செவ்வாய், 12 அக்டோபர், 2021

எதைப் பற்றி மக்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

 இதை பற்றி பல தடவை சொல்லியுள்ளேன். கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியது அடிப்படை சட்டத்தை பற்றி..

ஏதேனும் பிரச்சினை வரும்போதே நாம் காவல் நிலையத்தையும், நீதிமன்றத்தையும் தேடிப் போகிறோம்.அப்படி போகும்போது, தன் தரப்பு நியாயத்தை மட்டுமே பார்க்கும் நாம் அது , பொது நியாயத்தில் வருமா என கவனிக்க தவறுகிறோம்.இதனால் தான் பல சுற்று வழக்காடலுக்கு பிறகும் நம் கட்சி தோற்றுப்போகிறது..அது ஏற்றுக்கொள்ளப்படாத வாதம் என்று முன்னரே நமக்கு தெரிந்திருந்தால் அத்தனை கால விரயம், பொருள் விரயம் செய்திருப்போமா?

ஆனால் ஏற்றுக்கொள்ளத்தக்கது எது? எது அப்படி இல்லாதது?

உறவினரின் பக்கத்து வீட்டு பெண்மணியின் பிள்ளை திடீரென ஒருநாள் "பேசி"னார். அவர் அப்பா சாலை விபத்தில் அடிபட்டு இவர்கள் தகவல் தெரிந்து போகும்முன்பே இறந்து விட்டுள்ளார்..நஷ்டஈடு கிடைக்கும் என்று யாரோ சொல்ல, சாலை விபத்தில் இடித்துவிட்டு போன வண்டி விவரம் தெரியாது என்பதால், என்ன செய்யலாம் என்று கேட்டார்..பேசும்போது தெரிந்தது, அவர் ஏற்கெணவே போலீசில் புகார் கொடுத்துள்ளார், அதில், அவர் தந்தையின் தவறால் விபத்து ஏற்பட்டது என்று..என்ன இப்படி எழுதி கொடுத்துளளீர்களே என்று கேட்டால், ஏட்டு எழுத, நான் கையெழுத்து மட்டும் போட்டேன், இப்போது அதை மாற்ற முடியமா? என்றார்..இதை காவல் நிலையம் போகும் முன்பேயல்லவா கேட்டிருக்கவேண்டும் எண்றேன்..விவரம் தெரியாமல் அரசு கொடுக்கும் நஷ்டஈடு கூட பெற வழியில்லாமல் போயிற்று.

அடுத்து அவர் கேட்டார் பாருங்கள் ..பணம் கொடுத்தால் புகாரை மாற்ற முடியுமா?"☺️

நிறைய பேர், "சட்டம் எங்களுக்கு எதற்கு? . நாங்கள் சரியாக நடப்பவர்கள்" என்கிறார்கள்.

உண்மை…பிளாட்டோவும் அதைத் தான் சொல்கிறார்..

"நல்ல மக்களுக்கு, பொறுப்பாக நடந்த கொள்வது எப்படி என்று சொல்ல சட்டம் தேவையில்லை.ஆனால் மோசமான மக்களுக்கு அதை வளைக்கும் வழி தெரியும்" என்கிறார்.

ஒரு வழிப்பாதையின் எதிர்திசையில் வேகமாக வண்டியோட்டி வருபவர்களை பார்த்திருக்கிறோம் தானே…?

அதைக் கூட விடுங்கள்..நடந்து போய்க்கொண்டிருக்கும் மக்களின் மீது வண்டியை ஏற்றி கொன்றுவிட்டு, வாளா இருப்போரையும் தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்…?!

இத்தனைக்கும் தன் மகன் தேரில் அடிபட்டு ஒரு கன்று இறந்தது என்று தன் மகனையே பலியிட்ட மனுநீதி சோழன் ஆண்டதும் இங்கு தான்.

அதிகாரத்தை கொண்டு ஒருவன் என்ன செய்கிறான் என்பதைக் கொண்டே அவனில் உள்ள மனிதத்தன்மையை அறிந்துகொள்ள முடியும்.

வலியை உணர்ந்தால் உயிருடன் உள்ளோம் என்று அறியலாம் .மற்றவரின் வலியை உணர்ந்தாலோ மனிதனாக இருக்கிறோம் என்று…லியோ டால்ஸ்டாய் சொல்கிறார்.

"சொல்றவன் சொல்லிக்கிட்டு இருக்கட்டும், என்று பணமும் அதிகாரமும் இருந்தால் சட்டத்தை வளைத்து விடலாம் தான்..ஆனால்..

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை" 
என்று எச்சரிக்கிறாள் அவவை.

