ஒப்பந்தத்தை மீறுவது மட்டுமே ஏமாற்றுவதாகாது என்று தான் சமீபத்திய வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது.
அப்படியானால் எது தான் ஏமாற்றுவது?
ஒப்பந்தத்தை மீறுபவர்கள் , அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை மீறியது போலத் தானே..அப்படியானால் அது ஏமாற்றுதல் இல்லையா? உச்ச நீதிமன்றம் ஏன் அப்படி சொன்னது என்ற கேள்விகள் எழலாம்.
அதற்கு நாம் அந்த தீர்ப்பு வந்த வழக்கின் விவரத்தை பார்க்க வேண்டும்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றத்தை நாடியவர் பெயர் சரப் ஜீத் கவுர் . இவர் மீது தான் ஏமாற்றுதல், குற்ற எண்ணத்துடன் சதி செயல், தூண்டுதல் போன்ற குற்றங்களை செய்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தது. . அதற்கு காரணமே புகார்தாரர் கொடுத்த மூன்றாவது புகார் தான்.
மூன்றாவது புகாரா?
அப்படியானால் முதல் இரண்டு இரண்டு புகார்கள்??
அவைக்கு மூலமும கூட , இதே சம்பவங்கள் தான். ஆனால் அவற்றில் எல்லாம், ஒப்பந்தப்படி கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்று தான் கேட்டிருந்தார் புகார்தாரர்/ . அவற்றில் மேல்முறையீட்டாளர் ஏமாற்றியதாக சொல்லப்படவேயில்லை. இன்னொன்று அந்த புகார்கள் எல்லாம், அந்த சொத்துகளை கவனித்துக் கொண்டவர்கள் மீது தான் கொடுக்கப்பட்டன. இந்த நபரின் மீது அல்ல.
போலிஸ் விசாரணையின் போது, இதில் எந்த குற்ற சம்பவமும் இல்லை என்பதால், புகார்தாரர் சிவில் நீதிமன்றத்தை நாடுமாறு சொல்லப்பட்டது.
இரண்டாவது புகாருக்கும் இதே நிலை தான்.
இதில் தோல்வியுற்ற புகார்தாரர் தான் மூன்றாவது புகாரரில், இவரின் பெயரையும் சேர்த்து, மேற்சொன்ன குற்றங்கள் செய்ததாக புகார் கொடுக்க இவர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டு விட்டது.
இவர் உடனே இந்த சம்பவம் நடந்த ஆளுகை கொண்ட பஞ்சாப் உயர் நீதிமன்றத்தை நாடுகிறார். .. இந்த எப். ஐ/ ஆர் ஐ ரத்து செய்ய. ஆனால் உயர் நீதிமன்றம் மறுத்து விடுகிறது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் உச்ச நீதிமன்றம் முதல் வரியில் சொன்ன தீர்ப்பை சொன்னது.
அதற்காக ஏமாற்றியவர்களை எப்படி தான் தண்டிப்பதாம்? என்ற கேள்வி உள்ளுக்குள் எழலாம்.
வழக்கு சம்பவங்களை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் தெரிந்துக் கொண்டது என்னவென்றால், தன் பணத்தை திரும்ப கொடுக்குமாறு இவர் மீது அழுத்தம் கொடுக்கவே புகார்தாரர் இப்படியொரு புகாரை கொடுத்திருக்கிறார் என்பதே.
இதில் என்ன தவறு..சொத்து வாங்க கொடுத்த முன்பணத்தை திரும்ப பெற நினைத்து அவர் செய்ததில் தவறென்ன? என்று நீங்கள் கேட்கலாம்.
வழக்கு ஆவணங்களை பரிசீலனை செய்த போது, தெரிந்த விவரம் என்னவென்றால்...
௧/ கிரைய ஒப்பந்தம் போட்ட புகார்தாரர், கிரைய பத்திரம் பதிவு செய்ய வைக்க ,எந்த சிவில் வழக்கையும் போடவில்லை
௨. அதற்கு பதிலாக, வரிசையாக ஒரே மாதிரியான மூன்று புகார்களை தான் கொடுத்திருக்கிறார்,
௩. அவற்றில் சொல்லப்பட்டவை எல்லாம் சிவில் தன்மை கொண்டவை.
இவற்றை அறிந்த உச்ச நீதிமன்றம், " ஒரு சிவில் வழக்கை குற்ற வழக்காக மாற்றுவது தான் ஒட்டுமொத்த எண்ணம் என்பதும், அதன்மூலம், தான் கொடுத்தாக சொல்லும் பணத்தை மேல்முறையீட்டாளர் திரும்பக் கொடுக்குமாறு அழுத்தம் கொடுக்க வைப்பதும் தான் காரணம்.
அவர்களுக்குள் உள்ள பகையை தீர்த்துக் கொள்வதற்கோ அல்லது சிவில் தகராறுகளை சரி செய்வதற்கோ குற்றவியல் நீதிமன்றங்கள் பயன்படுத்தப்பட க் கூடாது. குற்ற செயல்பாடுகள் இருப்பதாக உள்ளவற்றில் மட்டுமே குற்றவியல் நீதிமன்றங்கள் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும். அதுவும் இந்த வழக்கில் கிரைய பத்திரம் பதிவு செய்ய கடைசி தேதி என்று குறிப்பிடப்பட்ட தேதிக்கு மூன்று வருடங்களுக்கு பிறகு தான் இந்த புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. " என்றது.
(சிவில் வழக்கு தொடர மூன்று வருடம் தான் காலக் கெடு என்பது நமக்கு தெரிந்திருக்கும். அதனால் , சிவில் வழக்கு ஏதும் தொடர முடியா நிலையில், குற்ற வழக்கு தொடர்ந்து குறுக்கு வழியில் நிவாரணம் பெற்றுக்கொள்ள புகார்தாரர் நினைத்திருக்கலாம். )
அதனால் தான் , "இந்த எப். ஐ. ஆர் மீதான நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர அனுமதிப்பது என்பது நீதிமன்ற நடவடிக்கைகளை துஷ்பிரயோகம் செய்ய உதவுவதாக அமைந்து விடும்" என்று கூறி மேல்முறையீட்டு வழக்கை அனுமதித்து எப்.ஐ.ஆரை ரத்து செய்தது.
இப்போது நமக்கு ஒரு கேள்வி எழலாம்.. ..
ஒப்பந்தம் என்பதே பின்னாளில் செய்யப்போகும் அல்லது செய்யாது விடப்போகும் செயலுக்காக இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்படும் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை தானே?
அந்த ஒப்பந்தத்தில் கொடுத்த வாக்குறுதியை மீறுவது ஏமாற்றுவது ஆகாதா? என்பது தானே?
அதற்கு தான் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் விளக்கம் கொடுத்துள்ளது.
"ஒப்பந்தம் மீறப்பட்டது மட்டுமே ஏமாற்றிய குற்ற செயலுக்கு உள்ளாகாது. அதற்கு இந்த ஒப்பந்தத்தின் ஆரம்ப கட்டத்திலிருந்தே ஏமாற்றும் கெட்ட எண்ணம் குற்றவாளிக்கு இருந்தது என்பது இருக்க வேண்டும். கொடுத்த வாகுறுதியை காப்பாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு மட்டுமே குற்ற நடவடிக்கை எடுக்க போதுமானது இல்லை" என்றுள்ளது.
அடுத்து உங்களுக்கு இன்னொரு கேள்வி எழுமே....
ஆளும் அரசு , தேர்தலில் வாக்குறுதிகளை மக்களிடம் கொடுத்து தானே ஆட்சிக்கு வந்தது. அவற்றையெல்லாம் நிறைவேற்ற முடியுமா இல்லையா என்பது அந்த அறிவிப்பு செய்த காலத்திலேயே தெரியும் தானே ...அப்படியானால், ஆளுங்கட்சிக்கு எதிராக, ஏமாற்றிய குற்ற வழக்கு போட முடியுமா? என்பது தானே ?
இதற்கு யாராவது பதில் சொல்லுங்களேன்.
2 கருத்துகள்:
குற்ற வழக்கு போட முடியாது என்பதால் தானோ என்னவோ.... வானளாவிய அளவிற்கு பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி ஓட்டுகளை அறுவடை செய்கிறார்களோ என்னவோ....???
என்னமோ போங்க.. நாடு போற பாதை கொஞ்சமும் சரியில்ல....
முடியாதே! பிரச்சனையே அதுதான்.
கருத்துரையிடுக