உண்மை தான் ..இன்றைய காலக் கட்டத்தில் அப்பாவி ஆண்கள் சிக்கிக் கொள்வது அதிகரித்துக் கொண்டு தான் வருகிறது.
மற்ற நாடுகளை போல இல்லாமல், நம். நாட்டில் திருமணம் என்ற அ மைப்பு மிகவும் மதிக்கப்படுகிறது. ஆனால் சமீப காலங்களில், திருமணத்தை ஒட்டிய தகராறுகள் அதிகரித்து வருகின்றன. . பெண் அவளது கணவர் மற்றும் அவரது உறவினர்களால் துன்புறுத்தல் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு உரிய பாதுகாக்கும் கருவியாக தான், IPC இன் 498A பிரிவு ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் என்று வகைப்படுத்தபட்டு , அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை மாறி , அதிருப்தியடைந்த மனைவிகளால் அது ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது .
கைது நடவடிக்கை என்பது ஒருவருக்கு அவமானத்தைத் தருகிறது, அவருடைய சுதந்திரத்தைத் தடுக்கிறது மறக்க முடியாத வடுக்களை என்றென்றும் ஏற்படுத்துகிறது. என்பதால், கணவர் மற்றும் அவரது உறவினர்களை இந்த விதியின் கீழ் கைது செய்வதே அவர்களை துன்புறுத்துவதற்கான எளிய வழியாக கையாள்கின்றனர். . பல வழக்குகளில், பல வருடங்களாக வெளிநாட்டில் வசிக்கும் கணவர்களின் சகோதரிகள், ஏன் படுக்கையில் இருக்கும் தாத்தா, பாட்டிகள் கூட கைது செய்யப்படுகிறார்கள்
நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தால் வெளியிடப்பட்ட “இந்தியாவில் குற்றங்கள் 2012 புள்ளிவிவரங்கள்” படி,
- 2012 ஆம் ஆண்டில், இந்த ஐபிசி 498-A பிரிவின் கீழான குற்றத்திற்காக இந்தியா முழுவதும் 1,97,762 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அதற்கு முந்தைய 2011 ஆம் ஆண்டை விட 9.4% அதிகம்
- 2012 இல் இந்த விதியின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் அதாவது 47,951 பேர் பெண்கள், கணவர்களின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் தாராளமாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
- இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்ட மொத்த நபர்களில் இது 6% ஆகும்.
- இது குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் செய்யப்படும் மொத்த குற்றங்களில் 4.5% ஆகும்,
- திருட்டு மற்றும் காயம் தவிரத்த மற்ற குற்றங்களை விட இது அதிகம்.
- பிரிவு 498A, IPC இன் கீழ் வழக்குகளில் குற்றப்பத்திரிகை விகிதம் 93.6% அதிகமாக உள்ளது, அதே சமயம் தண்டனை விகிதம் 15% மட்டுமே!!,
- விசாரணை நிலுவையில் உள்ள 3 ,72,706 வழக்குகளில் கிட்டத்தட்ட 3,17,000 குற்றம் சுமத்தப்பட்டவர்கள் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது. !!
இந்த புள்ளி விவரமே சொல்லும் வரதட்சணை கொடுமை தடுப்பு குற்றப் பிரிவு, எவ்வளவு தவறாக பிரயோகிக்கப்படுகிறது என்று!!
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம், ஒரு பெண் வரதட்சணை புகார் கொடுத்தவுடன், அவள் கணவனின் குடும்பத்தாரை கைது செய்யும் மனப்பான்மை, காவல்துறைக்கு அதிகம் இருக்கிறது.
போலிசாரின் இந்த போக்கை " குற்றவியல் நடைமுறை சட்டத்தின் உள்ளுறைந்த பாடத்தை காவல்துறை இன்னமும் கற்கவில்லை என்று தான் தெரிகிறது; .சுதந்திரம் பெற்று ஆறு தசாப்தங்களான போதிலும், அது அதன் காலனித்துவ பிம்பத்திலிருந்து வெளிவரவில்லை, அது பெரும்பாலும் துன்புறுத்தல், அடக்குமுறை ஆகியவற்றின் கருவியாகக் கருதப்படுகிறது. நிச்சயமாக பொதுமக்களின் நண்பனாகக் கருதப்படுவதில்லை. இந்த கைது செய்யும் அதிகாரம் போலிசின் ஆணவத்திற்கு பெரிதும் உதவுகிறது, மாஜிஸ்திரேட்டும் அதை சரி பார்க்கத் தவறுகிறார். . இது மட்டுமின்றி, . முதலில் கைது செய்து விட்டு பிறகு விசாரணையை தொடரும் அணுகுமுறை வெறுக்கத்தக்கது. " என்று அர்னேஷ் குமார் எதிர் பீகார் மாநில அரசு என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் கூட தன் அதிருப்தியை காட்டியுள்ளது.
ஒருவரின் சுதந்திரத்தை பறிக்கக்கூடிய, அவரை அவமானப் படுத்தக்கூடிய இந்த கடுமையானதான கைது அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் எச்சரிக்கை தேவை என்பது நீதிமன்றங்களால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும் போதிய பலனைத் தரவில்லை. சட்ட கமிஷன்கள், போலீஸ் கமிஷன்கள் மற்றும் நீதிமன்றம் ஏராளமான தீர்ப்புகளில், கைது செய்யும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் போது தனிமனித சுதந்திரம் மற்றும் சமூக ஒழுங்கு ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
இந்த சட்ட நிலை இருந்தும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையவும் இல்லை.எனவே கடைசியாக நாடாளுமன்றம் தலையிட்டு, 2001 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட சட்டக் கமிஷனின் 177வது அறிக்கையின் பரிந்துரையின் பேரில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 41 (சுருக்கமாக 'Cr.PC), தற்போதைய வடிவத்தில் இயற்றப்பட்டது. . 1994 ஆம் ஆண்டு சமர்பிக்கப்பட்ட 152வது மற்றும் 154வது அறிக்கையில் சட்டக் கமிஷன் அத்தகைய பரிந்துரையைச் செய்தது குறிப்பிடத்தக்கது.
காவல் துறை எப்போது பிடிவாரண்ட் இல்லாமல் கைது செய்யலாம் -என்று அந்த பிரிவு 41 சொல்கிறது. இதிலிருந்து நாம் தெரிந்துக் கொள்வது என்னவென்றால்
- அபராதத்துடனோ அல்லது இல்லாமளோ ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை நீட்டிக்கக்கூடிய ஒரு குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர அதை செய்தார் என்று திருப்தி அடைந்தால் மட்டுமே, அவரை ஒரு காவல்துறை அதிகாரி கைது செய்ய முடியாது.
- அவ்வாறு கைது செய்வதற்கு முன், அந்த வழக்கில் அந்த நபர் மேலும் எந்த குற்றமும் செய்யாமல் தடுக்க, அத்தகைய கைது அவசியம் என்றும் திருப்தி அடைய வேண்டும்;
- அல்லது வழக்கின் முறையான விசாரணைக்காக அவர் ஆஜராக மாட்டார் என்றோ
- அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்திற்கான ஆதாரங்களை மறைத்து விடாமல் தடுக்கவோ
- அல்லது அவர் அத்தகைய ஆதாரங்களை எந்த விதத்திலும் சிதைத்து விடாமல் தடுக்கவோ
- அல்லது அவர் அந்த வழக்கின் ஒரு சாட்சி நீதிமன்றத்திற்கோ அல்லது காவல்துறை அதிகாரிக்கோ உண்மைகளை வெளிப்படுத்துவதிலிருந்து அவரைத் தடுக்கவோ தூண்டியோ , அச்சுறுத்தல் அல்லது வாக்குறுதியை வழங்குவதைத் தடுப்பதற்காக,
காவல்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களை தேவையில்லாமல் கைது செய்யாமல் இருக்கவும் மாஜிஸ்திரேட் இயந்திரத்தனமாகவும் காவலில் வைப்பதற்கு அங்கீகாரம் அளிப்பதையும் தவிர்க்கவும் உச்ச நீதிமன்றம் மேலே சொன்ன அர்னேஷ் குமார் வழக்கில் சில வழிமுறைகளை சொன்ன போது, " கைது செய்யும் அதிகாரம் என்று இருந்தாலும் அதைச் செயல்படுத்துவதற்கான நியாயம் வேறு.. கைது செய்யும் அதிகாரத்தைத் தவிர, காவல்துறை அதிகாரிகள் அதற்கான காரணங்களை நியாயப்படுத்த வேண்டும். ஒரு நபருக்கு எதிராகச் செய்யப்படும் குற்றச்சாட்டின் பேரில் இயந்திர கதியில் கைது செய்ய முடியாது.' என்றது
அந்த தீர்ப்பின் படி, போலிசாரின் கடமை எனப் பட்டவை
- குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை குறித்து சில விசாரணைகளுக்குப் பிறகு நியாயமான திருப்தி இல்லாமல் யாரும் கைது செய்யப்படுவதில்லை என்று செயல்படுவது ஒரு போலீஸ் அதிகாரிக்கு விவேகமாகவும் புத்திசாலித்தனமானதாகவும் இருக்கும்.