வழக்காடு மன்றத்தில் (கோர்ட்) பொய் சாட்சி சொல்பவர் வீடு ஒருவருக்கும் பயன் படாமல் போகும், அந்த வீட்டில் வேதாளம் குடிபுகும், வெள்ளை எருக்கம் பூ பூக்கும் , பாதாள மூலி என்னும் கொடிய விஷம் உள்ள கொடி வளரும், மூதேவி போய் வாழ்வாள், பாம்பு குடியேறும். ஆதலால் நியாய அநியாயங்களை அலசி ஒருவரின் பிரச்சனையை தீர்க்க உதவும் வழக்காடு மன்றத்தில் நாம் பொய் சாட்சி சொல்லக்கூடாது.

இங்குள்ள பிரச்சினையே புத்திசாலிகள் எல்லாம் ஏகப்பட்ட சந்தேகங்களுடன் இருக்க, அறிவிலிகள் மட்டும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருப்பது தான்..!!

ஏதோ ஒரு வகையில்..

அது சட்டத்துக்கு புறம்பனது ஆனாலும்

வாழ்க்கையில் ஜெயிப்பவனிடன் பேசத தான் ஆசைப்படுகிறார்கள்.தோற்று போனவனிடம் பேச யாருக்கும் நேரமில்லை

அவன் நேர்மையான வழியில் போய் தோற்றாலும் கூட!

வரலாறு முழுதும் பார்த்திருக்கிறீர்களா ?

யார் செயல் புரிந்திருக்க வேண்டுமோ அவர்கள் செய்யாமல் விட்டதும், நன்றாக தெரிந்து அறிந்திருக்க வேண்டியவர்களே அதை விட்டொழித்ததும், எப்போது அதிக தேவையோ, அப்போது நீதி ஊமையாகிப்போனதும், இவையெல்லாம் தான் அரக்கர்கள் வெற்றி கொள்ள உதவியது.

பீஷ்மர் எவ்வளவோ அறிந்திருந்தும் , நடக்கும் அநீதி தெரிந்தும் வாளாயிருந்ததால் தானே பழிக்கு ஆளானார்!!

ஆனாலும்…எந்த தவறும் செய்யாதிருப்பினும் சிலருக்கு காராக்கிரகம். போகும் சூழல் வரும்..

’நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை; என்று கம்பர் பாடவில்லை?

எல்லாம் ஜென்ம ஜாதகத்தில் 12ம் பாவம் கெட்டிருக்கும்!

இப்படித் தான் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் விசாரணை படக்காமலேயே 12 வருடம் சிறையில் இருக்கிறார்.இவருடைய பெயில் மனு விசாரனைக்கு வரும்போது, கேரள உயர்நீதிமன்றம் " ஒருவரின் சட்டப்பூர்வ அல்லது அரசியலமைப்பு உரிமைகளை பற்றி ஆராய்வதை, அவர்கள் "இறந்த பிறகு" பிரேத பரிசோதனை செய்வதாக நீதிமன்றங்கள் இருக்கக்கூடாது அதற்கு பதிலாக, அத்தகைய உரிமைகளைக் அவை அணைக்கப்படுவதற்கு முன்பு" காப்பாற்றும் டாக்டராக இருக்க வேண்டும் ... ," என்றுருக்கிறது!!

நீதிமன்றங்கள் தன் கதவை தட்டுபவருக்கு நீதி வழங்க தயாராகத் தான் இருக்கிறது!

நமக்கு தான் தெரிய வேண்டும்..நம் உரிமைகளை பற்றி மட்டுமல்ல.. கடமைகளையும்!!

"எனக்கு அதெல்லாம் தெரியாது, தெரிய வேண்டிய தேவையும் இல்லை" என்று கர்மாவின் சட்டத்திற்கு முன் சொல்ல முடியாதே!!.

வாரிசு சான்றிதழ் ஏன், எதற்காக தேவை?

 ஒருவர் இறந்த பின் அவருடைய வாரிசுகள் இன்னின்னார் என்று சுட்டிக்காட்டும் சான்று தான் இந்த வாரிசு சான்றிதழ்.

இது எதற்காக தேவை?

ஒருவரின் சொத்து மற்றும் கடன், அவருக்கு பிறகு யாருக்கு போய் சேரும் என்பதை இந்த வாரிசு சான்று தான் நிர்ணயிக்கும

அவர் உயிருடன் இருக்கும்போது, இந்த வாரிசு சான்று கொடுக்கப்படுமா? என்றால், எப்போது அவரின் வாரிசு யார் என்பதை அறியும் தேவை ஏற்படுகிறது?

நாம் வாழும் காலத்தில், நமக்கு உரிமைப்பட்டவற்றை நாம் தான் அனுபவிக்கிறோம். மற்றவருக்கு கொடுக்கிறோம்..நாம் இருக்கும்போது, மற்றவருக்கு, நம்மை மீறிய உரிமைகள் வந்துவிடுவதில்லை.

ஆனால் நம் காலத்திற்கு பிறகு, அந்த உரிமை யாருக்கு போய் சேரவேண்டும் என்று முடிவு செய்யவேண்டிய தேவை வருகிறது..

