்ந்தது அல்ல.
- ஒரு தனிமனிதன் தனக்கு நெருக்கமான மற்றும் தனிப்பட்ட விஷயங்களில் தெரிவு செய்யவோ அல்லது முடிவுகளை எடுக்கவோ முடியாத போது மட்டுமே, அந்த நபரின் தனியுரிமைக்கான உரிமை மீறப்பட்டுள்ளது என்று கூறலாம்".
இந்த தீர்ப்பை படிக்கும் நம்மில் பெரும்பாலோருக்கு, அப்படியானால் , டாஸ்மாக் கடைகளை குடியிருப்பு பகுதியில் திறப்பது குறித்து அந்த பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவிக்கமுடியாதா என்ற கேள்வி மனதில் எழலாம்.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது, தனியுரிமை என்று சொல்வதில் இரண்டு விதமான முரண்பாடான உள்ளர்த்தம் உண்டு. ஒன்று, ஒரு அரசு, குடிமகனின் வாழ்விலும் தனியுரிமையிலும் குறுக்கீடு செய்யக் கூடாது என்பது. மற்றொன்று, குடிமக்களின் தனியுரிமையை பாதுகாக்கும் வண்ணம் செயல்படுவது ஒரு அரசின் கடமை …
தனி நபர்கள் கூட்டமாக வாழும் இந்த சமூகத்தில், ஒருவரின் தனியுரிமை என்பது, இன்னொருவரின் சட்டப்பூர்வமான வாழ்வுரிமையை பாதிக்கும் வகையில் இருக்க கூடாது என்பது தான். அதனால் ஒருவரின் தனியுரிமை என்பது வரம்பிற்கு உட்பட்டது தான்.
இந்த தீர்ப்பின் சொல்ல வந்த முக்கிய சாராம்சம் என்னவென்றால், ஒரு டாஸ்மாக் கடையை ஒரு இடத்தில் திறக்கலாமா என்று முடிவு செய்து அதற்கான அனுமதியை அரசு வழங்குகிறது. எந்த இடத்தில் திறக்க அனுமதி வழங்கவேண்டும் என்பது குறித்து விதிகள் தெளிவாக இருக்கின்றன. அப்படியிருக்க, அந்த அனுமதியை முறையாக பெற்ற ஒருவரை, தனியுரிமை பாதிக்கிறது என்று கோரி, தொழில் நடத்தவிடாமல் தடுக்கக் கூடாது என்கிறது.
அதை தடுக்க வேண்டுமானால், அந்த அனுமதி வழங்கிய அரசை அல்லது அந்த விதிகளை, அல்லது அந்த விதிகள் முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று தான் எதிர்த்து முறையீடு செய்ய வேண்டுமே தவிர, அதன் பயனாளியை அல்ல என்பது தான்.
என் கருத்து என்னவென்று தானே கேட்டீர்கள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக