செவ்வாய், 20 ஜூலை, 2021

வழக்கறிஞர் தொழில் தான் செய்வார் என்று ஒருவர் ஜாதிகத்தின் மூலம் அறிய முடியுமா?

 

எந்த ஒரு ஜாதகத்தின் கணிப்பின்  தொடக்கத்தில் இந்த வரிகள் எழுதப்பட்டிருப்பதை பார்க்கலாம்....

 

ஜனனி ஜன்ம சவுக்யானம், வர்த்தனி குல சம்பதம்

பதவீம் பூர்வ புண்யானாம் லிக்யதே ஜன்ம பத்ரிகா”

 

இதன் பொருள்:  இந்த ஜன்மத்தில் ஒரு மனிதன் அடையக்கூடிய நன்மை தீமைகள் அவன் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவ புண்யத்தை கணக்கிட்டே நம்முடைய ஜாதகக் கட்டத்தில் சங்கேதமாக குறிக்கப்பட்டிருக்கும். முந்தைய பிறவியில் நம்முடைய பாவ புண்ணிய கணக்கு தான் நம்முடைய ஜாதகம்.  அதை கழிக்க தான் இந்த கர்ம பூமியில் பிறவி எடுத்துள்ளோம். 

 

அதனால் ஜாதகம் என்பதே நம்முடைய பூர்வ புண்ணிய கணக்கு என்று சொல்லலாம். “ஏட்டு கணக்கை மாத்தி மாத்தி எழுதி வச்சாரு.,,,,,இறைவன் போட்ட கணக்கு மாறவில்லை...”ன்னு ஒரு பாட்டே வரும்...கேட்டு இருக்கீங்களா? 

 

அப்படிப்பட்ட மாற்ற முடியாத கணக்கு நோட்டான ஜாதகப்படி ஒருவரின் தொழிலை கணிப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான வேலை தான். வேத கால முனிவர்கள் அதற்கான சூத்திரங்களை ஜோதிடத்தில் மறைத்தே வைத்திருகிறார்கள்.அந்த புதிரை விடுவிக்க “புத்தி காரகன்” எனப்படும் புதன் பகவானின்  அனுக்கிரகம் தேவை. அதற்க்கும் முன்னதாக  ஜோதிடம் அறிந்துக் கொள்ளவே  புதனின் அருளாசி வேண்டும். அது இல்லாது ஜாதகம் கணித்தால் பிழை ஏற்படும் காரணம் இதுவே. ஈஸ்வரனின்  கருணையினால், புரிந்து கொள்ளும் ஞானம் இருக்குமானால், வேத கால நாடி ஜோதிடம் வெகு எளிமையாகவே இருக்கும்.

 

ஒருவர் செய்யும் . தொழிலைக் குறிக்கும் பத்தாவது வீட்டோடு எந்தக் கிரகம் தொடர்பு கொள்கிறது என்பதை கொஞ்சம் நுணுக்கமாக ஆராய வேண்டும். எந்த ஒரு துறையிலும் வெற்றி பெற அவரின் லக்னம், லக்னாதிபதி நல்ல அமைப்பில் இருக்க வேண்டும். லக்னாதிபதி வலுவிழந்து இருந்தால்,   அதன் அடுத்த இணை அமைப்பான ராசியாவது  வலுவாக இருக்க வேண்டும்.

 

இந்த இரண்டும் வலுவாக இல்லை என்றால் ?

வேறென்ன... வாழ்க்கையில் எதையும் சாதிக்க வேண்டும் என்கின்ற முனைப்பு இருக்காது. தன்னம்பிக்கையின்றி,  ஒரு குறிக்கோள் இல்லாமல் காலத்தை கழிப்பார்.   

 

அதை விட முக்கியமானது ஒன்று...ராசி , லக்கினத்தில் எது கெட்டிருக்கிறதோ இல்லையோ ... ஜோதிடத்தில் பிதாகாரகன், மாத்ருகாரகன் எனப்படும் சூரியனும் சந்திரனும் மட்டும் வலுவிழந்து இருக்க கூடாது. இந்த பிரபஞ்சமே சூரியனை தான்  மையமாக கொண்டு  சுற்றி வரும்போது, அதன் ஒளியை பிரதிபலிக்கும் சந்திரனும் ஆன,   இந்த இரண்டு கிரகங்களும் வலுவின்றி போனால், ஜாதகரின் வாழ்வும் அப்படியே.ஆகும்...ஏனென்றால், தொழில் விஷயத்தில் ஒருவருக்கு தேவையான  விடாமுயற்சியையும், ஊக்கத்தையும்  தன்னம்பிக்கையையும் கொடுப்பது சூரியன் என்றால் சந்திரன் இதற்கு உறுதுணையான மனோபலத்தை அருள்பவர். ஒருவர் ஜாதகத்தில் இந்த இரண்டு ஒளிக் கிரகங்களும் வலுவிழக்கவே கூடாது.   

 

.சூரியன் ஒரு இயற்கை பாபர். அவர் சுபத்துவம் பெற்று, அவருக்கு மிகவும் வலுத்தரக் கூடிய  திக்பலம் எனும் பத்தாமிடத்திற்கு அருகில் இருந்தாலோ, அல்லது தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தை சூரியன் தொடர்பு கொண்டாலோ,  இளம்வயதில் எவ்வளவு ஏழ்மை நிலையில் இருந்தாலும்  சொந்த முயற்சியால், முன்னேறிவிடுவார்கள். இதனாலேயே  சூரியனுக்கு  “தொழில்காரகன்” என்ற பெயருண்டு. இவரின் உதவியின்றி, இவரின் வீடான சிம்மத்தின் உதவியின்றி, யாரும் தொழிலில் சோபிக்க முடியாது.

 

எந்த தொழில் என்றாலும் அதன் காரகத்துவ கிரகம் ஒன்றும் அதற்கு துணையாக இருக்கும் மற்றொரு கிரகமும் இருக்கும். மூன்றாவது கிரகமாக இந்த சூரியனும் இருப்பார். இவை சுபத்துவமாக வலுவாக இருக்க வேண்டும். சூரியன் தலைமை பண்பை கொண்டவர் என்பதால் அவரின் ஆளுமை திறன், தொழிலை லாபகரமாக நடத்துவதற்கும், ஆட்களை வேலை வாங்குவதற்கும் உரிய திறனை தருபவர் சூரியன். தான்

 

ஒரு ஜாதகத்தின் மூல ஆதாரங்களாக சொல்லப்படும்  1,5,9 மூன்று பாவகங்களும் சுப வலு பெற்றிருந்தாலே ஒருவர் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க கூடியவராகத்தான் இருப்பார்.. அவை  நல்ல நிலையில் இருந்தால். தனிப்பட்ட தொழில்திறமை இல்லையென்றாலும், முன்னோர் சொத்தை அனுபவித்து, யோகமாகவே வாழ்வார்

 

ஆனாலும் திரிகோண அதிபதிகளாக இயற்கை பாபிகளான சனி, செவ்வாய் இருந்து, ஆட்சி/ உச்சம் பெற்றிருந்தாலும் கூட, சுப கிரகங்களின் தொடர்புகளை, அதாவது  இணைவு அல்லது பார்வையை நிச்சயமாக பெற்றிருக்க வேண்டும்.  ஏனெனில், தனியாக நின்று  சுபத்துவமோ, சூட்சும வலுவோ இன்றி ஜாதகத்தில் வலுத்திருப்பது யோகத்தை தராது.   .

 

யோகங்களை பொறுத்தவரையில் 3௦௦ வகையானது உண்டு.  எந்த ஜோசியரை பார்த்து  ஜாதகத்தை  காட்டினாலும், ஏகப்பட்ட யோகம் ஜாதகருக்கு உண்டு என்பர். அனால் வாழ்க்கை புரட்டி போடும் கோலத்தில், ஒரு யோகமும் இருப்பது போலவே தெரியாது.  ஏன் அப்படி? 

 

ஒருவர் எந்த மாதிரி யோகங்களை அனுபவிப்பார் என்பதை காட்டுவதே  1௦ம இடம் தான்.  .அவர் என்ன தொழில் செய்து பிழைப்பார்?  அல்லது தொழில் செய்யாமல் முன்னோர் சொத்தை வைத்து பிழைப்பு நடத்துவாரா எனக் காட்டும்.

 

 ஜாதகப்படி லக்ன, கோணாதிபதிகள் வலுவாக இருந்தாலும் இரண்டு, பத்தாம் பாவகங்கள் (ராசி, லக்கினத்தில் இருந்து) கூடுதலாக வலுப் பெற்றிருந்தால்  மட்டுமே, சொந்த முயற்சியால் தொழிலில் முன்னேற முடியும். இத்தோடு, ஒருவரை வேலை பார்த்து சம்பாதிக்க வைக்கும் ஆறாம் பாவகத்தின் சுப வலுவையும் சேர்த்துக் கொள்ளலாம். இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு உள்ளவரால் தான், பரம்பரை தொழிலை கையில் எடுத்தாலும், அதை மேலும் வளர்ச்சியுறச் செய்பவராக இருப்பார். அவை  வலிமை குறைந்திருக்கும் நிலையில் அவர் முன்னோர்களின் சொத்தை விரயம் செய்பவராக இருப்பார்.


 

வழக்கறிஞர் தொழிலுக்கு தொடர்புடைய சட்ட துறைக்கு காரகத்துவன் சனி பகவான். சனி என்றாலே அவர் கெடுதலை மட்டுமே தர கூடியவர் என்று பொதுவான கருது உண்டு,  உண்மை தான். கடன், நோய், வம்பு வழக்கு, சிறை என்று நாம் வேண்டாம் என்கின்ற அனைத்தையும் தரும் வித்தியாசமானவர இவர். ஆனால் சுபத்துவம் பெற்ற சனி, பொய்யை தொழிலாக செய்ய வைப்பார்.

 

 ஒரு மனிதனை பொய் சொல்ல வைப்பவர் சனிஅரிச்சந்திரனை பொய் சொல்ல வைக்க தூண்டிக்  கொண்டே இருந்தவர் சனி. .  பொய் சொல்லாதவர்கள் யாருமுண்டா?  நாம் தினசரி தெரிந்தே சில பல பொய்களை சொல்லித்  தான் நாட்களை கடத்துகிறோம்.  ஆனால் சிலருக்கு தொழில் ரீதியாக பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.  ஒவ்வொரு தொழில் செய்பவரும் ஏதாவது ஒரு வகையில் பொய் கணக்கு எழுதத் தான் செய்கின்றனர்.  அதே போல அதை சரியாக போட்டுக்  கொடுக்கும் ஆடிட்டர்களும் இருக்கின்றனர்.  வியாபாரம் செய்பவர்கள் வெற்றி பெற சாமர்த்தியமாக பொய் சொல்லத்தான் வேண்டும். அதேபோல விற்பனை பிரதிநிதிகள் ஏதாவது  ஒரு வகையில் பொய்யைச் சொல்லித்தான் அந்தப் பொருளை விற்கிறார்கள்.  அதை போன்றது தான் வழக்கறிஞர் தொழிலும்.

 

பொதுவாக வழக்கறிஞர் குறித்த ஒரு தாழ்வான எண்ணம் நம் மக்களுக்கு உண்டு. “பொய்யை மட்டுமே பேசி பிழைப்பு நடத்துபவர்கள் என்று...”  நடிகர் நம்பியார் கொடூரமான வில்லனாக நடித்தவர்.  ஆனால் நிஜ வாழ்வில் நிறைய நற்குணங்களை பெற்றிருந்தவர். அது போல,

ஒரு வழக்கறிஞர்  தனிப்பட்ட வகையில் உண்மை மட்டுமே பேசக் கூடிய மனசாட்சியுள்ள மனிதராக இருக்கலாம். ஆனால் தொழிலுக்காக அவர் பொய் சொல்லித்தான் ஆக வேண்டும். அதுவும் தன்னுடைய கட்சிக்காரர் திருடனாகவும் கொலைகாரனாகவும் இருந்தாலும், அது அவருக்குத் தெரிந்திருந்தாலும், இவர் இதனைச் செய்யவில்லை என்று வாதாடி, அல்லது இன்ன காரணத்தினால் தான் இதை செய்ய நேர்ந்தது என்று விதிவிலக்கில் அந்த கட்சிகாரரை கொண்டு வர வைத்து, அவரை\ தப்பிக்க வைக்கும் பணியையே ஒரு வழக்கறிஞர் செய்கிறார்..

 

உண்மையில் நம்முடைய சட்ட அமைப்பே, ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தபடுவாரேயானால், அவர தரப்பில் அந்த குற்றச்சாட்டுக்கு எதிராக அவர் கட்சி செய்ய வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.  அவரால் வழக்கறிஞர் அமர்த்தி கொள்ள வாதி இல்லையென்றாலும், அரசே அதற்கென செலவு செய்து ஒரு வழக்கறிஞரை அவருக்காக வாதாட ஏற்பாடு செய்கிறது.  அப்சல் குருவுக்கு வழக்கறிஞர் யாரும் ஆஜராகக்  கூடாது என்று முடிவு  செய்து ஆஜராக மறுத்தும், அரசு தலையிட்டு ஒரு வழக்கறிஞரை அமர்த்தியதும் எல்லோருக்கும்  தெரிந்திருக்கும்.  ஏனெனில் எந்த குற்றம் சாட்டப்பட்டவரும் தன தரப்பைத் சொல்வதற்கு சந்தர்ப்பம் கொடுக்காமல் நீதி வழங்கக்கூடாது  என்பது நம் நீதி தர்மத்தின்  அடிப்படை விதி.  எனவே ஒரு வழக்கறிஞர் என்றாலே தன கட்சிக்காரரின் நலனுக்கு உழைப்பவர்.  ஒருவருக்கு மனப்பூர்வமாக பொய் சொல்ல விருப்பமில்லை என்றாலும் அதனை தொழிலுக்காக வலுக்கட்டாயமாக சொல்ல வைப்பவர் சுப மற்றும் சூட்சும வலுப்பெற்ற சனி. ( ஸ்தூல வலு கொண்ட கிரகத்தை விட சூட்சும வலு கொண்ட கிரகம் தான் அதிக வலு கொண்டது) 

 

 

வழக்கறிஞர் தொழிலுக்கு சனியின் சூட்சும வலுவோடு,  அதனோடு இணையும் அல்லது தொடர்பு கொள்ளும் மற்ற கிரகங்களின் காரகத்துவங்களையும் பொறுத்தது வழக்கறிஞர் தொழிலுக்கு முக்கிய தேவை வாக்கு வன்மை.

 

ஜாதகத்தில் வாக்கு ஸ்தானம எனப்படுவது இரண்டாம் பாவம.   சிலரை நாமே பார்த்திருப்போம். அண்ட புளுகு ஆகாச புளுகு என்பார்களே அது போல புழுகுவார்கள்.  அப்படியே நம்புவது போல அவர்கள் பேச்சு அலங்காரமாக இருக்கும். கடைசியில் நம் காதில் பூ சுற்றியது தெரியும்.,  அப்பேர்ப்பட்டவர்களின் ஜாதகத்தில் சனி பாபத்துவமாக அந்த வாக்கு ஸ்தானத்துடன் தொடர்பில் இருப்பார். அதாவது 2ம் பாவத்தில் சனி அமர்ந்தோ பார்வை பெற்றோ, ஆட்சி]அதிபதியாகவோ இருக்கும்போது, ஒருவன் வாயில் வருவது அனைத்தும் மகா பொய்யாக இருக்கும். அவன் அண்டப் புளுகனாக, துளியும் மனசாட்சியின்றி மற்றவர்களை ஏமாற்றுவதே நோக்கம் கொண்டவனாக இருப்பான்.   அப்படிப்பட்டவர் வழக்கறிஞர் ஆகும் போது எப்படிப்பட்ட கொலை குற்றவாளியையும் காப்பாற்றி விடுவதுண்டு.    

 

 ஒரு வழக்கறிஞருக்கு, தன்னை நாடி வரும் கட்சிக்காரரை அந்த வழக்கிலிருந்து காப்பாற்ற வேண்டி சில் பொய்களை சொல்ல வேண்டிய அவசியம் தொழில் ரீதியாக ஏற்படுகிறது. அதை எந்த அளவிற்கு நீதிமன்றம் நம்பும்படி செய்து வழக்கிலிருந்து கட்சிக்காரரைக் காப்பாற்றுகிறார் என்பதில் தான் அவர் தொழிலின் வெற்றியே இருக்கிறது. இதற்காக சட்டத்தின் இண்டு இடுக்குகளில் எல்லாம் நுழைந்து அதன் ஓட்டைகளை தன கட்சிக்காரருக்கு சாதகமாக நுழைப்பதில் தான் அவருக்கு குரு பகவானின் துணை வேண்டும். ஏனென்றால் குரு வலிமையாக வாக்கு ஸ்தானத்தில் இருந்தால் ஜாதகர் புத்திசாலியாக இருப்பார். அதே சமயம் புலனடக்கத்தில் வல்லவராக, முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிக்காட்டிக்கொள்ளாதவராக இருப்பார். 

 

 

அதனால் ஒருவர் வழக்கறிஞராக வேண்டும் என்றால்,  அவரது ஜாதகத்தில் சட்டத்துறைக்கு காரகனான சனி முதன்மை வலுப் பெற்று, அவர் தொழில் செய்ய வேண்டிய நீதித்துறைக்கு காரக கிரகமான குருவின் தொடர்போடு, இரண்டு, பத்தாம் பாவகங்களை தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.  6ம  பாவமான சத்ரு பாவம் வழக்குகளை குறிப்பது, இதையும்  சட்ட தொழிலின் காரகனான சனியும், கர்ம பாவமான 1௦ம் பாவமும் இருக்கும் அமைப்பை பார்த்தே ஒருவர் வழக்கறிஞர் ஆவதற்கு உரிய தகுதி கொண்டிருக்கிறாரா என்று சொல்லிவிட முடியும். 

.

ஒருவரின் ஜாதகத்தில் ராசி, லக்னத்திற்கு 12-ல் சனி சுபத்துவமாக அமர்ந்து, தனது மூன்றாம் பார்வையால், வாக்குஸ்தானமான 2-ஆம் வீட்டையோ அல்லது ராசி லக்னத்திற்கு எட்டாம் பாவகத்தில் சுபத்துவ, சூட்சும வலுவோடு அமர்ந்து இரண்டாம் பாவகத்தோடு தொடர்பு கொள்ளும் போதோ அல்லது வேறு எந்த வகையிலேனும் சுபத்துவம் பெற்று இரண்டு, பத்தாமிடங்களை சனி தொடர்பு கொள்ளும் நிலையில் ஒருவருக்கு வழக்கறிஞர் தொழில் அமையும்.

 

வாக்கு ஸ்தானாதிபதியான இரண்டாம் அதிபதி வலுக் குறைந்திருக்கும் அமைப்பில் வாதத்திறமை குறைந்து எழுத்தில், ஆவண சமர்ப்பிப்புகளின் மூலம் வெற்றி பெறுபவராக இருப்பார்

 

 

கடன், கொலை, இறப்பு, விபத்து, என்று குற்றங்களைக் குறிக்கும் செவ்வாயின் தொடர்புகளை சனி அதிகமாக பெறும்போது, அவர் கிரிமினல் லாயராக இருப்பார். சுப கிரகங்களான சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன் சனியுடன் அதிகமாக தொடர்பு கொள்ளும்போது கிரிமினல் இல்லாமல் சிவில் வழக்குகளை மட்டும் கவனிக்கும் வக்கீலாக இருப்பார்..

 

.

இதில் சில வழக்கறிஞர்கள் மட்டும் புகழ் பெறுவதும் மற்றவர்கள் கவனிக்கும் அளவில் வாதத் திறமை கொண்டவர்களாக ஏன் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் புதன் கிரகம். அவர் தான் புத்தி கூர்மையையும் ஞானத்தையையும் அளிக்க கூடியவர்.  சனியின் சுப, சூட்சும வலுவோடு, ஜாதகத்தின் இரண்டாம் அதிபதியும், அந்த பாவகமும், புதனும் அதிக வலுவோடு இருக்கும் போது,  தனது வாதத் திறமையால் பிறரால் கவனிக்கப் படக்கூடிய வகையில் அவர் இருப்பார்.

 

அடுத்து அரசு வழக்கறிஞர்களாக ஆபவர்கள் நீதிபதியாக உயர்பவர்கள் ஜாதகத்தில் சூரியனின் ஆதிக்கம் இருக்கும்.  சூரியன் தான் அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ள வைப்பவர். வாக்குஸ்தானமான இரண்டாமிடம் மற்றும் தொழில் பாவகமான பத்தாம் வீட்டோடு சனி,, குரு, சூரியன் தொடர்பு கொள்ளும் போது, ஜாதகர்  சட்டத்துறையில் பணியாற்றுவார்.. சிம்மம் வலுவாகி, சூரியன் சுபத்துவம் பெற்று, ராசி, லக்னத்திற்கு பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டால் அரசு பனி உறுதி.

 

சட்டத்துறைக்கு சனி, குரு, சூரியன் முதன்மை வகிப்பார்கள். அதற்கு ஜாதகருக்கு தேவையான புத்திகூர்மையை வழங்கி புதன் அடித்தளமாக இருப்பார்.  ஒருவர் வக்கீலாக பணியாற்றுவதற்கு சட்டத்துறைக்கு முதன்மை கிரகமான சனி, இரண்டாம் நிலை கிரகமான குரு, அடுத்து அரசு தொடர்பை குறிக்கும் சூரியன் ஆகியோர் சனி, குரு, சூரியன் என்ற சுபத் தொடர்பு வரிசைப்படி அமைந்திருக்க வேண்டும்

ஒருவர் நீதிபதியாக இருக்கிறார், இன்னொருவர் வக்கீலாக இருக்கிறார். சிலர் நீதிபதி பதவி வந்தாலும், வழக்கறிஞராய் இருக்கும்போது வரும் பணத்தை கருத்தில் கொண்டு மறுத்து விடுவதும் உண்டு.  அவர்களது ஜாதகத்தில் குருவை விட சனியின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கும்.

ஆனால் பொதுவில் ஒரு  வழக்கறிஞராக  இருப்ப்பவர் தான் நீதிபதியாக முடியும்.   இது குறித்து நடிகர் ராதா ரவி சொன்னதாக  சொல்வார்கள் “பொய்யே சொல்லிக்கிட்டு இருந்த வக்கீல் ஒருத்தர் நீதிபதியானா மட்டும்  மாத்தி சொல்லப்போறாரான்னு”

 

ஆனால் இருவருக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. பலவிதமான முரண்பாடுகளும் இந்த பதவிகளில் இருக்கின்றன. ஆனால் நீதிபதிக்கும், வழக்கறிஞருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, இருவரும் சட்டம் படித்திருக்கிறார்கள் என்பதுதான். அந்த சட்டத்தை படிக்க வைப்பவர் சனி.

.சட்டத்துறைக்கு சனியே முதன்மைக் கிரகம் என்றாலும் நீதித்துறைக்கு குருவே முதன்மைக் கிரகமாவார். சட்டம் என்பது பொதுவாக இருந்தாலும் சட்டமும், நீதியும் வேறு வேறு. ஒரு வக்கீலின் இறுதிக் கனவு நீதிபதியாக வேண்டும் என்பதாக இருந்தாலும், எல்லா வழக்கறிஞர்களும் நீதிபதியாக விரும்புவதில்லை. நீதிபதியாக விரும்பும் வழக்கறிஞர்கள் எல்லோரும் ஆவதில்லை.இதற்கெல்லாம் குரு மற்றும் சூரியனின் சுபத் தொடர்பு இல்லாததே காரணம்.

 

ஜாதகர் சீருடை அணிந்த தொழிலுக்கு போவாறா இல்லையா என்பதை அவர் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் சொல்லி விடுவார்.  ஏனெனில் சீருடை அணியும் பணிகளுக்கு காரகத்துவரே அவர் தான். 

.

வழக்கறிஞர் என்றாலும் நீதிபதி என்றாலும் கருப்பு கோட் மற்றும் கவுன் அணிய வேண்டும். சனிக்கும் கருப்பு நிறத்துக்கும் உள்ள தொடர்பை எல்லோரும் அறிவர்.

 

 

இந்த  பிரம்பஞ்சத்தில்  உள்ள கோள்களின் அமைப்பை பார்த்தாலே ஒன்று புரியும். சூரியனின் ஒளியை பெரும் சுற்றுப்பாதையில்  மிகவும் தூரத்தில் அதுவும் கடைசியாக இருப்பவர் சனி தான்

 

 


.

 

நம் ஜோதிட அமைப்பை பார்த்தாலே புரியும். சூரியனை நடுநாயகமாக கொண்டு நீள வட்டப்  பாதையில் வரும் நம் பூமிக்கு  மிக அருகில் இருக்கும  சந்திரனை சூரியனுக்கு அடுத்து தாய் தந்தை ஸ்தானத்தில் வைத்து, அதனை அடுத்து சூரியனுக்கு அருகில் உள்ள புதன் கிரகத்தை இரண்டு ராசிக் கட்டமான மிதுனம், கடகத்தின் ஆட்சி நாயகனாக வைத்து, அதை அடுத்து உள்ள சுக்கிரனுக்கு ரிஷபம் மற்றும் துலாம் ராசி ஆட்சியை கொடுத்து, பூமிக்கு இந்த பக்கத்தில் உள்ள செவ்வாய்  கிரகத்தை ஆட்சிநாயகனாக மேஷதிற்கும் விருச்சிகத்திற்கும் வைத்து அதை தொடர்ந்து சுற்றி வரும் குருவுக்கு மீனத்தையும்  தனசு ராசியையும்  ஆட்சி செய்ய  வைத்தால் மிச்சமிருப்பது கடைசியில் உள்ள சனிக்கிரகம். இததான் மகரதிற்கும் கும்பத்திற்கும் அதிபதியாக்கினார்கள் வேத கால முனிவர்கள்..

 

ஒருவிதத்தில் பார்க்கும் போது, சனி கடைசியில்  இருக்கிறது என்றும் சொல்ல முடியாது. ஏனெனில், நீள வட்டப்பாதையில் இருக்கும் சனிக்கிரகம் தான், முதலும் முடிவுமாக இருக்கும். இந்த பிறவியே முன் ஜென்ம கர்ம வினையினால் தானே. அதை கழித்து, அல்லது இன்னும் சில கர்ம வினைகளை கூட்டி (ஏனெனில் இந்த பிறவியில் செய்யும் பாவம் மட்டும் இல்லாது புண்ணியமும் அதை கழிக்க இன்னொரு பிறவி எடுக்க வைக்கும்)   மீண்டும், எங்கிருந்து பிறவி தொடங்கியதோ அங்கேயே சென்று சரண் அடையும் விதத்தில் தான் இந்த ராசிக்கட்டங்களை வேதங்களை பயின்ற நம் முன்னோர் வகுத்துள்ளனர்.  அந்த நிலைய அடைய தூண்டுவது சனியின் காரகத்துவமாகும். 

 

 

சனி கருப்பு நிறமுள்ளவரா என்றால் இல்லை.  கருப்பு என்பது நிறமல்ல. வெளிச்சம் இல்லாத நிலை என்று வேண்டுமானால் சொல்லலாம்.  ஒளி குறைந்தது என்றும் சொல்லலாம்.  ஏனெனில் இதற்கும் பின்னால், மூன்று கிரகங்கள் உள்ளன. ஒளி முழுவதும் அற்ரவை என்று  ராகு-கேதுக்களை தான் சொல்ல வேண்டும். ஒளி மிகவும் குறைந்த கிரகமான சனிக்கு கருப்புக்கு வெகுஅருகில் உள்ள கருநீல நிறம் சொல்லப்பட்டதன் காரணம் இதுவே.

 

அந்த கருப்பு நிற அங்கியை அணிந்து தன கர்மா நிச்சயித்த தொழிலை செய்யும் வழக்கறிஞர்களும் வெள்ளை உள்ளம் கொண்டவர்களே !!

அதே போல, மூல விதியை சரியாகப் புரிந்துக் கொண்டு, பின்பு  அதன் துணை விதிகளை ஆராய்ந்தால்,  ஜாதகர் எந்தத் துறையில் எந்தப் பிரிவில் பணிபுரிகிறார் என்பதைக்கூட மிகத் துல்லியமாக பாரம்பரிய ஜோதிடத்தில் சொல்லிவிட முடியும். நம் வேத கால முனிவர்கள் என்றும் மகான்களே!! குருவே போற்றி!!

 

 

சனி

சுக்கிரன்

சூரியன்

புதன்

 

 

 

 

 

 

 

செவ்வாய்

சந்திரன்

 

குரு

கேது

எனக்கு கிடைக்கப்பட்ட இந்த ஜாதகத்தில், சிம்ம  லக்னமாகி, வழக்கறிஞர் தொழிலுக்குரிய முதன்மை கிரகமான சனி,  

·         தனது பகை வீடான ஒன்பதாம் வீடான மேஷத்தில் அமர்ந்து நீசம் அடைந்துள்ளது.. சனிக்கு செவ்வாய் பகை வீடு  என்றாலும் செவ்வாய்க்கு  சனி சம கி\ரகம் மட்டுமே. அந்த ராசிக்கு  ஆட்சிநாதன்  செவ்வாய் ஆகையால்,  சனியின் நீசம் பங்கப்பட்டு நீச பங்க ராஜ யோகம் உண்டாகிறது. எனவே ஜாதகருக்கு சனியின் காரகத்துவம் அதன் 1௦௦ சதவீத நிலையையும் மீறி 12௦ சதவீதம் காரகத்துவம் செய்வார்.  சனி இயற்கை பாபர் என்றாலும், திரிகோணத்தில் நின்று  சுக்கிரனுடன் இணைவு பெற்றதால், சுப காரகத்துவம் பெறுவார்.  எனினும் அவருடைய தசா காலத்திலேயே அதற்குரிய பலனை ஜாதகர் பெறுவார்

·          மேலும் சனி அமர்ந்திருக்கும் ராசியின் அதிபதியான செவ்வாய் நான்காம் பாவத்தில் அமர்ந்து, அனுஷம்  நட்சத்திரத்தில் சாரம் பெற்றுள்ளார்.   அதன் அதிபதியான சனி செவ்வாய் ஆட்சி செய்யும் ஒன்பதாம் பாவத்தில் உள்ள்ளார்.. செவ்வாயும் பத்தாம் பாவத்தை தன சொந்த வீடான விருச்சிகத்தில் இருந்து பார்க்கிறார்.    

·         . சனி /சுக்கிரன்  நிற்கும் அஸ்வினி நட்சத்திரத்தின் சாரத்தின் அதிபதியான ஞானக்காரகன் கேது,  குருவுடன் இணைவு பெறுகிறார். குரு   2ம ஸ்தானத்தில் அமர்ந்து ஏழாம் பாவத்தில் உள்ள சனி, சுக்கிரனை பார்க்கிறார் சனி, குருவின் 7ம  பார்வையால் சுபத்துவமாகி, செவ்வாயுடன் பரிவர்த்தனை பெற்று  வலு பெறுகிறார்.  . கேது செவ்வாயின் காரகதன்மை கொண்டவர் என்பது நாம் அறிந்ததே. எனவே சனி சூட்சம வலுவும் கொண்டு இந்த ஜாதகத்தில் உள்ளார்.

·            லக்னத்திற்கு இரண்டுக்குடைய வாக்குஸ்தானாதிபதி புதனுடன்  சூரியன்   , தொழில் ஸ்தானமான 10-மிடத்தில் இனைந்துள்ளார். இந்த 1௦ ம பாவத்தின் அதிபதியான சுக்கிரன சனியுடன் ஒன்பதாம்  பாவத்தில் இணைவு பெறுகிறார். ,

·         அதே போல நவாம்சத்தில் மிதுன லக்னத்தின் அதிபதியான புதனின் வீட்டில் சூரியன் இருக்க,2ம வீடான கடக ராசியான  வாக்குஸ்தானத்தில் சனி இருந்து 7 ம பார்வையாக சனியின் சொந்த வீடான கும்பத்தில்  இருக்கும் குருவை பார்க்கிறார்.  குருவும் தன 7ம பார்வையில் சனியை  பார்க்கிறார்

·         நவாம்சத்தின் பத்தாம் வீடான மீனத்தில் அதிபதி குரு, சனியின் சொந்த வீடான கும்பத்தில் உள்ளார்..

·         அதே போல 1௦ ம வீடான சந்திரனின் வீடான கடகத்தில் சனி இருக்க, சனி தன 1௦ ம பார்வையால் மேஷத்தில் இருக்கும் புதனையும் சுக்கிரனையும் பார்க்கிறார். 

·         “கெட்டவன் பகை வீட்டில் இருப்பதால் வலிமை குறையும். பாபக்கி\ரகமான சனியின் வலிமை கடகத்தில் இருக்கும்போது குறைவது நல்லது தானே. ஏனெனில் வாக்கு ஸ்தானத்தில் சனி அமரும்போது , ஜாதகரின் பேச்சில் கடின வார்த்தைகளும், அவதூறான பேச்சுகளும் இருக்கும். அதுவே அவரின் பகை வீடு என்னும்போது, அவரின் வலிமை 1௦ சதவீதமே இருக்கும்.  உச்ச வீட்டில் ஒரு கிரகம் இருக்கும்போது 1௦௦ %, ஆட்சி வீட்டில் இருக்கும்போது 80%, நட்பு வீட்டில் இருந்தால் 40%, சமமான வலிமை  கொண்ட வீட்டில் இருக்கும்போது 2௦%,பகை வீட்டில் 1௦%,  நீச்சத்தில் ௦%..என்பது நம் வேத கால ரிஷிகள் வகுத்த ஜோதிட விதி.

·          அதே போல நவாம்சத்தின் பத்தாம் வீடான மீனத்தில் உள்ள சந்திரனின் சொந்த வீட்டில் சனி இருக்க, சனி இருக்கும் வீட்டில் குரு அமர, குருவின் வீட்டில் சந்திரன் அமர என்று இந்து மூன்று கிரகங்களுக்குள் பரிவர்த்தனை பெற்றுள்ளன.

·         செவ்வாய் தன எட்டாம் பார்வையால் புதனின் ஆட்சியில் உள்ள லக்கினத்தில் உள்ள சூரியனை பார்க்கிறார்.. அதே போல தன நான்காம் பார்வையால் சனியின் வீடான மகரத்தில் உள்ள கேதுவை பார்க்கிறார்.

அதே நிலையில் முதன்மை கிரகமான சனி இங்கே ராசி, லக்னம் இரண்டின் ஜீவன ஸ்தானத்திற்கும் சுபத்துவமாக, சூட்சும வலுவுடன் தொடர்பு கொண்டிருக்கிறார்.சனி, ஒரு ஜாதகத்தில் அதிக சுபத்துவமும், சூட்சும வலுவும் அடையும் கிரகத்தின் அமைப்பில் தொழில் அமையும் என்ற விதிக்கேற்ப, இந்த ஜாதகத்தில் சனி மட்டுமே அதிக வலுவுடன்  உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சட்டத் துறைக்கு முதல் நிலை கிரகம் சனியும்,  நீதித்துறைக்கு முதல் நிலைக் கிரகம் குருவும்  ராசி, லக்னத்தின் இரண்டு, பத்தாமிடங்கள் குரு, சனியின் தொடர்புகளை கொண்டிருக்கின்றன.  ராசிக்கு வாக்கு ஸ்தானமான ராசிக்கு 2ல் இருந்து, குரு  சனியை பார்த்து சுபத்துவப் படுத்துகிறார். நிறைவாக ராசிக்கு பத்தில் சூரியன், குரு பார்வையில் இருக்கிறார்.

  குரு, சனி இரண்டின் சுப ஆளுகையில் ஜாதகர் உள்ளதால்,  இளம் வயது முதல் குரு, சனி தசைகளில் சட்டத்துறை, நீதிமன்றம் என்ற அமைப்புகளுக்குள் இவர் இருக்க வேண்டியதாயிற்று

 பொதுவாக ஒருவர் பணம் புரளும் அமைப்புகளில் இருக்க வேண்டுமானால்,  ராசி, லக்னம் இரண்டிற்குமான பத்தாமிடத்தை குரு தொடர்பு கொள்ள வேண்டும் என்பது விதி. அதன்படி இவருக்கு ராசிக்கு பத்தில்  குரு, கேதுவுடன் கேளயோகத்தில் அமர்ந்து,உள்ளதால்  இவருக்கு வசதிக்கு குறைவிருக்காது..    .

எனவே சனி, குரு  சூரியன், சந்திரன்  மற்றும் செவ்வாய்  தொடர்பினாலும், பத்தாம்  பாவம் ராசியிலும் நவாம்சத்திலும் வலுவாக உள்ளதால்   ஜாதகர் சட்டப்பிரிவில் நீதி துறையில் அரசுடன் தொடர்பு கொண்டு இருப்பார் என்று நான் கணித்து கொடுத்ததற்கேற்ப  இருந்தது.

.

 

 

ஞாயிறு, 18 ஜூலை, 2021

ஒருவரை இழிவுபடுத்த, மற்றவர்களிடத்தில் மனித பலவீனங்களை ஏன் பயன்படுத்துகிறார்கள்? அவர் ஒரு குடிகாரன், போதை பொருள் பயனாளி என்று சொல்வதை விட முன்வைக்கப்பட்ட உண்மைகளை நாம் எதிர்கொள்ள வேண்டாமா?

 ஒரு வாரம் முன்பு வீட்டின் முன்பகுதியில் உட்கார்ந்து இருந்தேன்.வழக்கம் போல, காய்கறி விற்கும் பெண்மணி, தள்ளுவண்டியில் கொண்டு வந்து நிறுத்தினார். இவர் நிறுத்திய இடத்தில் பக்கத்து அபார்மென்டின் வாசல் பக்கம். அதனால் அந்த வாட்ச்மேன் அவரை சற்று தள்ளி நிறுத்த சொன்னார்..அதற்குள் வியாபாரத்தில் மும்முரமாகி விட்ட காய்கறிகாரம்மா அதை சட்டை செய்யவில்லை.. சிறிது நேரத்தில், அவர்களுக்குள் வாக்குவாதம் முற்ற, அவர் திட்ட, இவர் திட்ட என்று போய்.. கடைசியில், இந்த பெண்மணி அவரை 'போடா பொட்டை" என்று விட்டு வண்டியை நகர்த்திக் கொண்டு போனார்…

அடுத்த முறை அவர் வீட்டிற்கு காய்கறி கொண்டு வந்த போது கேட்டேன்..

"ஏம்மா.. அவரை கடுமையா திட்டனும்னு நினைச்சீங்க சரி….ஆனா உங்களை நீங்களே அவமானப்படுத்திக் கிட்டீங்களே!"

"என்ன சொல்றேம்மா…"

"ஒரு ஆணுக்கு அவன் ஆண்மையை தாக்கி பேசினால் வலிக்கும்ன்னு தான் அவனை விட கீழே இருக்கிறதா அப்ப அவன் நினைசுகிட்டு இருந்த பெண்ணாக அவனை ஏசுவாஙக. நீங்களும் அப்டி சொன்னா என்ன அர்த்தம்.?"

"….."

நிறைய பேருக்கு இது தான் பிரச்சினை…

எதிராளியின் கருத்தை ஏற்றுக்கொள்ளவோ அதற்கு மறுமொழி சொல்லவோ முடியவில்லை என்றால், அவரை தாக்க அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம், அவர் ஒழுக்கத்தை விமர்சனம் செய்வது தான்… அப்போது பிரயோகிக்கும் வார்த்தைகள் பூமராங் போல தன்னையே தாக்கக்கூடும் என்று நினைப்பதில்லை!!

காலம் காலமாக பெண்கள் சந்தித்து வரும் பிரச்சினையும் அது தான்…

ஒருவரை வசை பாட வேண்டும் என்றால் சம்பந்தேமேயில்லாமல் அவன் தாய், சகோதரி என்று அனைவரும் இவன் வாயில் மென்று துப்புவான்.!! கூட கொஞ்சம் அவனிடம் உள்ள கெட்ட பழக்கங்களும் எள்ளி நகையாடப்படும்.. இதில் வேடிக்கை என்னவென்றால் இவனிடமும் அந்த பழக்கம் இருக்கும். ஆனால் அதை மறைத்து வைத்திருப்பான்!!

அதுவே எதிராளி பெண் என்றால் கேட்கவே வேண்டாம்…

அவள் எடுத்து வைக்கும் வாதங்களுக்கு அவள் முன் பேச முடியாமல் திணறுபவர்கள், உடன் கையிலெடுப்பது அவள் நடத்தை குறித்து தான்.

அது அரசியல்வாதியாக இருந்தாலும் கூட…

இரும்பு மனுஷி ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, புதுவை கவர்னர் தமிழிசை …………இப்படி பெண் அரசியல்வாதிகள் சந்தித்த அவதூறுகள், இழி பேச்சுகள் தான் எத்தனை எத்தனை…..

இந்த படத்தை போட்டதன் காரணம் உங்களுக்கே தெரியும்!!

என்ன சொல்லப் படுகிறது என்று பார்க்கப் படுவதேயில்லை. யார் சொல்கிறார்கள் என்று தான் பார்க்கப்படுகிறது….

அதை நேரிடையாக எதிர்க்க நேர்மையான வாதங்கள் இல்லாதபோது, சொல்பவரை இழிவுபடுத்த துணிகிறோம்.

இது போல மற்றவர்களை உலவியல் ரீதியாக காயப்படுத்த எண்ணும் எண்ணம் ஏன் ஏற்படுகிறது?

அதற்கு காரணம் பெரும்பாலும் நம் மீது ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்த விரும்புகிறார்கள் என்று பொருள்.

இதைச் செய்வதற்கான எளிதான வழியாகத்தான் , நம்மை பற்றிய தனித்துவமான ஒன்றில், அது நல்ல பழக்கமோ, கெட்டதோ அதில் கவனம் செலுத்தி ...உடல் ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ நம்மை காயப்படுத்தும் நோக்கத்துடன் செய்து , நம்மை நாம் தற்காத்துக்கொள்ள இயலாத நிலையை உருவாக்குதல்.

சரி… இது போல மற்றவரை இழிபடுத்தும் எண்ணம் கொண்டவர்களின் மனோ நிலை தான் என்ன?

இதை பற்றி .உலகளாவிய இளைஞர் தொண்டு நிறுவனமான டிச் தி லேபிள் என்ற அமைப்பு பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களிடம் ஒரு ஆய்வு நடத்தியிருக்கிறார்கள்.

அதில் அவர்கள் கண்டு அறிந்தது:

இது போன்ற நபர்கள்

1. அதிக மன உளைச்சாலில் உள்ளவர்கள்

2. இந்த வகையான சீண்டல் 66 சதவீதம் ஆண்களுக்கு தான் இருக்கிறது என்றும கண்டுபிடிதுள்ளன்னர். இதற்கு என்ன காரணம்?

ஆண் பெரும்பாலும் தன உணர்வுகளை வெளிக் காட்டிக் கொள்ளக் கூடாது என்ற முறையிலேயே வளர்க்கபடுகிறான். ஆனால் பெண் குழந்தைகளை அவர்கள் தன் உணர்வுகளை வெளிப்படுத்த ஊக்குவிக்கப்படுத்தப்படுகின்றனர்.

ஆண் பிள்ள என்றால் அழக் கூடாது என்று சொல்லி சொல்லி அவன் தன மன உணர்வுகளை வெளிப் படுத்த வழியின்றி இது போன்ற சீண்டல்களில் இறங்குகிறான். ஆண்கள் சட்டென்று கைகலப்பில் இறங்கக் காரணமும் இது தான்.

3. தங்களைப் பற்றி அவர்கள் உண்மையில் எப்படி உணருகிறார்கள் என்பதை மறைக்க, சிலர் வேறொருவரை கொடுமைப்படுத்தும் செயலில் கவனம் செலுத்துகிறார்கள். இது போல திசை திருப்புவதன் மூலம் அவர்கள் மீது எதிர்மறையான கவனத்தைத் தவிர்ப்பதற்கு முயற்சி செய்கிறார்கள்

ஊரெல்லாம் மீட்டிங் போடுவார்கள். ஆனால் தன மனதோடு மட்டும் நோ மீட்டிங் …!! ஏனென்றால் வீட்டில் தனியே கண்ணாடியில் தன் முகம் பார்த்து தாங்கள் பார்க்கும் விதத்தை வெறுக்கக்கூடும் என்பதை அறிவார்கள் !!

௪. குறைந்த சுய மரியாதை கொண்டவர்கள்

அழகு மற்றும் உடற்தகுதி தரத்திற்கு ஏற்ப வாழ முடியாமல், இவர்களுக்கு நிறைய அழுத்தம் உள்ளது, தம்முடைய சொந்த அழகைத் போற்றுவதற்குப் பதிலாக,தம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள்!!.

5. கொடுமைப்படுத்துதலை அனுபவித்தவர்கள் தான் மற்றவர்களை இரு மடங்கு அதிகம் கொடுமைப்படுத்துகிறார்கள். கடந்த காலத்தில் அவர்கள் குழந்தைகளாக கொடுமைப்படுத்தப்பட்டிருக்கலாம், அல்லது இப்போது அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கலாம்.

6. பெரும்பாலும் இது ஒரு தற்காப்பு வழி முறையாகப் பயன்படுத்தப்படுகிறது, மற்றவர்களை கொடுமைப்படுத்துவதன் மூலம், அவர்கள் தங்களைத் தாங்களே கொடுமைப்படுத்துவதில் இருந்து விடுபடுவார்கள் என்று நம்புகிறார்கள். உண்மையில், இது எதிர்மறையான விளைவையே கொடுக்கும்.

7. இவர்களில் 3 ல் 1 பேர், தங்கள் பெற்றோர் / பாதுகாவலர்கள் அவர்களுடன் செலவழிக்க போதுமான நேரம் இல்லை என நினைக்கிறார்கள். தனிமை தான் இந்த நிலைக்கு அவர்களை கொண்டு சென்றுள்ளது.

8. நிபந்தனையின்றி அவர்களை நேசிக்க வேண்டிய மக்களிடமிருந்து நிராகரிப்பு உணர்வுகளை தான் பெரும்பாலும் பெற்றிருப்பார்கள்.

9. குறைந்த கல்வியறிவு

கல்விக்கான சரியான அணுகல் இல்லாமல், மற்றவர்களுடன் வெறுப்பு அடிப்படையிலான பேச்சு மட்டுமே வழக்கமாக இவர்களுக்கு இருக்கலாம். வெறுக்கத்தக்க பேச்சு என்றால் என்ன, மக்களை இழிவான முறையில் பேசுவது ஏன் பொருத்தமானதல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம்.

1௦. சீர்கெட்ட உறவுநிலை :

இறுதியாக, இவர்கள் தங்கள் நட்பு மற்றும் குடும்ப உறவுகள் மிகவும் பாதுகாப்பானவை அல்ல என்று உணர வாய்ப்புள்ளது. நட்பைப் பேணுவதற்காக, ஒரு குறிப்பிட்ட வழியில் நடந்து கொள்ளும்படி அவர்களுடைய உறவு, நட்புகளால் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்கப்படலாம். தங்களுக்கு அவர்கள் மிகவும் ஆதரவாகவோ அல்லது அன்பாகவோ இல்லை என்று நினைக்கலாம்.

எனவே இத்தககையோரை நேரிலோ வலைத்தளத்திலோ கண்டால் நாம் தான் அவர்களுக்காக இரக்கப்பட்டு அவர்களின் மனோநிலை மாற ஒத்துழைக்கலாம். !!

எப்படி?

பொதுவாக, இத்தகையோரின் விமர்சனங்கள் நம்மை வெகுவாக பாதிக்கின்றன. நம்மை அறியாமலேயே அதை உள்வாங்கத் தொடங்குகிறோம், உடனே நம்மை நாமே சுயவிமர்சனம் செய்ய துவங்குவோம். நம்மை ஏன் குறி வைக்கிறார்கள் என்ற காரணங்களை தெரிந்து கொள்ள விரும்புவோம். .

அடுத்து அதை தவிற்பதற்கு,, அந்த குணங்களை, குறைகளை அல்லது பழக்கங்களை மறைக்க முயல்வோம்.

இது கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் இளைஞர்களும் இளைஞிகளும் எதிர்கொள்ளும் பிரச்சினை. .அவர்கள் உடலின் நிறத்தை வெளுப்பாக்க முயல்வது… ஏதோ நம் உடல் வெறுக்கப்படக்கூடிய ஒன்று போல அதை மூடி மறைக்க முயல்வது…

மூத்த தலைமுறையினர் என்றால் தலைமுடிக்கு சாயம் போடுவது… நமக்கு விரூப்பமில்லாத நபர்களோடு உறவு கொள்ள முயல்வது .

இது நாளடைவில் நம் நடத்தை மற்றும் நாம் நம்மைப் பார்க்கும் வழிகளைப் பாதிக்கத் தொடங்குகிறது, கடைசியில் நம் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதில் போய் முடியும்…

அதனால் தான், நாம் விமர்சனம் செய்யபடுவதை இந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு. என்கிறார்கள் உளவியலாளர்கள்.

மற்றவர்கள் நம்மை உற்று நோக்கி விமர்சனம் செய்யும் வகையில் நாம் ஏதோ வகையில் வித்தியாசமானவர்கள்.என்று எடுத்துகொண்டு போய் விட வேண்டும்.

நீதிமன்றத்திலேயே ஒரு சாட்சியின் நம்பகத்தன்மையை குறைக்க இது போன்ற எள்ளி நகையாடுதலை குறுக்கு விசாரணையின் போது நீதிமன்றம் அனுமதிப்பது உண்டு. ஆனால் அதற்கு ஒரு வரையறை உண்டு…..

இது குறித்த பதிவு இங்கே…Blogger

நீதிமன்றங்களில் சாட்சியின் குறுக்கு விசாரணை செய்வது என்பது ஒரு கலை. அதில் மறைந்த பிரபல வழக்கறிஞர் எத்திராஜ் அவர்கள் பிரபலம்.

சேதிர் தரப்பு சாட்சியை சீண்டி விட்டு, கோபத்தில் அவரிடம் தனக்கு வேண்டிய பாயிண்டுகளை வாங்குவதில் அவர் கில்லாடி!!

இப்படிதான் ஒரு தடவை தனக்கு கட்டி கொடுத்த வீட்டில் தரம் சரியில்லை, கட்டிய சிறிது நாளிலேயே அதில் விரிசல் விட்டு விட்டது என்று கூறி அந்த பில்டர் மீது ஒருவர் வழக்கு போட்டார். பில்டருக்காக இவர் ஆஜர்…

புகார் தாரர் சாட்சி கூண்டில் ஏறி நிற்கிறார்..

எத்திராஜ் நிதானமாக நடந்து வந்து அந்த கூண்டின் அருகில் வந்து நின்றார்.

சாட்சிக்கு வியர்க்க ஆரம்பித்தது..

இவர் முதல் கேள்வியே இப்படித் தான் ஆரம்பித்தது

'ம்ம்ம். …சொல்லுங்கள்.. உங்களோடு சேர்த்து, உங்கள் வீட்டில் எத்தனை க்ராக்குகள்?"

…………..

வெள்ளி, 16 ஜூலை, 2021

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியர்களை அடக்குவதற்காக கொண்டு வரப்பட்ட தேசத் துரோகி சட்டம் நமது நாட்டுக்கு இப்பொழுது தேவைதானா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?

 சமீப காலமாக தான், தேசப்பற்று, தேசத்துரோகி எண்டேய வார்த்தைகள் அதிகம் கேட்கிறது…

காரணம்…அரசை எதிர்த்து , அதன் கொள்கை குறித்து விமர்சனம் செய்பவர்கள், தேசத்துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டு கேள்வி வரையறைI ஏதும் இல்லாமல் சிறையில் அடைக்கப்படுகின்றனர்..அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிண்றன. நாளுக்கு நாள் இந்த நடவடிக்கை அதிகமாகிறதே ஒழிய குறையவில்லை.

.2019 ஆம் ஆண்டில் மட்டும், மொத்தம் 93 தேசத் துரோக வழக்குகள் பதிவாகியுள்ளன, 76 வழக்குகளில் 96 கைதுகள் மற்றும் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, அதற்கு முந்தைய ஆண்டு 70 வழக்குகள், 56 கைதுகள் மற்றும் 27 குற்றப்பத்திரிகைகள்.முந்தைய ஆண்டை விட தேசத்துரோக வழக்குகளின் எண்ணிக்கையில் 25% மற்றும் 41% கைதுகள் அதிகரித்துள்ளன.

நன்றி. (HT காப்பகம்)

உச்சநீதிமன்றத்தில் இந்த நடவடிகைகளை எதிர்த்து போடப்படும் வழக்குகளும் அதிகமாகிக்கொண்டு வருகிறது..

மாண்புமிகுஉச்சநீதிமன்றமே , 75 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட இந்த சட்டப்பிரிவு இன்னும் தேவைதானா? என்று கேட்கிறது. நிறைய சட்டங்கள் காலத்திற்கு தகுந்தாற்போல இல்லை என்ற இந்திய அரசு இதை மட்டும் ஏன் கண்டு கொள்ளவில்லை என்று ஆச்சரியம் தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 124 A குறித்து விசாரணை நடத்த ஒத்துக்கொண்டுள்ளது..

அப்படியென்ன .அந்த சட்டப்பிரிவு சொல்கிறது என்பவர்களுக்கு …

ஐ.பி.சி.யின் பிரிவு 124 ஏ இன் கீழ், 'சட்டத்தால் நிறுவப்பட்ட அரசாங்கத்தின் மீது , எந்தவொரு நபரும் சொற்களாலோ, அல்லது வேறு எதனாலோ, அதிருப்தியைத் தூண்ட முயற்சிக்கும்போதும், வெறுப்பு அல்லது அவமதிப்புக்குள் கொண்டுவர முயற்சிக்கும்போதும் தேசத்துரோக குற்றம் செய்யப்படுகிறது".

ஆங்கிலேயர் காலத்தில் தேசத்துரோகி எனப்பட்டவர்கள் இன்று தியாகிகள் எண்று போற்றப்படுகிறார்கள்.

காரணம்..அப்போது இருந்தது அந்நிய அரசு..அதை எதிர்த்து விடுதலை குரல் எழுப்பியவர்களை நசுக்க கொண்டுவரப்பட்ட சட்டம் தான் அது.

ஆனால் இன்று ஆள்வது நம்முடைய அரசாங்கம்.. மக்களின சார்பில் அரசு நடத்த, தத்தம் பிரதிநிகளை மக்கள் தேர்ந்தெடுத்து, நாடாளுமன்றத்துக்கு அனுப்புகின்றனர்..எந்த கட்சிக்கு அதிக மக்கள் பிரதிநிகள் உள்ளனரோ அவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்கிண்றனர்..

ஆனால்..அந்தோ பரிதாபம்..

அனுப்பியவரை மறந்து, அரியாசனம் என்றும் தம்முடன் நிலைத்து இருக்க, எதிர்பபு காட்டும் நபர்களை தேசத் துரோகிகளாக அடையாளப்படுத்த முனைகிண்றனர்.. 

உண்மையில், தேசமே தாங்கள் தான் என்ற நச்சு எண்ணத்தில் எழுந்தது அது..

இதில் கொடுமை என்னவென்றால் அதிக பட்ச தண்டனை ஆயுள் தண்டனை.!! .ஆனால் விசாரணை முடியுறதுக்குள்ள ஆயுளே போயிடும்!!

உதாரணம் தான் சிப்பர் பாட்டில்...

https://twitter.com/JharkhandJanad1/status/1317013441786245120?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1317013441786245120%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fd-880957862570737204.ampproject.net%2F2107030008001%2Fframe.html

போலீசார் யாரையும் வாரண்ட் இல்லாமல், இந்த குற்றம் செய்தார்கள் என கைது செய்யலாம்.

போதை பொருள் வைத்த கேஸை விட கொடிது!!

முக்கியமா, அவர் கெட்ட உள்நோக்கத்துடன் தான் செய்தார் என்பது தானே ஒரு செயலை குற்றத்தன்மையில் கொண்டு வரும்..அது கூட தேவையில்லை..ஜாமீனில் வெளிவரமுடியாத மற்றும் கூட்ட முடியாத குற்றமாகும்

எமெர்ஜென்சி கால நினைவு வருகிறதா?

ஆங்கிலேயர் கொண்டு வந்த சட்டம் தான்..ஆனாலும், சுதந்திரத்திற்குப் பிறகு இந்த சட்டம் அடுத்து வந்த எந்த அரசாலும் நீக்கப்படவேயில்லை.. மாறாக, திருத்தப்பட்டுள்ளது, …அதுவும் எப்படி? அதை இன்னும் கடுமையானதாக மாற்றுவதற்காக மட்டுமே.!

இந்த சட்டப் பிரிவை நீக்குறவு செய்ய வேண்டிய தேவை குறித்து இப்போது உள்ள மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் பெஞ்ச் உட்பட இதுவரை, மூன்று பெஞ்சுகள், அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளன, .அதுவும் மிக சமீபத்திலேயே..

ஆனாலும் காது லேது!!

இப்படிப்பட்ட அரிய (?!) சட்டத்தின் வரலாற்றை கொஞ்சம் பார்த்தோமென்றாலேயே உங்களுக்கு புரிஞ்சிடும்…இது ஏன் ஆட்சியாளர்களுக்கு அவசிய தேவையா இருக்குன்னு..!!

ஆதியில் இந்திய தண்டணை சட்டத்தை , பிரிட்டிஷார் 1860ல் கொண்டுவந்தப்ப, இந்த தேச துரோக சட்டப்பிரிவே அதில் இல்லை!!

அப்புறம் எப்படி வந்தது?

1870ல் தான், "அய்யோ விட்டுப் போய்டுச்சுப்பா"ன்னு சொல்லிக்கிட்டே கொண்டு வந்து சேர்த்தாங்க!!

அப்புறம் இதுக்கு மூணு விளக்கங்கள் உண்டு.அதாகப்பட்டது..

"அதிருப்தி" என்பது விசுவாசமின்மை மற்றும் பகை உணர்வுகள் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும்போது, ​​வெறுப்பு, அவமதிப்பு அல்லது அதிருப்தியைத் தூண்ட முயற்சிக்காத கருத்துக்கள் ஒரு குற்றமாக இருக்காது என்று விதிகள் உள்ளன...

நம்ம வலைதள வீரர்கள் கவனத்திற்கு!!

இந்த சட்டப் பிரிவை கொண்டு தான், காந்திஜி, நேருஜி, பால கங்காதர திலக், பகத் சிங் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதிலே முதல் பலியாடு ஆனவர் திலக்ஜி தான்..அதுவும்  "கேசரி"யால!

கேசரி பிரியர்கள் பயந்துட வேண்டாம்…

இந்த கேசரி இல்லை....

திலகர் ஒரு பத்திரிகை நடத்தி வந்தார் ..அதன் பேர் தான் "கேசரி" அந்த சமயத்தில் நாடெங்கும் பிளேக் நோய் தலை விரித்தாடிய காலம்..

ஆமாம்..ரிப்பன் காணாம போச்சாம்😀

இந்தக்  கொள்ளை நோய் தடுப்பு நடவடிக்கையை அரசு சரியா செய்யலைன்னு நாட்டு மக்களை அரசுக்கு எதிரான தூண்டுறார்னு அவர் மேல இதே பிரிவில் கேசு.

அது பிளேக்…இது கொரானா!!

இதே பம்பாய் ஹை கோர்ட்டு தான் விசாரிச்சுது..9 ஜட்ஜ்கள். அதில் ஆறு பேர் வெள்ளைக்காரர்கள்..மூன்று இந்தியர்கள்..6:3 கணக்கில் திலகர் குற்றவாளினு தீர்ப்பாகி, 18 மாசம் சிறைத்தண்டனை!!

காட்சி மாறுது..1937..இப்போவும்  இதே சட்டப்பிரிவு.ஆனா வேற கலர் பிரஷ்!

ஏன்னா புதுசா ஃபெடரல் கோர்ட்டு வந்துருக்கு..அதுக்கு மேல லண்டனலே இருக்கிற பிரிவி கவுன்சில்..

1942ல் விசாரணைக்கு வந்த ஹரேண்டு தத் மஜும்தார் Vs கிங் பேரரசர் வழக்கில்,

"பொது ஒழுங்கீனம் அல்லது அதற்கான நியாயமான எதிர்பார்ப்பு அல்லது சாத்தியம் இது தான் குற்றத்தின் சாராம்சம்." என்றது ஃபெடரல் கோர்ட்டு .

.ஆனால் அதை பிரிவி கவுன்சில், 1947ல்,  தன் முன்னர் வந்த பேரரசர் Vs சதாஷிவ் நாராயண் பலேராவ், வழக்கில், ஏற்க மறுத்துவிட்டது .

"அவளோ தூரம் ஏம்பா போறீங்க…இதோ பாருங்க"ன்னு திலக்கின் வழக்கில் சொன்னதை ஏற்றுக்கொண்டு, , வன்முறையைத் தூண்டுவது, தேசத்துரோக குற்றத்திற்கு ஒரு முன்நிபந்தனை அல்ல என்றும், பிரிவு 124 ஏ இன் கீழ் குற்றத்தை நிலைநாட்ட அரசாங்கத்திற்கு எதிராக உள்ள பகை உணர்வுகளை உற்சாகப்படுத்துவது மட்டுமே போதுமானது என்றும் தீர்ப்பளித்தது..

அதுக்கப்புறம் சுதந்திரம் கிடைச்சுதா..

பேச்சுக்கு, கருத்து சொல்வதற்கு சுதந்திரம் வேணும்னு அதுக்கு எதிரானதாக, அரசியலமைப்பு சட்ட வரைவில் சேர்க்கப்பட்டுள்ள “தேசத்துரோகம்” என்ற வார்த்தையை அகற்றுவதற்கான ஒரு திருத்தத்தை, கே.எம்.முன்ஷி நகர்த்தினார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரசியலமைப்பு சட்ட வரைவிலிருந்து 1948 ஆம் ஆண்டில் "தேசத்துரோகம்" என்ற வார்த்தை கைவிடப்பட்டது. நவம்பர் 26, 1949 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தில் தேசத்துரோகம்" என்ற சொல் மறைந்துவிட்டது,

இது பிரிவு 19 (1) (அ) பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு முழுமையான சுதந்திரத்தை அளித்தது. என்றாலும், இந்திய தண்டனை சட்ட பிரிவு 124 ஏ ஐபிசியில் தொடர்ந்து தங்கியிருந்தது..இருக்கிறது…

கொண்டையை மறைக்கலியே!!

அப்புறம் நமக்கு தான் வரலாறு தெரியுமே..

1951 ஆம் ஆண்டில், ஜவஹர்லால் நேரு அரசியலமைப்பு சட்டத்தின் கொண்டு வந்த முதல் திருத்தம் என்னன்னு..,

"ரொம்ப ஓவரா பேசுராய்ங்க.."னு, 19 (1) (அ) இன் கீழ் உள்ள சுதந்திரமான பேச்சை. மட்டுப்படுத்தி, 19 (2) வது சட்டத்தை கொண்டுவந்தார்.

அவர் அப்படி சட்டத்திருத்தம் கொண்டுவந்ததுக்கு காரணம் இருக்கு…

இந்த சட்டப்பிரிவு 124 A, எதிர்த்து, சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக அப்போதைய பஞ்சாப் உயர்நீதிமன்றத்தால் 1951 ஆம் ஆண்டில் தாரா சிங் கோபி சந்த் Vs மாநிலம் என்ற வழக்கு போடப்பட்டது.

பிரிவு 124 ஏ என்பது சந்தேகத்திற்கு இடமின்றி பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு ஒரு தடை என்று உயர் நீதிமன்றம் கருதியது, இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 19 வது பிரிவின் கீழ் வரும் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படை உரிமைக்கு முரணானது என்ற அடிப்படையில் இந்த 124 A செல்லாது என்று தீர்ப்பு அளித்தது.

.இந்த தீர்ப்புதான் ஜவஹர்லால் நேரு அரசாங்கத்தை பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை நியாயமான முறையில் கட்டுப்படுத்தக்கூடிய புதிய காரணங்களை அறிமுகப்படுத்தத் தூண்டியது.

சரி.அந்த சட்டப்பிரிவு 124 A செல்லாதுன்னு சொன்னது?

1954 ஆம் ஆண்டில், பாட்னா உயர்நீதிமன்றம், டெபி சோரன் மற்றும் பலர் Vs மாநில அரசு, என்ற வழக்கில், பிரிவு 124 ஏ செல்லுமனு உறுதி செய்தது, இந்த பிரிவு எந்த வகையிலும், சட்டத்தின் 19 வது பிரிவை மீறவில்லை என்று கூறியது,.அப்புறம் ஒரு நான்கு ஆண்டுகள் கழித்து,, அலகாபாத் உயர் நீதிமன்றம், ராம் நந்தன் Vs மாநிலம் என்ற வழக்கில் அந்த பிரிவு செல்லாது என்றது. மக்கள் ஒப்புதல் அல்லது மறுப்பு மட்டுமில்லாமல், ஒரு வலுவான எதிர்ப்பை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும் என்றது.

இப்படியே உயர்நீதிமன்றங்களின் பல்வேறு மாற்று கருத்துக்களிலிருந்து , ஒரு புரியாத புதிரா இருந்ததுக்கு, இறுதியாக உச்சநீதிமன்றத்தால் 1962 ஆம் ஆண்டில் கேதார் நாத் வழக்கில் தான் விடை வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பு தான், இன்னி வரைக்கும், தேசத்துரோகச் சட்டத்தின் விளக்கம் குறித்த உச்சநீதிமன்றத்தின் மிகவும் அதிகாரப்பூர்வ தீர்ப்பாகக் கருதப்படுகிறது. ஐபிசியின் கீழ் வரும் தேசத்துரோகச் சட்டத்தின் செல்லுபடியை இந்த அரசியலமைப்பு பெஞ்ச் உறுதிசெய்தது,

"தேசத்துரோக குற்றத்தின் நோக்கம் சட்டத்தால் நிறுவப்பட்ட அரசாங்கத்தைத் தகர்த்துவிடுவதைத் தடுப்பதாகும், ஏனெனில் “மாநிலத்தின் ஸ்திரத்தன்மை என்பது, சட்டத்தால் நிறுவப்பட்ட அரசாங்கத்தின் தொடர்ச்சியான இருப்பு ஒரு முக்கிய நிபந்தனையாகும் ”.என்றது.

அதே நேரத்தில், ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் பிரிவு 124 ஏ இன் நோக்கத்தை வரையறுக்கவும் செய்தது.

"பிரிவு 124 ஏ என்பது, சட்டம் மற்றும் ஒழுங்கைத் தொந்தரவு செய்யும் நோக்கத்தையோ போக்கையோ வெளிப்படுத்தும் அல்லது வன்முறையைத் தூண்டக்கூடிய சொற்களை மட்டுமே தண்டிக்கிறது.

வன்முறையைத் தூண்டுவதற்கான ஒரு தீங்கு விளைவிக்கும் போக்கு தான், தேசத்துரோக விதிமுறையைத் தூண்டுவதற்கான முன் நிபந்தனை என்றும், சுதந்திரமான பேச்சைத் தடுக்க தண்டனை விதிமுறை பயன்படுத்தப்படாது என்றும் உச்ச நீதிமன்றம் கோடிட்டுக் காட்டியது.

பிரிவு 124 ஏ தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் இந்த வரையறை தான் முன்னுதாரணமாக எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு பிறகு வந்த இந்திரா காந்தி அம்மையார் எமெர்ஜேணசி கொண்டு வந்தவங்களாச்சே…

அவர் அர்சாங்கம்தான் பிரிவு 124 ஏவை இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக வாரண்ட் இல்லாமல் கைது செய்யக்கூடிய குற்றமாக மாற்றியது. 1974 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்து, காலனித்துவ சகாப்தமான 1898 குற்றவியல் நடைமுறைகளை ரத்து செய்த 1973 ஆம் ஆண்டின் புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில், தேசத்துரோகம் ஒரு அறிவாற்றல் குற்றமாக மாற்றப்பட்டது.

பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், ஒரு சினிமா தியேட்டருக்கு வெளியே, நின்றுக்கொண்டு, சீக்கிய பெரும்பான்மை அரசுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பிய இருவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டுகளை அரசு போட்டது.1995 ல் விசாரணைக்கு வந்த இந்த ல்வந்த் சிங் மற்றும் அன்ர் வழக்கில், மான்புமிகு உச்சநீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்தது. "கோஷங்கள் எழுபவது, எந்தவொரு இடையூறுக்கும் வழிவகுக்காததால், தேசத் துரோக நடவடிக்கை இல்லை என்றும், அது பார்வையாளர்களின் மனதில் எந்தவிதமான வன்முறையையும் தூண்ட வாய்ப்பில்லை என்றும் சுட்டிக்காட்டிய நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது..

2011 ல் இந்திர தாஸ் Vs அஸ்ஸாம் மாநிலம் மற்றும் அஸ்ஸாம் அரூப் புயான் Vs அரசு என்ற இரண்டு தீர்ப்புகள் மூலம், உச்சநீதிமன்றம் சந்தேகத்திற்கு இடமின்றி மீண்டும் கூறியது, "உடனடி சட்டவிரோத நடவடிக்கைக்கு தூண்டுதல்" என்ற பேச்சு மட்டுமே, ஒருவரை குற்றவாளியாக்க முடியும். என்றது. அதே போல, தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பின் உறுப்பினர் ஒருவரை வன்முறைச் செயல்களில் ஈடுபடுத்தியதாக நிரூபிக்கப்படாவிட்டால் அல்லது உடனடி வன்முறைக்கு மக்களைத் தூண்டவில்லை எனில் அவரை குற்றவாளியாக்க முடியாது என்றும் கூறியது.

ஆனாலும் ஒன்றிய அரசு, தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் உறுப்பினர் என்ற அம்சத்தின் அடிப்படையில் இந்த தீர்ப்புகளை மறுஆய்வு செய்ய கோரியுள்ளது.

இந்திய சட்ட ஆணையம், ஆகஸ்ட் 2018 இல் வெளியிட்ட தேசத் துரோகம் பற்றிய ஆலோசனைக் கட்டுரையில், தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க தேசத்துரோகக் குற்றத்தைத் தக்கவைத்துக்கொள்வது அவசியம் என்றாலும், சுதந்திரமான பேச்சைக் கட்டுப்படுத்த இது ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்றது.

ஆனாலும், தேசிய குற்றப் பதிவு பணியகத்தின் (என்.சி.ஆர்.பி) தரவுகளின்படி, தேசத்துரோக வழக்குகள் மற்றும் கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் 2019 ல் உயர்வு காணப்பட்டது, ஆனால் இவற்றில் 3% மட்டுமே தண்டனை கிடைத்தது.

அதாவது, 2019 ல் தேசத்துரோகத்திற்காக கைது செய்யப்பட்ட 96 பேரில், இருவர் மட்டுமே குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளனர், 29 பேர் விடுவிக்கப்பட்டனர் என்று உள்துறை அமைச்சகம் பிப்ரவரி மாதம் எழுத்துப்பூர்வமாக மாநிலங்களவைக்கு அறிவித்துள்ளது.

இவையெல்லாம் எதைக் காட்டுகிறது..?

உண்மை தான்...

தம் அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவிட்டு ஒன்றுமே நடவாதது போல அமைதியாக இருக்கும் அதிகார வர்க்கத்தையும், தேவையில்லாமல் பேசிப்பேசியே பொழுதை போக்கும் நம் மக்களையும் பார்க்கும் போது….

வாழ்க ஜனநாயகம்!!💐

வியாழன், 15 ஜூலை, 2021

நடிகர் விஜய்க்கு நீதிபதி கூறும் அறிவுரை தேவைதானா?

 அது பேருக்கு தான் அவருக்கு..மறைமுகமா, தலைவனும் வருஙகால முதல்வர்ன்னும் சொல்ற இளைஞர்களுக்கு தான்…அது..

இப்படி வந்து சுற்றுசூழலுக்கு ஆதரவா காட்டிட்டு போஸ் கொடுத்தவர் இல்லையா?

நம்ம ஆட்களும் தலைவானு பின்னாடியே ஓடலை?

எங்க தளபதியை மாதிரி உண்டான்னு கேட்கலை?

உண்மையான ஹீரோக்களாக தங்கள் ரசிகர்களால் பார்க்கப்படும் நடிகர்கள் “ரீல் ஹீரோக்களாக இருக்க முடியாது.” ங்கிறது தானே அந்த உத்தரவின் அடிநாதம்.

நீங்களும் நானும் இப்படி ஒரு காரை வாங்க முடியுமா? ஆறு கோடி ரூபாய்க்கு சொகுசு கார் வாங்க அவரால் முடியுதுன்னு சொன்னால் அது யாரால்?

முதல் நாள் முதல் ஷோவுக்கு போய் பார்த்தா தான் ஆச்சுன்னு போய் பண்டிகைக்கு முந்தின நாளே தியேட்டர் வாசலில் காத்து கிடந்து டிக்கெட் வாங்கி பார்த்து புளகாங்கிதப்படுறாங்க ளே, அந்த கோடிக்கணக்கான ரசிகர்களின் பணத்தில் தானே இந்த காரை வாங்கியிருக்கார்?

அப்ப அவங்க உணர்வுகளுக்கு மரியாதை குடுக்க வேண்டாமா? இல்லே இவங்களுக்காவது புத்தி தெளிய வேண்டாமா? அதற்கு தான் இந்த காரசாரமான தீர்ப்பு!💐.

அட. ஆறு கோடி ரூபாய் குடுத்து வெளிநாட்டு காரை வங்கிறவருக்கு, உள்நாட்டுக்கு…மூச்சுக்கு முன்னூறு தரம் என் உயிர் தமிழநாட்டுக்குனு சொல்லும்போது, அதுவும் ஒட்டு மொத்த ரசிகர் பட்டாளமே கேள்வி கேட்காம, வரி கட்டி வண்டி எடுக்கும்போது, இவர்க்கு மட்டும் எதுக்கு வரி விலக்கு வேண்டுமாம்? ஒரு 20% வரி கட்ட முடியாதாமா? அது கூட இறக்குமதி செய்யப்பட்ட கார் என்பதால் தான் அவ்ளோ வரி!.அதை கட்ட பிடிக்கலையா, உள்ளூர் காரை வாங்க வேண்டியது தானே?

இது போன்ற நடிகர்கள் தானே ஆட்சியாளர்களாக மாறி இருக்காங்க.அந்த ஆசை அவருக்கும் இருக்க போயிதானே அரசியல் நெடி கலந்த பன்ச் டயலாக்கு அடிக்கிறதும், அவங்கப்பா கட்சி ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கிறதும், இவர் அது வேனா..ம்ன்னு சொல்ற மாதிரியே..

அதுனால தான் நீதியரசரும், "தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில், அவர்கள் ‘ரீல் ஹீரோ’ போல நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதில்லை. வரி ஏய்ப்பு என்பது ஒரு தேசிய விரோத பழக்கம், அணுகுமுறை மற்றும் மனநிலை மற்றும் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டது என்று கருதப்பட வேண்டும், ”னு காட்டமா கடிச்சு துப்பிட்டார்.!!

இவர் வெளிநாட்டிலேயிருந்து பிளைட் பிடிச்சு நேரா ஓட்டு போட வரமாதிரி ,  சமுக கடமை ஆத்துணமாதிரி வந்த படத்தையம்,  லஞ்ச லாவண்யம் எல்லாத்தையம் எதிர்த்து கழுத்து நரம்பு புடைக்க பேசின வீர வசனத்தை எல்லாம் ஜட்ஜும் பார்திருப்பாருள்ளே..

அதான்."இந்த நடிகர்கள் சமூக நீதியைக் கொண்டுவருவதற்காக தங்களை சாம்பியன்கள் போல சித்தரிக்கின்றனர். அவர்களின் திரைப்படங்கள் சமூகத்தில் ஊழலுக்கு எதிரானவை. ஆனால் அவர்கள் வரியைத் தவிர்த்து, சட்டங்களின் விதிகளுக்கு இணங்காத வகையில் செயல்படுகிறார்கள்" , ”என்று செவிட்டிலேயே நாலு சாந்து சாத்திட்டார!!

இப்ப அந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் வந்த நேரம், கூட ஒரு லட்சம் ருபாய் தெண்ட செலவுனு சொல்ல முடியாது..

ஏன்னா ஏற்கெனவே 2020ல் கோரனாவுக்கு என்று முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுத்த 50 லட்சம் ரூபாய், இப்ப தான், சரியா, மொய் எழுதுற மாதிரி "51 லட்சம்ன்னு ரவுண்டா ஆகும்! அதுவும் வேற.. புது முதல் அமைச்சரிடம் டொனேஷன் இன்னும் குடுக்களையே ..இதையே சாக்கா வச்சிக்கிட்டு, போயி தியேட்டர் திறக்க கேட்டுக்கலாம்..

இதுலே ஆச்சரியம் என்னன்னா, கோர்ட்டில் போட்ட கேசில தான் நடிகரணனே சொல்லல!!

'Prompt Payment of Tax Makes One A Real Hero': Madras High Court Dismisses Tamil Actor Vijay's Plea Against Entry Tax On Rolls Royce Car With 1 Lakh Cost
The Madras High Court has dismissed a petition by Tamil Actor Vijay in

ஏற்கெனவே இதே போல ஒரு கேஸ் போட்டு அது "டிஸ்மிஸ்" ஆச்சு..எதுவும் வம்பா போகலை..அதுனால தான் இந்த தடவையும் "கல்லை எரிஞ்சு பார்ப்போம்..விழுந்தா பழம்"னு போயிருக்காங்க..ஆனா குறி தவறி தலையிலேயே விழுந்துடுச்சு!!

ஆனா, இது அவருக்கு மட்டும் கிடைச்ச அறிவுரையா எடுத்துக்க கூடாது..

கவர்ச்சியான முகத்துக்கு பின்னாடி ஓடுற நமக்கு கிடைச்சது இது!

வரிசையா நம்ம தமிழ்நாட்டில் தான் நடிகர்களை வெறும் நடிப்புக்கு மட்டும் கொண்டாடாம, நாட்டுக்கே தலைவரா ஆக்கும் மனோபாவம் இருக்கு.

இது மாதிரி, சுதந்திரம் அடைந்த காலத்திலும், அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வெறும் கவர்ச்சியை மட்டும் அடிப்படையா வச்சு அரசியலுக்கு வர்றதை வெறுத்த சட்ட மேதை அம்பேத்கர் அரசியலுக்கு வர விரும்புவோருக்கு என்றே ஒரு பள்ளி ஆரம்பிச்சார்..

என்னது.ஸ்கூளான்னு கேட்காதீங்க..இன்னிக்கு நிறைய யூனிவேர்சிட்டியிலேயே நிறைய டிபார்ட்மெண்ட்களை ஸ்கூல்ன்னு தான் சொல்றாங்க!!

அது அவர் இறந்த பிறகு மோடியாச்சு..சாரி.. மூடியாச்சு!!

நல்ல தலைமைக்குணம் என்னன்னு நாம கத்துக்கொள்ளும் வரையில் இந்த மாதிரி ஜிகினாக்களை தங்கம்னு ஏமாந்து போவது அதிகமாத் தான் இருக்கும்~~

அதுக்கு நான் மட்டும் என்ன செய்ய முடியம்? ஊரே மோசமா கிடக்குதுன்னு சொல்வோமா…அப்ப ஒரு சின்ன கதை..

ஒரு கடற்கரையில் நின்றிருந்த குருநாதர் கரையில் ஒதுக்கப்பட்டிருந்த நட்சத்திர மீன்களை ஒவ்வொன்றாகப் பிடித்து கடலில் விட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த இளைஞன் ஒருவன் அவரிடம் ஏளனமாக 'என்ன செய்கிறீர்கள்?' எனக் கேட்டான்.

'அலைகள் இந்த மீன்களைக் கரையில் ஒதுக்குகின்றன. சூரிய ஒளிபட்டு இவை இறந்துவிடும். அதனால் தினமும் காலையில் வந்து அவற்றை மீண்டும் நீரில் விடுகிறேன்' என்றார் அவர்.

'அதனால் என்ன பயன்? ஒவ்வொரு நாளும் எவ்வளவோ மீன்கள் இப்படி இறக்கின்றன. அவை அனைத்தையும் உங்களால் காப்பாற்ற முடியுமா?' என எகத்தாளமாகக் கேட்டான். அவனுடைய எண்ணம் அவரைச் சீண்டிப் பார்க்க வேண்டுமென்பது.

ஆனால் குருநாதர் சிறிதும் சலனப்படவில்லை. அமைதியாக 'என் செயலால் மீன்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. இருந்தாலும் இதோ என் கையிலுள்ள இந்த மீனுக்கு மரணத்திலிருந்து வாழ்வு என்ற மாற்றம் கிட்டும் அல்லவா?' என்றார்.

அந்த பதில் இளைஞனுக்கு ஓர் உண்மையை உணர்த்தியது.

அதாவது ஒரு தனி மனிதன் சமூகத்தில் பெரிதாக எந்த மாற்றத்தை உண்டாக்கிவிட முடியும் என நாம் நினைக்கலாம். ஆனால் நல்ல மாற்றங்களை நம்மைச் சுற்றி இருப்பவர்களிடையே, நம்மைச் சார்ந்தவர்களிடையே கொண்டு வர முயற்சித்தால் போதும், ஒரு நல்ல குடிமகன் என்ற முறையில் நமது பங்கை ஆற்றியவர்கள் ஆவோம்.💐💐

செவ்வாய், 13 ஜூலை, 2021

இலவச கல்வி உரிமைச் சட்டம் (RTE) எப்பொழுது வந்தது? உண்மையில் தனியார் பள்ளியில் படிப்பவர்களுக்கு 25% இடம் தர வாய்ப்பு உள்ளதா? இது சாமானிய மனிதர்களுக்கு எந்த அளவில் பயன்படும்?

 நமது மாநில அரசால் நடத்தப்படும் இந்த வலைத்தளத்தில் போய் பாருங்கள்..

https://rte.tnschools.gov.in/home?returnUrl=%2Freg-parent

மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில்,கல்வி உரிமை (ஆர்.டி.இ) சட்டம், 2009 ன் கீழ் வருகின்ற நுழைவு நிலை வகுப்புகளுக்கான சேர்க்கைக்காக, இந்த ஆர்டிஇ போர்ட்டல் மூலம், மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநரகம் விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுத்ததும் கடந்த இரண்டு வாரங்களாக சேர்க்கை தொடங்கிவிட்டதும் உங்களுக்கு தெரியும் தானே?!!

.இந்த ஆண்டு மட்டும் , மாநிலம் முழுவதும் சுமார் 8,000 பள்ளிகளில் 1.13 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் சேர்க்கைக்காக உள்ளன.

இந்த சட்டத்தை பற்றி இந்த லிங்கில் விவரம் உள்ளது.👇

https://sankatamthavirkumsattam.blogspot.com/p/blog-page_37.html

ஆனால் 2009ல் இந்த சட்டம் போட்ட போது, கட்டாயமாக அனைத்து கல்வி நிறுவனத்தில், நுழைவு நிலை வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்கும்போது, 25% இந்த சட்டத்தின் கீழ் வரும் பொருளாதார வசதியில்லாத குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று உள்ளது, அது தங்கள் தொழில்/வியாபாரம் நடத்தும் உரிமையை பாதிக்கிறதுன்னு சொல்லி தனியார் பள்ளிகள் கேஸ் போட்டன..

ஆறு முதல் 14 வயது குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்கும் இந்த சட்டத்தால் அவர்களுக்கு என்ன பிரச்சினை?

இருக்கிறதே..அந்த சட்டம் போட்டது, அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 15 (5) மற்றும் 21-ஏ ஆகியவற்றின் கீழ் அல்லவா?.

இந்த அரசியலமைப்பு சட்டத்தில் 93 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம், 2005 ல் , பிரிவு 15 இல் ஒரு உட்பிரிவாக (5) சேர்க்கப்பட்டது..

அதன் படி, எஸ்.சி., எஸ்.டி மற்றும் சமூக / கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பை சேர்ந்த குழந்தைகள், தனியார் உதவி பெறாத நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சேருவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை அரசு செய்யலாம் ,

அதே போல சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தவிர ஏனைய கல்விநிறுவனங்கள். 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்க 21 ஏ பிரிவைச் சேர்த்ததன் மூலம், கல்விச் சட்டம் 2009 இல் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது..

: இதை எதிர்த்து, பிரமதி கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளை தொடர்ந்த வழக்கில் தான் அரசியல் சாசன பெஞ்சு அந்த சட்டத்திருத்தம் சரியானது என்றும், எந்த தொழிலுக்கும். அது இடையூறு இல்லையென்றது.

SC upholds constitutional validity of RTE Act

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்த சட்டத்தினால் சுமார் 80 லட்சம் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர் என்கிறார்கள்.

ஆனாலும் இதில் உள்ள குறைகள் (மேலே லிங்கில் உள்ளது) இன்னமும் களையப்படாமல் உள்ளது.

குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறுவதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று, அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட சுற்றளவில் அரசு பள்ளிகள் இல்லாதது..

அந்தக் கோரிக்கையை பூர்த்தி செய்வதற்காக, அரசாங்கம் அதிகமான பள்ளிகளைக் கட்டியிருக்க முடியும் என்றாலும், தரக் கட்டுப்பாடு மற்றும் ஏற்கனவே எண்ணிக்கையில் குறைவாக உள்ள ஆசிரியர்கள், ஊழியர்கள பணியமர்த்துவதற்கு சாத்தியமில்லை. எனவே, சமூக-பொருளாதார பின்னணியையும் பொருட்படுத்தாமல் அனைத்து குழந்தைகளையும் பூர்த்தி செய்ய ஏற்கனவே செயல்பட்டு வரும் பள்ளிகளில் சேர்ப்பதை உறுதி செய்ய அரசாங்கம் தலையிட்டது..

துரதிர்ஷ்டவசமாக, இந்த தலையீடு தான், விரும்பிய அளவுக்கு இல்லை. ஒவ்வொரு ஆண்டும் ஆர்டிஇ வழியாக கிடைக்கும் இடங்களில் 1/3 இடங்கள் மட்டுமே நிரப்பப்படுகின்றன, இது 2/3 இடங்கள் காலியாக இருப்பதை தான் குறிக்கிறது.

ஆனால் ஒன்று கவனித்தீர்களா?

தடுக்கி விழும் இடமெல்லாம் தனியார் பள்ளிகள் உள்ள காலம் இது.. அரசாங்கம் சொந்தமாக புதிய பள்ளிகளை உருவாக்கவில்லை. இது அவர்களுக்கு ஒரு சாதகமான சூழ்நிலை!

கல்விக்கு கட்டணம் மாதத்திற்கு ரூ .2,000-4,000 வரை , தகுதியற்ற ஆசிரியர்கள், அவர்களுக்கு குறைவான ஊதியம் கொடுத்து, இந்த பக்கம் அவர்கள் உழைப்பை சுரண்டுவது என்று ஏகப்பட்ட பிரச்சினைகள்!!

இந்த நிலையில் கல்வி உரிமை சட்டத்தில், இலவச கல்வி அளிக்க அரசு முனைப்பாக இருந்தும் ஏனிந்த காலியிடம் ?

எந்த அரசு திட்டம் என்றாலும் அதன் தாக்கம் குறித்த ஆய்வு அவசியம்..அது இல்லாததால் தான் நிறைய அரசின் நிறைய திட்டங்கள் தோல்வியை தழுவின.

…இந்த இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தையே எடுத்து கொள்ளுங்கள்..

குறைந்தபட்ச முதலீட்டைக் கொண்டு அதிகபட்ச பயன்பாட்டைப் பெறும் திட்டம் இது. இதன் செயல்பாட்டினால், நாட்டின் உள்ளேயும் வெளியும் நிறைய தாக்கத்தை ஏற்படுத்த கூடியது..ஆனாலும்…இதற்கு ஃபீடபேக் என்னும் பின்னூட்ட வழிமுறை இல்லை.

இந்த பின்னூட்டங்கள் இருந்தால் தான், சட்டத்தின் செயல்பாட்டில் உள்ள ஓட்டைகள் தெரியும்..

சரி..அரசு கேட்கவில்லை என்றாலும் என்ன….

நாம் கண்டு அறிந்ததை சொல்வோம்…

ஆர்டிஇ சட்டம் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்று மதிப்பிடப்பட்டதை பலவீனப்படுத்திய ஓட்டைகள் இங்கே:

  1. மக்களின் முழு பங்களிப்பு இருந்தால் மட்டுமே எந்த திட்டமும் வெற்றியடையும்.அது அவர்களின் நன்மைக்கானது என்றாலும். இந்த சட்டம், பயனாளிகள் அதன் சிறந்த அம்சத்தை மக்கள் தாங்களாகவே புரிந்துக் கொண்டு தங்கள் குழந்தைகளைத் பள்ளிகளில் சேர்ப்பார்கள் என்று கருதுகிறது. உண்மை என்னவென்றால், இந்தியாவில் எந்தவொரு சட்டத்தையும் , குறிப்பாக, இது பின்தங்கிய மக்களுக்கு உள்ள ஒரு நலன்புரிச் சட்டம் என்பது பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இல்லை. அரசும் செய்திகள் போன்றவற்றின் மூலம் அதை விளம்பரப்படுத்தாது. அதனால் தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டாலும், பல பயனாளிகளுக்கு இந்த சட்டம் இருப்பதைப் பற்றி எதுவும் தெரியாது. இத்தகைய சூழ்நிலைகளில், தேவை மற்றும் வழங்கல் இரண்டும் இருந்தாலும், இது குறித்த விழிப்புணர்வு இல்லை.
  2. அடுத்தது இது மத்திய அரசு கொணர்ந்த சட்டம் அல்லவா? இதற்கு மாநிலங்களின் பங்கேற்பு பற்றாக்குறை

,இந்த சட்டத்தின் மையப்படுத்தப்பட்ட தன்மை காரணத்தினால், அதன் செயல்பாட்டில் மாநில அரசின் பங்கு குறித்த திட்டம் இல்லை..ஆர்டிஇ சட்டத்தின் நோக்கம் பாராட்டத்தக்கது என்றாலும், மாநிலத் தலைமையின் கீழ் ஒரு நிலையான செயல்படுத்தல் செயல்முறை இல்லாதது தான் இந்த சட்டத்தின் மிக பெரிய ஓட்டை. பல மாநிலங்களில் பள்ளிகள் இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தாததால் குழந்தைகளுக்கு பள்ளியில் உள்ள சேர்க்கை இடங்களை அணுகக்கூடிய நிலையில் இல்லை.

மையப்படுத்தப்பட்ட செயல்முறைக, விரைவான சேவை வழங்கலுக்கு வேண்டுமானால் நல்லது. ஆனால் செயல்படுத்த வேண்டியவைகளுக்கு, மாநில அரசாங்கத்தின் ஆதரவு இல்லாமல், வெற்றி கொள்ள முடியாது.

3. மாணவர்களுக்கான சேர்க்கை சோதனைகளின் தரமற்ற தரம்

ஆர்.டி.இ ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை அனுமதிப்பது குறித்து, பள்ளிகளுக்கு அவர்களின் வழக்கமான சேர்க்கை பரிட்சை மூலம் குழந்தையை மதிப்பீடு செய்வதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மதிப்பீடு, வகுப்பறையில் சீரான தன்மையைக் கொண்டுவரவும், பள்ளியில் சேரும்போது மாணவர்களின் தயார்நிலையை அளவிடவும் ஆசிரியர்களுக்கு உதவுவதாக இது கருதப்பட்டாலும், இதைக் கொண்டு , அந்த சேர்க்கையை தவிற்பதற்கான கருவியாகவும் அது மாறியுள்ளது. .

பல பள்ளிகளில், இந்த சட்டத்தின் மூலம் சேர்க்கை பெற விரும்பும் குழந்தைகளுக்கு பரீட்சை தனித்தனியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அது கடுமையாகவும் , குறைந்த செயல்திறனை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாணவரை நிராகரிக்க இரண்டு தரங்களாகவும் இருக்கிறது. இதன் மூலம் :

  • படித்து நல்ல எதிர்காலத்தை உருவாக்கக்கூடிய ஒரு பள்ளியில் ஒரு குழந்தை இந்த சட்டத்தின் கிழ் சேர்ந்து அதன் பயனைப் பெற முடியவில்லை
  • தாழ்த்தப்பட்ட மாணவர்கள், பள்ளியில் உள்ள மற்ற மாணவர்களுடன் இணையாக இருப்பதாக நினைத்து, கல்வியில் சமபங்கு பெற முயற்சிக்கக்கூடாது. என்று பள்ளியால் சுட்டிக்காட்டப்பட்டது , இது சட்டத்தின் நோக்கத்தை முற்றிலுமாக மீறுகிறது

4. ஆர்டிஇ பெற்ற குழந்தைகளின் கற்றல் விளைவுகளை அளவிடும் பற்றாக்குறை

சில பள்ளிகள், இந்த சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்த்துக்கொண்டு அவர்களுக்காக ஒரு தனிப் பிரிவை உருவாக்குகின்றன. இதைச் செய்வதற்குப் பின்னால் அவர்கள் சொல்லும் காரணம்,

  • பெரும்பாலும் இந்த குழந்தைகள் தங்கள் பள்ளியின் உள்ள மற்ற குழந்தைகளைப் போல ஒரே கல்வி மட்டத்தில் இல்லை, எனவே கூடுதல் கவனம் தேவைப்படுகிறது
  • இவர்கள் கடினமான குழந்தைகள் என்ற. சாக்குப்போக்கின் கீழ் கைவிடப்படுகிறார்கள் அல்லது பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறார்கள்
  • ASER காலடி எடுத்து வைக்கும் வரை இந்த குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட கற்றல் தரத்தை மதிப்பீடு செய்வதில் கவனம் செலுத்தப்படுவதில்லை

இந்தச் சட்டத்தின் ஏற்பாடு வெறும் கண்துடைப்பாகவும், ஆர்டிஇ மூலம் சேர்க்கை பெறும் குழந்தைகளின் கற்றல் விளைவுகளையும் முற்றிலும் புறக்கணிக்கிறது.

5. ஒவ்வொரு பள்ளியிலும் முன்பதிவு செய்யப்பட்ட இடங்களின் நிலையை புதுப்பிக்கும் டைனமிக் டாஷ்போர்டு இல்லாதது

ஒரு பள்ளியில் இந்த சட்டத்தின் கீழான சேர்க்கை எந்த அளவிற்கு நடந்து முடிந்து உள்ளது என்பதற்கான வெளிப்படைத்தன்மை இல்லை..அது குறித்து, பள்ளிகளில், டைனமிக் டாஷ்போர்டு இல்லாத நிலையில், கண்காணிப்பு தாமதமாகவும் திறமையற்றதாகவும் இருக்கிறது.

ஆர்டிஇ இதுவரை ஏற்படுத்திய தாக்கத்தின் அளவு குறித்து பயனாளிகளுக்கு எதுவும் தெரியாது. இது பற்றிய அனைத்தும் தெளிவற்றதாகவே இருக்கின்றன, எனவே எந்தவொரு தரவுகளும் சரியாக காட்டாத போது இது குறித்த நடவடிக்கைகள் பயனற்றவையே.

எனவே அரசு, இந்த அருமையான சட்டத்தின் ஓட்டைகளை சரி செய்ய உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கும் அதே வேளையில், நம் வீட்டு குழந்தைகளுக்கு இந்த சட்டத்தின் மூலம் கிடைக்கக்கூடிய சிறந்த இலவச கல்வியை பெற்று கொடுக்க நாம் அனைவரும் முனைய வேண்டும்..

  • ஒன்றுக்கும் உதவாத ஒரு சினிமா பற்றியோ அரசியல் கேலி கூத்துகளையோ தெரிந்துகொள்வதில் நாம் காட்டும் ஆர்வத்தில் பாதியளவாவது இந்த சட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள மாட்டோமா என்ன?

.

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...