அதனால் தான் இறந்தவரின் வாரிசு இன்னார் என்று அடையாளம் காட்டக்கூடியவகையில், பேரன் தான் நெய்ப்பந்தம் பிடிக்கவேண்டும் என்று சாஸ்த்திர சம்பிரதாயம் வகுத்திருந்தனர்.

பொதுவாக இறந்தவருக்கு கொள்ளி வைப்பவர் தான் அன்னாரின் வாரிசாக ஏற்றுக்கொள்ளப்படுவார். அதாவது இறந்தவரின் வாரிசு தான் கொள்ளி வைப்பார்.

அப்படியிருக்க, நம் பிள்ளைகள் தானே நம் வாரிசு என்று ஊரறிய தெரியும்போது, அதற்கு என்று தனியாக சான்றிதழ் தேவையா? என சிலர் யோசிக்கலாம்.

"வாரிசு" என்று பார்த்தால், சட்டப்படி, பிள்ளைகள் மட்டுமல்ல, கணவன்/மனைவி, சார்ந்திருக்கும் பெற்றோர், முன்னரே இறந்துவிட்ட பிள்ளையின் வாரிசுகள், இவர்கள் யாரும் உயிருடன் இல்லையெனில், உடன் பிறந்த சகோதர, சகோதரிகள், அவர்கள் வாரிசுகள் என்று நீண்ட பட்டியல் உள்ளது.

இவர்களில் யாருக்கு முன்னுரிமை என்று பார்க்க வேண்டுமே?

அந்த வேளையில், இன்னாருடைய வாரிசு என்பதற்கு அரசு அளிக்கும் அத்தாட்சி தான் தாசில்தாரால் தரப்படும் வாரிசு சான்று . அதுவே இறுதியானது..

ஆனால், இந்த வாரிசு சான்றை ஏற்காமல் மறுக்கும் இடமும் உண்டு.!!

வங்கியில் லாக்கரை வைத்திருப்பவரின் மரணத்திற்கு பிறகு, வங்கியில் , இறந்தவரின் பெயரில் உள்ள பெட்டகததை திறக்க, நீதிமன்றம் அளிக்கும் வாரிசு சான்று பெற்று வர, சட்டப்பூர்வ வாரிசுகள், வங்கிகளால் நிர்பந்திக்கப்படுகிந்தணர்.. .

இந்த இரண்டு சான்றிதழுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

தான் பெற்ற கடன்களுக்கு கடன்தாரர் வழங்கும் இழப்பெதிர்காப்பு எனப்படும் இன்டெம்னிட்டி பத்திரம் தெரியுமல்லவா? அது போன்றது தான் இந்த நீதிமன்றம் வழங்கும் வாரிசு சான்றிதழ் என சொல்லலாம்.[1]

ஏற்கெனவே தாசில்தார் கொடுத்த வாரிசு சான்றிதழ் இருந்தாலும், இந்த குறிப்பிட்ட வாரிசு சான்றிதழ் பெறுவதில் அதிகப் பணத்தை செலவழிக்க வேண்டிய கடினமான சூழ்நிலையில் சட்டப்பூர்வ வாரிசுகளை, வங்கி வைக்கிறது .இது ஒருவிதத்தில் பார்த்தால் நியாயமாகப்படவில்லை.

ஏன் என்றால், கடனுக்கு கடன்பட்டவர் கொடுக்கும் இந்த இன்டெமனிட்டி பத்திரம் போன்றது இந்த நீதிமன்றம் வழங்கும் வாரிசு சான்று என்னும்போது, அதை பெற்று வர வங்கிகள் ஏன் கட்டாயப்படுத்துகின்றன?

இறந்தவர் பெயரில் உள்ள லாக்கரும் அதில் உள்ளவையும் கடனாக கருதமுடியுமா?

"முடியாது" தானே?!

அதனால் வங்கிகள் கேட்கும் வாரிசு சான்றிதழ் வழங்க முடியாது என்று நம் மாண்புமிகு உயர் நீதிமன்றங்கள் பல தீர்ப்புகளில் சொல்லியுள்ளன.

1925 வாரிசுரிமை சட்டப் பிரிவு 370 முதல் 381 வரை பயன்படுத்தப்பட்ட " வாரிசு சான்றிதழ்"வார்த்தைக்கு உண்டான அர்த்தத்தை பொருத்தினால், லாக்கரில் உள்ளவை கடன்கள் அல்ல, என்பதால், வாரிசு சான்றிதழைப் பெறுவதற்கு எந்த தேவையும் இல்லை. என்றுள்ளன

அப்படியும் ஏன் கேட்கிறார்கள்?

உண்மையை சொல்லப்போனால், வங்கிகள் தங்களின் பொறுப்பை பாதுகாத்துக் கொள்ளவே, இந்த சான்றை கேட்கிண்றனர்

வேறு யாரேனும், லாக்கரில் உள்ளவைக்கு தாங்கள் தான் வாரிசு என்று உரிமை கொண்டாடினால், அதனால் வரும் பிரச்சினையிலிருந்து விடுபடவே இவ்வாறு செய்கின்றனர்.

