இந்தியாவில் தொழில் செய்வதை சுலபமாக்கவும், நீதிமன்றகளிலும் சிறையிலும் உள்ள வழக்கு தேக்க நிலையை குறைக்கவும் நிதித்துறை அமைச்சகம் சமீபத்தில் , வெவவேறு சட்டங்களில் உள்ள 39 குற்றப்பிரிவுகளை குற்றத்தன்மையிலிருந்து நீக்க ஆலோசனை /கருத்து கேட்டு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில் தான் செலாவணிச் சட்டம்… அதாங்க Negotiable Instruments Act, பிரிவு 138 தான் அனைவரின் கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது.
இந்த சட்டம் 1881 இயற்றப்பட்டாலும். இந்த குற்றப் பிரிவுகள் 138 முதல் 142 ஆகியவை 1988 ஆண்டு ஒரு சட்டத்திருத்தம் மூலம் கொண்டு வரப்பட்டது..
அப்படி என்ன முக்கியத்துவம் அந்த பிரிவு 138 ல் உள்ளது?
காசோலை பணம் இல்லை அல்லது வேறு குறிப்பிட்ட காரணத்தினால் திருப்பப பட்டால், தவறிழைத்தவர் இரண்டு வருடம் வரை நீளக்கூடிய சிறைத் தண்டனையோ, காசோலைப் பணத்தைப்போல இரு மடங்கு விதிக்ககூடிய அபராதமோ, அல்லது இரண்டுமோ தண்டனையாகப் பெற வேண்டும். .
நன்றி கூகிள்
சரி திடீரென இந்த குற்றத்தன்மை நீக்கம் குறித்த ஆலோசனை எதற்கு?
சட்டக் கமிசனின் சமீபத்திய அறிக்கையின்படி 38 லட்சத்திற்கும் மேற்பட்ட காசோலை மோசடி வழக்குகள் நாடெங்கிலும் உள்ள பல்வேறு நீதிமன்றகளில் நிலுவையில் உள்ளது என்றும் 7.6 லட்சம் வழக்குகள் டெல்லியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மட்டும் நிலுவையில் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
(1) இந்த அதிகப்படியான வழக்குகள் நிலுவையில் உள்ளது, நம்முடைய தொழில் முன்னேற்றத்தில் பெரும் தேக்க நிலையை உருவாக்கி உள்ளது.
(௨) அதோடு இல்லாமல், அவை மற்ற முக்கியமான, சீரியசான வழக்குகள் பின் தள்ளப்பட்டு அதனால் பொதுமக்களுக்கும வழக்கு நடத்துபவர்களுக்கும் நீதித்துறையின் மேல் நம்பிக்கை குறைய காரணமாகிறது என்றும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
எனவே சிறு வழக்குகள் என்ற தரம் பிரிக்ககூடிய குற்றப் பிரிவுகள் குறித்து பட்டியல் தயார் செய்யப்பட்டது.
- இந்த 138 பிரிவு என்பது குற்றத்தன்மைக் கொண்டு பார்க்கும்போது, சிறிய குற்றமாகும். மேலும் இந்திய தண்டனை சட்டப் பிரிவு 420 (Cheating) கீழும் பாதிக்கப்பட்டவர் புகார் மனு கொடுக்கலாம் என்று இருக்கும்போது இன்னொரு குற்றப் பிரிவு அதே குற்றத்திற்கு தேவையில்லை எனக் கருதப்பட்டது.
- மேலும் இந்த குற்றப் பிரிவின் தீவிரத்தன்மையானது ஏற்கெனவே, இந்த சட்டத்தில் பிரிவு 147 புகுத்தப்பட்டபோது , குறைக்கப்பட்டுவிட்டது. அது என்னவென்றால், இரண்டு தரப்பினரும் சமரசம் ஏற்படுத்திக் கொண்டால், குற்றவாளி மீதிருக்கும் குற்றம் விலக்கி கொள்ளலாம் என்பதே.
- அடுத்து, இந்த குற்றப் பிரிவு பெரும்பாலும் சிவில் தன்மை கொண்ட பிரச்சினைகளுடன் இனைந்து வருகிறது என்னும்போது அதற்கான தீர்வு சிவிலிலேயே கிடைக்கிறது.
- எனவே சிவில் தன்மை கொண்ட நடவடிக்கைகளுக்கு சிறைத் தண்டனை போன்றவை சொல்லப்படும்போது, அது அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறப்படும் வாய்ப்புகள் உள்ளன. எனவே சிவில் தன்மை கொண்ட ஒரு வழக்கை குற்றத் தன்மை கொண்டதாக காணும்போது, நியாயமான நீதி விசாரணை என்பதும் அடிபடுகிறது.
இவையெல்லாம் தான் இந்த அறிவிப்பு வெளியாகக் காரணம்.
ஆனால் அதே சமயம், ஒரு சிவில் சட்டத்திற்கும் குற்றவியல் சட்டத்திற்கும் உள்ள வேறுபாடே, சமூகத்தில் 'குற்றவாளி' என்ற அடைமொழி கொடுப்பதால், ஏற்படும் பாதிப்பு ஆகும். அந்த பெயருடன், வேலை கிடைப்பதில் உள்ள சிரமம், பொதுப் பணியில் ஈடுபட உள்ள தடை, ……இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் தான் இந்த காசோலை மோசடி வழக்கினை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தினை குற்றவாளிக்கு கொடுப்பது. ஆனால் சிவில் தன்மை கொண்ட வழக்கு நிலுவையில் இருந்தால் எந்த வித கெட்ட பெயரும் ஒருவருக்கு ஏற்படுவதில்லை.
இன்னொரூ முக்கிய விஷயம் குற்ற வழக்குகளை பொறுத்து, அவர் குற்றவாளி என்பதை நிரூபிப்பது அரசுத் தரப்பை சேர்ந்தது. ஆனால், சிவில் வழக்கைப் பொறுத்து யார் எந்த கட்சி செய்கிறாரோ அவரை பொறுத்தது.
இவையெல்லாம் காசோலை மோசடி வழக்கின் குற்றத் தன்மையை மாற்றும் முன் கவனிக்க வேண்டியது.
எந்த வித மாற்றம் கொண்டு வந்தாலும், அது தெளிவாகவும், ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், துரித பலன் தரக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதே நம்முடைய அவா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக