செவ்வாய், 26 அக்டோபர், 2021

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்படுகிறது. இந்த லஞ்சத்தை ஒழிக்க லஞ்ச ஒழிப்புத் துறை என்று ஒரு துறை உள்ளது, ஆனாலும் மக்கள் லஞ்சம் கேட்டால் கொடுத்து விடுகிறார்கள். ஏன் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் மக்கள் சென்று புகார் அளிக்க மறுக்கின்றனர்?

 "அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்படுகிறது"

கொடுப்பவன் இருப்பதால் தானே வாங்குறான்?

இவன் ஏன் கொடுக்கிறான்?

இவன் வேலை சட்டுனு முடியனும்.அதுவும் மனு போட்ட மத்தவங்களுக்கும் முன்னாடி!!

இல்லேன்னா ..விதிமுறைப்படி அது செய்யக்கூடாத வேலையாய் இருக்கணும்!!

சமீபத்திய செய்தி ஒன்று படித்தேன். தமிழ்நாட்டில் கொரானா தடுப்பூசி போடுவதில் ஆள்மாறாட்டம் அதிகரித்து வருகிறதாம்!!

தடுப்பூசிக்கு உள்ள டிமாண்ட் காரணமாக நிறைய பேர் இன்னமும் போடவில்லை இல்லையா?

ஆனால் நிறைய அலுவலகங்களில் அந்த தடுப்பூசி சான்று கேட்கிறார்கள்..வேலைக்கும் போகவேண்டும் என்பதால் சுகாதார பணியாளர்கள் உதவியுடன், ஆதார் சான்று மூலம் தடுப்பூசி சான்றிதழ் பெற்றுவிடுகிறார்கள்.இந்த பக்கம் காலேஜ்க்கு பிள்ளையை தடுப்பூசி போடாமல் அனுப்ப தயங்கும் பெற்றோர், சான்று தேவையில்லை, ஊசி மட்டும் போட்டால் போதும் என்கின்றனர்..ஆனால் 18 வயதுக்கு கீழ் உள்ளவருக்கு இன்னமும் தடுப்பூசி போட வில்லை. இவர்களும், சுகாதார பணியாளரை அணுகி…

எப்படியோ தப்பு செய்ய ஒரு அரசு ஊழியரை தூண்டுபவனும் ஓரு குற்றவாளி தானே..இவன் கொடுப்பதை வாங்குவதால் அவனும் ஒரு குற்றவாளி.ஆனால் சட்டம் அரசு ஊழியரை முதல் குற்றவாளியாகவும், இவனை இரண்டாவது குற்றவாளியாக தான் பார்க்கிறது..

ஏன்?

அரசு ஊழியன், அவனுக்கு என்று வகுக்கப்பட்ட நடத்தை விதிகளை மீறியதால்.

தன்னை பணி அமர்த்திய அரசுக்கு உண்மையாக இல்லாததால்…

அவனுடைய இந்த நடத்தைகெட்டத்தனத்தை புகழ்வது, ஊக்குவிப்பதும் இவன் தான்.

"அவன் ரொம்ப யோக்கியனப்பா..வாங்கின காசுக்கு கரெக்ட்டா வேலையை முடிச்சு குடுத்துடுவான்"ன்னு புகழ்வதும், விதிகளை காட்டி, சரியில்லாதது நியாயமாக இல்லாதவற்றை மறுக்கும் நேர்மையான அரசு ஊழியனை பொய் புகார் கொடுத்து, சிக்கலில் மாட்டிவிடுவதும் சாட்சாத் இவனே..!!

மக்கள் உரிமைகளை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள்..தங்களுக்கு அடிப்படை கடமையும் உண்டு என்பதை மறந்து!!

அதனால் அரசு ஊழியர்களும் ஒரு படி உயர்ந்து தங்கள் கடமையை செய்வதற்கும் கிம்பளம் வேண்டும் என்று எதிர்பார்க்கும் உச்சாணிக்கிளைக்கு தாவிவிட்டனர்.

இப்படித்தான் போன மாதம் ஒரு நாள் வாசலில் அழைப்பு மணியோசை..தபால் காரர்.. நான் கதவை திறந்தவுடன், ஒரு ஒப்புதல் அட்டையை நீட்டினார்..என்ன தபால் வந்திருக்கும் என்று யோசித்தபடியே கையெழுத்திட்டேன்.பிறகு ஒரு தாளை நீட்டி அங்கும் கையெழுத்து போடச்சொன்னார்.

"முதலில் தபாலை கொடுங்கள்.பிறகு கையெழுத்து போடுகிறேன்" என்றேன். அது தானே முறை?

"இல்லை. நிறைய பேர் தபாலை வாங்கி பார்த்து விட்டு, "வாங்க முடியாது" என்கிறார்கள்.அதனால் தான் இப்படி…நீங்கள் அப்படி செய்யமாட்டீர்கள்" என்றபடியே தபாலை நீட்டினார்.

"வாங்கவில்லை என்றால் அப்படியே குறித்துக்கொள்வது தானே.அதற்காக தபாலை கொடுக்காமலேயே கையெழுத்து கேட்பது சரியல்ல" என்றபடியே கையெழுத்து போட்டுக்கொடுத்தேன்.

கதவை மூடப்போகும்போது, "ஏதாவது டீ செலவுக்கு" என்றார்..

"இப்போது பண்டிகை ஏதும் இல்லையே?!"

"லெட்டர் வந்திருக்கே"

"ஆமாம். அதை படித்துப் பார்த்து சந்தோஷமான செய்தி ஏதும் என்றால் இனாம் கொடுக்கலாம் தான்...அதற்காக தபால் வந்தாலே எப்படி பணம் கேட்கிறீர்கள்..இதை கொடுப்பது தானே உங்கள் வேலையே?"

பேசாமல் நகர்ந்தார்.

இரண்டு வாரம் கழித்து, வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது பார்க்கிறேன். வந்திருக்கும் தபால்கள் விசுறியடிக்கப்பட்டு மூலையில் கிடந்தன.

அவர் கடமையை செய்துள்ளாராம்.. !

நானும் என் கடமையை செய்துள்ளேன்!!

யோசித்துப் பார்க்கும்போது, இந்த நிலைக்கு இவர்கள் போனதற்கு மிஸ்டர் பொதுஜனமும் ஒரு காரணம் தானே?!

"உன் கடமையை செய்ய நான் ஏன் எதுவும் கொடுக்க வேண்டும்?" என்று கேட்காமல், தன் வேலை நடந்தால் சரி என்கிற சுயநலம்..

லஞ்சம் கொடுத்தும் வேலை நடக்கவிட்டால், எப்படி போய் புகார் கொடுப்பது என்பது சிலரின் சந்தேகம். .தான் ஏமாந்ததும் இல்லாமல் லஞ்சம் கொடுத்ததற்கு ஏழு வருடம் சிறை என்றால்?

இப்போது தான் சட்டத்தில் திருத்தம் வந்துவிட்டதே!!

லஞ்சம் கொடுக்காமல் தன் கோரிக்கை நிறைவேற "மெனக்கிடும்" நபர்களை "வித்தியாசமாக" பார்ப்பது!!

இல்லையென்றால், சரியில்லாத கோரிக்கையை நிறைவேற்ற மறுக்கும் ஒரு நேர்மையான அரசு ஊழியரை "பிழைக்க தெரியாதவன்" என்று பட்டம் கொடுப்பது, பொய் புகார் கொடுத்து, "தான் நேர்மையாய் இருந்ததற்கு இந்த தண்டனையா?!"என்று அவனை நொந்துப் போக வைப்பது,

பொய் புகார் கொடுத்து, அது உண்மையில்லை என்று தெரியவந்தால், புகார்தாரர் மீதே போலீஸ் புகார் கொடுக்கலாம்…ஆனால் ஏற்கெனவே நொந்து போயி, "விட்டால் போதும்" என்ற விரக்திநிலையில் இருப்பவர் அதை செய்வதில்லை..அது இவர்களுக்கு வசதி வேறு!!

லஞ்சம் வாங்குபவன் மீது, எப்போது லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சென்று புகார் அளிக்க மறுக்கின்றனர் தெரியுமா?

"என்னத்தை அவன் பெரிசா கேட்டுட்டான்..ஊரிலே நடக்காததையா செஞ்சுட்டான்" என்று எப்போது அவனுக்கு வரிந்துக்கட்டிக்கொண்டு வருகின்றனர்?

1.தன்னுடைய சாதி சனத்தில் ஒருவன்

2."ஆளுக்கு மேல்மட்டத்திலே நிறைய பழக்கம். பெரிய இடத்து பொல்லாப்பு எதுக்கு?°

3. நாளே பின்னே அவனாலே நமக்கும் ஏதாவது காரியம் ஆகும்"

4. "அவன் தான் வாங்குற காசுக்கு கரெக்ட்டா வேலையை முடிச்சு குடுத்துடுறானே?"

5. எத்தனையோ பேரு கிட்டே வாங்குறான்.நான் மட்டும் ஏன் புகார் கொடுக்கணும்?"

.பணத்தின் பின்னால் ஒடுபவரின் கதி என்னாகும் என்று விளக்குகிறார் ஓஷோ.

" அதிகாரம், கவுரவம் இவற்றால் கவரப்படும் மக்கள் இழப்பது வேறொன்றுமில்லை.. வாழ்க்கையைத் தான்”

.அட போங்கப்பா..லஞ்சம் வாங்குறவன் தான் வசதியாயிருக்கான்"னு உங்க மைண்ட்வாய்ஸ் சொன்னதை நானும் கேட்டுட்டேன்!!

உண்மை தான். இரண்டு மாதம் முன்பு மாண்புமிகு கர்நாடகா உயர் நீதிமன்றம் கூட இது சம்பந்தமான ஒரு முக்கிய தீர்ப்பை சொன்னது..

அரசு ஊழியர் மட்டும் தானே இந்த லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வருவார்கள் என்று நினைத்திருந்தோம்?

"அரசு ஊழிடர் மட்டுமல்ல பொது கடமையாற்றும் தனி நபரும் அரசுக்கும் பொதுமக்களுக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவர். அவரும் லஞ்ச ஒழிப்பு சட்டம் கீழ் வருவார் "என்றது.

அந்த வழக்கில் மனுதாரர், தான் அரசு ஊழியர் அல்ல என்பதால் தனக்கு இந்த சட்ட. பொருந்தாது என்று வாதிட்டார்..ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிமன்றம், அவர் பணி செய்யும் அமைப்பிற்கு அரசு நிதி தருவதால் அவரும் அந்த சட்டத்தின் வரையறைக்குள் வருவார்" என்றது!!

இந்த தீர்ப்பில்,

"நம் நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாக ஊழல் கருதப்படுகிறது. இது ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் குறைத்து மதிப்பிட வைக்கிறது .மேலும் மனித உரிமைகளையும் அது மீறுகிறது.

ஊழல்வாதிகள் சட்ட அமைப்பில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், அதனால்தான் இது "குறைந்த ஆபத்து ஆனால் அதிக லாபம் " தரும் வணிகமாக மாறியுள்ளது. தவறான காரியத்தைச் செய்வதற்கு லஞ்சம். என்பது போய், ஒரு குடிமகனுக்கு சட்டப்படி உரிமையான சரியான விஷயங்களைச் செய்யவும் லஞ்சம் என்ற நிலையை அடையும் போது, ​​சமூகத்தின் தார்மீக அமைப்பே அழிக்கப்படுகிறது" என்று தன் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளது.

பொய் அதிகம் பேர் சொல்வதாலேயே உண்மையாகிவிடாது.

அது போல, தவறை அதிகம் பேர் செய்வதாலேயே அது சரியானது ஆகிவிடாது இல்லையா!!

"எப்போதெல்லாம் பெருமான்மையில் ஒருவராக நம்மை உணர்கிறோமோ அந்த தருணம் தான், நாம் சற்று நிதானித்து பிரதிபலிக்கும் நேரம் என்பதை உணரவேண்டும்" என்கிறார் மார்க் ட்வைன்.

ஆனால்..

"நேற்று நான் புத்திசாலியாக இருந்தேன்.அதனால் இந்த உலகத்தை மாற்ற நினைத்தேன். இன்று ஞானியாகி விட்டேன்.அதனால் என்னை மாற்றி கொண்டுவிட்டேன்" என்று ரூமி சொன்னதை மக்கள் தவறாக புரிந்துக் கொண்டுவிட்டார்களோ?!!

திங்கள், 18 அக்டோபர், 2021

புகழ் மீதான ஆசை எதற்கு உதவுகிறது

 சமீபத்திய செய்தி இது படித்திருப்பீர்கள்..

'For Publicity Purpose': Madras HC Imposes Rs 5K Costs, 2 Year Ban On Filing PILs For 'Misconceived' Challenge To Govt Retirement Age Policy

விளம்பரத்துக்காக போடப்பட்ட வழக்கு என்று வழக்கை தள்ளுபடி செய்ததும் அல்லாமல் 5000 ரூபாய் செலவுத்தொகை போட்டு, மேலும் இரண்டு வருடங்களுக்கு பொது நல வழக்கு என்று எதுவும் மனுதாரர் போடக்கூடாது என்றும் அப்படியம் போடவேண்டும் என்றால் நீதிமன்றத்தின் முன்னனுமதி வாங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது..

அப்படி நீதிமண்றத்தை எரிச்சல் மூட்டிய வழக்கின் சாராம்சம் தான் என்ன?

சமீபத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59லிருந்து 60 ஆக அரசு உயர்த்தியது அல்லவா? அப்படி உயர்த்தியதால் நாட்டில் ஏற்கெனவே உயர்ந்து வரும் வேலையில்லா திண்டாடத்தை இது அதிகப்படுத்தும் என்று அதை எதிர்த்த "பொது நல" வழக்கு.!!

நீதிமண்றம் எரிச்சல் அடைய இதில் என்ன இருக்கிறது? நல்ல வேலை தானே செய்திருக்கிறார் என்று நினைப்பீர்கள்.

ஆனால் நடந்தது தெரிந்தால் உயர்நீதிமமன்றம் அதன் நேரம் வீனடிக்கப்பட்டதாக ஏன் எரிச்சல் அடைந்தது சரி தான் என்பீர்கள்.

ஆனால் இந்த பரிகாரம் கேட்க என செய்யவேண்டும்? எந்த விதத்தில் வேலையில்லா திண்டாட்டதோடு அது தொடர்புடையது என்று விளக்க வேண்டாமா? குறைந்த பட்சம், டேட்டாவாவது சேகரித்து கொடுக்கவேண்டாமா? ஒன்றுமேயில்லை…

இப்போது ஏதேனும் வகையில் பரபரப்பாகவேணும் செய்தியில் அடிபட்டு தான் பிரபலம் ஆக துடிக்கின்ற மனோபாவம் அதிகரித்து உள்ளது. அது எதிர்மறையாக இருந்தாலும் சரி என்று.. அதற்கு காரணம் ஆர்ப்பரிக்கும் ஆசை.

"ஈதல் இசைபட வாழ்தல், அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு"

என்று தானே வள்ளுவர் சொன்னார்.. அதை தானே செய்கிறார்கள் என்கிறீர்களா?

ஆனால் எந்த விதமான புகழ் சம்பாதிக்கவேண்டும் என்றும் சொல்கிறாரே…

இந்த நேர்பட வாழ்தல் இல்லாதோருக்கு கிடைக்கும் பேர் எதிர்மறையானது .அப்படிப்பட்ட பேர வாங்குபவர்கள் தான் தன்னை நொந்துக் கொள்ள வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

புகழ்பட வாழாதார் தந் நோவார்

தமமை

இகழ்வாரை நோவது எவன்.

இதற்கு கலைஞர் உரை எழுதுகிறார் பாருங்கள்..

"உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள் தம்மை நொந்துகொள்ளவேண்டுமே தவிர தமது செயல்களை இகழ்வோரை நொந்து கொள்வது எதற்காக? என்கிறார்.

இன்னொரு வகையினர் இருக்கிறார்கள் "நீங்க நல்லவருங்க. வல்லவருங்க" என்று துதி பாடுவதில் மயங்கி தன்னுடையதை இழப்பவரும் உண்டு.. அவர்களுக்கெல்லாம் லக்கினத்தில் குரு இருப்பார்!!

அப்படி அண்டி வாழ்ந்து புகழ்வோரையும் அவ்வையார் விட்டு வைக்கவில்லை.

"பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை – சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்"

நல்ல குடியில் பிறந்தவர்கள் வயிறு வளர்பதற்காக அடுத்தவரை அண்டி, அவரை புகழ்ந்து பிச்சை வாங்கி வாழ்வது சீச்சீ என்று கூறும் அளவிற்கு இழிவான செயலாகும். இப்படி மானம் விட்டு உயிர் வாழ்வதை விட இறப்பது மேல்.

என்று வசை பாடுகிறார்..

அப்படியானால் எப்படியாவது புகழ் பெறும் ஆசை தவறு இல்லையா?

அப்படியானால் நல்ல ஆசை, கெட்ட ஆசை என்று எப்படி பிரித்து அறிவது?

ஆசை தானே உயிரின் அடிப்படை. அது நாம் வளர வளர வயதுக்கு ஏற்றது போல அதுவும் பரிணாம வளர்ச்சி அடைகிறது. பருவ வயதில், எதிரினத்தின் மீது ஆசை, நல்ல வேலை/ தொழில் செய்ய ஆசை , கோடீஸ்வரனாக ஆசை, அந்த காலத்து ஒனிடா டிவி விளம்பரம் வருமே "சொந்தக்காரரின் பெருமை, அண்டை வீட்டுக்காரரின் பொறாமை"..அது போன்ற அழகான மனைவி..அமைய ஆசை ..இப்படி ஆசைக்கு தான் அளவேது..!!

இது எல்லாம் கிடைத்தாலும் மனது சும்மா விடுகிறதா?

பணத்தின் மீதான ஆசை அது எவ்வளவு நிறைந்தாலும் நின்று விடுகிறதா? பணத்தை குவிப்பதில் ஆசை கொண்ட ஒருவனுக்கு எந்நாளும் அது அடங்கப் போவதில்லை..

அதிகாரம் ..அதுவும் ஒரு போதை தான்.

பணத்தையும் அதிகாரத்தையும் கொண்டவன் நின்று நிதானிக்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறான்.

அந்த ஓட்டத்தில் தான் , நம் உள்ளே உள்ள வெற்றிடத்தை உணர்கிறோம்... அந்த காலியிடத்தை நிரப்ப எடுக்கும் முயற்சி..இந்த பணம், புகழ்சேர்க்கும் வேகம். ஆனால் எத்தனைக்கு எத்தனை . முயற்சி செய்தாலும், ..இவர்கள் போட்டுக்கொண்டே இருக்க…உள்ளே போட்டதெல்லாம் மாயமாகி போகிறது

அத்தனைக்கும் ஆசைப்படு என்றவர்கள் ஆசை பேராசையாக வெறியாக மாறிவிட்டதை கண்கூடாக பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்.

சிறிது சிறிதாக ஆசையும் அவனுடன் வளர்கிறது.. " நான்" என்னும் அகங்காரமகவும் "எனது" என்னும் மமகாரமாகவும்..

பணம் சேர்நதது போலவே, கருமித்தனம், பொறாமையையும் தன்னுடன் சேர்த்துக் கொண்ட மனது, யாருக்கும் சற்றென்று தன்னிடம் உள்ளதை பகிர்ந்துக் கொள்ள மறுக்கிறது.அப்படியே கொடுக்கவேண்டும் என்றால் அதற்கு ஆதாயம் என்ன என்று தேடுகிறது..

"நீ என்னை மெச்சி பேசுவாயா" என்று எதிர்பார்க்கிறது. தான் சம்பாதித்த பணம், அதிகாரம் கொண்டு அதை சம்பாதிக்க பார்க்கிறது.

புகழுக்கு ஆசைப்படாத ஜீவன் இருக்கிறதா என்ன? வீட்டில், வேலை செய்யும் இடத்தில், நண்பர்கள் நடுவில் தான் பாரட்டப்பட வேண்டும் என்ற எண்ணம் இருப்பவன் தானே சாமானிய மனிதன்.!!

அத்தனைக்கும் ஆசைப்படுகிறோமோ இல்லையோ.. தான் புகழப்பட வேண்டும் என்ற ஆசை..இருக்கிறதே, அது ஒரு கட்டத்தில், ஆசை என்பதிலிருந்து பேராசையாக மாறி , வெறியாக உருமாற்றம் கொண்டிருக்கும்..

இங்கே தான் அது உருமாற்றம் அடைவதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

அதற்காக ஆசையை விட்டு விடவேண்டும் என்ற பொருளல்ல. ஆசை தான் மனிதனின் முன்னேற்றத்திற்கு அடிப்படை..

அதுவும் புகழ் எனும் போதையின் மாய வலையை பற்றி ஓஷோ இப்படி சொல்கிறார்

"உங்களை நல்லவனாகவோ கெட்டவனாகவோ பிறர் மாற்ற முடியாது..அவர் அபிப்ராயத்திற்கும் அவன் சக்தி மிக்கவனாக ஆகிறான். அவர் புகழ்ச்சியை நீங்கள் ஏற்றுக்கொண்டால் நீங்கள் தான் அவனுக்கு இரையானவன்.இப்போது அவன் உங்களை தன் பிடியில் வைத்துக் கொள்ளலாம்.அவன் உங்கள் குருவாகவும் நீங்கள் அவன் அடிமையாகவும் இருப்பீர்கள் "

அதை சரியாக புரிந்துக் கொள்வது மட்டுமே இப்போதைய தேவை. ஆனால் அதை தேடி, ஓடிக் கொண்டே போகும்போது, பேராசையாக உருமாற்றம் அடைந்துக் கொண்டிருப்பதை உணர்ந்துக் கொண்டால் தான் , அதிலிருந்து விடுபட முடியும்..

சக மனிதனிடம் அன்பு பாராட்டுவது இருக்கட்டும். இந்த புகழ் போதை கொண்டவர் எல்லாம் தன் மீதே அன்பு செலுத்துபவராகவா இருப்பார்கள்?

ஏன் உடலை கச்சிதமாக தானே வைத்திருக்கிறார்கள் என்கிறீர்களா? இல்லை..அது வெளிக்காட்சிக்கு தான்..

இந்த பேராசை, பொறாமை போன்றவை சூழ, இருக்கும் நம் மனதை திறந்துக் கொண்டு உள்ளே ஆழமாக போனால் தான் நம் மனதின் ஆசையை தெரிந்துக் கொள்ள முடியும்..

இறந்த உடலுக்கு போஸ்ட்மார்ட்டம் செய்யும் மருத்துவர் போல, நம்மில் உள்ள குறைகளை ஈவு இரக்கம் இல்லாமல், உண்மையாக கண்டறிந்து அதை சரி செய்தோ, முடியாததை ஒதுக்கி கொண்டோ போனால .அதன் தேவையை நியாயமான ஆசையை காது கொடுத்துக் கேட்க ஆரம்பிக்கலாம்..அதை தான் தியானம் என்கிறார்கள்.

அதற்கு முன் செய்ய வேண்டியது ஒன்றும் உள்ளது.., ஓடும் ஓட்டத்தில், என்றாவது நம் உடலின் தேவையை உணர்ந்திருக்கிறோமா..??