அவர்கள் பாதுகாப்புக்கு " எதற்கும் இருக்கட்டும்"என்று வாங்கி வைத்துக் கொள்கின்றனர்!

நம்மில் எத்தனை பேர், வங்கியில் கடன் வாங்கப்போகும்போது, அவர்கள் கொடுக்கும் பாரம்களில் உள்ள வெற்றிடத்தை நிரப்பாமலேயே கையெழுத்து போட்டுக் கொடுத்து விட்டு வருகிறோம்?!

படித்தவர், படிக்காதவர் வித்தியாசமின்றி, நீட்டிய பேப்பரில் என்ன எழுதியுள்ளது, கோடிட்ட இடங்களில் நிரப்பாமலேயே, கொடுக்கிறார்களே, என்று எந்த கேள்வியும் கேட்காமல் தானே கையெழுத்து போட்டுவிட்டு பணத்தை வாங்கி வருகிறோம்!!

சமீபத்தில் வந்த ஆந்திர உயர்நீதிமன்ற தீர்ப்பும் கூட…[2] இதே போன்று அளித்ததோடு இல்லாமல், இந்த சிக்கலை தவிர்க்க சில பரிந்துரைகளையும் செய்துள்ளது.

  • எந்தவொரு நபராலும் லாக்கரைத் திறக்கும் நேரத்தில், வங்கி ஒரு பரிந்துரையை அதாவது நாமினியை நியமிக்க சொல்லி பெறுவதற்கான நடைமுறையை பின்பற்றுவது எப்போதும் விரும்பத்தக்கது.
  • லாக்கரை வைத்திருக்கும் நபர் இறந்தால், வங்கியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் பட்டியலை வழங்கி, லாக்கரை இயக்க நாமினியை வங்கி அனுமதிக்கலாம்
  • அவ்வாறு செய்யும்போது, நடந்தவற்றை பதிவு செய்து அது குறித்து, வேறு எந்த நபராலும் உரிமை கோரபட்டால்,. மேற்கண்ட நாமினியிடம் உத்தரவாதம் பெறலாம்.
  • இந்த எளிய நடைமுறை அமல்படுத்தப்பட்டால்,சம்பந்தப்பட்ட வாரிசுகள் தேவையில்லாமல் பெரும் செலவு செய்வதை தடுக்கலாம்.

சட்டத்தில் வாரிசுகளை இப்படி நிர்ணயிகக்கலாம்.

சொத்துபத்துக்கள் உள்ள ஓரு கோடீஸ்வர குடும்பத்தில் வாரிசாகப் பிறந்து, கடைசி வரை கோடீஸ்வரராக வாழும் "யோகம்" வெகு சிலருக்கே அமையும். அதுவும் ஒருவர் ஜென்ம ஜாதகத்தில் நான்காம் அதிபதி, செவ்வாய், ஒன்பது, பத்தாம் அதிபதிகள் பலம் பெற்ற ஜாதகர் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்திருப்பார். முன்னோர்கள் செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்களாக இருப்பர்.

ஆனால் ஒரு இராஜங்கத்தை ஆளும் வாரிசாக யார் ஆக வேண்டும் என்பதை "விபரீத ராஜ யோகம்" ஏற்கெணவே முடிவாகியிருக்கும்…!!

"கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்ற வகையில் விபரீத ராஜயோகத்தால் அடிமட்ட நிலையில் இருக்கும் ஒருவன் கோபுரத்தில் போய் அமர்வான்..

பேரரசன் இராஜராஜன் மட்டுமா இதற்கு உதாரணம்?,

மக்களை சந்தித்து வோட்டு கேட்டு, பெரும்பான்மை ஓட்டில் ஜெயித்து, மந்திரிசபை அமைத்து, "லட்டு" போல தட்டில் வைத்துக் கொடுக்கவில்லையா அந்த யோகம்?

"யோகம்" என்றவுடன் ஆன்மீகத்தில் கடவுளை அடைவதில் உள்ள நான்கு படிகளில் ஒன்றாக அதை. சொல்வது நினைவுக்கு வருகிறது.

.சரியை, கிரியை யோகம் , ஞானம். என்ற அவற்றில், கடவுளை வெளியே காண்பது சரியை.தனக்கு உள்ளேயும் வெளியேயும் காண்பது கிரியை.. தன் உள்ளேயே கடவுள் இருக்கிறான் என்று உணர்வது தான் யோகம்.

"யோகா " என்பதன் உள் அர்த்தம் இப்போது விளங்குகிறதா?

அந்த கடைசி படியான ஞானத்திற்கு முந்தின படியான யோகத்தை அடைபவனே "யோகி"

அதற்காக ஜாதகப்படி யோகத்தை அடைந்தவன் எல்லாம் யோகி அல்ல☺️

கடவுளை எங்கும் காணும் ஞானத்தில் சிறந்த குருமார்கள் கூட, தங்கள் "வாரிசை" தேர்வு செய்வது கடின பரிட்சை வைத்தே.!!.

மரணப்படுக்கையில் இருந்த ஒரு குரு தனக்குப் பிறகு அந்த ஆசிரமத்தி1ற்கு யாரைத் தலைவராக்குவதென யோசித்தார். தன் சீடர்களைப் பற்றி எண்ணிப் பார்க்கையில் அவர்களில் இருவர் சிறந்தவர்களாகத் தெரிந்தனர். இருவரும் சமமாக தகுதி படைத்து இருந்ததால் எவரைத் தேர்ந்தெடுப்பது என்பதற்காக ஒரு யுக்தி செய்தார்.. இருவரிடமும் ஆளுக்கொரு பழம் தந்து 'யாரும் பார்க்காத இடத்தில் போய் சாப்பிட்டு வாருங்கள் என்றார்.

ஒரு சீடன் ஓர் அறைக்குள் நுழைந்து எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு பழத்தைச் சாப்பிட்டான். வெகு நேரத்திற்குப் பிறகு கையில் பழத்துடன் இரண்டாவது சீடன் திரும்பி வந்தான். குரு அவனிடம் ஏன் பழத்தைச் சாப்பிடவில்லை எனக் கேட்டார். அதற்கு அவன் 'குருவே, என்னை மன்னித்து விடுங்கள். எங்கு போனாலும் கடவுளின் பார்வை அங்கு படிந்திருப்பதால் யாரும் பார்க்காத இடம் என்ற ஒன்றை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை, பழத்தையும் சாப்பிட முடியவில்லை' என பதிலளித்தான்.

அவனுடைய குருபக்தியையும் கடவுள் நம்பிக்கையும் கண்டு அவனையே தன் வாரிசாகத் தேர்ந்தெடுத்தார் அந்த குரு..

ஆனால் ஜெகத்குருவுக்கே தன் வாரிசை தேர்வு செய்வதில் பிழை ஏற்படவில்லையா?

எல்லாம் கர்மா தான்!!

அது சரி… எப்போதும் வாரிசுகள் தான் சொத்து அடையக்கூடுமா?

அவர் தந்தைக்கு இந்த வாரிசால் அடையக்கூடிய சொத்து ஏதும் உண்டா?

அதைத் தான் திருவள்ளுவரே சொல்லுகிறாரே!

இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் !

இதோ சமீபத்தில் நாம் கண்ட ஒரு செய்தி

இவர் தந்தை இவரைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தாரோ என்ற சான்றிதழ் போதாதா இவர் பேருலகம் செல்ல!

இப்படி வாரிசுகளால் பெருமை அடைபவரும் உண்டு.."சிறுமை" அடைவோரும் உண்டு!

எல்லோருக்கும் ஒரு நாளில் இறப்பு வரும்..

ஆனால் நிறைய பேருக்கு, தம் "வாரிசுகளால்" மனதளவில் இறந்தது எண்றைக்கோ இருக்கும்.!

நான் சமீபத்தில் வாசித்ததில் பிடித்தது:

அவர் இறந்து விட்டார்

அடக்கம் செய்யணும்

சொல்லிக் கொண்டே சென்றார்கள்..!!

மெல்ல எட்டிப் பார்த்தேன்

மூச்சு இல்லை - ஆனால்

இப்போதுதான் இறந்திருந்தார்

என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..!!

இருபது வருடங்கள்

முன்னாடி - அவர் மனைவி

இறந்த பிறகு - சாப்பிட்டாயா..!!

என்று யாரும் கேட்காத

நேரத்தில் - அவர் இறந்திருந்தார்

யாருமே கவனிக்க வில்லை....!!

பொண்டாட்டி போனதுமே

போய்த் தொலைய வேண்டியதுதானே - என்று

காதுபட மருமகள் பேசியபோது

அவர் இறந்திருந்தார் அப்போதும்

யாருமே கவனிக்க வில்லை...!!

தாய்க்குப் பின் தாரம்

தாரத்துக்குப் பின் ..

வீட்டின் ஓரம் ...!!!

என்று வாழ்ந்த போது - அவர்

இறந்திருந்தார்

யாருமே கவனிக்க வில்லை ...!!

காசு இங்கே

மரத்திலேயா காய்க்குது - என்று

மகன் அமிலவார்த்தையை

வீசிய போது..!!

காசு இங்கே

மரத்திலேயா காய்க்குது - என்று

மகன் அமிலவார்த்தையை

வீசிய போது..!!

அவர் இறந்திருந்தார்

யாருமே கவனிக்க வில்லை...!!

என்னங்க...!!

ரொம்ப தூரத்திலே இருக்குற

முதியோர் இல்லத்திலே விட்டு

தலை முழுகிட்டு வந்திடுங்க...!!!

என்று காதிலே விழுந்த போதும்

அவர் இறந்திருந்தார்

யாருமே கவனிக்க வில்லை....!!

உனக்கென்னப்பா...!!

பொண்டாட்டி தொல்லை இல்லை

என்று வாழ்த்துவது போல

கிண்டலடிக்கப் பட்ட போது

அவர் இறந்திருந்தார்..!!

அப்போதும் யாருமே கவனிக்க வில்லை .

இப்போதுதான்

இறந்தாராம் என்கிறார்கள்..!!

எப்படி நான் நம்புவது...???

நீங்கள் செல்லும் வழியில்

இப்படி யாராவது

இறந்து கொண்டிருப்பார்கள்...

ஒரு வினாடியாவது நின்று

பேசி விட்டுச் செல்லுங்கள்..!!

இல்லையேல்....!

அடிக்குறிப்புகள்

புதன், 29 செப்டம்பர், 2021

எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னோடு வா நிம்மதியை காண்பிக்கிறேன் என்று ஒரு சாமியார் கூப்பிட்டால் போவீர்களா?

         சமீபத்தில் ஒரு சுவாரசியமான வழக்கு ஒன்றை படித்தேன்.

        புட்டபர்த்தி சாயிபாபா தன் பக்தர்களுக்கு விபூதி காற்றில் இருந்து பெற்று தருவார் என்பதை அறிவோம். அதே போல சில உயரிய பக்தர்களுக்கு ......தங்க , வைர ஆபரணஙகளை 

        அதை தொடர்ந்து வழக்கு போட்டார் ஒரு பகுத்தறிவாளர்.. என்னவென்று?

        லைசென்ஸ் இல்லாமல் அவர் தங்கம் உற்பத்தி செய்கிறார், அது தங்க கட்டுப்பாட்டு சட்டத்திற்கு எதிராக உள்ளது.அது குறித்து மனு செய்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நீங்கள் தான் உத்தரவிடவேண்டும் என்று.. !!

        இது போன்ற விலைமதிப்பில்லாதவை எவ்வளவு அவர் வைத்துள்ளார் என்று சாயீபாபா ஒரு உறுதியும் கொடுக்கவேண்டும் என்றார்..

        வழக்கு என்னவாயிற்று என்று தெரிந்திருக்கும்.

அதற்கு ஆந்திர உயர் நீதிமன்றம் கொடுத்த சில காரணங்கள்

  • தங்கம் தயாரிப்பது என்பது பல படிநிலைகளை கொண்டது.  அது போல பாபா செய்யவில்லை. அவர் தன் தெய்வீக சக்தியால் தான்,  காற்றில் இருந்து பெற்று கொடுக்கிறார்.
  • தங்கக்  கட்டுப்பாடு சட்டம், வணிக ரீதியாக நடைபெறுவதை கட்டுப்படுத்த..ஆனால் பாபா அவ்வாறு செய்யவில்லை.அதனால் அந்த சட்டம் பொருந்தாது.
  • பாபா தான் அவ்வாறு பெறும் பொருட்களை பக்தர்களுக்கு தானே கொடுத்து விடுகிறார்? அதனால் தன்னிடம் அதை வைத்துக்கொள்ளாத காரணத்தினால் உறுதி கொடுக்க சொல்லக் கேட்பது சரியல்ல!!

விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கில் போய் வழக்கின் முழு விவரம் படிக்கலாம்.

https://indiankanoon.org/doc/1497702/

இப்படி மாயவித்தை காட்டிய சாமியார்களில் "போலி"யுமுண்டு.

நமமூரிலும் இருந்தார்கள்..  இருக்கிறார்கள்!!

        எங்கே நிம்மதி..எங்கே நிம்மதி என்று தானே எல்லோரும் தேடிக் கொண்டிக்கிறார்கள்?

ஆட்டை தோளில் போட்டுக் கொண்டு ஊர் முழுதும் தேடிய கதையாய்..

``நம்மிடம் முன்பு இருந்தது, ஆனால் இப்போது தொலைந்து போனது, அந்த நிம்மதியை ஒரு சாமியார் காண்பிக்கிறார் என்றால் …

நம்மிடம் தொலைந்து போளதை நமக்கே காட்டுகிறாரா?

ஆனால் ஒரு நிமிடம்...........

ஒவ்வொருவருக்கும் நிம்மதி தேடுவதில் /கிடைப்பதில் வேறுபாடு உண்டே

சிலருக்கு கோயிலுக்கு போனால் நிம்மதி..

சிலருக்கு டாஸ்மாக்கிற்கு போனால நிம்மதி..

இரண்டுமே ஒரு விதமான போதை தானே..

ஆன்மீகத்துக்கு போகும் பாதையை குருவும் காட்டுகிறார்..சனியும் !!

இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? யோசித்துக்கொண்டே இருங்கள்..பின்னால் சொல்கிறேன்..😬

அப்படி ஒவ்வொருவருக்கும் வேண்டிய நிம்மதியை ஒருவரே தரக்கூடியவர் என்றால் பரம்பொருளால் மட்டுமே முடியக்கூடியது.

சாமியார் மூலம் 'சாமி"யை தேட முடியுமா?

தெய்வீகம் என்பதே மறைந்த தன்மை கொண்டதல்லவா?

அதை வெளியே எங்கே போய் தேடுவது?

அதை தேடும் நானும் மறைந்து தானே போக வேண்டும்?

மறைந்து போவது என்றால்? என்னை மறந்து போதல்..

உயர்ந்த சமாதி நிலையை அடைவதற்கு இயமம் நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை , தியானம், சமாதி எனும் எட்டு படிகளில் சாதனை செய்திருக்க வேண்டுமாமே?!

எனக்கு அவ்வளவு கூட வேண்டாம்..நிம்மதி தரும் படிநிலைகளை கற்றுக் கொண்டால் போதும்.

ஆனால் அதை கற்றுக் கொடுக்கும் குருவாக இருக்கக்கூடியவர் அதையே இடைவிடாமல் பயிற்சி செய்து,, நிர்விகல்ப சமாதியின் மூலம் பிரம்ம அனுபவத்தை நேரடியாக பெற்றிருப்பார் தானே?!

அப்படிப்பட்டவர் மறைவாகத்தானே இருக்க வேண்டும்?

ஆனால் அவரோ தான் மறைந்து போக விரும்பாமல் தன்னை முன்னிலைப்படுத்திக்  கொண்டால்?

காணும் இடத்திலெல்லாம் கேளிக்கை, கண்கட்டு வித்தை காட்டுபவராக இருந்தால்?

ஒரு கார்ப்பரேட் ஆரவாரத்துடன் நடப்பதில் தியானம் தொலைந்து அல்லவா போகிறது?

சாதாரண மனிதர் அதை முயற்சி செய்யத் தடை செய்பவர்களாகததான் இந்த சாமியார்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள்.ஏன்?

"நீ த்யானத்தில் நுழைந்து இறைவனை தரிசித்து விட்டால், மத குருமர்களுக்கு வெளி இல்லாமல் போய் விடுமே.அதனால் தான் அவர்கள் அதை போதிப்பதில்லை" என்கிறார் ஓஷோ..

"இல்லையே முறையான தியானத்தை நான் அவரிடம் தான் கற்றேன்" என்கிறீர்களா?

இறைவனையே கண்டுணர்ந்து பின்பு மனது தன் வசமாகாதா? பிறகு எதுதான் தன் வசமில்லை? ஆனால் அதை பெற்றவர் பற்றற்ற சாமியாராக தானே இருக்க முடியும்?.

எனக்குள் உள்ளதை எனக்கு காட்ட எல்லாவற்றையும் விட்டுவிட்டு வரவேண்டும என்பவர்கள்

B’luru Parents Accuse Nithyananda of Kidnapping, Daughters Deny
Both daughters have uploaded videos on social media claiming that as adults, they choose to remain with the ashram.
Jaggi Vasudev's Isha Yoga Centre accused by retired professor of holding his daughter captive-India News , Firstpost
A couple on Monday alleged that their two daughters were being held captive by Jaggi Vasudev's Isha Yoga centre.

அதை பற்றிக் கொண்டு இருப்பதென்ன??😢

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தி திருமணம் - படங்கள் வைரலானதன் பின்னணி!
பங்காரு அடிகளாரின் மூத்த மகன் அன்பழகனின் மகள் மதுமலர். இவருக்கும் சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி-ராஜேஸ்வரி ஆகியோரின் மகன் மருத்துவர் பிரசன்ன வெங்கடேஷ் என்பவருக்கும் கடந்த 4-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணச் செலவு முழுவதையும் பங்காரு அடிகளாரின் குடும்பமே ஏற்றுக்கொண்டது. திருமண பத்திரிகை கொடுக்கும்போதே தட்டு, புடவை, வேட்டி சட்டை என அனைவருக்கும் தாம்பூலம் கொடுத்து அதகளப்படுத்தியிருந்தார்கள். தினசரி நாளேடுகளில் முழுப்பக்க விளம்பரமும் கொடுக்கப்பட்டன. மேல்மருவத்தூர் முழுக்கவே சாலை ஓரங்களில் பேனர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தன. பங்காரு அடிகளார் இல்ல திருமண வரவேற்பு 3-ம் தேதி இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், யானை, குதிரை என மணமக்களுக்குக் கோலாகல வரவேற்பு கொடுக்கப்பட்டது. தேவாவின் இசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மணப்பெண்ணை கோயிலிலிருந்து பல்லக்கில் தூக்கி வந்து, சாரட் வண்டியில் மணமேடை வரை கொண்டு வந்தனர். தாரை தப்பட்டை, செண்டை மேளங்கள், ட்ரம்ஸ் என வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

உடல் பிணியை போக்கி நிம்மதி தருகிறேன் என்பவர்கள் தனக்கு என்று வரும்போது செய்வது வேறொன்றாகத் தானே இருக்கிறது?

Viral Sach: Baba Ramdev seeking foreign treatment for knee ailment ?
Message about Baba Ramdev flying to London for the treatment of his own knees has gone viral.

சுபத்துவமான சனி, ஆன்மிகத்தில் ஒருவரை ஈடுபாடு கொள்ள வைப்பார்..ஆனால் அவர் ஆன்மிகத்தின் பெயரில் செய்வது எல்லாம் தன்னை முன்னிலைப்படுத்தியே இருக்கும்.

குருவின் மூலம் ஆன்மீகப் பாதைக்கு போகும் ஒருவர் "எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்" என்று வேண்டினால், சனி ஆதிக்கம் உள்ளவர் ஆன்மிகம் என்ற பெயரில் தன்னை முன்னிலைப்படுத்தி, "தான் நன்றாக வாழவேண்டும்" என்ற முனைப்போடு தான் இருப்பார்!!

ஆனாலும் அங்கே கூட்டம் கூடிக் கொண்டு தான் போகிறது.

ஏன் ..எல்லாம் அவசரம்.எனக்கு எல்லாம் வேண்டும்..நிம்மதி உட்பட.!!

அதற்கு ஒரு பாக்கேஜ் போல போட்டு விட்டால், பணம் கட்டிவிடுகிறேன்.நீங்கள் எனக்கு வேண்டியதை தாருங்கள்!!

டீலா .......நோ டீலா..

நாம் தான் கொரானாவுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளவே தட்டுமுட்டு சாமான் இலவசமாக கேட்டவர்களாயிற்றே!!

அதற்கேற்ப தானே நமக்கு கிடைக்கும் குருவும் இருப்பார் !!

மாயவித்தை செய்யும் சாமியார் என்றால், தெய்வத்தோடு இவருக்கு டைரக்ட் கனெக்சன் இருக்குன்னு நம்பிவிடுவது!!

இந்த படத்தில் உடன் இருப்பவர் சட்டமேதை எனப்படும் நானா பல்கிவாளா..அவரிடம், "உங்களை போன்ற பகுத்தறிவாதிகள் இது போன்ற வித்தை காட்டும் சாமியார்களை எப்படி நம்புகிறீர்கள்?" என்று கேட்டபோது,

அவர் ஒரே வார்த்தையில் சொன்னது "நம்பிக்கை"

இது தான் நம்பிககையின் சிறப்பு..

தனக்கு ஒருவரின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டால், அவரின் எந்த மாபாதகத்தையும் சகித்துக்கொண்டு அவருக்காக முட்டுக் கொடுத்து கொண்டு இருப்போம்!!

ஆஸ்கர் வயில்ட் சொன்னது போல "ஒவ்வொரு சாமியாருக்கும் ஒரு கடந்த காலம் உண்டு  .ஒவ்வொரு குற்றவாளிக்கும் ஒரு எதிர்காலம் உண்டு."

சரி.......எப்போது நமக்கு நிம்மதி தொலைகிறது?

எண்ணம், சொல், செயல் இவற்றை நாமோ மற்றவர் நமக்கு செய்தாலோ, ஏற்படுவது..

அதற்கு மனம் குறுகுறுத்து, குற்றவாளியாய் நிம்மதி தேடி வெளியே அலையத் தேவையில்லை..

உலகையே வென்ற அலெக்ஸ்சாண்டர் கூட நிம்மதி கிடைக்காமல் தன் 33 வயதிலேயே நிம்மதியை குடியில் தேடி, அந்த குடிப்பழக்கத்தால் இறந்து போனான்.

ஆனால் அனைத்தையும் துறந்து நிம்மதியை தனக்குள் தேடிய புத்தர் பரவச நிலையை பெற்று பரவசமாக வாழ்ந்தார். இன்றும் வாழ்கிறார்.

என் மனம் என் ஆளுகைக்கு உட்பட்டது. நான் அதை பழக்கக் கூடிய கமாண்டராக தான் இருக்கிறேனே தவிர, .ஒரு சிப்பாயாக, இன்னொருவரை கமான்டராக நிறுத்தும் எண்ணமுமில்லை..

இன்னொன்றும சொல்ல வேண்டுமே.......

சிறுவர்கள் சந்நியாசம் கொள்வது சட்டப்பூர்வமானது தான் என்று நேற்று ஒரு தீர்ப்பு வந்துள்ளது..

அவர்களால் முடிவது என்னால் முடியாதா? முயற்சித்து தான் பார்ப்போமே!!

அப்படியே "கைலாசா"வில் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம்!!😢

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...