- கைது செய்வதற்கு முன் போலீஸ் அலுவலர தனக்குள்ளேயே ஒரு கேள்வியை வைக்க வேண்டும், "ஏன் கைது செய்ய வேண்டும்? இது உண்மையில் தேவையா? அது என்ன நோக்கத்திற்காக உதவும்? அது என்ன முடிவை அடையும்? இந்தக் கேள்விகளுக்குத் தீர்வு காணப்பட்டு, மேலே குறிப்பிட்டுள்ள ஒன்று அல்லது மற்ற நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னரே, கைது செய்வதற்கான அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
- காவல்துறையால் வாரண்ட் இல்லாமல் கைது செய்யப்பட்ட ஒரு குற்றவாளி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 22(2) மற்றும் பிரிவு 57, Cr.PC இன் கீழ், தேவையற்ற கால தாமதமின்றி, பயணத்திற்காக.தேவையான நேரத்தைத் தவிர்த்து 24 மணி நேரத்திற்குள், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்த வேண்டும்
- ஒரு வழக்கின் விசாரணையின் போது, பிரிவு 167 Cr.PC இன் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாஜிஸ்திரேட்டால் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே, குற்றம் சாட்டப்பட்டவரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க முடியும்.
- அந்த நபரை மேலும் குற்றம் செய்வதைத் தடுக்க அல்லது வழக்கின் முறையான விசாரணைக்காக கைது செய்வது அவசியம் என்று காவல்துறை அதிகாரி கருதினால். அதற்கான ஆதாரத்தை மாஜிஸ்திரேட்டிடம் அளிக்க வேண்டும்.
தடுப்புக் காவலை அங்கீகரிக்கும் அதிகாரம் மிகவும் புனிதமான செயல்பாடாகும். இது குடிமக்களின் சுதந்திரத்தை பாதிக்கிறது என்பதால் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் அதற்குத் தகுந்த தீவிரத்துடன் அது பிரயோகிக்கப்படவில்லை என்பது பல சந்தர்ப்பங்களில், தடுப்புக் காவல் வழக்கமான, சாதாரண முறையில் அனுமதிக்கப்படுகிறது என்பதில் இருந்து தெரிகிறது.
மாஜிஸ்திரேட் கடமை என்பது
- Cr.PC, பிரிவு 167 இன் கீழ் காவலில் வைக்க அங்கீகாரம் அளிக்கும் முன், காவல் அதிகாரியால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவனங்களை ஆராய வேன்டும்,
- அவர் கைது செய்யப்பட்டிருப்பது சட்டத்திற்கு உட்பட்டது தானா , சட்ட நடைமுறைகளின் படியே கைது செய்யப்பட்டுல்லாரா , அந்த நபரின் அனைத்து அரசியலமைப்பு உரிமைகளும் திருப்திப்படுத்தப்பட்டதா என்று முதலில் அவர் திருப்தி அடைய வேண்டும்.
- அதை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்த பின்னரே, குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் வைக்க அங்கீகாரம் அளிக்கவேண்டும். .
- அது சுருக்கமாக இருக்கலாம் ஆனால் அந்த திருப்தி அதன் உத்தரவில் இருந்து பிரதிபலிக்க வேண்டும். காவல்துறை அதிகாரியின் முடிவின் அடிப்படையில் அது ஒருபோதும் இருக்கக்கூடாது.
- ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் அனுமதிப்பதற்காக தன் முன் ஆஜர்படுத்தப்பட்டால், கைது செய்ய குறிப்பிட்ட காரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கான விடையை மாஜிஸ்திரேட் ஆராய வேண்டும், அப்படி இருந்தால் அந்த காரணங்கள் முதன்மையானவை, இரண்டாவதாக நியாயமான முடிவுக்கு வர மேலே கூறப்பட்ட ஒன்று அல்லது மற்ற நிபந்தனைகள் காவல்துறை அதிகாரி முடிவு எடுக்க வைத்ததையும் மாஜிஸ்திரேட் ஆய்வு செய்யவேண்டும்.
