ஞாயிறு, 26 நவம்பர், 2023

தாய் வீட்டில் வசிக்கும் உரிமை திருமணமான பெண்ணுக்கு உள்ளதா?

 சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம, திருமணமான பெண் கணவருடன் வேறு ஊருக்கு குடித்தனம் செய்யப் போவதாலேயே, பிறந்த வீட்டில் வசிக்கும் உரிமையை இழந்து விட்டதாக கொள்ள முடியாது" என்றுள்ளது. 

இது நிறைய பேருக்கு ஒரு குழப்பத்தையே ஏற்படுத்திள்ளது.

திருமணமான பெண்ணுக்கு, சீர் வரிசை கொடுத்து வசதியாக, ஆடம்பரமாக திருமணம் செய்துக்  கொடுத்தாலும், சொத்தில் அவளுக்கு கொடுக்க வேண்டிய  பங்கை கொடுக்கத் தான் வேண்டும் என்றிருக்கும்போது,  இப்போது என்ன..புதிதாக ?....

"திருமணமான பின்னும், அவள் அங்கே வசிக்கும் உரிமை உள்ளது என்றால்...அவள் கணவனுடன் வந்து தங்கினால்...அது அங்கு வசிப்பவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தாதா?

திருமணம் செய்து, சீர் கொடுத்து, சொத்தில் சம பங்கும் கொடுத்து,  வாழும் வீட்டிலும் தங்க இடமும் கொடுக்க வேண்டும் என்றால் எப்படி? என்று நிறைய பேருக்கு ஆதங்கம் உள்ளது

சமூக கண்ணோட்டத்தை  தவிர்த்து, சட்டம் என்ன சொல்கிறது என்று பார்த்தால், 

இந்து வாரிசுரிமை சட்டப் பிரிவு 23 யை பார்ப்போம்.

திருமணமான பெண் பிறந்த வீட்டில் , சொத்தில் பங்கு கேட்கும் முதல் உரிமை கிடையாது என்கிறது.  அதாவது, அந்த வீட்டில் அவளுடன் பிறந்த சகோதரர்கள் இருக்கும்போது,  அவர்கள் என்று சொத்தை பங்கு பிரிக்க நினைகிரார்களோ, அப்போது தான், அவளுக்கும் அதில் பங்கு கொடுக்கும் நிலை ஏற்படும்"  என்கிறது. 

அப்படியானால், ஆணுக்கு சமமாக பெண் வைக்கப்படவில்லையா?

அவள் சகோதரர்கள் விரும்பும் போது தான் சொத்து பங்கீடு செய்யலாம் என்றால், அவள் சட்டத்தின் பார்வையில் சற்று இறக்கமாகத் தானே வைக்கபடுகிறாள்?" என்ற கேள்விக்கு  உச்ச நீதிமன்றம்  ஒரு வழக்கில் பதிலளித்துள்ளது.

குடும்ப சொத்து துண்டுபட்டு விடக்கூடாது என்பதைத் தான் சட்டம் இயற்றியவர்கள் கருத்தில் வைத்துள்ளனர் என்றது. 

ஆனாலும், இந்த விஷயத்தில் தமிழ் நாடு புண்ணியம் கட்டிகொண்டது.

தமிழ்நாட்டில், பெண்களுக்கான சரி சமமான சொத்துரிமை சட்டம் கொண்டு வரப்பட்டதால், அவளும்,  இந்து கூட்டு குடும்பத்தில் , உரிமையாளர் ஆகிறாள் என்பதால், அவளுக்கும் அவள் சகோதரர்களை போலவே சம உரிமை வருகிறது என்பதால், அவர்களை போலவே, அவளுக்கு சொத்தில் பங்கு கேட்கும் முதல் உரிமையும் வந்துவிடுகிறது. 

சரி,  அது தான் அப்படி என்றால், திருமணமான பெண்னுக்கு  பிறந்த வீட்டில் வசிக்கும் உரிமை , அவள் கணவன் இறந்து விட்டாலோ, பிரிந்து சென்றாலோ அல்லது கைவிட்டுவிட்டாலோ , தான் கிடைக்கும்.

அதாவது...அவள் கணவனுடன் வாழும் போது இந்த உரிமை கிடையாது என்கிறது.

இதிலும் ஒன்று கவனித்தீர்களா....

திருமணம் ஆன பெண்ணுக்கு தான் இந்த நிபந்தனைகள்

 திருமணமாகாத பெண்ணுக்கு  அப்படியில்லை.  பிறந்த வீட்டில் வசிக்கு உரிமை அவளுக்கு  உள்ளது. 

இது பெண்களுக்குள்ளேயே பாகுபாடு பார்ப்பதாகிடவில்லையா?

திருமணமான பெண்ணுக்கு வசிக்கும் உரிமை கிடையாது  ஆனால் திருமணம் ஆகாத பெண்ணுக்கு என்றால்?

