வியாழன், 7 மார்ச், 2024

முஸ்லிம் பெண்களுக்கு 'குலா' என்னும் விவாகரத்து கொடுக்கும் உரிமை இன்னமும் இருக்கிறதா?

 முஸ்லிம் பெண்களுக்கு, அவர்கள் கணவரிடமிருந்து 'தலாக்'என்னும் விவாகரத்து பெறும் 'உரிமை(?!) மட்டும் தான் உள்ளது என்று தான் பெரும்பான்மையானோர் நினைத்திருப்பார்கள். சமீபத்தில் காட்டுத் தீயாய் பரவிய சானியா மிர்சா தன் கணவருக்கு 'குலா' என்னும் விவாகரத்து கொடுத்த செய்தியின் போது தான் , 'குலா" என்றால் என்ன? என்று தேட ஆரம்பித்தனர்.

'தலாக்'கிற்கும் 'குலா'விற்கும் என்ன வித்தியாசம்?

தலாக்கை கொடுப்பது ஆண் தன் மனைவிக்கு .

ஆனால் …

ஒரு திருமணமான பெண் தன் கணவருடன் சேர்ந்து வாழ விரும்பாத பட்சத்தில் , அவருக்கு 'குலா ' (விவாகரத்து) கொடுக்கலாம். இதை அவள் கணவன் ஒத்துக் கொள்ள வேண்டும். அதாவது அவள் அந்த விவாகத்திலிருந்து 'விடுதலை' பெற , முதலில் அவர் கொடுத்த மகர் பணத்தை திரும்ப கொடுப்பது, பண சம்பந்தமான சுமூக தீர்வு காண்பது , தங்கள் குழந்தைகள் குறித்த முடிவுகளை சேர்ந்து எடுப்பது என்று அவர்கள் சம்பந்தப்பட்டவைகளுக்கு ஒத்த முடிவுகளை எடுக்கும் போது அவள் கணவன் சம்மதம் தெரிவிப்பான். அப்போது தான் அந்த பெண் அந்த திருமண பந்தத்திலிருந்து மீள முடியும்.

ஆனால் இதை அவள் கணவன் 'தலாக்' கொடுப்பது போல , தனித்து செய்ய முடியாது. ஒரு ஷரியத் அமைப்பிலோ அல்லது மத குருமார்களின் முன்போ அல்லது நீதிமன்றத்தின் மூலமோ மட்டுமே செய்ய முடியும்.

இந்த சட்ட அந்தஸ்து உள்ள ஷரியத் அமைப்பு என்று சொல்லிக் கொள்ளும் இங்குள்ள பெரும்பான்மையான 'ஜமாத்' குழுவினர் , முஸ்லிம் தனிப்பட்ட சட்ட அம்சங்களான திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்தில் பங்கு பிரிப்பு என்று முஸ்லிம்களின் அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு 'தீர்த்து' வைக்கின்றனர்.

அதுவும் ஒவ்வொரு முஸ்லிம் ஊருக்கும் , ஒரு ஜமாத் என்ற அமைப்பு இருக்கும். அந்த ஊரில் இல்லாமல், பெரும்பான்மையானோர் குடி பெயர்ந்து வேறு இடம் மாறினாலும், இந்த அமைப்பிற்கு அவர்கள் கட்டுப்பட வேண்டும். இல்லையென்றால், சொந்தம் பந்தம் இல்லாமல் 'தனித்து' விடப்படுவர். சென்னை திநகரில் இயங்கி வரும் கமுதி முஸ்லிம் நல சங்கம் இதற்க்கு உதாரணமாகச் சொல்லலாம்.

இது போன்ற தவ்லீக் ஜமாத்' என்ற அமைப்பு தான் முஹமத் ரபிக்கின் மனைவி சயீதா பேகத்தின் குலா என்ற விவாகரத்து கோரிய மனுவை விசாரித்து அதை அனுமதித்தது, அவர்களுக்கு 2013 ல் திருமணம். 2015ல் குழந்தை .2016 ல் ரபிக்குடன் வாழ பிடிக்காமல் சயீதா பேகம் வெளியேறுகிறார். 2017ல் குலா என்னும் விவாகரத்து கோரி அந்த ஜமாத்தை அணுகியது.

ஆனால் தன ஒப்புதல் இல்லாமல் அவர்கள் வழங்கிய இந்த சான்றிதழ் செல்லாது என்று கூறியும் தன் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கோரியும் முகமத் ரபிக் உயர்நீதிமன்றத்தை நாடுகிறார்.

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சி சரவணன் அவர்கள்,

" இது போன்ற ஷரியத் அமைப்பு, சொசைட்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவை.. ஒரு 'அரசு அமைப்பு' போன்ற மாயையை ஏற்படுத்தினாலும் அவை 'அரசு' அல்ல.

மேலும் 2014லிலேயே 'விஷ்ணு லோசன் மதன்' என்ற வழக்கில் "ஷரியத் நீதிமன்றங்களுக்கு எந்த சட்ட அந்தஸ்தும் கிடையாது" என்று உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது. அதனால் , இது போன்ற விவாகரத்து சான்று வழங் க அந்த ஷரியத் அமைப்பிற்கு எந்த அதிகாரமும் கிடையாது" என்று தீர்ப்பு எழுதுகிறார் நீதியரசர் சரவணன்.

ஆனால் இதை விமர்சித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதிய ஒருவர், முஸ்லிம் பெண்கள் ஏற்கெனவே ஒரு பாரபட்சமான சூழலில் இருக்கும் போது அவர்களே விவாகரத்து வேண்டும் என்னும் போது, நீதிமன்றத்தை தான் அணுகவேண்டும் என்பது, அவர்களை இக்கட்டான சூழலில் இட்டு செல்கிறது என்றும் அதற்கு பதிலாக தம்பதியினரிடையே மத்தியஸ்தம் செய்வது போன்ற வழிகளை காட்டலாம் என்று யோசனை தெரிவித்து இருந்தார்.

நீதியரசர் சி.சரவணன் அவர்கள் வழங்கிய தீர்ப்பு , முஸ்லிம் பெண்களுக்கு உள்ள உரிமைகளை மீடேடுப்பதர்கான ஒரு அம்சமாகத் தான் நான் பார்க்கிறேன். ஏனெனில், இந்த 'ஜமாத்' அமைப்பினர், 1937 ஷரியத் சட்டத்தின் கீழ் தங்களுக்கு ஒரு அதிகாரம் இருபபது போன்ற ஒரு தோற்றத்தை தந்து, முஸ்லிம் பெண்களின் உரிமைகளில் தலையிட்டு, அதை குறைத்து மதிப்பிட்டு வந்தனர். இதில் குறிப்பாக, எந்த ஒரு ஜமாத் அமைப்பிலும் ஒரு பெண் கூட அங்கள் இல்லை!!

நீதியரசர் சரவணனின் தீர்ப்பு அந்த மாயத் தோற்றத்தை கலைத்தது, அதற்கு முன்னரே எல்லாவற்றிலும் முன்னோடியாக நிற்கும் கேரளா உயர்நீதிமன்றம் இது குறித்து பரபரப்பு கிளப்பிவிட்டது.

.நீதியரசர்கள் முஹமது முஷ்டாக் மற்றும் நீதியரசர் சி.எஸ்.டையாஸ் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் ."முஸ்லிம் பெண்கள் தங்களின் கணவரின் சம்மதம் பெற்றே 'குலா' என்ற விவாகரத்து கொடுக்க முடியும் என்ற நிபந்தனை சரியானதல்ல. அவர்களுக்கு குலா' வழங்க முழு உரிமை உள்ளது" என்று அதிரடியாக தீர்பளித்தது. 'தலாக் ' வழங்கும் போது கணவனுக்கு உள்ள முழு அதிகாரம், 'குலா' வழங்கும் முஸ்லிம் பெண்ணிற்கும் உள்ளது. அதற்காக அவள் கணவனின் சம்மதம் பெறத் தேவையில்லை " என்ற அதிரடி தீர்ப்பை வழங்கியது.

கேரளா உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த முஸ்லிம் பர்சனல் போர்டு, கணவனின் சம்மதம் இல்லாமல் ஒரு முஸ்லிம் பெண் குலா கொடுக்க முடியாது என்று சொல்லியுள்ளது.

1939 ல் வந்த Dissolution of Muslim Marriage Act படி குலா வழங்க ஒரு முஸ்லிம் பெண் காட்ட வேண்டிய காரணங்களை தான் பட்டியலிடுகிறது. அப்படியானால் , அவள் தன் விருப்பமாக குலா ' கொடுக்க முடியாதா? " என்ற கேள்வியை முன் வைத்து தற்போது உச்ச நீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது.

தற்போது பொது சிவில் சட்டம் நாடெங்கிலும் கொண்டு வரவிருபபதாக மத்திய அரசு சொல்லி வருகிறது. ஒரு விதத்தில் அது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் முஸ்லிம் பெண்களுக்கு ஒரு விடுவு காலம் கிடைக்கும் என்றே சொல்லலாம்.

இதோ அவர்கள் தனி சட்டத்தில், பெண்களுக்கு காட்டப்பட்டு ஏற்றத்தாழ்வை நீங்களே பாருங்கள்:

  1. ஒரு முஸ்லிம் ஆணின் சாட்சியம் இரண்டு முஸ்லிம் பெண்களின் சாட்சதிர்க்கு சமம்.
  2. ஒரு முஸ்லிம் ஆண் இறந்தால், அவன் சொத்தில் அவன் மனைவிக்கு, குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் ,எட்டில் ஒரு பங்கும், குழந்தை இல்லை என்றாலோ கால் பங்கும் கிடைக்கும். இதுவே ஒரு முஸ்லிம் பெண் இறந்தால், அவள் கணவனுக்கு அவள் சொத்தில் குழந்தை இல்லாத போது, பாதி பங்கும் குழந்தை இருந்தால் கால் பங்கும் கிடைக்கும்.
  3. ஒரு முஸ்லிம் ஆண் அவன் மனைவியை தலாக் செய்ய எந்த காரனமும் சொல்லத் தேவையில்லை (இப்போது தான் ட்ரிபிள் தலாக் " ஏற்புடையது அல்ல என்பது சட்ட விதியாகியுள்ளது) ஆனால், அவன் மனைவி விவாகரத்து பெற விரும்பினால், அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும் அத்தோடு நில்லாமல், அவள் கணவன் அவளுக்கு திருமணத்தின் போது கொடுத்த மகர் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும். குழந்தை யை யார் பராமரிப்பது, சொத்து பணம் குறித்த விஷயங்களில் கணவன் சம்மதத்துடன் தீர்வு கண்ட பின்பே அவள் அந்த திருமண பந்ததிலிருந்து மீண்டு வர முடியும்.
  4. விவாகரத்து பெற எண்ணும் ஆண் , நேரில் தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு முகவரை நியமித்து அவர் மூலமாகவும் இதை செய்யலாம். ஆனால் இதை ஒரு முஸ்லிம் பெண் செய்ய முடியாது.
  5. அதே போல ஒரு குழந்தையின் இயற்கை பாதுகாவலராக அதன் தந்தையும் அதற்கு பின் அதன் தாய் ' என்று இந்து சட்டம் சொல்ல(இதற்கே இப்போது பஞ்சாயத்து போய்க் கொண்டிருக்கிறது}ஆனால் முஸ்லிம் சட்டத்திலோ அதன் தகப்பன் மட்டுமே இயற்கை பாதுகாவலர். அதன் வாழ்விற்கு உரிய எந்த முடியும் எடுக்க அதன் தந்தைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. தாய்க்கு எந்த வித உரிமையும் கிடையாது.
  6. முஸ்லிம் பெண் அவள் கணவனால் விவாகரத்து செய்யப்பட்டால் , அவள் பெற்றோர், அல்லது அவள் சகோதரர்…அவர்களாலும் முடியவில்லையில்லை என்றால் வக்ப் போர்டு அவளுக்கு பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்று சட்டம் சொன்னாலும், நடைமுறையில் அதெல்லாம் சாத்தியமேயில்லை.

நிலை இப்படி இருந்தாலும் முஸ்லிம் பெண்கள் வாய் திறந்து தங்கள் உரிமை குறித்து பேச வர மாட்டார்கள். அவ்வளவு பயம்.!!!!

இதற்கு ஒரே தீர்வு UNIFORM CIVIL CODE!!

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...