திங்கள், 10 ஜனவரி, 2022

டாஸ்மாக் கடைகளை திறக்கலாமா வேண்டாமா? உங்கள் கருத்து என்ன?

 தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் புத்தாண்டு விற்பனையை விட நேற்று தமிழகத்தில் சுமார் 218 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது. என்று செய்திகள் வந்துள்ளன.

இதில் டாஸ்மாக் கடைகளை திறக்கலாமா வேண்டாமா என்ற கேள்வி வேறு….

பொதுவாக, டாஸ்மாக் கடைகள் இருக்கும் பகுதியில் உள்ள மெயின் ரோடுகளில் வாரக் கடைச்யில் நிற்கும் போக்குவரத்து போலீசார், வண்டிகளில் வரும் நபர்களை சோதனையிட்டு , குடித்து விட்டு வண்டியோட்டுவதாக வழக்கு போடுவது வழக்கம்…

"கடையையும் அரசே நடத்துமாம்…அப்புறம் அங்கே வாங்கி கொஞ்சம் டேஸ்ட் பார்த்து விட்டு வீட்டிற்கு கிளம்பினால், அது குற்றமாம்" என்று குடிமகன்கள் புலம்புவதை வழக்கமாக கேட்கலாம்.

யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல், தனியிடங்களில் மது அருந்தினால் குற்றம் அல்ல..ஆனால் அதுவே பொது இடம் என்றால் குற்றம் தான் என்று , குடிமகன்கள் வழக்கமாக தங்கள் உரிமைகளுக்காக குரல் எழுப்பும் கேரளாவின் மாண்புமிகு உயர்நீதிமன்றம் கூட சொல்லிவிட்டது..

Consuming liquor in private is no offence: Kerala HC
Kochi: In what's going to be a major relief for tipplers, the Kerala High Court ..

இத்தனைக்கும் அங்கு மது விலக்கை பகுதி பகுதியாக கொண்டு வரும் அரசின் திட்டத்தை எதிர்த்து, "குடிப்பது எங்கள் பிறப்புரிமை..என்று இல்லை…அடிப்படை உரிமை என்று கோஷம் எழுப்பியவர்களின் வாயையும் மூடியது அதே உயர் நீதிமன்றம் தான்.

Right To Alcoholic Drink Not A Fundamental Right: Kerala HC [Read Judgment]
Right to privacy—if right to take intoxicating drinks were one— always subject to reasonable restrictions, the bench held.The Kerala High Court has dismissed a challenge against the government’s...

ஆனால் அதுவே மது விற்பனை செய்வது என்றால் ?? அது அடிப்படை உரிமை அல்ல என்பதையும் தெளிவு படுத்தியது..

"தனியுரிமை என்று வரும் போது , தான் எந்த தொழிலையும் செய்ய விரும்புவது தன்னுடைய அடிப்படை உரிமை , அதுவும் அது வாழ்வதற்கான அடிப்படை உரிமையின் ஒரு அம்சம், ..என்று வாதிட்டாலும், பொதுவில் மக்களின் தனியுரிமைக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும என்றும் மது விற்பனை செய்ய உரிமம் பெற்றவர்களின் வணிக ஆர்வத்தை விட விலை மதிப்பற்றது. என்று தீர்ப்பு சொல்லியது.

பாலக்காட்டை சேர்ந்த விலாசினி என்பவர் . தன வீட்டிற்கு அருகில் இருக்கும் சாராய கடையினால் , தன்னுடைய தனியுரிமை பாதிக்கிறது என்பதால், அதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் வந்த தீர்ப்பு தான் இது. அந்த வழக்கில் நீதிமன்றம், மதுகடைகலாள் ஏற்படும் சிரமங்கள் குறித்து அறிக்கை தர அமிக்கஸ் க்யுரியாக ஒருவரை நியமித்து ஒரு அறிக்கை தர கேட்டு, அதன் அடிப்படையில், மேற்படி தீர்ப்பை வழங்கியது…

அந்த அறிக்கையில் சொல்லப்பட்டவை தான் . இவை (என் கருத்தும் கூட)

  1. குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் உள்ள கள்ளிக் கடைகள் மக்களின் உரிமையைப் பாதிக்கிறது.
  2. அவர்களின் அமைதியை கெடுக்கிறது.
  3. அங்கு கூடியிருக்கும் குடிபோதையில் இருக்கும் நபர்கள், அந்த வழியாக செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்களை விமர்சிப்பதும், அவர்களின் மோசமான பேச்சு மற்றும் நடத்தையும் பெரிதும் பாதிக்கின்றன.
  4. இன்னும் சொல்லப் போனால், இது போன்ற சூழ்நிலையில் வளரும் குழந்தைகளின் மனநிலையை இது பெரிதும் பாதிக்கின்றது.

ஆனால் அதன் மேல்முறையீட்டில் வந்த சமீபத்திய அதன் தீர்ப்பு சற்று வித்யாசமாக வந்துள்ளது….

No Violation Of Right To Privacy Just Because Peaceful Residence Is Affected : Kerala HC On Toddy Shops In Residential Areas
"...disruption of public order, peace and tranquillity cannot be understood as synonymous to breach of privacy rights"
  • "பொது ஒழுங்கு, அமைதி மற்றும் அமைதி சீர்குலைவதை தனியுரிமை உரிமை மீறலுக்கு ஒத்ததாக புரிந்து கொள்ள முடியாது"

"குடியிருப்பு பகுதியில் சாராய கடை அமைப்பது தனியுரிமையை பறிக்கும் செயலாகும்" என்று தனி நீதிபதி அளித்த தீர்ப்பை மாற்றிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பின் சாராம்சம்

  • "ஒரு நபரின் அமைதியான வசிப்பிடத்தை பாதிக்கும் எதுவும் அதன் தனியுரிமை உரிமைகளை பாதிக்கும்" என்ற தனி நீதிபதியின் கருத்தை "எங்களால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தக்கூடிய தனியுரிமை உரிமைகள் இந்த அளவிற்கு விரிவுபடுத்தப்பட்டால், முற்றிலும் குழப்பம் ஏற்படும் என்று நாங்கள் பயப்படுகிறோம்."
  • சொல்லப்பட்ட இந்த காரணிகள் பொது இடையூறு அல்லது பொது அமைதியை மீறுவதாக இருக்கலாம் என்றாலும், அவை தனியுரிமையை மீறலாம் என்று கூறுவது மிகைப்படுத்தலாகும்"
  • இடையூறு, அமைதி மீறல், தார்மீக கவலைகள் போன்றவைக்கும் தனியுரிமையுடன் எந்த தொடர்பும் இல்லை, அவற்றால் பொது ஒழுங்கு, அமைதி மற்றும் அமைதிக்கு இடையூறு ஏற்படலாம். ஆனால், பொது ஒழுங்கு, அமைதி மற்றும் அமைதியை சீர்குலைப்பது தனியுரிமை உரிமைகளை மீறுவதற்கு ஒத்ததாக புரிந்து கொள்ள முடியாது. எங்களைப் பொறுத்தவரை,ரிட் மனுக்களில் அமிகஸ் கியூரி வெளிப்படுத்திய பொதுவான கவலைகள் அனைத்தும் விதிகளில் கவனிக்கப்படுகின்றன, ஏனெனில் விதிகள் அதிகாரிக்கு அதிகாரம் அளித்து, மேற்கூறிய கவலைகளை விதிகள் கவனித்துக் கொள்ளும்போது, ​​தனியுரிமை உரிமை மீறல் பிரச்சினையைத் தீர்ப்பது கற்றறிந்த நீதிபதிக்கு தேவையற்றது.'"
  • குடியிருக்கும் இடத்தில் மதுபான உரிமம் வழங்க அனுமதிக்கும் சட்டப்பூர்வ விதிகளை ரிட் மனுதாரர்கள் எதிர்த்து வழக்கு போடவில்லை
  • தனியுரிமை என்பது ஒரு நியாயமான எதிர்பார்ப்புக்கு அப்பால் நீட்டிக்கப்படாது, அதுவும் ஒரு தனிநபரின் தனியுரிமை என்பது அவரைச் சுற்றியுள்ள மற்றவர்களின் தொழிலையும் செயல்பாடுகளையும் சார்ந்தது அல்ல.
  • ஒரு தனிமனிதன் தனக்கு நெருக்கமான மற்றும் தனிப்பட்ட விஷயங்களில் தெரிவு செய்யவோ அல்லது முடிவுகளை எடுக்கவோ முடியாத போது மட்டுமே, அந்த நபரின் தனியுரிமைக்கான உரிமை மீறப்பட்டுள்ளது என்று கூறலாம்".

இந்த தீர்ப்பை படிக்கும் நம்மில் பெரும்பாலோருக்கு, அப்படியானால் , டாஸ்மாக் கடைகளை குடியிருப்பு பகுதியில் திறப்பது குறித்து அந்த பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவிக்கமுடியாதா என்ற கேள்வி மனதில் எழலாம்.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது, தனியுரிமை என்று சொல்வதில் இரண்டு விதமான முரண்பாடான உள்ளர்த்தம் உண்டு. ஒன்று, ஒரு அரசு, குடிமகனின் வாழ்விலும் தனியுரிமையிலும் குறுக்கீடு செய்யக் கூடாது என்பது. மற்றொன்று, குடிமக்களின் தனியுரிமையை பாதுகாக்கும் வண்ணம் செயல்படுவது ஒரு அரசின் கடமை …

தனி நபர்கள் கூட்டமாக வாழும் இந்த சமூகத்தில், ஒருவரின் தனியுரிமை என்பது, இன்னொருவரின் சட்டப்பூர்வமான வாழ்வுரிமையை பாதிக்கும் வகையில் இருக்க கூடாது என்பது தான். அதனால் ஒருவரின் தனியுரிமை என்பது வரம்பிற்கு உட்பட்டது தான்.

இந்த தீர்ப்பின் சொல்ல வந்த முக்கிய சாராம்சம் என்னவென்றால், ஒரு டாஸ்மாக் கடையை ஒரு இடத்தில் திறக்கலாமா என்று முடிவு செய்து அதற்கான அனுமதியை அரசு வழங்குகிறது. எந்த இடத்தில் திறக்க அனுமதி வழங்கவேண்டும் என்பது குறித்து விதிகள் தெளிவாக இருக்கின்றன. அப்படியிருக்க, அந்த அனுமதியை முறையாக பெற்ற ஒருவரை, தனியுரிமை பாதிக்கிறது என்று கோரி, தொழில் நடத்தவிடாமல் தடுக்கக் கூடாது என்கிறது.

அதை தடுக்க வேண்டுமானால், அந்த அனுமதி வழங்கிய அரசை அல்லது அந்த விதிகளை, அல்லது அந்த விதிகள் முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று தான் எதிர்த்து முறையீடு செய்ய வேண்டுமே தவிர, அதன் பயனாளியை அல்ல என்பது தான்.

என் கருத்து என்னவென்று தானே கேட்டீர்கள்?

திங்கள், 27 டிசம்பர், 2021

பாகப்பிரிவினை செய்வதற்கு முன்பே ஒருவர் சொத்தை வாங்கினால் என்னவாகும்?

 



பங்கு சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை ஒருவர் வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நிறுவனம், டிவைடென்ட் வழங்குவதாக அறிவித்து ஒரு குறிப்பிட்ட நாளை ரெக்கார்டு தேதியாக குறிப்பிடும். அந்த தேதியில் தான் அந்த பங்குகளை யார் யார் வைத்திருக்கிறார்கள் என்று சரிபார்த்து அவர்களுக்கு அந்த தொகை வழங்கப்படும். அதனால் அந்த தேதி வரை அந்த நிறுவன பங்குகள் மார்க்கெட்டில் வேகமாக ஏறிக்கொண்டேயிருக்கும். நிறைய பேர் அதை வாங்க முன் வருவார்கள்.. ஆனால் அதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம், அந்த ரெகார்ட் தேதிக்கு முந்திய தினத்தில் யார் பெயரில் அந்த பங்குகள் உள்ளதோ அவருக்கு தான் அந்த தொகை கிடைக்கும். அந்த பங்குகளை அந்த தேதியில் யார் வாங்கியிருந்தாலும் அவருக்கு அது போய் சேராது...ஏனெனில் எந்த பரிவர்தனையும், அந்த நிறுவனத்தின் கணக்கிற்கு வர இரண்டு நாட்கள் ஆகும் என்பதால், ரெகார்ட் தேதியில் வாங்கியவரின் பெயர் இருக்காது இதன் மூலம், அந்த பங்குகளை விற்றவருக்கு இரட்டிப்பு யோகம் அடிக்கும்.

ஒரு விதத்தில், பாகப்பிரிவினை செய்யப்படாத பங்கினை வாங்குபவரின் நிலையு ம், அது போன்ற நிறுவன பங்கினை வாங்குபவர் நிலையை ஒத்து இருக்கும்.

பாகம் பிரியம் போது தான், வார்சுகளில் யாருக்கு எந்த பகுதி நிலம் அல்லது சொத்து கிடைக்கும் என்பது உறுதியாகும்.

அதுவரை பிரிபடாத சொத்தின் கூட்டு உரிமையாளர்களாக தான் பங்காளிகள் இருப்பர். அந்த சமயததில் அந்த சொத்தை வாங்குவதென்றால், அனைவரும் மொத்தமாக கிரயம் செய்யலாம்.

அப்படியில்லாமல், பாகப்பிரிவினை செய்வது காலதாமதம் ஆகிறது என்று, பிரிபடாத கூட்டு சொத்தில், தன் பங்கை விற்கின்றனர். இதில் கிரயம் பெற்றவருக்கு, சில பிரச்சினைகள் உண்டு.

பாகப்பிரிவினை செய்யப்படும் சொத்தின் உரிமையுள்ளார் ஒரு குடும்பததை சேர்ந்தவராக இருப்பர். கிரயம் கொடுத்தவருக்கு உள்ள அதே உரிமை தான், அதை பெற்றவருக்கும் இருக்கும் என்று சொல்லப்பட்டாலும், நடைமுறையில் அது சாத்தியப்படாது. அவர்கள் ஒதுக்கும் பகுதியையே பெற்றுக்கொள்ள நேரிடும். கிரயம் கொடுத்தவர் தான் அவர்கள் குடும்ப உறுப்பினர. அவருக்காக சில விட்டுக்கொடுத்தல்கள் பாகப்பிரிவினையின் போது இருக்கும். ஆனால் அந்த இடத்தில் இருக்கும் மூன்றாம் நபருக்கு அதே சலுகை கிடைக்காது. இவரும் அதை உரிமையாக கோர முடியாது. இவருக்கு தான் முழுமையாக அடையாளப்படுத்தாத சொத்தின் ஒரு பகுதியை தானே பெற்றுள்ளார். அதுவும் பிரிக்கும் சக பங்காளிகள் ஒன்றாய் இருக்க, இவர் மட்டும் தனித்து இருப்பார். வேண்டுமானால் பாகப்பிரிவினை செய்ய விடாமல் தடுக்கும் முயற்சியாக தான் அமையும்.அது அவருக்கும் நல்லதல்ல.

அப்படியானால் என்ன தான் தீர்வு?

சம்பந்தப்பட்டவருக்கு உரிமையான பங்கு பாகபிரிவினையின் போது பெறும் வரையில் காத்திருந்து அவரிடமிருந்து வாங்கலாம்

சனி, 25 டிசம்பர், 2021

மாப்பிள்ளைக்கு சொந்தமாக வீடு இருந்தால்தான் பெண் தருவோம் என்கின்றனர் பெண் வீட்டார். இது வரதட்சணையில் வராதா? இதற்கென ஏதாவது சட்டம் உள்ளதா?

 


மாப்பிள்ளையின் பெயரில் தானே இருக்கிறது? பெண்ணின் பெயருக்கு மாற்றி தர சொல்லி கேட்டால் தான் அது "வரதட்சணை".

.நிறைய வீடுகளில் பார்த்திருக்கிறேன்.. மாப்பிள்ளை வீட்டை லோன் போட்டு வாங்கியிருப்பார்..மனைவி வேலைக்கு போய் வரும் சம்பளத்தில் குடும்ப நிர்வாகம் நடக்கும். இவர் லோன் கட்டி முடித்துவிடுவார்.சொத்து அவர் பெயரில். ஆனால் அதற்கு துணை நின்ற மனைவிக்கு?

இது வரை பெண்கள் இது குறித்து கேட்டதில்லை..இப்போது தான் சொத்து விவரங்களை கேட்க ஆரம்பித்துள்ளனர்..

"சொந்த வீடு வேண்டும் என்று கேட்டால், 25களில் இருக்கும் ஆண், எங்கே போவான்? பெண்கள் தான் துணிந்து மனமாற்றம் கொள்ளவேண்டும் " என்று ஒரு பெண் கருத்து தெரிவித்திருந்தார். அப்படி ஒரு பெண் சொல்ல வேண்டுமாயின், அவள் அவனை காதலித்திருக்க வேண்டும். அப்போது தானே அவன் திறன் அவளுக்கு தெரியும்? "நானும் அவனுமாய் சேர்ந்து, எங்கள் இல்லத்தை உருவாக்கி கொள்கிறோம்" என்று சொல்லுவாள்.

  1. இப்போதெல்லாம் காதல் திருமணத்திலும். வரதட்சணை இல்லாமல் இல்லை.அது தனி கதை. 

நிலைமை இப்படி இருக்க, பெற்றோர் பார்க்கும் வரனை பற்றி அவள் என்ன சொல்ல முடியும்? போட்டோவை பார்த்தவுடனே, "அப்பா நான் இவருடனேயே போய் கொள்கிறேன்.வாடகை வீடு என்றாலும் பரவாயில்லை. " என்று சொல்ல "கண்டதும் காதல்" வந்துவிடுமா?!

அப்டியேயானாலும், மாப்பிள்ளை வீட்டார் இது வரை கேட்காததையா பெண் வீட்டினர் கேட்டுவிட்டனர்?? ஆண் பிள்ளை வைத்துள்ளோம் என்ற கொட்டம் அதிகரித்து, பெண் சிசுக்கொலை செய்வதிலிருந்து, வரதட்சணை சாவு வரை அதிகரித்ததால் தானே அதை தடுக்க சட்டமே வந்தது? மேலே போன சக்கரம் கீழே வந்து தானே ஆக வேண்டும்?

இப்போது ஆண்களுக்கு நிகராக பெண்கள் வந்துவிட்டார்கள் என்று சொன்னாலும் உண்மை நிலவரம் அப்படியா இருக்கிறது??

சுவிஸ் சைக்கியாட்ரிஸ்ட் கார்ல் ஜங் "யோசிப்பது நிறைய பேருக்கு கடினம்.அதனால் தான் தீர்ப்பு எழுத உட்கார்ந்துவிடுகிறார்கள்! என்று. சொல்லியிருக்கிறார்...

இந்த வினாவை பார்த்து, எனக்கு அது தான் நினைவுக்கு வருகிறது!

இதற்கு என்ன தான் தீர்வு?



வழக்கறிஞர்கள் செய்யும் தவறுகள் என்னென்ன?

 ஆன்லைன் நீதிமன்ற விசாரணையின் போது பெண்ணுடன் நெருங்கி இருந்த நிலையில் இருந்ததாக தெரிந்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தடை விதித்துள்ளது.பற்றிய செய்தியை படித்திருப்பீர்கள். கூடுதலாக ஒழுக்கக்கேடான முறையில் நடந்தற்காக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கும் உத்தரவு இடப்பட்டது தெரிந்திருக்கலாம்.

இந்த ஆன் லைன் நீதிமன்ற விசாரணையின் போது , வழக்கறிஞர்கள் எப்படி எப்படியெல்லாம் இருந்து வழக்கு நடத்துகிறார்கள் தெரியுமா?

கார், ஸ்கூட்டரில் போகும் போது

வீட்டின் படுக்கை அறையில் .

மலையேற்றத்தின் போது

பீச்சில் அமர்ந்துள்ளபோது

ஜுஹி சாவ்லா பாடலை பாடிக்கொண்டே

ஏறக்குறைய நிர்வாண நிலையில்......

சமீபத்தில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் காணொளி மூலம் ஆஜரான ஒரு வழக்கறிஞர் வெறும் பனியனுடன் இருந்துள்ளார்.

இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும்போது, வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களின் அலுவலர்கள் தாங்கள் என்பதை மறந்து விட்டார்களோ என்று தான் நினைக்க தோன்றுகிறது....வழக்கறிஞர்கள் தங்கள் உடை விஷயத்தில் காட்டும் ஒழுங்கீனம் இப்போது தான் நடக்கிறாதா என்றால், எதிர்ப் பதமாகத் தான் பதிலளிக்க வேண்டும்.

திறந்த நீதிமன்றங்களில் வாதாடும் போது கூட சில வழக்கறிஞர்கள் வெள்ளை காலர் மட்டும் வைத்து தைத்த கலர் சட்டையை போட்டு மேலே கருப்பு கோட்டை மாட்டிக்கொண்டும், காலில் செருப்பு அணிந்தும், கோட் அனிந்தாலும் வழக்கறிஞர் கவுன் அணியாமலும், அல்லது கழுத்தில் ரோப்ஸ் என்பதை கழுத்து பட்டை இல்லாமல் அணிவதையும் பார்த்திருக்கிறேன். இன்னும் சில பெண் வழக்கறிஞர்கள் சுத்த மோசம்..... வெளியில் தான் கோ ட்டும் கவுனும் மாட் டுகிறோமே என்று வெறும் நைட்டியை உள்ளே அணிந்துக்கொண்டு நீதிமன்றத்திற்குள் நுழையும் பெண் வழக்கறிஞரையும் பார்த்துள்ளேன். இவையெல்லாம் எதை காட்டுகின்றன?

ஆடைக்கு என்ன முக்கியத்துவம் மற்றும் புனிதம் இருக்கிறது? என்ற கேள்வி எழலாம்.

"ஆள் பாதி ஆடை பாதி" என்பது தானே சொல் வழக்கு?!!

ஆடை விஷயத்தில் உள்ள நம் கவனம் இன்று நேற்றல்ல ....பண்டைய எகிப்தியர்களின் ஆடைகளிலிருந்து ஹென்றி VIII மன்னரின் கவசம் வரையம் நம் படைப்பு திறனே காட்டப்பட்டுள்ளது.

இப்படியுள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட இன சீருடை என்று நியமிக்கப்பட்ட காரணம் என்ன?

சீருடை தான் அந்த குழுவை கண்ணியமாகவும், மிக முக்கியமாக ஆள்மாறானதாகவும் ஆக்குவது. அது தான் உயர்ந்த குணாதிசயமுள்ள மனிதர்கள் கொண்டது அந்த குழு என்று தனித்து காட்டுவதாகவும், இருக்கும்.

என்ன வெயில் காலம் என்றாலும், சீருடையில் இருப்பதன் சிறப்பே தனி. எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்திருப்பதை பார்க்க முடியுமா? அப்படி அவர் இருந்தால், அவருக்கு தானாகவே கொடுக்கப்படும் மரியாதை தான் கிடைத்து விடுமா?

டாக்டர் தனக்கு வசதியாக இருக்கிறது என்று பெ ர்முடாஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் அறுவை சிகிச்சை செய்தால் நோயாளிக்கு எப்படி இருக்கும்?

இன்னொன்றும்....கூட...

சீருடை ஒரு சமநிலையாக செயல்படுகிறது. சீருடையில் இருக்கும் போது , பணக்காரர், ஏழை, தொழிலில், அல்லது பணியில் வெற்றிகரமானவர அல்லது ஆரம்பநிலையில் உள்ளவர் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் இருக்கும்.நீதிமன்றத்தில் ஒவ்வொரு வழக்கறிஞரும் ஒரே மாதிரியாக தான் தெரிவார்கள்.

வழக்கறிஞர் சீருடையை பார்த்தாலே,யே , கருப்பு மற்றும் வெள்ளை ஆடைக் குறியீடு ஏன் ? வெள்ளை கழுத்து பட்டையின் முக்கியத்துவம் என்ன என்ற கேள்வி நிறைய பேருக்கு உள்ளது .

வரலாற்று ரீதியாக, கருப்பு என்பது அதிகாரம் மற்றும் ஆதிக்கத்தின் நிறமாக கருதப்படுகிறது. இந்த நிறம் தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பாரம்பரியமாக பார்த்தோமேயானால், நிறங்கள் எப்போதும் எதையாவது குறிப்பதை கவனிக்கலாம். மஞ்சள் என்றால் மங்களம், வெண்மை என்றால் தூய்மை, இப்படி......