 இது போன்ற வித்தியாசம் ஆணுக்கு இல்லையே..

அவனுக்கு திருமணம் ஆனாலும் சரி, ஆகவில்லை என்றாலும், அவனுக்கு பிறந்த வீட்டில் வசிக்கும் உரிமை உண்டு.

ஆனாலும் இந்த வேறுபாடு அப்படியே நிலைத்து இருக்கும் போது வந்தது குடும்ப வன்முறை சட்டம்.

அதில் பிரிவு 17 ல் சொல்லப்பட்ட "பகிர்ந்து குடியிருக்கும்  வீட்டில்" அவளுக்கு உரிமை உள்ளதோ இல்லையோ, ஆனால் அந்த வீட்டில் உள்ளவர்களுடன் அவளுக்கு குடும்ப  ரீதியான உறவு, ...அதாவது  தாய், மாமியார், மருமகள், சகோதரி என்று இருந்தால்,  அங்கு வசிக்கும் உரிமை உள்ளது?" என்று சமீபத்தில் ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பு ஒன்றை உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது.


அப்படியானால், திருமணமான பெண்ணுக்கு அவள் தாய் வீட்டில் வசிக்கும் உரிமை வந்து விடுகிறது.

இது கொஞ்சம் ஓவர் இல்லையா என்பீர்கள் சிலர். 

ஆனால், இவ்வாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் போது சொன்ன காரணத்தை சற்று கவனியுங்கள்...

"இந்தியாவில், ஒரு பெண், தனது திருமணத்தின் போது தனது கணவருடன் வசிப்பது ஒரு சமூக விதிமுறையாகும், தொழில் அல்லது வேலை உறுதிப்பாடுகள் அல்லது பிற உண்மையான காரணங்களுக்காக, கணவனும் மனைவியும் வெவ்வேறு இடங்களில் வசிக்க முடிவு செய்கிறார்கள். ஒரு குடும்ப உறவில் இருக்கும் பெண் நியாயமான காரணத்திற்காக வேறு இடத்தில் வசிக்கும் சந்தர்ப்பத்தில் கூட, பகிரப்பட்ட குடும்பத்தில் வசிக்க அவளுக்கு உரிமை உண்டு."

அப்படியானால்....

கேள்விக்கு பதில் "ஆம்"..



புதன், 22 நவம்பர், 2023

ஏன் விவாகரத்தை விட நீதிமன்ற ஆணையுடன் பிரிந்து வாழ்வது சிறந்தது?

ஏன் விவாகரத்தை விட நீதிமன்ற ஆணையுடன் பிரிந்து வாழ்வது சிறந்தது?



      திருமண உறவு நம் நாட்டில் ஒரு மங்களகரமான அம்சமாக பார்க்கப்படுகின்றது. இந்து திருமண சடங்குகளில் கூட, “இவர்கள் ஏழு பிரவியுளும் ஒன்றாக இருக்க வேண்டும்” என்ற  சடங்குகள் உண்டு. அவர்களுக்குள் பிரிவு என்பது ஒருவர் இறப்பில்  தான் இருக்க வேண்டும் என்ற நிலை தான் இருந்து வருகிறது . அதனால் தான், நம் அப்பா தாத்தா காலத்தில், ஒத்துப் போகாத தம்பதியரும் சேர்ந்து வாழ்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.  

 

        பின்னர், நாகரீகம் மற்றும் சீர்திருத்தங்கள் காரணமாக விவாகரத்து என்ற கருத்து இந்தியாவிலும்  புகுந்து , இந்து திருமணச் சட்டம், 1955 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

      அதன்படி, கணவன்-மனைவி இடையே தவறான புரிதல் அல்லது அலட்சிய நடத்தை காரணமாக ஏற்படும்  குடும்பத் தகராறுகளில். பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்க, இந்து திருமணச் சட்டம், 1955ல் சில வழிமுறைகளை காட்டுகின்றது . அதில் சொல்லப்பட்ட திருமண உறவை தற்காலிகமாகவும் நிலையாவும் முறிக்கக் கூடிய, ‘ விவாகரத்து’ மற்றும் ‘நீதிமுறை பிரிவு’  என்ற  இந்த இரண்டு முறைகளும்   திருமண உறவில் உள்ள விரிசல்களை சரி செய்துக் கொள்ளவும், அது முடியாது போகும் போது முறித்துக் கொள்ளவும் உதவுகின்றன.

 

      இதில் விவாகரத்து எனப்படும் திருமண உறவையே 
ரத்து செய்யும் முறையை பற்றி நாம் அறிவோம். இதைப் பற்றி இந்து 
திருமண சட்டத்தின் பிரிவு 13 சொல்கிறது. ஆனால் இன்னொரு
 விதமான பிரிவை பற்றி நமக்கு பெரிதும் தெரிவதில்லை. அது 
தான் JUDICIAL SEPERATION எனப்படும்  நீதிமுறை பிரிவு .
 
      ;நீதிமுறை பிரிவு ‘ என்பது, கணவன் மனைவிக்குள் ஏற்படும் ஒரு  
தற்காலிகமான பிரிவு தான். அதை நீதிமன்ற அனுமதியுடன் பெறுகிறோம். “விவாகரத்து பெற விருப்பமில்லை, அதே சமயம் சேர்ந்து வசிக்கவும் ஆசையில்லை” என்றால் அதற்கு உரிய ஒரே வழி இந்து திருமண சட்டத்தின் பிரிவு 1௦யை நாடுவது தான். அது தான் நீதிமன்ற பிரிவு  
 
      இதைத் தான் ஹ்ரிதிக் ரோஷன் போன்ற பாலிவுட் ஹீரோக்களும்
 நாடுவது. 
 
      ஏன என்று பார்ப்போம். 
 
      நீதி முறை பிரிவு என்பது ஒரு சட்டப்பூர்வ செயல்முறை, இது 
விவாகரத்துக்கு முந்தைய நிலை என்றும் கொள்ளலாம்.  இது 
திருமண பந்தத்தில் உள்ளவர்களை   சட்டப்பூர்வமாக பிரித்து
 வைப்பதை குறிக்கிறது. எளிமையாக சொல்ல வேண்டுமானால், 
நீதி முறை பிரிவு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு,... அதிகபட்சமாக
 ஒரு வருடத்திற்கு, இருவரின்  சம்மதத்துடன் பிரிக்கப்படும்
 சூழ்நிலையைக் குறிக்கிறது.   இதை கணவன்-மனைவி இருவரும் 
விவாகரத்து நடவடிக்கைக்கு முன்னர் தங்கள் திருமண உறவை  
மேம்படுத்தி கொள்வதற்கான  மற்றொரு வாய்ப்பாக எடுத்து கொள்ள 
வேண்டும். 
 
விவாகரத்தும் நீதிமுறை பிரிவு இரண்டும் ஒன்று தானா? 
       இல்லை.  இரண்டு  சொற்களும் அவற்றின் அர்த்தங்களில் 
வேறுபட்டவை, அதனால்  ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்த 
முடியாது. விவாகரத்திற்கான காரனங்களை ஒத்துத் தான் நீதி முறை 
 பிரிவு கோருவதற்கும்.  
       இருந்தாலும், விவாகரத்திற்கான காரணத்தை நிரூபிக்காத போது,
 அதன்  மறு தீர்வாக நீதி முறை பிரிவை  வழங்க  இயலாது  என்று 
கேரளா உயர் நீதிமன்றம்.சமீபத்தில் ஒரு தீர்ப்பில் சொல்லியுள்ளது.  

 

இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?

·        நீதிமன்ற பிரிவு கோரி, திருமணம் முடித்த பிறகு, எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றத்தில் மனு செய்யலாம்.  ஆனால், விவாகரத்து பெற, திருமணம் முடிந்து ஒரு வருடம் கழிந்த பிறகே கோர முடியும். அதுவும் மனமொத்த விவாகரத்து கேட்பது என்றால் மனு தாக்கல் செய்து, நீதிமன்ற கோப்பில் எடுத்த பின்பும், ஆறு மாத காலம் காத்திருக்க வேண்டும்.

·        நீதிமன்ற பிரிவு என்பது விவாகரத்திற்கான முதல் நிலை

·        நீதி முறை பிரிவு, விவாகரத்து ஆகலாம் ஆனால் விவாகரத்து ஒருபோதும் நீதி முறை பிரிவாக மாற முடியாது. அத்தோடு  நீதி முறை பிரிவு என்பது விவாகரத்துக்கான காரணமாக ஏற்றுக் கொள்ளப்படும்.

·        நீதி முறை  பிரிவின் போது, தரப்பினர் தங்கள் திருமணத்தைப் பற்றி யோசித்து அதைச் சரி செய்யலாம் ஆனால் விவாகரத்திற்கு பிறகு அதற்கான வாய்ப்பு கிடையாது.

·        நீதி முறைப் பிரிவில், இரண்டு தரப்பினரும் இணைந்து வாழாவிட்டாலும் சட்டப்பூர்வமான திருமண உறவில்  தொடர்ந்து இருப்பதாகத்தான் கொள்ளப்படும்.  விவாகரத்து என்னும் போது,  அவர்களின் திருமணம் ரத்து செய்யப்படுகிறது,  அவர்கள் மறுமணம் செய்ய சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறார்கள்.

·        நீதி முறைப் பிரிவின் போது, ​​மனுதாரர் சொல்லும் காரணம் 
நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உத்தரவு  வழங்கப்படுகிறது, ஆனால் விவாகரத்து கோரும்போது/ முதலில் திருமண உறவை சீர் செய்ய அவர்களுக்கு கவுன்சலிங்  செய்து, முடியாத பட்சத்தில்  விவாகரத்துக்கு உத்தரவிடப்படும்.

·        நீதி முறை பிரிவு வழங்கி நீதிமன்றம் தீர்ப்பாணை பிறப்பித்து விட்டால், தீர்ப்பாணை பெற்றவர், திருமண உறவில் உள்ள மற்றொருவருடன் இனைந்து வாழ வேண்டிய அவசியமில்லை. அதற்காக பாதிக்கப்பட்ட தரப்பினர் தனித்தனியாக வாழ வேண்டிய அவசியமில்லை. அவர்கள் ஒரே கூரையின் கீழ் வாழலாம். நீதித்துறை பிரிப்பு என்பது வீட்டில் இருந்து அல்ல கடமைகளில் இருந்து விடுபடுவது.

·        அதேசமயம், மனைவி தன்னையும் தன குழந்தைகளையும் பராமரிக்க இயலாத நிலையில் இருந்தால், அந்த நீதிமன்ற பிரிவு காலக்கட்டத்திலும்,  கணவன்  அவன் குடுமம்பதிற்கு போதிய

 பராமரிப்பு தொகை தர வேண்டும்.

·        நீதி முறை பிரிப்பு ஆணை வழங்கிய பின், தம்பதியினர் ஒன்று சேர நினைத்தால், மீண்டும் அதே நீதிமன்றத்தில் மனு செய்து முந்தைய உத்தரவை நீக்கம் செய்து பெறலாம்.  ஆனால் விவாகரத்து பெற்ற பின், அதில் மாற்றம் செய்ய வேண்டுமாயின், உயர் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும்.

 

விவாகரத்து, நீதிமுறை பிரிவாகுமா?

      இல்லை, விவாகரத்து என்பது நீதி முறை பிரிவாக இருக்க முடியாது,
 அதே சமயம் நீதி முறை பிரிவு விவாகரத்தாக  மாறலாம். 
      ஒரு தம்பதியருக்கு  பிரிந்து வாழ நீதிமன்றத்தால் 
அனுமதிக்கப்பட்டு  உத்தரவிடப்பட்டால்.அவர்கள் வாழ்க்கையில்
 ஒருவருக்கொருவரின் முக்கியத்துவத்தை அறிந்துக் கொள்வார்கள், 
ஆனால் 1 வருடத்திற்குப் பிறகும் அவர்கள் விலகி இருக்க முடிவு 
செய்தால் திருமண உறவை முறிக்க நேரிடும்.
 
      உதாரனத்திற்க்கு A, B என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார்.
அவர்களுக்கு ஒரு சின்ன விஷயத்தில் தகராறு ஏற்பட்டது, அந்த
 வாக்குவாதம் பெரிதாகி, அவர்கள் இனி ஒன்றாக வாழ  விரும்பவில்லை.
 என்றும் விவாகரத்துக்காக நீதிமன்றத்திற்குச் சென்றனர், அவர்களது 
பிரசசினையை தீர்த்துக் கொள்ள அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கால 
அவகாசம் வழங்க நீதிமன்றம் முடிவு செய்து 1 வருடத்திற்கு நீதி முறை 
 பிரிவினைக்கு உத்தரவிட்டது. 1 வருடம் கழித்து, அவர்கள் தங்களுக்குள் 
உள்ள ககுத்து வேறுபாட்டை சரி செய்து, விவாகரத்து வேண்டாம் என்று 
முடிவு செய்தனர்.      1 வருடத்திற்குப் பிறகு, தம்பதியினர் தம் திருமண 
பந்தத்தை தொடர வேண்டாம் என்று முடிவு செய்தால், 
விவாகரத்துக்கான காரணத்தையும் விவாகரத்துக்கான 
செயல்முறையையும் நீதிமன்றம் தீர்மானிக்கும் 
  பரஸ்பர சம்மதத்தின் மூலமும் விவாகரத்து பெறலாம். 
தப்பன் குமார் எதிர் ஜோத்ஸ்னா

      இந்த வழக்கில் மனைவி கணவரை தனிக்குடித்தனம் வர சொல்லி வற்புறுத்தி வந்தார்.  கணவர் முடிவாக மறுத்த பிறகு, வீட்டை விட்டு வெளியேறி  தன சகோதரருடன் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார். கணவர் ஜாமீன் பெற்றார். விவாகரத்து கோரி மனு செய்தார். தன்னை கணவரும் அவர் குடும்பத்தினரும் கொடுமை செய்ததாக மனைவி பதில் மனு தாக்கல் செய்தார்ர்.

 கணவர் விவாகரத்திற்காக சொன்ன காரணங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளா விட்டாலும், கணவருக்கு திருமண உறவுக்கு மீறிய உறவு உள்ளதாக பொய்யான குற்றம் சுமத்திய  மனைவியின் செயல் மன ரீதியான துன்புறுத்தலாக விவாகரத்து அளிக்கக் கூடிய  ஒன்றாக அமைந்துள்ளது என்று நீதிமன்றம் விவாகரத்து அளித்து தீர்ப்பளித்தது.


மன ரீதியான துன்புறுத்தல் என்றால் என்னென்ன?

      மன ரீதியான் துன்புறுத்தல் என்பது ஒருவரின் உடல் அல்லது மன 
ஆரோக்கியத்தை மோசமாகப் பாதிக்கிறது அப்படிப்பட்ட துன்புறுத்தலில்
 என்னென்னவெல்லாம் அடங்கும்?
·        மணவாழ்வில் இரக்கம், அன்பு காட்டாதது.
·        மண உறவிற்கு வெளியே தொடர்பு உள்ளதாக பொய்யாக 
குற்றம் சுமத்துவது
·        தாம்பத்திய உறவிற்கு மறுப்பது
·         ஆண்மைக் குறைவு
·        முறையற்ற குழந்தைப் பிறப்பு
·        குடி போதை
·        தற்கொலை செய்துக் கொள்ளவதாக மிரட்டல் விடுப்பது
·        கணவரின் மேலதிகாரிக்கு மனைவி  பொய் புகார் எழுதுவது
·        இணக்கமில்லா மனோபாவம்
·        மீள முடியா மண முறிவு 



 



      இதைத் தவிர நீதி முறைப் பிரிவை பெறுவதற்கான காரணங்கள் விவாகரத்து கோருவதற்கான அதே காரணங்களை ஒத்து இருக்கும்.



·        மண வாழ்க்கைக்கு எதிரான உறவை கொள்ளுதல்..இது ஆணோ
 பெண்ணோ இரு பாலருக்கும் பொருந்தும். இந்திய தண்டனைச் 
சட்டத்தில் தான்,  மனைவி கணவனை தவிர்த்து இன்னொரு
 ஆணுடன் உறவு வைப்பது குற்றம் அல்ல என்றது. ஆனால் 
விவாகரத்து கோருவதற்கு இது ஒரு காரணமாக அமையும். 
·      வேண்டுமென்றே கவனிக்காமல் விடுதல் wilful Neglect
·        வேற்று மதத்திற்கு மாறுதல்
·        மன நிலை பிறழ்ந்து இருத்தல்
·        தொழு நோய் போன்ற தொற்று நோய்கள் இருப்பது
·        உலக வாழ்வை துறத்தல்
·        ஏழு வருடங்கள் தம்பதி குறித்த விவரங்கள் ஏதும் தெரியாது, 
 காணாமல் போதல்  
 
      இவற்றை தவிர்த்து , பிரிந்து வாழ்வதற்கு மனைவிக்கென சில 
கூடுதல்  காரணங்கள்: உள்ளன:
·        மனைவி இருக்கும் போதே இன்னொரு திருமணம் செய்தல்
·        கற்பழிப்பு குற்றம் நிரூபணம் ஆதல்
·        இந்து தத்தெடுத்தல்  மற்றும் பராமரிப்பு சட்டம், 1956 மற்றும் குற்ற 
விசாரணை நடைமுறை சட்டப் பிரிவு 125ன் கீழ் . பராமரிப்பு தொகை 
வழங்க சொல்லி  நீதிமன்ற உத்தரவு வழங்கிய பின்பும் ஒரு 
வருடத்திற்கு மேலாக  கணவன் சேர்ந்து வாழ மறுக்கும் போது
·        15 வயதுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தால் அதை 15 
வயதிலிருந்து 18 வயதிற்குள் அந்த சிறுமி  அதை ஏற்று கொள்ள 
மறுத்தால், நீதிமுறை பிரிவு கோரி மனு செய்யலாம்.  
 
இந்த நீதி முறை உத்தரவு இறுதியானதா?
      இல்லை/ மனு தாரரின் வாக்குமூலத்தின் உண்மையைக் கண்டு, 
நீதிமன்றம் திருப்தியடைந்து, நீதிமுறை பிரிவு தீர்ப்பாணை வழங்காமல்
 இருப்பதற்கு சட்டக் காரணம் எதுவும் இல்லாமல் இருக்குமானால், 
கணவன் மனைவி பிரிந்து வாழ ஆணை வழங்கலாம். ஆனால் அதை 
எதிர்த்து அடுத்தவர்  மேற்கொண்டு போடும் மனுவில் கூறப்படும்
 காரணங்களில் நீதிமன்றம் திருப்தியடையுமானால், ஏற்கெனவே
 வழங்கிய நீதி முறை பிரிவு தீர்ப்பானையை நீதிமன்றம் நிராகரிக்கலாம்.. அல்லது இல்லாததாக்கி விடலாம். அல்லது திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
 
      அதே போல, நீதித்துறை பிரிவினைக்கான ஆணை
 நிறைவேற்றப்பட்ட பிறகு, எந்த நேரத்திலும் கூட்டு-வாழ்வை புதுப்பிக்க
 கட்சிகள் ஒப்புக்கொண்டால், நீதிமன்றத்தில் மனு செய்து அந்த பிரிவு 
ஆணையை ரத்து செய்யலாம்
 
      பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதிமன்றப் பிரிவினை 
வழங்குவதற்கான ஒரே நோக்கம் , அவர்களது உறவைப் பற்றி சிந்தித்து 
விவாகரத்துக்கு முன் மற்றொரு வாய்ப்பை வழங்குவதாகும். எனவே
 நீதிமுறை  பிரிவு என்பது நீதிமன்றத்தால் அனுமதிக்கப்படும்  சட்டப்பூர்வ முறிவு. இதுவே 
பின்னர் அவர்கள் மீண்டும் ஒன்று  இணைவதாக   மாறலாம். 
 
      எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் , நீதி 
முறை பிரிவு என்பது குறிப்பிட்ட காலத்திற்கு திருமண  
கடமைகளிலிருந்து விடுபடுவதைக் குறிக்கிறது. எனவே தம்பதியாக 
இருக்கும் போது., தாம்பத்திய உறவுக்கு மறுப்பது, சேர்ந்து வாழ மறுப்பது
 போன்றவை விவாகரத்திற்கான காரணமாக அமையும். அதை தவிர்க்க 
நினைப்பவர்கள் இந்த வழிமுறையை கையாளலாம். 
 
ஏன் விவாகரத்தை  விட நீதிமுறை பிரிவு சிறந்தது?
·          கருத்து வேறுபாடு கொண்ட தம்பதியினர் தங்கள் உறவை 
மறு பரிசீலனை செய்து தக்க வைத்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் 
அளிக்கிறது. 
·        நீதிமுறை பிரிவின் போது, கணவன் மனைவு உறவு நீடித்து 
இருப்பதால், இருவரின் சொத்து குறித்தோ அல்லது பராமரிப்பு 
குறித்தோ எந்த வித திட்டமிடலும் தேவையில்லை  ஏனெனில் 
இருவரும் ஒருவருக்கொருவர் சட்டபூர்வ வாரிசாக தொடர்ந்து  
 இருப்பதால் 
·        அதே போல குழந்தையை யார் வைத்துக் கொள்வது என்ற
 கேள்விக்கும் இடமில்லை.  ஏனென்றால் இருவருக்கு சாம் 
உரிமை உள்ளது.
 
அதனால் தான் அறிவான தம்பதியியர் தங்களுக்குள் பிணக்கு ஏற்படும் 
போது, நீதிமுறை பிரிவு ஜுடிசியல் SEPERATION மட்டுமே நாடுகிறார்கள். 
 
நமக்குத் தெரிந்த அறிவான தம்பதியினர் இருக்கிறார்களா??
 



 



திங்கள், 20 நவம்பர், 2023

மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு பெறுவது எப்படி? ....பகுதி 2

 


https://images.app.goo.gl/KFazUK6YDNpi4b567

போன பகுதியில் யார் யாரெல்லாம் நஷ்ட ஈடு பெற தகுதியுடையவர்கள் என்று படியலிட்டிருந்தோம் அல்லவா?

பெரும்பாலும் விபத்தினால்  காயம் பட்ட  அல்லது இறந்த நபருக்கான இழப்பீடு கோருவது அந்த காப்பீடு பாலிசியின் ஷரத்துகளுக்குள்ள் வராது என்று வாதிடுவது  காப்பீடு நிறுவனங்களின் பொது வாதமாக இருக்கும்.

அது போன்ற ஒரு வழக்கில் தான் இன்று  கேரளா உயர் நீதிமன்றம ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

அப்துல் ரசாக் ஒரு டிப்பர் லாரி தொழிலாளி. அவர் லாரியில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு இருக்கும்போது , ஒரு தென்னை மரம் அவர் மீது சாய்ந்து, விபத்து ஏற்பட்டதால், அவருக்கு நல்ல காயம். அவரும் நஷ்ட ஈடு கேட்டு, தொழிலாளர்  இழப்பீடு சட்டம், 1923 ன் கீழ் மனு செய்கிறார். (வழக்கம் போல,)   சரக்குகளை ஏற்றி, இறக்கும் தொழிலாளர்களை பாலிசி ‘கவர்’ செய்யாது என்று வாதிட்டது.

