1955 இந்து திருமண சட்டத்தின்படி, கணவனோ மனைவியோ இருக்கும் போது , மற்றவர் இன்னொரு திருமணம் செய்துக் கொண்டால், அதற்கு சட்ட அங்கீகாரம் கிடையாது.
விவாகரத்து செய்வதற்கு உரிய காரணங்களை இந்து திருமண சட்டப் பிரிவு 13 குறிப்பிட்டாலும், முதல் மனைவியோ அல்லது கணவனோ இருக்கும் போது இரண்டாவதாக திருமணம் நடந்ததாக கணக்கில் கொள்ளப்படாது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டிய தேவையில்லை என்று தான் சட்டம் சொல்கிறது.
புகழ்பெற்ற லில்லி தாமஸ் எதிர் யூனியன் ஆப் இந்தியா MANU/SC/0327/2000 வழக்கில், கணவர் இன்னொரு திருமணம் செய்துக் கொள்வதற்காக முஸ்லிமாக மதம் மாறுகிறார், என்றாலும் அந்த இரண்டாம் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத உச்ச நீதிமன்றம் , இந்து திருமண சட்டப்பிரிவு 17 ன் படி, முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இன்னொரு திருமணம் செய்வது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 494ன் படி தண்டனைக்குரியது என்றது.
அப்படி வாழும் மனைவியை அவள் வாழ்நாள் முழுதும் கணவன் பராமரிக்க வேண்டும் என்று இந்து தத்தெடுத்தல் மற்றும் பராமரித்தல் சட்டம், 1956 (Hindu Adoption and Maintenance Act, 1956) சட்டப்பிரிவு 18 சொல்கிறது. மனைவி இருக்கும் போது , இன்னொரு திருமணம் செய்வது செல்லாது என்று சொல்லும் அதே வேளையில், ஷை சட்டப்பிரிவு 18(2) , இன்னொரு மனைவியுடன் கணவன் வாழ்ந்து வந்தால் , முதல் மனைவி அவளுடைய ஜீவனாம்சம் கோரும் உரிமையை விட்டுக் கொடுக்காமல் , தனியாக வாழலாம் என்றும் சொல்கிறது.
சட்ட நிலை இப்படியிருக்க, நம் நாட்டில் பெருவாரியான பெண்ணின் பகுத்தறியும் நிலை ஆண்களுக்கு இணையாக இல்லை என்னும் போது , அதை பயன்படுத்தி, முதல் திருமணத்தை மறைத்து , இன்னொரு திருமணம் செய்து, அந்த இரண்டாம் மனைவியை சரியாக கணவர் பராமரிக்காவிட்டால், அவருக்கும் அவர் குழந்தைகளுக்கும் அந்த கனவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறும்உரிமையுள்ளதா? என்ற கேள்வி எழும்.
இதே போன்ற சூழல் கொண்ட நரிந்தர் பால் கவுர் சாவ்லா எதிர் மன்ஜீத் சிங் சாவ்லா Civil 2606 of 2004 என்ற வழக்கு விசாரணைக்கு வந்த போது, டெல்லி உயர் நீதிமன்றம், "இப்படி முதல் திருமணத்தை மறைத்து , இன்னொரு திருமணம் செய்த ஆணுக்கு இரண்டாம் மனைவியை பராமரிக்கும் கடமை இல்லடி என்றால், அந்த தவறை செய்ய ஊக்குவித்தது போலாகும்" என்று கூறி, இரண்டாம் மனைவியும் ஜீவனாம்சம் பெற உரிமையுடையவர் என்றது.
உச்ச நீதிமன்றமும் இதையே ஆமோதித்து , பாட்ஷா எதிர் ஊர்மிளா பாட்ஷா,(2014) 1 SCC 188. என்ற வழக்கில் , இரண்டு காரனங்களுக்காக இரண்டாம் மனைவிக்கும் ஜீவனாம்சம் பெறும் தகுதி உள்ளது என்றது..
- முதல் திருமணம் நடந்ததை இரண்டாம் மனைவ்யிடன் கணவன் மறைத்து திருமணம் செய்தது
- இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்தது
ஆனாலும், இந்து திருமண சட்டப்பிரிவுகள் 5 மற்றும் 11 படி, முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது , இரண்டாம் திருமணமே செல்லாது என்னும்போது அந்த மனைவிக்கு ஜீவனாம்சம் கோரும் உரிமை குறித்து நீதிமன்றங்களிடையே இரு வேறுபட்ட பார்வைகளே உள்ளது.
சட்டத்தில் உள்ள இந்த ஓட்டையை பயன்படுத்தி தான் இரண்டாம் திருமண ம் செய்யும் ஆண்கள் தப்பித்து வருகின்றனர்.
அப்படியானால், இரண்டாவது மனைவிக்கு தீர்வு தான் என்ன?
மேற்சொன்ன பாட்ஷா எதிர் ஊர்மிளா பாட்ஷா வழக்கிலும், அவள் கணவனும் , மேற்சொன்ன வாதங்களை தான் முன் வைத்தான். மேலும் குற்ற விசாரணை நடைமுறை சட்டப்பிரிவு 125 படி "மனைவி" என்ற சொல் "சட்டப்பூர்வமான மனைவியையே " குறிக்கும் என்று வாதாடினான்.
ஆனால் உச்ச நீதிமன்றம் இதை ஏற்க மறுத்து, அவர்களுக்கிடையே திருமணம் இந்து முறைப்படி நடந்தது என்பதாலும், முதல் திருமணத்தை மறைத்த கணவனின் செயலினாலும், அவன் இரண்டாம் மனைவிக்கும் குற்ற விசாரணை நடைமுறை சட்டப்பிரிவு 125 படி ஜீவனாம்சம் கொடுக்க கடமைப்பட்டவன் என்றது.
அதே போல 'கணவன் மனைவியாக வாழ்ந்ததை இரண்டாம் மனைவி நிரூபித்தாலும், அவர் ஜீவனாம்சம் பெற தகுதியுடையவர் என்று துவாரிகா பிரசாத் சத்பதி எதிர் பித்யுத் பரவா தீட்சித் மற்றும் ஒருவர் (1999) 7 SCC 675 என்ற வழக்கில் தீர்ப்பளித்தது.
சான்முனியா எதிர் வீரேந்திர குமார் சிங்க் குஷ்வாஹா மற்றும் ஒருவர் (2011) 1 SCC 14 என்ற வழக்கில், 'மனைவி ' என்ற சொல்லுக்கு பரந்த அளவில் பொருள் கொண்டு, நெடுங்காலமாக கணவன் மனைவியாக வாழ்பவரையும் கணக்கில் சேர்க்க வேண்டும் என்றது.
அதற்காக ஒரு பெண் தன் முதல் கணவனை விவாகரத்து செய்யாமல் இரண்டாம் திருமணம் செய்திருந்தால்?" என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.
அதை 'துன்புறுத்தல் 'என்று வகைப்படுத்தி இரண்டாம் கணவன் விவாகரத்து பெறலாம்.
இன்னும் சொல்லப் போனால், உச்ச நீதிமன்றம் ஒரு படி முன்னேறி, ரமேஷ் சந்திர டாகா எதிர் ராமேஸ்வரி டாகா AIR 2005 SC 422 என்ற வழக்கில், இரண்தாம் திருமணம் சட்டப்படி ஏற்புடையது அல்ல என்றாலும், அவனை போருலாதாதார ரீதியாக சார்ந்திருக்கும் இரண்டாம் மனைவியை , இந்த காரணம் காட்டி புறம் தள்ளுவது சரியல்ல என்றது..
சமீபத்தில் இதே போன்ற ஒரு வழக்கு X v. State of Maharashtra, 2023 SCC OnLine Bom 2676...மும்பை உயர் நீதிமன்றம் முன்பு வந்தது. இந்த கணவர் ஒரு படி மேலேறி இரண்டாம் திருமணம் நடக்கவில்லை என்றும், அந்த பெண்ணை தனக்கு தெரியாது என்றும் அவருடன் ஒன்றாக வாழ்ந்ததே இல்லை எண்டும், அந்த பெண்ணின் பிள்ளைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்றும் அவருடன் தான் , தான் இன்னமும் வாழ்வதாகவும் வாதிட்டார். உச்ச நீதிமன்றத்தின் மேற்சொன்ன வழக்குகளையெல்லாம் கணக்கில் கொண்ட மும்பை உயர்நீதிமன்றம், கணவன் மனைவியாக லிவ் இன் தொடர்பில் உள்ளவரும் கு.வி.மு.ச.பிரிவு 125 படி ஜீவனாம்சம் பெற உரிமை உள்ள நிலையில், இரண்டாம் மனைவிக்கும் ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது என்றது.
இதிலிருந்து , கணவன் மனைவியே யானாலும், பிரச்சினை என்று வரும் போது ஆண் தன்னை மட்டுமே காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் போது , நீதிமன்றங்கள் தான் பெண்களின் உரிமைகளை பேணிக் காப்பதில் முன்வகிக்கிறது என்பதை அறிவோம்.
இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள் !!