"அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்படுகிறது"
கொடுப்பவன் இருப்பதால் தானே வாங்குறான்?
இவன் ஏன் கொடுக்கிறான்?
இவன் வேலை சட்டுனு முடியனும்.அதுவும் மனு போட்ட மத்தவங்களுக்கும் முன்னாடி!!
இல்லேன்னா ..விதிமுறைப்படி அது செய்யக்கூடாத வேலையாய் இருக்கணும்!!
சமீபத்திய செய்தி ஒன்று படித்தேன். தமிழ்நாட்டில் கொரானா தடுப்பூசி போடுவதில் ஆள்மாறாட்டம் அதிகரித்து வருகிறதாம்!!
தடுப்பூசிக்கு உள்ள டிமாண்ட் காரணமாக நிறைய பேர் இன்னமும் போடவில்லை இல்லையா?
ஆனால் நிறைய அலுவலகங்களில் அந்த தடுப்பூசி சான்று கேட்கிறார்கள்..வேலைக்கும் போகவேண்டும் என்பதால் சுகாதார பணியாளர்கள் உதவியுடன், ஆதார் சான்று மூலம் தடுப்பூசி சான்றிதழ் பெற்றுவிடுகிறார்கள்.இந்த பக்கம் காலேஜ்க்கு பிள்ளையை தடுப்பூசி போடாமல் அனுப்ப தயங்கும் பெற்றோர், சான்று தேவையில்லை, ஊசி மட்டும் போட்டால் போதும் என்கின்றனர்..ஆனால் 18 வயதுக்கு கீழ் உள்ளவருக்கு இன்னமும் தடுப்பூசி போட வில்லை. இவர்களும், சுகாதார பணியாளரை அணுகி…
எப்படியோ தப்பு செய்ய ஒரு அரசு ஊழியரை தூண்டுபவனும் ஓரு குற்றவாளி தானே..இவன் கொடுப்பதை வாங்குவதால் அவனும் ஒரு குற்றவாளி.ஆனால் சட்டம் அரசு ஊழியரை முதல் குற்றவாளியாகவும், இவனை இரண்டாவது குற்றவாளியாக தான் பார்க்கிறது..
ஏன்?
அரசு ஊழியன், அவனுக்கு என்று வகுக்கப்பட்ட நடத்தை விதிகளை மீறியதால்.
தன்னை பணி அமர்த்திய அரசுக்கு உண்மையாக இல்லாததால்…
அவனுடைய இந்த நடத்தைகெட்டத்தனத்தை புகழ்வது, ஊக்குவிப்பதும் இவன் தான்.
"அவன் ரொம்ப யோக்கியனப்பா..வாங்கின காசுக்கு கரெக்ட்டா வேலையை முடிச்சு குடுத்துடுவான்"ன்னு புகழ்வதும், விதிகளை காட்டி, சரியில்லாதது நியாயமாக இல்லாதவற்றை மறுக்கும் நேர்மையான அரசு ஊழியனை பொய் புகார் கொடுத்து, சிக்கலில் மாட்டிவிடுவதும் சாட்சாத் இவனே..!!
மக்கள் உரிமைகளை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள்..தங்களுக்கு அடிப்படை கடமையும் உண்டு என்பதை மறந்து!!
அதனால் அரசு ஊழியர்களும் ஒரு படி உயர்ந்து தங்கள் கடமையை செய்வதற்கும் கிம்பளம் வேண்டும் என்று எதிர்பார்க்கும் உச்சாணிக்கிளைக்கு தாவிவிட்டனர்.
இப்படித்தான் போன மாதம் ஒரு நாள் வாசலில் அழைப்பு மணியோசை..தபால் காரர்.. நான் கதவை திறந்தவுடன், ஒரு ஒப்புதல் அட்டையை நீட்டினார்..என்ன தபால் வந்திருக்கும் என்று யோசித்தபடியே கையெழுத்திட்டேன்.பிறகு ஒரு தாளை நீட்டி அங்கும் கையெழுத்து போடச்சொன்னார்.