ஆனால் அந்த வழக்கை விசாரித்த தொழிலாளர் இழப்பீட்டு கமிஷனர் , அந்த வாதத்தை ஏற்காமல், அதிகம் என்று ஒள்ள முடியாது...ரூ.1,04,000/-ஐ இழப்பீடாக நிர்ணயம் செய்து, அதற்கு 12% வட்டியும், அவர் தாக்கல் செய்த மருத்துவ சிகிச்சை ஆவணங்களை கொண்டு அந்த செலவுகளையும் சேர்த்து கொடுக்குமாறு உத்தரவிட்டார்.

அதை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம்  மேல்முறையீடு செய்கிறது. ஆவணங்களை பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம், மோட்டார் வாகன சட்டப்பிரிவு 147(1) provison(1) © சரக்கு ஏற்றி இறக்கும் தொழிலாளர்களையும் குறிக்கிறது என்பதையும் காப்பீடு செய்யப்பட்ட வாகனம் சரக்குகளை ஏற்றிசெல்லும் வாகனம், எனில், அதில் பயணம் செய்யும் தொழிலாளர்களையும் அந்த காப்பீடு அடக்கும் என்று இருப்பதை  சுட்டிக்காட்டியது.

இதில் காப்பீடு நிறுவனம் எடுத்து வைத்த இன்னொரு வாதம் என்னவெனில், விபத்திற்குள்ளான வாகனம், வெறுமனே நிறுத்தப்பட்டிருந்தது என்பதாலும், அதை இயக்கியதால் விபத்து  நேரவில்லை என்பதாலும் அவர்கள் பொறுப்பு ஏற்க்க தேவையில்லை என்றனர்.

வாகனம் நிறுத்தப்பட்டிருந்தாலும், அந்த விபத்துடன் வாகனம்  தொடர்பு கொண்டிருந்தால், இழப்பீடு கொடுக்க,  காப்பீடு நிறுவனம் மறுக்க முடியாது என்று ஏற்கெனவே இன்னொரு தீர்ப்பில் சொன்னதையும் சுட்டிக்காட்டி  மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தது

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் எதிர் அப்துல் ரசாக் )

அதே சமயம் இன்னொரு விவரத்தையும் மனதில் கொள்ள வேண்டும். நிறைய சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வதை நாம் பார்க்கின்றோம்/. குறைவான பணம் கொடுத்தால் போதும் என்பதால் தொழிலாளர்கள் நிறைய பேர் அதில் பயணம் செய்வதை பார்க்கின்றோம்.. அந்த பயணம் ஆபத்தானது மட்டுமல்ல, அது காப்பீட்டிற்கு எதிரானது என்பதால் அது போன்ற சமயத்தில் விபத்து ஏதும் நேரும் போது, அவர்களில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால், இழப்பீடு கிடைக்காது.

தீர்ப்பாயத்தின் உத்தரவு இறுதியானதா என்றால் இல்லை. அதர் மேலாக உயர்நீதிமன்றத்தையும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் திருப்தியளிப்பதாக இல்லையென்றால், உச்சநீதிமன்றம் செல்லலாம்.

 

7.  தீர்ப்\பாயத்தின் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்ய வழிமுறை என்ன?

·         மோட்டார் விபத்து கோரிக்கைத் தீர்ப்பாயத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட இழப்பீட்டு தொகை போதுமானதல்ல என்று கோரிக்கையாளர் கருதினால், அவர் தீர்ப்பு தேதியிலிருந்து 9௦ நாட்களுக்குள்,  மேல் முறையீடு செய்ய வேண்டும்.  இந்த கால வரம்பிற்குள்,  தீர்ப்பு நகல் வழங்க தீர்ப்பாயம் எடுத்து கொள்ளும் காலம் அடங்காது. கால வரம்பு தாண்டி மேல் முறையீடு செய்தால் தாமதத்தை மாணிக்க தகுந்த காரணத்தை காட்ட வேண்டும்.

‘தகுந்த, போதுமான காரணம்” என்பது வழக்கிற்கு வழக்கு மாறுபடும். அதனால் போதுமான காரணத்தை,ஆதாரத்தை காட்டிவிட்டோம், என்பதாலேயே கால தாமதத்தை மன்னிக்கவேண்டும் என்று உரிமையாக கோர முடியாது.அது நீதிமன்றத்தின் discretionary power.

 

·         இழப்பீடு தொகை கொடுக்க வேண்டிய நபர், மேல்முறையீடு செய்ய வேண்டுமானால், ரூ.2௦,௦௦௦/- அல்லது தீர்மானிக்கப்பட்ட இழப்பீட்டு தொகையில் 5௦ சதவீதம் இவைகளில் எது குறைவோ அந்த தொகையை வைப்பீடு செய்தால் தான்,  மேல்முறையீடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

சட்டத்தில் முக்கியமாக சொல்லப்பட்டுள்ள இந்த நடைமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

 

·          தாவா சம்பந்தமான தொகை ரூ.1௦,௦௦௦/- க்கு குறைவாக இருந்தால் மேல்முறையீடு தாக்கல் செய்ய முடியாது.