ரோமில் உள்ள பாதிரியார்கள் கடவுளுக்கு அடிபணிவதைக் காட்ட கருப்பு ஆடை அணிவதைப் போல, வழக்கறிஞர்கள் நீதிக்கு அடிபணிவதைக் காட்ட கருப்பு ஆடையை அணிவார்கள். பொய் சொல்வதை பிழைப்பாக கொண்டாலும், அது மற்றவரின் உயிர் மற்றும் உடமையை காக்க தானே .... சனியின் நிறமும் கருப்பு தான் அவருக்கு பிடித்த உடையும் கருப்பு தான். அதனாலோ என்னவோ அவர் தான் சட்டம் என்னும் காரகத்துவத்துக்கு உரியவர்.. கறாரான நீதிமான்!!

வெள்ளை கழுத்து பட்டையை குற்றமற்ற தன்மையாக விவிலிய வரலாறு குறிக்கிறது.

வக்கீல் பாண்ட் டை உருவாக்க இரண்டு வெள்ளைத் துணிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன இல்லையா? இது எப்படி வந்தது என்று வரலாற்றை பார்க்கும்போது, , விவிலிய வரலாற்றின்படி, மோசேயால் சினாய் மலையில் எரியும் புதரிலிருந்து இதை பெற்றதாக நம்பப்படுகிறது., ஒரே மாதிரியான குறியீட்டு சட்டத்தின் முதல் உதாரணம் என்று பத்து கட்டளைகளை தான் சொல்வார்கள்.. அந்த பத்துக் கட்டளைகளை எழுதுவதற்காக அவரா ல பயன்படுத்தப்பட்டவை இவை, எனப்படுகிறது. .இப்படி அந்த வெள்ளை நிற வக்கீல் பாண்டுகள், கடவுள் அளித்த சட்டம் மற்றும் மனிதர்களின் சட்டங்களை நிலைநிறுத்துவதைக் குறிக்கின்றன.

அப்படிப்பட்ட சிறப்பான ஒரு வழக்கறிஞர்களின் சீருடையில் வழக்கறிஞர் இல்லாதது) போன்ற நிகழ்வுகள் மற்ற நாடுகளில் நடந்திருக்கிறதா, என்று பார்க்கும்போது தான் நம் உச்ச நீதிமன்ற சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மெஹத்தா அவர்கள் எழுதிய கட்டுரையையை படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன்படியே இது போன்ற வழக்குகள் ஏதும் உள்ளதா என்று வரலாற்றின் பக்கங்களை ஆராயும்போது தான், இந்த , பரிந்துரைக்கப்பட்ட சீருடையைத் தவிர வேறு ஆடைகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களின் சட்டபூர்வமான தன்மை அல்லது உரிமையை நீதித்துறை ரீதியாக பரிசீலிக்க கிடைக்கும் சந்தர்ப்பம் இந்தியாவில் வெகு அரிதாக தான் கிடைத்துள்ளது.

ஆனால் வெளிநாடு என்னும் போது, எதைப் பற்றியும் கவலைப்படாத வாழ்க்கை முறையை கொண்ட அமெரிகாவில் உள்ள நீதிமன்றங்களில் இத்தகைய கோரமான நிகழ்வுகள் அதிகம் காணப்படுவது தெரிகிறது,

அமெரிக்கர்கள் தான் அதிக கற்பனைத்திறன் கொண்டவர்கள் ஆயிற்றே?

அல்லது அமெரிக்க நீதிமன்றங்கள் அத்தகைய உரிமை கோரல் குறித்து விசாரிப்பதற்கு நேரமும் விருப்பமும் காரணமாக இருக்கலாம்.

அந்த வகையில் இரண்டாவது கட்ட மேல்முறையீடு வரை அட்டர்னி டாட் சி. பேங்க்கின் இந்த வழக்கு நீண்ட தால், இது முக்கித்துவம் வாய்ந்ததாக செல்லலாம்.குயின்ஸில் உள்ள சிவில் கோர்ட்டில் நீல நிற ஜீன்ஸ் மற்றும் பட்டன்-டவுன் ஷர்ட் அணிந்து "ஆபரேஷன் டெசர்ட் ஸ்டாம்" என்று எழுதப்பட்ட பேஸ்பால் தொப்பியுடன் இவர் ஒரு முறை ஆஜரானார். அவரது பொருத்தமற்ற உடை யை சரி செய்யுமாறு நீதிபதி அன்னே காட்ஸ் அவரை அறிவுறுத்தினார். ஆனாலும், தன கட்சிக்காக தானே ஆஜராவதால், தன உடை குறித்த நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் , அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் தனக்குள்ள உரிமையை பாதிப்பதாக கூறி மாவட்ட நீதிமன்றத்தை அணுகினார். அப்போது அவர் வைத்த வாதம்,

" "தன்னுடைய உடை என்பது தன கருத்தை வெளிப்படுத்தும் குறியீடு என்றும் நீதிபதியின் வேலையே, தன முன் உள்ள வழக்கை ஆராய்ந்து தீர்ப்பு வழங்குவது மட்டுமே.. வழக்கு தொடுத்தவர் என்ன உடை அணிந்துள்ளார் என்பது தேவையில்லாதது"

ஆனால் இதை மாவட்ட நீதிபதி ஏற்கவில்லை. 2009ல் அவர் வழங்கிய தீர்ப்பில், "சொந்த கருத்துக்களை வெளிப்படுத்த நீதிமன்றம் ஒரு பொது இடம் அல்ல" என்றும் ..."விதிகள் நியாயமானதாகவும் பார்வைக்கு நடுநிலையாகவும் இருக்க வேண்டும்" என்றார்.

நீதிமன்றத்தில் ஆ டை அணிவது என்பது "நீதிமன்றத்தின் நாகரீகத்தைப் பராமரிப்பது மற்றும் நீதித்துறை செயல்முறைக்கான மரியாதை ஆகியவற்றுடன் நியாயமான முறையில் தொடர்புடையது" என்று மாவட்ட நீதிபதி கூறினார்.

இவரும் விடாமல் மேல்முறையீடு செய்ய, அங்கும் 2011ல் எதிரான தீர்ப்பே கிடைத்தது. நீதிமன்றத்தில் ஆஜராகும்போது அவர் தனது பேஸ்பால் தொப்பியை அகற்ற வேண்டும் என்ற நீதிபதியின் அறிவுறுத்தல், நீதிமன்ற அறையில் ஒழுங்கையும் மாண்பையும் காக்கும் நீதிமன்றத்தின் நியாயமான நோக்கத்துடன் தொடர்புடையவை என்றும் . மாவட்ட நீதிமன்றம் சரியாக தான் நிராகரித்தது என்றும் கூறி .

"உடையைத் தேர்ந்தெடுப்பது பாதுகாக்கப்பட்ட உரிமை என்று வாதிட்டால், நீதிமன்றத்தில் பேசுவதற்கான கட்டுப்பாடு இருக்கும் வரை நியாயமான மற்றும் நடுநிலை.நிலைநிறுத்தப்படும்." என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர் .

இதே போன்ற இன்னொரு முக்கிய வழக்கு, கெல்லி vs ஜான்சன் [425 U.S. 238 (1976)] என்ற அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வந்தது. , இது காவல்துறையினர் வைத்துக் கொள்ளவேண்டிய முடி ஒழுங்கு பற்றியது.

ஒரு நபர் தனது தனிப்பட்ட தோற்றத்தில் அரசியலமைப்பு சட்ட ரீதியாக எந்த அளவிற்கு உரிமை கொண்டிருக்கிறார் என்பது அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முன் எழுப்பப்பட்ட முக்கியமான கேள்வி.. .நீதிமன்றம் காவலர்களுக்கான முடி ஒழுங்கை உறுதி செய்ததும் அல்லாமல், ஒரு போலீஸ் அதிகாரியின் வேலை நிலை மற்றும் போலீஸ் படையில் "ஒழுக்கம், மற்றும் சீரான தன்மை ஆகியவற்றின் தேவை" உள்ளதை வலியுறுத்தியது.

இதே போன்ற நிலையில் தான் ஒரு வழக்கறிஞரோ அல்லது நீதிபதியோ உள்ளனர். ஏனெனில் இரண்டிலும் குறைந்தபட்சம் ஒழுக்கம் மற்றும் ஒற்றுமை தேவை.

2003 ஆம் ஆண்டில் இதேபோன்ற ஒரு வழக்கு எழுந்தது, இது உடையைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமையாக எழுந்தது, நியூயார்க்கின் சல்லிவன் கவுண்டியில் டிரைவராகப் பணிபுரியும் ஜலேவ்ஸ்கா என்றஒரு பெண்மணி, அனைத்து ஓட்டுநர்களும் தங்கள் சீருடையின் ஒரு பகுதியாக பேன்ட் அணிவதைக் கட்டாயப்படுத்திய ஆடைக் குறியீட்டை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். . இந்த விவகாரம் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம், 2வது சர்க்யூட் வரை சென்றது.

10.01.2003 தேதியிட்ட ஜலேவ்ஸ்கா V. கவுண்டி ஆஃப் சல்லிவன், நியூயார்க்கின் வ ழக்கில், "பாவாடை அணிவது ஆழ்ந்த கலாச்சார மதிப்பின் வெளிப்பாடாகும்" என்ற மனுதாரரின் வாதத்தை நிராகரித்தது.

"மேல்முறையீட்டாளரின் முதல் வாதம், பாவாடை அணிவது என்பது அவரது "ஆழமான கலாச்சார மதிப்பின் வெளிப்பாடு" என்ற கூற்றில் உ ள்ளது. தனது கலாச்சார விஷயங்களை வெளிப்படுத்தும் அவரின் விருப்பம் மிகவும் வலுவாக உள்ளது, அவர் ஒரு போதும் பேன்ட் அணிந்ததில்லை என்கிறார்.

பெரும்பாலான மக்களைப் பொறுத்தவரை - ஆடை அணிபவரைப் பற்றிய எண்ணங்கள் மற்றும் தகவல்கள் அவர் அணியும் ஆடை மற்றும் தனிப்பட்ட தோற்றம் பொறுத்தது. கன்னியாஸ்திரி முதல் நீதிபதியின் அங்கிகள் வரை, ஆடைகள் பெரும்பாலும் ஆடை அணிந்த நபரைப் பற்றி ஏதாவது சொல்லக்கூடும். இருப்பினும், ஏதோ ஒரு வகையில் தன எண்ணத்தை வெளிப்படுத்துவது என்பது மட்டுமே என்பது தானாகவே அதற்கு அரசியலமைப்புப் பாதுகாப்பை அளிக்காது." என்றார்கள்.

.பரிந்துரைக்கப்பட்ட சீருடையைத் தவிர வேறு ஆடைகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களின் சட்டபூர்வமான தன்மை அல்லது உரிமையை நீதித்துறை ரீதியாக பரிசீலிக்கும் சந்தர்ப்பம் எப்போதாவது தா கிடைத்துள்ளது.

1997 ஆம் ஆண்டில்சேத் பெர்னர் என்ற ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில், தனது உடையில் அரசியல் பொத்தான்களை அணிவதற்கு பாதுகாக்கப்பட்ட முழுமையான உரிமை இருப்பதாகக் கூறி வழக்கு தொடர்ந்த போது எழுந்தது. பெர்னர் v. டெலாஹன்டி என்ற இந்த வழக்கில் . யுனைடெட் ஸ்டேட்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் அவர் கோரிக்கையை நிராகரித்தது:

"அனைத்து அமெரிக்கர்களைப் போலவே ஒரு வழக்கறிஞர் அரசியல் உணர்வுகளை வைத்திருக்க சுதந்திரமானவர். இருப்பினும், நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தங்கள் சட்டைகளில் (அல்லது மடிப்பில், அத்தகையவற்றை அணிவதற்கு முழுமையான உரிமை இல்லை" என்றது..பெர்னர் வி. டெலஹந்தி 1997

நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்தது டேவிட் பர்ன்ஸ் என்ற மற்றொரு புளோரிடா வழக்கறிஞரிடமிருந்து வந்தது. அவர் ஒரு வழக்கின் நீதிமன்ற விசாரணையில், அனைவரையும் காத்திருக்க வைத்து சரியான நேரத்தில் நீதிமன்றத்திற்கு வராமல், . திடீரென கதவுகள் திறக்கப்பட்டு கோர்ட்டுக்குள் நுழைந்தார். வழக்கறிஞரின் உடையை அணியாமல், பைஜாமாக்களை அணிந்து ஸ்ட்ரெச்சரில் கொண்டு வரப்பட்டார். புளோரிடாவின் உச்ச நீதிமன்றம் இந்த நடத்தையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை,

"நீதிமன்றத்தில் ஸ்ட்ரெச்சரில் தோன்றுவதும், படுக்கையில் இருப்பதும், சரியில்லாத ஆடை அணிவதும் நீதி நிர்வாகத்திற்கு பாதகமான நடத்தையை உருவாக்குகிறது. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தகுதியை எதிர்மறையாக பிரதிபலிக்கிறது." என்று கூறி அவர் நீதிமன்றத்தில் ஆஜராக 30 நாள் தடை விதித்தது.

