திங்கள், 14 மார்ச், 2022

தொழிலாளர்களின் வயிற்றில் அடித்தால் தான் நிறைய சம்பாதிக்க முடியும் என்பது உண்மையா?

          தொழிலாளரகளின் வயிற்றில் மட்டும் அல்ல ... உடலின் எந்த பாகத்தில் அடித்தாலும்,  அந்த முதலாளியால்  சம்பாதிப்பது என்ன....  நிம்மதியாகக்  கூட இருக்க முடியாது.  

        இதை நீங்கள் அந்த பணியாளர் செய்யும் வேலைக்கான ஊதியத்தில் குறைவு  என்று எடுத்துக்  கொண்டாலும் சரி.....அவருக்கு வேலை நேரத்தில் ஏற்படும் விபத்தினால் அவர் உடலில் ஏற்படும் ஊனம்  என்று எடுத்துக் கொண்டாலும், இரண்டிற்கும் அதே பதில்  தான்.

            பணியாளர்கள் செய்யும் வேலைக்கு ஏற்ற சரியான  ஊதியத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்  தான் " குறைந்த பட்ச ஊதிய சட்டம்"  உள்ளது. ஆனால் அவர் தொழிற்சாலையில் உயர்தர மெஷினரிகளை கையாளும் போது விபத்து ஏற்பட்டு அவருக்கு உடலில்  தற்காலக ஊனமோ நிரந்தர ஊனமோ அல்லது மரணமே கூட ஏற்பட்டால்,?

            இன்றைய  தினத்தில் ஏகப்பட்ட நவீன தொழில் இயந்திரங்கள் வந்து விட்டன.  அதை இயக்குவத்தில் சிறு பிசகு ஏற்பட்டாலும், அந்த பணியாளருக்கு ஏற்படும் பாதிப்பு சொல்ல முடியாதது.  அதை கவனத்தில் கொண்டு இயற்றப்பட்டது தான்     இந்த பணியாளர் இழப்பீடு சட்டம். 

         பிரிட்டிஷ் காலத்தில் அதாவது 1884 ல்  இருந்த இழப்பீடு சட்டத்தின் படி,  அந்த தொழிலாளிக்கு சாலையில் மோசமான விபத்து நடந்து மரணம் ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு தர அந்த முதலாளிகள் ஒத்துக் கொள்வார்கள். ஆனால் பிற்பாடு சுரங்கத்திலும், தோட்டங்களிலும் வேலை செய்தவர்களுக்கு பணி  நேரத்தில்  ஏற்பட்ட  விபத்தினால் கொடுங்  காயமும் ஊனமும் , மரணமும்  கூட   நடக்க ஆரம்பித்தபோது, இந்த Fatal accident act .மூலம் எந்த உதவியும் செய்ய முடியவில்லை.   அதன்பிறகு இதில் சம்பந்தப்பட்ட நிபுணர் குழு கொடுத்த பரிந்துரையின் பேரில் உருவாக்கப்பட்டது  தான்  தொழிலாளர் இழப்பீடு சட்டம், 1923. 

            இதன் மூலம், பணி நேரத்திலும், பணிக்காக செயல்படும் நேரத்திலும் நடக்கும் விபத்தில் அந்த பணியாளருக்கு உடலில் பாதிப்பு ஏற்பட்டால் தொழிசாலையின் நிர்வாகத்தால் நஷ்டஈடு வழங்கப்படும்..  இது  வரைக்கும் சொன்னது  நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்த விஷ யம்.

            ஆனால் பெரும்பாலோனோருக்கு தெரியாத விஷயம் இந்த சட்டத்தில் உள்ளது. . அது சமீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் வெளிவந்துள்ளது.  அதற்காகத்தான் இந்த வழக்கு விவரத்தை இன்றைக்கு எடுத்திருக்கிறேன். 

        பொதுவாக விபத்து நடந்தவுடன் சில தொழிற்சாலை நிர்வாகம் உடன் அந்த இழப்பீட்டுத் தொகையை கணக்கிட்டு, , அந்த பணியாளருக்கோ அல்லது அவர் விபத்தில் இறந்து விட்டால், அவர் குடும்பத்தினருக்கோ கொடுப்பார்கள்.. ஆனால் அந்த பணியாளரோ   அவர் குடும்பமோ  எதிர்பார்க்கும் இழப்பீட்டுத் தொகை அதிகமாக இருப்பது போல தொழிற் சாலை நிர்வாகம் கருதினால்?

            சம்பந்தப்பட்ட பணியாளர்  தான் நீதிமன்றத்தை அணுகி, உரிய இழப்பீடு கோரி  மனு செய்வார்.  அந்த வழக்கின் தீர்ப்பு வந்த பின், அதனை  ஏற்பதா அல்லது மேல்முறையீடு செய்வதா   என்று நிர்வாகம்   ஒரு முடிவு எடுக்கும் போது தான் அந்த இழப்பீடு தொகையே தொழிலாளிக்கு கிடைக்கின்றது.  பெரும்பான்மையான இடங்களில் இது தான் நடக்கிறது.  

            ஆனால் இந்த சட்டத்தின் நோக்கமே. எந்த அளவிற்கு தொழிற் சாலை நிர்வாகம், அந்த தொழிலில் லாபம் ஈட்டுவதில் முனைப்பு காட்டுகிறதோ, அதே அளவில், அந்த பணியாளர்களின் நலனில் அக்கறை காட்டுவது, பணி நேரத்தில் விபத்து ஏற்பட்டு அதனால் தொழிலாளிக்கு உடலில் ஊனமோ ஏற்பட்டால், அந்த விபத்திற்கு பின்னும், அவர் நிலையான வாழ்க்கையை தொடரும் விதத்தில் அவரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது தான் இது அந்த நிர்வாகத்தின் கடமை மற்றும் பொறுப்பும் கூட.

            எப்படி இந்த இழப்பீட்டு தொகையை கணக்கிடுவார்கள்?

             விபத்தினால், உடலின் இயலாமை முழுமையாக இருந்தால் பணியாளர் வாங்கும் மாத சம்பளத்தில் 60% அல்லது 1,20,000 ரூபாய் இதில் எது அதிகமோ அதைக் கணக்கில் எடுத்துகொள்வா ர்கள்.

        அதுவே அந்த பணியாளர் விபத்தினால் இறந்து விட்டால், அவர் வாங்கிய சம்பளத்தின் பாதியோ அல்லது 1,20,000 ரூபாய் இதில் எது அதிகமோ அதை கணக்கிட்டு தருவார்கள்..

        உடனே நமக்கு ஒரு சந்தேகம் வரலாம். அவர் உயிருடன் இருந்தால் 60% இறந்தால் வெறும் 50% தானா...ஏன் இந்த வேறுபாடு என்றால்,...

            உங்களுக்கே தெரிந்திருக்கும் ,,,,,, விபத்தினால் அவர் இறந்து விட்டால் அவர் வேதனை அப்போதே முடிந்திருக்கும்.. ஆனால் விபத்து அவருக்கு ஊனத்தை ஏற்படுத்தி விட்டால், அவர் வாழ்வின் பிற்பகுதி இன்னொருவரின் தயவை நாடியோ அல்லது வலி வேதனையை கொண்டதாகவோ இருக்கும். எனவே தான் இந்த பத்து சதவீத அதிக கணக்கீடு.

                இது போல மாதமாதம் ஊதியம் பெறும் வகைக்குள் பணியாளர் வராமல், முறை சாரா வகைக்குள் வருவாரேயானால், அவருடைய மாத சம்பளம் நிர்ணயி\க்கப்படும். இ தில் ஒ ரு முக்கிய நல்ல விஷயம் என்னவென்றால். 2020ல் மத்திய அரசு இந்த சட்டத்தின் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன் படி முன்னர் இழப் பீடை கணக்கிடுவதற்காக ஊதியத்தை ரூபாய் 8,000 என்று நிர்ணயித்திருந்ததை தற்போது ரூபாய் 15,000 என்று அதிகரித்துள்ளார்கள்..

            இந்த நிர்ணயிக்கப்பட்ட மாத சம்பளத்தையும் விபத்தின் போது அந்த பணியாளரின் வயதை பொறுத்து அட்டவணையில் சொல்லப்பட்ட எண்ணுடன் பெருக்கி இழப்பீட்டை கணக்கிட்டு தருவார்கள்.

            இப்படி இந்த பணியாளர்கள் இழப்பீடு சட்டம், விபத்தில் சிக்கிய பின்னும் அவருக்கு நிரந்தர ஊனம் ஏற்பட்டிருந்தால், அவரின் விபத்திற்கு பிந்தைய வாழ்க்கை சுமூகமாக இருப்பதற்கும் அந்த பணியாளர் இறந்திருந்தால் அவர் குடும்பம் நிதி சிக்கலில் தவிக்காத வண்ணமும், உதவுகிறது. அதனால் தொழில்சாலையின் நிர்வாகம், தங்கள் பணியாளர்கள் பணிக்கு வரும் போதோ அல்லது பணியில் இருக்கும்போது நடந்த விபத்தினால் பாதிப்படைந்திருந்தால் தகுந்த நஷ்டஈடு கொடுப்பது அவர்கள் கடமையாகிறது. அதே சமயம் இந்த சட்டம் ஈ எஸ். ஐ சட்டத்தின் கீழ் வரும் பணியாளர்களுக்கு  பொருந்தாது.   

               இப்படி ஒரு கடமை அவர்களுக்கு இருந்தாலும், சட்டத்தில் சொன்னபடி இழப்பீடு நிர்ணயிக்கப்படாமல், அவர்கள் கொடுக்கும் தொகையை தொழிலாளி ஏற்றுக் கொள்ளாவிட்டால், நீதிமன்றத்திற்கு அலைய விடுவது அதிகம் நடக்கிறது.

            இதே போல நடந்த ஒரு சம்பவத்தை கேளுங்கள்..

             இவர் ஒரு கரும்பு வெட்டும் பணியாளர். . கரும்பு வெட்டும் சமயம், பாம்பு கடித்து இறந்து விடுகிறார். \பணியாளர் இழப்பீடு கமிஷனரிடம் அவர் வாரிசுகள் ஐந்து லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு மனு போடுகிறார்கள். கமிஷனரும் விசாரித்து விட்டு அந்த வாரிசுகளுக்கு ரூபாய் 3,06,000 இழப்பீடாக கொடுக்க சொல்லி, அதை முழுதாக செலுத்தும் வரையில் விபத்து நடந்த நாளிலிருந்து வருட வட்டி 12% செலுத்த வேண்டும் என்று உத்தரவிடுகிறார்.

            மோட்டார் வாகன விபத்துக்கு இழப்பீடு கோரி மனு செய்தவர்களுக்கு தெரிந்திருக்கும்... அந்த மனு போட்ட நாளிலிருந்தோ அல்லது தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் இருந்தோ வட்டியை கணக்கிடுவார்கள்..

             அதனால் தொழிற்சாலை நிர்வாகமும், அந்த உத்தரவு போட்ட நாளிலிருந்து தானே வட்டியை கணக்கிடவேண்டும், இல்லையென்றால் வாரிசுகள் கோர்ட்டில் மனு போட்ட நாளிலிருந்து தானே கணக்கிடவேண்டும், இது என்ன .விபத்து நடந்த நாளிலில் இருந்து வட்டியை கணக்கிட்டு கொடுக்க சொல்கிறார் இந்த கமிஷனர் என்று மேல்முறையீடு செய்கிறது

             உயர்நீதிமன்றமும் அந்த மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டு, உத்தரவு பிறப்பித்த  நாளிலிருந்து ஒரு மாத காலம் மேல்முறையீடு செய்யும் அவகாசம் அந்த நிர்வாகதிற்கு  இருக்கிறது என்பதால் அந்த ஒரு மாதம் கழித்தும் இழப்பீடு செலுத்தாவிட்டால்  அப்போதிலிருந்து அந்த வட்டியை கணக்கிட்டு  கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறது.

              விபத்து நடந்த நாள் எங்கிருக்கிறது..??  . உத்தரவு போட்ட நாள்  எங்கிருக்கிறது ?? அதனால் அதற்கு மேல் முறையீட்டை உச்ச நீதிமன்றத்தில் செய்கிறார்கள்.. 

Shobha vs Chairman, Vithalrao Shinde Sahakari Sakhar Karkhana Ltd. | CA 1860 OF 2022 | 11 March 2022 Citation: 2022 LiveLaw (SC) 271 C

                  இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு தான் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