காப்பீடு நிறுவனத்திற்கு பொறுப்பு இல்லையென்றால் , அதாவது விபத்து  தேதியில் காப்பீடு நிலுவையில் இல்லையென்றால், அவர்களை இழப்பீடு தொகையை கட்டிவிட்டு, பின்னர் வாகன உரிமையாளரிடம் வசூலித்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்த முடியாது.

 

8. ஓட்டுனர் பால் தவறு இல்லாவிட்டாலும், இழப்பீடு கொடுக்கும் பொறுப்பு (NO FAULT LIABILITY)  என்றால் என்ன?

ஒரு விபத்து நடக்கும் போது, ஓட்டுனர் பால் தவறு இருந்தாலும், இல்லாவிட்டாலும், மோட்டார் வாகன சட்டப்பிவு 140 ன் கீழ் இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும். அந்த விபத்தில் மரணம் நேர்ந்தால், ரூ.5௦,௦௦௦/-ம்,  நிரந்தர ஊனம் நேர்ந்தால் ரூபாய் 25,௦௦௦/- மும் Fixed தொகையாக, கொடுக்கப்பட வேண்டும்.

மேலே சொன்ன தொகையை பெற கோரிக்கை எழுப்புபவர்.  வாகன ஓட்டுனரின் தவறு அல்லது குற்றம் அல்லது கவனக்குறைவை மெயபிக்கவேண்டிய வேண்டியதில்லை. அதாவது ஒட்டுனர்பால் தவறு இல்லாமல்  அந்த விபத்து நேர்ந்திருந்தாலும் இந்த நஷ்ட ஈட்டு தொகை கொடுக்கப்படவேண்டும்

நிரந்தர ஊனம் என்பது என்ன:?

      1. காது அல்லது கண் அல்லது உடலின் ஒரு பகுதி அல்லது இணைப்புகளில் நிரந்தர சேதம் ஏற்பட்டிருக்க வேண்டும்/

       2. தலையில் அல்லது முகத்தில் நிரந்தரஉருமாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

 

9.   சட்டப்பிரிவு 140 ன் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்ளில் தீர்ப்பாயங்களின் கடமைகள்:

·         எவ்வளவு விரைந்து முடிக்க வேண்டுமோ அவ்வளவு விரைவாக முடிக்க வேண்டும்.

·         இழப்பீடு கோருகின்ற இழப்பீடு கோருகின்ற பிரதான மனு செய்யப்பட்ட பின், அது நிலுவையில் இருக்கும் போதே பிரிவு  140 ன் கீழ் மனு தாக்கல் செய்யபட்டால், இதைத் தான் தீர்ப்பாயம் முதலில் முடிக்க வேண்டும்.

·         இழப்பீடு கோரும் மனுவில் இறுதியாக வழங்குகின்ற இழப்பீடு தொகையில் இந்த பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை கழித்துக் கொள்ள வேண்டும்.

·         ஒரு வேளை பிரதான மனுவில் நிர்ணயம் செய்யப்பட்ட  இழப்பீட்டு தொகை, பிரிவு  140 ன் கீழ் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை விட குறைவாகவோ அல்லது சமமாகவோ இருந்தால், அந்த தொகையை செலுத்த கடமைப்பட்டவர் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. ஏனெனில், பிந்தைய தொகையானது முந்தைய தொகையில் அடங்கி விடுகிறது.

 

1௦.  மோதி மறையும் (HIT AND RUN) மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு பெறுவது எப்படி?

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் அடையாளத்தை நியாயமான முயற்சிகள் எடுத்தும் கண்டறியமுடியாத போது , அதை ‘மோதி மறையும் வாகன விபத்து (HIT AND RUN ACCIDENT ) என்பர்.

இத்தகைய விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, ,மத்திய அரசு ஒரு ஆதரவு நிதியை ஏற்படுத்தியுள்ளது. அதிலிருந்து அத்தைய விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்டால், ரூ.25,௦௦௦/-ம் கொடுங்காயம் ஏற்பட்டால் ரூ.12,5௦௦/-ம் இழப்பீடாக பெறலாம்.

 

தொடர்ந்து மோட்டார் வாகன இழேப்பீத் தொகையை தீர்ப்பாயம் எப்படி நிர்ணயம் செய்கிறது, நாம் மனு செய்வதற்கு தேவையானவை என்னென்ன என்பது குறித்து அடுத்த பகுதியில் பார்க்கலாம்.


(தொடரும்)

 

இந்த பதிவை எங்கள் யுடியுப் சானலிலும் பார்க்கலாம்.


சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...