இந்தியாவில், மாண்புமிகு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பிரயாக் தாஸ் எதிராக சிவில் நீதிபதி, புலந்த்ஷாஹர் (AIR 1974 அலஹாபாத் . 133) வழக்கில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் எழுந்தது. அவர் தனது மனுவில், நீதிமன்றங்களில் தான் வேஷ்டி சட்டையில் ஆஜராக அனுமதிக்க கோரினார்.!! நல்லவேளையாக, அது ஏற்கப்படாமல் தள்ளுபடி செய்யப்ப ட்டது.

காலம் சென்ற மாண்புமிகு நீதியரசர் ஸ்ரீனிவாசன் அவர்கள், தன கலாச்சாரத்தை வெளிப்படுத்தவும் தவறவில்லை. அதேசமயம், சீ ருடையின் மாண்பையும் கைவிடவில்லை....

அவர் புகைப்படத்தை பதிவிட தேடியபோது இணையத்தில் இல்லை!! ஏன்?

நீதிமன்றமோ , வீடியோ கான்ஃபரன்ஸிலோ எதுவாக இருந்தாலும், வழக்கறிஞர் சீருடை முக்கியம் அல்லவா?

  • வழக்கறிஞரின் உடை கம்பீரத்தையும், தனித்துவத்தையும், சிறப்பையும், கொண்டது,
  • அதை அணிபவருக்கு ஒரு தனித்துவமான ஆளுமையை அளிக்கிறது.
  • ஒரு வக்கீலின் கோட், கவுன் மற்றும் கழுத்து பட்டை போன்றவை மதிப்பில்லாதவை..
  • அந்த உடையில் தான் உள்ளது தனித்துவமான ஒற்றுமை, தொழில் கண்ணியம் மற்றும் மகத்துவம்!!

அதை உணர்ந்தவருக்கே அதன் மகத்துவம் புரியும்.


எங்கள் நிலத்துக்கு பக்கத்தில் இருக்கும் நிலம் விற்பனைக்கு வருகிறது. நான் வெளிநாட்டில், விற்பவரும் வெளிநாடு போகவேண்டும்.என் தந்தையின் பெயரில் பதிவு செய்யப் போகிறோம். பதிவு செய்யும் போது இது என் சம்பாத்தியத்தில் வாங்கியது என பதிவு செய்ய முடியுமா?

 நிலத்தை உங்கள் தந்தை பெயரில் வாங்கவுள்ளது நல்லது தான்.ஆனால் அவருக்கு கிரயம் செய்ய பணம் எப்படி வந்தது என்று பதிவு செய்வது…அது தேவையில்லாதது என்றாலும் கூட , அதன் உள்ளே ஒரு அவநம்பிக்கையும் தொக்கியுள்ளதே? 
அவர் பெயரில் சொத்து வாங்கினால், பின்னாளில், அதை அவர் விருப்பப்படி மாற்றி விடுவார் என்றா? 
பின்னாளில் சொத்தை அப்பா வேறு யாருக்காவது மாற்றி எழுதிவிட்டால், கேஸ் போட ஒரு ஆதாரம் என்று நினைப்பா?  
மற்றபடி, அப்படி எழுதுவதால் மட்டுமே பணம் கொடுத்தவருக்கு உரிமை வந்துவிடாது.

நமக்கு முன் பின் அறியாத ஒருவர், திருமணம் ஆகி நம் துணை ஆனவுடன், அவர் மீது எவ்வளவு நம்பிக்கை வைக்கிறோம்? அவருக்கு நகை வாங்கி கொடுக்கவோ செலவழிக்கவோ யோசிப்பதுண்டா? 
ஏனெனில் அவர் நம்மில் பாதி.. 
ஆனால் அப்பா அம்மாவுக்கு என்றால், ஏன் இந்த தயக்கம்?
 நாம், நம் பெற்றோரின் "பிரதி"யல்லவா? 
அதை எப்படி மறந்தோம்?
 நம் அண்ணன் தம்பிக்கு எழுதி கொடுத்துவிடுவார் என்றா??

இதே அவநம்பிக்கையை நம் மீது அவர் வைத்து இருந்தால், இன்று வெளிநாட்டில் வேலை செய்யும் அளவிற்கு நம் கல்வி தகுதி கூடியிருக்குமா?

போன மாதம் ஒரு தம்பியிடம் பேச நேர்ந்தது..தன் அம்மா சொத்தில் பங்கு கொடுக்காமல், ஒத்தி போடுவதால், தான் வீட்டுக் கடனை தொடர்ந்து கட்டி அல்லல் படுவதாக "அலட்டி"க்கொண்டார்.

"உன் அம்மாவிற்கு இப்போது மாதம் மாதம் பணம் கொடுக்கிறாயா? "

"ஒரு தடவை என் க்ரெடிட் கார்டை போய் கொடுத்தேன்.செலவழித்துக்கொள்ள.. வேண்டாம் என்று விட்டார்கள்.".

"நீ அவர்களுக்கு பணமாகக் கொடுத்திருக்கலாம்.. மற்றவரை படிக்கக் கூட வைக்காமல், .உன்னை மட்டும் தான் தனியார் கல்லூரியில் படிக்க வைத்தார். கூடவே கம்புயூட்டர் டிப்ளோமா..பி.ஜி.படிக்க வைத்தார். அது தானே உன்னுடைய இந்த வேலைக்கு அடிப்படை?"

"என்ன பெரிதாக செல்வழித்து விட்டார்? சில ஆயிரங்கள் இருக்குமா? அதை வேண்டுமானால் இப்போது தந்து விடுகிறேன்"

சற்றென்று "காலத்தினால் செய்த சிறு உதவி" நினைவுக்கு வந்தது. பேச்சை நிறுத்தி விட்டேன்.

இதை தான் இந்த வினாவை படிக்கும் போதும் தோன்றியது..

தனக்கு பின்னால் தேவைப்படும் இந்த பணம் என்று சேமித்து வைக்காமல், அப்பா நம் படிப்புக்கு உதவி செய்தது ஏன் நினைவுக்கு வரவில்லை?

"அவர் ஒன்றும் பெரிதாக செலவழிக்கவில்லை.உபகார சம்பளம் பெற்று தான் படித்தேன்"…
இல்லை "பகுதிநேர வேலை பார்த்துக்கொண்டே படித்தேன்" என்போமா?

ஆனாலும், அதற்கு தகுதியான உடல் நலததை கொடுத்தது அவர் போட்ட உணவு அல்லவா?

"பிள்ளையை காப்பது அவருடைய கடமை" என்போமா? அப்படியானால் வளர்ந்த பிள்ளை, அப்பாவுக்கு திரும்ப செய்வதும் கடமை தானே?

"அவருக்கு உண்டான செலவுக்கு தான் பணம் கொடுக்கிறேனே?" என்போமா?

தன்மானம், சுய மரியாதை தராத பணம் உவப்பாக இருக்குமா அவருக்கு?

"தான் இனி இந்த குடும்ப
த்திற்கு வேண்டாத நபராகி விட்டோம்" என்ற உணர்வு தான் வீட்டின் குடும்ப தலைவராக இருந்த ஒருவருக்கு கிடைக்கும் மரண அடி!!
முன்னர் திருமணமான பெண்ணிற்கு கொடுக்கும் சொத்தை, அவள் வாழும் காலம் வரைக்கும் தான் அனுபவிக்கலாம்,. அதை தவிர்த்து அதை கிரயம் செய்யவோ, அதில் வில்லங்கம் ஏற்படுத்தவோ முடியாத அளவிற்கு தான் அவள் உரிமை ஒரு வரையரையுடன் இருந்தது..
இன்று அப்படி நிர்ணயம் செய்ய முடியாது.. 
பெண்ணுக்கே சொத்தில் முழு உரிமை என்னும்போது பெற்றவருக்கு?

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது, "தனியொரு மனிதன்" படம் டிவியில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அரவிந்த சாமி தன் அப்பாவை தன்னுடைய கைப்பாவையாகவே வைத்திருப்பார்.. அவரை முழுதும் நம்பும் அவர் அப்பா..கடைசியில் பிள்ளை தான் தன்னை "முடிக்க" ஏற்பாடு செய்தான் என்னும் போதும், அவரின் பேச்சு பெருந்தன்மையாக இருக்கும். அது தான் ஒரு அப்பா, பிள்ளையின் மீது வைக்கும் பாசத்தின் வெளிப்பாடு..எந்த பணமும் சுகமும் அதை ஈடு செய்யாது.!!.

அப்பாவின் சட்டைப்பையில் பணம் எடுக்க பிள்ளைக்கு இருக்கும் சுதந்திரம், பெற்றவனுக்கு இருப்பதில்லையே?
அதை அவரும் கோருவதில்லை என்பது தான் உண்மை.
 பிள்ளை கொடுத்து பெறவேண்டும் என்றே நினைப்பார்..அதில் தான் அவரின் பெருமையும் அடங்கியுள்ளது..அதுவும் கணக்கு கேட்காமல், மகன் பணம் கொடுக்கிறான் என்றால், அவரின் பூரிப்புக்கு அளவேயிருக்காது. இதில் சொத்து வாங்கி அவர் பெயரில் எழுதுகிறீர்கள் என்றால், உற்சாகத்தின் உச்சிக்கே போய் விடுவார்..இதில், "பணம் வந்த வழியை" "இடைசெருகலாக" நுழைத்ததன் காரணம் தெரிந்தால்???

எந்த அப்பா தன் பிள்ளையின் முன்னால் அழுதிருக்கிறார்??!!

இன்று நாம் உலகத்தையே சுற்றலாம்..ஆனால், அவர் உயிரின் ஒரு துளியில் இருந்து தானே, நம் உலகமே தொடங்கியது..

இன்று நாம் போய் கொண்டிருக்கும் பாதையின் ஆரம்பத்தில், கைபிடித்து நம்மை நடக்க பழக்கியவரே அவர் தானே?
 சற்றென்று ஒரு தருணத்தில் நம் பிடியை அவர் விட்டார் தான்...
அவர் பிடித்துக் கொண்டு இருப்பதாக எண்ணிக் கொண்டு தானே நம் பயணமும் தொடர்ந்தது?? 
இன்று வரை அந்த எண்ணத்தில் மாற்றம் இருக்குமா?
 பிடியை விட்டாலும், நின்ற இடத்திலிருந்தே நம் பயணத்தை அவர் கண்காணித்து வரவில்லை?? 
அவர் நம் கையை பிடித்துக்கொண்டு இருப்பதாகத்தானே இன்னமும் நினைத்துக்கொண்டு பயணத்தை தொடர்கிறோம்?

அவருடைய தன்னம்பிக்கை தானே நம் நம்பிக்கையும் கூட??!!

"என்ன… ஒரு சந்தேகத்தை கேட்டதற்கு இவ்வளவு சொல்ல வேண்டுமா?" என்னும் உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.
இது எல்லாமே தன் அப்பாவை தன்னருகில் வைத்துக்கொண்டு, அவருக்கு வேண்டியதை செய்ய முடியாமல் போன, அவர் வாழும் காலத்தில் அவரிடம் தனக்கு உள்ள பிரியத்தை பலமுறை நினைத்தும் சொல்ல முடியாமல் போன ஒரூ மகளின் எண்ணக்குமுறல்..அதைத்தான் இங்கே பதிவு செய்கிறேன்.

என் பிரிய சகோதரர் நா.முத்துக்குமார் சொன்னது போல,
"கடைசி இலை கீழே விழுவதற்கும் காற்று வர வேண்டும் இல்லையா?"

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...