            "பணியாளர் இழப்பீடு சட்டத்தின் பிரிவு 4 A ( 1 )படி, எப்போது அந்த இழப்பீடை செலுத்த வேண்டி நேரிடுகிறதோ அன்றிலிருந்து அதை செலுத்த கடமைப்பட்டவர் என்கிறது. அதன்படி பார்த்தால், என்று அந்த பணியாளர் இறக்கிறாரோ , அன்றிலிருந்து அந்த இழப்பீட்டை செலுத்தும் கடமை நேருகிறது. இறந்தவர் குடும்பம் கோரும் இழப்பீட்டை கொடுக்க முடியாது என்றால்/  பிரிவு  4 A (  2 படி,  தொழிற்சாலை நிர்வாகம்  ஒத்துக்கொள்ளும் இழப்பீடையாவது உடனே கொடுக்க கடமைப்பட்டவர் என்றும்  அதை சம்பந்தப்பட்டவர்களிடன் உடன் வழங்க   வேண்டும் , அவர்கள் வாங்க மறுத்தார்கள் என்றால், அவர்களின் உரிமை எந்த அளவும் பாதிக்காமல், இந்த பணியாளர் கமிசனிரிடமாவது  அந்த பணத்தை கட்டிவிடவேண்டும்.  எனவே அதைக்  கொடுக்க தவறிய போது அந்த இழப்பீடிற்கான வட்டியை  விபத்து நடந்த தேதியிலிருந்து  கணக்கிட  வேண்டுமே தவிர, உத்தரவு போட்ட நாளில் இருந்து அல்ல என்றது. ஒரு வேளை  தேவையில்லாமல் நிர்வாகம் வழக்கை இழுத்தடிக்கிறது என்று கமிஷினர் கருதினால், இந்த இழப்பீடு தொகையுடன் வட்டியையும் சேர்த்து அதன் பாதி தொகையை அபராதமாக செலுத்த உத்தரவிடலாம் என்றது.  இதன்படி பார்த்தால் வட்டிக்கான சட்டப் பிரிவும்   அபராதமும் வெவ் வேறு என்றுள்ளது. பிரிவு  4A3(a)  படி வட்டியையும்    பிரிவு   4A3 (b) படி அபராதத்தையும் கொடுக்க வேண்டும்"  என்று தீர்ப்பளித்து மேல்முறையீட்டை அனுமதித்துள்ளது.

            நாம் சாதரணமாக பார்க்கும் சம்பவங்கள் என்றால்  தொழிற்சாலை விபத்தின் போது  சம்பந்தப்பட்ட பணியாளருக்கு ஏதேனும் மருத்துவ  செலவுக்கு ஒரு தொகையை கொடுத்து வேலையை விட்டு அனுப்பி விடுவதையும்., ..பிற்பாடு அந்த தொழிற் சாலை ஆய்வாளர் இந்த விபத்து குறித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை  தாக்கல் செய்யும் போது,  அதிக பட்சமாக இருக்கும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதத்தை  கட்டி முடித்து விட்டு செல்வதை பார்க்கலாம்..   பணியாளர் வேலையை விட்டு நீக்கப்படுவதால், அவருக்கு இது பற்றி தகவல் ஏதும் தெரிவதில்லை... அவருக்கு உரிய நியாயமான இழப்பீடும் கிடைப்பதில்லை.   வழக்கு பற்றிய தகவல் கிடைத்தாலும், பெரும்பாலும் குற்றத்தை நிர்வாகம் ஒத்துக்  கொண்டு மனு  செய்வதால், முதல் விசாரணையிலேயே  அபராதம் விதிக்கப்பட்டு அந்த வழக்கு முடிவுக்கு வந்து விடும். 

            இது போன்ற சமயத்தில், சரியான இழப்பீடு கொடுக்காமல், அந்த பணியாளர் பணியிலிருந்தும் அனுப்பப்பட்டார் என்றால், அது குறித்து  அவர் அந்த வழக்கில்  மனு தாக்கல் செய்தால், நீதிமன்றம், பெரும்பாலும் இந்த வழக்குகள் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றங்களில் தான் நடக்கும்..  நீதிபதி விசாரித்து விட்டு, அபராதத்துடன் சேர்த்து இழப்பீடு தொகையையும் குற்றவாளி கட்ட சொல்லி உத்தரவிடலாம்.  குற்ற விசாரனை  நடைமுறை சட்ட பிரிவு 357 ன் கீழ் இழப்பீடு வழங்குவதற்கான உச்ச வரம்பு ஏதும் இல்லை என்பதால் மாஜிஸ்திரேட்டு அந்தந்த வழக்கு சூழலுக்கேற்ப, இழப்பீடு விதிக்கலாம்.  

            இதே  போன்று தான் மோட்டார் வாகன விபத்தின் போதும், குற்றவாளியோ அல்லது காப்பீடு நிறுவனத்தினரோ, விபத்திற்குண்டான இழப்பீடாக அவர்கள் கருதுவதை பாதிப்படைந்தவருக்கு இடைக்கால நிவாரணமாக கொடுக்க வேண்டும் என்றும் அது பின்னால் தீர்ப்பு அளிகும்போது வழங்கப்படும் இழப்பீடு தொகையில் கழித்துக் கொண்டு செலுத்தலாம் என்று விதிகள் உள்ளன.    ஆனாலும் யாரும் பின்பற்றுவதில்லை..  அது  குறித்து இன்னொரு பதிவில் விரிவாக பார்ப்போம்... 











கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...