- காவல்துறை அதிகாரியின் கைது சட்டத்தின் பிரிவு 41 இன் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், மாஜிஸ்திரேட் அவரை மேலும் காவலில் வைப்பதற்கு அதிகாரம் அளிக்கக் கூடாது.., உடனே குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்யவேண்டும்.
தேவையற்ற கைது என்பது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் நோக்கில், (2009 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டு சேர்க்கப்பட்ட பிரிவு 41A, Cr.P விதி யாராலும் கடைப்பிடிக்கப்படாமலேயே இருந்தது. இது பின்வருமாறு கூறுகிறது:
- ஒரு நபரைக் கைது செய்யத் தேவையில்லாத வழக்குகளில், . போலீஸ் அதிகாரி முன் ஆஜராவதற்கான அறிவிப்பு.-பிரிவு 41 (1) இன் விதிகளின் கீழ் அந்த நபருக்கு ஒரு நோட்டிஸ் அனுப்பப்படும்.
- அதில், அவர் மீது ஒரு நியாயமான புகார் செய்யப்பட்டுள்ளது என்றோ , நம்பகமான தகவல்கள் பெறப்பட்டுள்ளன என்றோ , அவர் அறியக்கூடிய குற்றத்தைச் செய்ததாக நியாயமான சந்தேகம் உள்ளது என்றோ குறிப்பிட்டு , அதை ஒத்து அந்த காவல்துறை அதிகாரி முன் அல்லது நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்களில் ஆஜராக வேண்டும். என்று ஒரு அறிவிப்பு அனுப்பப்படும்..
- இந்த அறிவிப்பை, வழக்குத் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்க வேண்டும், இந்த காலத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரால் நீட்டிக்கப்படலாம்;.
- எந்தவொரு நபருக்கும் அத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டால், அறிவிப்பின் விதிமுறைகளுக்கு இணங்குவது அந்த நபரின் கடமையாகும்.
- அத்தகைய நபர் நோட்டீசுக்கு இணங்கியும் , தொடர்ந்து இணங்கினால், நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றத்தைப் பொறுத்தவரையில், அவர் கைது செய்யப்பட மாட்டார், வேறு காரணங்களுக்காக, அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று காவல்துறை அதிகாரி கருதுகிறார் என்றால் அந்த காரணங்களை பதிவு செய்ய வேண்டும்.
- அந்த நபர், எந்த நேரத்திலாவது நோட்டீஸின் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறினால் அல்லது தன்னை அடையாளம் காட்ட விரும்பவில்லை என்றால், காவல்துறை அதிகாரி, இது தொடர்பாக ஒரு தகுதி வாய்ந்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளுக்கு உட்பட்டு, நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றத்திற்காக கைது செய்யலாம்.
- இது போன்ற நிலையிலும், பிரிவு 41 Cr.PC இன் கீழ் எதிர்பார்க்கப்படும் கைதுக்கான முன்மாதிரி நிபந்தனைபடியே கைது இருக்க வேண்டும் ;அதையும் மாஜிஸ்திரேட்டால் அதே ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்
- குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைக் கைது செய்யக்கூடாது என்ற தீர்மானம், வழக்குத் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் மாஜிஸ்திரேட்டுக்கு ஒரு நகலுடன் அனுப்பப்பட வேண்டும்.;
இந்த விதியை சுட்டிக்காட்டிய மான்புமிகு உச்ச நீதிமன்றம், இதுபோல, குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை மாஜிஸ்திரேட்டின் உத்தரவு இல்லாமல், கைது செய்ய காவல்துறை அதிகாரிக்கு அதிகாரம் அளிக்கும் பிரிவு 41, Cr.PC ன் விதிகள் துல்லியமாக அமல்படுத்தப்பட்டால், காவல்துறை அதிகாரிகள் வேண்டுமென்றோ அறியாமலோ செய்யும் தவறு திரும்பப் பெறப்பட்டு, முன்ஜாமீன் வழங்குவதற்காக நீதிமன்றத்தில் வரும் வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்றது. .