"முதலில் தபாலை கொடுங்கள்.பிறகு கையெழுத்து போடுகிறேன்" என்றேன். அது தானே முறை?
"இல்லை. நிறைய பேர் தபாலை வாங்கி பார்த்து விட்டு, "வாங்க முடியாது" என்கிறார்கள்.அதனால் தான் இப்படி…நீங்கள் அப்படி செய்யமாட்டீர்கள்" என்றபடியே தபாலை நீட்டினார்.
"வாங்கவில்லை என்றால் அப்படியே குறித்துக்கொள்வது தானே.அதற்காக தபாலை கொடுக்காமலேயே கையெழுத்து கேட்பது சரியல்ல" என்றபடியே கையெழுத்து போட்டுக்கொடுத்தேன்.
கதவை மூடப்போகும்போது, "ஏதாவது டீ செலவுக்கு" என்றார்..
"இப்போது பண்டிகை ஏதும் இல்லையே?!"
"லெட்டர் வந்திருக்கே"
"ஆமாம். அதை படித்துப் பார்த்து சந்தோஷமான செய்தி ஏதும் என்றால் இனாம் கொடுக்கலாம் தான்...அதற்காக தபால் வந்தாலே எப்படி பணம் கேட்கிறீர்கள்..இதை கொடுப்பது தானே உங்கள் வேலையே?"
பேசாமல் நகர்ந்தார்.
இரண்டு வாரம் கழித்து, வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது பார்க்கிறேன். வந்திருக்கும் தபால்கள் விசுறியடிக்கப்பட்டு மூலையில் கிடந்தன.
அவர் கடமையை செய்துள்ளாராம்.. !
நானும் என் கடமையை செய்துள்ளேன்!!
யோசித்துப் பார்க்கும்போது, இந்த நிலைக்கு இவர்கள் போனதற்கு மிஸ்டர் பொதுஜனமும் ஒரு காரணம் தானே?!
"உன் கடமையை செய்ய நான் ஏன் எதுவும் கொடுக்க வேண்டும்?" என்று கேட்காமல், தன் வேலை நடந்தால் சரி என்கிற சுயநலம்..
லஞ்சம் கொடுத்தும் வேலை நடக்கவிட்டால், எப்படி போய் புகார் கொடுப்பது என்பது சிலரின் சந்தேகம். .தான் ஏமாந்ததும் இல்லாமல் லஞ்சம் கொடுத்ததற்கு ஏழு வருடம் சிறை என்றால்?
இப்போது தான் சட்டத்தில் திருத்தம் வந்துவிட்டதே!!
லஞ்சம் கொடுக்காமல் தன் கோரிக்கை நிறைவேற "மெனக்கிடும்" நபர்களை "வித்தியாசமாக" பார்ப்பது!!
இல்லையென்றால், சரியில்லாத கோரிக்கையை நிறைவேற்ற மறுக்கும் ஒரு நேர்மையான அரசு ஊழியரை "பிழைக்க தெரியாதவன்" என்று பட்டம் கொடுப்பது, பொய் புகார் கொடுத்து, "தான் நேர்மையாய் இருந்ததற்கு இந்த தண்டனையா?!"என்று அவனை நொந்துப் போக வைப்பது,
பொய் புகார் கொடுத்து, அது உண்மையில்லை என்று தெரியவந்தால், புகார்தாரர் மீதே போலீஸ் புகார் கொடுக்கலாம்…ஆனால் ஏற்கெனவே நொந்து போயி, "விட்டால் போதும்" என்ற விரக்திநிலையில் இருப்பவர் அதை செய்வதில்லை..அது இவர்களுக்கு வசதி வேறு!!
லஞ்சம் வாங்குபவன் மீது, எப்போது லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சென்று புகார் அளிக்க மறுக்கின்றனர் தெரியுமா?
"என்னத்தை அவன் பெரிசா கேட்டுட்டான்..ஊரிலே நடக்காததையா செஞ்சுட்டான்" என்று எப்போது அவனுக்கு வரிந்துக்கட்டிக்கொண்டு வருகின்றனர்?
1.தன்னுடைய சாதி சனத்தில் ஒருவன்
2."ஆளுக்கு மேல்மட்டத்திலே நிறைய பழக்கம். பெரிய இடத்து பொல்லாப்பு எதுக்கு?°
3. நாளே பின்னே அவனாலே நமக்கும் ஏதாவது காரியம் ஆகும்"
4. "அவன் தான் வாங்குற காசுக்கு கரெக்ட்டா வேலையை முடிச்சு குடுத்துடுறானே?"
5. எத்தனையோ பேரு கிட்டே வாங்குறான்.நான் மட்டும் ஏன் புகார் கொடுக்கணும்?"
.பணத்தின் பின்னால் ஒடுபவரின் கதி என்னாகும் என்று விளக்குகிறார் ஓஷோ.
" அதிகாரம், கவுரவம் இவற்றால் கவரப்படும் மக்கள் இழப்பது வேறொன்றுமில்லை.. வாழ்க்கையைத் தான்”
.அட போங்கப்பா..லஞ்சம் வாங்குறவன் தான் வசதியாயிருக்கான்"னு உங்க மைண்ட்வாய்ஸ் சொன்னதை நானும் கேட்டுட்டேன்!!
உண்மை தான். இரண்டு மாதம் முன்பு மாண்புமிகு கர்நாடகா உயர் நீதிமன்றம் கூட இது சம்பந்தமான ஒரு முக்கிய தீர்ப்பை சொன்னது..
அரசு ஊழியர் மட்டும் தானே இந்த லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வருவார்கள் என்று நினைத்திருந்தோம்?
"அரசு ஊழிடர் மட்டுமல்ல பொது கடமையாற்றும் தனி நபரும் அரசுக்கும் பொதுமக்களுக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவர். அவரும் லஞ்ச ஒழிப்பு சட்டம் கீழ் வருவார் "என்றது.
அந்த வழக்கில் மனுதாரர், தான் அரசு ஊழியர் அல்ல என்பதால் தனக்கு இந்த சட்ட. பொருந்தாது என்று வாதிட்டார்..ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிமன்றம், அவர் பணி செய்யும் அமைப்பிற்கு அரசு நிதி தருவதால் அவரும் அந்த சட்டத்தின் வரையறைக்குள் வருவார்" என்றது!!
இந்த தீர்ப்பில்,
"நம் நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாக ஊழல் கருதப்படுகிறது. இது ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் குறைத்து மதிப்பிட வைக்கிறது .மேலும் மனித உரிமைகளையும் அது மீறுகிறது.
ஊழல்வாதிகள் சட்ட அமைப்பில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், அதனால்தான் இது "குறைந்த ஆபத்து ஆனால் அதிக லாபம் " தரும் வணிகமாக மாறியுள்ளது. தவறான காரியத்தைச் செய்வதற்கு லஞ்சம். என்பது போய், ஒரு குடிமகனுக்கு சட்டப்படி உரிமையான சரியான விஷயங்களைச் செய்யவும் லஞ்சம் என்ற நிலையை அடையும் போது, சமூகத்தின் தார்மீக அமைப்பே அழிக்கப்படுகிறது" என்று தன் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளது.
பொய் அதிகம் பேர் சொல்வதாலேயே உண்மையாகிவிடாது.
அது போல, தவறை அதிகம் பேர் செய்வதாலேயே அது சரியானது ஆகிவிடாது இல்லையா!!
"எப்போதெல்லாம் பெருமான்மையில் ஒருவராக நம்மை உணர்கிறோமோ அந்த தருணம் தான், நாம் சற்று நிதானித்து பிரதிபலிக்கும் நேரம் என்பதை உணரவேண்டும்" என்கிறார் மார்க் ட்வைன்.
ஆனால்..
"நேற்று நான் புத்திசாலியாக இருந்தேன்.அதனால் இந்த உலகத்தை மாற்ற நினைத்தேன். இன்று ஞானியாகி விட்டேன்.அதனால் என்னை மாற்றி கொண்டுவிட்டேன்" என்று ரூமி சொன்னதை மக்கள் தவறாக புரிந்துக் கொண்டுவிட்டார்களோ?!!