இப்படி நம் உடலின்,மனதின் நியாயமான ஆசையை நிறைவேற்ற முயற்சிகும்போது, .நம் உடலும் மனதும் நட்பாகி விடும்.

அப்போது தான் ஆசை என்னும் ஒரு மாய சூழலிருந்து விடுபடுவது.கடினமாக இருக்காது.., நம்மை நாமே முழுதாக நம்ப ஆரம்பிக்கலாம்.

ஆனால் உள்ளே உள்ள காலியிடத்தை தன் தியானம் மூலம் உணர்ந்தவன் தான் ஜெயிக்கிறான். என்கிறார் ஓஷோ.

இப்படி தியானம் செய்துக்கொண்டிருந்தால் எல்லாம் கிடைத்துவிடுமா? என்கிறீர்களா??

ஏன் சிலர் அதையெல்லாம் கடவுள் தூக்கி கொடுத்துவிடுவார் என்று கோயில், மசோதா, சர்ச்சுகளில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?.

கடவுள் எங்கே தான் இருக்கிறார்? அவர் வேண்டியதை கொடுத்து விடுவாரா? அதற்கும் ஒரு சூட்சமம் உள்ளது என்கிறார் அவ்வையார்.

நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் – ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான்

பிறருக்கு துன்பம் செய்யாதவருக்கு, அடுத்தவர் அழிய வேண்டும் என்ற வஞ்சனை இல்லாதவருக்கு நல்ல நீர்வளம், நிழல் தரும் மரங்கள், நெல் வளம், பேரும், புகழும், சிறப்பான வாழ்க்கையும், நல்ல வீடும், தேவையான செல்வமும், நீண்ட ஆயுளும் செந்தாமரையில் அமரும் மஹாலக்ஷ்மி அருளுவாள்.

அதாவது பிறருக்கு துன்பம் செய்யாதவருக்கு, அடுத்தவர் அழிய வேண்டும் என்ற வஞ்சனை இல்லாதவருக்கு தான் கடவுள் அருளுவார் என்பது தானே மறை பொருள்..

ஆரவாரம் இல்லாமல் அமைதியாக எந்த சிறு செயலையும் அதன் பொருள் உணர்ந்து எந்த குறிக்கோளும் இல்லாமல் இந்த உலகத்திலோ வேறு உலகத்திலோ எதையும் பெறும் ஆசை இல்லாமல் செய்துக் கொண்டு இருந்தால், அதுவே தேன் உள்ள மலரை தேடி வரும் வண்டை போல புகழ் உன்னை தேடிவரும் என்கிறார்கள்.

.எந்த குறிக்கோளும் இல்லாமல் செய்வதா? அது எப்படி என்கிறீர்களா?

அதை தானே நாம் அனைவரும் செய்கிறோம்!! .நமக்கு பிடித்த நாம் அன்பு பாராட்டும் மனைவி/கணவனுக்கு, பிள்ளைக்கு என்று தான், தனக்கு என்று வைத்துக்கொள்வதை நம் அன்பு கொண்ட உள்ளங்களுக்கு பகிர்கிறோம் தானே...

எதையும் எதிர்பார்க்காமல் பகிர்வது தான் உண்மையான அன்பு..

உண்மையில் அப்படி கொடுப்பவன் தான் நன்றியோடு இருக்கவேண்டும் என்கிறார் ஓஷோ

அதுவே விரிவடைந்து உறவு, உற்றம், சுற்றம் என பெருகி, நாளடைவில் தெரியாதவர் மீதும் அன்பு வளரும் போது அது "அருள்" ஆகிறது.

நாம் அவர்களிடம் காட்டும் அன்பு, இரண்டு மடங்காக நமக்கே திரும்பிவரும் தன்மை கொண்டது.

சில உள்ளங்களில் இது போல பிரதிபலிக்காத தன்மை இருக்கும்..!!

சூரியனின் ஒளியை வாங்கி திருப்பி கொடுக்கும் கிராகங்களின் துணையை தான் உயிர்கள் நாடுகிண்றன…

எத்தனையோ மைல் தொலைவில் உள்ள குரு கிரகம், அப்படி தான் பெற்ற ஒளியை, இரட்டிப்பாக தன் சுப கதிர் வீச்சையும் சேர்த்துக்கொடுப்பதால் தானே அது கொண்டாடப்படுகிறது!!

ஆனால் அதுபோல பிரதிபலிக்கும் தன்மை இல்லாத இருள் கிரகம் ஆன சனியை யார் தான் விரும்புவார்?

அன்பு பாராட்டும் போது புகழ் வளர்கிறது..

அது போன்ற புகழ் தான் நிலையானது.

ஆனால் இது எல்லோருக்கும் அமைந்து விடுமா? என்றால் இல்லை.

ஒருவர் பேர் பெற்றவர் ஆவாரா கீர்த்தி பெற்ற பேறு பெருவாரா என்பதை அவர் ஜாதகத்தின் மூன்றாம் பாவமே சொல்லும்.அதோடு அதற்கு தேவையான தன் செயல்களில் முயற்சி எடுப்பாரா என்பதையும் அதுவே காட்டும்.

"சமூகம் ஒரு தனிமனிதனுக்குக் கொடுக்கும் மரியாதை, கௌரவம் எல்லாம்,"மிகவும் மென்மையான முகமூடி." அந்த நாள் முதல், இந்த நாள் வரை... இந்த சமூகம் ஒவ்வொருவரையும் ஏமாற்றியே வந்திருக்கிறது. அது கொடுக்கும் மரியாதை மற்றும் கௌரவத்திலேயே, உங்கள் கவனம் எப்பொழுதும் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது. அதுதான் உங்கள் தனித்தன்மை என அது உங்களை நம்ப வைக்கிறது.

சமூகம் கொடுக்கும் மரியாதை, அந்தஸ்து, கௌரவம் மிகவும் மேலோட்டமானது, மாறக்கூடியது

"உங்களுடைய தனித்தன்மை என்பது... உங்கள் கூடவே பிறந்தது, இயல்பாக வளருவது, அதை யாரும் கொடுக்க முடியாது. அதை யாரும் எடுக்கவும் முடியாது." என்கிறார் ஓஷோ.

கடைசியாக ரூமி சொன்ன கதை ஒன்று.

ஒரு முதியவரை சந்திக்கிறான் ஒரு இளைஞன்.

"என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா?

"இல்லை"

"நான் உங்கள் மாணவன்

"அப்படியா.இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"

"ஆசிரியராக இருக்கிறேன்."

"நல்லது…என்னை போலவே"

"ஆமாம் நீங்கள் தான் நான் உங்களை போன்ற ஆசிரியராக நினைத்ததற்கு காரணம்"

"அப்படியா எப்போது அப்படி நினைத்தாய்?"

இளைஞன் பள்ளிக்காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்ல ஆரம்பிக்கிறான்.

"ஒருநாள் என் தோழன் ஒருவன் ஒரு புது வாட்ச் பள்ளிக்கு கொண்டு வந்தான். அது பாரககவே அழகாக இருந்தது. எனக்கு ரொம்ப பிடித்து போய் விட்டது.அவனுக்கு தெரியாமல் நான் எடுத்து என் டிரவுசர் பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன்.

கொஞ்ச நேரத்தில் வாட்ச் காணாமல் போனதை அறிந்து, அவன் வகுப்பு ஆசிரியரானஉங்களிடம் வந்து புகார் செய்தான்.

.நீங்களும் வகுப்பில் எல்லோரிடமும் சொன்னீர்கள்…"வகுப்பில் இருக்கும்போது காணாமல் போயுள்ளது.யார் எடுத்தார்களோ திருப்பிக் கொடுத்து விடுங்கள்" என்று.

ஆனால் அந்த வாட்ச் எனக்கு ரொம்ப பிடித்ததால், திருப்பிக் கொடுக்க மனம் இல்லை.

நீங்கள் வகுப்பின் கதவை மூடினீர்கள்.

எல்லோரையும் வட்டமாக நிற்க சொன்னீர்கள். எங்கள் எல்லோரையும் கண்களை மூட சொன்னீர்கள்.அப்போது தான் ஒவ்வொருவராக சோதனை போடுவேன் என்றீர்கள்..

நீங்கள் சொன்னபடியே செய்தோம். நீங்களும் ஒவ்வொருவர பாக்கெட்டில் சோதனை செய்ய செய்ய, .நான் பயந்தது போலவே என் முறை வந்தது. நீங்கள் என் பாக்கெட்டில் கைவிட்டு வாட்சை எடுத்தீர்கள். அடுத்து மற்றவர்களையும் சோதனை செய்வதை தொடர்ந்தீர்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எல்லோரையும் சோதித்து முடித்துவிட்டு, நீங்கள் சொன்னீர்கள்

"எல்லோரும் கண்ணை திறன்கள்.வாட்ச் கிடைத்து விட்டது"

பயத்துடன் நான்பார்த்துக் கொண்டு நின்றேன்.

நீங்கள் அதற்கு மேல் அது பற்றி எதுவும் பேசாமல் பாடம் நடத்த ஆரம்பித்தீர்கள்.நான் திருடியதை நீஙகள் சொல்லவேயில்லை. என்னை தனியாக கூப்பிடூவீர்கள் என்று நினைத்தேன் அதுவும் நடக்கவில்லை.என் மரியாதையை காப்பாற்றினீஈகள். நான் அவமானகரமாக உணர்ந்த நாள் அது.

நீங்கள் திட்டவில்லை.ஏன் எதுவும் சொல்லவில்லை.ஆனாலும் நீங்கள் சொன்னதை நான் புரிந்துக் கொண்டேன்.

ஒரு ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்று தெரிந்து, புரிந்து கொண்டேன்.உங்களுக்கு அது நினைவிருக்கிறதா?"

"ஆமாம்.எனக்கு அது நினைவுக்கு வருகிறது..காணாமல் போன வாட்சை தேடி கண்டுபிடித்தது நினைவிருக்கிறது..ஆனால் அதை நீ தான் எடுத்தாய் என்று அப்போது எனக்கும் தெரியாது.நானும் கண்ணை மூடிக்கொண்டிருந்தேன்!!"

இவரை புகழ் ஆசை வருகிறது தானே??!

நம்மை உணர்வோம்!!


மரண தண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பில் கையெழுத்து இட்ட பிறகு ஒரு நீதிபதி தனது பேனாவின் நிப்பை உடைப்பது ஏன்?

         சமீபத்தில் டி.ஜி.பி.அலுவலகம் போக நேரிட்டது..அந்தக் காலத்து கட்டிடம்…பிரிட்டிஷ் காலத்திலிருந்தே போலீஸ் தலைமையகமாக இருப்பது..

        அங்குள்ள நீண்ட வராந்தாவில் நடக்கும்போது வரிசையாக மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களை பார்த்துக்கொண்டே வந்தேன். பிரிட்டிஷ் இந்தியாவில் ஐ.சி.எஸ்.பட்டம் பெற்ற காவல் தலைமை அதிகாரிகள்..சிலரின் பெயர்களுடன் சி.ஐ.ஈ.என்ற பட்டமும் இருந்தது.."சி.ஐ.டி".தெரியும்..அது என்ன சி.ஐ.ஈ? அந்த வழியாக போய்க் கொண்டிருந்த போலீஸ் அதிகாரியை (டி.எஸ்.பி) தடுத்து நிறுத்தி கேட்டேன்.

எவ்வளவு காலம் தான் நாம் விடையை மட்டுமே கொடுப்பது?.😀

        அவர் திடீரென எதிர்பட்ட இந்த "க்விஸ்"சை எதிப்பார்க்கவில்லை போலும்..

பாவம்..வினா மட்டுமே கேட்டுப்பழகியவருக்கு..😀

        ஒரு நிமிடம் அமைதியாகி, "பிரிட்டிஸ்காரர்கள் கொடுத்த பட்டமாக இருக்கும்" என்றார்..

        அதற்கு மேல்?? கூகிள் தான் கடைசியில் விடை சொன்னது.

Companion of Indian Empire…

        இதே போன்ற ஒரு பட்டம் கிடைக்கும் என்ற ஆசையில் தானே திவான் பகதூர் ஜட்ஜ் அஷ்டோத்ரம் அய்யங்கார், அவர் வர்ணிப்புப்படியே "ஒரு பால் வடியும் முகம் கொண்ட " வாலிபன் திருமலைக்கு தூக்கு தண்டனை கொடுத்தார் என்று கல்கி "தூக்கு தண்டனை" என்ற புதினத்தில் எழுதுகிறார்?!!

        அது மட்டுமா?

        உபந்யாஸம். செய்யும் ஒழுக்கசீலரான சடகோபாலாச்சாரியார் சொன்ன சாட்சியம் உண்மையாகப் பட்டாலும், எதற்கு "பெரிய" இடத்தை பகைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்து, போலீஸ் தரப்பு சாட்சியத்தை ஏற்றுக்கொண்டு தூக்கு தண்டனை கொடுத்திருந்தார்.

        இதனால் அவன் குடும்பம் சீர்குலைந்தது என்று கேள்விப்பட்டு, தான் தவறு செய்துவிட்டதாக மன நிம்மதியில்லாமல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் நாளின் முந்தைய அமாவாசை இரவில் தூக்கம் வராமலிருக்கும் நள்ளிரவில், திருமலையை தன் அறையில் பார்ப்பார்..அவன் சிறையில் இருந்து தப்பித்து வந்தது நல்லதாகிப் போயிற்று என்று நிம்மதி அடையும் அவர் தன் தீர்ப்பில் பிசகு உள்ளது என்று ஒத்துக்கொள்வதை கேட்ட அவன் அதை தெரிந்துக் கொள்ளவே வந்ததாக சொல்லி செல்வான்.

        அவன் அவருடன் பேசிக்கொண்டிருந்த சில மணித்துளிக்கு முன்னர் தான் சிறையில் இறந்தான் என்ற செய்தியை படித்தவுடன் அவருக்கு இதயம் துடிப்பதை நிறுத்திக் கொள்ளும்!!" என்று கதை முடியும்..

        நீதி வழுபவர் நிலையை கல்கி படம் பிடித்துக் காட்டிய இந்த புதினம் , வெகு நாள் என் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதன் தொடர்ச்சியாகத் தான் இந்த சி.ஐ.ஈ பற்றி படிக்கும் போதும் அது நினைவுக்கு வருகிறது.

        பிரிட்டிஷார் காலத்தில் நீதித்துறையில் இருந்தவர்கள் இந்த பட்டத்தை மட்டும் பெறவில்லை..ஒரு வித்தியாச நடைமுறையையும் கையாண்டனர். நீதி மன்றங்களில் மரண தண்டனை விதித்து குற்றவாளிக்கு தீர்ப்புக் கூறி அதனை படித்தபின் ,அந்த தீர்ப்பில் தன் கையொப்பம் இட்ட பின்பு, நீதிபதி  அந்த பேனாவின் நிப்பை மேசையில் ஓங்கி குத்தி,அதன் முனையை உடைத்து ,பேனாவை தூக்கி வீசுவர். இன்றும் அவ்வாறு உடைக்கிறார்கள் .

        நிர்பயா பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உத்தரவில் கையெழுத்திட்ட உடனேயே, நீதிபதி அந்த பாரம்பரியத்தை வைத்து பேனாவின் முனையை உடைத்தார் அல்லவா?

        தீர்ப்பு அளிக்க உதவிய பேனாவின் முனையை உடைப்பது, ஒரு சட்டமும் அல்ல, குற்றவியல் நடைமுறை என்றும் சொல்லப்படவில்ல.

        ஆனால்…அது ஒரு குறியீடு என்று சொல்லலாம்.அப்படி செய்வதற்கு பின்னால் பல் கோட்பாடுகள் உள்ளன:

  • ஒரு முறை எழுதி உத்தரவை படித்து கையெழுத்திட்டால், அந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய அல்லது ரத்து செய்யம் அதிகாரம். அந்த நீதிபதிக்கே இல்லை..

ஒரு தடவ முடிவு பண்ணிட்டேனா… என் பேச்ச நானே கேட்கமாட்டேன்

        அதை அதற்கு மேல் உள்ள நீதிமன்றம் தான் பரிசீலிக்க முடியும்.  அதனால் அந்த தீர்ப்பு குறித்து நீதிபதியால் மேற்கொண்டு சிந்திக்க முடியாதபடி முனை உடைக்கப்படுகிறது

  • அந்த பேனா ஒருவரின் உயிரைப் குடித்ததல்லவா? அதனால் மீண்டும் அதை பயன்படுத்த வேண்டாம். என்பதற்காகவும்..
  • ஒருவரின் உயிரைப் பறிக்கும் சக்தி கடவுளுக்கு மட்டுமே உள்ளது ஆனால் ஒரு நீதிபதி தனது அதிகாரப்பூர்வ கடமையை மட்டுமே செய்கிறார். அதனால் மரண தண்டனை தீர்ப்பிலிருந்து தன்னை தூரத்தில் நிறுத்திக் கொள்ளவும்..
  • பேனாவின் முனையை உடைப்பதன் மூலம், அவர் தனது கடமையை மட்டுமே நிறைவேற்றுவதாக சொல்லாமல் சொல்கிறார்!!              ஒரு பழைய பழமொழி சொல்வது போல்:                                                                                      "மரண தண்டனை ஒரு சோகமான, ஆனால் சில நேரங்களில் அவசியமான விஷயம் கூட அதை செயல்படுத்த பயன்படுத்தப்படும் பேனாவை உடைப்பது, அந்த வருத்தத்தை வெளிப்படுத்தும் ஒரு அடையாளம்".

        இப்போதெல்லாம் பால் பாயிண்ட் பேனா தானே உபயோகிக்கிறோம்.  அப்போதும் ரீபில் முனையை ஒடித்து விடுவர்!!

        மரண தண்டனையை கொடுக்கும் சில நாடுகளில் இந்தியா இன்னமும் உள்ளது..அது குறித்த கருத்து வித்தியாசங்கள் அவ்வப்போது எழுவதுண்டு!!

        ஒரு தனி மனிதன், சமூகத்தின் கட்டுப்பாடுகளை தகர்க்கும் போது, அவனுக்கு தண்டனை அளித்து, அதன் மூலம் மீண்டும் அது போல அவன் செய்யா  வண்ணம் தடுத்து அதேவேளையில் மற்றவருக்கும் அது குறித்த அச்சத்தை ஏற்படுத்தி, அவனை மீண்டும் சமூகத்துடன் ஒன்றிணைப்பது தானே சட்டம், நீதியின் கடமை, ஆனால் மரண தண்டனை அந்த நோக்கத்தையே சிதைப்பது அல்லவா.என்பதே, .மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பும் வினா..

        அவன் உயிர் வாழ்வது சமூகத்துக்கே தீங்கு என்று தானே மரண தண்டனை வழங்கப்படுகிறது? அதனால் தான் அது "அரிதிலும் அரிதான" வழக்கில் மட்டுமே வழங்கப்படுகிறது..

        ஆனாலும், உயிர்களின் மீதான அன்பு தானே மனித குலத்தின் அடிப்படை. அதுவே தொலைகிறதே இந்த மரண தண்டனையினால் என்கிறார்கள் அவர்கள்.

        நீதிமண்றத்தின் தண்டனையே, அறத்தின் அடிப்படையில் என்னும்போது "அன்பு பெரிதா அறம் பெரிதா ?" என்ற வினா எழும்..

        சமீபத்தில் இங்கு கூட ஒரு வினாவை பார்த்தேன்.

        அன்புக்குரியவரை காப்பாற்ற நீங்கள் சட்டத்தை மீறுவீர்களா?

    சட்டம் பொது ஒழுங்கை கட்டுப்படுத்தி, அறத்தை வளர்க்கும்.. ஆனால் அன்பு வேண்டியவருக்காக தவறு செய்யத் தூண்டும் சட்டத்தை மீற வைக்கும்..

        அப்படியானால் எது முக்கியம்?

        நமக்கு எப்பவும் ரெடி ரெக்கனர் திருவள்ளுவர் அல்லவா?

        "அன்பும் அறமும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" என்கிறார் அவர்..

        இல்வாழ்க்கையின் அடிப்படையே அன்பினால் கட்டப்படுவது என்பவர் அவ்வாறு வாழ்வது அறம் செய்யவே என்கிறார்.  அப்படியானால் ..அறமே பெரிது..

        நம் அன்பிற்குரியவரை காப்பாற்ற சட்டத்தை நாம் மீறினால், ..அவரோடு சேர்ந்து நாமும் மாட்டிக் கொள்ளவேண்டியது தான்..

ஆனாலும் விதி என்று இருந்தால் விதிவிலக்கு இருக்கும் தானே..

அதனால், அது சூழ்நிலைக்கேற்ப மாறலாம்!!

        மஹாபாரதத்தில் கூட கிருஷ்ணனுக்கு பாண்டவர் மீது பிரியம் அதிகம். திரௌபதியோ அவனுடைய "பிரிய சகி"..அவர்களுக்கு போரினால் ஏற்படும் தீமைகள் பற்றி நன்கு அறிவார்..

        அந்தப் போரின் காரணம் வரும் பெரும் அழிவைத் தடுக்கவே பீஷ்மரும் விதுரரும் முயல்கிறார்கள். மாறாக "நான் அவ்வழிவை நிகழ்த்த எண்ணுகிறேன்” என்கிறார் கிருஷ்ணர்.!

        உண்மை ....அவர் திட்டமும் அது தான்... சகுனியின் பகடை காய்கள் வழியாக அந்த பேரழிவிற்கான சூதாட்டக்களத்தை வெற்றிகரமாக நிகழ்த்தி விடுகிறார்!!

        பல லட்சம் வீரர்கள் யுத்தம் புரிந்து உயிர்விடும் குருஷேத்ர போருக்கான சுழி பன்னிரு படைக்களம்’ வழியாக !!

        முடிவில், பலரது துர் மரணங்களுக்கு காரணமாகும் மகா பாரத போரை நிகழ்த்தபோகும் பகடைக்காய்களை அனலில் இட்டு பொசுங்க செய்கிறார் சகுனி.

        ஏன்?

        அந்த பகடை காய்கள் செதுக்கியதன் நோக்கம் நிறைவேறி விட்டதே!!

        லட்சம் வீரர்களின் மரணத்திற்கு காரணமான பகடைக்காய்கள் ஆயுளும் முடித்து வைக்கப்பட்டது போலத்தான்,

        நீதிமன்றத்தில் மரண தண்டனை கொடுத்தவுடன் தீர்ப்பு உத்தரவில் கையெழுத்திட பயன்படுத்திய பேனாவின் முனையை உடைத்து, ஒரு மனிதனின் மரணத்திற்கு காரணமான அந்த பேனாவின் ஆயுள் அந்த தீர்ப்புடன் முடித்து வைக்கப்படுகிறது..

        ஆமாம்…ஜட்ஜ் அஷ்டோத்ரம் அய்யங்கார் தீர்ப்பு வழங்கிய பின், பேனாவின் ஆயுளை முடித்ததாக படிக்கவில்லையே..

        அதனால் தான்.. தீர்ப்பு வழங்கிய அவர் ஆயுளே முடிந்து போனதா?!!🤔

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...