இந்த வழக்கை ஒரு முன்னோடி வழக்காக எடுத்துக் கொண்டு, இதில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள், " ஏழு வருடத்திற்கு குறையாத சிறை தண்டனை விதிக்கக் கூடிய குற்றம் தொடர்பான அனைத்து வழக்கிலும் பின்பற்ற வேண்டும். அதே போல, அனைத்து மாநில அரசுகளும், IPC இன் பிரிவு 498-A இன் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்படும் போது தன்னிச்சையாக கைது செய்ய வேண்டாம் என்று தனது காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும், என்றும்
மேற்குறிப்பிட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்கத் தவறினால், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளாக்குவது தவிர, அந்த பிராந்திய அதிகார வரம்பைக் கொண்ட உயர்நீதிமன்றத்தின் முன் நீதிமன்ற அவமதிப்புக்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். என்றும்
சம்பந்தப்பட்ட ஜூடிசியல் மாஜிஸ்திரேட் மேற்கூறிய காரணங்களை பதிவு செய்யாமல் காவலில் வைப்பதை அங்கீகரிப்பது, உரிய உயர் நீதிமன்றத்தின் துறை ரீதியான நடவடிக்கைக்கு பொறுப்பாகும். என்றது
இந்த தீர்ப்பு வந்தது 2014ல். கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் போலிசாரின் இந்த தீர்ப்பு குறித்த அலட்சிய போக்கு இன்னமும் தொடர்கிறது என்பதை, சமீபத்தில் ஜகதீஷ் ஸ்ரீவஸ்தவா என்பவர் மகாராஷ்டிரா மாநில போலிசை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில் தெரிந்தது. இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றாமல், அதுவும் உச்ச நீதிமன்றத்தில் பிணை மனு விசாரணை நிலுவையில் இருந்த போது மனுதாரரை கைது செய்த மும்பை பொலிசாரின் நடவடிக்கையை மாண்புமிகு உச்ச நீதிமன்றம், கண்டித்தது. (ஜகதீஷ் ஸ்ரீவஸ்தவா v மகாராஷ்டிரா மாநில அரசு & ஒருவர் மேல்முறையீட்டுக்கான சிறப்பு விடுப்பு (Crl.) எண்(கள்). 1758/2022)
இன்னும் ஒரு படி மேலே போய் , டெல்லி உயர்நீதிமன்றம், அவ்வாறு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றாமல் கைது செய்த போலிஸ் அதிகாரிக்கு ஒரு நாள் சிறை தனடனையும் இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்த போது . "கைது நடவடிக்கை, சிறைவாசம் ஒரு நபரை அழிக்கிறது. அதற்கு இணையாக பல அப்பாவி உறவினர்களை பாதிக்கிறது", என்றது . .அதை உணர்ந்து கொள்ளாத போலீசாருக்கும் தான் சிறை வாசம் என்றால் எப்படியிருக்கும் என்று தெரியட்டுமே!! தெலுங்கானா உயர் நீதிமன்றம் கூட இந்த வழிகாட்டுதலை பின்பற்றாமல் கைது செய்த போலிஸ் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க , குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு, அனுமதி வழங்கியது.
எனவே அதிகாரம் உள்ள போலிசாரும், மாஜிஸ்திரேட்டுகளும் நீதி வழியில் நடந்து தர்மத்தை காத்தால், ,ஜோடிக்கப்பட்ட பொய்யான வழக்குகள் கொடுப்பது குறையும்..
தர்மமும் நீதியும் வேறா என்ற கேள்வி நமக்குள் எழலாம்.. ஆமாம்......... நீதி மாறக் கூடியது .பெண் வலிமையற்றவள். அவள் பாதுகாக்கப்பட வேண்டியவள், என்பதால் தான் சிறப்பு சட்டங்கள் இயற்றப்பட்டன..ஆனால் அவளே அதற்கு எதிராக மாறும் போது, நீதியும் அவளுக்கு எதிராக மாறுகிறது அல்லவா? அப்படி நீதி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப மாறக் கூடியது. ஆனால் தர்மம் என்றுமே நிலைத்தது. அதனால் தர்மத்தை காத்து நீதி வழி நடக்க வேண்டும். அதனால் தான் உச்ச நீதிமன்றமும் , "எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கு வெற்றியும் இருக்கும்" என்ற பொருளில் "யதோ தர்மஸ் ததோ ஜயாஹ் ' என்ற நோக்கத்தை முன்னிறுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக