திங்கள், 23 ஜனவரி, 2023

ஒப்பந்தங்களின் வகைகள் என்ன ?

 



\\\\\\\\வணிகத்தின் சட்ட அம்சங்கள்

 
1.3 . ஒப்பந்தத்தின் வகைகள்

ஒப்பந்தங்களை பரந்த நோக்கில் வகைப்படுத்தும் போது,  மூன்று வகைகளாக பிரிக்கலாம். 

1.              அமுல்படுத்தும் பொறுத்து (சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் முறையில்)

2.              உருவாக்கும் முறையை பொறுத்து (உருவாக்கும் வழி)

3.              செயல்பாட்டை பொறுத்து .

 

ஒப்பந்தத்தை மேற்கொண்டும்  கீழ்கண்ட விதத்தில்   பிரிக்கலாம்:

         

 1. அமுல்படுத்தும் நோக்கில் ::

 i) செல்லத்தக்க ஒப்பந்தங்கள் ii) செல்லாத    விழலாகும் ஒப்பந்தங்கள்/ உடன்படிக்கைகள் iv) சட்ட விரோத ஒப்பந்தங்கள்                v )  செயல்படுத்தமுடியா ஒப்பந்தங்கள்

 

i) செல்லத்தக்க ஒப்பந்தங்கள் :: சட்டத்தால் அமுல்படுத்தக்கூடிய உடன்படிக்கைகள் தான் செல்லத்தக்க ஒப்பந்தங்களாகும். அமுல்படுத்துவதற்கான நிபந்தனைகளை இந்திய ஒப்பந்த சட்டத்தின் பிரிவு 10ல் தெரிந்துக் கொள்ளலாம்.

அதை தான் முந்தைய பதிவான இந்திய ஒப்பந்த சட்டம் --பகுதி 2  ல்  பார்த்தோம். அதன் லிங்க் அவை அத்தனையையும் நிறைவேற்றுபவை  தான் செல்லத்தக்க ஒப்பந்தமாகும். 

 

ii)  செல்லத்தகாத  ஒப்பந்தங்கள் ::  பாதிக்கப்பட்ட தரப்பினரின் தேர்வை பொறுத்து, ஒரு ஒப்பந்தம் செல்லாததாகும் என்று இந்திய ஒப்பந்த சட்டம்., 1872 பிரிவு 2(i) கூறுகிறது. அவர்கள் ஏற்றுக் கொண்டால். அது செல்லத்தக்கதாகவும் பிணைப்பதாகவும் இருக்கும். அது, வற்புறுத்தல், தகாத செல்வாக்கு, சுதந்திரமான சம்மதம் இல்லாமல் திரித்து கூறியதன் விளைவாகவோ மோசடியினாலோ ஏற்பட்டதாக இருக்கலாம்.  எந்த தரப்பின் சம்மதம் சுதந்திரமாக பெறப்படவில்லையோ அவர்கள் அதை ரத்து செய்யவோ அல்லது அதன் படி நடக்கவோ, இரண்டில் எதை வேண்டுமானாலும் தேர்வு  செய்யலாம். அது போல செய்ய உரிமை கொண்ட தரப்பு ரத்து செய்யும் வரையில், அந்த ஒப்பந்தம் செல்லத்தக்க ஒப்பந்தமாகவே இருக்கும்.   

 

உதாரணத்திற்கு A தன் வீட்டை ரூ.5,௦௦,௦௦௦க்கு   B க்கு விற்பனை செய்வதாக வாக்குறுதி கொடுத்தார்.  அவருடைய சம்மதம் கட்டாயப்படுத்தி பெறப்பட்டது. அவர் தன் விருப்பம் போல, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவோ அல்லது அதன் படி நடக்கவோ செய்யலாம். அதனால், அந்த ஒப்பந்தமானது A வின் தேர்விற்கேற்ப   செல்லத்தக்காததாக  ஆகும்

 

இன்னொரு உதாரணமும் பார்ப்போம். ஜூன் 1 அன்று (ஏனென்றால் அது தான் என் பிறந்த நாள் ):: )  A தன் காரை B க்கு ரூ.30,000க்கு விற்பனை செய்ய ஒத்துக் கொண்டார். முழுத் தொகையையும் செலுத்திய பிறகு, ஜூன் 15 அன்று அவர் தன் காரை ஒப்புவிக்க வேண்டும். ஆனால் ஜூன் 10 அன்றே எதேச்சையாக ஏற்பட்ட தீ விபத்தில் அந்த கார் எரிந்து விடுகிறது. இந்த சூழ்நிலையில், அவர்களுக்கிடையில் ஏற்பட்ட ஒப்பந்தம், கார் எரிந்தவுடனேயே செல்லாததாகிவிடுகிறது.

 

iii} விழலாகும் (செல்லாத) ஒப்பந்தங்கள்/உடன்படிக்கைகள் :: இந்திய ஒப்பந்த சட்டம், 1872 2(j) படி, எப்போது ஒரு ஒப்பந்தம் அமுல்படுத்த முடியா நிலைக்கு வருகிறதோ, அப்போது அது விழலாகும் ஒப்பந்தமாகிறது.

உதாரணமாக ஒரு ஒப்பந்தம் அது ஏற்படுத்தப்பட்ட போது செல்லத்தக்கதாக இருந்து,  பின்னர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் இரு நாடுகளுக்கிடையில் போர் மூண்டதால் அந்த ஒப்பந்தம் விழலாகும். 

 

iv) சட்ட விரோத ஒப்பந்தங்கள் :: குற்றத்தன்மை கொண்டதாகவோ ஒழுக்கக்கேடானதாகவோ இருந்து, பொது கொள்கைக்கு எதிரானதாகவுள்ளது சட்டவிரோத உடன்படிக்கையாகும். அது போன்ற உடன்படிக்கைகள் செல்லாத ஒப்பந்தங்களை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.    

 

அனைத்து சட்ட விரோத உடன்படிக்கைகளும் செல்லாததாக கருதப்படும். ஆனால் அனைத்து செல்லாத உடன்படிக்கைகளும் அல்லது ஒப்பந்தங்களும் சட்டவிரோதமானதாகத் தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஒரு சட்ட விரோத உடன்படிக்கை செல்லத்தகாததாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அந்த ஒப்பந்தத்திற்கு இணையான பரிவர்த்தனைகளும் சட்டவிரோதமானதாகிவிடும்.        

 

உதாரணத்திற்கு, X என்பவர் Y இடமிருந்து  ரூ.5000/- கடன் பெறுகிறார். அவர்  Z என்பவருடன் பொருட்களை கடத்தல் செய்வதற்கு ஒப்பந்தம் போடுகிறார். Yக்கு கடன் வாங்குவதன் நோக்கம் தெரியும். X மற்றும் Yக்கும் இடையே நடக்கும் பரிவர்த்தனைகள் முதன்மை ஒப்பந்தத்தோடு இணைந்தது. முதன்மை ஒப்பந்தமே சட்டவிரோதமானது என்பதால், Yக்கும் Zக்கும் இடையேயான பரிவர்த்தனையும் சட்ட விரோதமானது

 

v) அமுல்படுத்த முடியா ஒப்பந்தங்கள்    ; சில தொழில்நுட்ப காரணங்களினால் நீதிமன்றத்தில் அமுல்படுத்த முடியாத  ஒப்பந்தங்கள், இந்த வகையில் வரும்.  சில சமயங்களில், சிறப்பு சட்டங்கள்  சில நடைமுறைகளை பின்பற்ற சொல்லும். உதாரணத்திற்கு, ஒப்பந்தங்கள் எழுத்து மூலமாகவோ அல்லது பதிவு செய்தோ அல்லது போதிய முத்திரை கட்டணம் செலுத்தியோ அல்லது சான்றொப்பம் இடப்பட்டோ இருக்க வேண்டும்.  சில சிறப்பு சட்ட விதிகளின் நடைமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படாவிட்டால், நீதிமன்றத்தால் அமுல்படுத்த முடியா நிலை ஏற்படும்.  மற்றபடி, அந்த ஒப்பந்தம் மிக சரியானதாக செல்லக்கூடியதாக இருப்பதற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கும்.  ஆது போன்ற சில ஒப்பந்தங்களில் இருக்கும் சில தொழில்நுட்ப குறைகளை சரி செய்தால், அதனை அமுல்ப்படுத்த முடியும்.  உதாரணத்திற்க்கு போதிய முத்திரைக்கட்டணம் செலுத்த வேண்டிய ஒப்பந்தத்திற்கு, அந்த குறைபட்ட முத்திரைக  கட்டணத்தை செலுத்தினால் அது செல்லக்கூடிய நீதிமன்றத்தால் அமுல்படுத்தக்கூடிய ஒப்பந்தமாக ஆகும்.


2. உருவாக்கும் முறையை பொறுத்து (உருவாக்கும் வழி) 

ஒப்பந்தங்களை இன்னும் நுட்பமாக கீழ்கண்டவாறு பிரிக்கலாம்:

i)            வெளிப்படையான ஒப்பந்தம்

ii)           மறைமுகமான ஒப்பந்தம்

iii)      அரை ஒப்பந்தம்

i)           வெளிப்படையான ஒப்பந்தம்ஒரு ஒப்பந்தத்தின் ஷரத்துகள் எழுத்து மூலமாகவோ வாய்மொழியாகவோ இருக்கலாம்.  அதன் ஷரத்துகள் வெளிப்படையாக ஒப்பந்தத்தின் தரப்பினரால் ஒத்துக கொள்ளபட்டால் அந்த ஒப்பந்தம், வெளிப்படையான ஒப்பந்தம் எனப்படும்.  

 

ii)     மறைமுக ஒப்பந்தம்: எழுத்து மூலமாக இல்லாதது மறைமுக ஒப்பந்தமாகும். அந்த ஒப்பந்தத்தின் தரப்பினரின் நடத்தையைக் கொண்டோ அல்லது சூழ்நிலையைக் கொண்டோ அந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகளையும் நிபந்தனைகளையும் அறிந்துக கொள்ளலாம். .

உதாரணம் :

1) ஒரு இரயில் நிலையத்திற்குள் நுழைபவரிடம் பயண சீட்டோ அல்லது நடை மேடை சீட்டோ இருக்க வேண்டும் என்பது மறைமுகமானது..   

2) ஒரு உணவு விடுதிக்குள் நுழைந்து உணவை எடுத்துக கொள்ளும் நபர்  அதற்காண பணம் செலுத்த வேண்டும் என்பதும் மறைமுகமானது. . 

 

iii) அரை ஒப்பந்தம்: உறுதியான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், அரை ஒப்பந்தம் என்பது ஒப்பந்தமே அல்ல. அரை ஒப்பந்தம் என்பது சட்டத்தால் உருவாக்கபட்டது. இது போன்றவற்றில், ஒரு சட்டப்பூர்வமான கடமையை நிறைவேற்றும் பொறுப்பு கொண்ட ஒரு தரப்பு அதை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். இதன் உள்ளார்ந்த பொருள் என்னவென்றால், யாருமே இன்னொருவரின் செலவில் தன்னை மேம்படுத்திக் கொள்ள அனுமதிக்க முடியாது என்பதே.   

உதாரணம்: A என்ற வணிகர் தற்செயலாக  B’ன் வீட்டில் தன் பொருட்களை தவற விட நேர்ந்தது.  B அந்த பொருட்களை தன்னுடையதைப் போலவே பாவிக்கிறார். . B அந்த பொருட்களை திருப்பிக் கொடுபதற்காக   A வை அடையாளம் காணும பொறுப்புக்குள்ளாகிறார் அல்லது அவர் தன் காரியத்திற்காக அந்த பொருட்களை பயன்படுத்தியிருந்தால், அந்த பொருட்களின் மதிப்பை திருப்பிக் கொடுக்கும் கடைமைக்குள்ளாகிறார் .

 

3. செயல்பாட்டை பொறுத்து::

ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்படும் போது, அவற்றை மேலும் கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்:

 

 i) நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தங்கள்:: ஒரு ஒப்பந்தம் முற்றிலுமாக நிறைவேற்றப்படும் போது, அது "நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தம்" எனப்படும். அதாவது, ஒப்பந்தத்தின் ஷரத்துகளின்படி, வேறு ஏதும் எந்த தரப்பாலும் செய்ய வேண்டிய  நிலை ஏற்படாத ஒப்பந்தம் அது. ஒரு ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றலாம். அதாவது அது ஏற்படுத்தப்பட்ட அந்த சமயமே.. உதாரணத்திற்க்கு, ரொக்க விற்பனையின் போது, அந்த ஒப்பந்தம் அந்தக் கணமே நிறைவேற்றப்படும். ஒப்பந்தத்தின் ஷரத்துகள் நிறைவேற்றப்படும்   பின்னாளில் அது நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தமாகும்.

உதாரணம் : A தன் வீட்டை B க்கு ரூபாய் 1000 க்காக விற்க ஒத்துக் கொள்கிறார். B அந்த விலையைக் கொடுக்கிறார். A வீட்டை  ஒப்படைக்கிறார் . இரண்டு தரப்பினரும் தத்தம் செயலை செய்து முடித்ததால் அது ஒரு நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தமாகும். 

 

ii)  நிறைவேற்றப்பட வேண்டிய ஒப்பந்தம் : ஒப்பந்தத்தின் தரப்பினரால் இன்னமும் தத்தம் கடமைகளை செய்து முடிக்காமல், சிலவற்றை செய்து முடிக்க வேண்டிய நிலையில் இருக்கும் போது, அதை நிறைவேற்றப்படவேண்டிய ஒப்பந்தம் என்பர். சில சமயத்தில், சில ஒப்பந்தங்கள் ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டதாகவும் மற்றொரு பகுதி நிறைவேற்றப்பட வேண்டியதாகவும் இருக்கும்.    

மேலே சொன்ன உதாரணத்தில்,  K பணத்தை கொடுத்திருந்து, G வீட்டை R ன் பெயருக்கு  பதிவு செய்துக் கொடுக்காமல் இருந்தால், அந்த ஒப்பந்தம் R யை பொறுத்த வரையில் நிறைவேற்றப்பட்டதாகவும், G யை பொறுத்த வரையில் நிறைவேற்றப்படவேண்டியதாகவும் இருக்கும். 

 

iii)  ஒரு தலைபட்சமான ஒப்பந்தம் : ஒரு ஒப்பந்தத்தில் ஒரு தரப்பு மட்டுமே தன் கடமையை நிறைவேற்ற வேண்டிய  நிலையில் இருந்தால், அதை ஒரு தலைப்பட்சமானது என்பர். அது போன்ற ஒப்பந்தங்களில், ஒரு தரப்பின் வாக்குறுதி மற்றொரு தரப்பின் செயலுக்கு பிரதிபலனாக பரிமாறப்படும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு தலைபட்சமான ஒப்பந்தம் உருவான பிறகு, ஒரு தரப்பு மட்டுமே அவர் தரப்பு கடமையை நிறைவேற்ற கடமைப்பட்டவர்.  ஏனெனில், மற்றொரு தரப்பு ஏற்கெனவே சில செயலை செய்து,  தன் தரப்பு கடமையை முடித்திருப்பார். ஒரு தலைபட்சமான ஒப்பந்தங்களை 'நிறைவேற்றப்பட்ட பிரதிபலன் கொண்ட ஒப்பந்தங்கள்' என்றும் சொல்வர்.   

உதாரணம்: A ஒரு இரயில்வே சுமைதூக்கியை தன் சாமான்களை எடுத்து  ஒரு இரயில்வே கம்பார்ட்மென்ட்டில் வைக்க  அனுமதிக்கிறார். அந்த சாமான்கள் நகர்ந்து இரயில்வே கம்பார்ட்மென்ட்டில் வைக்கப்படும் போது,   ஒரு ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகிறது. சுமை தூக்கி தன் கடமையை முடித்து விடுகிறார். அதே சமயம், ஒப்பந்தம் செயல்பாடிற்கு வருகிறது.  இப்போது Aக்கு  மட்டுமே சுமைதூக்கிக்கு கொடுக்க வேண்டிய நியாயமான கூலியை கொடுக்கும் கடமை ஏற்படுகிறது.

 

iv) இருதரப்பு ஒப்பந்தம் : இருதரப்பு ஒப்பந்தம் என்பது இரண்டு தரப்பினரும் தத்தம் கடமையை நிறைவேற்ற வேண்டிய கடமை உள்ள  'இரண்டு தரப்பு ஒப்பந்தம்' எனப்படும். அதாவது, ஒரு தரப்பு உருவாகும் போது, இரண்டு தரப்பினரும் தத்தம் கடமையை நிறைவேற்ற வேண்டிய நிலையில் உள்ள போது.  அது போன்ற\ ஒப்பந்தங்களில், ஒரு தரப்பினரின் வாக்குறுதி மற்றொரு தரப்பினரின் வாக்குறுதிக்கு ஈடாக பரிமாறப்படும். இந்த இருதரப்பு ஒப்பந்தம் என்பது, 'நிறைவேற்றப்பட வேண்டிய பிரதிபலன் கொண்ட ஒப்பந்தங்கள்' என்றும் சொல்லப்படும்

உதாரணம் :  A,  B க்காக ஒரு படம் வரைந்துக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார்.  B யும் A க்கு  ரூ. 100 கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார். ஒப்பந்தம் உருவாகும் போது, வாக்குறுதிகள் பரிமாரிக் கொள்ளப்பட்டு இரண்டு தரப்பிலும் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் இருந்ததால், அது, ஒரு இருதரப்பு ஒப்பந்தமாகும்.   


                                                                        ...தொடரும்...



தொடர்புடைய முந்தைய பதிவுகள் 

1இந்திய ஒப்பந்த சட்டம் பகுதி 1 


௨ இந்திய ஒப்பந்த சட்டம் பகுதி 2

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


செவ்வாய், 10 ஜனவரி, 2023

இந்திய ஒப்பந்த சட்டம், 1872 ---பகுதி இரண்டு -- ஒப்பந்தத்தின் அத்தியாவசிய கூறுகள்

 

செல்லுபடியாகும் ஒப்பந்தத்தின் அத்தியாவசிய கூறுகள்:
        

 

பிரிவு 10 ன் படி, ஒப்பந்தம் செய்யத் தகுதியுள்ள தரப்பினரின் சுதந்திரமான  ஒப்புதலோடு, ஒரு சட்டப்பூர்வ மறுபயனுக்காக,  'செல்லாதவை' என்று  வெளிப்படையாக சொல்லப்படாத சட்டப்பூர்வமான நோக்கத்தோடு செய்யப்படும் அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களாகும். ஒரு உடன்படிக்கை ஒப்பந்தமாக மாற, பின்வரும் அத்தியாவசிய கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும்;

அ}  முனைதல் மற்றும் ஏற்றல் :: ஒரு உடன்படிக்கைக்கு இரண்டு தரப்புகள் இருக்க வேண்டும்.  ஒரு தரப்பு கொடுக்க முன் வரவும்,  அதை மற்ற தரப்பு ஏற்கவும் வேண்டும். கொடுக்க முன் வருவதற்கான அம்சங்கள் தெளிவாகவும் நிபந்தனையின்றியும் இருக்க வேண்டும். அதை  ஏற்றலும், முன்வரும்போது சொல்லப்பட்ட முறையிலேயும் அந்த காலத்திற்குள்ளும்  இருக்க வேண்டும்.   

ஆ) சட்டப்பூர்வமான உறவு ஏற்படுத்தும் எண்ணம் : ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்களுக்கு இடையில் ஒரு சட்டப்பூர்வ உறவு ஏற்படுத்தும் எண்ணம் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தரப்பில் அந்த எண்ணம் இல்லாத பட்சத்தில், அவர்களுக்கிடையில் எந்த ஒப்பந்தமும் இல்லை.  சமூக அல்லது தொழில்முறையல்லாத எந்த  உடன்படிக்கையும் ஒரு சட்டாபூர்வ உறவுமுறையை ஏற்படுத்தும் எண்ணம் கொண்டதாக இருக்காது  என்பதால் அவை ஒப்பந்தங்கள் அல்ல. 

 

இ) சட்டப்பூர்வமான மறுபயன்: மறுபயன் என்பதற்கு பொருள் ' பிரதிபலன்;.  சட்டத்தால் அமுல்படுத்தக்கூடிய ஒரு உடன்படிக்கைக்கு ஆதரவாக மறுபயன் இருக்க வேண்டும்.  மறுபயன் என்றால் ஒரு தரப்பினரிடமிருந்து மற்றொரு தரப்புக்கு ஒரு பலன் அல்லது நன்மை மாற வேண்டும்.  பிரதிபலனாக ஒன்றும் பெறாத நிலையில்,  ஒன்றை செய்வதற்கான வாக்குறுதியை பொதுவாக சட்டம் அமுல்படுத்துவதில்லை. மறுபயன் என்பது பணமாகவோ பொருளாகவோ இருக்க வேண்டிய தேவை இல்லை. அது ஒரு செயலாகவோ அல்லது செய்யாமல் விடுத்தலாகவோ  அல்லது ஏதேனும் ஒன்றை செய்யவோ செய்யாமல் இருக்கவோ கொடுக்கும் வாக்குறுதியாகவும் இருக்கலாம். அது இறந்த காலமாகவோ, நிகழ்காலமாகவோ அல்லது எதிர்காலமாகவோ கூட இருக்கலாம். ஆனால் அது உண்மையானதாகவும் சட்டப்பூர்வமானதாகவும் இருக்க வேண்டும்.     

 

ஈ) ஒப்பந்தம் போடும் தரப்பினரின் தகுதி: ஒரு சட்டப்பூர்வமான அல்லது செல்லத்தக்க  ஒப்பந்தத்தை போடக்கூடிய தகுதி கொண்டவராக ஒப்பந்தத்தின் தரப்பினர் இருக்க வேண்டும். முதிர்மை அடைந்த, தெளிவான மனநிலையுள்ள மற்றும் சட்டத்தால் நிராகரிக்கப்படாத எந்த நபரும் ஒப்பந்தம் போடத் தகுதியானவர் ஆவார். இளையர், பித்துப்பிடித்தவர், குடிபோதையில் இருப்பவர போன்றவை ஒப்பந்தம் போடும் தகுதியில் குறைபாட்டை ஏற்படுத்தும்,  

 

உ) சுதந்திரமான மற்றும் நேர்மையான ஒப்புதல் : ஒரு ஒப்பந்தம் செல்லத்தக்கதாக வேண்டுமானால், அதன் தரப்பினருக்கிடையே சுதந்திரமான மற்றும் நேர்மையான ஒப்புதல் இருக்க வேண்டும். இங்கே ஒப்புதல் என்பது ஒரு ஒப்பந்தத்தில் நுழைவதற்கான விருப்பம். எனவே, ஒப்பந்தத்தின் இரண்டு தரப்பினரும் எந்தவொரு வெளிப்புற சக்தியின் தாக்கம் இல்லாமல் சுயமாக தங்கள் ஒப்புதலை கொடுக்க வேண்டும்.  வற்புறுத்தல், தகாத செல்வாக்கு, திரித்துக் கூறுதல் மற்றும் மோசடியாக அல்லது தவறாக ஒப்புதல் பெறப்படாத போது, அது சுதந்திரமானது எனப்படும்.   

 

ஊ) சட்டப்பூர்வமான நோக்கம்:  உடன்படிக்கையின் நோக்கம் சட்டப்பூர்வமானதாக இருக்க வேண்டும். அந்த நோக்கம் சட்ட விரோதமானதாகவோ ஒழுக்கக் கேடானதாகவோ பொதுக் கொள்கைக்கு எதிரானதாகவோ இருக்கக் கூடாது.  ஒரு உடன்படிக்கை இது போன்ற ஏதேனும் ஒரு குறைபாட்டுடன் இருந்தால் அது சட்டத்தால் அமுல்படுத்தப்பட மாட்டாது.   

 

எ) செல்லாதது எனப்படாத உடன்படிக்கை :சில செயல்கள் வெளிப்படையாக செல்லாதவை எனப்பட்டுள்ளன. ஒரு ஒப்பந்தத்திற்குள் நுழைய வேண்டுமாயின், அந்த நாட்டில் அமுலில் உள்ள சட்டத்தால் அந்த உடன்படிக்கை, செல்லாதது என்று வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கக் கூடாது. உ.தா. .. இளவருடன் உடன்படிக்கை  

ஏ) உறுதித்தன்மை மற்றும் செயல்திறனுக்கான சாத்தியக்கூறு: ஒரு உடன்படிக்கை தெளிவற்றதாக இல்லாமல், உறுதித்தன்மையோடு  இருக்க வேண்டும். சாத்தியக்கூறு தெளிவற்றதாகவும் அதன் பொருளை அறிந்துக் கொள்ள முடியாமலும் இருந்தால் அதை அமுல்படுத்த முடியாது.  

ஐ) சட்ட சம்பிரதாயங்கள்: ஒரு ஒப்பந்தம், சொல்லப்பட்ட அல்லது எழுதப்பட்ட வார்த்தைகளாலோ இருக்கலாம். சட்ட விளைவுகளைப் பொறுத்த வரையில், எழுத்தால் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்திற்கும் வாய் வார்த்தையால் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இருந்தாலும், தரப்பினரின் நலுனுக்காக ஒப்பந்தம் எழுதப்பட்டிருக்க வேண்டும். எனவே ஒரு உடன்படிக்கையை சட்டத்தால் அமுல்படுத்த வேண்டுமானால், , ஒரு ஒப்பந்தம் எழுதப்பட்டிருக்க வேண்டும், அல்லது சாட்சிகளின் முன்னிலையில்    பதிவு செய்யப்பட வேண்டும்  என்ற சட்டத் தேவை இருக்கும் போது  அவை நிறைவேற்றப்பட வேண்டும்.

 

இனி ஒப்பந்தத்தில் உள்ள வகைகளைப் பார்ப்போம்.


                        (தொடரும் )


தொடர்புடைய முந்தைய பதிவுகள் 

1இந்திய ஒப்பந்த சட்டம் பகுதி 1 

 

 

திங்கள், 9 ஜனவரி, 2023

வணிகத்தின் சட்ட அம்சங்கள்

        சட்டம் என்பதை நடத்தை விதி மற்றும் சமூகத்தின் சரியான ஒழுங்குமுறைக்கான நடவடிக்கை என்று பொருள் கொள்ளலாம்.  வணிகத்தைக் குறிக்கும் சட்டம்  என்பதால்,  வணிகம் தொடர்பான பரிவர்த்தனைகளில் இருந்து எழும் வணிகத்தின் சரியான ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு என்று இதை  கூறலாம். 


        சட்ட அறியாமை என்பதை  மன்னிக்க முடியாது/ . ஒவ்வொருவரும் அவர் எந்தச் சட்டத்திற்கு உட்பட்டவர் என்பதை அறிந்திருக்க வேண்டும். அதுவும் வணிகம் என்று வரும் போது அதோடு தொடர்புடைய சட்டங்களை பற்றி கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். வணிகத்துக்கு தொடர்புச்டைய சட்டங்கள் என்னும் வகைப்பாட்டில் வருபவை என்றால் 



1.     இந்திய ஒப்பந்த சட்டம், 1872
2.     சரக்கு விற்பனை சட்டம் ,1930
3.     மாற்றுமுறை ஆவண சட்டம், 1881
4.     நிறுவனங்கள் சட்டம், 2013
5.     தொழிற்சாலைகள்  சட்டம், 1948
6.     ஊதியம் வழங்குதல் சட்டம்
7.     போனஸ் வழங்குதல் சட்டம்
8.     குறைந்த பட்ச ஊதிய சட்டம்          
9.     தொழிற்துறை தகராறுகள் சட்டம்
10.  பேறுகால பலன்கள் சட்டம்
11.  வருங்கால வைப்பு நிதி சட்டம்
12.  நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்
13.  போட்டிகள் சட்டம்
14.  வலைதள குற்றம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம்
15.  அறிவுசார் சொத்துரிமை சட்டம்
16.  காப்புரிமை சட்டம்
17.  வணிக முத்திரை சட்டம்
  இந்த சட்டங்களுக்கெல்லாம் தலையானதும்  ஒப்பந்த சட்டத்தின்
அடிப்படையானதும்  ஆன இந்திய ஒப்பந்த சட்டத்தைப் பற்றி  
தெரிந்துக் கொள்வோம்

இந்திய ஒப்பந்த சட்டம், 1872.

ஒரு  கண்ணோட்டம்: :

               ஒப்பந்தம்' என்ற சொல்லுக்கு, சாதாரண அர்த்தத்தில், சொல்ல வேண்டுமானால் எந்த இரு நபர்களுக்கிடையேயான எந்த ஒரு உடன்படிக்கையும் என்று பொருள் கொள்ளலாம் வணிக நபர்களைப் பொறுத்தவரை, மற்றவர்களுடன் ஒப்பந்தங்கள் போடுவது என்பது அவர்களின் வணிகத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான மிக முக்கியமான செயல்முறையாகும்.  ஒப்பந்தங்கள் எதிர்காலத்திற்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன என்பதால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஒப்பந்தங்களில் ஈடுபடுபவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 

       இந்த ஒப்பந்தச் சட்டம், ஒப்பந்தங்களைப் போடும்  நபர்களின் நடத்தையை ஒழுங்குபடுத்த முற்படுகிறது, இதன் மூலம் இவர்களுக்கு இடையே பின்னாளில் எழும் எந்த முரண்பாடுகளையும் நீதித்துறை மேற்பார்வையின் கீழ் இணக்கமாக அல்லது நியாயமான முறையில் தீர்க்கப்படும்

    மறுபயன் இல்லாத ஒப்பந்தம் செல்லாது. இந்த பாடம் செல்லுபடியாகக்கூடிய மறுபயன் மற்றும்  அது தொடர்பான விதிகளை பற்றியும் மாணவர்கள் புரிந்துக் கொள்ள உதவுகிறது

   கற்றல் நோக்கங்கள்:

    இந்த பாடத்தை முடித்தபின், உங்களால்

·      ஒப்பந்த சட்டத்தை விளக்கவும்

·      பல்வேறு ஒப்பந்தங்களை வகைப்படுத்தவும்

·      ஒப்பந்தத்தின் முக்கிய கூறுகளை விவாதிக்கவும்

·      ஒப்பந்தத்தின் செயல்திறன்களை விவரிக்கவும்

·      ஒப்பந்தத்தில் உள்ள மறுபயனின் முக்கியத்துவத்தை விவரிக்கவும்

·      மறுபயன் குறித்த விதிகளை விளக்கவும் மற்றும் ------------------முன்னிலைப்படுத்தவும்

·      ஒப்பந்தத்திற்கு அன்னியர் குறித்த விதிகளை வரிசைப்படுத்தவும்

·      ஒப்புதல் சுதந்திரமானதாக இல்லாத சூழ்நிலைகளை விளக்கவும்

 வலுக்கட்டாயப்படுத்தல் மற்றும் தகாத செல்வாக்கு தொடர்பான விதிகளையும், செல்லுபடியாகக்கூடிய ஒரு ஒப்பந்தத்தில் அவற்றின் தாக்கங்கள் குறித்து எண்ணிப் பார்க்கவும்    .

·      திரித்துக் கூறுதல் மற்றும் மோசடிக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை அடையாளப்படுத்தல்

போன்றவை செய்ய முடிய வேண்டும்.

 

1.1 அறிமுகம்

       இந்திய ஒப்பந்த சட்டம், செப்டம்பர் 1, 1872  அன்று நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டம் இந்தியா முழுமைக்கும் பொருந்தும்.  இது ஆங்கிலேய ஒப்பந்த சட்டத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. 

 

'ஒப்பந்தம்குறித்த விளக்கம்:

  ஒப்பந்தம் என்பது இரண்டு தரப்பினரிடையே போடப்பட்ட, சட்டத்தால் அமுல்படுத்தக்கூடிய உடன்படிக்கையாகும்.  இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் பிரிவு 2 (h) "சட்டத்தால் செயல்படுத்தக்கூடிய உடன்படிக்கை" என ஒப்பந்தத்தை வரையறுக்கிறது சட்ட வல்லுநர் பொல்லாக், 'சட்டத்தால் செயல்படுத்தக் கூடிய ஒவ்வொரு உடன்படிக்கையும், வாக்குறுதியும் ஒரு  ஒப்பந்தமாகும்"  என்கிறார்.

  பிரிவு 2(e) இன் படி ஒரு உடன்படிக்கை என்பது ஒவ்வொரு  வாக்குறுதியும் மற்றும் ஒவ்வொரு வாக்குறுதிகளின் தொகுப்பும்ஒன்றுக்கொன்று மறுபயனாகும்                                                                                                                                                                      .

  • பிரிவு 2(b) இன் படி, வாக்குறுதி யார் முன்னாள் முன்மொழியப்பட்டதோ, அந்த நபர் அதற்கு தனது ஒப்புதலை தரும்  போது, ​​முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டால், அது ஒரு வாக்குறுதியாக மாறும்.

 
உடன்படிக்கை = முனைதல் + ஏற்றல்
 
கருத்தொருமை ( Consensus ad idem) - ஒப்பந்தத்தின் தரப்பினர்,  ஒப்பந்தத்தின் விஷயத்தைப் பற்றி அதே அர்த்தத்தில் மற்றும் அதே நேரத்தில் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். ஒருமித்த கருத்து  இல்லா விட்டால், எந்த ஒப்பந்தமும் இருக்க  முடியாது
 
          ஒப்பந்தம் = உடன்படிக்கை + சட்டத்தில் அமலாக்கம்
 
    அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

 மேலே உள்ள வரையறைகளின் பகுப்பாய்வு, ஒரு ஒப்பந்தம் என்பது 
பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது:

         ஏதாவது செய்ய அல்லது செய்யாமல் இருக்க 
           ஒரு உடன்படிக்கை 
         சட்டத்தில் அமலாக்கம்

        இனி       ஒப்பந்தத்தின் முக்கிய கூறுகளை பற்றி  காண்போம்.
 

            



திங்கள், 19 டிசம்பர், 2022

அவதூறு செய்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடியாதா?

 


    ஒரு மாஜிஸ்திரேட் தன் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை---அது போலீசார் தாக்கல் செய்த குற்ற அறிக்கை படியோ அல்லது பாதிக்கபட்டவர் நேரிடையாக நீதிமன்றம் முன்பு ஆஜராகி கொடுக்கும் புகாரின் அடிப்படையிலோ கோப்பிற்கு எடுப்பதற்கான அதிகாரத்தை கொடுப்பது குற்ற விசாரணை நடைமுறை சட்டத்தின் (இதை இனி கு.வி.மு.ச. என்று சொல்வோம்) பிரிவு 19௦.

    விதி என்று இருந்தால் விதிவிலக்கும் உண்டல்லவா?

    அப்படி கோப்பிற்கு எடுத்துக்கொள்வதற்கு உள்ள ...நிபந்தனை என்று சொல்வதை விட சில தகுதி கொண்டவையாக எவை இருக்க வேண்டும்?

     அதை தான் சொல்கின்றன ..கு.வி.மு.ச. வின் சட்டப்பிரிவு 199 யை உள்ளடக்கிய சேப்டர் XIV.  

      அப்படி விதிவிலக்கில் வரக் கூடிய   குற்ற விசாரணை நடைமுறை சட்டப் பிரிவு 199 என்னவென்றால்

     "எந்த நீதிமன்றமும்  இந்திய தண்டனை சட்டத்தின் சேப்ட்டர் XXI கீழ் தண்டிக்ககூடிய  குற்றங்களை குறித்து அந்த குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் தரும் ‘புகாரை’ தவிர்த்து வேறு முறையில் வழக்கை கோப்பிற்கு எடுக்கக் கூடாது" என்கிறது..

     "புகார் " என்றாலே காவல் நிலையத்தில் கொடுக்கக் கூடியதைத் தான் நினைப்போம்.  ஆனால் இந்த சட்டத்தின் பிரிவு 2(d) எது ‘'புகார்’' என்று விளக்குகிறது .

      எது?

      நிச்சயமாக மாஜிஸ்திரேட்டு  முன்பாக தாக்கல் செய்யபடுவது தான்.  அப்படியானால் .நாம் காவல் நிலையத்தில் கொடுப்பது?? அதை தான் பதிந்து ‘முதல் தகவல் அறிக்கை’ என்கிறார்களே. போலீசார் விசாரணை முடித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதும் அறிக்கை தான்.  குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிராக வழக்கு தொடுக்க முகாந்திரம் இருந்தால், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வார்கள்.  அல்லது புகாரில் உண்மைத் தன்மை இல்லை என்று தோன்றினாலோ " முடிப்பதற்கான அறிக்கை' தாக்கல் செய்வார்கள். அந்த குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தின் கோப்பிற்கு எடுத்து கொள்ளும்போது, அரசு சார்பாக கவ்வல் நிலைய அதிகாரி தான் 'புகார்தாரராக' காட்டப்படுவார். காவல் நிலையத்தில் 'புகார்' கொடுத்தவர் , நீதிமன்றத்தை பொறுத்தவரை  "DEFACTO COMPLAINANANT மட்டுமே !!.

     மாஜிஸ்திரேட் தான் பெறும் புகாரை இரண்டு விதமாக கையாளலாம்.  ஒன்று  அதை தீர விசாரித்து , குற்றம் நடந்துள்ளதாக தெரிய வரின், வழக்கை கோப்பிற்கு எடுத்து, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட குற்றம் சுமத்தபட்டவர்களுக்கு நீதிமன்றத்திலிருந்து ‘சம்மன்’ அனுப்பி, நீதிமன்றத்தின் முன்பு,  ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடலாம்.  அதன் பின் 'சட்டம் தன கடமையை செய்யும்.'!! 

 இல்லையெனில், குற்றம் நடந்துள்ளதாக முதல் நிலை விசாரணை தெரிவிக்கும் பட்சத்தில், , அது பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு கு.வி.மு.ச. பிரிவு 156 (3)ன் கீழ் உத்தரவிடலாம்.

 இது தான் நடைமுறை. இப்போது நம் கேள்விக்கு வருவோம்.  

'அவதூறு' என்பதை 'சிவில்'  மற்றும் ‘'கிரிமினல்'’ என்று இரண்டு வகையாக பிரிக்கலாம். தன்னுடைய நன் மதிப்பிற்குகு களங்கம் ஏற்படுத்தியதாக சொல்லி, தவறு இழைத்தவருக்கு தண்டனை பெற்றுத் தர, இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 499,500  ன் மூலம் அவதூறை குற்ற எண்ணத்துடன் செய்யப்படும் CRIMINAL DEFAMATION செய்ததாக அவருக்கு தண்டனை தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தை அணுகலாம்.

ஆமாம். 'நீதிமன்றத்தை' தான் அணுக வேண்டும். காவல் நிலையத்தை அல்ல. 

ஏனெனில் இந்த இ.த.ச பிரிவு  499,500   சேப்டர் XXI கீழ் வருபவை.  அதனால் மாஜிஸ்திரேட்டு முன்பாக புகார் தாக்கல் செய்து அவர் பாதிக்கப்பட்டவரை விசாரித்து, குற்றம  நடந்துள்ளதாக 'முதல் நிலையில்' தெரிய வந்ததாக திருப்தியுற்று கோப்பிற்கு எடுக்க வேண்டும். 

அதே சமயம், மாஜிஸ்திரேட்டு தனக்கு இருக்கும்  அதிகாரப்படி, முதல் நிலை விசாரணையில் குற்றம் நடந்ததாக  திருப்தியடைந்து காவல் துறையை விசாரித்து அறிக்கை  தருமாறு, மற்ற வழக்குகளில் செய்வது போல பிரிவு 156 கீழும் உத்தரவிட முடியாது.  ஏனெகனில், காவல்  துறை விசாரணை முடித்து தரும் அறிக்கையைக் கொண்டு வழக்கை கோப்பிற்கு எடுக்க முடியாதே!! . பாதிக்கப்பட்டவர் தானே நீதிமன்றத்தில் ஆஜராகி புகார் தர வேண்டும்.!!

ஏன் இந்த நடைமுறை?

 சுப்பிரமனிய சாமி மத்திய அரசிற்கு எதிராக இந்த சட்டப்பிரிவை எதிர்த்து தொடர்ந்த வழக்கில்,சுப்ரமணிய சாமி எதிர் யூனியன் அரசு குடி மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பேச்சுரிமை மற்றும் கருத்து தெரிவிக்கும் உரிமை ஆகியற்றிற்கு எதிராக இந்த சட்டப் பிரிவுகள் உள்ளதாலும், அரசு அதை அவர்களுக்கு எதிராக 'அதிகார துஷ்ப்ரயோகம் செய்வதாகவும் ,அரசியல் அமைப்பு சட்டத்தில் குடிமக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பேச்சுரிமை என்னும் அடிப்படை உரிமையை இது பாதிப்பதால்,  அவை நீக்கப்படவேண்டும் என்று வாதிட்டனர். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள மறுத்த உச்ச நீதிமன்றம், இ. த. ச. சேப்டர் XXIV ல் சொல்லப்படும் குற்றங்கள் பொறுத்து காவல் துறைக்கு விசாரிக்கும் அதிகாரம் அளிக்காமல், நீதிமன்றமே விசாரிக்கும் அதிகாரம் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டியது.. மேலும் பேச்சுரிமை என்பதும் நியாயமான வரையறையுடன் கூடியதாக தான் இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்தியது. 


எனவே. எந்த விதத்தில் பார்த்தாலும், காவல் நிலையத்தில் ஒருவர் அவதூறு செய்து விட்டதாக புகார் கொடுத்து அதன் பேரில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதோ முடியாது என்றும  தீர்ப்பளித்துள்ளது.  இந்த புகழ் பெற்ற வழக்கை தான் மேற்கோள் காட்டி, சமீபத்திய கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பும் வெளிவந்துள்ளது. திவ்யா எதிர் மாநில அரசு https://www.livelaw.in/pdf_upload/karnataka-high-court-order

என்ற வழக்கிலும், காவல் துறை ஆய்வாளரை விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாஜிஸ்திரேட்டு போட்ட உத்தரவை ரத்து செய்தது. 

எனவே காவல் நிலையத்தில் அவதூறு புகாருடன் அணுகுவதோ, அவர்களும் அதை வாங்கிக்கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதோ தேவையற்ற கால விரயத்தையும் பொருளாதார இழப்பையும் தான் ஏற்படுத்தும் 

மீண்டும் இன்னொரு பதிவில் சந்திப்போம்...

அப்படியே இந்த வீடியோவையும் பாருங்கள்


https://youtu.be/WnA2QsdwRLU

 

 

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...