வாரிசு சான்றிதழைக் கொண்டு தனக்கு வர வேண்டிய சொத்துக்களை, தன் பேருக்கு மாற்றும் நடைமுறை தான், இங்கு நடந்து வருகிறது. அப்படியிருக்க நேற்று, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, "வாரிசு சான்றிதழ்" என்று அதன் பெயர் இருந்தாலும், அது இறந்தவருக்கும், சான்றில் உள்ளவர்களுக்கும் உள்ள உறவுமுறையை குறிக்கும் சான்று மட்டும் தான் என்றும் அதைக் கொண்டு இன்னார் தான் இறந்தவரின் வாரிசு என்று நிர்ணயிக்க முடியாது என்று சொல்லியுள்ளது.
நீதியரசர்கள் பி.என் பிரகாஷ், ஹேமலதா மற்றும் நக்கீரன் அடங்கிய முழு பெஞ்ச், பி,வெங்கடாசலம் எதிர் தாசில்தார். 2022 livelaw (Mad) 265 வழக்கில் நேற்று அளித்த தீர்ப்பில், வாரிசுரிமை என்பது வெல்வேறு சட்டங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப் பட வேண்டிய ஒன்று என்றும் அவரவர் தனி சட்டங்களின் மூலம் பெற்ற சட்டப் பூர்வமான உரிமையை தாசில்தாரில் வாரிசு சான்று மாற்றி விட முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
இதன் மூலம், இனி இந்த சான்றைக் கொண்டு சொத்து பரிமாற்றங்களை செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
திடீரென இது போன்ற ஒரு தீர்ப்பு வர வேண்டிய தேவை என்ன என்று பார்த்தால் , தமிழ்நாட்டில் வருவாய் துறையை சேர்ந்த தாசில்தார், வாரிசு சான்றை கொடுப்பது என்பது 27.04.1979 தேதியிட்ட வருவாய் போர்டு செயல்முறைகளின்படி தாசில்தார்களின் பணிகளின் ஒன்றாக சொல்லப்பட்டு, அதன்படியே செயல்பட்டு வருகின்றனர். பாண்டிச்சேரியில் தாசில்தாருக்கு இந்த அதிகாரம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் வாரிசு சான்றை நீதிமன்றத்தில் மனு செய்து தான் பெற வேண்டும்.
1991 ல் வருவாய் துறையின் சிறப்பு கமிஷனர், அந்த சான்றை கொடுக்கும் போது பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை வழங்குகிறார். அடுத்து 2017ல் வருவாய் துறை கமஷனருக்கான முதன்மை செயலாளர், சில கூடுதலான வழிகாட்டிகளுடன் ஒரு சுற்றறிக்கை அனுப்புகிறார். அதே சமயம், சில வகையில் வருபவைக்கு மட்டும் இந்த வாரிசு சான்றை அளிக்க தடை செய்கிறார். அதன் பின்னே 2019ல் வழங்கப்பட்ட திருத்தப்பட்ட சுற்றறிக்கை, இறந்தவரின் வாரிசுகளை கிளாஸ் ஒன்று , கிளாஸ் இரண்டு என்று இருவிதமாக வகைப்படுத்தி இரண்டாம் பிரிவு வாரிசுகளுக்கு சான்று தர தடை விதிக்கிறது. இங்கு தான் முரண்பாடு ஆரம்பிககிறது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படுகின்றன. திருமூர்த்தி எதிர் சென்னை கலெக்டர் 1998 Wrut L.R. 347 என்ற வழக்கில் இதே நீதி மன்றத்தின் டிவிஷன் பெஞ்ச், தாசில்தாருக்கு வாரிசு சான்று கொடுக்க அதிகாரம் இல்லை என்ற போது, பாபு எதிர் தாசில்தார் W.P.no. 5940/2017 வழக்கில் 27.7.2020 அன்று இன்னொரு டிவிஷன் பெஞ்ச், இரண்டா ம் வகுப்பு வாரிசு சான்றை கொடுக்க சொல்லி உத்தரவிட்டுள்ளது. இது ஒரு விதத்தில், ஏற்கெனவே அவர்கள் துறையில் போட்ட சுற்றறிக்கைக்கு எதிரானது. இந்த இரு வேறு முரண்பட்ட தீர்ப்பின் காணமாக, ஃ புல் பெஞ்சுக்கு இந்த சட்டப் பிரச்சினை அனுப்பட்டு அதற்கான தீர்ப்பு தான் நம் முன் இப்போது....
சாதாரணமாக ஒரு வாரிசு சான்று கேட்டு மனு செய்யும்போது பின்பற்றப்படும் நடைமுறை என்ன? வருவாய் ஆய்வாளர் இறந்தவருக்கு சம்பந்தப்பட்ட நபர்களை விசாரித்து ஒரு அறிக்கை தருவார். அதன் அடிப்படையிலேயே தாசில்தாரால் இந்த சான்று வழங்கப்படும். ஆனால் வருவாய் ஆய்வாளரும் தாசில்தாரும், இந்து வாரிசுரிமை சட்டத்தினையும், முஸ்லிம்களுக்கு பொருந்தும் முல்லாவின் முகமதியர் சட்டத்தில் வரக்கூடிய பங்குதாரர்களையும், இந்திய வாரிசுரிமை சட்டத்தின் இரண்டு மற்றும் மூன்று பகுதிகளில் சொல்லப்பட்டுள்ள பங்கு பிரிக்கும் முறையைக் குறித்தும் பரிசீலித்து தீர்வு தருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது இல்லையா? அதே சமயம், . ஒரு நிர்வாக ரீதியான இந்த பணியை ஒரு தாசில்தார் ஒரு குவாசி ஜுடிசியல் தன்மை கொண்ட ஒன்றாக நீடிக்க முடியாது . அப்படி செய்தால் அது தேவையற்ற குழப்பத்தையும் அதிகப்படியான சட்டப் பிரச்சினைகளுக்கும் உள்ளாகும் என்று நீதிமன்றம் சொல்லியுள்ளது.
இதில், நீதிமன்றம், சில கேள்விகளை தனக்குத் தானே எழுப்பிக் கொண்டு அதற்கான தீர்வு காண முனைந்துள்ளது.
1. தனி நபர் சட்டத்தின் மூலமாக ஒருவர் பெற்ற வாரிசு அந்தஸ்தை இந்த சான்று நிர்ணயிக்கிறதா?
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் போது, சான்றில் இடம் பெற்ற ஒருவரின் பெயர், இறந்தவருக்கும் அவருக்கும் உள்ள உறவுமுறையை மட்டுமே குறிக்கிறது என்றும், அதற்கு மேல் அந்த சான்றுக்கு எந்தவித முக்கியத்துவமும் கிடையாது என்றுள்ளது. ஏற்கெனவே தனி நபர் சட்டத்தின் மூலம் ஒருவர் பெற்ற வாரிசு அந்தஸ்தை இந்த சான்று மாற்றி விட முடியாது.
அப்படியானால் 'வாரிசு சான்று' என்ற பெயருடன் கொடுக்கப்படும் அந்த சான்று?
அது தவறான பெயர் என்றும் உண்மையில் அது இறந்தவருக்கும் மற்றவருக்கும் இடையே உள்ள உறவுமுறையை குறிக்கும் சான்று தான் என்றும் சொல்லியுள்ளது.. வாரிசு சான்றில் ஒருவரின் பெயர் இடம்பெற்றதாலேயே சம்பந்தப்பட்டவர்களின் தனி சட்டத்தின் மூலம் சட்டரீதியான வாரிசு உரிமை பெற்ற ஒருவரின் நிலையை, ஒரு சுற்றறிக்கை என்ற பெயரில் உள்ள நிர்வாக ரீதியான குறிப்புகளை கொண்டு மாற்றி விட முடியாது என்றும் சொல்லியுள்ளது. அதே போல இறந்தவரின் வாரிசு என்று எந்தவித சட்ட அங்கீகாரத்தையும் அந்த சான்றில் உள்ளவருக்கு கொடுத்து விட முடியாது என்கிறது.
இன்னும் ஒரு விஷயத்தை நீதிமன்றம் கூர்ந்து கவனித்துள்ளது.
2019 சுற்றறிக்கையிலேயே சில முரண்பாடுகள் உள்ளன. இறந்த நபரின் தந்தை வாரிசு சான்று கேட்டு மனு செய்யலாம். ஆனால் அதே சமயம் தந்தையை உள்ளடக்கிய கிளாஸ் இரண்டு பிரிவினருக்கு வாரிசு சான்று கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொன்றையும் கவனித்தது நீதிமன்றம், கிளாஸ் இரண்டு பிரிவினரை வகைப்படுத்துவதில் சிரமம் இருப்பதால் தான் அவர்களுக்கு சான்று வழங்க தடை கொடுக்கப்பட்டது என்னும் வருவாய் துறை, ஒரு எளிதாக அறியக்கூடிய உறவுமுறையான இறந்தவரின் தந்தையை இரண்டாம் பிரிவில் வருகிறார் என்பதால் நிராகரிக்கும் போது, அவரின் இறந்து போன மகளின் வயிற்று பேத்தி(அவரின் தாய் இறந்து விட்டிருக்கும் போது ) முதல் பிரிவு வாரிசு என்று சான்று வழங்குவது எப்படி என்று தன ஆச்சரியத்தை பதிவு செய்கிறது.
ஒரு மனுதாரர், இறந்தவரின் தந்தை என்பது குறித்து ஆய்வு செய்வது , இறந்து போன மகளின் இறந்து போன மகனின் மகன் என்று தீர்மானிப்பதை விட சுலபம் என்று எல்லோருமே ஒத்துக்கொள்ளும்போது தந்தை உள்ளிட்ட உறவுமுறையை நீக்கியது நியாயமற்றது என்கிறது.
இதில் இன்னொன்றையும் நீதிமன்றம் கவனிக்காமல் இருக்கவில்லை.
மேற்படி சொன்ன வாரிசுரிமை எல்லாம் இந்து வாரிசுரிமை சட்டத்தின் கீழ் வருபவை. அந்த சில பிரிவுகளை அப்படியே இந்த சுற்றறிக்கையில் எடுத்தாண்டிருக்கிறார்கள் என்பதை கண்டுணர்ந்த பின், ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியே சட்டம் இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கானது, பொதுவாக எப்படி செயல்படுத்தமுடியும் என்ற கேள்வியையும் எழுப்பியது. எனவே சுற்றறிக்கையின் சில பகுதிகள் தவறாக கருதப்பட்டவை என்றும் ஆனாலும் அவை வெறும் நிர்வாக ரீதியாக கொடுக்கப்பட்ட வழிகாட்டிகளே தவிர சட்ட ரீதயாக உரிமைபெற்றவருக்கு எதிராக செயல்பட முடியாது என்றது.
இதில் இன்னொரு பிரச்சினையும் உள்ளது.
2. அந்த சுற்றறிக்கையை கொண்டு ஒரு நிர்வாக ரீதியாக உத்தரவு பிறப்பிக்கும் போது, அந்த சுற்றறிக்கையை அல்லது அரசு ஆணையை எதிர்க்காமல், அந்த சுற்றறிக்கையை மீறி உத்தரவு இடுமாறு நீதிமன்றம் தன் எல்லையை தாண்டி உத்தரவு இட முடியுமா?
முடியாது என்றாலும், ஏற்கெனவே தனி சட்டத்தின் வழியாக சட்ட உரிமையை பெற்ற ஒருவரிடமிடமிரும் பறிக்கும் வண்ணம் ஒரு சுற்றறிக்கை இருக்குமேயானால், அதில் நீதிமன்றம் தலையிடலாம் என்ற அடிப்படையில் இவை எல்லாவற்றிற்கும் காரணமான 2019 சுற்றறிக்கையில் உள்ள குறைபாடுகளை களைந்து புதிதான சுற்றறிக்கையை வெளியிடுமாறு நீதிமன்றம் அறிவுரூத்தி]யுள்ளது.
3. வாரிசு சான்றிதழா அல்லது நீதிமன்றத்தில் பெறப்படும் சக்க்ஷஷன் சான்றிதழா எதற்கு சட்ட ரீதியான அதிகாரம் கொண்டது>"
இரண்டுக்கும் உள்ள வித்யாசம் என்னவென்றால், கடன் அல்லது செக்க்யுரிக்காக வழங்கப்படுவது பின்னது. அதை பற்றி பற்றி இந்திய வாரிசுரிமை சட்டத்தில் சொல்லப்பட்டுளது. ஆனால் தாசில்தாரால் கொடுக்கபடும் இந்த வாரிசு சான்றுக்கோ எந்த வித சட்ட அங்கீகாரமும் இல்லை..
இப்போது சொல்லுங்கள் வாரிசு சான்றை பெறுவது இனி தேவை தானா?